இவளா அவன்..?





“ஹாய் சுதா …. இங்க வாயேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் . மதியம் லஞ்ச் டைமில் பேசலாம் . சீக்கிரம் டைனிங் ஹாலுக்கு வந்துவிடு.”
“என்னடி … அப்படி முக்கியமான விஷயம்.?”

“முக்கியமானது தான். மதியம் சொல்றேன் .”
“ஏன் இப்பவே சொன்னா என்னவாம்.? இன்னும் டைம் இருக்கே . ப்ளீஸ் சொல்லு சாந்தி .”
“உனக்கு எப்பவுமே ரொம்ப அவசரம் தான் சுதா. ஒன்பது மணிக்கு சீட்டில் இல்லாட்டினா அந்த மேனேஜர் கிழம்…தாம் தூம்..ன்னு காத்தும். அதனாலதான் மதியம் நிதானமா சொல்றேன் சொன்னேன். விஷயத்தை ஆரம்பித்து பாதியிலேயே விட்டேனா உனக்கும் வேலை ஓடாது. எனக்கும் வேலை ஓடாது . காலையிலாவது ஒழுங்கா வேலை செய்வோம் .போடி …போய் வேலையை பாரு .”
“ரொம்பவும் தான் பொறுமையா சோதிக்கிற நீ. . இன்னும் நாலு மணி நேரம் காத்திருக்கனுமா..? ” ம்..என்று சொல்லிவிட்டு தன் சீட்டிற்கு செல்கிறாள் சுதா .
சிறிய முள் மணி ஒன்றைத் தொட்டதோ இல்லையோ …சுதா டைனிங் டேபிளை தொட்டுவிட்டாள் .இருப்புக் கொள்ளவில்லை சுதாவிற்கு.
“சாந்தி என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லுடி. இன்னைக்கு வேலையே ஓடல .”
“எனக்குத் தெரியும். உனக்கு வேலையே ஓடாதுன்னு . ஒன்னும் இல்ல. நாம இத்தனை நாளா குமுதத்துல வந்த ” இவளும் பெண்தான் ” என்ற தொடரை விழுந்து விழுந்து படிச்சோமே . அதை எழுதினது கவிவாணன் என்ற ஆண் இல்லை. ஒரு பெண். அதுவும் நம் ஆஃபீஸில் புதுசா சேர்ந்திருக்கிறாளே கவிதா. அவ தான் கவிவாணன் என்ற புனைப்பெயரில் எழுதிட்டு வந்திருக்கா.”
“உனக்கு எப்படி தெரியும் ..? அது அவ எழுதினது..என்று.”
“எப்படியோ தெரியவந்தது. இப்ப இந்த ஆராய்ச்சி தான் உனக்கு தேவையா..? நான் எப்படி இவ அந்தத் தொடரை எழுதினாள்.? இவ்வளவு எதார்த்தமா எப்படி எழுத முடிந்தது இந்த சின்ன வயசுல …? என ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா …!”
“எனக்கும் \ரொம்பவே ஆச்சரியமா இருக்கு சாந்தி . வயசு 25 தான் ஆகுது. என்னவோ பெரிய அனுபவம் வாய்ந்த எழுத்தாளர் எழுதினது மாதிரி இல்ல அந்த தொடர் இருந்தது..!. இவ நம்ம ஆஃபீஸ்க்கு வந்து நாலு மாதம் ஆச்சு . அன்னிக்கு அந்த தொடரை பற்றி அவகிட்ட அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோமே. நான்தான் அதை எழுதுகிறேன் என மூச்சு கூட விடவில்லையே . பலே ஆளுதான் அவ. இத்தனை நாளா எப்படி ஒரு ஆண் இவ்வளவு எதார்த்தமா ஒரு பெண்ணோட உணர்வுகளை , அதுவும் ஒரு ரெட்லைட் ஏரியாவில் மாட்டிக்கொண்ட பெண்ணோட உணர்வுகளை இந்த அளவிற்கு ஆழமா சித்தரிக்க முடிந்ததுன்னு எனக்கு கேள்விக்குறியாய் இருந்தது. “
“சாந்தி …. ஒரு வேளை இவளும் ரெட் லைட் ஏரியாவில் மாட்டி தப்பிச்சு வந்தவளா இருப்பாளோ ..! அதனாலதான் இவ்வளவு தத்ரூபமாக சித்தரிக்க முடிஞ்சுதோ..! இவளோட ஊர் சென்னையின்னு தான் சொன்னா.? யார் கண்டா …அங்க எப்படி இருந்தாளோ..!”
சீச்சி… அவளைப் பார்த்தா அப்படி தெரியலடி. கௌரவமான குடும்பத்து பெண் மாதிரி இருக்கா .நீ வேற எதையாவது உளராதே..
யார் கண்டா..? அவ்வளவும் நடிப்பா இருக்கும்.
கவிதா… தன் மதிய உணவை முடித்துக் கொண்டு , சிறிது நேரம் சாந்தி, சுதாவை பார்த்து இன்றைய செய்திகள் பற்றி , ஏதாவது கொஞ்சம் அலசி விட்டு வருவோம் என்ற நினைப்பில்.. அவர்களை பார்க்கச் சென்றாள். அப்போது தன் பெயர் அடிபடுவதை அறிந்து சற்று நின்று கவனித்தாள். தன்னைப் பற்றி தான் பேசுகிறார்கள் என புரிந்து கொண்டு… உற்றுக் கேட்டாள்.
கவிதாவிடம் சும்மா… அவ கதை எழுதியது நமக்கு தெரியாதது மாதிரி.. எதையாவது பேசி , அப்புறம் எப்படி எழுதினாய் என கேட்டு பார்ப்போமா ..?அப்போவாவது சொல்கிறாளா எனப் பார்ப்போம்.
கவிதாவிற்கு … அந்த கவிவாணன் நாம்தான் என… இவர்கள் தெரிந்து கொண்டதில் ரொம்பவும் சந்தோஷம் .மனதிற்குள் பெருமைப்பட்டுக் கொண்டாள். ஆனால் அடுத்த வினாடி அவள் இதயம் சுக்கு நூறானது.
“என்னத்த சொல்லுவா அவ…. நான் ரெட் லைட் ஏரியாவுல இருந்தவள். என்னோட அனுபவத்தை தான் அப்படியே எழுதினேனா சொல்லுவா.? நாம தான் புரிஞ்சுக்கணும். “
கவிதாவிற்கு சம்மட்டியால் நெஞ்சில் ஓங்கி அடித்தது போன்ற உணர்வு . ஓ…வென்று அழவேண்டும் போல் இருந்தது. தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டு, தலை வலிப்பது போல் பாவனை செய்து கொண்டு …முடிந்த மட்டும் மனதிற்குள்ளாக அழுது தீர்த்தாள் . அப்போது அந்த நிகழ்ச்சி அவள் மனத்திரையும் நிழலாடியது.
“ஏண்டி …கவிதா குமுதத்துல “இவளும் பெண் தான்” என்ற ஒரு தொடர் கதை வருதே. படிச்சிட்டு வரியா.? வாரவாரம் அந்தக் கதையை படிக்கும்போது, நான் அழாமல் இருந்தது இல்லடி. என்னமா ..எழுதுகிறார் அந்த கவிவாணன்!! எப்படி ஒரு பெண்ணோடு மனநிலையை அவ்வளவு தத்துரூபமா உணர்ந்து அவரால் எழுத முடியுதோ ..தெரியல. இவரு ரொம்ப பேமஸ் ஆக போறார் பாரு . சிலருக்கு …பிறக்கும் போதே இந்த ஆற்றல் வந்திடும் போல . ரொம்ப சீக்கிரம் இவருக்கு தேசிய அவார்டு கிடைக்கும் பாரு. “
அன்று … அப்படி புகழ்ந்தவன் இன்று அது… நான் எனத் தெரிந்ததும், பெண் என்றதும் , எப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.. அட கடவுளே ..!! . சற்று யோசித்தாள் கவிதா.
இவ பேச்சை கேட்டுவிட்டு …நான் ஏன் வருத்தப்படணும்..? .வாய் இருக்கு.!. வந்ததை பேசறா.! . அறிவு இருந்தா… கொஞ்சம் ஆழமாக சிந்தித்து பேசி இருப்பாள் .அவளுக்கு பொழுது போகணும் அவ்வளவுதான்.
பொதுவா மத்தவங்க மனதை காயப்படுத்தி… தன் மனதிற்கு குளுமை தேடி கொள்கின்ற போலித்தனம் இப்போ மனித இயல்பா போச்சு. என்ன செய்ய ..? . இந்த நிலைமை எப்ப மாறப் போறதோ தெரியல . ஆனா அந்த மாற்றம் வரும் வரை நாமதான் எதையும் தாங்கிக் கொள்ள நம்மை தயார் படுத்திக்கனும். எவ்வளவு ஈசியா சொல்லிட்டா … ம். வரட்டும் நல்ல பதிலடி கொடுப்போம்…!
“என்ன கவிதா… சாப்டியா …? “என்ற குரல் கேட்டு சிந்தனையில் இருந்தும் மீண்டாள் கவிதா.
“ம். இப்பதான்.”
“எங்களோட வந்து சாப்பிடக்கூடாதா..?”
“உங்களோட வந்து சாப்பிடக்கூடாதுன்னு ஒன்னும் இல்ல . லஞ்ச் டைம் அரை மணி நேரம் தான். இதுல மூணு பேரும் சேர்ந்தோம்னா சீக்கிரம் சாப்பிட மாட்டோம் .எதையாவது பேசி பாதி நேரம் போயிரும். நானா சீக்கிரம் சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாமே என்று தான். எதுக்கு தேவையில்லாத எதையாவது பேசி நேரத்தை வேஸ்ட் பண்றோம்ன்னு எனக்கு தோணும். முக்கியமானது ஏதாவது இருந்தா… நானே வருவேனே.”
அது சரி. நீ பெரிய ஆளு.! கதை எல்லாம் எழுதுறவ. எங்களோட பேசுனா அது வேஸ்ட்டா தான் தோணும். இருந்தாலும் இவ்வளவு நாளாகியும் , நான் தான் அந்த கவிவாணன்னு ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேன்டியே.!
ஓ… அதைச் சொல்றியா. நீங்களே தெரிஞ்சுக்கிறது தான் எனக்கு சந்தோஷம். நீ அன்றைக்கு அந்த கவிவாணனை பற்றி அப்படி புகழ்ந்த போது , நான் தான் அந்த கவிவாணன்னு நானே சொல்லி இருந்தா … தற்பெருமையா தோன்றும். நம்பவும் மாட்டீங்க. சீக்கிரமே நேரம் வரும்போது தெரிஞ்சுக்கட்டும் என்று தான்.
சரி கவிதா… நீதான் அதை எழுதினது என்று தெரிஞ்சுட்டது. எப்படி உன்னால் அவ்வளவு ஒரு ரியலா … உணர்ச்சிபூர்வமா அந்த தொடரை எழுத முடிந்தது.? எனக்கு நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு கவிதா.
“இதில் ஆச்சரியப்படுறதுக்கு என்ன இருக்கு சுதா. நான் தான் ரெட்லைட் ஏரியாவுல கொஞ்ச நாள் இருந்துட்டு …இப்பதானே தப்பிச்சி இங்க வந்தேன்.அதனால தான் அப்படி எழுத முடிஞ்சது.”
சுதா, சாந்தி இருவரின் முகத்திலும் ஒரு திகைப்பு. சரியாய் மாட்டிக் கொண்டு விட்டோமே என்று அவமானம் . பதில் சொல்லத் திராணி இல்லாத ஓர் தவிப்பு.
“நான் கொஞ்சம் முன்னாடி உங்களை பார்க்க வந்தேன். நீங்கள் இருவரும் பேசியது என் காதில் விழுந்தது .திரும்பிட்டேன் . சுதா… இப்ப உன்னிடம் ஒரு கேள்வி கேட்கணும்னு எனக்கு தோனுது. அன்னிக்கி நீ வாரவாரம் …அந்த தொடரை படித்துவிட்டு நான் அழாமல் இருந்தது இல்லடி .எவ்வளவு இயற்கையா இருக்குன்னு சொன்னியே..? கதைகளில் வருகிற காட்சிகளை சம்பவங்களை படிச்சிட்டு …..உனக்கு ஏன் அழுகை வருது..? அது இயற்கையாய் இருப்பதாய் எப்படி சொல்ல முடிகிறது உன்னால் .? . ஒருவேளை உனக்கும் அந்த மாதிரி அனுபவம் இருக்குமோ..? .அதை இந்த கதை திரும்ப நினைவுபடுத்துவதைப் போல இருந்ததா..? இல்லாட்டி உனக்கேன் அழுக்கு வருது..? ம்..சொல்லு சுதா.”
சுதா இப்போது உள்ளம் என்ற நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்..!
என்ன சுதா…அப்படியே நின்னுட்டே. நீ அந்த கதையைப் படித்த போது உனக்கே தெரியாம …உன்னோட உள் மனது அந்த பெண்ணோட நிலையில் நீ இருப்பது போல கற்பனை செய்யும். அந்த கற்பனையின் பிரதிபலிப்புதான் அந்த அழுகை. இல்லையா..,? அது மாதிரி தான் என்னோட மனசும் கற்பனை செய்தது.
சாரி சுதா. நான் மனப்பூர்வமா அப்படி கேட்கல. உனக்கு ஏதாவது பதிலடி கொடுக்கணும் , நீ புரிஞ்சுக்கணும்னு தான் அப்படி கேட்டேன் . ஆனா ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு சுதா. அன்னிக்கு கவிவாணனை ஜீனியஸ் என புகழ்ந்தாய். அவருடைய கதை எழுதும் திறனுக்கு தேசிய அவார்டு கிடைக்கும் என்றெல்லாம் புகழ்ந்தாய். இன்னிக்கு அது கவிதான்னு தெரிஞ்சதும் அதுவும் நான் என்று தெரிஞ்சதும்… காலில் போட்டு மிதிச்சிட்டியே. ஏம்மா இப்படி…?
“சாரிடி …என்னை மன்னிச்சிடு.”
“நான் மன்னிப்பது இருக்கட்டும் சுதா. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.”
“என்ன காரணம் சொல்றதுன்னு எனக்கே தெரியல. ஆனா யாரோ ஒருத்தர் என்று அந்த முகம் நமக்கு தெரியாதபோது… பிரபல பத்திரிக்கையில் தொடராக வரும் அளவிற்கு பெரிய எழுத்தாளர் அவர் என்ற ஒரு நினைப்பு இருக்கும்போது அந்த எழுத்தாளரைப் பற்றி நினைக்கல . அவரோட கதையை மட்டும் ஆழமாய் பார்த்தேன். பாராட்டினேன் .”
“ஆனா அதை எழுதினது என்னோட வேலை பார்க்கும் நீ தான் என்று தெரிய வந்தபோது நம்ப முடியல . இவ்வளவு நாள் உன்னை சாதாரண ஆளா நினைச்சுட்டு இருந்துட்டு, இப்ப பெரிய கதாசிரியை என்ற நிலையை ஏத்துக்க முடியல .பெண்களுக்கு உலக நடப்புகளில் அதிகமாக பரிச்சயம் இல்லாத நிலைமை இருப்பதாலும், ஒரு கற்பனை உணர்வில் மட்டும் எழுதினாய் என நம்ப முடியல. அந்த நம்பிக்கை இல்லாத எண்ணம் தான்… என்னை அப்படி பேச வைத்ததோ என்னவோ…!
இங்க பாரு சுதா ..ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ. ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு விஷயத்துல ஆர்வம் இருக்கும். சிலர் அந்த ஆர்வத்தை வளர்த்துக்கிறாங்க. தன்னோட அனுபவத்தின் பாதிப்பில் தான் கதை எழுதுகிறார்கள் என்ற கருத்து தவறு. எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஒரு எழுத்தாளர் எங்கிருந்தோ தன் மனதில் பதியும் சில விஷயங்களை ,வெளி நடப்புகளால் இவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை, அவர்கள் மனதிற்கு நியாயமாக தோன்றும் கற்பனை கருத்துக்களை , அந்த கற்பனையில் கதாநாயகர்களாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு , ஒரு சுதந்திரமான மனநிலையில் வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அவ்வளவுதான். உங்களுக்கு சரி எனப் பட்டால் பாராட்டுகிறீர்கள். இல்லையேல் ஆட்சேபனை செய்கிறீர்கள். அது உங்கள் உரிமை. !!
ஆனால் நான் உறுதியா சொல்லுவேன். ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமான கற்பனை திறன் உண்டு. ஆனால் அதை வெளிப்படுத்துகிற தைரியம் தான் பல பெண்களுக்கு இல்லை. காரணம் கற்பனை செய்வதற்கு கூட அவர்களுக்கு சுதந்திரம் இல்லை. ஆண்களின் கற்பனையை ஆராதிக்கின்ற இந்த சமுதாயம் பெண்களின் கற்பனைக்கு கேள்வி கேட்கிறது. நீ கேட்டியே அது மாதிரி. பெண்களின் கற்பனைக்கு கூடவா… கட்டுப்பாடு வேண்டும்..? .என்ன சுதா.. ஏதாவது சொல்லு..?
கவிதா ப்ளீஸ் என்னை மன்னிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லிடு. அப்போது தான் எனக்கு நிம்மதி.
நான் அப்படி சொன்னா … உனக்கு நிம்மதி .எனக்கு இன்னொரு கதைக்கான கரு கிடைத்துவிட்டது என்று நிம்மதி. இருவர் முகத்திலும் புன்னகை.
– பிப்ரவரி 1995 அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.