ஈர்ப்பு
கதையாசிரியர்: காஞ்சனா ஜெயதிலகர்
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 3,286
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விழிப்பு தட்டி விழி திறக்க – வெள்னை வெல்வெட் திரைச்சீலைகளின் கொத்து ரோஜாக்கள் தெரிந்தன.
உம்ம்… தேனிலவைக் கழிக்கக் கொடைக்காலவ் வந்த இரண்டாம் நாள் இது.
கனத்த போர்வையின் கீழே சுலைந்திருந்த நைட்டியை ஒழுங்குபடுத்தி, அங்கிருந்து இறங்கிய பின்புதான் பார்த்தாள்.
இணைகட்டில் காலி!
நிம்மதியுடன் சோம்பல் முறித்தாள்.
ஒருவேளை குளியலறையில் இருப்பானோடு தயக்கத்துடன்கதவு தட்டிக் காத்திருந்து மெள்ள கைப்பிடியைத் திருகினாள்.
அங்கும் ஆளில்லாதிருக்க நிம்மதியானாள் ரம்யா.
பல் துலக்கி, குளித்ததும் நீல காட்டன் அங்கியைப் போர்த்தி வெளியில் வந்தாள். கவிழ்த்த தேநீர் கொட்டில் காத்திருந்தது. சூடான தேநீரைக் குடித்தபடி சின்னத்திரையை உயிரூட்டினாள். இனிய இரைச்சலும், நாகரிக பிம்பங்களும் அறையை நிறைத்தன.
பருகி முடித்து, தங்க கோடிட்ட மெல்லிய தேர்ச்கோப்பையை மேசையில் வைத்தவள், அறை முழுதும் சுற்றி வந்தாள்.
பிரபுத்துவமான வாழ்க்கைதான் – அவன் பிரபுவைக் கைப்பிடித்ததால் கிட்டிய வாழ்வு.
கண்ணாடியுள் அவன் பிம்பம் சிக்கியது.
சுழன்றாள் மெல்லிய இடையும், பொங்கிய இளமையும் நளினமாய் சுழன்ற காட்சியை ரசித்தாள்.
‘இந்த வாழ்வு கிடைத்தது – இத்தனை அழகால் அல்லவா? கர்வ நினைப்புடன் தலைமுடியைச் சிக்கெடுத்து, முத்துக்கள் பதித்த கொண்டைப் பின்னினால் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.
நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் அவளது அழகு போற்றப்பட்டது.
“இதென்ன பேருன்னு வச்சே தணிகாச்சலம்?”
“தங்க பொம்மை மாதிரி பெண் குழந்தை. பொருத்தமானபேரா வைக்கணும்ன்னு இவளைப் பார்த்ததும் பட்டிருருச்சும்மா,”
“ரம்யான்னா அழகா?”
“ஆமாங்கம்மா. நம்ப வீட்டில இப்படிதாழம்பு நிறம், செதுக்கி வைச்ச மூஞ்சி யாருக்கு?”
பாட்டிதான் முதன் முதலில் பேத்தியைக் கையிலேந்தியபோது தனக்கும் தன் மகனுக்குமாய் நடந்த பேச்சை அடிக்கடி இவளிடம் சொல்வதுண்டு.
சற்றே பழங்காலத்துப் பாணி குடும்பந்தான் என்றாலும், அவளுக்கு மாதந்தவறாமல் அப்பா ஏதாவது ஒரு அலங்காரப் பொருளோ, உடையோ வாங்கித் தருவார்.
“என்னப்பா…நான் கேட்டது தேன்கலர்சிபான். நீங்க சனமான துணியாவுல எடுத்துட்டீங்க.”
“போம்மா இதுக்கே உன் பெரியப்பு, சித்தப்புமாரு என்னைக் கும்முறாங்க ‘இதென்ன அநாவசிய செல்லம்’ன்னு… கம்முன்னு கட்டிக்கோ.”
எப்படி சேலை, நகை பிறரது தேர்வில் அவளுக்கு வந்ததோ அப்படியே தான் – மணாளனும்!
பையனைப் பார்த்த அன்று முழுக்க அழுதாள்.
“ந்தா… உன்அதிர்ஷ்டந்தான்… இத்தனைப் பெரிய இடம் தேடி வந்தது… கிடைக்குமா?” என அதட்டினார்கள்.
அவளா கேட்டாள்?
அவள் அழகில் கிறங்கி வந்த வரன்தானே? கர்வத்தில் மேலும் கண்ணீர் பெருகியது.
“வேணாம் பாட்டி… சுத்த சுருப்பாயிருக்காரு… கை காலெல்லாம் நீள நீளமாச் சிலந்தியாட்டம்…”
“வாய மூடு… பேச்சுன்னா பவிசா இருக்கணும்.”
ஆனால், இதையே அவள் தோழிகளிடம் சொன்னபோது சிரித்தார்கள்.
“த்சு… பாவம்பா ரம்யா. அழகே ஆபத்துதான்” என்று பேச. இவள் முகம் மேலும் ஒரு முழம் நீண்டது.
”உன் ஆசை போல கடைக்கு வந்து சேலை நகை எடுத்துக்கிறயாப்பு…?”
அப்பா தலை நீலி கேட்டபோது அவர் தோள்மீது சாய்ந்து விம்மினாள். “வரலை. மாப்பிள்ளையே என் விருப்பத்துக்கு இல்லைங்கறப்ப நகை, சேலையில் என்ன?”
“அவருக்கென்ன குறையின்னு புரியலை. நம்ப வீட்டு ஈரமண் நிறமில்லாத நீ கடல் மண்ணு கணக்கா இருந்ததில நாங்க கொஞ்சம் கொண்டாடினம். ஆனால், கருப்பு ஒரு குறையில்லைப்பு,”
“முன்னுக்குகூட வழுக்கை விழுறாப்பல இருக்கு. மீசையும் புருவமும் மட்டும் புகபுசுன்னு உசரம்.. உம்மணாம்மூஞ்சியா…”
“பெரியவங்க முன்னே தடாலடியாய்ப் பேசி, பிரிக்கலை. தம்பி… ஆனால், பெரிய படிப்பு… என்ன குரலு? பவுசான பேச்சைக் கேட்டுட்டுத்தான் சொல்றேன்… அவுக பணத்தை மட்டும் கண்டு நாங்க தலையாட்டிடலைப்பு… அத மனசில விவரமாக்கிக்கோ. குடும்பம், குணம், ரெண்டுமே பழுதில்லாத நேர்த்தி – அதுக்கு மகுடமா காசும் அமைஞ்சது உன் யோகம். இனி முணங்காத… கடவுளுக்குப் பொறுக்காது. தோணுதையெல்லாம் பட்டியலு போட்டு பெண்ணைப் பெத்தவங்ககிட்ட நீட்டி, நடுவில் இப்படி பிடுங்கி, ஆட்டங்காட்டறவங்க பெருந்தன்மையாள மனிதங்க தேடி வத்த பூரிப்புல நானிருக்கேன். உன் முன்பிறவி புண்ணிய பலந்தான் உன் அழகுன்னு நினைச்சேம்பு… இப்போ தெரியுது உன் புகுந்த வீடுதான் பெரிய பலன். சாமிக்கு கோடி நன்றி சொல்லி தாலி வாங்கிக்க…”
கண்டோர் கண்ணெல்லாம் விரிய விமரிசையாய் நடந்தது. திருமணம். புகுந்த வீட்டின் பரிவும், பிரியமான பேச்சும்கூட புரியாத அளவுக்குத் தன் கொம்புகளைக் கூர்தீட்டி வைத்திருந்தவளின் மனம் முரண்டியது.
‘என் அழகை விலைபேசி வாங்கியாச்சில்ல? இனியுமென்ன வேஷம்?’ என்று.
இரவு வந்ததும் கூடவே இவளுக்கு வந்தது தலைவலி! அவன் நெருங்கிய நேரம் கண்மூடி, நெற்றி நீவி, முகம் சுளித்தாள்.
முக்கிய ய உறவின் விருந்துகளில், கணக்காய் மில்லி மீட்டர் அளவே உதடுகளைப் புன்னகையால் மலர்த்தி, பாதி பதில்களைத் தலை அசைப்பிலேயே முடித்தாள்.
“என்ன ரம்யா… இப்படி பயப்படறே?” புன்னகையுடன் விசாரித்தான்.
தலை திருப்பிக் கொண்டாள்.
”உன்னைப் பற்றி விசாரித்தபோது ‘நல்ல பெண், நிறைய சிநேகிதிகள், கலகலப்பான சுபாவம்’ன்னு கேள்விப்பட்டோம்.”
‘ஓகோ! இதுவேறா?’ உள்ளுக்குள் பொறுமினாள். கண்ணுக்குக் குளிர்ச்சியென்று மட்டுமின்றி குணமும் சேர்ந்து அலசிதான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் – நெஞ்சு மேலும் பெருமையில் விம்மியது.
‘”அதிகமா பேச மாட்டியா?” – தோளில் முத்தமிட்டுக் கேட்டான்.
உடல் முழுக்க மின்சாரம் பாய, தடுமாறி எழுந்தாள்.
“இத்தனைப் பேரை ஒருங்கே பார்த்ததில் பயந்து போயிருக்கலாம் நீ. திருமணக் கூட்டம்ன்னா அப்படித்தான். நாம தனியா கொடைக்கானல் போயிட்டு வரலாமா? தேனிலவு! ஜனவரி மாதம் குளிர் கொஞ்சம் அதிகந்தான். ஆனால், தம்பதிகளாய்ப் போனால் தொல்லையில்லை. அம்மாகிட்ட காஷ்மீரச் சால்வை ரெண்டு மூணு வாங்கிக்கலாம். சரியா…?” உறவுக் கூட்டத்தில் விருந்து, விசாரிப்பு, சிரிப்பைத் தவிர்க்க இது நல்ல வழியாய்ப்பட்டது.
ஆனால், அதே நேரம் அவனுடன் முழுக்கச் சேர்ந்தே இருக்க வேண்டுமென்பது மறந்து போக –
“உம்ம்…” என்று சற்று பலக்கவே தலையாட்டினாள். அவனது முகம் தெளிந்து மலர்ந்தது.
ஆனால், இங்கு அவளது தலைவலியும், சூனியப் பார்வைகளும் ஓயவில்லை. இவற்றில் குழம்பிய பிரபு சற்று ஒதுங்கியே நின்றான்.
பகலிலே அவன் ஆர்வமாய் சீண்டாமல், இரவிலே ஆசையாய் கைநீட்டாமல் இரண்டு நாட்கள் கழிய, அவள் மனம் சற்று ஆசுவாசப்பட்டு, சுற்றிலும் இருந்த புதுமைகளைப் பார்த்தது.
இச்செல்வ வசதிகளை வாழ்நாள் எல்லாம் அனுபவிக்க முடியும் என்பதே நிறைவாய் இருந்தது. வயிற்றில் அதேநேரம் பசியும் கிள்ளியது.
இள மஞ்சள் ஷிபானை உடுத்திக் கொண்டு, மிதமான ஒப்பனையில் அறையைப் பூட்டிக் கொண்டு கீழிறங்கினாள்.
படிந்ததலைமுடி, சிலை போல நீல சூட் அணிந்திருந்த ஒருவன் படியேறி அவளைக் கடக்கையில் சற்றே தலை சாய்த்து
“மார்னிங் மாம்” என்றான்.
‘அடேயேப்பா! இத்தனைப் பார்வையாயிருப்பவன் இங்கே ஊழியனா என்ன?’ வியந்து போனாள்.
ராஜா போலிருக்கும் இவன் கேட்டால் ‘ஆகா’ என்று ஆனந்தமாய் பெரிய வீட்டார் தங்கள் பெண்ணைக் கொடுத்து விடுவார்களா?
சந்தேகந்தான் பணம் அவசியம்.
‘ஐ யம் எ ஸ்டூவர்ட்’ என்பதை மீறிய மதிப்பு முக்கியம்,
ஒருவேளை பிரபு திரும்பி வந்தால் அறை பூட்டிக் கிடக்குமே என்ற நினைப்புடன் வரவேற்புப் பகுதியில் சாவியை நீட்டியவள், கண் இமைக்க மறந்தாள் – நேற்று இங்கு நின்றவள் அழகிதான் என்றாலும், இன்று நிற்பவள் பேரழகி.
காலை நேர உற்சாகமும் பொலிவும் சேர். ‘காலை வணக்கம். தங்கள் அறையைச் சுத்தப்படுத்தி வைக்கவா?’ என்ற இதமான ஆங்கிலக் கேள்வியுடன் சாவியை வாங்கிக் கொண்டாள்.
மெழுகா,பளிங்கா என்று வர்ணிக்கத் திணறும் வகையான விரல்கள் தீண்டு ரோசா நகங்களுடன் ‘சில்’லென்று உரசின.
“ம்ம்” அசடாய் தலை உருட்டினாள் ரம்யா.
அவளருகில் தான் நின்றால், தன்னழகு வெறும் நீர்க்குமிழோ என்ற மருகல்!
பணம், அழகு… எல்லாம் மாயை என்று பட்டது. வாழ்வில் இவற்றை மீறி எதோ ஒன்றுதான் நிறைவு தரும் என்ற எண்ணம் உள்ளே தலைநீட்ட முயற்சித்தது.
***
உணவகத்தில் ஒரு பான்கேக்கும், ஆரஞ்சு பழச்சாறுமாய் ஆர்டர் பண்ணிவிட்டு ஓரமாய் அமர்ந்து கொண்டாள்.
பிரமாண்டமான அந்த அறையிலிருந்த ஒருவரேனும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவரவர் தன் தன் வேலையிலேயே கருத்தாய்…
தட்டு நிறைய டோஸ்ட், ஜாம், முட்டையென்று அடுத்த மேசையில் அமர்ந்திருந்த இளம் பெண்கள் ஒரு வார்த்தை பேசி மூன்றுமுறை சிரித்தனர்.
கல்லூரி நாட்களின் நினைவுவர ஏக்கமாய் அவர்களைப் பார்த்தாள், ரம்யா.
அவர்கள் பேச்சும் காதில் விழுந்தது.
“பில்லியர்ட்ஸ் விளையாடிய ஹீரோவைப் பார்த்தியா?”
“பின்னே? அதுக்குத்தானே ஆறு மணிக்கே காலையிலே கண் விழிச்சது!”
“என்ன ஸ்டைல்! குனிஞ்சு பந்தைக் குறி பார்த்தபடி எதேச்சையா நிமிர்ந்து என்ன ஒரு பார்வை… வாவ்… கவர்ச்சி பொங்கும் கண்கள்ப்பா.”
”கண் இமையெல்லாம் என்ன கருகருவென அடர்த்தியாய்… நாம் மஸ்காரா அப்பினால்கூட அத்துணைப் பிரமாதமாய் அமையாது.”
“ஆனாலும் என் ஓட்டு அவர் குரலுக்குத்தான். ஆண்மையும் நாகரிகமுமாய்… ச்சே தனியாத்தானே வர்றார்”
“ஒண்டிதான். ஆனாலும் நாம் போய்ப் பேசினாலும் ஒட்டுறதில்லை. அளவா ஒரு சிரிப்பு. அப்போ இவர் கன்னத்தில் கண்டுவிரல் பதிக்கிறாப்போல ஒரு குழி… வாவ்.”
“தலைமுடி இருபுறமும் உள்ளோடி… ‘விட்டேய்ப் பீக்’குன்னுவாங்களே? நம்ப ரஜினிக்குக்கூட. உனக்கு ரஜினி தெரியும்? தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்.”
கிசுகிசுப்பான ஆங்கிலத்தில் அந்த வடக்கத்தியக் குட்டிகளின் உரையாடல் நீண்டது.
“இப்பக்கூட பசியில்லை. அவரைப் பார்க்கத்தான் வந்தது.”
ஆர்வம் தாங்காது அவர்கள் விழிபதித்த இடம் நோக்கி இவள் பார்வை பறந்தது.
மறுகணம் மூச்சடைத்தது…. அங்கு இருந்தது பிரபு… அவள் கணவன் பிரபுவேதான்.
ஏனோ நெஞ்சுக்குள் அழுகையும் சிரிப்பும் மாறி மாறி முட்டி நினைவுகள் ‘பில்லியர்ட்ஸ்’ பந்துகளாய் மனமேடையில் அங்குமிங்குமாய் முண்டி விலகின.
அப்பெண்களின் கூற்றின்படி கவர்ச்சி, பணம், குடும்பச்சிறப்பு இவை அத்தனையையும் மீறி, அவளது கணவன் யார்?
பண்புள்ளவன் பொறுப்பும் பொறுமையுமானவன். ஒரே நாள் பழகியதில் அவளின் மொத்தக் குடும்பத்தையும் கவர்ந்த பேச்சு, ஆர்ப்பாட்டமில்லாத அன்பு. பிற பெண்களிடம் அத்துமீறி இழையாத ஒழுக்கம். மனைவியின் மனம் கனியக் காத்திருக்கும் கண்ணியம் – தன்னைப் பார்க்கும்போதெல்லாம் அக்கரிய விழிகளில் பெருகும் நேசம்…
ஈர்ப்பு தாங்காது எழுந்து கணவனை நோக்கி நடந்தாள் ரம்யா.
– ராணி, நவம்பர் 3, 1997.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.
