ஈடிலாத் தாயன்பு!
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 15
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இவளுக்கு என்மேல் அன்பு இல்லை என்பது இன்று தானே விளங்கியது. நான் அலுவலகத்தில் காலை 9 மணியி லிருந்து இரவு 7 மணி மட்டும் இடுப்பொடிய உட்கார்ந்து மூளை கொதிப்பேற வேலை செய்து மாதாமாதம் கொண்டு வந்து கொடுக்கும் என் ஐந்நூறு ரூபாச் சம்பளம் அவளுக்குப் பெரிதாகப் படவில்லை. தன் மகன் சம்பாதித்துக் கையில் கொடுத்த நூறு ரூபா மட்டும் ஏதோ பெரும் புதையல் என்று இறுமாந்து போவோர் வருவோர்க் கெல்லாம் புளுகிக் கொட்டிக் கொண்டிருக்கிறாள்!
மனம் புழுங்கிக் குமைந்து கொண்டிருந்த மார்க்கண்டு ஆத்திரந்தாங்காமல் எழுந்தார். மனைவி கற்பகத்தைத் தேடிச்சமையற் கட்டுப் பக்கமாக அவர் ஓடியதைத் தொடர்ந்து உள்ளிருந்து அவர் கூக்குரல் பலமாக ஓங்கி ஒலிக்கிறது. அடுத்து மனைவியின் விசும்பல் பெருமூச்சுக்கள். தமது ஆத்திரந்தீரக்கத்திய களைப்பில் தள்ளாடி வெளிவந்து பழைய இடத்தில் அமர்ந்த மார்க்கண்டுவின் மனம் அவர் செய்தது சரி தானா என்று தடுமாறிக் கலங்க ஆரம்பிக்கையில் “அப்பா! அப்பா!” என்று ஆர்வத்தோடு கூவிக்கொண்டு படலையைத் திறந்து கொண்டு ஓடிவந்து, “உங்களுக்குக் கோட்டும் சூட்டும் 250 ரூபாவுக்கு வாங்கினேன். எப்படி என்று பாருங்கள்!” என்று பெட்டியைத் திறந்து அவரிடம் நீட்டினான் அவர் மகன் செல்வன்.
மகிழ்ச்சியோடும் பெருமையோடும் வாங்கிக் கொண்டவர் “நல்லாயிருக்கடா செல்வா!” என்று வியந்து துள்ளி விட்டு அவற்றைக் கொண்டு மனைவியிடம் ஓடினார்.
மனைவியின் சீதனப் பணம் 10000 ரூபா வங்கியில் இருந்தது. வருடா வருடம் அப்பணத்திற்குக் கிடைக்கும் வட்டியில் 400 ரூபாவுக்கு அவள் அவருக்கு ஒரு சோடி கோட்டும் சூட்டும் எடுத்துக் கொடுத்து அணிவித்துப் பார்த்து மகிழ்வது வழக்கம்.
அந்தச் சோடியிலும் இந்தச் சோடியே உயர்வாக அவர் பாசமனத்துக்குப் படவே, மனைவி கற்பகத்தை அணுகியவர் ”கற்பகம்! இதோ செல்வன் எனக்கு வாங்கினான்! நீ எடுத்துத் தந்த சோடிகளை விட நல்லாயிருக்கிறது இல்லையா?” என்று அவர் குதித்தபோது அவள் “ஆமாங்க! ஆமாங்க” என்று அவரோடு சேர்ந்து இதய பூர்வமாக மகிழ்ந்த பெருந்தன்மைக்கு முன்னால் சற்று முன் மிருகமாக நடந்து கொண்ட மார்க்கண்டு நாணித் தலை குனிந்து எண்சாணுடம்பும் அரைச்சாணாகக் குறுகி நின்றார்.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
தானியங்கி பண இயந்திரம்
ரா.நீலமேகம்
October 18, 2026
ரத்தம் ஒரே நிறம்
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 18, 2026
அமைதியின் குரல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 18, 2026