உத்தியோக நாற்காலி
கதையாசிரியர்: மருதூர்க்கொத்தன்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 1,930
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மனம் சாந்தியால் நிறைந்து வழிகின்றது. போகும் போது புலனைத் தாக்காத சௌந்தர்யங்க ளெல்லாம் இப்பொழுது எவ்வளவு குழைவுடன் விருந்தளிக்கின்றன.
எலுமிச்சம் பழ நிறத்து அழகியின் முகவெழில் காட்டி, மடல்கள் விரித்து மன்றல் கமழ்ந்து சிரிக்கின்றன. தாழை மரங்களோ நிறைமாதக் கர்ப்பிணியின் சாயலில், செம்மஞ்சள் பூத்து மோகப் பொழிவு காட்டுகின்ற தாழம் பழங்களிலொன்றில் களை பறிக்கின்றேன். மடக் என்ற தொனியோடு களை பிணைப்பு விடுகிறது. ‘மடக்’ பொறுப்பற்ற ஒற்றைக் கண் விமர்சனங்கள் பூநிகர் இதயத்தை ஒடிப்பது போன்ற துன்ப வேதனையைத் தான் ஊட்டுகின்றது. களையின் முகிழ்ப் பாகத்தை பற்களால் கோதுகின்றேன். இனிக்கிறது. நன்னாரியின் மணங் கூட கமழ்கின்றது. இனிமையும் மணமும் உள்ள தாழங் கனியின் தொய்வுதான் நாக்கிலே சொறிவை ஊட்டுகின்றதோ? நாவிற்தினவெடுக்குங் தாழங்கனியிலிருந்தும் சுதேச வைத்தியர்கள் தைலம் வடிக்கத்தான் செய்கிறார்கள்.
தளிர் நாக்குகளை நீட்டிக் கிறவல் பாதைக் காதலனைத் தழுவத் தவித்து, இரு மருங்கும் கண்ணுக்கெட்டிய துாரம் வரை படர்ந்திருக்கும் அடம்பன் கொடிகளின் மரகதப் பசுமை சாந்தி குடி கொண்டுள்ள என் மனத்தையே பிரபலிக்கின்றது.
அந்த ஏழைக் குடியானவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளிக்கும் வரை நான் பட்ட பாடு என்னையே மறந்த நிலையில் அவர்களுக்குக் கூறிய வார்த்தைகள்…. வார்த்தைகளா அவை? இதயக் கமலங்களை சல்லடை துளைக்கும் கொடுங்கணைகள் வார்த்தை சரங்கள் இதயங்களைப் பிய்த்து வண்ணாத்தி விட்டு விளையாடி விட்டன என்பதை அவர்களின் பரிதாபமான தோற்றமே புலப்படுத்துகின்றது.
கடற் காற்றின் மெல்லோசையை பாட்டாக வரித்துப் பரதம் பயில்கின்ற ஊதாநிற அடம்பன் பூக்கள், என்னையே நகைக்கின்றன. இடித்துக் கேட்கின்றன. “நீயொரு மேலதிகாரியா? பூவினும் மெல்லிய இதயம் படைத்த எழுத்தானா? நீ வாணியின் கடைக்கண் வீச்சில் இறங்கி உனது சிருஷ்டியில் உன்னை இழந்திருந்தாய். என்பது கொடுமையிலடிபட்ட ஏழைகளுக்கு என்ன தெரியும். நீர்ச்சுழிப்பிலே சிக்கி, பற்றுக்கோடு கேட்டுத் தவித்தவர்களின் தலையில் பாறாங் கல்லையல்லவா துாக்கிப் போட்டு விட்டாய்” என்று கேட்பதாக உணர்வு தட்டுகிறது.
மலர்களே! என்னைச் சுடாதீர்கள். நான் தான் பிராயச்சித்ததம் தேடிவிட்டு வருகிறேனே. தெருவின் வளைவில் கிறுகி, ஊருக்குள் செல்லும் பாதையில் நடை கொள்ளுகின்றேன். தெருவை அடுத்த தோப்பில் மாந்தளிர் கோதும் குயிலின் மாங்கனிச்சாறு பிழிந்த கானம் என்னைத் தேற்றுகிறது. சற்று முன் குடியானவர்களைச் சந்தித்த போது போர்க்களமாக இருந்த மேற்குவானம் ரோஜாமலர் பரப்பிய படுதாவாகத் தோற்றுகிறது.
நேற்றிரவு ஊரெல்லாம் அடங்கிய நேரம் சோபாவில் அமர்ந்த, யூ.ஜி. நோநைல்ஸில் நாடகத்தோடு ஐக்கியமாகிக்கிடந்த மனைவியும் கொட்டாவி விட்டவாறே புத்தகத்தை மடித்து மேசை மீது போட்டுவிட்டு நகர்கின்றாள்.
“செம்புத்தகட்டடித்துச் செப்பனிட்ட தலை போல் மாணிக்கம் கரைகட்டி மடைதிறந்த நெருப்பாற்றை அதன் மத்தியிலே ஓடவிட்ட அழகுபோல்… அழகுபோல்…. அழகுபோல்…. போ…. …..!” தன்னறையிலே கிடந்து கட்டபொம்மனாய் நடந்த வேலைக்கார அப்புவும் நித்திரைக் கணிகையின் ஆலிங்கனத்தில் தன்னை இழந்து விடுகிறான். அடுத்த அறையிலே ‘தேவியும் தவமிருந்து’ கதையைப் பிரதி எடுத்துக் கொண்டிருந்த சுவீகாரப் புதல்வனின் ஊசாட்டமும் அடங்கிவிடுகின்றது. அவர்களுக்கோ இரவு ஐம்பது வயதைத் தாண்டிவிட்டது. எனக்கே… இரவு இளமையோடு இருக்கின்றது. எனக்கு அவள் எப்பொழுதும் மார்க்கண்டேய வரம் பெற்ற மங்கைதான். வாணியின் கடாட்சத்தில், உணர்வு நிலைத் தோய்வில் நல்லதையே விரும்பும் பாவலர் உள்ளம் நிகர்ந்த வெள்ளைத் தாளை ஊற்றுப் பேனாவின் கரிய மசியால் நிரப்பிக் கொண்டிருக்கிறேன். அமுதமும் நஞ்சும் கலந்து வாழ்வது போல, வெள்ளைக் காகிதமும் கரிய மசியும் சேர்ந்து இலக்கியமாகிக் கொண்டிருக்கிறது.
மச்சம் கொணர்ந்து மாந்தர் தம் பசி போக்கத் தொடுவானுக்குத் தோணியோட்டிச் சென்ற வாப்பா, அறு சுவை உண்டி அளவாக உண்ட சுகதேகியின் வயிறுபோல மீன் நிறைந்த வள்ளத்தில் கம்பீரமாக வீற்றிருந்து வரும் வரவை எதிர்பார்த்தவளாய் தாழை நிழலில், பச்சரிசி பரப்பியது போன்ற வெண்மணலில் கொலு வீற்றிருக்கிறாள் ஆமினா.
நிமிடங்கள் கரையக் கரைய தாளும் ஒன்றன்பின் ஒன்றாக நிரப்பிக் கொண்டே போகின்றன.
அதே தாழையின் கீழ் அதே வெள்ளை மணலில் உட்கார்ந்திருக்கிறாள் ஆமினா. அரசிகள் தாமே வீற்றிருப்பார்கள். அவளின் மடியிலை மதலை. எருமை உழக்கிய பங்கயமாக அவன் வதனம் வாடிப்போய் கிடக்கின்றது. வாப்பாவின் வரவை நோக்கி உட்கார்ந்திருக்கிறாள்.
எனது கண்கள் கசிந்த பிழிவு, கொலுவிருந்தாள் என்ற சொற்களிலே கொட்டிவிடுகின்றன. பேனாவைத் திறந்த கோலத்தில் மேசையில் வைத்துவிட்டு கதிரையில் கிடந்த துவாயால் கண்களை ஒற்றி எடுக்கின்றேன்.
“ஐயா!”
பரிதாபகரமான கெதியில் வெளியே இருந்து ஒரு குரல்.
“ஐயா! ஐயோவ்”
வெளிவாயில் விளக்கின் பொத்தானை அழுத்திவிட்டு வாயிலுக்குச் செல்கின்றேன். விளக்கு பக்கென்று பற்றிய போது வெளிவாயில் பகுதியில் வியாபித்த வெளிச்சம் என்னைக் கண்டதும் அவர்கள் வதனத்தில் பொலிந்த தேஜசுக்கு எங்கே ஈடாகப் போகின்றது.
“என்ன இந்த நள்ளிரவில்?”
நல்ல உத்தியோகம், நேரங்காலம் தெரியாமல் தொல்லை கொடுக்கிறார்களே என்ற எண்ணச் சுழிப்பில் நான் சற்றுக் கடுமையாகத்தான் கேட்கிறேன், ஒருவன் பேசுகிறான்.
“ஐயா! அந்த வகுத்தெரிச்சலை என்னெண்டு சொல்லுவேன் ஐயா, குஞ்சுங்குராலுமான எங்கட புள்ளையள் ஒண்ட இடமில்லாம நடுங்கிப்போய் நிக்குதுகளையா, எங்க ரெண்டு பேர்ர குடிசைகளைக் கடலெடுத்திற்றையா”
“அவ்வளவு கடலோரத்திலயா குடிசை கட்டினீர்கள்?” என்று உத்தியோக ரீதியில் குறுக்கு விசாரணையில் ஈடுபடுகின்றேன்.
“இல்லை ஐயா, றோட்டையும் கடலரிச்சி, றோட்டுக்கிங்கால இருந்த குடில்களையும் எடுத்திற்று. வருசா வருசம் அவடத்தில கடல் கொந்தளிக்கிறதான் ஐயா. இந்த வருஷம் இப்படி நடந்திற்று. ஆராரு செஞ்ச புண்ணிமோ எங்க உசிர் தப்பிவிட்டம்”
நனைந்த ஆகிருதியுடன் சால்வையைக் கம்முக்கட்டில் இடுக்கிக்கொண்டு கூனிக்குறுகிக் கேள்வி அடையாளத்தில் நிற்கிறார்கள். அவர்களின் பரிதாப கரமான தோற்றம் நான் செயற்கையாக வருவித்துக்கொண்ட கடுமையை எங்கோ போக்கடிக்கின்றது. அவர்களைத் தேற்றி முறைப்பாடு எழுதி விதானையிடத்திலும் கையெழுத்து வாங்கிக் கொண்டு நாளை கந்தோருக்கு வருமாறு கூறிவழியனுப்புகிறேன்.
வீட்டுப்படலை அண்முகிறது. முற்றத்திலே நிற்கிறேன். முற்றத்தில்தான் எத்தனை வகையான மலர்கள். பொழுதுமடங்கி பூக்கள் வாடித் தலை கவிழ்ந்து தொங்குகின்றன. துயரத்தில் அடிப்பட்ட ஏழைகளைப் போல அவைகள் முற்றத்திலே கிடந்த பிரம்பு நாற்காலியில் அமர்கிறேன். பூக்களின் எழில் பருகுவதே ஆனந்தந்தான். ஆனால், பொழுதுமடங்கிப் பூக்களின் வாடிய தோற்றம் முட்கம்பிச் சுருளை நெஞ்சத்துள் பாய்ச்சி விடுகின்றன.
இன்று பின்னேரம் காரியாதிகாரிக் கதிரையில் அமர்ந்து தஸ்தாவேஜூகளுடன் கலந்திருக்கின்றேன்.
“ஐயா வணக்கம்” என்ற குரல் கேட்கிறது. கனிவோடு கூடிய பணிவு குரலிலே கலந்திருக்கின்றது. தலையை நிமிர்த்தியவாறு பதில் வணக்கம் கூறிவிட்டு, இருக்கை காட்டுகிறேன். நான் கொஞ்சக் காலமாகச் சந்திக்கக் காத்திருந்து சமீபகாலத்திற்தான் அந்த வாய்ப்பு கிட்டிய, துடிப்பும் நிறைவும் வாய்ந்த ஓர் இளம் எழுத்தாளன் அவர் சங்கோஜத்துடன் கூடிய பணிவுணர்வுடன் இருக்கையேற்றுக் கொள்ளுகின்றார். இலக்கிய மன்னனான என்னோடல்ல கல்முனை காரியாதிகாரியோடு பேச வந்த விடயம் பேசப்பட்டு முடிவடைகின்றது. பேச்சுவாக்கில் இலக்கியம் பற்றி இரண்டொரு வாக்கியங்கள்.
சுயாதீனத்திற்கு தளையிடும் இந்த உத்தியோகத்தை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கட்டியழுவதோ? நண்பர்களும் இலக்கிய அன்பர்களும் தோழமையோடு நெருங்கக் கூசுகிறார்கள். பேசும் வார்த்தைகளையெல்லாம்இலக்கியமாகவே பேசவும், கேட்கும் பேச்சுக்களையெல்லாம் இலக்கியமாகவே கேட்கவும் அவாவுகின்றன. இந்த அவா நாளெல்லாம் நிறைவேறாவிட்டாலும் ஒரு சில மணித்தியாலங்களாவது நிறைவேறுகின்றதா? இதற்கெல்லாம் பரிகாரமாக பழையபடி கறுத்தக் கோட்டை மாட்ட வேண்டியதுதான் என்று சதா குதிர்ந்து கொண்டிருந்த எண்ணத்தில் உறுதிப்பாட்டை ஊடறுக்கிறது எழுத்தாளரின் சந்திப்பு.
எழுத்தாளர் விடை கொள்ளுகின்றார். இருந்த இரண்டொரு ‘பைல்’களைக் கைவிரல்கள் புரட்டுகின்றன. சிந்தையோ, காரியாலய அறையை – கல்முனையை நீச உலகையே தாண்டி ….. மனமென்ற வெண்திரை விதானத்தில் நாடகக் காட்சிகள் விரிகின்றன. உலகத்துப் பேரழிகள் பிச்சை வாங்கும் அபார சௌந்தர்ய வதியான மச்சாளின் மதிவதனம் பொலிகின்றது. அந்த அழகுத் தெய்வத்தை அவள் மைத்துனன் வைத்த கண் பெயர்க்காது பார்க்கிறான். அவன் அன்புக் கடிதலாக, ‘போடா.. குரங்கு! சனியனே…..!
அவள் காலமெல்லாம் காத்திருக்க அத்தான், பணத்துக்காக வேறொருத்தியை கை பிடிக்கிறான். இழுமென் ஓசை தமிழாள் அவள் நாவில் நகர்த்திக்க மறுக்கின்றாள். மைத்துனனின் பிஞ்சு இதயம் கொல்லன் கொப்பரையாகக் கொதிக்கின்றது.
“ஐயா! நாங்கதான்… நாங்கதான் ஐயா குடிசையை கடலெடுத்தவங்க” என்ற குரல் கிணற்றிற்குள்ளிருந்து பேசும் கரத்தில் செவிப்பறையை தீட்டுவதான உணர்வு தட்டுகின்றது. கற்பனைச் சரடுகளில் கவர்ந்து கொண்டிருந்த என் சிந்தனை வண்டியை தடம் புரட்டும் வலிமை அதற்கு இருக்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகள் ஒலிக்கின்றன. என்னையே மறந்து அதிர்ந்து கொட்டுகின்றேன். ‘உங்களை யார் கடலோரத்தில் வீடுகட்டச் சொன்னது?” மனமோ இலவுகாத்த கிளியான மச்சாளுக்காக அழுது வடிக்கின்றது. திடீரென்று சுய உணர்வு பெறுகின்றேன். கண்ணாடித் துாள்களை இதயத்துள் கொட்டிவிட்டது. போன்ற நெருடல் வேதனை தட்டுகிறது. நிமிர்ந்து பார்க்கின்றேன். யாரையும் காணவில்லை. மேசை மணியில் கைபதிக்கின்றது. பியோன் மாடியிலிருந்து திடுதிடுத்து வருகின்றான்.
“அவர்களை அழைத்துவா!”
“எவர்களை ஐயா” என்று இழுக்கின்றான்.
“சற்று முன் இங்கே வந்தவர்களை காரியாலயமே அதிர இரைக்கின்றேன். அவனும் காரியாலயமெல்லாம் ஓடி அலைகின்றான். எழுந்து சென்று பார்க்கின்றேன். நேரமோ காரியாலயம் கலையும் நேரமானதால் காரை எடுத்துக்கொண்டு விரைகின்றேன். வீட்டிலே காரைப் போட்டுவிட்டு பொடி நடையாக நடக்கின்றேன். காண்பவர்களிடம் விசாரித்த வண்ணமே விரைகின்றேன். அகதிகளாக நின்ற அந்த இரு குடும்பத்தினரையும் பார்த்தபோது ஐயோ! என்ன பரிதாபம் ஓய்ந்த போர்க்களம் போன்றிருந்த செவ்வான் அவர்கள் விழிகளின் முன் எம்மாத்திரம்.
பிரம்பு நாற்காலிகளுக்குச் களுவைக் கொடுத்து எழுகின்றேன். மரமுத்திரிகைப்பருப்புப் போன்ற பத்தாம் பிறையின் பால் வெள்ளத்தில் மூழ்கி பந்தல் முல்லைகள் மோகனமாகச் சிரிக்கின்றன.
மருதூர்க்கொத்தன்
கிழக்கிலங்கை தந்த சிறுகதை எழுத்தாளர் மருதூர்க்கொத்தன் ஆவார். இவரது சிறுகதைகள் இஸ்லாமிய மக்களது அவலங்களையும் இனிமைகளையும் பிரதேச மணத்தோடு சித்திரிப்பன. இஸ்லாமிய பேச்சு வழக்குத் தமிழ்நடை சிறுகதைகளுக்கு உரமூட்டுகின்றன. அதர், குழி, உரிமை என்பன தக்க சிறுகதைகள்.
– 10.05.1964, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.
| சமர்ப்பணம் அரிவரி வகுப்பில் ஏடு தொடக்கி வைத்து, சி. பா. த. பரீட்சையில் தேறியபின்னர் தன் கைப்பட விடு கைப் பத்திரமும் எழுதித்தந்த ஷரிபுத்தீன் வாத்தியார் (புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள்) முதலாக எனக்குக் கல்வி புகட்டிய, என் ஆற்றல்களை இனங்கண்டு ஊக்கு வித்த ஆசிரியப் பெருமக்களுக்கு இந் நூலைச் சமர்ப்பணம் செய்கிறேன். - மருதூர்க்கொத்தன். அவனது கதை வங்காப் ஊரில் அவனும் அவனது கூட்டாளிப் பையன்களும்…மேலும் படிக்க... |