உச்சி வெய்யில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 8, 2025
பார்வையிட்டோர்: 376 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குளிர், பல் கிட்டிற்று. போர்வையை மேலே சுற்றிக் கொண்டு பாறைமீது உட்கார்ந்தபடி, பிள்ளையின் வருகைக் குக் காத்திருந்தார். மணி ரெண்டுக்கு மேலாறது இன்னும் காணோமே. நைட் ஷிஃப்டில் 12-30 மணிக்கே திரும்ப வேண்டியவன். 

உலகில் உயிரிலாதது எதுவுமில்லை. கல்லானாலும் எங்களுக்கும் வளர்ச்சி உண்டு. உங்கள் கணக்கில் எத்தனையோ வருடங்களில், கால், அரை அங்குலம் கூடி யிருப்போமாம். 

யார் யாரோ எத்தனை எத்தனை முறையோ, காலம் காலமாய் என்மேல் நடந்து சென்றிருப்பரோ! ஆனால் இந்தப் பெரியவர், இந்த நள்ளிரவில், என்மேல் உட்கார்ந்து தன் மகனுக்குக் காத்திருந்த வேளையில்தான், அவருடைய பிள்ளைப் பாசத்தின் நெஞ்சு நெகிழ்ச்சியில், என் ப்ரக்ஞை யின் முதன் மூச்சு என்னுள் பாய்ந்திருக்க வேண்டும். 

ஒண்டியா சமைத்துச் சாப்பிடறான். ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கல்லியாம். கட்டுப்படியும் ஆகல்லே. ஆறு மாசத்துக் கொரு தடவை ஊருக்கு வந்து தங்கும் அந்த ரெண்டு மூணு நாளில் அவனைப் பார்க்க வயிறு ஒட்டிக்கறது. இளைச்சு, கறுத்துப்போய்… பாதி நாளைக்குச் சமைக்கமாட்டானாம். ராத்திரி டூட்டியிலிருந்து திரும்பினதும், ஆடையைக் கூடக் களையாமல் ஏற்கனவே நாள் கணக்கில் விரிச்சே கிடக்கும் படுக்கையில் பொத்துனு விழுவதுதான் தெரியும். நினைப்பு வரச்சே அது ஒன்பதோ பத்தோ அதுக்குமேல் சமைக்க எங்கே கைவரும். ‘டீ’ க் கடையில் காபி, டீ, பன், மசால் வடை, எது கிடைச்சதோ, காலத்தை ஓட்டு. 

உயிருடன் இருப்பது ஒரு நிலை. உயிரோடு இருக்கிறேன் என்று உணர்ந்து வாழ்வது வேறு நிலைதான். ப்ரக்ஞையின் முதல் மூச்சென்று சுலபமாகச் சொல்லிவிட்டேன். என்னுள் ஏதேதோ புரண்டெழுந்து – விழிப்பு என்பது சாமான்ய மானதா? 

ஆகவே பிள்ளைக்குச் சமைச்சுப் போட வந்திருக்கேன். என்ன, முட்டி முட்டி இன்னும் ஒரு மாசம் இருக்கலாம். ஊரில் காரியம் மலையாக் காத்துக் கிடக்கு. தை வந்ததும் கார் அறுப்பு – வயலில் கதிர்கள் கனம் தாங்காது சாஞ்சுடும். கொல்லையில் தேங்காய்க் குலை முத்தியிருக்கும். இப்பவே எந்த ராத்ரி பங்காளி வந்து பறிச்சுண்டு போயிருக்கானோ? சுப்புவுக்கு வரன் மும்முரமா தேடியாகணும். இந்தத் தைக்கேனும் வழி பிறக்குமா? 

கறிவேப்பில்லைக்கன்னு புழைச்சுடுத்துன்னு கடிதாசிலே ஓரத்துலே ஒரு வரி கண்டதுமே உடம்பு பரபரத்துப் போச்சு. அதைப் பார்க்காமல் நினைக்காமல் இருப்புக் கொள்ளல்லே. இங்கே இவன், அங்கே அது- அதனாலே ரெண்டும் ஒண்ணா யிருமா.இதென்ன தத்துப் பித்து! மனம் மனசைச் சீறித்து. 

அப்பப்பா, என்ன ருசி! இந்தக் கீரை பொரிச்சுக் குழம்பைத் தினம் பண்ணிப் போட்டாலும் ஆயுசுக்கும் அலுக்காமே சாப்பிட்டுண்டிருப்பேன்.” 

கூடச் சாப்பிட உட்கார்ந்தவர், இலைமேல் முகம் இன்னமும் தாழக்குனிந்தது, கண்ணில் துளும்பலை மறைக்க. 

“சேது, நீ தினம் ஒரு வேளையானும் சமைச்சுக் கணும்டா! ஒண்ணுமே முடியாட்டா, சாதம் வடிச்சுத் தயிர், பருப்புப் பொடி, கறிவேப்பிலைப் பொடி பண்ணி வெச்சுட்டுப் போறேன். அப்பளாம் சுட்டுக்கோ”. 

“உத்யோகத்தில் அப்படியெல்லாம் கையடிச்சுக் கொடுக்க முடியாதப்பா. வயிற்றுப் பிழைப்பு விட்ட வழி தான் உண்டு”. 

“அப்படியானா, ஒரு கலியாணத்தைப் பண்ணி வெச்சுட வேண்டியதுதான்”. 

“சரியாப் போச்சு, நானே இன்னும் ஊணிண்ட பாடில்லே. கல்யாணம் ஒண்ணுதான் குறைச்சல்.” 

“ஏண்டா. என் தள்ளாமைக் காலத்தில் இப்படிப் படுத்தறேள்?” 

சிரித்தான். “காலா வட்டத்தில் எல்லாம் சரியாப் போயிடும்பா.” 

“ஆபத்தாமபஹத்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்- மணிசத்தம் கேக்கறாப்போல இருக்கே! ஆமாம், அவனே தான். ராமா, வயிற்றிலை பாலை வார்த்தையா?” பாறையி லிருந்து எழுந்திருந்தார். “ராம மந்த்ரத்தைவிட மந்திரம் இல்லேடா சேது” 

‘விர்ர்’ரென்று அவர் காலில் உராய்வது போல வந்து நிறுத்தி இறங்கினான். அவன் முகம் கடுத்தது. 

“அடைகாக்க ஆரம்பிச்சாச்சோன்னோ? வீட்டுக்குள்ளே இருந்தது போக வெளியிலேயே வந்தாச்சா? அதனால் நான் வந்துடுவேனா? உங்கள் உடம்பைப்பத்தி நீங்கள் என்ன நினைச்சுண்டிருக்கேள்?” 

“நீ கொஞ்சம் மரியாதை காட்டலாம் சேது” 

“மரியாதையா?” பட்டாணிபோல் குதித்தான். “எனக்கு உங்கள் உடம்புதான் இப்போ முக்கியம். உடம்பை வெச்சுண்டுதான் அப்புறம் அதுக்கு மரியாதை. இங்கே குளிர்னா என்னன்னு உங்களுக்குத் தெரியாது. சில் மாரில் கவ்விட்டா, மரணச்சளிதான். என்மேல் பழி சுமத்திட்டுப் போகணும்னு பாக்கறேளா? மரியாதையாம். மரியாதை!” 

அவரைத் தூக்காத குறையாக உள்ளே தள்ளிக் கொண்டு போனான். கதவு அவர்கள் பின்னால் அடித்து மூடிக்கொண்டது. சாக்ஷியாக சைக்கிள் வெளியே நின்றது. 

நானும் சாக்ஷி நிற்கிறேன், அல்ல உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். அல்ல இருக்கிறேன். 

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல் என்று கல்மேல் ஏன் பழி? நான் நெகிழ்ந்துவிட்டேன். என்மேல் ஓரிரண்டு தூறல் – மேகத்தின் கண்ணீர்? அங்குமிங்குமாய் நக்ஷத்ரங்கள் தூக்கம் கலைந்து விழித்துக் கொள்கின்றன. 

சிருஷ்டி எங்களுக்குத் தந்த பாஷை மோனம். மோனத் துக்குப் பேச்சென்று இல்லை. ஆனால், மோனத்தில் இல்லாத பாஷையே இல்லை. அதே, உங்கள் பாஷை எனக்கு உணர்விலேயே புரிகிறது. 

எங்களுக்கு வாயில்லை, சத்தமில்லே, தொட்டுக் கொள்ள நெஞ்சென்று தனி அங்கமில்லை. ஆனால், நெகிழ்ச்சி உண்டென்று வந்திருப்பதால் கண்டுகொள் கிறேன். அந்தந்த சமயத்துக்கு உடல் பூரா பார்வை, உடல் பூரா செவி. 

உணர்வும் முன்னாலேயே இருந்திருக்கும். அதைத் தட்டி எழுப்பும் விழிப்புத்தான் புதிது. உணர்வின் ஏடுகள் புரள்கின்றன. முன்பின், இப்போ, எல்லாம் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொள்கின்றன. இதுதான் நினைவு? 

என்மேல் ஏதோ மெத்தென்று வீசி ஒற்றி விழுந்து எழுகிறது.ஓ, நீ என்னை நட்பு பிடிக்கிறாயா? நீதானே காற்று? 

“ஆம், நீ இப்பத்தான் தூக்கம் கலைந்திருக்கிறாய், இல்லையா? என்னைச் சோதரனாக்கொள். ஆம், உறவு எங்கேனும், யாரேனும் ஆரம்பிக்க வேண்டும் அல்லவா? சோதரனே, உன்னைச் சுற்றிலும் விழித்துப் பார்” 

மையிருள் என்மேல் கவிகின்றது. இப்போது மேகங்கள் வலுவிழந்து கலைகின்றன தேய்ந்த நிலவின் இருண்ட வெளிச்சத்தில் என் விளிம்புகள் தெரிகின்றன. 

என் அடிவாரத்தில் பொட்டுகள் சொட்டினாற்போல் வீடுகள். கட்டான் கட்டானாய் வயல்கள். எதிருக்கெதிர் வீடுகள். நடுவே பாம்பு வளையில் ஓடும் பாதைகள். மனிதன் ஏன் ஓடியாடி அலைகிறானோ, வீட்டுள் இப்போது களைத்துத் தூங்குகிறான். அதுவும் என்ன நிச்சயம்? ஆனால் நான் காவல். நானும் பயப்படுகிறேன் என் நினைத்துக்கொள்வதில் ஒரு பெருமிதம் உணர்கிறேன் எனக்கு இனி உறக்கம் என்பதில்லை. இப்பத்தானே விழித்திருக்கிறேன்! 

நேரம் முதிர முதிர, வானம் சாம்பல் பூத்துப் படர்ந்து, திட்டு வலுத்து வெண் சிவப்பாகி அடுத்து அத்துடன் மஞ்சள் குழைந்து, செஞ்சிவப்புச் சாயம் தோய்ந்து – என்னுள் ஏதோ பரபரப்பு – ஏதோ கம்பீரம் உருவாகிக் கொண்டிருக் கிறது. இது எனக்கொரு விழிப்பு. விழிப்புள் விழிப்பு. 

தங்கத் தாம்பாளம் தகதகத்துக்கொண்டு எழுகிறது. அதனுள் விடும் ஒளி மனிதனா, தேவனா? பார்வையைப் பறிக்கும் அந்த ப்ரகாசத்தின் கூச்சம், அந்த ஊருக்குத் தெரியவில்லை. தெரியலாகாதென்றேதான் இந்த ஒளியோ? 

பலவர்ண மேகத்திரள்கள் பரிவாரம் சூழ்ந்திருக்கின்றன. நான் என்னவோ இருக்குமிடத்தில்தான் இருக்கிறேன். ஆனால் நானும் இந்தப் பரிவாரத்தில் சேர்த்திதான். எப்படியென்றுதான் விளங்கவில்லை இத்தனை மேகங்கள் எப் போது திரண்டன? நாளாவட்டத்தில் தெரிந்துகொண் டேன். 

முதன்முதலாக நினைவு தே ன்றிய நாள் முதலாய் இப்படித்தான் நேர்ந்து கொண்டிருக்கிறது. திடீரென்று பாறை பாறை, மதில் மதில், உடனேயே அத்தனையையும் விரட்டி அடித்துவிட்டு, பூரித்த முழு நீலத்தின் நடுவே புரியாத கோலத்தில் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் அந்த ஜோதி.


இவருடைய ரலமி படாத இடமே இல்லை. என்மேல் என்னைச் சூழ்ந்து செழித்த பசுமையில், என்னைப் போலவே ஆங்காங்கே நிற்கும் இக்குன்றுகள் மேல், விட்டு விட்டு நட்ட தந்திக்கம்பங்களில், கம்பிகள் ஜ்வலிக்கின்றன. தந்திகள் வாசிக்கின்றன. இருந்த இடத்தில் இருந்தபடி இந்தப் பெரிய ஆசீர்வாதத்தில் அதிசயிக்கத்தான் முடியும். அதிசயிக்கிறேன். 

அதிசயம் விழிப்பின் விரிவு. 

அதோ மலைமீது கோவில் ஸ்தூபியைத் தகதகப்புத் தொட்டு, ஸ்தூபி நெருப்புப் பந்தாய் மாறுகிறது, மலை அடிவாரத்தில். ஏரியில் நீர்மட்டம் வெள்ளித் தகடாய் மாறி விட்டது. 

ஆள் நடமாட்டம் ஆரம்பித்து, உடனேயே அதிகரித்தும் விட்டது. மனிதன் மறுபடி ஓடியாடி அலைய ஆரம்பித்து விட்டான். படிப்படியாக உயர்ந்து உச்சியை அடைந்ததும் வெயிலின் வெம்மையில், நான் காணும் உலகம் திரைச்சீலை யாக நடுங்குகிறது. இந்தச் சமயத்துக்கு இவருக்கு ஏன் இத்தனை கோபம்? 

ஆனால் உச்சியிலிருந்து இறங்கத் தொடங்கியதும் இந்தக் கோபம் தணியத் தொடங்குகிறது. அவரும் படிப் படியாக இறங்குகிறார். எதிர்வானம் தண்ணிய சிவப்பில் மேகங்கள், பலவர்ணத் தீட்டலில், பாறைகள், குடிசைகள், தீசல்கள் ஈட்டுகின்றன. அவருடைய அற்புதமான ஜ்வலிப்பை இப்போது கண்ணைக் கூசாமல் தரிசிக்க முடிகிறது. 

என்றோ ஓருநாள். இந்தக் காலத்தின் அளவு என் கணக்கிலுமில்லே மனிதன் கணக்கிலுமில்லை. என்றோ ஒரு நாள் நானே இந்த நெருப்பின் பொங்கலில் சிதறித் தெறித்த செந்தணல் பொறியாகப் பூமியில் விழுந்து நீர்த்து இறுகிப் போய். நாளடைவில் மண்ணும் புழுதியும் சேர்ந்து கெட்டிப் பட்டுப்போன உருவமோ என்று திகைக்கையில் என் கல்லும் குறுகுறுக்கிறது. 

ஒளிமங்கி, இருள்கூடி, இரவு மீண்டும் வந்துவிட்டது. இப்படி மாறி மாறி பகல் இரவைத் துரத்தி, இரவு பகலைத் துரத்தி இந்த ராட்டினம் இதுவரை எத்தனை, இனிமேலும் எத்தனையோ? 

இதுபோன்ற ஒரு பகலில் கிழவனார் ஊருக்குப் போய் விட்டார். அவரை வண்டி ஏற்றி அனுப்பிவிட்டு, பையன் திரும்பி வந்து வாசற்படியில், முழங்கால்களைக் கட்டிய கை களினிடையே முகம் கவிழ்ந்து உட்கார்ந்துவிட்டான். அவன் தோள்கள் குலுங்கின. இவன் துக்கத்துக்கு என்னால் என்ன செய்ய முடியும்? 

மறுபடியும் அவன் இஷ்டப்படிதான் வருகிறான். போகிறான். அவனால் முடிந்ததும் அதுதான். மனிதர்களின் கவலைகள், துயரங்கள், அவரவரது தனித்தனி. 

என்னைச் சூழ்ந்த மற்ற குன்றுகளைக் காட்டிலும் நானே பெரியவனாயிருக்கிறேன். உயரமில்லை, பரவல். என் நடுவே ஒரு சுனை தண்ணீர் மெதுவாய்க் கொப்புளித்த வண்ணமாயிருக்கிறது. பூமியின்கீழ் என் வேரும் அதன் சுரப்பும் எத்தனை ஆழமோ? தண்ணீரின் விறுவிறுப்பை உணர்கிறேன். ஆனால் இதைத் தேடி வருவோர் அதிக மில்லை. சுற்றி கிணறுகளும் பம்பு செட்டுக்களும் ஏராளம். எட்டு தூரத்தில் ஏரி. 

என் விலாவில் கரடு முரடு பள்ளங்களும், மேடுகளும், புரையோட்டங்களும், முடிச்சுக்களும். 

ஒரு பிற்பகல். இரண்டு வாண்டுகள் வந்து என்மேல் உட்கார்ந்தன. ஒருவன் இருமிக்கொண்டே, கஷ்டப்பட்டுப் புகை பிடிக்கிறான். இவன், ”டேய், இதனுள்ளே இருள் இருளா இடமெல்லாம் இருக்குது. நீ உள்ளே போயிருக்கியா?” 

“நீ போயிருக்கையா?” 

“போனேனே, பத்து நாளைக்கு முன்னாலே”. 

“என்ன கண்டே,ஏதாச்சும் புதையல் கிடைச்சுதா?” 

“வளைஞ்சு வளைஞ்சு உள்ளே ரொம்ப தூரம் போவுதுடா. போவப் போவ அம்போன்னு இருட்டு. திரும் யிடலாமான்னு ஒரு சமயம் நெனச்சேன். ஆனால் வழி தெரியல்லியே! இனிமே ஆத்தா தம்பி தங்கச்சியைப் பாக்கப் போறேனான்னு அளுகை வந்திருச்சி சமயத்துலே கறுப்பு கலைஞ்சு வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமா விட்டுக் கொடுத்து, நடக்க நடக்க விரிஞ்சுக்கிட்டே போச்சு. திடீர்னு இடம் அகலமா அறையாட்டம் பெரிஸ்ஸா, நடுவுலே நிக்கிறேன். ஓரமா பாறையிலே அலுமாரியாட்டம் ஒரு பொந்துலே அம்மன் சிலை. இன்னும் உருவாயிட்டே இருக்குது. குந்தியிருக்கா. தடால்னு விளுந்து ஆத்தாளைக் கும்பிட்டேன். என்னைப் பார்த்து சிரிச்சா.”” 

“அப்படி விடறா டகல்-” 

“என் தலைமேலே கையை வெச்சு சொல்றேன், விட்டேன்னு சொல்லு. நீ சொல்லமாட்டே. நான் சொல் றேன். அப்போ அந்த அறையிலே மூலையிலே இன்னொரு யாதை தெரியுது. அது வழி பத்தடி நடந்தேன். ஒரு திருப் யத்துலே சட்டுனு வெளிலே வந்துட்டேண்டா. சந்தோசத்துலே சுத்திச் சுத்தி வந்து, வந்த வழியைத் தேடினால் சிக்கல்லே. கிடைக்கல்லே. நான் உள்ளே போனது அத்புதம் கண்டதும் அத்புதம், வெளியிலே வந்தது அத்புதம்”. 

அவர்கள் போன பின்னர் அந்தப் பையன் சொன்ன து வெகுநேரம் புரிந்தும் புரியாமலும் உறுத்திக் கொண்டிருந்தது. 

பகலும் இரவுமாய் மாறி மாறி நாட்கள் நகர்கின்றன ஒரு சமயம் ஓடுகின்றன. ஒரு சமயம் தயங்குகின்றன. ஆனால் எந்த சமயமும் நின்றதில்லை. 

என்னைச் சுற்றி வீடுகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. காலியாகின்றன. குடித்தனங்கள் மாறுகின்றன. வயல்களில் கதிர்கள் பெருமூச்செறிகின்றன. ஏரி வற்றுகிறது. மழை பெய்கிறது. தடித்த தூறல்கள் என்மேல் தமுக்கு வாசிக்கின்றன. மழை கொட்டுகிறது. ஏரி நிரம்பி வழிகின்றது. குளிர் கிட்டுகிறது. இலைகள் உதிர்ந்து மரங்கள் நிர்வாணமாகின்றன. நான் ஏற்கனவே நிர்வாணம் தான். ஆனாலும் இப்போது அதுமாதிரி ஒரு உணர்வு தோன்றுகிறது. 

மரங்கள் ஒரு பக்கம் பட்டுப்போய்க்கொண்டே மறுபக்கம் துளிர்க்கின்றன. ஏதேனும் நிகழ்ந்துகொண்டு வர்ணங்கள் நேர்ந்த வண்ணமிருக்கின்றன. 

ஒரு தினம் எனக்கு அண்டைக் குன்றை மொய்த்துக் கொண்டிருந்த ஜனங்கள் அத்தனைபேரும் சட்டென இறங்கி ஓடிப்போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிய சத்தத்துடன் குன்று வெடித்தது. பெரிய விரிசல், பெரிய பள்ளம் விட்டுக்கொண்டு பெரிதும் சிறிதுமாய்க் கற்கள் சரிந்தன. அதை என்னவோ செய்திருக்கிறார்கள். 

எனக்கும் இந்தக் கதிதானே ஒருநாள் என்று தோன்றினதுமே உள்ளே சில்லென்றது. ஆகவே ஆயசு எனக்கும் கணக்கில்தான் இருக்கிறது. இது நல்லதா கெட்டதா? புரியாத புதுக்கேள்வி வாட்டுகிறது. ஆனால், எது, என்ன, எப்படி நேர்ந்தாலும் என்னால் என்ன செய்ய மு யும்? அன்றொரு நாள் பறந்துகொண்டேயிருந்த பக்ஷி ஒன்று பொத்தென என்மேல் விழுந்து பொடி நேரத்தில் யிரற்று சிறகுக் குதறல் ஆகிவிட்டது. மாரடைப்பா, சிறகின் களைப்பா, விழுந்த அதிர்ச்சியா, எது எப்படியிருந் தாலும் என்னால் என்ன செய்ய முடிந்தது? மொத்தா காரமான, செயலற்ற ஜீவன். 

இப்போது ஒரு தனிமை தெரிகிறது. இது உணர்வு பெற்றதன் விளைவு. அறிகிறேன். ஆயுசு தனிமை, வெறிச்சோ- என்ன செய்வேன்? என்னைச் சுற்றி நல்லன பொல்லாதன,சுகம், துக்கம், வாழ்வு, அறிவு நிகழ்வன யாவுக்கும் என்வரை செயலற்ற சாக்ஷி நான். இந்த உணர்வு வேண்டாம் என்று மறுப்பதும் என்னிடம் இல்லையே! பெற்றபோது தேடியா பெற்றேன்? 

ஆனால் பெற்றதை இழக்கவும் மனமில்லை. சம்பவங் களின் பவனி,ஆச்சர்யம் குன்றா அனுபவம். உணர்வு இலாது இது சாத்தியமா? 

ஒரு நாள் – 

இரவு டியூட்டியிலிருந்து திரும்பி வந்து பாயில் விழுந்து – கண்கள் எரிந்தன – அடித்துப்போட்டாற்போல் களைத்து. அவ்வப்போது கலைந்த தூக்கங்களிலிருந்து ஒருவாறு மீண்டு பார்வை சுவர்க்கடியாரத்தில் நிலைத்ததும் அது பதினொண்ணு காட்டியது அவனுக்கே ஆச்சர்யமாயிருந்தது. இத்தனை நேரமா ஆயிட்டுது? 

சோம்பல் முறித்து எழுந்து, வாயில் டூத்-ப்ரஷ்ஷுடன் வாசலுக்கு வந்தான். பாறைமேல் கூட்டம். ஐந்தாறு பேர் நெருக்கமாக நின்றாலும் கும்பல்தான். மேலும் கீழுமாய்ப் பார்த்துக்கொண்டு. சிரித்துக்கொண்டு, கொக்கரித்துக் கொண்டு, ஓரிரு விரல்கள் உற்சாகமாய் ஆகாயத்தைச் சுட்டிக்காட்டிக் கொண்டு – அண்ணாந்தான். ஒரு புடவை ரோஸ் கலர், பட்டை நீலக்கரை, உயரக் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. அவனும் ஓடிப் பாறைமீது ஏறினான். 

கீழே, தண்ணீரில், மார்பளவு ஆழத்தில் அமிழ்ந்து, கை களால் மார்பைப் பொத்திக்கொண்டு உட்காரவா, நிற்கவா, நிற்குமளவுக்கு ஆழம் இருந்ததா? முழுக்க மூழ்கியேவிட ஆழம் இருந்ததா? கேள்விமேல் கேள்வி நெஞ்சில் அடுக்கிச் சரிந்தன. 

கண்களை இறுக்க மூடிக்கொண்டு உள்ளே கூசிப் போய்- 

இவள் நிலை பொறுக்க முடியவில்லை. என் செய்வேன். நண்பன் என்று சொல்லிக்கொண்டு காற்றின் வேலை இப்போ ஒரு வேடிக்கை காட்றேன் பார்!’ இது ஒரு விளை யாட்டா, ஐயோ என்ன செய்வேன்! 

என்ன செய்தான் என்று தன் நினைப்பிலேயே அவன் இல்லை. இடுப்பு லுங்கியை அவிழ்த்து அவளிடம் வீசியெறிந்தான். மூழ்குபவன் கரையோரம் கோரையைப் பற்றுவது போல் அவள் அதைப் பற்றிக்கொண்டு தண்ணீருள் மூழ்கினாள். 

“ஏண்டா, நீங்க அவங்க அவங்க தாய்மாருக்குப் பொறந்தவங்கதானே! உங்களுக்கு அக்கா தங்கை, பொண்ணுன்னு கிடையாது? வேடிக்கையா பாக்கறீங்க உங்களுக்கு வெக்கமாயில்லே?” 

இத்தனை சீற்றம் எங்கிருந்து வந்தது? இந்தக் கோபம் அவனுடையது மட்டுமன்று. இது மானுடத்தின் கொதிப்பு. உடம்பு கிடுகிடென ஆடிற்று. 


அவர்கள் பின்னடைந்தனர். அந்தச் சொற்கள், அந்தக் குரல் அவர்களுடைய பச்சை நரம்பை எங்கோ தொட்டிருக்க வேண்டும். பதில் பேசாமல், ஒன்றும் இரண்டு மாய் விலகிப்போனார்கள். போயேவிட்டார்கள். 

இறங்கி வந்தான். தண்ணீரினின்று அவள் எழுந்தாள். வேட்டியை, அக்குள்வரை இழுத்து இறுக்கக் கட்டியிருந்தாள். 

“என் புடவை ! என் புடவை!” அலறினாள். 

அது எங்கே பறந்துபோய், எல்லாருக்கும் இன்னும் மாயம் காட்டிக்கொண்டிருக்கின்றதோ? அல்லது எந்த தந்திக்கம்பத்தில், எந்த மரத்தின் உச்சாணிக் கிளையில் சிக்கி… 

“எங்கேன்னு தேடறது? இப்போ என்ன செய்ய முடியும்?” 

“என் நயினா! என் நயினா! என்னைப் பலி போட்டுடு வாரு!” 

“அப்போ இங்கே தண்ணிலேயே தான் இருக்கப் போறியா?” 

ஒன்றும் புரியாமல் கைகளை உதறினாள். விழிகள் திகில் சுழிகள். “இதோ என் வீடு. இப்போ உள்ளே வா. யோசிப் போம். உன்னை ஒண்ணும் செய்யமாட்டேன், வா!” 

ஒடுங்கிக்கொண்டே உள்ளே வந்தாள். வாசற்கதவை இழுத்து மூடினான். இருக்கும் ஒரு அறையில் அவளை இருக்கச் சொல்லிவிட்டு, டீ போட்டு இரண்டு தம்ளர்களில் ஊற்றிக்கொண்டு வந்து, ஒன்றை அவளிடம் கொடுத்து விட்டு. தான் மெதுவாகப் பருகினான். இது நானா வாங்கிக் கொண்ட வம்பா? மத்தவங்க மாதிரி நானும் வேடிக்கை பார்த்துட்டுப் போயிருக்கலாமோ? ஆனால், எனக்கு அப்படித் தோணல்லியே! 

சரியான நாட்டுக்கட்டை, குதிரைக் குட்டிபோல் ‘விண்’ ணென்றிருந்தாள். மாநிறத்துக்கும் மட்டு. கூந்தல் நீளமாய், நனைந்து அடையாய்ப் பிடறியில், தோள்களில் முதுகில் ஒட்டிக்கொண்டிருந்தது. புஜங்களில், கழுத்துக்குக் கீழ் மார்பில், ஜலம் முத்திட்டு நின்றது. உடம்பு இன்னமும் உதறிற்று, குளிரா, பயமா. இரண்டுமா? விழிகள் ஏற்கனவே பெரிதில், பயத்தில் இன்னும் பெரிதாய்க் காட்டின. 

“எங்கிருந்து வரே?” 

கையை வீசி, அஸ்வாரஸ்யமாய் எங்கோ காட்டினாள். புரியவில்லை. இப்போது அது அவளுக்கு முக்கியமில்லை. 

திடீரென்று தேம்பித் தேம்பி அழுதாள், மார்பே உடைந்து விடும்போல். 

“ஏன் அளுவரே? இப்ப என்ன ஆயிடுச்சி?” என்று முனகினான். அவனுக்கே அவன் வார்த்தைகளில் தைரியமில்லை. 

“இன்னும் என்ன ஆவணும்? மானம் போச்சே! நாலு பேர் கண் எச்சில் பட்டிடுச்சே!” 

“சரி, இப்போ என்ன பண்ணச் சொல்றே? நீயே வாங்கிண்ட வினைதானே!” 

இதைக் கேட்டதும் சற்று அடங்கினாள். “புடவைமேல் கல்லை வெச்சிட்டுத்தானே தண்ணியிலே இறங்கினேன். தண்ணிமேலே திடீர்னு ஆசை ஆயிடுச்சு”. 

“சரி விடு” சங்கடமாயிருந்தது. 

“புடவையில்லாமே எப்பிடி வீட்டுக்குப் போவேன்? என் நயினாவை உனக்குத் தெரியாது. சித்தாத்தாளைக்கூட ஒரு கணக்கிலே சேர்த்துக்கலாம். அவரை முடியாது. வீட்டை விட்டுத் துரத்திடுவாரு”. 

“இதோபார். இப்படியெல்லாம் பேசி ஒரு மண்ணும் ஆவப்போவதில்லை. நிலைமையை சமாளிச்சுத்தான் ஆவணும். நானும் கூடத் துணைக்கு வரேன்”. 

“வேறே வினையே வேண்டாம். இல்லாத ஜோடனை யெல்லாம் பண்ணிடுவான். ஐயோ. என்னை இனி யாரு கலியாணம் கட்டுவாங்க?” மறுபடியும் அழ ஆரம்பித்தாள். 

“நான் கட்டிக்கறேன்”. 

எப்படி இந்த வார்த்தை வெளி வந்தது? அவனுக்கே தெரியவில்லை. மீண்டும். 

“ஆமா, நான் கட்டிக்கறேன்”. 

ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனாள். வாய் லேசாய் மொட்டுப்போல் திறந்தது. குழந்தைபோல் இருந்தாள். பாவமாய், அகதியாய்… அவளை அப்படிப் பார்க்க அவனுக்கு என்னவோ பண்ணிற்று. 

“இதோபார் ஆமா” – உற்சாகமானான்… “நீ யாரோ நான் யாரோ. உன்னை முன்னே பின்னே பார்த்ததில்லை. உனக்கும் நான் அப்படித்தான். ஆனால் நான் உன்னைக் கட்டிக்கிறேன். நீ எனக்கு ஆக்கிப் போடுவியா, மாட்டியா?” 

பொம்மைமாதிரி தலையை ஆட்டினாள். அவளுடைய திகைப்பில் அவன் சொன்னது அவளுக்குச் சரியாகப் பதிவானதோ? 

“ஆக்கத் தெரியுமா?” சிரித்தான். “தெரியாட்டியும் அக்கறையில்லை. துணையிருப்பேல்ல? நீ எனக்கு, நான் உனக்கு. நமக்குக் கலியாணம் இப்பிடித்தான் கூடணும்னு இருந்திச்சின்னா யார் என்ன செய்ய முடியும்? வா எளுந்திரு”. 

வீடு திறந்தபடி கிடக்க, இறங்கி, தெருவென்ற பேரில் உருவாகிக்கொண்டிருக்கும் அகல நடைபாதையில் உச்சி வெயிலில் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நடந்து செல்கையில் ஆங்காங்கே வாசல்களில் தலைகள் எட்டிப்பார்த்தன ஊரில் இன்னேரத்துக்கு அப்பா மாத்யான்னிகம் பண்ணிக் கொண்டிருப்பார். ஆம், நான் எங்கே அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்? இவளும்தான். எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? ஆனால் நிச்சயம் இனி கேள்விக்குறி யில்லை. இனி அடி திரும்ப முடியாது. 

சூரிய பகவானே, குழந்தைகளுக்கு அருள்புரியுங்கள். 

– இந்தியா டுடே

– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *