உண்பது ஒரு நாழி!




நக்கீரர் குளித்து காலைக் கடன்களை முடித்து விட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். அவரது மாணவன் வந்தான். வணங்கி விட்டு உட்கார்ந்தான். ”குருவே” என்றான் மாணவன்.
“நேற்றைய பாடத்தில் ஐயம் ஏதேனும் உண்டா ?”
“ஒரு சந்தேகம். பொருளைப் பெருக்க வேண்டும் என்றீர்கள். உண்மை விளங்கியது. ஆயினும் பலர் குங்குமம் சுமக்கும் கழுதையாக இருக்கிறார்கள். பொருளைத்திரட்டி வைத்துப் பார்த்து மகிழ்வதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டுமா?”
நக்கீரர் விளக்கம் கூறத் தொடங்கினார்.
“உலகத்தையெல்லாம் ஒரு குடையின் கீழ் வைத்து ஆளும் மன்னனைப் பார்த்திருக்கிறாய். தனக்கென எதுவும் இல்லாமல் இரவும் பகலும் வேட்டை யாட விரையும் வேடனையும் பார்த்திருக்கிறாய், இருவருமே உண்பது நாழி. உடுப்பதோ மேலாடை, கீழாடை என்னும் இரண்டு. பிற தேவைகளிலும் ஒன்றாகவே, விளங்குகிறார்கள். செல்வத்தைச் சேர்த்து வைப்பதாலும் பயன் இல்லை. செலவழிப்பதிலும் பயன் இல்லை கொடுத்தலில் தான் பயன் இருக்கிறது. செல்வத்துப்பயன் ஈதலே.”
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்