உலகத்தை மாற்றுதல்





பயாஸித் என்ற சூஃபி மெய்ஞானி, தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

நான் இளமையாக இருந்தபோது, புரட்சிகரமான எண்ணத்தோடும், உலகை மாற்றிவிட வேண்டும் என்கிற உத்வேகத்தோடும் இருந்தேன். அதனால், கடவுளிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தேன்: “இறைவா! எனக்கு நிறைந்த சக்தி கொடு. நான் இந்த உலகத்தை மாற்ற விரும்புகிறேன்.”
பிற்பாடு சற்றே பக்குவப்பட்ட பிறகுதான், வாழ்க்கை எனது கரங்களை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன். எனது வாழ்வின் பாதியை நான் கடந்துவிட்டிருந்தேன். எனினும் என்னால் ஒரே ஒரு நபரைக் கூட மாற்ற முடியவில்லை. ஆகவே, நான் இவ்வாறு பிரார்த்தனை செய்தேன்: “உலகத்தை மாற்றுவது என்பது அதிகப்படியானது. இறைவா, எனக்கு, என்னுடைய குடும்பத்தாரை மட்டும் மாற்றுவதற்கான சக்தியைக் கொடுத்தாலே போதும்.”
முதியவன் ஆன பிறகே, குடும்பத்தாரை மாற்றுவது என்பது கூட அதிகப்படியானதுதான் என்பதை உணர்ந்துகொண்டேன். மேலும், மற்றவர்களை மாற்றுவதற்கு நான் யார்? என்னை மட்டுமே நான் மாற்றிக்கொண்டால் போதுமானது. அதுவே தாராளம்.
அந்தத் தெளிவு வந்தவுடன் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்: “இறைவா! இப்போது நான் சரியான புரிதலுக்கு வந்திருக்கிறேன். குறைந்தபட்சம், என்னை நான் மாற்றிக்கொள்வதற்காவது என்னை அனுமதிக்க வேண்டுகிறேன்.”
அப்போது கடவுள் சொன்னார்: “உனது வேண்டுதல்களுக்கான எல்லை முடிவடைந்துவிட்டது. இதை நீ ஆரம்பத்திலேயே கேட்டிருக்க வேண்டும். அப்போது அது சாத்தியமாக வாய்ப்பு இருந்தது.”