இலக்கியம் இயம்பும் கதைகள்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 6, 2025
பார்வையிட்டோர்: 300
முன்னுரையாக ஒரு குறிப்புரை
இலக்கியக் கடலில் அடியேன் கண்டு எடுத்த சில முத்துகளை முத்துமணி மாலையாக ‘ இலக்கியம் இயம்பும் கதைகள் ‘ என்ற சிறு நூலாகப் படைத்துள்ளேன். இளைய தலைமுறையினர் பயன் பெறுவர் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன்.
நன்றி,
எஸ்.மதுரகவி
1. காதல் குழம்பு
பணக்கார வீட்டுப் பெண். சமையலறை பக்கம் போகாமல் வளர்ந்தவள்.
இருப்பினும் கட்டிய காதல் தலைவனுக்காகத் தன் கையால் தானே உணவு சமைக்க முற்படுகிறாள்.
அவள் தயிர்க் குழம்பு தயாரிக்கிறாள். கட்டித் தயிரைக் கையாளத் தெரியாதவள். கட்டித் தயிரை எடுக்கிறாள். கையைக் கழுவிக் கொள்ளாமல் கட்டிக் கொண்டிருக்கும் நல்ல சேலையிலேயே துடைத்துக் கொள்கிறாள். தாளிக்கும் போது ஏற்படுகிற புகையால் அவளுடைய கண்களில் எரிச்சல். இப்படி எல்லாம் கன்னி முயற்சியாக அவள் செய்து பார்த்த குழம்பை தன்னுடைய கணவனுக்குப் பரிமாறுகிறாள். அந்தக் கணவனும் ஆகா ஓகோ என்று சப்புக் கொட்டிப் பாராட்டி சாப்பிடுகிறான். அவள் முகத்தில் மகிழ்ச்சி.
இந்தக் காட்சியைப் பார்த்த அந்த இளம் பெண்ணுடைய செவிலித் தாய், பெற்ற தாயிடம் விவரித்து கூறி மகிழ்ந்தாள் –
“முனிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாது உடீகிக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப்பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல்முகனே “
– குறுந்தொகை – 167
2. கற்கண்டாகிப் போன வேப்பங்காய்
தன்னுடைய தோழியின் கணவனை ஓர் இளம்பெண் சந்திக்கிறாள். அவர்களுடைய இல்லறம் நல்லறமாகவும் இருவர் இடையே அன்புக்குப் பஞ்சமில்லாமல் இருப்பதையும் மனதுக்குள் பொத்தி வைக்காமல் தோழியின் கணவனிடம் கூறுகிறாள்.
பாரி மன்னரின் பறம்புமலையில் உள்ள சுனை நீர் இனிப்பானது. அந்த இனிமை உங்கள் பண்பிலும் கலந்து விட்டது போலும். என் தோழி வேப்பங்காயைக் கொடுத்தாலும் உமக்கு கற்கண்டு போல் இருக்கிறதே . உங்கள் வீடு அன்பால் பின்னப்பட்ட கூடு என்பதை உமது குணம் பறைசாற்றுகிறது.
“வேம்பின் பைங்காயென் தோழிதரினே
தேம்பூகட்டி யென்றனீர் இனியே
பாரி பறப்பிசுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய ஒவர்க்கு மென்றனீர்
ஐய அற்றால் அன்பின் பாலே “
– குறுந்தொகை – 196
3. தாய் உள்ளம்
பெண் மகளைப் பெற்ற தாய் , மகளுக்கு காலாகாலத்தில் திருமணம் கைகூட வேண்டும் என்றே எப்போதும் எண்ணுவாள். சற்றே தாமதம் ஏற்பட்டாலும் இறைவனிடம் இறைஞ்சுவதும் தெரிந்த நபர்களிடம் உரிய துணை காட்டும்படியும் கேட்டுக் கொள்வாள் அந்த அன்னை. திருமணம் கைகூடி , அந்தப் பெண் பிள்ளை , தன் இணையுடன் வரும்போது ஆனந்தக் கண்ணீர் வடிப்பாள் . அவள் கணவன் வீட்டுக்கு வாழச் செல்லும் தருணத்தில் , தன்னைப் பிரிந்து செல்லும் புதல்வியை எண்ணி மனதுக்குள் வருந்துவாள். அடக்க முடியாமல் அழுதும் விடுவாள்.
அப்படித்தான் இங்கே ஒரு தாய் , மகளுக்குத் திருமணம் முடிந்து அவள் புகுந்த வீட்டுக்குச் சென்ற அடுத்த நாள் காலைப் பொழுதில் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். அவள் வயது ஒத்த அக்கம் பக்கத்துப் பெண்மணிகள் அவள் அருகில் வருகிறார்கள் .
“இதென்ன கூத்து நல்லது நடந்துள்ளது அழுகை ஏனோ ?“ என்று வினவுகிறார்கள் .
அந்த வினாவுக்கு அந்த தாய் பதில் கூறுகிறாள் –
“நான் நிறைய குழந்தைகளைப் பெறவில்லை. ஒரே குழவியைத் தான் பெற்றேன். அவளைச் சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தேன். அந்த புதல்வி என்னைப் பிரிந்து சென்று விட்டாள். அவள் ஓடியாடி விளையாடிய இந்த திண்ணையைப் பார்த்தால் மகளின் பிரிவு என்னை வாட்டுகிறதே எப்படி தாங்குவேன் நான் இந்த வேதனையை ? “
நற்றிணையில் இடம் பெற்றுள்ள இப்பழம்பாடல் தாயின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அனைத்து காலத்து அன்னையருக்கும் இந்தப் பாடல் பொருந்துகிறது அல்லவா ?
“ஒரு மகள் உடையேன் என்னே
செருமிகு மொய்ம்பிற கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள்
இனியே , தாங்குநின் அவலம் என்றீர் அதுமற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே
உள்ளின் உள்ளம் வேமே உன்கண்
மணிவாழ் பாவை நடைகற்றன்ன என்
அணியியல் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே “
– நற்றிணை
4. மனைவியின் கண்ணீரைத் துடை
தமிழ்நாடு போற்றும் கடையேழு வள்ளல்களில் ஒருவன் – பேகன்.
குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை தந்தவன் இந்த மன்னன் . இவன் தன்னுடைய வாழ்வில் சில மாதங்கள் , மனைவி கண்ணகியை மறந்து வேறு மகளிருடன் வாழ்ந்து வந்தான். ( நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் நாயகியின் பெயர் கண்ணகி . பேகனின் மனைவி அரசியின் பெயரும் கண்ணகி. )
புலவர் பரணர் மன்னன் பேகனைப் பார்க்கச் சென்றார். புலவரை வரவேற்ற
அரசன் , அக்கால மரபுக்கு ஒப்ப , புலவருக்குப் பரிசில் அளிக்க முன் வந்தான். பரணர் பரசிலைப் பெற மறுத்தார் . புலவர் பேசினார்
“ மன்னா வள்ளலே உன்னையே எண்ணி கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்கும் உன் மனையாளின் கண்ணீரைத் துடை . அவளுடைய துயரத்தைப் போக்கி அவளுடன் சேர்ந்து நீ வாழ வேண்டும் . அதுதான் நான் கோரும் பரிசில் “
புலவர் பரணரின் பக்குவமான சொற்கள் , அரசனின் உள்ளத்தை தைத்தன. மனம் மாறினான். அரசியுடன் இணைந்தான்.
5. தலையைக் கொடுக்க முன் வந்த தலைவன்
தலையையா கொடுக்க முடியும் என்பது அன்றாட பேச்சு வழக்கில் ஒலிக்கும் சொற்கள். சங்க காலத்தில் முதிரமலைத் தலைவன் குமணன் என்னும் மன்னன் , நல்லாட்சி புரிந்து வந்தான். அந்த அரசனுக்கும் கஷ்ட காலம் வந்தது . குமணனின் இளவல் இளங்குமணன் , சூழ்ச்சி செய்து உடன் பிறந்த அண்ணனிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொண்டான். அதன் பின்னும் தந்தையைப் போன்ற தமையன் மீது பகை உணர்ச்சி தீராமல் குமணனின் தலையைக் கொண்டு வருபவருக்கு ஆயிரம் பொன் பரிசு என்று அறிவிப்பு செய்தான்.
அந்தக் காலங்களில் , நிலை தாழ்வுற்று இருக்கும் ராஜாக்களையும் புலவர்கள் , அவர்கள் இருக்கும் இடம் அறிந்து சந்தித்து உரையாடி வருவார்கள் . பெருந்தலைச் சாத்தனார் என்னும் சங்கத் தமிழ்க் கவி , அடர்ந்த வனப்பகுதியில் மானிடர் இல்லாத இயற்கை சூழலில் அடைக்கலம் ஆகி இருந்த குமணனனைச் சந்தித்துப் பேசினார். தேடி வந்த புலவருக்கு பொருள் எதுவும் தர இயலாத நிலையில் இருந்த ராஜா , புலவரிடம் ” புலவர் பெருமானே என் தலையைக் கொண்டு வருவோருக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக என்னுடைய இளவல் அறிவிப்பு வெளியிட்டுள்ளான் என்ற செய்தி என்னுடைய செவிகளை எட்டியது. தாங்கள் என் தலையை வெட்டி எடுத்துச் செல்ல வேண்டுகிறேன். “ என்று கூறி புலவரிடம் தன்னுடைய வாளைத் தந்தான்.
ஆம். புலவருக்கு பரிசில் வேறு எதுவும் அளிக்க இயலவில்லை என்பதால் தன்னுடைய தலையையே கொடுக்க முன் வந்தான் குமணன் என்னும் தலைவன்.
அரசன் தான் கூறி விட்டானே என்று அவனுடைய தலையை வெட்டி எடுத்துச் செல்லவில்லை புலவர். காட்டில் இருந்த அரசனிடம் விடை பெற்றுக் கொண்டு நாட்டில் உள்ள , வஞ்சக வழியில் அரசனான அவனுடைய இளவலைச் சந்தித்தார். அவனிடம் புலவர் கூறினார்
“வாடிய காலத்திலும் துன்புற்ற வேளையிலும் வாரி வழங்கும் வள்ளல் தன்மை மாறாமல் இருக்கும் உன் தமையனின் குணத்தைப் பார். தயாள குணத்தைப் பார் . பண்பு நலனைப் பார். அவனோடு பகை கொள்வது சரிதானா ” என்றெல்லாம் அவனிடம் பக்குவமாகப் பேசி அவனுடைய மனத்தைத் திருத்தினார். நல்வழிப்படுத்தினார். இளவல் இளங்குமணன் மனம் மாறினான். அண்ணனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். மன்னிப்பு கோரி நின்றான். புலவர் , இந்த வரலாற்றைப் பாடலாகப் பதிவு செய்துள்ளார்.
6. தனிமையிலே இனிமை காண முடியுமா?
தலைவனைப் பிரிந்த தலைவி ஒருத்தி , தன் தோழியிடம் கூறுகிறாள்
“அவர் அருகில் இருக்கும் போது , திருவிழாக் கோலம் பூண்ட ஊர் போல் கலகலப்பாக , குதூகலமாக மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறேன். அவர் பிரிந்து சென்றாலோ மக்கள் நடமாட்டம் இல்லாத முன்றிலில் தனித்து விளையாடும் அணில் பொலிவிழ்ந்து நிற்கிறேன் அடியாள் “
பிரிவின் வலியை சில வரிகளில் விவரித்து விடும் இந்தக் குறுந்தொகைப்
பாடல் இதோ
‘காதலர் உழையராகப் பெரிதுவந்து
சாறுகொளூரிற் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்’ (குறுந்தொகை – 41)
உழையர் என்ற சொல் – நெருக்கமானவர், என் தலைவன் என்ற பொருளைக் குறிக்கும்.
முன்றில் என்பது வீட்டுக்கு முன்பாக இருக்கும் பகுதி அதாவது – முன் இல் .
மக்கள் நடமாட்டம் இல்லாத வீட்டு முன்புறத்தில் ( வாசலுக்கு முன் உள்ள பகுதி ) அதாவது முன்றிலில் தன்னந்தனியாக இருக்கும் நிலையில் நானும் இருக்கிறேன் என்பது தலைவியின் விசனம் .
அணிலாடும் முன்றில் என்ற காட்சியைப் பாட்டில் சொன்ன சங்கத் தமிழ்க் கவிக்கு ‘ அணிலாடு முன்றிலார் ‘ என்றே பெயர் என்பது குறிப்பிடத்தக்கது . பாட்டில் உள்ள வரியை வைத்து அந்தப் பெயரை அவருக்குப் பின் வந்தவர்கள் அவருக்கு சூட்டி உள்ளனர். அந்தப் பெயரே இலக்கிய நயத்துடன் விளங்குகிறது அல்லவா ?
7. தலைவனுடன் வருவேன் என்று அடம் பிடித்த தலைவி
இராமாயணம் என்னும் இதிகாசத்தில் தந்தையார் சொல் கேட்டு , அண்ணல் இராமபிரான் , காடேக முற்பட்ட வேளையில் , அன்னை சீதையும் அவருடன் வனவாசத்திற்கு வருவதாகக் கூறி அண்ணலுடன் வனத்திற்குச் சென்றார்.
அது போலவே சங்கத் தமிழ்க் கவிதை ஐங்குறுநூறு 303 ஆம் பாடலில் தலைவி , பாலைவனத்தின் வழியாகச் சென்றாலும் கூட என்னையும் அழைத்துச் செல் என்று கூறுகிறாள்.
சுட்டெரிக்கும் வெயில் காலம் . பாலைவனத்தில் நீரற்ற நிலையிலும் புத்தம் புது மட்பாண்டம் போன்ற நிறம் உள்ள கனிகளைக் கொண்டு நிற்கிறது ஓர் ஆலமரம். அவ்வழியாகச் செல்லும் பறவைகளை அந்தக் கனிகள் தன்பால் ஈர்க்கும். நாடி வந்து உண்ணச் செய்யும். அப்படிப்பட்ட பாலை நிலம் வழியாக செல்வதனாலும் அடியாளையும் அழைத்துச் செல்வீர் என்று வேண்டுகோள் விடுக்கிறாள் இந்தப் பாடலில் வரும் தலைவி .
பாடல்
புது கலத்து அன்ன கனிய ஆலம்
போகில் தனை தடுக்கும் வேனில் அரும் சுரம்
தண்ணிய இனிய ஆக
எம்மொடும் சென்மோ விடலை நீயே
8. வருவேன் என்று சொல்லிப் போனவரைக் காணோமே
பனிக் காலத்தில் தலைவியின் கண்களில் கண்ணீர் துளிர்த்து நிற்பதைப் பார்த்த அவளுடைய தோழி , கண்ணிலே நீர் எதற்கு தலைவியே என்று வினவுகிறாள்.
தலைவி பதில் இறுக்கிறாள் -” என் உயிர்த் தோழியே – பிரிந்து செல்லும் போது என் தலைவன் காதல் பொங்க பனிக் காலத்தில் உன் அருகே இருப்பேன் என்று சொல்லிச் சென்றான். இதோ பனிக் காலம் வந்து விட்டது . அவனைத் தான் காணோம். காதல் மாறி விட்டதோ ? என் மீது அவனுக்கு காதல் போய் விட்டதோ”
கொழுங்கொடி யவரை பூக்கும்
அரும்பனி அச்சிரம் வாராதோரே …
குறுந்தொகை – 82 ( அச்சிரம் – பனிக் காலம் )