உலகப்பனும் மாணிக்கமும்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு சிற்றூரிலே அங்காளம்மன் கோயில் ஒன்று இருந்தது. அந்தக் கோயிலிலே வீரபத்திரர், இருளப்பர், கறுப்பர் முதலிய சிறு தேவதைகளின் உருவங்கள் செய்துவைக்கப் பெற்றிருந்தன. அவற்றுள் வீரபத் திரரின் உருவம் அச்சம் உண்டாக்கத் தக்கவாறு செய்யப்பட்டிருந்தது.
ஒருநாள் இரண்டு நண்பர்கள் அந்தக் கோயிலுக் குச் சென்றார்கள். அவர்களில் ஒருவன் பெயர் உலகப்பன்; மற்றவன் பெயர் மாணிக்கம். உலகப்பன் நீராடாமல் வந்திருந்தான். மாணிக்கம் உலகப்பனைப் பார்த்து, “அடே உலகப்பா! அதோ அந்த வீரபத்திரரைப்பார்; அவர் மிகவும் அஞ்சத் தக்கவாறு விளங்குகிறார். நீராடாமல் வந்திருக்கும் உன்னை அவர் அடித்துவிடப்போகிறார்” என்று விளையாட்டாகக் கூறினான்.
மாணிக்கம் கூறியதைக் கேட்டு உலகப்பன் அஞ்சிவிட்டான். ஆயினும், அவன் தன்னுடைய அச்சத்தை வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை. “இந்தப் பொம்மைச் சாமியால் என்ன முடியும்? நான் அந்தச் சாமி மண்டையை உடைத்துத் தூளாக்கிவிட மாட்டேனா?” என்று துடுக்காகப் பதிலுரைத்தான். இருவரும் வீட்டுக்குத் திரும்பினார்கள். நள்ளிரவாகி விட்டது. உலகப்பனுக்கு முன்னால் என்னவோ திடீரென்று பாய்ந்தோடியதுபோல் இருந்தது. அவன் அஞ்சிப் பொத்தென்று கீழே விழுந்துவிட்டான்.
மாணிக்கம் உலகப்பனைத் தூக்கிக்கொண்டு போய் வீட்டிற் சேர்த்தான். உலகப்பனுக்குக் கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. வீரபத்திரர் தன்னை அடிக்க வருவதைப் போலக் கனவுகண்டு அஞ்சியலறினான். அவனுடைய காய்ச்சல் தணிவதற்கு ஒரு திங்களாயிற்று. அதுமுதல் உலகப்பன் தெய்வங்களைப் பழித்துரைக்கும் வழக்கத்தை விட்டுவிட்டான்.
“தெய்வ மிகழேல்” (இ-ள்.) தெய்வம் – கடவுளை; இகழேல் – பழித்துரைக் காதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,