உயிர்!




கல்லூரி ஆண்டு விழா. ஆடிட்டோரியம் மாணவ,மாணவியர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நவீன ரக ஆடைகள்,வாசனைத்திரவியங்களின் நறுமணம்,சினிமா நடிகர், நடிகைகளே வியக்குமளவுக்கு கற்பனைக்கெட்டாத ஒப்பனையில் செல்பி எடுத்துக்கொண்டு ‘ரம்பை,ஊர்வசி,மேனகை,திலோத்தமைகளோ?’என வியக்கும் வண்ணம் பெண்களின் நடன அரங்கேற்றம். திடீரென கரவொலி அரங்கத்தை அதிரவைக்க சிறப்பு அழைப்பாளர்,பிரபல பேச்சாளர் சோகன் மேடையேறினார்.
“எல்லோரும் என்னைக்கேட்கிற மூன்று கேள்விகள். ‘ஏன் சோகன்னு சோகமான பேர் வச்சிருக்கீங்க? ஏன் கல்யாணம் பண்ணிக்கல?எதுக்கு தாடி வச்சிருக்கீங்க?’ என்பதுதான். நான் இதுவரைக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட மேடைகள்ல பேசியிருக்கேன். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லனம்னு தோனல. இப்ப தோனுது…சொல்லட்டுமா…?” என கேட்க, அனைவரும் ஆரவாரத்துடன் எழுந்து நின்று “சொல்லுங்க” என கோரசாக ஆர்ப்பரிக்க,சோகமாக கண்ணீர் கரை புரண்டோட மைக் பிடித்தார் சோகன். ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் நிசப்தம்.
“சின்ன வயசுன்னு சொன்னா அது பால பருவம். அதாவது கல்லூரி வாழ்க்கை வரை. அதை நான் ‘பால் பருவம்’னு தான் சொல்லுவேன். பால் இந்த உலக ஆசைகள் என்கிற தண்ணீரோட கலந்திடும். மனசு விரும்பறதை செய்யத்தோணும். அதற்க்காக பொய் சொல்லும். சூழ்ச்சி செய்யும். முக்கியமா காதல். ஆண் மேல பெண்ணுக்கும்,பெண் மேல ஆணுக்கும். எங்க காலத்துல வெளியான இதயம் படத்தை நூறு முறை பார்த்தேன். ஏன்னா என் மனசுல இருந்த ,என்னை நேசிக்கிற பொண்ணும் பட நாயகி ஹீரா வும் ஒரே முக அமைப்பு.
வானத்துல இறக்கை கட்டி பறக்கனம்னு தோனுச்சு. என்னோட அப்பா ஒரு விவசாயி. தன்னால முடியாம போனது தன் மகனால முடியனம்னு என்னை கல்லூரில சேர்த்து விட்டார். விரும்பியதை வாங்கி கொடுப்பார். அப்படித்தான் புது யமஹா பைக் கேட்டேன். சோதிடத்து மேல நம்பிக்கையுள்ள அவரு ‘உனக்கு அஷ்டமத்து சனி முடியட்டும். அடுத்த வருசம் வாங்கி கொடுக்கறேன்’னு சொன்னார். என் கண்ணுல வடியற கண்ணீரை பார்த்தவர் உடனே வாங்கி கொடுத்தார்.
அந்த பைக்ல ஏற்காடு போகனம்னு என் மனம் கவர்ந்த ஹீரா சங்கவி ஆசைப்பட ,அவ பிறந்த நாளில் கோவையிருந்து காதல் பறவைகளைப்போல பறந்தோம். சேலம் பக்கமா போகும் போது விபத்து. அவ என்னை விட்டு வெகு தூரம் பறந்து விட்டாள். எனக்கு நடக்க கால்கள் இல்லாம போயிடுச்சு. செயற்க்கை கால்கள்ல நடக்க பழகிட்டேன்.”
சொல்லித்தண்ணீர் குடித்தார்.
“அனுபவம் என்னைப்பேச்சாளனாக்கிடுச்சு. நான் பேசறதெல்லாம் ‘உயிர் மூச்சு’ பற்றிதான். படிப்பை விட,பணத்தை விட,பதவியை விட உடல் ஆரோக்யமே முக்கியம். உடலிலுள்ள உயிரை காப்போம். படிக்கிற வயசுல படிக்கறத மட்டும் பாருங்க. காதல் வானில் பறக்க நினைக்காதீங்க. உடனே பூத்து காய்த்து கருகுகிற தக்காளி செடியா இருக்காதீங்க. காய்க்கத்தாமதமானாலும் நீடித்து நெடுங்காலம் காய்க்கிற மா மரமா இருங்க. நீங்க சரியான பாதையை தேர்ந்தெடுத்து போனா, உங்களுக்கான தேவைகள் உங்களைத்தேடி வரும்” என்ற போது அனைவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்ததோடு கல்லூரி மாணவ மாணவியர் அனைவரும் ‘படிப்பு முடியும் வரை படிப்பை மட்டுமே காதலிப்போம்’என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
“வேக பயணம்,தேவையற்ற பயணம்,பாதுகாப்பற்ற பயணம் இந்த மூன்றுமே நம்ம வாழ்க்கைல கூடாது ” என்ற தனது அனுபவ அறிவுரையுடன் தன் உரையை முடித்துக்கொண்டு சோகத்தை சுமந்த படி கல்லூரி கலையரங்கத்திலிருந்து விடை பெற்றார் சோகன்.