உணவகத்தில் ரோபோ
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: October 4, 2023
பார்வையிட்டோர்: 4,659
நான் என் இருக்கையில் அமர்ந்த பிறகு சுற்றி நோக்கினேன். சிகாகோ நகரில் இருக்கும் சியர்ஸ் கோபுரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள இத்தாலிய உணவகம் வெள்ளிக்கிழமை மாலை கூட்டத்தால் நிரம்பியிருந்தது. எல்லோரும் தங்கள் உணவை ரசித்து கொண்டும் கலகலப்பாக பேசிக் கொண்டும் இருந்தனர்.
நான் உணவுக்காக அங்கு செல்லவில்லை. அந்த உணவகம் அதன் ரோபோ பணியாளர்களுக்காக பிரசித்தமானது. பல தர்ம சங்கடமான தவறுகளுக்குப் பிறகு, மற்ற எல்லா உணவகங்களும் தங்கள் ரோபோ பணியார்களை கை விட்டு விட்ட நிலையில், அந்த உணவகம் மட்டும் எப்படியோ தொடர்ந்து ரோபோ பணியார்களை வைத்து நடத்தி கொண்டிருந்தது. ரோபோடிக்ஸ் வீக்லியில் வேலைசெய்யம் என்னை என் பாஸ் அந்த உணவகத்திற்கு சென்று அந்த அனுபவத்தை வைத்து ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். அதனால் தான் நான் அங்கே சென்றேன்.
ஒரு ரோபோ பணியாளர் என்னிடம் வந்து வணங்கியது. “என் பெயர் ஜான், நான் இன்று மாலையில் உங்கள் சர்வராக இருப்பேன். உங்களுக்கு ஏதாவது குடிக்க வேண்டுமா?” என்று சொன்னது. அது நகரும் விதத்திலும் பேசிய விதத்திலும் ரோபோத்தனம் எதுவும் தெரியவில்லை. முழுக்க முழுக்க ஒரு மனிதனைப் போலவே இயங்கியது அது.
அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு, ரோபோ தொழில்நுட்பத்தின் அற்புதமான முன்னேற்றத்தைக் கண் கூடாக கண்டு வியந்தேன். நான் எதைச் சொன்னாலும் செய்தாலும், அதை அழகாகக் கையாண்டது அந்த ரோபோ. நான் என்னுடைய சில வழக்கமான தந்திரங்களைக் கையாண்டு அந்த ரோபோவைக் குழப்ப முயற்சித்தேன், ஆனால் அது எதுவும் வேலை செய்யவில்லை. சாப்பிட்டு முடிந்து வெளி வருகையில், ரோபோ பணியாளர்களுக்கான ஒரு வெற்றிகரமான சூத்திரத்தை அந்த உணவகம் உருவாக்கி விட்டது என்று நான் உறுதியாக நம்பினேன்.
சிகாகோவிலிருந்து 8250 மைல் தொலைவில் உள்ள மைசூர் நகரத்தில் அதிகாலை 4:30 மணி. தெருவே ஆழ் உறக்கத்தில் இருக்க, ஒரு வீட்டின் இரண்டாவுது மாடியில் மட்டும் விளக்கு எரிந்தது. ராஜ்குமார் என்னும் இருபது வயது மதிக்கத்தக்க உயரமான இளைஞன், தனது விர்ஷுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட் மற்றும் கையுறைகளை கழற்றி எறிந்தான். பக்கத்தில் இருந்த சோபாவில் சோர்வாக சரிந்து, “ப்சே, இந்த ரோபோ பணியார்களை தொலைவிலிருந்து இயக்குவது ரொம்பக் கடுமையான வேலை!” என்று முணுமுணுத்தான்.