உதயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 2, 2025
பார்வையிட்டோர்: 2,888 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அஸ்தமனத்திற்குப் பிறகுதானே உதயம்?… கலைக் கோயிலில் புதியன உதியம்!… கலைகளின் உதயம்! மனிதனுக்கு வேண்டிய மனிதக்கலையின் உதயம்… என்றாலும் கலை?… அது ஒரு பித்து! அர்த்தமற்ற அர்த்தம்! 

நாகநாதன் பிறவிக்கலைஞன்! ஐம்பது ஆண்டுகளைத்- தன்னுள் அடக்கி ஜீரணித்த இளைஞன். 

அதோ – ஓடையருகே, மலர்ச்சோலை நடுவே பசும் புற்றரையில் அவன் புரண்டு நெளிகிறான். செம்பொன் மேனியில் கருமை படர்கிறது… தசைக்கட்டுகள் உருண்டு திரண்டு மேடிட்ட மார்பு விரிந்து சுருங்குகிறது. கோபுரம் போன்று உயர்த்தி முடிந்த சிகையில் புழுதி படிகிறது… 

அவன் உள்ளத்தில் பனிப்பாறையாக உறைந்து கிடந்த துயரக்கண்ணீர் தாங்க முடியாத சுமையாக- நெஞ்சில் கனத்தது. அன்று அந்தப் பாறை வெடித்தது… சுமை குறைந்ததா?… 

கறுத்து அடர்ந்த நீண்ட புருவ வளைவுகளுக்கடியில் ‘பளபள’க்கும் நீள் விழிகளில் நீர் நிறைகிறது! மேகம் போல் புரண்டு கரியநிற அலைகள் அவன் பார்வையை மறைக்கின்றன. கார்மேகம் கவிந்த நிசிவானம் போல் நினைவிருள் திரை விரிக்கிறது. அந்த இருளில், ஜீவக் கடலில் நினைவு அலைகள் வெண்ணுரை கக்கிப் ‘பளீ’ரிடு கின்றன. மரணக் குகையில் மன வெளிச்சம் பரவுகிறது…- 


அதோ ஒரு புற்று! நிறைமாதக் கர்ப்பிணி ஒருத்தி அதைச் சுற்றி வலம் வருகிறாள். 

புற்றுக்கு முன்னால் பூக்குடலை, பழவகைகள், பால் செம்பு முதலியவை பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன. 

புற்றின் சிரத்தில் மலர்களைச் சொரிகிறாள். புற்று வாயில் பாலூற்றுகிறாள். மண்டியிட்டு வணங்கி நிமிர்கிறாள். 

அடி வயிற்றில், விலாப்புறத்தில்… 

“அம்மா…” கீழுதட்டை மடித்து வேதனையுடன் முணங்குகிறாள். 

ஐயோ என்ன வலி!… 

வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு புற்றருகே சாய்கிறாள். 

கண்கள் இருள்கின்றன…அந்த இருளில் நாகசர்ப்ப மொன்று அழகுற நடம் புரிகிறது! 

“நாகம்மா…என் வயிற்றில் பாலை வாரடி!…” என்று பிரார்த்திக்கிறாள். 

தலை கனத்தது… புற்றின் மீது தலைசாய்த்து மயங்கிக் கிடக்கிறாள்… 

அப்பொழுது ஒரு புதிய ஜீவன் உலகுக்கு அறிமுகமாகிறது! மயங்கிக் கிடக்கும் மாதாவின் உதிரத்தில், மண் சகதியில் மோனத்துயில் புரியும் அந்தச் சிசுவுக்கு உயிரூட்டுகிறது புற்றுநாகம்… அருகே படம் விரித்து நின்று ஆடுகிறது! குழந்தை இறந்துவிட்டதா?… 

இல்லை; அசைவு இருக்கிறதே… 

நாகத்தைப் போலவே அந்தக் குழந்தை நெளிகிறது…! புற்றுக்குப் பூசை நடத்தியதால் அவதரித்த குழந்தை யல்லவா?… 

மரகதத்தாய்ச்சிக்கு வெகு நாட்களுக்குப் பிறகு தலைப்புத்திரன் பிறந்திருக்கிறான்! 

அன்று மரகதத்தாய்ச்சியின் மகனுக்குப் பெயர் சூட்டப் போகிறார்கள். 

குழந்தையின் தகப்பனார் அம்பலவாணர் பூஜையறையில் நடராஜ விக்ரகத்திற்கு முன்பாக அமர்ந்திருக்கிறார்… அவர் அருகே பூக்குடலை, தட்டு நிறைய பழங்கள் கற்கண்டு, கோடி வஸ்திரம் முதலியன இருக்கின்றன. 

மரகதத்தாய்ச்சி, குளித்து முழுகி, சரிகைப் பட்டுச் சீலை சரசரக்க பவித்திரமாகக் குழந்தையை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு வந்து அவர் முன் நீட்டுகிறாள். தன் மடியில் தன் செல்வத்தைக் கிடத்திப் பெருமிதத்துடன் அவன் முகத்தைப் பார்க்கிறார் அம்பலவாணர் … 

“மரகதம், நம் செல்வம் உயர்ந்த கலைஞனாய்த் திகழக்கூடியவன்… நாம் மறந்த கலையை அவனுக்குப் பயிற்றுவிப்போம்! நடனசபாபதி என நாமம் சூட்டுவோம்…” 

விக்ரம் பெருமூச்சு விடுகிறது! அம்பலவாணர் திகைக்கிறார்… பெருமூச்சு விட்டது நடராஜர் அல்ல; அவர் கழுத்தில் நெளிந்த நாகம்… உயிருள்ள நாகம் சிலையை விட்டு இறங்கி மறைந்தது… 

அம்பலவாணர் கரங்கூப்பித் தலை வணங்குகிறார்…அவர் கண் விழித்துப் பார்க்கும்போது நாகத்தை அங்கே காணவில்லை! 

அவர் மடியில் குழந்தை புரண்டது; அதன் அசைவு நாக சர்ப்பம் நெளிவதைப் போன்றே இருந்தது! 

“நாகநாதன்”… என்று அவர் உதடுகள் முணு முணுத்தன. 

மரகதத்தாய்ச்சியின் புதல்வனுக்குப் பெயர் சூட்டியாகிவிட்டது…  


அன்று!… 

அம்பலவாணர் ஆற்றுக்கு நீராடச் சென்றிருக்கிறார். மரகதத்தாய்ச்சி பூஜையறையில் ஜபத்தில் லயித்திருக்கிறாள். 

முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாகநாதன் தோட்டத்தை நோக்கி ஊர்ந்து செல்கிறான். 

அவன் தவழும்போது முழங்காலை ஊன்றித் தவழ்வதில்லை… மார்போடு பூமியில் ஊர்கிறான்… பாம்பு செல்வதைப் போலவே செடிகளிலும் புதர்களிலும் புகுந்து மறைந்து வேகமாக ஊர்ந்து செல்கிறான் குழந்தை! 

பூஜையறையிலிருந்து கையில் பிரசாதத்துடன் வெளியே வந்த மரகதம் குழந்தையைக் காணாது திகைக்கிறாள். 

தோட்டத்தில் நாகப்புற்றின் மீது ஏறி தவழ்ந்து விளையாடும் குழந்தையைக் கண்டு ‘ஐயோ!’… என்று நெஞ்சு துணுக்குறுகிறாள். குழந்தை, புற்றுவாயில் கைவிட்டுத் துழாவுகிறது… புற்றின் மீதுள்ள பூச்சரங்களைப் பிய்த்து விளையாடுகிறது! அதன் மேனி முழுவதும் குங்குமமும், சந்தனமும் பாலும் சேர்ந்து புற்றுச் சேறு குழம்பி இருக்கிறது. 

மரகதம் இந்தக் காட்சியைக் கண்டு திகைத்து மயங்கி விழும் சமயம், ஆற்றிலிருந்து வந்த அம்பலவாணர் ஓடிச் சென்று அவளைத் தாங்கிப் பிடிக்கிறார் 

அந்தக் குழந்தையின் வதனத்தில் அர்த்தமற்ற அர்த்தத்தோடு ஒரு புன் சிரிப்பு தவழ்கிறது! 

நாகநாதனுக்கு இப்பொழுது வயது மூன்று! 

அதோ, தத்திக் குதித்துப் புற்றை நோக்கி ஓடி வருகிறான்! புற்றருகே சுற்றி விளையாடுகிறான். புற்று வாயில் இருக்கும் வாழைப் பழங்களை எடுத்துப் புசிக்கிறான்…’ இன்னும் ஏதாவது இருக்கிறா… என்று புற்றுக்குள் கையை விட்டுத் துழாவுகிறான்… கையில் ‘வழு வழு’ப்பாக என்னவோ நெளிகிறது!… 

”நாகா…” என்று அவன் தாயின் குரல் கலவரத்தோடு ஒலிக்கிறது!… 

“தோ… வந்துத்தேம்மா…” என்று ஓடுகிறான். 

கண்கள் கலங்க அவனை வாரியெடுத்து முத்தமிடுகிறாள் மரகதம்! 

அம்பலவாணரின் மனதில், இனிமேல் பையனைப் புற்று பக்கம் விடாமல் கண்டித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் விழுகிறது: 

அன்று மாலை! 

அவனுக்குத்தான் அந்தப் புற்றோடு என்ன உறவோ?… என்ன பித்தோ… தாயின் மடியில் இருப்பதைப் போல, அதன் மீது ஏறிக் குதித்துப் புரண்டு தவழ்ந்து விளையாடுகிறான்… 

புற்று வாயில் கையை நுழைக்கும்போது பின்புறமாக வந்த அவன் தந்தைக்கு ‘பகீ’ ரென்றது! குழந்தையை முதுகில் ‘பளா’ரென அறைகிறார். 

“இங்கே வராதேன்னு எத்தனை தடவை சொல்து…” என்று அதட்டுகிறார். 

பையன் சிறிது நேரம் கண் கலங்க நிற்கிறான். அவன் விழிகள் சினந்து தந்தையை நோக்கிக் குத்திட்டு நிற்கின்றன… அவன் முகம் சிவந்து குழம்புகிறது!… அப்பா!… அந்தக் குழந்தை முகததில் என்ன குரூரம்!..

அவர் மனம் அவனை அடித்ததற்காக வருந்துகிறது. அவனைத் தூக்குவதற்குக் கைகளை நீட்டுகிறார்… 

‘ஹும்…’ என்று சீறி அவர் கரத்தைக் கடிக்கிறான் நாகநாதன்! 

“டே… டேய்… என்ன கோபண்டா… போக்கிரி;” என்று செல்லமாக அவன் முதுகில் தட்டி அலனைத் தூக்கிக் கொள்கிறார். 

அவன் கடித்த இடத்தில் பல் பதிந்து லேசாக ரத்தம் கசிகிறது! 

‘பொல்லாத பயல்’!… என்று அவர் மனம் பெருமை யோடு கூறிக் கொள்கிறது! 

அன்று இரவு… 

அம்பலவாணருக்கு ஒரே மயக்கம் கண்களைச் சுழற்றுகிறது… 

“மரகதம்… கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா”….மரகதம் உள்ளே செல்கிறாள். 

அவர் பார்வை தொட்டிலில் உறங்கும் நாகநாதனின் பால் திரும்புகிறது… கண்களில் நீர் பள பளக்கிறது. மெள்ள எழுந்து தொட்டிலருகே செல்கிறார். குழந்தையை அணைத்து முத்தமிடுகிறார். 

கண்களில் மயக்கம்- அழுத்துகிறது… 

நாகநாதனின் தொட்டிலடியில் முகம் புதைத்து வீழ்கிறார்… உறக்கம்! 

அதென்ன உறக்கம்?…

மரகதத்தாய்ச்சியின் கையிலிருந்த செம்பு தரையில் உருண்டு ‘கணகண’க்கிறது!… சீறியடித்த காற்றால் விளக்கு அணைகிறது… நாகநாதனின் தொட்டிலருகே என்னவோ சரசரத்து மறைகிறது!… 

அதுதான் அம்பலவாணரின் ஜீவன் போலும்!… 

அம்பலவாணரின் மறைவு மரகதத்தாய்ச்சிக்கு ஒரு பெரும் புதிர்!… 

கலங்கி, அரற்றி, பித்துப் பிடித்துத் திகைத்துக் கிடந்தாள்… அவளைத் தேற்றி மீண்டும் மனுஷி பாக்கியது அவள் செல்வ மகன் நாகநாதன்தான்!… 


இப்பொழுது, நாகநாதன் பதினாறு வயது இளைஞன்!… 

அவன் அழகிய இளைஞன்; சாந்தஸ்வரூபீ!… சிற்சில சமயங்களில் உணர்ச்சிப் புயல் உள்ளத்தே குமுறியெழும் போது ஒரு சீற்றம் பிறக்கும்… அப்பா… அது பாம்பின் சீற்றம்தான்… 

அவன் உடல் பாம்பைப் போன்று, சாட்டை போல், உறுதியுடனும், லாகவமாகவும் அழகுடன் இருந்தது! 

மரகதத்தாய்ச்சிக்கு, தன் கணவன் சொன்ன வார்த்தைகள் மனசில் ஓசையிட்டன! 

“மரகதம்… உன் மகன் நடனக் கலை பயில வேண்டியவன்” 

“ஆமாம்… நடனக் கலை” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன! 

நாகநாதனின் மனசில் கனிகிறது ஓர் ஆசைக் கனல்!… 

புற்றிலிருக்கும் நாகம் ஆடுகிறதே; அதைப்போல் தானும் ஆடவேண்டும்; ஆட வேண்டும்… நாகத்தோடு போட்டியிட்டு நர்த்தனம் பயில வேண்டும்… 

“அம்மா… எனக்கு நாட்டியம் பயிலவெண்டும்”… என்று அவன் தன் விருப்பத்தை தாயிடம் தெரிவிக்கும்கும் போது அவள் திகைத்தாள்… தான் நினைத்ததை அவன் சொன்னதால் வியந்தாள்… 

“மகனே… நீ இளைஞனாகிவிட்டாய்… உன் பெற்றோர்களைப் பற்றி உனக்கொன்றும் தெரியா தல்லவா?… நாம் தேவதாஸி குலத்துதித்தவர்கள். வாழ்க்கையைக் கலைக்கே அர்ப்பணித்தவர்கள்… எப்படியோ, எனக்கும் உன் தந்தைக்கும் நேசம் மூண்டது. எங்கள் கலை வாழ்வு அதற்கு இடையூறாயிருந்தது… நாளடைவில் எங்கள் கலாமோகம் சிதைந்தது… நாங்கள் மணந்து கொள்ள விரும்பினோம். கணவனும் மனைவியு மணந்துகொள்ள மாக வாழ விரும்பி, கலையை உதறி எறிந்து ஊரைவிட்டு வெளியே றினோம்… நமது பூர்வீகம் தில்லையம்பதி… உன் தந்தை உயர்ந்த நடன கலாசிரியராக இருந்தவர்… உன்னையும் கலைஞனாக்குவதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சிதான்… ஆனால் ஒரு நிபந்தனை!”… 

“என்ன நிபந்தனை?” 

”மகனே!… இப்பொழுது உனக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றும்… உண்மையில் அந்த நிபந்தனை சிரம சாத்யமானது… மகத்தான தேவ சாதனை… இயற்கையை வெல்வதாகும்… இயற்கையின் விதிகளை மீறுவதாகும்… உன்னாலாகுமா மகனே!”… 

“அம்மா… என் கலைக்காக நான் எதையும் செய்வேன்… சத்தியமாக எதையும் சாதிப்பேன்…” 

“உண்மையாகவா… மகனே”… 

“என் நாகமாதாவின் மீது ஆணை” என்று முகம் சிவக்க உணர்ச்சி வெறியோடு அவன் கூறும்பொழுது பூஜையறையில் பூக்குடலைக்கு அருகே என்னவோ சர சரத்தது!

“மகனே நீ சிறந்த நர்த்தனனாவாய்”…

“தாயே… நிபந்தனை?… 

“ஆம்;… நாகா… உன் இளமை, ஜீவிதம், ஆண்மை, உயிர் அனைத்தும் இந்தக் கலைக்கே அர்ப்பணித்தாக வேண்டும்… உன் காதலி உன் அகத்தே கொலு வீற்றிருக்கும் கலைவாணியாகவே இருக்க வேண்டும்!… அவளோடு நீ அடையும் இன்பமே உன் வாழ்வின் இன்பம் என நீ கருத வேண்டும்… பிரம்மச்சர்யக்கனல் உன் அகத்தே சுடர் விட உன்மேனி புது மெருகு பெறவேண்டும்… அப் பொழுதுதான் உன் அகவொளி அகிலத்தை யெல்லாம் கலா போதையில் ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறும்! நீ நர்த்தனன்! நாதா, நீ நர்த்தனன்… அதற்கு இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வாயா மகனே!”… 

“அம்மா… நிபந்தனையைத் தெரிவிப்பதற்கு முன்பே நான் ஏற்றுக்கொண்டு விட்டேனே… இனிமேல் சிக்ஷை ஆரம்பமாக வேண்டும் தாயே!”… 

“மகனே… நீ உயர்ந்த கலைஞனாவாய்…” என ஆசீர்வதித்து அவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறாள மரகதத்தாய்ச்சி! 

“தித்…தித்…தை.. தித்..தித்..தை… 
தித்தித்தை- தித்தித்தை…” 

என்று மரகதத்தாய்ச்சியின் இனிமை மிகுந்த |குரல் தாளமிசைக்க நாகநாதன் நர்த்தனம் பயில்கிறான். 

அன்றொரு நாள் இரவு… 

மரகதத்தாய்ச்சிக்குத் தாளம் புரண்டது! 

நடுநிசி! 

வெளியே மழை கொட்டுகிறது. மின்னல் வானைக் கிழிக்க, இடி, போர் முரசம் கொட்டுகிறது. காற்று ஊளையிட்டு அழுகிறது. 

மரகதத்தாய்ச்சி உடல் தளர்ந்து படுக்கையில் கிடக்கிறாள்… 

“நாகா… நாகா…” என்று ஹீனக்குரலில் அழைக்கிறாள்… 

“அம்மா…” என்று நித்திரை விழித்த நாகனின் குரல் பரிவுடன் ஒலிக்கிறது. விளக்கைத் தூண்டுகிறான். குத்து விளக்கு ஐகஜ்ஜோதியாக சுடர் விடுகிறது… 

“என்னைத் தூக்கி உட்காரவை…” 

அவளை வாரியெடுத்து பஞ்சணையில் சார்த்தி அமர்த்துகிறான். 

“நாகா… எங்கே, அந்த… பொன்னம்பல நடனம்… சிற்றம்பலக்கூத்து…* மானிடப் பிறவியின் மான்மியக் காட்சி… ஒரு முறை உன் தாய் பார்க்கட்டும்”…

“ஆகட்டும் தாயே…” 

அவள் எதிரே நிற்பது நாகநாதனா? அல்லது, திரிபுர மெரித்தோனா? 

இடது தொடை அடி வயிற்றில் பொருந்தப் பாத முயர்த்தி, வலது கால் சற்றே வளைந்து நிற்க, இடது கரம் நீண்டு இடது பாதத்தைக் காட்ட, வலது கை, மார்புடன் குறுகி அபயமளிக்க, இடை ஒடுங்கி மார்பு அகன்று சிரம்
பெருமிதத்துடன் நிமிர, வதனத்தில் சாந்தியின் நிறைவு பொங்கிப்புரள, இதழ்க்கடையில் தெய்வீகப் புன்னகைப் பதுங்கி ஒளிய, சிற்றம்பலச் செல்வனாக, சிவகாமி மகிழ் கூத்தரசனாக நின்று காட்சி தருவது நாக- நாதனா ? சிவபிரானா? 

“குனித்த புருவமும்…” என்று அவள் கசிந்துருக.. அவன் தன்னை மறந்து கம்பீரமாக ஆடுகிறான்… 

வெளியே மழை நின்றது! பாட்டும் ஆட்டமும் நின்றது… மரகதத்தாய்ச்சியின் ஹிருதய தாளமும் நின்றது… நாகநாதனின் குருவான, அன்னையான மரகதத்தின் ஜீவன் அதோ, பூஜையறையில் கூத்தரசனின் அருகே சுடர் விடும் தீபஜோதியில் ஒன்றிவிட்டது 


நாகநாதன் இப்பொழுது தனியன்! அவன் கலையை உலகம் வியந்தது… அவனது கலை இன்பத்தில் மோகப் பரவசமெய்தி சிரக்கம்பம் செய்தது! புற்றருகே உள்ள அவனது சிறுகுடில் இப்பொழுது மாபெரும் கலைக்கோயிலாகப் பரிணமித்திருந்தது! கலையார்வமிக்க நூற்றுக் கணக்ககான யுவர்களும் யுவதிகளும் அவனை ஆசானாகக். கொண்டு கலை பயின்றனர்! 

மாலை நேரத்தில், புற்றருகே உள்ள பாறைமீது அமர்ந்து வேய்ங்குழலில் கானமழை பொழிவான் நாகநாதன்; அந்தக் கானத்தின் இனிமையில் தென்றல் மெய் சிலிர்ப்பாள்!… அசைவற்றுத் தெளிந்த ஓடை நீரில் தரங்கங்கள் தோன்றிப் பூரிக்கும்!.. புற்றுக்குள்ளிருக்கும் நாகத்தை – அதன் உள்ளம் குளிர்ந்து உடலில் இன்பவெறி புகுந்து – வெளியே உந்தித்தள்ளும் அவன் கானம் 

“மகனே…” என்று அவனைத் தழுவி முத்தமிட்டு “மகனே…” மகிழ அது மனிதப் பிறவியல்ல. என்றாலும், அதன் கண்களில் – தாய்மையின் களிவோ, தன் அருளால் ஜனித்த, உயிர்பெற்ற புதல்வனின் கலா மேதத்வம் என்று உணர்ந்த தனால் ஏற்பட்ட பெருமிதமோ… என்னவோ ஒரு உணர்ச்சி மின்னலிடும்!… 

புள்ளாங்குழலின் இன்ப நாதத்திற்கேற்ப, நாகம், உடல் விம்மி… படம் நிமிர்த்தி நின்று நெளிந்து அபிநயம் புரியும்!… 

குழலின் இனிமை!… அது எங்கு பிறந்தது… அந்த மூங்கிலிலா?… அவன் இதழ் ஈரத்திலா?… அல்லது அவன் உள்ளத்தின் அடி ஆழத்தில் சுரந்து, உதடுகளின் வழியே பொங்கி வழிந்த கான மதுவா?… அதில்தான் என்ன மயக்கம்!… என்ன கிறக்கம்!… 

அந்த இசை, விண்ணில் இழையும்! மேகத்தோடு உறவாடும்!… நாகம்மாள் நெளிந்து நெளிந்து ஆடுவாள்! அவனுக்குத்தான் அந்த ஆட்டத்தில் என்ன லயிப்பு .. 

பிறகு நாகம்மை மயங்கி சுருண்டு பூமியில் கிடப்பாள். அவன் ஆடுவான்! அவன் விழிகளில் அதே பளபளப்பு… அவன் சுவாசத்தில் அதே சீறல்… அவன் உடலில் எலும்புகள் உருகிவிட்டனவா?… என்ன நெளிவு… அவன் பாம்புப் பிறவி; நாக நர்த்தனன்! 

அப்பொழுதுதான் அவனிடத்தில் சிஷ்யையாகி நடனம் பயின்றாள் வசுமதி! வசுமதி, தாசி குலத்துத் தவப்பயன்! கலைவாணியின் அடிமை!… கலைவாழ்வே அவள் ஜீவன் அவள் அவனுடைய பிரதம சிஷ்யை! 

நாகன் எந்தெந்த பாவங்களைக் கொண்டு அபிநயிக்கிறானோ, அவையெல்லாம் தன்னிடையே. கண்ணாடியில் விழும் நாகனின் நிழலைப்போல பிரதிபலிக்க நடனம் பயில்வாள் வசுமதி! வசுமதி நாகநாதனுடன் சமபீடத்தில் நின்று ஆடும் திறமையுள்ளவள். ஆனால் ஒரே குறை!… அவளுக்கு நாக நர்த்தனம் தெரியாது! அவளுக்கு அதைக் கற்பிக்க வேண்டியது அவன் கடமை! நாக நர்த்தன சிக்ஷை விஷயம் மிகவும் ஏகாந்தமானது – அறியாதது. 

ஒருநாள், அவளைப் புற்றருகே அழைத்துச் சென்றான்! 

குழலிசை, நாகவிஜயம். நடனம் அனைத்தையும் கண்டு வசுமதி பிரமித்தாள்… பல நாட்கள் அவனுடைய அங்க அசைவுகளைப் பயின்றாள்… 

பிறகு ஒருநாள்… 

அவள் குழலிசைக்க அவனுக்கு வலப் புறத்தில் நாக மும் இடப்புறத்தில் வசுமதியும் நடனம் பயிலும் நேரத்தில் அவனே திகைத்தான்… எது நாகம்? எது பெண்?… 

நாகனின் பார்வை வசுமதியின் பால் திரும்பும் போதெல்லால் அவன் திடுக்கிட்டான்… அவள் கண்களில் ஒரு புதிய கிறக்கம், விபரீத ஆசை! 

ஓடையருகே, மலர்ச்சோலை நடுவே, பசும்புற்றரை யில் சதங்கையணிந்த அவர்கள் பாதங்கள் ‘கிணுகிணு’க்க நடந்து வரும் பொழுது – குயிலினங்களின் மோகன சப்த ஜாலங்கள் இதயத்தைத் தழுவ, கண்களில் கரைதத்தி வழியும் வேட்கையோடு நாகனைப் பார்க்கிறாள் வசுமதி! “வசுமதி… கலையைச் சிதைக்காதே!… உன் இளமை, இதயம், வாழ்வு அனைத்தும் கலைக்கே!… கேவலம் மானுடன் மீதுள்ள நிலையற்றப் பற்றினால் தெய்வீகக் கலையின் பெருமையைக் குலைத்துவிடாதே, அம்மா!…” என்று நெஞ்சுருகக் கூறுகிறான்… 

“ஸ்வாமி… என்னைத் திரஸ்கரிக்காதீர்கள்…” என்ற வார்த்தைகளைத் திக்கிததிக்கிக் கூறி முடிப்பதற்குள் அவள் விழிகளில் கண்ணீர் பெருகுகிறது! 

”வசுமதி!… அது சாத்யமல்ல…”

“ஸ்வாமி…” 

”போ!… ஆண்டவன் சந்நிதியில் உறுதி வேண்டித் துதி செய்!… போ… அம்மா… போ!…” அவன் ஆறுதல் மொழியால் அந்தப் மனப்புயல் அடங்கிவிடுமா?… இல்லை! இதயம் அதிரச் சீறிச் சாடும் உணர்ச்சி அலைகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறாள் வசுமதி! 

மறுநாள் மாலை! புற்றருகே குழலோசை; நாகம் ஓர் புறம் வசுமதி மற்றோர் புறம்… நடனக்காட்சி! 

வசுமதிக்கு ஆட்டம் தளர்கிறது!… அவள் பார்வை பாவத்திற்கேற்ற சலனமின்றி நாகன்பால் நிலைகுத்தி நிற்கிறது! அவன் மனமும் சற்றே நெகிழ்கிறது!… படத்தைப் பூமியில் அடித்துத் துடியாய்த் துடிக்கிறாள்… 

“ஸ்வாமி…” என்று நெஞ்சு விம்மக் கூறி நாசுனின் பாதங்களில் வீழ்கிறாள் வசுமதி!… நாகனின் கண்களில் கண்ணீர் பெருகுகிறது! அவன் பாதங்களில் சிரம்பதித் திருந்த வசுமதி ‘ஆ’வென்றலறுகிறாள். 

அவள் கணுக்காலில் உதிரம் வழிகிறது! புற்றருகே நாகம் சரசரத்து மறைகிறது! வசுமதியின் நீலம் பார்த்த சடலம் பூமியில் நீண்டு கிடக்கிறது 


காலத்தின் கரிய நிழலும், பிரகாசமிக்க தேஜசும் மாறி றி இயற்கைக்கு முதுமையளிக்கின்றன! 

ஆனால் நாகன்?… ஐம்பது ஆண்டுகளைத் தன்னுள் ஒடுக்கிய இளைஞன்! அவன் இளமை அழியக்கூடியதன்று. 

அவனுடைய பிரும்மாண்டமான கலைக்கோயிலில் கூத்தும் பண்ணும், நாடகமும் இசையும், ஓவியமும் சிற்ப மும் இலக்கியமும் சமயமும் தழைத்துச் செழிக்கின்றன. 

இவற்றிற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த நாக னுக்கு தன் அன்னைக்குக் கொடுத்த வாக்குறுதி நிறை வேறுவதில் என்ன நிம்மதி…என்ன பெருமிதம்! 

ஆனால்… வசுமதி போன்ற பிரதம சிஷ்யைகளால் இழுக்கு நேரவிருந்தது! 

அதுவும் நாக நர்த்தனப் பயிற்சியின் போதுதான் இந்தச் சோதனை! அவனுடைய அபிநயத்தைக் காணும் போழ்து – அதைப் பயில முற்பட்டு அதில் மயங்கி நிற்கும் அவர்கள் மனத்தில் அந்த லாகவமான பொன்னுடலைத் தழுவவேண்டுமென்ற காதல் பிறந்தது!… அவர்கள் இதயம் வெறிகொண்டன;… குழம்பினர்… குருநாதனின் நர்த்தன கோலம் அவர்கள் மனத்தில் பேய் நிழல் தட்டிற்று! அவர்கள் கலையை, கலையுள்ளத்தை, கலை மீதுள்ள பக்தியைச் சிதறடித்தது; அந்தப் பொன்னுடலுக் காக எதையும் இழக்க சித்தமாயிருந்தனர். 

அந்தச் சில வினாடிகள்… அவனும் மனம் நெகிழ்ந் தான்… நெக்குருகினான்… அதனால், வசுமதிக்கு நேர்ந்த கதியே அவனைக் காதலித்த அனைவருக்கும் நேர்ந்தது. 

முப்பது ஆண்டு காலத்தில்… அவன் கலைக்கோயிலின் கர்ப்பக்கிருஹக் கலாதேவிகளில் அநேகர் நாகமமையின் சீற்றத்துக்குப் பலியானார்கள். அது அவன் காதலின் தன்மை. 

அவன் ஹிருதயம் வெம்பித் துடித்தது… தன் பொருட்டு, எத்தனை அழகிய யுவதிகள், உன்னதக் கலா ராணிகள், பலியாகின் றனர் என்று எண்ணும் பொழுதெல் லாம் விம்மிவிம்மி அழுதான். என்றாலும் தன் பிரதம சிஷ்யைகளுக்கு நாகநர்த்தனம் பயிற்றுவிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை! அப்படி இருந்தால் அது கலைக்கு இழைத்த துரோகமல்லவா?… 

ஆனால், அவனுடைய கலைக்காக எத்தனை பலி! புற்றருகே நீலம் பாரித்துக் கிடந்த கன்னிப் பெண்களின் சடலம் எத்தனை யெத்தனை?… ஐயோ, இதென்ன பாவம்?… இதற்கு விமோசன முண்டா? என்று அவனுள்ளம் வெதும்பியது. 

அப்பொழுது நாகநர்த்தன சிக்ஷை பெறவேண்டிய முறை பூங்குழலி என்ற கலா ராணிக்கு… வழக்கம் போலவே ரகசிய சிக்ஷை ஆரம்பமாகியது. 

பூங்குழலி என்ன ஆவாளோ என்ற வேதனையில் இரவு பகலாக மனம் துடித்தான் நாகன். கடமையென்ற ஒரே உணர்ச்சி அவனைக் கொடியவனாக்கிறறு. அவ ளுடைய விதி விட்டவழி என்றே திடமடைநதான். 

செந்நிறமாக மேல்வானம் சிவந்தொளிரும் சோக நிழலில் வேயங்குழலின் நாதம் விண்ணைத் தழுவுகிறது. புற்றருகே, பூங்குழலி ஓர் புறத்தே, நாகம்மை ஓர் புறத்தே. நடனம் பயிலும் காட்சி நாகனுக்கு சோக நாடகம். 

ஆனால் இம்முறை ஓர் புதுமை. பூங்குழலி மற்றவர் களைப் போல், கலைக்காக வாழ்ந்தவளல்ல; கலைக் காகவே பிறந்தவள்… வெறும் ‘மாமிச வெறி’யும், மனிதப் புழுக்களின் உறவும் அவளுக்குத் தேவை இல்லை. நாகன் மட்டும், சூடுகண்ட பூனையாதலால் அவளைச் சந்தேகித்தான். 

நாகத்தின் விழிகளிலாவது தாயின் பெருமிதம். அவள் விழிகளில் கலை ஆர்வம் மட்டுமே… அவள் ஆடுகிறாள்… நாகம் ஆடுகிறது… நாகனின் மனோபீடம் ஏன் ஆடுகிறது…? 

பயிற்சி முடிந்து திரும்பும்பொழுது- முப்பது ஆண்டு களுக்கு முன்பு வசுமதியுடன் வந்தானே அதே இடத்தில், அதே நிலையில்… மனோநிலையில் மட்டும் சிறு வேறுபாடு… அன்று வசுமதிக்கு இருந்த மனோநிலை இன்று அவனுக்கு… 

எல்லோரும் அவன்மேல் காதலுற்று அவன் உறுதியைக் கலைக்க முயன்றதனால் நாகத்தால் தண்டிக்கப் பெற்றார்கள் என்பதே அவன் கண்ட சரிதை ஆனால்…. இந்தமுறை… பூங்குழலிக்கு அவன்பால் காதல் மூளாதது அவனுக்குப் பெருத்த ஏமாற்றமாகவே இருந்தது. அவள் உள்ளத்தில் பிரளயமே மூண்டது. அவள்பால் அவன் மனம் தீயாகச் சுழன்றது.. நாகத்தின் சீறல் போன்று பெரு மூச்சுகள் அவன் நெஞ்சைக் கிழித்தன. 

“…என் கலை அழியட்டும்… என் உறுதி சிதை யட்டும்… என் பிரம்மசர்யக் கோட்டை தகரட்டும்… என் வாழ்க்கை நசிந்துபோகட்டும்… ஆனால்… நாகத்தைப் போன்று வளைந்து நெளியும் பூங்குழலியின் பொன் மேனியை ஒருமுறை ஆரத்தழுவி… அவள் நெஞ்சகத்தின் மீது நெளிந்து கிடக்கும் தரளமாலை, என் நெஞ்சில் பதிய… அவள் செவிக் குண்டலம் என் கன்னங்களில் உரச… அவள் காற்சலங்கை என் பாதத்தோடு உறவாட, அவள் இடை மேகலை துவண்டு சரிய அவளை… என் றெல்லாம் நெஞ்சில் எண்ணங்கள் அலைக்கழிய ஒரு சீறல் மூச்சு… “பூங்குழலி”… என்று தொண்டை உணர்ச்சி அடைப்பில் கரகரக்க அவள் புஜங்களைப்பற்றி முகத்தருகே குனிந்தான். 

“ஸ்வாமி…” தீயைத் தீண்டியவள்போல் துடித்தாள் பூங்குழலி அவன் பிடியிலிருந்து திமிறினாள். 

“பூங்குழலி…” பாம்பின் சீறல்போன்ற அவன் வெப்ப மான மூச்சு அவளைத் தகித்தது. “குருதேவா… எனக்குத் தாங்கள் தந்தையல்லவா?…” அவள் குரல் நடுங்க கண் களில் கண்ணீர் பெருகிற்று. “பல்லாயிரக் கணக்கானவர் களின் தெய்விகக் கனவான கலைக் கோயிலைச் சிதைக்காதீர்கள்… நமது உழைப்பால் உயர்ந்த கலைக் கோயிலின் சிகரத்தின்மீது மாசு படியவேண்டாம்… குருநாதா… என்னை விடுங்கள். நாகத்தின்மீது ஆணை… கலையின் மீது ஆணை… தேவா… தேவா… என்று அலறி மூர்ச்சித் தாள் பூங்குழலி… நாகநாதனின் பிடி தளரவில்லை. 

அவன் முகத்தில் ராக்ஷஸ குரூரம்… ஒரு பேய்ச் சிரிப்பு… அவளை இறுகத் தழுவியவாறு கூக்குர லிடுகிறான். 

“பூங்குழலி… உன் ஆணைகள் புதியவை அல்ல;… நான் எப்பொழுதோ அவற்றை மீறிவிட்டேன்… நான் தேவனல்ல; மனிதப் புழு!… மனிதன் மனிதனாக இன்பந் துய்க்கவேண்டும்!… தெய்வாம்சமுள்ள நாகத்திற்கு விஷ மில்லையா?… நஞ்சு மட்டுமே, நாகம் நாகமாக இருக்கப் பெருமையளிக்க வல்லது. நாகத்திடம் விஷமில்லா விட்டால், அது ஒரு புழு. ஆண்மையோடு- மனி£ இன்பத்தை அனுபவிக்காத மானுடன், மனிதனுமல்ல; தேவனுமல்ல!… நான் மனிதன்… மனி தன்…” என்ற அவன் கூக்குரல் ஒடுங்குகிறது!… கண்கள் இருள்கின்றன… அவன் காலடியில் நாகம்மை படமுயர்த்தி கோரஸ்வரூப மாக நின்றிருந்தாள்;… அவன் கணுக்காலிலிருந்து வழிந்த உதிரம் பூமியை நனைத்தது. அவன் பிடிதளர்ந்தது. சுழன்று பூமியில் வீழ்கிறான். மூர்ச்சை தெளிந்த பூங் குழலி அலறினாள். 

அதோ, நர்த்தனன் நாகநாதன் புற்றருகே அருவம் போல் அசைகிறான். 

மேற்றிசை வானத்தின் செக்கர் வெள்ளத்தில் மறைந்தே விடுகிறான். அவன் வந்த வேலை முடிந்தது- போய்விட்டான். 

சிரம் நிமிர்த்தி நிற்கும் கலைக்கோயில் சோக இருளில் அமிழ்கிறது. பிறகு, புதிய ஒளி, கலையொளி பரவுகிறது. 

அஸ்தமனத்திற்குப் பிறகுதானே உதயம்… கலைக் கோயிலில் புதியன உதயம்… ஆம்; கலைகளின் உதயம்… மனிதனுக்கு வேண்டிய மனிதக் கலையின் உதயம்… தெய் வீகமானால் என்ன? மனிதத்வம் ஆனால் என்ன? என்றா லும் கலை… அது ஒரு பித்து… அர்த்தமற்ற அர்த்தம்… 

கலைக்கோயிலில்- கூத்தும் பண்ணும், நாட மும் இசையும், ஓலியமும் சிற்பமும், இலக்கியமும் சமயமும் தழைத்துச் செழிக்கின்றன. 

“தகதிமி… தகதிமி… 
தத்திமி… தகதிமி” 

அதோ, பூங்குழலி நாக நர்த்தனம் புரிகிறாள்.

– உதயம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1954, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *