இழப்பு





(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தாங்கமுடியாத அவமான உணர்ச்சியும், நாணமும் மேலிடக் குந்திதேவி தன் கண்களை மூடிக்கொண்டாள். ஆனால், பார்க்க விரும்பாத உருவத்தின் கேட்டேயாக வேண்டிய சுலகலச் சிரிப்பானது, அவளின் இதய அந்த ரங்கமெங்கும் வியாபித்து அவளைச் சித்திரவதை செய் தது. மார்கழி மாதத்தின் சீதளக் காலைப் போதிலே கங்கா நதியின் பனிப்புனலில் மூழ்கியது போன்ற ஒரு விறைப்புணர்ச்சி, அவளின் உடலெங்கும் பரந்தது.
புனித கங்கை…… யுகாயுகாந்தரங்களாகப் பரத கண்டத்து மக்களின் பாவக்கறைகளைக் கழுவி, அவர் களையெல்லாம் புனித ஆன்மாக்களாய் மாற்றிவரும் அன் புத் தாய்… ஆனால், அந்தக் காருண்ய மாதா குந்தி யைப் பொறுத்தவரை மிகமிகக் கொடியவளாகவே தோற்றினாள். பல ஆண்டுகளுக்கு முன் குழந்தைத் தனத் திலே அறியாது செய்த ஒரு பாவத்தைச் சுமந்து சென்று அதற்கு வாழ்வளித்து, இன்று குந்தியின் இழி வுக்கு ஓர் எடுத்துக் காட்டாக நிறுத்தி வைக்கக் காரணி யார்? யார்?
கேள்விகளின் பாரத்தையும், அவற்றின் பின்னணி அர்த்தத்தையும் தாங்கிக்கொள்ள இயலாது, குந்தியின் இதயம் துவண்டது. வெறுக்கவும், மறக்கவும் நினைத்தவையெல்லாம் விசுவரூபம் எடுத்து அவளை முற்றுகையிட்டன. மூடியிருந்த கண்களினுள்ளே அவை படலம், படலமாய் விரிந்து கொண்டிருந்தன.
தாயை இழந்த அநாதைச் சிறுமியாக அவள் தனது தந்தை சூரனின் அரண்மனையிலே, தனிமைக்கும் கொடுமைக்கும் இலக்காகி வளர்ந்த கதை… அதன் பிறகு தாய் மாமன் குந்தி போஜனின் அரவணைப்பிலே வாழ்ந்த கதை…
இரண்டாவது கதையின் முடிவிலே மூன்றாவது கதை தொடங்குகிறது. குந்திதேவியின் வாழ்க்கையிலே இன்ப மாக ஆரம்பித்து, மாளாத் துன்பத்திலே ஆழ்த்திவிட்ட கதை அதுதான்.
கங்காநதி தீரத்திலே ‘நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும், குளிர் பூந்தென்றலும், கொழும்பொழிற் சுமையும்’ நிறைந்திருந்த இன்பச் சூழலிலே அவள் ஒரு பட்டுப் பூச்சியாய்ச் சிறை விரித்துப் பறந்து திரிந்த நாள்கள்… அவை எத்துணை இனிமையானவை!
பகிய இலைகளால் வேய்ந்து தூய்மைக்கும். தெய் வீகத்திற்கும் நிதர்சன சாட்சியாய் நின்ற ஒரு சிறிய குடிசையிலே துர்வாச முனிவருக்குப் பணிவிடை செய் வதில், அவளது காலம் கழிந்துகொண்டிருந்தது.
‘துர்வாசர் மகா கோபக்காரராம்; சற்றே தவறி னாலும் சபித்துவிடுவாராம்; அவரைத் திருப்தி செய்ய யாராலும் முடியாதாம்.’
இப்படி எத்தனையோ சொன்னார்கள் !
குந்தியும் பயந்துகொண்டுதான் அவருக்குப் பின்னால் வந்தாள்; அவரது சிவந்த விழிகளைக் கண்டு மிரண்ட படி, அவரது தீச்சுடர் மேனியின் தேஜசிற் கூசியபடி தான் வந்தாள்.
ஆனால், அவர் எவ்வளவு நல்லவர்! குந்திதேவியா அவருக்குப் பணிவிடை செய்தாள்? அவரல்லவா அவ ளுக்குத் தாயாகவும், தந்தையாகவும் இருந்து பேணி வளர்த்தார்?
பிறந்த இடத்திலே கிடைக்காத பாசம், தாய் மாமனின் மனையிலே பெறாத அன்பு, குந்திக்கு அந்த ஏகாந்த ஆசிரமத்திலே கிடைத்தது.
மனித சமூகத்தின் முன்னால் மகா கோபியாய்க் காட்சி தந்த அந்த மாமுனிவர் தனிமையிலே, பொ று மையின் சிகரமாகவே தோற்றினார்; குழந்தைமையின் பேதைமையால், குந்தி இழைக்கின்ற தவறுகளையெல் லாம் ஒரு புன்னகையாலே சந்து செய்து, அவள்மீது தம் பாசத்தையெல்லாம் சொரிந்தபடி இருந்தார்.
(2)
கண்ணீர்ப் புனலால் முனிவரின் கால்களைக் கழுவிய படி தரையிலே கிடந்த குந்தியைத் தூக்கி நிறுத்தினார். துர்வாசர். அவரின் விழிகளிலும் கண்ணீர், மணிமணி யாய் உருண்டு ‘விழுவதா, வேண்டாமா’ என்று தயங் கிக்கொண்டிருந்தது. அவர் அதனைத் தடுத்து நிறுத்த எண்ணிப் புன்னகை பூண முயன்றார்.
கூடவில்லை; கூடவேயில்லை !
“குழந்தாய்! இளமையிலேயே உலக பாசபந்தங் களைத் துறந்து முனிவனானவன் நான். யாரிலும், எதி லும் பற்றற்றிருந்த என்னை, பாசவலைபோட்டு நீ இழுத்துவிட்டாய். இனி, இமயத்தின் பனிச் சிகரங்களி லும், புனித கங்கையின் அன்புக் கரங்களிலும், ஆசிர மங்களின் ஓமப் புகையிலும் உனது பால் வடியும் முகமே எனக்கு அடிக்கடி தோற்றிக்கொண்டிருக்கும். நான் நேற்றுச் சொல்லித் தந்த மந்திரங்களை உச்சரிக்கும் போதெல்லாம் உனக்கும் என் நினைவு தோற்றவே செய் யும். இந்தப் பாசப் பிணைப்பை எதனாலும் அறுத்து விட முடியாது.”
“இன்னும் சிறிதுபோதில் உன் மாமனின் ஏவலர், உன்னை அழைத்துச் செல்ல இங்கு வருவர்; அதுவரை இங்கேயே இரு. நான் வருகிறேன்.”
முனிவர் தமது கால்களைப் பெயர்த்து வைத்தபடி, தளர்நடை நடந்து இளமரக்காவினூடே சென்று மறை யும்வரை, அவரையே நோக்கி நின்றாள் குந்தி.
(3)
குந்தியின் முன்னால் ஓர் ஒளிச்சுடர் வடிவம் தோன்றி அவளின் கண்களைக் கூசவைத்தது. அந்த வடிவிற்குரி யோனின் விழிகளிலே தாம் எத்தகைய பயங்கரக் கவர்ச்சி !
பார்க்க வேண்டும் போலவும் இருந்தது; பாராதிருக் கவும் மனம் விரும்பியது !
ஆனால், முந்திய வேட்கை பிந்திய எண்ணத்தை விழுங்கிவிட. அந்த மகாபுருஷனின் அழகார்ந்த கோலத் தைக் கண்களால் மாந்தி, இதயத்தாற் சீரணித்தாள் குந்தி,
சூர்யாய நமோ, நமஹ !
சூர்யாய நமோ நமஹ !
மகாபுருஷன் புன்முறுவல் பூண்டான். “நீ அழைத்த குரல் கேட்டுத்தானே ஓடோடி வந்தேன்?
பின்னும் பின்னும் ஏன் அழைக்கிறாய் ?” என்று கூறியபடி அவன் குந்தியின் அருகே சென்றான்.
குந்தியின் உடல் அதிர்ந்தது; மேனியெங்கும் வியர்வை வெள்ளமிட்டது; கண்கள் பஞ்சடைந்தன. பசுங்கொடி ஒன்று துவள்வது போலத் துவண்டு சூரிய தேவனின் காலடியிலே அவள் விழுந்தாள். தேவன் அவளைத் தூக்கி நிறுத்தி, அன்போடு அவளின் வியர் வையைத் துடைத்தான்.
“செஞ்சுடர்த் தேவே! உலகின் தந்தை நீ. உன்னை என் குழந்தைத் தனத்தால் அழைத்துவிட்டேன். என்னை மன்னித்தருள். என் விழிகளையும், ஆன்மாவையும் குரு டாக்காது மறைந்துவிடு; போ; என்னை விட்டுப் போய் விடு.” குரல் நடுங்க, உரை தடுமாற இவ்வாறு கதறினாள் அவள்.
சூரியதேவனின் முகத்திலே தவழ்ந்து விளையாடிய புன்னகை நழுவி விழ, அவன் சிந்தாகூலனாய் நின்று கூறுவான்: “சித்தத்தை ஏகாக்கிரமாக்கி, உடலைச் சிறிது சிறிதாக வருத்தி, ஆன்மச் சுடர்விளக்கினை ஏற்றி அதன் ஒளியிலே உண்மை கண்டவர்கள் முனிபுங்கவர் கள். அவர்களின் மந்திரங்கள் எம்மை அடிமைகளாக்கி விடுகின்றன. அவர்கள் எதனை நோக்கி மந்திரத்தை ஆக்கினரோ, அதனைச் செய்து முடிக்கும்வரை எம்மால் அமைதியாக வாழ இயலாது. ஆகையால், என்னை மன் னித்துக்கொள். எனது கடமையை நான் நிறைவு செய்ய அருள்வாய்’. கைகளை மன்றாடுங் கோலத்திலே நீட்டி, குரலிலே இரக்கக் குழைவையும் சேர்த்துக் கூனிக் குறுகி நின்ற கதிரவனைக் காண வியப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. குந்தி கேட்டாள். “தேவே! முனிவரின் மந்திரம் தங்களுக்கு இட்டுள்ள கட்டளை யாதோ?”
தினகரன் சற்றே மௌனமானான் “துர்வாசர் முக்காலமும் உணர்ந்த ஞானி. என்ன காரணத்தாலோ தெரியவில்லை. உனக்கு உபதேசித்த மந்திரங்கள் புத்திர வரத்தைக் கோருவனவாய் இருக்கின்றன… எனவே… நான்.”
குந்தி சிறுமியானாலும் பேதை அல்லள். சூரிய தேவன் கூறியதன் பொருள் அவளுக்குப் புலப்பட்டது.
கண்கள் இருண்டு வந்தன.
எரிமலைகள் இதயத்திலே வெடித்துப் பற்றி எரிந்தன.
சிந்தையிலே இடி இடித்து, புயல் அடித்து, மின்னல் மின்னி… தடுக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரு சுழியினுள்ளே அகப்பட்டு முக்குளிக்கின்ற நிலையில், குந்தி பேச்சற்று, செயலிழந்து மரமானாள்…
செங்கதிர்ச் செல்வன் அவளின் கரத்தை மெல்லப் பற்றி அருகில் இழுத்தான்.
(4)
குழந்தை வீரிட்டழுதது. இன்பம், வேதனை, இழக்க முடியாத இழக்கக்கூடாத ஒன்றை இழந்துவிட்ட தாபம் என்ற பலவகைப்பட்ட உணர்ச்சிகளிலே தவித்துத் தத்தளித்த குந்தி மெல்லக் கண் விழித்தாள்.
அழப் பிறந்தது அழுதது. அடங்கி ஒடுங்கவேண் டிய தாய், அதனைப் பார்த்துக் குருதிக்கண்ணீர் வடித்தாள்.
ஒரு கணம்…..
எல்லாங் கடந்த தாய்மையின் தீவிர பாசவேகத்தில் அதனை அணைத்துக் கொண்டபோது, அவளுக்கு வாழ்க்கையின் அர்த்தம் சிறிதே புரிவதுபோல இருந்தது.
ஆனால்…… அடுத்தகணம்…… துர்வாசர் கூறிய கதைகள், கற்புச் செல்விகளின் வரலாறுகள் யாவு மாய்ச் சேர்ந்து அவளது தலையைப் பலமாகக் குனிய வைத்தன; பிடரியிலே ஊர்ந்து இதயத்தை அடைந்து சித்திரவதை செய்தன. குந்தி வெறுப்போடு குழந் தையை நிலத்திலே விட்டவள், அதைத் தன் பயங்கர விரோதிபோலத் தீ கனலும் கண்களாற் பார்த்தாள்.
குழந்தை அவளின் பேதைமையைக் கண்டு சிரிக்க வில்லை. அது அழுதது. தனக்காக, தன் தாய்க்காக, இந்த உலகிற்காக அது கதறி அழுதது! குந்தியின் நெஞ்சு பாசத்தாற் கனிந்து வெகுளியை விரட்ட…….
அவள் அதனை அணைத்து, தனது நெஞ்சிற் பெரு கிய அமுதத்தை அதற்குக் கொடுத்தாள்.
குழந்தை, குண்டலம் முளைத்த காதில் ஒரு கையும், கவசம் பூண்ட நெஞ்சில் ஒரு கையுமாக வைத்துக் கொண்டு பாலையும் வேண்டாது அழுதது; எதிர்காலத் தில் கேட்கக்கூடாதவற்றைக் கேட்கவும், அவற்றைத் தாங்கிக்கொண்டு வாழவும் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தது.
அந்த வேளையிலே தூரத்திற் குதிரைகளின் குழம்புச் சப்தம் கேட்டது. குந்தி ஜாக்கிரதையானாள்; தனது ஆடை அணிகள் வைத்திருந்த பேழையை வெறு மையாக்கி, அதனுள்ளே குழந்தையைப் பத்திரமாகக் கிடத்தினாள்.
சிறிது போதில் குந்தியின் சேலை ஒன்றை அர வணைத்தபடி கங்காநதியிலே, பேழையுள் கிடந்து தனது ஜீவிய யாத்திரையை அது தொடங்கியது.
(5)
அத்தினாபுரியில், விதுரனின் அரண்மனையிலே பல வருடங்களுக்குப் பிறகு, கண்ணனின் வாயிலிருந்து அந்தப் பயங்கர உண்மை வெளிப்பட்டபோது குந்தி நாணிக் குறுகி இல்லையே ஆகிவிட்டவள் போலானாள். அந்தவேளையிலேதான் கண்ணனின் கலகலச் சிரிப்பின் பின்னணியில், பழைய வாழ்வுப் படலங்கள் அவளது மூடிய கண்களில் விரிந்தன.
அவள் கண்களை விழித்தபோதும், கண்ணன் தன் மாயச் சிரிப்பால் அவளைக் கொன்று கொண்டுதான் இருந்தான்.
எத்தகைய அவமானம்! தன் பிள்ளைக்குச் சமமான ஒருவன் தனது கடந்தகாலக் கறைபடிந்த வர லாற்றை விரித்தபோது… குந்திக்குப் பூமியே தன்னைப் பிளந்து ஏற்றுக்கொள்ளாதா, என்ற எண்ணம் அதி தீவிரமாய் ஏற்பட்டு வளர்ந்தது.
அவள் தலையை நிமிர்த்தவேயில்லை. அவளுடைய உடம்பனைத்துமே பற்றி எரிந்தது. இரத்த நாளங்களே வெடித்துப் பிளந்து விடுவது போன்ற ஒரு வேதனை அவளை ஆட்கொண்டது.
‘கங்கா நதியைத் தவிர வீசுகின்ற காற்றிற்குக் கூடத் தெரியாது’ என்று கட்டிக் காத்து வந்த இரக சியம் ஒன்று, எதிர்பாராத சூழ்நிலையில், எதிர்பாராத இடத்திலிருந்து அம்பலமாகிவிட்டது.
அதனை அவளால் தாங்கவேகூடவில்லை. “கண்ணா! இந்தப் பயங்கரத்தை இனி உன் வாயாற் சொல்லாதே. என் பிள்ளைகளின் முன்பு என்னைத் தலைகுனியச் செய்து விடாதே. நான் ஓர் உத்தமி’ என்று பெருமையோடு தலைநிமிரும் அவர்களை, அவமானக் குழியினுள்ளே ஆழப் புதைத்துவிடாதே, அப்பா! “
ஞானவடிவினனாம் மாயக்கண்ணன் சற்றும் சலன மடையாத முகத்தோடு, முறுவல் விளையாடும் தனது திருவாய்க்கமலத்தைத் திறந்து சொன்னான். அத்தை! பாண்டுவின் அநுமதியோடு நீ எமதருமனையும், வாயு வையும், இந்திரனையும் கூடினாயே ? உன் மருமகள் பாஞ்சாலி உன் மக்கள் ஐவரையும் மணந்தாளே ? திருதராட்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் பிறப்பு இரகசியம் உனக்குத் தெரியாததா? இவை யெல்லாம் அறத்தோடியைந்த செயல்களென்றால், நீ கன்னனைப் பெற்றது மட்டும் மறச்செயலா? அவ மானத்திற்குரியதா? அத்தை! நீ என்ன சொல்கிறாய்? எனக்கு விளங்கவில்லை.”
குந்தியின் உதடுகளிலே சோகச்சிரிப்பொன்றைக் கண்ணனின் வார்த்தைகள் விதைத்தன. “கோபாலா! உலகதர்மத்தில் ஒரு பெண்ணின் பெருமையை நிர் ணயிக்கும் கருவி அவளது திருமணந்தான். ஓமத் தீயிலே புனிதமான நெய்யைச் சொரிவது போலத் தன் கணவனது பாத கமலங்களிலே கன்னிமை நிறைந்த தன் உடலையும், உள்ளத்தையும் அர்ப்பணிப்பதைவிட அவளுக்கு நிறைவு தரவல்லது வேறு ஒன்றுமே இல்லை. ஆனால்… நான்…. இந்தப் பதிதை… என் கணவனுக்கு அளித்தவை கறைபடிந்த உடலும், கற்பழிந்த உள்ள முந்தானே, கண்ணா!”
விம்மலிலே பொருமிக் கண்ணீரிலே திணறிக் கொண்டு குந்தி, உதிர்த்த வார்த்தைகள் கல்லையும் ளகச் செய்திருக்கும். ஆனால், அவை அந்தக் கள்வனை இளக்கவில்லை. அவன் மீண்டும். மீண்டும் சிரித்து, அந்தச் சிரிப்பால் குந்தியைக் கொன்றபடி சொன்னான். ‘அத்தை! உலகத்தில் மிக்குயர்ந்த பாசத்தளை தாய்மை அல்லவா ? நீ ஒரு தாய்; பாண்டவர்களின் தாய். அவர்கள் களரவரை வென்று மன்னராய் வாழ வேண்டும் என்பது உன் விருப்பமானால், நீ கன்னனிடம் செல்ல வேண்டும். அவனுக்கு நீ யார் என்று உரைத் தல் வேண்டும்.
“கண்ணா!” குந்தி கதறினாள். “என் மகனுக்கு முன்னால் நானே சென்று, என் பாவக்கதையைச் சொல்ல வேண்டும், என்கிறாயா? நான் உன்னைக் கன்னிப்பருவத்தில் பெற்றெடுத்தேன்” என்று அவனிடம் சொல்வதா? ஐயோ! இதைவிட என்னைத் தண்டிப்பதற்கு வேறு வழியொன்றும் நீ காணவில் லையா?’ உயிரும் உடலும் உருகிக் கண்ணீராய்ப் பெரு கிட, காற்றிலே ஆடுகின்ற சருகுபோல நடுங்கியபடி கேட்டாள் அவள்.
“அத்தை ! உன் தியாகத்திலேதான் உன் மக் களின் எதிர்காலம் மலரவேண்டும் என்றிருந்தால், நீ அதனைச் செய்துதானே ஆகவேண்டும்? வேறுவழி ஒன் றும் எனக்குத் தெரியவில்லை.’ எல்லாந் தெரிந்தவன் ஒன்றுமறியாதவன் போலச் சிந்தனையை முகத்திலே தேக்கி உரைத்த வார்த்தைகள் இவை !
பயங்கரமான மௌனம் அங்குச் சிறிதே ஆட்சி செலுத்தியது. குந்தி அந்தரத்திலே சுழன்று கொண் டிருந்தாள். அங்குமிங்குமாய்ச் சிந்தனை காட்டி நடந்த கண்ணபிரான் சிறிதே நின்றான். ”நீ கன்னனிடம் சென்று இருவரங்கள் கேட்கவேண்டும். ஒன்றினால் நாகாஸ்திரத்தை அவன் அருச்சுனன் மீது ஒரு தட வைக்கு மேற் செலுத்தக்கூடாது என்று கேள். மறு வரத்தினால் அருச்சுனன் தவிர்ந்த மற்றவரோடு உன் மூத்த மகனைச் சண்டை செய்தல் வேண்டா என்று வேண்டு. கன்னன் கொடைவள்ளல். நீ கேட்பதெல் லாம் தருவான்.”
குந்தி நடுங்குகின்ற தன் கரங்களைப் பிச்சை கேட் கும் கோலத்திலே நீட்டிக் கண்ணனிடம் மன்றாடினாள். ”வேறு வழியே இல்லையா?’
”அத்தை ! நீ ஒன்றை மனத்திற் கொள்ளல் வேண் டும். நீயும், நானும், உன் மக்களும், என் மூதாதை யரும் தோன்றி, வாழ்ந்த, வாழ்கின்ற மண் இது. இந்த மகா புனித பூமியிலே தர்மத்தை மீண்டும் நிலை நாட்டத் தோன்றியவர் உன் மக்கள். அவர்களைக் காப் பாற்றுவது இந்த நாட்டின் உன்னத தர்மங்களைக் காப் பாற்றுவதாகும். இன்று இந்த இரட்சிப்பு உனது கை களிலேதான் இருக்கின்றது. நீ தாய் மாத்திரமல்ல. யுகதர்மத்தைக் காக்க வந்த பெண் தெய்வமுமாவாய் போ, உன் கடமையைச் செய்.”
“கண்ணா! நான் தெய்வமா? இந்தப் பாவி, பதிதை தெய்வமா?” என்று கதறிக்கொண்டு குந்தி தரையிலே விழுந்தாள்.
அவளின் கதறலைக் கேட்கக் கண்ணன் அங்கு இல்லை. அவனது பாதச் சுவட்டொலி மெல்ல மெல்ல அடங்கி, அவிந்தது.
மானம்…மக்களின் உயிர்… தேசத்தின் தர்மம்… இவற்றில் எதைக் காப்பது?
(6)
கன்னனை நேருக்கு நேர் கண்ட அந்தக் கணத்தில், குந்திதேவி தன் துன்ப துயரங்களையெல்லாம் மறந்து பரவசமாகி நின்றாள்…
தருமனின் ஞானச் சுடரும், வீமனின் வலிமைச் சிறப்பும், அருச்சுனனின் வீரத் திறனும், நகுல சகா தேவரின் கம்பீரம் கலந்த அமைதியும் ஒன்று திரண்டு சுன்னனாய் நிற்பது போன்ற பிரமை, குந்திக்கு ஏற்பட் டது உண்மையே.
‘கன்னனைப் போன்ற புதல்வனைப் பெறுவதற்காக எந்த இழிநரகச் சேற்றிலும் இறங்கி உழலாம்’ என்று கூட அவளுக்கு அந்த வேளையில் தோற்றியது ! கன்னன் வாய் திறந்து பேசுகையில், கங்காநதி தீரத்தில் அன்று ஒளி வடிவாய் நின்ற மகாபுருஷனின் குரலே கேட்பதுபோல இருந்தது. அந்தப் பயங்கர மாதுரிய வசனங்களின் சுவையை மீண்டும் ஒரு தடவை குந்தி அநுபவித்தாள். அந்த மகானுபாவனுடைய ஆன்ம சக்தி பின்னிப் பிணைந்த சுந்தரத் திருக்கோலத்தைப் பாதாதிகேசம் கண்டு, கனிந்து கரைந்தாள்.
“ஆஹா! எத்தகைய பெரியதொரு செல்வத்தை இத்தனை ஆண்டுகளாய் இழந்திருந்தேன்” என்று அவள் தன் அந்தரங்கத்திலே குரலெடுத்துப் புலம்பி, அழுது கதறினாள்,
“இவன் எனக்கு மகனாகப் பிறக்கும் தகையன் அல் லன். இவன் தெய்வத்திற்குச் சமமானவன். இவ னுக்கு எதையும் மறைக்க வேண்டுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் படைத்தவனான என் மகன் எனது பாவச் செயலை மன்னிப்பது உறுதி’ என்று முழு மனத்தோடு நம்பி, குந்தி கடந்த காலக் கதையை அவ னுக்கு விவரித்தாள்.
குந்தியின் நம்பிக்கை வீண்போகவில்லை: அவளது வார்த்தைப் புயல்கள் கன்னபர்வதத்திலே முட்டி மோதி அடிக்கையில், அது விழி நீரையும் மென்று விழுங்கிய படி கம்பீரமாய் நிமிர்ந்து நின்றது. ‘இதுவன்றோ வீரம்?”
குந்தி கன்னனைத் தழுவிக்கொண்டாள். என்ன இது ?…… முதுமையால் திரைந்து தொங்கிவிட்ட தாய் மைச் சுரப்பிகளில் கசிவு ஏற்படுகின்றதா? ‘ஆ! தாய் மையே ! உனக்கு முதுமையும் அழிவும் என்றுமே இல்லை. நீ சிரஞ்சீவி !’
நன்றிக் கடனுக்காகவும், நட்பின் பிணைவிற்காகவும் எதையுமே தியாகம் செய்யமுடியும் என்பதைக் காட்டி நின்ற கன்னன், குந்தியின் இதயம் முழுவதையுமே ஆக்கிரமித்துக் கொண்டான். இப்பொழுது அங்கு அருச் சுனன் இல்லை ; வீமன் இல்லை; நகுல சகாதேவர் இல்லை. ஏன்! தருமனுக்குக்கூட இடப்பிரச்சினை ஏற்படும் போன்றிருந்தது!
(7)
“அம்மா! நீங்கள் எனக்கு இரண்டு வரங்கள் தரல் வேண்டும். நான் இறக்கும்வரை எனது பிறப்பின் இரகசியத்தை யாருக்கும் வெளியிடாதீர்கள். நான் போர்க்களத்திலே பார்த்திபன் கணையால் பட்டு ழ்ந்து கிடக்கும் வேளையிலே, என்னை உங்கள் மடிமீதிருத்தி, நான்உங்கள் மகனென்று உலகுக்கெல்லாம் எடுத்துரையுங்கள்.”
“எத்தகைய பயங்கர விபரீத ஆசை! போர்க்களத் தின் மத்தியிலே நின்று ஊரும் உலகமும் அறிய, நானே கன்னனின் கன்னித்தாய்’ என்று எடுத்துரைத்தல் வேண்டும்”.
“நடக்கக்கூடிய காரியமா?”
கன்னனின் வேண்டுகோள் குந்தியை மீண்டும் சேற் றுச் சகதியுள்ளே அழுத்திப் புதைத்தது…..
அவளின் உள்ளம் மேற்கூறிய வரங்களால் ஒவ்வொரு கணமும் சல்லடைக் கண்களாய்த் துளைக்கப்பட்ட வண்ணமேயிருந்தது.
“என் மகனுக்குச் சமமான கண்ணன் என் கறை வரலாற்றை எடுத்தியம்பினான். அந்த வேளையிலே எனது கால் உயிர் போயிற்று. என் மகன் முன்னால், அவனது பெருந்தன்மை ஒன்றையே நம்பி என்னால் அவனுக்கு ஏற்பட்ட கறையை எடுத்தியம்பினேன். அதுகாலை எனது அரை உயிரும் போயிற்று. கன்னனின் வரங்கள் என் முழு உயிருக்குமல்லவா லைவைப்பனவாய் உள் ளன? என்ன செய்வேன்?”
“இந்தச் சிக்கலிலிருத்து நீங்க ஒரே வழி…? ஆ! அதுதான் வழி ! ‘இந்தப் பாரத யுத்தமே வேண்டாம்’ என்று கூறி என் புதல்வரை மீண்டும் காட்டுக்கு அனுப் பினால்…? தருமன் என் கட்டளையை மீறான். தம்பி மாரையும் அழைத்துக்கொண்டு வனவாசம் செய்யக் கிளம்பிவிடுவான்… அதனால் என் வரலாறு மீண்டும் இரகசியக் குகையுள் சேமமாகப் புதைக்கப்பட்டுவிடும்…”
“ஆ…… எத்தகைய கொடியவள், சுயநலக்காரி நான்!”
“என் செல்வங்கள் மீண்டும் வனமாள்வதா?”
‘அவர்களைப் பிரிந்து விதுரனின் மனையிலே நான் மீண்டும் அடங்கி ஒடுங்கிக் கிடப்பதா ?’
‘……. வேண்டாம்… நான் கன்னனின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்…’
‘எனது அவமானக் கதையை நானே அவனிக்கெல் லாம் எடுத்துரைக்கிறேன்…’
‘என் வாழ்வு சிறிது… ஆனால், தருமத்தின் வாழ்வு பெரிது…… என் மக்களின் வாழ்வு மிகமிக உயர்ந்தது…’
‘அதற்காக நான் இந்தத் தியாகத்தைச் செய்து தான் ஆக வேண்டும்…’
‘கண்ணா! என் புலை எண்ணங்களுக்காக என்னை மன்னித்துவிடு…’
இவ்வாறு பலவேறு போராட்டங்களிலே ஆழ்ந்து போய்க் குந்தியின் உள்ளமே குருக்ஷேத்திரமாய் நின் றது.
குந்தி ‘எதிர்பார்க்க லேண்டாம்’ என்றே எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது.
கண்ணனின் மாயங்களாலும், காண்டீபனின் பாணங் களாலும் வடுப்பெற்றுக் குருக்ஷேத்திரப் போர்க்களத் திலே, பொய் கெட்டு மெய்யானான் கன்னன்.
அவனைக் குந்திதேவி மடிமீதிருத்தி “மகனே! மகனே!” என்று அழுதரற்றினாள்.
அந்த அரற்றலைத் தொடர்ந்து அவளின் கண்கள் இருண்டன. ஆழ்கடலின் சுழிகளினுள்ளே புதைந்து, புதைந்து மூச்சுத் திணற அமுங்கிப்போவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அவள் மூர்ச்சையாகி உலகை இழந்து கிடந்தாள். மீதிக் கதையைக் கண்ணபிரான் பாண்டவர்க்கும், மற்றையோர்க்கும் எடுத்துரைத்தான்.
– யாழ். இலக்கிய வட்டக் ‘கதை அரங்கில்’ 1966-7-14 இல் வாசிக்கப்பட்டது. ‘விவேகி’யில் செப். 66 இல் வெளியானது.
– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.