உயிரின் மதிப்பு…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2026
பார்வையிட்டோர்: 247 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘வௌவால் பிரயாணம்’…! 

இப்படி பஸ் பிரயாணத்தைப் பற்றி யாரோ ஒருவன் கூறிப் போய் விட்டான். 

பஸ் பிரயாணத்திலுள்ள ‘அவலங்களைப் பூரணமாக அனுபவித்தே கூறியிருக்கின்றான். இல்லாவிட்டால் இவ்வளவு அழகாகவும், அடக்கமாகவும் கூறி விட முடியுமா?. 

‘இந்த வௌவால் பிரயாணத்திலுள்ள அவலங்களை’ நான் பூரணமாகக் கண்டு விட்டேன்!. 

பஸ் கியூவில்படும் நெருக்கடி, வியர்வை… மன எரிச்சல்.. கண் வலி… இப்படி எத்தனை….. அத்தனை வேதனைகளையும் சில மாதங்களாகத் தினசரி அனுபவித்து வருகின்றேன்!. 

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில்… கொடிகாமம் செல்லும் பஸ் வண்டியில் பிரயாணிகள் ஏறிக் கொண்டிருக்கின்றனர். நான் தான் கடைசி ஆள். இடம் கிடைக்குமா? என்ற பயம் உள்ளூர இருந் தாலும்… தினசரி பிரயாணம் செய்யும் செல்வாக்கு.. நம்பிக்கை வீண் போகவில்லை. கொண்டக்டரின் தாராள மனம். நான் ஏறிவிட்டேன். 

கொண்டக்டரின் உத்தரவைத் தொடர்ந்து பஸ் புறப்பட்டு, பஸ் நிலையத்தை ‘அரை வட்டச் சுற்றுச் சுற்றி… பஸ் நிலையத் திலிருந்து ஓடிக் கொண்டிருக்கின்றது. பிரயாணிகள் கால் வைத் தேறுகின்ற படிகளில் கீழும் மேலும் காலைப் போட்டு கொண்டக்டர் நிற்க அவரை அடுத்த ஆளாக நான் நின்றேன். அவ்வளவு நெருக்கம். 

அதே வௌவால் பிரயாணம்!. 

பஸ் கூடாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட வெள்ளிக் கம்பி அதன் முழுப் பகுதியும் கைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றது. அந்த வரிசையில் எனது கையும் ஒன்று. எனது ஒரு கால் மட்டும் நிதானமாகப் படிந்திருக்க ஒரு காலைப்பட்டும் பாடாமலும் வைத்து நிற்கிறேன். 

தலையைப் பின்னோக்கித் திருப்பிப் பிரயாணிகளைப் பார்க் கின்றேன் வலப்பக்கமாகக் தொங்கிக் கொண்டிருக்கும் சில பிரயாணி களின் முகங்களையும், றைவரின் பின்னாலுள்ள சீற்றையும், அதற் கடுத்துள்ள சீற்றையும் மட்டும் என்னால் பார்க்க முடிகின்றது. 

றைவருக்குப் பின்னுள்ள சீற்றில் இரண்டு பெண்களும், ஒரு ஆணும், அதற்குப் பின்னாலுள்ள சீற்றில் மூன்று இளவட்டப் பெண்கள். 

‘அண்ணை கொஞ்சம் பின்னாலை போங்கோ கொண்டக்டர் சாத்வீகமானதொரு வேண்டுகோளை விடுத்து பலனை எதிர்பார்க் கின்றார். ஏதோ எல்லோரும் பிரயாணம் செய்ய வேண்டுமென்ற நல்லெண்ணம் அவனுக்கு. 

‘அண்ணை தயவு செய்து… கொஞ்சம் பின்னாலே போங்கோ… மீண்டும் அவன் கூறுகின்றான். பிரயாணிகள் மத்தியில் சிறு அசைவு ஏற்படுகின்றது. நான் என் இரு கால்களையும் நிதானமாக மிதித்து நிற்கிறேன். 

பஸ் கச்சேரி எல்லைக் கோட்டைத் தாண்டி விட்டது. 

எனி ஆரேன் இறங்குங்கள்… இறங்கினால் தான் இடம்…’ ஒரு குரல் அலுத்துக் கொள்கிறது. எனக்கு மிகத் தெரிந்த குரல், குரலுக்குரியவரைப் பார்க்கிறேன்… அவன்தான் சிவஞானம், நாவற்குளிச் சந்தி வரை பிரயாணம் செய்பவன், அதற்குள் அலுத் துக் கொள்கிறான். 

பஸ்சில் ஏறுவதில் ஏற்பட்ட கரைச்சல்கள் நிற்க இடம் கிடைப்பதில் ஏற்பட்ட போட்டிகள், வயித்தெரிச்சல்கள்… ‘சீற் தானம்’ செய்யும் பிரச்சினைகள்… எல்லாம் ஓரளவு ஓய்ந்து, சாதாரண அமைதி நிலவுகின்றது. 

ஓரளவு வசதியாக நின்ற நான் றைவரின் பின்னாலுள்ள சீற்றில் அமர்ந்திருந்தவர்கள் மீது நோட்டம் செலுத்துகிறேன். ஒரு பெண் சிவந்தமேனி… “பெருமழை பெய்ந்தோய்ந்த வானத்தின் அமைப்புப் போல்’… ‘பெருவாழ்வு’ வாழ்ந்த ‘சுவடு’ அப்பட்டமாகத் தெரிகின்றது. 

சிறு ‘சுவற்றர்’ ஒன்றைப் பின்னியபடி இருக்கின்றாள். அவளையடுத்து ஒரு பெண் இளசு…. கழுத்தில் தாலி இல்லை என்பதை மட்டும் காரணமாகக் கொண்டு திருமணமாகாதாவள் என்று கூறலாம். அவளையும் அடுத்து ஒரு ஆண் நாகரீகமானவன். ஏதோவொரு ஆங்கிலப் புத்தகத்தில் மூழ்கியிருக்கின்றான். 

அடுத்த சீற்றில் 

மூன்று சின்னஞ் சிறுசுகள் கவுண் அணிந்தவர்கள். பாட சாலை மாணவிகளாக இருக்க வேண்டும். இப்போது வெளி யாகியிருக்கும் புதிய பாடமொன்றைப் பற்றிப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றனர்… 

அதற்கு பின்னாலுள்ள சீற்றிலுள்ளவர்களை நிதானமாக அவதானிக்க முடியவில்லை. 

‘என்னங்க… என்னைத் தெரியுமா…’ முதல் சீற்றில் அமர்ந் திருந்த ஆண் அதே சீற்றில் அமர்ந்திருந்து ‘சுவற்றர்’ பின்னும் பெண்ணிடம் ஒரு கொழுக்கியைப் போட முத்தாய்ப்பு வைக்கிறான். 

‘இல்லையே….’ தன் பார்வையை அவன் மீது செலுத்திய படி கூறுகிறாள். அவளுடைய சிரிப்பு அவனுக்கு மன ஆறுதலைக் கொடுத்திருக்க வேண்டும். அவன் தொடர்கிறான். 

‘நீங்கள் மிஸிஸ் லோகநாதன் தானே’ 

‘ஓமோம்….’ 

‘… கரவெட்டி தானே’ 

‘ஓம்…’ 

‘நான்… பஞ்சலிங்கம்… நீங்கள் பூண்டுலோயாவில் இருந்த காலத்தில் நானும் அங்கை இருந்தனான்…. மிஸ்டர் லோகநாதன் எஸ்ரேற் சுப்பிறீன்டன்ராக இருந்தவரெல்லே… நான் அடிக்கடி உங்கடை பங்களாவுக்கு வாறனான்…’ 

நீண்ட காலப் பூண்டுலோயா வாழ்வின் சுவடுகளை, பஞ்சலிங்கத்தின் பேச்சுக்களைப் பற்றுக் கொடியாகக் கொண்டு தேடி, பெரு நீச்சலடித்து… பஞ்சலிங்கத்தை இனம் கண்டு கொள்கிறாள். 

‘… நீங்கள் இருக்கிறது அரியாலை தானே…’ 

‘ஓம்…’ 

‘நாடகங்கள் நடிக்கிறது. இப்பவும் ஒரு நாடக மன்றம் வெச்சிருக்கிறியள்… இல்லீங்களா…?’ 

‘ஓமோம்….’

‘அண்டைக்கொரு நாள் உங்கடை நாடகத்தைப் பற்றி பேப்பரிலை விமர்சனம் எழுதப்பட்டிருந்தது…. அவர் பூண்டு லோயாவிலை இருந்த பஞ்சலிங்கம்…. எண்டு சொன்னவர், அது நீங்கள் தானெண்டு…. இப்பதான் தெரியிது… இப்ப எங்கை வேலை பாக்கிறியள்…’ 

‘கொழுப்புத்துறையிலை…’ 

‘ஊரோடை…..’ 

அவர்களுடைய சம்பாஷணை தொடர்கிறது அவர்களது பேச்சிலிருந்து அவர்களை இனங்கண்டு கொள்ள முனைகின்றேன். இது எனது பிறவிக்குணம். 

பஸ் நாவற்குளியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாவற்குளிச் சந்தியில் இறங்க வேண்டிய சிவஞானத்தின் ஆரவார மும், நெருக்கடியில் அவனது சப்பாத்துக்காலுக்கு இலக்கான சில உயிர்களின் அவலக் குரல்களும் கேட்கின்றன. 

பஸ் நிற்க சிவஞானம் ‘பெரும் பிரயாணத்தை முடித்த’ மன நிறைவோடு இறங்குகின்றான். பஸ் புறப்படுகின்றது. 

முன் சீற்றுப் பிரயாணிகளின் சம்பாஷனை தொடர்கிறது.

‘இப்ப எங்கை பயணம்’

‘மீசாலைக்கு….’ 

‘இது ஆர் தெரியுமோ…’ 

தன் பக்கத்தில் இருந்த பெண்ணைக் காட்டிக் கேட்கின்றான்.

‘தெரியேல்லையே…’ 

‘என்ரை மூத்தவ… வாசிற்றியிலை இருக்கின்றா… இப்ப லீவு…’

‘சின்னனிலை பாத்தது… பெண்கள் வளர்ச்சி கூடத்தானே…’ 

அந்த வாசிற்றிப் பெண் புதியவனின் அறிமுகத்தை விரும்பவில்லையோ என்னமோ… அடக்கமாகவும் இருக்கலாம்… அவளில் எந்தவித மாற்றமுமில்லை. மௌனமாகவே இருக்கிறாள். 

அவன் மட்டும் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொள்கிறான். 

‘இந்த பஸ் பிரயாணம் பெரிய அலுப்பு… நல்ல சீலை சட்டை உடுத்தேலாது….. நேரத்துக்குப் போகேலாது… இந்தச் சனங்கள் அதுகளும் அப்படித்தான்.. மனச்சாட்சி இல்லாததுகள்… 

தாங்கள் மட்டும் பிரயாணம் செய்தால் சரி… எண்ட எண்ணம்…’ அவள் அலுத்துக் கொள்ள, அவனும்! தலையை ஆட்டி அவள் பேச்சை ஆமோதிக்கின்றான். 

இப்பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த றைவர், இவர்களையும் தூக்குமரத்தில் தொங்குவது போல் நிற்கும் எங்களையும்… கண்ணடிக்குள்ளால் பார்த்துக் கொள்கிறான். 

இறுதியாக அவனது பார்வை அந்தப் பெண்ணின் கையில் பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் ‘சுவற்றரில்’ நிலைக்குத்தி மீள்கிறது. 

அவளது பேச்சு கவனம் அவனோடு கொக்கி போட்டி ருந்தாலும், அவளது கைகள் மட்டும் சிலந்தி போல், மிக லாவகமாக சுவற்றர் பின்னுவதில் ஈடுபட்டிருக்கின்றது. அவளருகில் இருந்த அவள் மகள் அந்தச் சுவற்ரறைப் பிடித்து ரசிக்கின்றாள்… அந்தச் சுவற்றரின் அழகு என் மனத்தையும் குத்தத்தான் செய்கிறது. 

நாவற்குழிச் சந்தியில் இருந்து புறப்பட்ட பஸ் கைதடி வயோதிபர் மடவாசலில் நிற்கின்றது. ஒருவர் இறங்குகின்றார். அங்கு நின்ற ஒரு நடுத்தர வயதுப் பெண் கையில் குழந்தையுடன் பஸ்ஸில் ஏற வருகின்றாள். 

‘உந்தப் புள்ளையையும் கொண்டு இந்த பஸ்ஸிலை ஏறமாட்டாய்.. அடுத்த பஸ்ஸிலை வா…’ 

‘… ராசா… நான் எப்பவோ கூட நிற்கின்றேன்… ராசா…’

‘நிற்கவே இடமில்லை…’ 

‘… ராசா… ராசா…’ 

‘எங்கை போகவேணும்…’ 

‘உணாவில் சந்தி…’ அவள் தன் கைக்குள் கிடந்த காசை கொண்டக்டரின் கைக்குள் திணித்து விட்டு பஸ்ஸில் ஏறிக் கொள்கிறாள். 

‘என்ரை ஆச்சி… உங்கை.. வயோதிபர் மடத்திலைதான் இருக்கிறா… அவவுக்குச் சுகமில்லை… பாத்திட்டு வாறன்… நான் வந்த பிறகு எத்தனையோ பஸ் போட்டுது. ஒண்டிலையும் இட மில்லை…. தனியன் எண்டால் நடக்கலாம்…’ அவள் தானாவே கூறிக் கொள்கிறாள். அவளின் பேச்சின் அடிநாதமாக நன்றியுணர்வு பிரதிபலிக்கின்றது. 

பஸ் புறப்படுகின்றது. 

‘அக்கா… மேலபுடி, விழப்போறாய்… புள்ளையோடை…’ 

தன் அவல நிலையைக் கண்டு யாராவது இடங் கொடுப் பார்களா என்ற எண்ணத்தில் பின்னோக்கித் திரும்புகின்றாள். 

அவளது பார்வைக்கு பிரயாணிகளின் ‘நெரிசல்’ கூட்டம் திரை போடுகின்றது. எட்டி முன் சீற்றைப் பார்க்கின்றாள். அவளது பார்வை மட்டும் அவர்களில் படிகிறது… அவர்கள் பார்வை அவளில் படவில்லை. 

ஏதோவொரு உணர்வு, கொண்டக்டரும் எட்டி அந்த மூவரை யும் பார்க்கின்றான். நான் உட்பட இன்னும் சிலரும் பார்க்கின்றோம்… 

அவள் சுவற்றர் பின்னுகின்றாள். 

மகள் மௌனமாக இருக்கின்றாள். 

பஞ்சலிங்கம் புத்தகத்தை வாசிக்கின்றான். 

அடுத்த சீற்றிலுள்ள மூன்று ‘இளவட்டங்கள்…’ அவர்களும் சினிமா விமர்சனத்தை நிறுத்தி மௌனமாக இருக்கின்றனர். 

ஒட்டியும் ஒட்டாமலுமுள்ள சூழலில் ஏற்பட்ட தாக்கம் அவர் களுக்கில்லாமலில்லை!. அதை மறக்க அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி ‘விழுந்தும் மண்படவில்லை’….. என்ற நிலையில் முன்னோக்கிக் கொண்டிருக்கின்றது. 

அவள் அவர்களிடமிருந்து தனக்கு உதவி கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, வலது கையில் குழந்தையை ஏந்தியபடி, இடது கையை மேலுயர்த்தி வழமைபோல் வெள்ளிக் கம்பியைத் தாவுகிறாள்… சரிவரப் பிடிக்கவும் முடியவில்லை. கைவிரல்களில் நடுவிரல்கள் மூன்றையும் கொக்கி போலாக்கி பட்டும் படாமலும் கொக்கியிட்டு அந்தரத்தில் நிற்கிறாள். 

அவளது கைப்பிடியிலிருந்து விலகிய குழந்தையின் தலை தொங்க பஸ்ஸின் அசைவால் பச்சைக் கழுத்து றப்பர் போல் விரிந்து சுருங்க, 

குழந்தை வீரிட்டுக் கத்துகிறது. 

குழந்தையின் கழுத்தில் வரம்புகட்டி நின்ற வியர்வை வழிகிறது… 

அவளது மார்புச்சீலை, சுருளாக விழுந்து தொங்க கீழும் மேலும் முடிச்சுப் போட்ட சட்டை… முதலையின் வாய் போல்… ? 

அசிங்கத்தை அடிநாதமாகக் கொண்ட பரிதாப நிலை! தூக்கிலை தொங்குகின்ற அவலம்! 

பஸ் கைதடிப் பாலத்தைத் தாண்டி அந்தவளைவால் திரும்ப அவள் கைவிலகி சரிகின்றாள்… நின்றவர்களின் ஆதரவில்… பலர் கைப்பட்டு… காப்பாற்றப்படுகின்றாள்… 

குழந்தையின் கழுத்து றப்பர்தான் அழுகை ஓயவில்லை 

….சீலையும் அப்படியே!. 

‘அக்கா… உந்த முன்சீற்று கம்பியிலை புடி…’ அவள் முன் சீற்றுக் கம்பியில் பிடித்து நிற்கின்றாள். 

‘… வாழ்க்கையிலை தான் உசத்தி இல்லை உடல்லை கூட உசத்தி இல்லாமல் பேச்சு…. அவள் கூறிக் கொள்கிறாள். 

பஸ் நுணாவில் சந்தியில் நிற்க களுமரப் பிரயாணத்தை முடித்த நிலையில் அவள் இறங்கினாள். 

பஸ் புறப்படுகின்றது சில நிமிடங்கள் முன் சீற்றுப் பிரயாணிகளின் சம்பாஷனை தொடர்கிறது. 

‘உந்தச் ‘சுவற்றர்’ ஆருக்கு… வீட்டிலை குழந்தைப் புள்ளை இருக்கே….’ அவன் கேட்கிறான். 

‘எங்கடை வீட்டிலை எங்காலை குழந்தை…’ 

‘அப்ப…’ 

‘என்ரை மகள் கண்டியிலை இருந்து வரயுக்கை ஒரு பாவைப்பிள்ளை வாங்கிக் கொண்டு வந்தவள் அதுக்குத்தான்…’ 

றப்பர் போல் கழுத்து விரிந்து சுருங்க… கயிற்றில் தொங்க விடப்பட்ட பந்து போல் தலை சுளர.. கழுத்திறையில் கருக்கட்டிய வியர்வை வழிந்தோட அந்தப் பச்சைப் பாலனின்….. ஒரு உயிரின்… அழுகைக் குரல்… அதன் தாக்கம் பஸ்ஸிற்குள் பூரணமாக ஓயவில்லை!. 

உயிரற்ற ஒரு ‘பிளாஸ்டிக் பொம்மைக்காக’ சிலந்திவலை போல் சுவற்ரறைப் பின்னுகின்ற அந்த பெண்ணின் கைகளும் ஓயவில்லை! 

பஸ் ஓடிக் கொண்டிருக்கிறது! 

– கலைச்சுடர், 1974.

– கே.ஆர்.டேவிட் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2019, பூபாளம், யாழ்ப்பாணம்.

கே.ஆர்.டேவிட் கே.ஆர்.டேவிட் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். 1971 ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றுப் பின்னர் சாவகச்சேரி வலய உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றார். கடமையின் நிமித்தமாக 1971 இல் நுவரேலியா சென்றிருந்த இவர், அங்குள்ள மக்களின் அவலங்களால் ஆதங்கப்பட்டு அதனை எழுத்துருவாக 'வரலாறு அவளைத் தோற்றுவிட்டது' என்னும் நாவலைப் படைத்தார். இவர் சிரித்திரன் இதழில் தொடராக எழுதிய 'பாலைவனப் பயணிகள்' என்னும் குறுநாவல் மீரா…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *