இறுதி இண்டிஃபெடா

சார்ஜெண்ட் எஸ்ரா பெரேஸுக்கு தொண்டை வறண்டு தாகம் எடுத்தது. அவனுடைய தண்னீர்க் குடுவை அவனுடைய உற்சாகத்தைப் போலவே காலியாகியிருந்தது. அவ்வப்பொழுது எழும்பும் காற்று வாறியிரைக்கும் மண்ணும் புழுதியும் இடைவிடாத யுத்தம் போலவே அவனுடய சீருடையெங்கும்; அதைத் தட்டி விட்டுக் கொண்டேயிருப்பது அவனுக்கு அனிச்சைச் செயலாகியிருந்தது. சற்றுத் தள்ளி பெரிய புற்களின் சிறிய நிழலில் ஒதுங்கி புகையில் லயித்திருந்த அவனுடய உதவியாளன் டிக்கியிடம் சைகையில் நீர் கேட்க அவன் அருகில் வந்து நீர்க் குடுவையை கொடுத்துவிட்டு பெரேஸின் அருகிலேயே அமர்ந்தான். பெரேஸ் கேட்கும் முன்னரே தன் சிகரெட் பாக்கெட்டை அவனிடம் நீட்டினான். ஒரு இஸ்ரேலிய சிப்பாயின் தன் அதிகாரியின் தேவையறியும் இலக்கணம் இப்படித்தான். இப்படி இஸ்ரேலிய சேனைகளின் வெற்றியின் இரகசியத்தில் சக வீரனின் தேவைப் பகிர்தலும் ஒன்று. தோளில் தொங்கிய தன் டேவர் இயந்திரத் துப்பாக்கியை மண்ணிலே தளரவிட்டு சிகரெட்டைப் பற்றவைத்து கால்களை நீட்டி சோம்பல் முறித்தான். சீரற்ற இடைவெளியில் காற்று எழுப்பும் சிறிய அசைவின் ஓசையும் அவர்கள் ரேடியோவின் ‘உஷ்’ இரைச்சலும் தவிர அந்த வனாந்தர வெளியில் இருத்தலின் இலட்சணமாய் வேறு எதுவும் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக பெரேஸும் அவனுடைய சிறிய முன் அணியும் இங்கேதான் காத்துக் கிடக்கிறார்கள்; காத்துக் கிடக்கிறார்களா? இல்லை காவல் காத்து நிற்கிறார்களா? பல சமயங்களில் பெரேஸுக்கு இரண்டும் ஒன்றாகத்தான் தெரிந்தது. அந்த சிறிய ஸ்கவுட் அணியின் தலைவன் என்ற முறையில் அதை அப்படியே தன் சகாக்களுடன் பகிர்ந்து கொள்ள அவனுடைய தோள்பட்டை அதிகார அலங்காரமும் ராணுவ விரைப்புகளும் தடை செய்தன. ராணுவம் என்றாலே அனுமதிக்கப்பட்ட ஓய்வு நேரம் தவிர எப்பொழுதும் விழிப்பு, விழிப்பு, தயார்நிலை என்கிற தாரக மந்திரம்தான்; அப்படி இல்லையென்றால் அது ராணுவம் அல்ல. சாகஸ விளையாட்டு மன்றமாகி விடும். இவ்வளவும் மீறி மெரைன்கள் அவ்வப்பொழுது தாழ்ந்த குரலில் ஒரு இளநகையுடனோ பெருமூச்சுடனோ தங்களுக்குள் அபிப்ராயங்களைப் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். பெரேஸ் இதை அதிகம் சட்டை செய்வதில்லை. நடவடிக்கை என்று வருகிறபோது முடுக்கிவிடப்பட்ட இயந்திரமாய் அவனுடைய மெரைன்கள் முழுமூச்சுடன் பொருதுவதில் ஆர்வமும் அர்ப்பணிப்புடனும் கூடிய தேர்ச்சியில் இயங்குவதால் பெரேஸ் அதைக் கண்டு கொள்வதில்லை. இந்த விஷயத்தில் பெரேஸ் இன்னமும் கூட கண்டிப்புடன் இருக்க வேண்டுமென்று அவனுடய லெஃப்டினென்ட் அவனிடம் வலியுறுத்துகிறபோது ஒரு மெல்லிய புன்னகையுடன் கடந்து விடுவான்.
யுத்தம் துவங்கி வருடம் ஒன்று கடந்துவிட்டது. பெரேஸுனுடைய விடுப்பு முறைக்கு இன்னும் இரண்டே மாதங்கள் இருந்தபோது யுத்தம் மூண்டுவிட்டது. பிரிய ஃபெலினாவையும் ஷேரனையும் பார்த்து இரண்டு வருடங்கள் நெருங்கப் போகிறது. இடையில் ஒரு முறை வீடியோ அழைப்பில் பேசிய போது “உன்னோடு பேசமாட்டேன், பேச மாட்டேன்” என்று கத்தி அவனுடைய பிம்ப முகத்திலேயே அறைந்தாள். தந்தையர் நாட்டின் பாதுகாப்பும் கெளரவமும் தந்தை மகள் பாசப் போராட்டத்தின் குறுக்கே நிற்கிறது. பெரேஸ் பிரிய மகளிடம் அவளுக்காகவும் மற்றும் அவளுடய பள்ளித் தோழிகளுடைய பாதுகாப்பிற்க்காகவுமே தான் யுத்த களத்தில் நிற்பதாக விளக்க முயன்றது அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு ஏற்புடையதாக இல்லை. “அப்பா நீங்கள் ஏன் சண்டை போட வேண்டும்? அதுவும் என்னையும் அம்மாவையும் விட்டு விட்டு வெகு நீண்ட தூரத்தில், வெகு நீண்ட நாட்களாக?” இந்தக் கேள்விக்குத் தன்னிடமே சரியான பதில் இல்லை என்பது பெரேஸுக்கு உரைத்தபோது அவனுள் ஒரு வறண்ட மென்னகையே வெளிப்பட்டது. இந்தப் பிரச்னையின் பல கேள்விகளுக்கு பதிலில்லை என்கிறபோது கேள்விகளே அபத்தமாகும் அவலம் தொடர்கின்றது. ஹமாஸுடனான இந்த யுத்தம் மாத்திரமில்லை; மனிதர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள் ? எந்த நிர்ப்பந்தத்தில் யுத்தம் தவிர்க்க முடியாததாகின்றது? ஒரு யுத்த சன்னத வீரனுக்கு அரசியல் அவசியமற்ற ஆடம்பரம் என்றாலும் யுத்தம் என்பதே இரத்தம் சிந்தும் அரசியல் என்பதால், அந்தப் பிரஞ்ஞை அவ்வப்பொழுது மனம் பிராண்டவே செய்கிறது.
ஹமாஸை உள்ளே நுழையவிட்டது அரசியல்; ராணுவ வீரன் என்ற முறையில் பெரேஸால் அதைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அந்த அரசியல் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகப் பரிணமித்து அதில் பெரேஸை ஈடுபடுத்துகிற போது அவனும் அந்த அரசியலின் அங்கமாவது தவிர்க்க முடியாததாகிறது. சரி தவறு என்று சொல்லும் உரிமை அவனுக்குக் கிடையாது என்றாலும் ஒரு வீரனும் தேசத்தின் மைந்தன் – அதுவும் முக்கியமான, அவசியமான மைந்தன் என்கிறபோது – அந்த அரசியலின் பாதிப்புகள் குறித்த அக்கறை அவனுக்கு இருக்கக் கூடாதா? எதுவானாலும் இறுதிவரை தன் தேசத்திற்காய் களத்தில் எதிரியின் முன் நின்று சவால் விடும் வீரனுக்கு அந்த அரசியலில், வீட்டில் தொலைக்காட்சியின் முன்னமர்ந்து விமர்சிக்கும் பொதுஜனத்திற்கு இருக்கிற பங்கு கூட மறுக்கப்படுவதுதான் மிகப் பெரிய நகைமுரண். தேசபக்தியெனும் வெகு பிரகாசமான வெளிச்சத்தின் முன் வீரர்கள் வெறும் விட்டில் பூச்சிகள்தானா? ஆணைகளுக்குப் பணிவதுதான் வீரன் முன் நிற்கும் ஒரே கடமை; அர்ப்பணிப்பின் ஆகுதியாகும் அவனுக்கு அப்படி ஆகுதியாக்கும் அரசியல் குறித்த அறிவே அபத்தமாவதுதான் ராணுவத்தின் அடிப்படை அவசியம். தேவையற்ற கேள்விகளை அனுமதித்தால் களம் களேபரமாகிவிடும் அபாயம் உருவாகிவிடும். மிகப் பெருவாரியாக ஒரு தேசத்தின் ராணுவம் அந்தத் தேசிய அரசின் பாதுகாப்பு அரணாகிறபோது, அது – தேசபக்தியெனும் மிகப் பெரிய வர்ண ஜாலப் பின்னணியில் ஒளிந்திருக்கும் – கூலிப் படைதான்; அங்கே கேள்விகளுக்கு இடமில்லை. சமீப வருஷங்களாக பெரேஸுக்கு இந்தப் புரிதல் ஒரு உறுத்தலாகத் தொடர்கின்றது. அறிந்தும் அறியாதிருப்பது போல, புரிந்தும் புரிந்து கொள்ளாதது போல, தெளிந்தும் தெளியாதது போல எல்லா வித்தைகளையும் கற்றுத் தேறியிருந்தும், பார்வையாளர் கூட்டத்தை மகிழ்விப்பதற்காய் தவறுதலாய் தடுக்கி விழும் சர்க்கஸ் கோமாளிகளைப் போலவா ஒரு புத்தியுள்ள ராணுவ வீரனும்? அப்படியானால் அது எவ்வளவு பெரிய குரூரம்? களத்தில் எதிர்படும் எவனானாலும், எதுவானாலும் ஒரு ராணுவ வீரனுக்கு எதிரிதான். எந்தத் தடைகளையும், எல்லாத் தடைகளையும் அழித்து ஒழித்து முன்னேறிச் சென்று கொண்டேயிருப்பது தவிர ஒரு ராணுவ வீரனின் நகர்வு என்று வேறு ஏதுமில்லை, எதுவுமில்லை. எதிர்ப்படுவது மரமானாலும், மட்டையானாலும், நிலமானாலும், நீரானாலும், மாடானாலும் மனிதனானாலும் சின்னஞ்சிறு மழலையானாலும், வளர்ந்த வாலிபனானாலும், ஆணானாலும், பெண்ணானாலும் எதுவானாலும் எப்படியானாலும் எதிர்ப்படுவது எதிரி என்பதுதான் அவனுக்குத் தரப்படும் இலக்கணம். யுத்தத்தின் சராசரி அவசியமே இதாகின்றபோது ஒரு தனி மக்கள் கூட்டத்தை மாத்திரம் எதிர் இலக்காக வைத்து நடத்தப்படும் பொருதலில் வயதோ, ஆயுதம் தரித்தவனோ, நிராயுதபானியோ, அதிகாரமோ, அனாமதேயமோ என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருமே எதிரிகள்தான். அப்படித்தான் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகக் காஸா கனன்று கொண்டிருக்கிறது. ஒரு வருடம்தானா? பெரேஸ் அவனையுமறியாமல் மெலிதாகச் சிரித்தான்.
மூதாதையருக்கு வாக்களிக்கப்பட்ட (?) – இந்த மண்ணை அப்படித்தான் டோரா சொல்கிறது. பிரேதக் குழிகளிலிருந்து விடுவித்து அழைத்து வருவேன் என்று முன்னோடித் தலைவன் மோசேயிடம் யெகொவா வாக்களித்ததாகவும் சொல்லுகிறது. அவருடைய தகப்பன் வார்ஸாவின் கெட்டோவில் பாதாளச் சாக்கடையில் பிரேதங்களுடன் நீந்தித் தப்பித்து வெளிவந்ததை தாத்தாவின் வார்த்தைகளில் அவர் மடியிலமர்ந்து கேட்டபோது பெரேஸ் டோராவின் அந்த வார்த்தைகளின் ஜீவனில் விகசித்திருக்கிறான். பூட்டன் மலக் கழிவுகளினூடாய்ப் போராடிப் பிழைத்து தன் தலைமுறையான பெரேஸை அவன் இருத்தலுக்காக மண் குவியல்களின் மத்தியில் சுட்டெரிக்கும் பாலை வெளியில் காவல் காக்க விட்டுப் போயிருக்கிறான். பெரேஸின் பேரனோ பேத்தியோ கணனியில் சைபர் யுத்தம் செய்யலாம்; யார் கண்டது? தன் தலைமுறைகளின் இருத்தல் ஏன் இப்படி ஒரு பதட்டத்திலேயே தொடர்கின்றது என்பதற்கான விடை இது வரையிலேயும் பெரேஸுக்குக் கிடைக்கவேயில்லை. கல்லூரி நாட்களில், ராணுவக் கல்லூரிகளின் பயிற்சி நாட்களில் பெரேஸ் இதற்கான தர்க்கங்களில் இடைபட்டிருக்கிறான்; பார்வையாளனாகக் கவனித்திருக்கிறான். தன் மக்கள் அழைக்கப்பட்டவர்களா? அல்லது அலைக்கழிக்கப்படுவதற்காகவே அழைக்கப்பட்டார்களா? பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஆதி தகப்பன் ஆபிரகாம் நாட்கள் துவங்கி, நானூறு வருட அடிமைத் தளையிலிருந்து நாற்பது வருட வனாந்தரப் பயணத்திற்குப் பின்னும் இந்த மண்ணில் அவர்கள் கால் பதித்த வரலாறு முழுதும் இரத்தத்தாலேயே எழுதப்பட்டிருக்கிறது. அசீரியர், பாபிலோனியர், எகிப்தியர், ரோம சாம்ராஜ்யம் என்று தொடரும் அவலங்கள் நவீன வரலாற்றில் ஹிட்லரின் நாஜிக்களின் கைகளில் வந்து முடிகின்றது. இந்த மண்ணும் அவர்களை விடுவதாயில்லை; அவர்களும் இந்த மண்ணை விடுவதாயில்லை.
சாம்ராஜ்யங்களுக்காய், சாம்ராஜ்யங்களுக்கிடையேயான யுத்தங்களை, அந்தக் காலங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. வாள் வலியும் தோள் வலிமையும் மாத்திரமே வரலாறு படைத்த அந்த நாட்களுக்கு, மானுடத்தின் வன்புணர்வு அசுர வளர்ச்சியின் அந்த நியமத்திற்கு டோராவோ, மற்ற நம்பிக்கை, இனம், மற்றும் தேசத்தின் எந்தப் புனித நூல்களுமோ இன்றைய மனிதனுக்கு விளக்கம் தரவோ வெளிச்சம் தரவோ தேவையில்லை. அவனவன் நியாயங்கள் அவனவனுக்கு என்ற தர்க்கங்களில் ஒளிந்திருக்கும் பதிவுகள் அவை. எது எப்படியானாலும் 1948ல் பென்கொரியனின் களத்திற்கும் இப்பொழுது பெஞ்சமின் நெதன்யாகுவின் வியூகத்திற்கும் எந்தப் பொருத்தமும் எந்தத் தொடர்பும் இருப்பதாக பெரேஸுக்குப் புரியவில்லை. 1948ல் நாதியற்ற, புறக்கணிக்கப்பட்ட, தன் மக்களில் அறுபது லட்சம் உயிர்களை ஆகுதியாய்த் தந்த ஒரு அபலைச் சமூகம் காலூன்ற நிகழ்த்திய ஜீவ மரணப் போராட்டத்தின் துடிப்பை, அந்த வலியை, நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லை கடந்த மனிதம் என்கிற அதே புரிதலில்தான் – தன் மக்களுக்காய், நாட்டிற்காய் சீருடை அணிந்து ஆயுதமேந்தி களத்தில் நின்றாலும் – காஸாவின் கண்ணீரை பெரேஸால் ஜீரணிக்க முடியவில்லை. 1948ல் அதீத அச்சத்தில், மித மிஞ்சிய அசட்டுத் தைரியத்தில் சூழ நின்ற இஸ்லாமிய அரசுகள் அகதிகளாய் வந்து நின்ற தன் மக்களுக்கு எதிராக அணி வகுத்தது எவ்வளவு அர்த்தமற்றதும் அநீதியுமோ அதைவிடப் பன்மடங்கு அசிங்கமும் அவலமும் அறுவருப்புமானதுதான் காஸாவின் மீதான இன்றைய ஆக்ரமிப்பும். பெரேஸ் இந்த மண்ணுக்குத் தன்னை ஒரு வந்தேறிகளின் பரம்பரை என்று ஏற்றுக் கொள்ளாத அதே நேரத்தில் காஸாவின் குழந்தைகளை, புதல்வர்களை அந்நியர்கள் என அடையாளமிடுவதையும் அந்த ஆக்ரமிப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஏன் சரியாகச் சொல்வதென்றால் பெரேஸின் அகராதியில் 1967 ஐந்தே ஐந்து நாள் சமருக்குப் பின் தங்கள் ஆளுமையை, அதிகாரத்தை நங்கூரமிட்டுக் கொண்டதற்க்குப் பின் வந்த எல்லாச் சமர்களும் சச்சரவுகளும் ஆக்ரமிப்பின் முகவரிகள்தான்; தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியவைதான்.
பெருமைக்குரிய தேவாலயத்தை, அந்தத் தொன்மக் குறியீட்டை ரோமர்கள் எரித்துச் சாம்பலாக்கியதில் பொசுங்கிப் போய் உலகெங்கும் ஓடி ஒளிந்த நாட்களிலிருந்து குவிந்த வலிகளிலும் வடுக்களிலுமிருந்துதான், அந்தத் தவிப்பிலும் தாகத்திலுமிருந்துதான் புறக்கணிப்பின் முகவரிகளை முதுகிலே சுமந்து கொண்டு, காலூன்ற ஒரு கால் துண்டு நிலத்திற்காய் பேரரசுகளிடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் அபயமிட்டு அந்த மண்ணில் அண்டிக் கொண்டதுதான் வரலாறு என்றால், இடைப்பட்ட ஆயிரம் வருஷங்களுக்கும் மேலாக அந்த மண்ணில் கால் பதித்திருந்தவனை அதினின்றும் அந்நியமாக்கத் துடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பெரேஸுக்குப் புரியவில்லை. சுதேசிக்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் என்றுதானே டோரா சொல்கிறது; இன்னும் சொல்லப் போனால் ஆபிரகாமுக்குத் தந்ததே நைல் துவங்கி யூப்ரட்டீஸ் வரையிலான எற்கெனவே பத்து இனங்கள் வசித்து வந்த தேசம்தானே? டோராவின் இந்த உண்மையை மாத்திரம் வசதியாய் மறப்பதெப்படி? நான் யூதன்; அவன் பாலஸ்தீனியன் என்பது எங்கள் பரம்பரை எங்களுக்குத் தந்த அடையாளம்; அவ்வளவே. அந்த ஒரு அடையாளத்திற்காகவே பரம்பரை பரம்பரையாய் இன்னமும் பொருதிக் கொண்டே இருக்க வேண்டுமென்பது அபத்தமாக இல்லையா? ‘67க்குப் பின் அர்த்தமுள்ள முறையில் இரு தேசம் என்கிற புரிதலை முயற்சித்து எல்லைகளைப் பகிர்ந்திருந்தால் இத்தனை இழப்புகள் தேவைப் பட்டிருக்காதே? வாழ்வின் வசந்தத்தில் ஒவ்வொரு யூத இளைஞனும் யுவதியும் கட்டாய ராணுவச் சேர்க்கையில் வனாந்தரத்தில் வதைபட வேண்டிய அவசியமில்லையே? மொத்த இனமும் முன்னாட்களில் அறுவருப்பின் அடையாளமாய் அறியப்பட்டு இன்னாட்களில் ஆக்ரமிப்பின் அவலமாய் உணரப்பட வேண்டிய தேவையில்லையே? இதில் என்ன அரசியல்? என்ன சூட்சுமம் என்பது பெரேஸுக்குப் புரியவில்லை. மடியிலே கனத்துடன் வழி நெடுகப் பயத்துடன், ஒரு யூதன் என்றுதான் இளைப்பாறுவான்?
ரேடியோ “குக்கூ? குக்கூ? காப்பி?” என்று உயிர் பெற்றது. டிக்கி விரைந்து சென்று “குக்கூ, குக்கூ ஹியர், காப்பி” என்று பதிலளித்துவிட்டு அருகில் வந்த பெரேஸிடம் ரிசீவரைக் கொடுத்தான். “ஸிக்ஸ் – செவென் வாட்டர் ஃப்ளோஸ். காப்பி ரிபீட்” என்று மறுபடியும் தகவலைப் பரிமாறியது. பெரேஸ் “குக்கூ காப்பி” என்று பதில் தந்துவிட்டு ரிஸிவரை டிக்கியிடம் கொடுத்தான். அமைதியாய் ரேடியொ செய்தியைக் கவனித்துக் கொண்டிருந்த மற்ற மெரைன்கள் தங்கள் பார்வையை பெரேஸின் மேல் தீவிரமாய்ப் பதித்திருந்தனர். பெரேஸ் கைக் கடிகாரத்திலிருந்து பார்வையை விலக்கி மெரைன்களிடம் “இன்னும் ஒரு மணி நேரம் இளைப்பாறலாம்; அதற்கடுத்த அரை மணி நேரத்தில் தயாராக வேண்டும். ஒரு கடுமையான பதில் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். நம் இலக்கு ஆயுதம் தாங்கிய போராளிகள் மாத்திரமே; தவிர்க்க முடியாத விபத்துகள் தவிர வேறு எந்த பொது ஜன இழப்புகளையும் வலிந்து செய்ய இந்த அணியில் அனுமதியில்லை. மறுபடியும் சொல்கிறேன்; எந்தத் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கும், பலிகளுக்கும் இடமில்லை” என்று தன் சகாக்களுக்கு உத்தரவிட்டு , டிக்கியிடம் வெடி மருந்துகள் மற்றும் உபகரணங்களின் இருப்பை தனக்குத் தெரிவிக்கக் கட்டளையிட்டான். அவர்கள் முகாமிட்டிருக்கும் களம், முன்னேறிச் செல்ல வேண்டிய தூரம், எதிரணியின் உத்தேசத் தயார்நிலை, எப்பொழுது தளவாடங்களின் அடுத்த விநியோகம் என்று சொல்லப்படாத நிலவரத்தில் சரியான திட்டமிடல் இல்லையென்றால் தாக்குதல் தற்கொலைக்கான ஆயத்தமாகக் கூட மாறிவிடும் விபரீதங்கள் களத்தில் சம்பவிப்பதுண்டு. இந்தச் சமரின் முடிவிலாவது மறுபடி முகாம் சென்று சிறிய ஓய்வெடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று உடலும் உள்ளமும் பரபரக்கிறது. எதுவும் நிச்சயமற்ற நிலவரத்தில் அது சாத்தியமாகும் என்ற சிறிய நம்பிக்கை கூட இல்லை. மெரைன்களில் சிலர் உறக்கத்திலும், சிலர் புகையிலும், சிலர் ஆழ்ந்த மெளனத்திலும் புயலுக்கு முன்னான அமைதியில் ஆழ்ந்திருந்தனர்.
முகாம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்திருந்த கணிப்பு நேரத்திலிருந்து சற்று பின் தள்ளி முதலில் ஒரு சில அசைவுகள் தென்பட்டன. முதல் வெடிச் சத்தம் தங்களுடையதாக இருக்கக் கூடாது என்பதில் பெரேஸ் உறுதியாக இருந்ததால் அவனுடைய மெரைன்கள் மிகுந்த விழிப்புடன் மண்ணோடு மண்ணாக சிறிய பெரிய புற்களின் பின்னாகக் காத்திருந்தனர். முதலில் மெலிதாக ஆரம்பித்த ஒன்றிரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகளின் சத்தம் இப்பொழுது கனத்து அவர்களை நெருங்க ஆரம்பித்த போது பெரேஸ் தன்னுடைய வலது கோடி ஸ்னைப்பருக்கு முன்னேறிப் பதிலடி கொடுக்க சைகை செய்தான். ஒரு மூன்று நிமிடக் காத்திருப்புக்குப் பின் ஸ்னைப்பரின் மூன்று தோட்டாச் சத்தங்கள் கேட்டு அடங்கும் முன் பெரேஸும் அவன் சகாக்களும் இலகு மற்றும் கன இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகளின் உஷ்ணத்தாலும் சத்தத்தாலும் எதிர்கொள்ளப்பட்டனர். அந்தப் பரந்த அவாந்தர மணல் வெளியில் காலைக் கதகதப்பில் ஆயுதங்களின் உஷ்ணக் கூச்சல்களும் இரைச்சல்களும் கவிந்து கொள்ள அங்குலம் அங்குலமாய் அவர்கள் முன்னேறினர். ஸ்னைப்பர் பெரேஸுக்கு தன் வலது கையை உயர்த்தினான். இந்தச் சமரின் முதல் பலி கணக்கிடப்பட்டது. இரண்டு மெரைன்கள் பின்னால் அவனுக்கு இரு புறமும் கவசமாக ஸ்னைப்பர் தன் அடுத்த குறிக்கு முன்னேறினான். இவர்களின் கன ரக இயந்திரத் துப்பாக்கி ரவைகளை உஷ்ணத்துடன் உமிழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க ,மற்ற மெரைன்களின் ஆயுதங்களும் அனல் கக்க அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்த்தது போலவே எதிராளிகளின் தாக்குதல் நிதானமாய் ஆனால் தீவீரமாய் இவர்களை சம்ஹாரம் செய்ய அந்த மணல்வெளி தெறிப்பும் புகையுமாய் சூடாகிக் கொண்டிருந்தது. மூன்று நிமிடங்களுக்கு முன்னதாக சமர் துவங்கி விட்டதை முகாமுக்கு பெரேஸ் அறிவித்துவிட்டான். சற்றும் எதிர்பாராத நொடிப் பொழுதில் டிக்கியின் வலது புறம் பின்னால் இருந்து முன்னேறிக் கொண்டிருந்த அந்த இளம் மெரைன் சடசடவென்று உருமிக் கொண்டிருந்த அவனுடைய டேவரை விட்டு விட்டு தலையைத் தொங்கவிட்டு உறைந்தான். அருகிலிருந்து “மெடிக், மெடிக்” அபயக் குரல்கள் எழும்ப சரிந்த மெரைனை பின்னாலிருந்து கால்களை இழுத்து அவனை சற்று பாதுகாப்பான தளத்திற்கு நகர்த்த மெடிக்கும் இன்னொரு மெரைனும் இயங்கினர். தன் தரப்பிலும் முதல் கணக்கு எழுதப்பட்டுவிட்டதை உணர்ந்த பெரேஸ் அந்தக் கசப்பை செறிக்க முயன்றான். யுத்த களங்களில் எத்தனையோ முறை சந்தித்திருந்தாலும் அங்கே மரணத்தின் அந்த சாவதானம் ஒரு நிமிஷம் உறையவே வைக்கும். பொதுச் சமூக வாழ்க்கையில் மரணத்துக்குப் பின்னான அவதானமும், அழுகையும், பங்கேற்பும், பரிமாறலும் மரணத்திற்கான மகிமையும் மரியாதையுமாகக் கூடப் பரிணமிக்கும். ஆனால் ராணுவ மரணத்தில் அந்த ஆடம்பரங்களுக்கெல்லாம் வழியில்லை. வீரம், தேசத்திற்கான தியாகம் என்கிற ஆர்ப்பாட்ட அலங்கார வார்த்தைகளெல்லாம் அப்புறம்தான். மரணிக்கும் அந்த நிமிடத்தில் ஒரு நபர் கூட அல்ல, ஒரு நம்பர் குறைந்துவிட்டது என்பதுதான்; அவ்வளவுதான். அநேகமாய் அந்த இளம் மெரைனுக்கு இதுதான் முதல் களம் என்பது பெரேஸுக்கு உரைத்த போது இப்படி இன்னும் எத்தனை தளிர்களை இந்த யுத்தம் பொசுக்கும் என்று நினைத்து பெருமூச்செறிந்தான்.
கையிலிருக்கும் வரை படத்தின் படி அவர்களுக்கு முன்னிருக்கும் அந்த சிறிய மண் குன்றுகளின் ஊடாய்ப் போய் இடது புறம் திரும்பினால் அவர்கள் கட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், குடியிருப்புகள் என சூறையாடப்பட்ட பாலஸ்தீனியரின் ஒரு தற்காலிக முகாம் இருக்கும். ஒட்டுமொத்த காஸா வாசிகளின் இருத்தலே தற்காலிக நிலவரத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிற பொழுது எந்த முகாமும் நிரந்தரமல்ல என்பது அவர்களின் இறுகிய நொறுங்கிய முகங்களில் தெறிக்கிறதை பலமுறை பெரேஸ் உணர்ந்திருக்கிறான். முகாமை இவர்கள் நெருங்கும் போது எழும்பும் இயல்பான எதிர்த் தாக்குதலைச் சமாளிக்க எனும் போர்வையில் பின் வரும் இவர்களின் ப்ளட்டூன் முகாமைச் சுற்றி வளைத்து போராளிகளைக் கொன்றோ அல்லது முடமாக்குவதோ அவர்களுடைய திட்டம். அதற்காக அனுப்பப்பட்ட முயற்சியாகத்தான் பெரேஸும் அவன் சகாக்களும். இவர்கள் தரப்பில் இரண்டு இழப்புகளுக்குப் பிறகு மணல் குன்றுகளின் ஊடான சரிவுகளை நெருங்கி பைனாகுலரில் முகாமை நோட்டமிட்ட போது பெரேஸ் ஏமாற்றத்தில் அதிர்ந்தான்.
அந்த முகாம் பரபரப்பாகவும் இல்லை; அமைதியாகவும் இல்லை. அது ஒரு நிச்சய அபாயம் எதிர்நோக்கும் மெளன இறுக்கத்தில் உறைந்திருந்தது. சீருடை அணியாத நிச்சயம் மறைக்கப்பட்ட ஆயுதங்களுடன் ஒன்றிரண்டு போராளிகளை அவர்களின் விழிப்பான அசைவுகளிலிருந்து
பெரேஸால் அடையாளம் காண முடிந்தது. மற்றபடி வழக்கம் போல் குண்டுகள் வீசப்படும் தங்கள் முற்றத்தில் வெடி மருந்துகளின் புகை நாற்றம் பழகிப்போய், குழந்தைகள், சிதைந்து சிதறுண்டு இன்னமும் குண்டுகளை விழுங்க வாய் பிளந்து நிற்கும் சல்லடையாக்கப்பட்ட வாசல்கள் ஜன்னல்களுடன் சரிந்து நிற்கும் கட்டிட இடிபாடுகளை பொம்மைச் சாதனங்கள் போல பாவித்து விளையாடிக் கொண்டிருந்தனர். முழுக் காஸாவும் இப்படியொரு சர்ரியலிஸ ஓவியக் கலைஞனின் படைப்பு போல புகைந்து கொண்டிருக்கிறது. அவலங்கள் அழிவுகள் மத்தியிலும் வாழ்வெனும் நிர்ப்பந்தம் நெறிக்கப்பட்ட சுவாசத்தில் தன் இருத்தலைத் தொடர்கிறது.
ஒரு முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக அவர்களோடு மூர்க்கமாய்ப் பொருதியவர்கள் மாயாவிகளாய் எங்கே மறைந்தார்கள் ? தங்கள் மண்ணுக்கான போராட்டத்தை மண்ணுக்குள் மறைந்து நடத்துகிறார்களா? எல்லா மனிதர்களும் நாட்கள் முடிந்து மண்ணுக்குள்ளே அடக்கமாகிறார்கள். ஆனால் இங்கே ஒரு இனம் இந்த மண்ணின் ஜீவ இருத்தலின் கண்ணிய கெளரவத்திற்காக உயிரோடே மண்ணுக்குள் மறைந்து போராடுவது அவர்கள் மேல் வீழ்ந்த சாபமா? இல்லை யூதர்கள் உட்பட அனைத்து மனுக்குலத்தின் மரத்துப்போன மன சாட்சியின் பாவமா? போராளிகளையும் பொதுச் சமூகத்தையும் பிரித்தெடுப்பதற்காக முன்னேறிய பெரேஸின் முன்னணியிடமே ஒரு சுருக்க மோதலை நிகழ்த்திவிட்டு, போக்கு காட்டிவிட்டு அவர்கள் மறைந்து விட்டார்கள். இனி என்ன? வழக்கமான இடிபாடுகளுக்குள்ளே துவங்கும் தேடல்தான். அவலமும் அபாயமுமான இந்தத் தேடல்களில் இரு தரப்புக்குமே வெற்றியென்பதில்லை. இஸ்ரேலியர் தேடுவது அழித்தொழிப்பின் வெற்றியென்றால் அந்த இடிபாடுகளுக்குள்ளிருந்தே அவர்களின் ஜீவ மரணப் போராட்டத்தில் திரும்பவும் திரும்பவும் எரிமலையாய்ச் சீறுகின்ற பாலஸ்தீனிய போராளிகள் தேடுவது வாழ்வையும் அந்த அடிப்படை உரிமையையும். மிகப் பெரிய நவீன ராணுவத் தளவாடங்களுடனான எதிரியின் சவாலை எதிர் கொள்ள பதுங்கிப் பாய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
பெரேஸ் தன் சகாக்களுக்கு சுடுதலை நிறுத்தி சற்று தளர்ந்திருக்க உத்தரவிட்டிருந்தான். ரேடியோவில் “ஸ்டேல்மேட்” – காப்பி” என்று நிலையை அறிவித்தான். உடல் முழுதும் புழுதியும் மண்ணும் வேர்வையில் கையில் துப்பாக்கிகளுமாய் அழிவின், அச்சுறுத்தலின் அடையாளங்களாய் நிற்கும் அவர்களைப் போல எத்தனையோ வீரர்களை எத்தனையோ முறை பார்த்த அந்த மழலைகளின் முகத்தில் படிந்திருப்பது கோபமா? அசட்டையா? ஏளனமா? பெரேஸுக்கு என்னவென்று புரியவில்லை. ஆனால் நிச்சயம் அந்தப் பிஞ்சு முகங்களின் கள்ளம் கபடமற்ற மென்னகை நாளும் கனன்று கொண்டிருக்கும் யுத்த களத்தில் களவு போய்விட்டது என்பது மட்டும் நிச்சயமாய்ப் புரிந்தது. பத்து வயதிருக்கலாம்; அந்தச் சிறுவன் அவன் உயரத்திற்கு ஒரு கழியை இரண்டு கைகளிலும் நீட்டிப் பிடித்துக் கொண்டு பெரேஸை நோக்கி “டும்,டும்” என்று கத்திவிட்டு திரும்பி ஓடினான். ஆயுதம் வாழ்வின் அங்கமாகி அது விளையாட்டிலிருந்து வினையாகிப்போன அந்த அவலம் ஒரு கணம் பெரேஸை நிலை குலையச் செய்தது. பள்ளிக்கூடங்கள் மறுக்கப் பட்டிருப்பதால் ஆயுதமே புத்தகமாகிப் போவது எவ்வளவு பெரிய குரூரம். ஒரு நொடியில் ஷேரன் அவன் கண்களில் வந்து மறைந்து போனாள். எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு கெளரவமான இருத்தலையும் பிரகாசமான எதிர்காலத்தையும் உத்தரவாதம் செய்யாத கால, சித்தாந்த, இன, களப் பெருமைகளின் கனவுகள் என்பது ஒரு மாயமான் வேட்டையாகவே அவனுக்குத் தோன்றியது.
ரேடியொ உயிர்பெற்று அவன் எதிர்பார்த்தபடியே எச்சரிக்கையுடனும் மிகுந்த கவனத்துடனும் முகாமிற்க்குள் போராளிகளைத் தேடி முடக்கும் வேலையை உடனடியாகத் துவங்க வேண்டும். எந்த ஏதிர்ப்புகளையும் அடக்க பெரேஸுக்கு விருப்பச் சுடுதல் (shoot at will) உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி எண்ணிக்கைகளிலும் ஆயுதங்களிலும் மிகவும் வலிமையுடன் போராளிகள் மறுபடியும் சீக்கிரமாய் அடுத்த சமருக்குத் தயாராகலாம் என்பதால் தேடுதல் நடவடிக்கையை உடனே துவக்கச் சொல்லி கட்டளை வந்தது. இடிபாடுகளின் ஊடாய் சிதைவுறும் முன் அந்தச் சிறிய நகரின் பிரதான வீதியாய் விரியும் வழியை தன் வரை படத்தில் ஒரு முறை உறுதி செய்தவன் சீண்டப் பட்டாலொழிய எந்தத் தாக்குதலும் கூடாது என்பதை தன் அணியினருக்குக் கட்டளயிட்டுவிட்டு வீதியின் இரு புறமுமாக அவர்களைப் பிரியச் சொல்லி, எச்சரிக்கையுடன் நகர ஆரம்பித்தனர்.
அந்த நண்பகலில் பெரேஸ் எதிர்பார்த்திருந்ததை விட அந்த முகாம் பெரியது. சிதைந்து சிதிலமாகியிருந்த அவர்களுடைய வீடுகள், அடுக்குமாடிக் கட்டிடங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கடை வீதிகள் வழியாக அவர்கள் நிதானமாய் விழிப்புடன் நகர்ந்த போது , யுத்த ஆக்ரமிப்பின், அழிவின் முகவரிகளின் அகோர சாட்சியாய் அந்தச் சிறிய நகர் சல்லடையிடப்பட்டிருந்தது. தாங்கள் இழந்து போகவிருக்கும் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை உறுதி செய்ய இடிபாடுகளுக்குள் ஒளிந்திருந்து போராளிகள் தாக்கலாம் என்பதுதான் அவர்கள் எதிர்பார்த்தது. போராளிகளைக் குறிவைக்கிறோம் என்ற போர்வையில் அங்கே நடந்திருப்பது ஒரு அப்பட்டமான மனித உரிமை அடக்குமுறை மற்றும் அத்துமீறல் என்பதின் அர்த்த பூர்வ சாட்சியாகத்தான் அந்த இடிபாடுகள் காட்சியளித்தன. யூதர்களல்லாத அந்த மக்கள் கூட்டத்தின் இருத்தல் ஒரு உறுத்தலாகவே நெருடுவதால், புரிவதால் அவர்களின் அழித்தொழிப்பை நாசுக்காய் அரங்கேற்ற குடியேற்ற காலணியவாதிகளாய் உருமாறியிருக்கும் இஸ்ரேலிய அரசுக்கு கிடைத்த துருப்புச் சீட்டுதான் போராளிக் குழுக்கள் என்பது இப்பொழுது ஊரறிந்த இரகசியம். ஒரு வேளை காஸாவில் இந்த யுத்தத்தில் அதன் கடைசி அத்தியாயம் எழுதப்படலாம்.
ஒரு பெரிய மருத்துவமனையில் அநேகமாக அந்தக் கட்டிடத்தின் கூரையே இல்லை. அங்கங்கே பொத்தலாகி சரிந்து பிளந்து அதன் அறுவை சிகிச்சைக் கூடம் மாத்திரம் தப்பியிருந்தது. திறந்தவெளியில் குண்டுகள் துளைத்த சுவர்களுக்கு மத்தியில் வரிசையாக படுக்கைகளில் யுத்த களத்தின் வலியில் கிளம்பும் அவலக் கூச்சல்களுக்கு மத்தியில் இன்னமும் சாகாத மனிதத்தின் சாட்சியாய் ஒரு சிறிய மருத்துவக் குழு போராடிக் கொண்டிருந்தது. மிகுந்த உறுத்தலுடன் பெரேஸ் அதைக் கடந்தபோது ஒரு படுக்கையின் ஓரத்தில் நின்று உடம்பெங்கும் கட்டுகளுடன் முனங்கிக் கொண்டிருந்தவனைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் அவனைப் பார்த்து “இவனை முழுதும் கொன்று விடுங்களேன்; உங்களுக்குப் புண்ணியமாயிருக்கும்” என்று சற்று நெருங்கி வந்து கூக்குரலிட்டது அந்தத் தாயின் வற்றிப்போன கண்ணீரின் வேதனையில் வெடித்தவை. அந்த மருத்துவமனைக்குள்ளிருந்து எத்தனை போராளிகளைக் கொன்றார்களென்றோ அல்லது உயிருடன் கைது செய்தார்கள் என்ற கணக்கோ தங்கள் ராணுவத்திடம் இல்லையென்பது பெரேஸுக்குத் தெரியும். அப்படி ஒரு கணக்கை பொதுவெளிக்குத் தெரிவித்து தங்களின் அந்தக் குரூரத் தாக்குதலை நியாயப்படுத்த வேண்டும் என்கிற அவசியத்தையெல்லாம் இந்தப் போர் கடந்துவிட்டது. இந்தப் போர் கடந்துவிட்டதா? இல்லை இஸ்ரேலியரின் தர்ம நியாய விழுமியங்கள் கடந்துவிட்டதா? ஆஸ்விட்ச்சின் அன்றைய அலறல்கள் முழு ஐரோப்பிய சமூகத்தின் பொது மனசாட்சியை இரணமாய்ச் சீண்டிய வலியில் அந்தப் பிரசவ வேதனையில் பிறந்ததுதானே இஸ்ரேல்? இன்று இந்தத் தாயின் கசந்த சாப அலறல் நாளை எப்படி விடியும்? உண்மைதான் – எந்தத் தேசமும் தன் மக்களைப் பாதுகாக்க வேண்டும்தான்; அந்த உத்தரவாதம் அந்த அரசிடமிருந்துதான் வரவேண்டும். ஆனால் அது அண்டை மக்களின் மருத்துவமனைகளயும் பள்ளிக்கூடங்களயும் நொறுக்கிச் சிதைத்துதான் பெற முடியும் என்பதை எந்த நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளும்?
சிதைந்து சிதிலமாகி சற்று சரிந்து நின்ற ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பின் இடிபாடுகளும் சிதறல்களும் அதன் முதல் மாடி வரையிலும் குவிந்து மறைத்திருந்தன. அதற்கு மேல் பைசா நகரத்துக் கோபுரம் போல சாய்ந்திருந்த அந்தக் கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் ஒரு முதிய தம்பதியர் பெயர்க்கப்பட்டிருந்த ஜன்னல்களின் அருகில் அமர்ந்து அந்த அந்தரத்தில் கைகளில் சிறிய பீங்கான் கோப்பைகளுடன் இவர்கள் கடந்து செல்வதைக் கவனித்து கையசைத்தனர். இன்னமும் தங்களை அழிக்க முடியாத அழிவுகளின் மத்தியிலிருந்து வரவிருக்கும் அழிவுகளை அசட்டை செய்யும் அந்த அனுபவம் இவர்களை ஒரு ஏளனத்துடன் பார்ப்பது போல. ஒரு மெரைன் “டெவில்ஸ்” என்று கோபத்தில் சத்தமாய் பொரும பெரேஸ் திரும்பி அவனைப் பார்த்த பார்வையில் தலையை வேகமாய் ஆட்டி அமைதியானான்.
இன்னும் அவர்கள் கடந்த போது, வீதியின் இரு புறமும் ஒரு அணிவகுப்பு வரிசை போல வெள்ளைத் துணிகளில் பொதியப்பட்ட விடைபெற்றுப்போன உயிர்களைச் சுமந்து நின்ற உடல்கள் தங்களின் இறுதி யாத்திரைக்கு விதைக்கப்படக் காத்திருந்தன. வெடி குண்டுகளின் புகை நாற்றத்தையும் மீறிய மெலிதான பிரேத வாசனையில் அங்கும் இங்குமாக முகர ஆரம்பித்திருக்கும் ஈக்களின் ரீங்காரம். காலூன்ற வாழ்க்கைதான் பிரச்னை ஆனதென்றால் புதைக்கப்படும் நிலமும் சர்ச்சைக்குள்ளாகி மரணத்திற்குப் பிறகும் பாலஸ்தீனியரின் பிரேதங்களும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த அவலங்களின் முதல் முதல் தரிசன அனுபவத்திற்குள்ளான ஒரு இளம் மெரைன் வாந்தியெடுத்தான்; அது அவன் அலங்காரச் சீருடையில் கறையாகப் படர்ந்தது. இன்னும் அவர்கள் பிரேத அணிவகுப்பைச் சற்று கடந்து வந்தபோது காயப்பட்டு முறிந்திருந்த வலது கையை கழுத்தைச் சுற்றிய தொட்டிலாகத் தொங்கவிட்டிருந்த ஒரு இளைஞன் ஒரு பிரேதத்தின் கால்களிலிருந்த புதிதாய்த் தெரிந்த பூட்ஸைக் கழற்ற முயன்று கொண்டிருந்தான். சத்தம் கேட்டு இவர்களைத் திரும்பிப் பார்த்தவன் அலட்டிக் கொள்ளாமல் மறுபடியும் தன் முயற்சியில் தீவிரமானான். அமைதியான நாட்களில் திருட்டாக அறியப்படுவது அவலமான யுத்த நாட்களில் அசட்டை செய்யப்படுகின்றது. கால கள சூழல்களில் மனித மதிப்பீடுகள் மலினப்படுகின்றன. யுத்த அபாயங்களில் ஸ்தூலமான இழப்புகளை விட நிலை குலையும் மனித மாண்புகள் வலி மிகுந்தவை.
இன்னும் சற்றுத் தள்ளி உருக் குலைந்து போயிருந்த பள்ளிக்கூடத்தின் அருகில் கைகளில் தலையில் கால்களில் கட்டுகளுடன் அழுக்கேறிய ட்ராயர் பனியன்களுடன் சிறுவர் சிறுமியர் பிரேதங்களைச் சுற்றி வந்து ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இரண்டு மூன்று முறை இது போன்ற யுத்தச் சிதிலங்களை பெரேஸ் கடந்து வந்தவன்தான். ஆனால் இம்முறை அவன் உடைந்துபோனான். ஒரு ராணுவ வீரன் களத்தில் உடைய முடியாது. ஆனால் இது போன்ற யுத்தங்களுக்குப் பின் வரும் சிதைவில் அவன் உருக்குலைந்து போவதும் தவிர்க்க முடியாதது. உயிரற்ற உடல்களுக்கும், குண்டுகள், அழிவுகள் அதிர்வுகளுக்கு மத்தியிலும் நிற்கக் கிடைத்த அந்த நிமிடங்களில் வாழ்வெனும் விளையாட்டில் விளையாட்டே வாழ்வாக அந்தச் சிறுவர்கள். எல்லாவற்றையும் கழற்றி எறிந்துவிட்டு அதிகாரம், தபர்தஸ்து, பதவி, கடமை, ராணுவம், பாதுகாப்பு, தேசப்பற்று இன்ன பிற இத்யாதி ஆர்ப்பாட்ட அலங்காரங்கள், சீருடையும் ஆயுதமும் உட்பட அத்தனையையும் கழற்றி எறிந்துவிட்டு அலறிக் கொண்டு நிர்வாணமாய் ஓடி ஒளியும் ஒரு வெறியாய் பரபரக்கும் மனக் களேபரத்தில் பெரேஸ்; முகத்தில் வடியும் வேர்வையைத் துடைத்தபடியே தன் இயக்கத்தை ஒரு உயிரற்ற பிரேதம் நடப்பது போலத்தான் உணர்ந்தான்.
இந்த அறுவருப்புகளுக்குள் அழிவுகளுக்குள் தேட வேண்டியது போராளிகளையா? அல்லது வேறு எதுவுமா? இவர்களின் அணிவகுப்பை குழந்தைகளை விட்டு சற்றுத் தள்ளி ஒரு கல்லின் மேல் அமர்ந்து தீர்க்கமாய், நிதானமாய், விழி அசையாமல் ஒரு இளம் பெண் – அநேகமாய் அந்தக் குழந்தைகளின் ஆசிரியையாக இருக்கலாம் – உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
இவைகளைக் கடந்து அவர்கள் அந்த முகாமின் மத்தியில் நிவாரணப் பொருட்கள் பெறுவதற்காக மக்கள் கூடும் அந்தத் திறந்தவெளிக்கு வந்து சேர்ந்தனர். டிக்கி, ரேடியோவை தோளில் தொங்கவிட்டிருக்கும் மெரைன் ஆகிய இருவருடன் அந்தத் திறந்த வெளியில் ஒரு பக்கம் உடைந்த கால்களுக்குப் பதிலாக கற்களால் தாங்கப்பட்ட ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்த பெரியவரை நோக்கி பெரேஸ் நகர்ந்தான். தன்னுடைய மற்ற மெரைன்களை இந்த மைதானத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்த தெரு முனையின் இரு புறமும் நிற்கவிட்டிருந்தான். எந்தச் சலனமும் இல்லாமல் இவர்கள் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் இறுக்கமான முகத்துடன் சலாம் இட்டு வரவேற்றார். பெரேஸ் பெரியவரிடம் பேச்சைத் துவங்கிக் கொண்டிருக்கும் போதே அங்கங்கே நின்று கொண்டிருந்த இளைஞர்கள், பெரியவர்கள், குழந்தைகள் என ஒவ்வொருவராய் நிதானமாக ஆனால் உறுதியாக அங்கே கூட ஆரம்பித்தனர். பெரேஸ் அவர்களை சட்டை செய்யவில்லை. ஆனால் டிக்கி சற்று பரபரக்க ஆரம்பித்தான். மெரைன்கள் தங்களுக்கேயுரிய இயல்பில் விழிப்பில் தங்கள் துப்பாக்கிகளில் கை பதிக்க ஆரம்பித்தபோது பெரேஸ் திரும்பி அவர்களை ஜாடையால் தடுத்தான்.
பெரேஸ் பெரியவரிடம் “நாம் மட்டும் பேசலாமே? குழந்தைகள் தாய்மார்களை அவரவர் கூடாரங்களுக்குப் போகச் சொன்னால் நன்றாயிருக்கும்:’ என்றான். பெரியவர் ஒரு சிறிய நகையுடன் “கடந்த ஏழெட்டு மாதங்களாக உங்கள் துப்பாக்கிகளுக்கு பெரியவர், சிறியவரென்ற எந்த வித்தியாசமும் இருக்கவில்லையே? உங்கள் தேவைக்கு மாத்திரம் அவர்களை விலகியிருக்கச் சொல்வது நியாயம் என்று கருதுகிறீர்களா? உங்கள் அரசிடமும் ராணுவத்திடமும் நாங்கள் எந்த நியாயமும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இங்கே இப்போது வயது, ஆண், பெண், ஆரோக்யம்,
வியாதி என்கிற பேதமெல்லாம் எப்போதோ போய்விட்டது. ஏனென்றால் மரணம் இங்கே எவரையும் அப்படி பிரித்துப் பார்க்கவில்லை. என்ன விஷயம் என்பதை மட்டும் சொல்லுங்கள்.” பெரியவரின் கறாரான பதில் பெரேஸைத் தீண்டிய அந்த நேரத்திற்குள்ளாக அநேகமாக முழு முகாமும் அங்கே திரண்டிருந்தது. பெரேஸ் “போராளிகள்” என்று ஆரம்பித்த போது மிகவும் கசந்த குரலில் “இங்கே இப்பொழுது எல்லோருமே போராளிகள்தான்”. அவரை விட்டு சற்று தளளி அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஏழெட்டு வயது நிறைந்த சிறுமியை தன் வலது கையால் இழுத்து அவன் முன் நிறுத்தி “இவள் உட்பட; ஒரே ஒரு வித்தியாசம்தான்; ஆயுதம் தரித்தவர்கள், ஆயுதம் ஏந்தாதவர்கள் என்பதுதான். ஆயுததாரிகளை நாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அதே போல் ஏன் வருகிறீர்கள் என்றும் நாங்கள் கேட்பதில்லை. எங்கள் கைகளில் இப்பொழுது கற்கள் கூட இல்லை. இப்பொழுதெல்லாம் எங்கள் முழு வாழ்வும் எல்லா நாட்களும் “இண்டிஃபெடாதான்”. பெரியவர் நிதானமாய் தீர்க்கமாய் முடித்தார். பெரியவர் பேசும் போது கூட்டத்திலிருந்து ஒரு சலனமுமில்லை. விசாரணை என்று ஆரம்பிக்கும் முன்னதாகவே அத்தனைக்கும் பதில் சொல்லிவிட்ட ஒரு அமைதி அவர் முகத்திலிருந்தது.
ரேடியோ இரைச்சலினின்றும் உயிர் பெற்று பெரேஸை சங்கேத மொழியில் விசாரித்தது. டிக்கி ரிசீவரை எடுக்க முயன்றபோது பெரேஸ் அவனை நிறுத்தினான். இவர்களை விட்டுத் தள்ளியிருந்த பெரேஸின் மெரைன்களுக்கு பொறுமை கடக்க ஆரம்பித்திருந்தது அவர்களுடைய உடல் மொழியில் தெரிந்தது. இஸ்ரேல் மெரைன்களுக்கு இந்த நாடகங்கள் இப்பொழுதெல்லாம் அலுத்துப் போயிருந்தன. அநேக சமயங்களில், சந்தர்ப்பங்களில் இது போன்ற விசாரணைகள் பேச்சு வார்த்தைகள் எல்லாமே ஏதாவதொரு களேபரத்தில்தான் முடிந்திருக்கின்றன. ஆனால் இந்த முறை சற்று வித்தியாசம் தெரிந்தது. கூட்டம் அசையவே இல்லை; கலையவுமில்லை. பின்னாலிருந்த பெண்கள் அப்படியே உக்கார ஆரம்பித்தனர். மெரைன்கள் அதைப் பார்த்து பதட்டமுற்ற போதும் பெரேஸ் அவர்களை நிதானமாக இருக்குமாறு சைகை காட்டினான். மக்கள் கூட்டத்திடமிருந்து ஒரே ஒரு வெடிச் சத்தம் கேட்டால் கூட மிகப் பெரிய களேபரமாகி அந்த இடமே கலவர பூமியாகிவிடும். பெரேஸுக்கு தன்னுடைய நோக்கத்தையோ, இலக்கையோ, தகவல்களையோ எதையும் பெரியவரிடமிருந்தோ அல்லது கூடியிருப்பவர்களிடமிருந்தோ பெற முடியும் என்கிற நம்பிக்கை போய்விட்டது. கூட்டத்தைக் கலைத்து பயமுறுத்தி முன்னேறுவதில் தவிர்க்க முடியாமல் ஏற்படும் பொது ஜன மரணத்திற்கு பெரேஸ் எவ்விதத்திலும் தயாராயில்லை. தனது ராணுவப் பணியின் மிக உச்சமான நெருக்கடியின் விளிம்பிற்குள் தான் தள்ளப்பட்டிருப்பதாக பெரேஸ் உணர்ந்தான். சார்ஜெண்டின் மிக நிதானமான இந்த அணுகுமுறை டிக்கிக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லையென்றாலும் ஏதோ ஒரு வித்தியாசமான சூழலை உணர்ந்தான். ஆனால் ரேடியோவைச் சுமந்திருந்த மெரைனுக்கு எரிச்சல் கூடிக்கொண்டே இருந்தது. தூரத்திலிருந்து அந்த ஊமை நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற மெரைன்களும் பாதி கவனத்துடனும் மீதி எரிச்சலுடனும் காத்திருந்தனர்.
பெரேஸ் பெரியவரிடம் “நான் சொல்ல வேண்டியதை உங்களிடம் சொல்லிவிட வேண்டும். முதலிலேயே சொல்லியிருந்தால் நாங்கள் இன்னும் கூட ஒத்துழைத்திருப்போமே என்று என்னிடம் நீங்கள் குறை பட முடியாது. எங்களுக்குப் பின்னால் இன்னுமொரு முழு ப்ளட்டூன் வந்து கொண்டிருக்கிறது. அதை நடத்துபவருக்கு உங்கள் முகாம் முழுவதையும் காலி செய்து லாப நஷ்ட்டம் பார்க்காமல் விரட்டி விடும் கட்டளை கொடுக்கப்படலாம்”. பெரியவர் இடைமறித்தார். “நாங்கள் ஒத்துழைத்து ஒத்துழைத்து இடையிடையே முரண்டுதான் இப்படி உருக் குலைந்து போயிருக்கிறோம். எங்கள் பதில் இறுதியானதுதான். போராளிகளைப்பற்றி அவர்கள் முகவரிகளைப்பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.” என்று உறுதிபடக் கூறினார்.
இனி என்ன? ரேடியோ அவ்வப்பொழுது உயிர் பெற்று “குக்கூ கேட்கிறதா? காப்பி, காப்பி” என்று அரற்றிக் கொண்டிருந்தது. ரேடியோவை வைத்துவிட்டு அந்த மெரைனை அவனுடைய சகாக்களுடன் போய் நிற்கச் சொன்னான். “டிக்கி நீயூம்”என்று ஆரம்பித்தவனை டிக்கி இடைமறித்தான். “நோ ஸார்ஜெண்ட்; எதுவானாலும் உங்களோடுதான்” என்றான். பெரேஸ் மெலிதான இறுக்கமான குரலில் “எதுவானாலும்? இந்தக் களத்தின் நிலவரம் எப்படி வேண்டுமானாலும் முடியலாம். எனவே நீ திரும்பிப் போய் அவர்களுடன் சேர்” என்றான். “நோ, உதவியாளன் கடமை எல்லாச் சூழ்நிலைகளிலும் தன் மாஸ்டர் அருகில் நிற்பதுதான்”. பெரேஸ் தன் மனதுக்குள் விதி வலியது என்று நினைத்த வண்ணம் பெரியவரிடம் இறுதியாக “ எந்த முடிவுகளுக்கும் தயரா?” என்று கேட்டான். பெரியவர் வெகு நிதானமாய் எழுந்து தன் வலது கை முஷ்டியை உயர்த்தி “எதுவானாலும்” என்று கூறவும் பின்னிருந்த கூட்டத்திடமிருந்து அவர்களுடைய வழக்கமான கம்பீரமான “ நதி துவங்கி சமுத்திரம் வரை சுதந்திர பாலஸ்தீனம்”, “எங்கள் மண்; எங்கள் உரிமை” கோஷம் மூன்று முறை உச்ச தொனியில் ஒலிக்க அந்த முகாம் அதிர்ந்தது. வெடி குண்டுகளின் ஓசையை விட தீராத தாக உணர்வுகளின் உரிமைக் குரலின் ஆர்ப்பரிப்பைக் கேட்டு பெரேஸ் மயிர்கூச்செறிந்தான். முழக்கத்தின் ஆக்ரோஷத்தில் அதிர்ந்த மெரைன்கள் தங்கள் துப்பாக்கிகளை தயார் நிலைக்கு கொண்டுவந்த போதும் பெரேஸ் அவர்களை மறுபடியும் தடை செய்தான். இன்னொரு முறை அதிர்ந்த அவர்களின் கோஷத்தை ரேடியோ காப்பி செய்திருக்க வேண்டும்.
பெரேஸ் பெரியவரை உக்காரச் சொன்னான். அவனும் அவர்கள் முன் கூட்டத்தை பார்த்தவாறு உக்கார்ந்தான். குடிக்கத் தண்ணீர் கேட்டான். டிக்கி தந்த சிகரெட்டை பெரியவரிடம் நீட்டினான். அவர் நன்றி சொல்லி தான் புகைப்பதில்லை என்றார். பெரேஸ் சிகரெட்டைப் பற்ற வைக்க தன் பாக்கெட்டை துழாவிய போது பெரியவர் அருகிலிருந்த ஒரு இளஞன் அவன் சிகரெட்டைப் பற்றவைத்தான். புகை வளையங்களினூடாய் பெரேஸ் மேலே வானத்தைப் பார்த்தான்.
எங்கிருந்தோ வந்திருந்த ஒரு பறவைகள் கூட்டம் ஒரு அழகான அணிவகுப்பில் எங்கோ நிதானமாய் வின்னழந்து சிறகடித்துத் தீவிரித்துக் கொண்டிருந்தன.
மெரைன்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவியல்லை. புகைக்குப் பின்னாவது குறைந்தபட்சம் கூட்டத்தைக் கலைக்கவாவது வான் நோக்கிய அச்சுறுத்தல் சுடும் உத்தரவாவது சார்ஜெண்டிடமிருந்து வரும் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்தான். பெரேஸ் மறுபடியும் அவர்கள் பக்கம் திரும்பி தான் சொல்லுகிற வரையும் எந்த நடவடிக்கையும் கூடாது என்று அவர்களுக்கு உத்தரவிட்டு விட்டு மறுபடியும் கூட்டத்தைப் பார்த்து திரும்பினான். இப்பொழுது
கூட்டத்திலிருந்து சலசலப்பு எழுந்தது. பெரியவர் ஒரு முறை முகத்தைத் திருப்பிப் பார்த்ததும் கூட்டம் அமைதியாகியது.
அந்த அமைதியில் பெரேஸ் தன் முதுகின் பின்னால் டாங்குகளின் உறுமல் சத்தத்தை உணர்ந்தான். இரண்டு மூன்று துப்பாக்கிகளின் சத்தம் கேட்டது. டாங்குகள் நெருங்கி வருவதை அந்த அதிர்வை கூட்டத்தினர் தங்கள் பாதங்களில் உணர ஆரம்பித்தனர். பெரியவர் பெரேஸைப் பார்த்தர்; சற்றே கலக்கமுறும் தன் மக்களைப் பார்த்தார். மறுபடியும் அவர் முன்னால் பார்த்தபோது தூரத்தில் டாங்குகளின் நீண்ட பேரல் மெதுவாய் அவர் கண் முன் மெல்ல மெல்ல பெரிதாகியது. முழங்கால்களை மடக்கி குனிந்து நெற்றியில் மண்பட இரண்டு நிமிட நமாஸை பெரியவர் ஆரம்பித்த போது முழுக் கூட்டமும் புயல் முன் அசையாது நிற்கும் மலை போல நமாஸில் இறங்கியது. பெரேஸ் திரும்பிப் பார்த்தான். எழுந்து, பதட்டத்தில் நின்று கொண்டிருந்த தன் மெரைன்களை திரும்பிப்போய் வந்து கொண்டிருக்கும் ப்ளட்டூனுடன் இணைந்து கொள்ளக் கட்டளையிட்டான். சற்று தயக்கத்துடன், ஆனால் ஒரு விதமான பாரம் தணிந்த உணர்வுடனும் இன்னமும் எதுவும் கிரகிக்க முடியாமல் மெதுவாக கூட்டத்தையும் பெரேஸையும் பார்த்தவாறே பின்வாங்கினர்.
பெரேஸின் அணிகள் பின் வாங்கி வருவதைக் கண்டதும் முன்னால் வந்து கொண்டிருந்த மூன்று டாங்கிகளும் ஒரு தயக்கத்தில் நின்றன.
நமாஸ் முடித்தவர்கள் வெகு உறுதியாய் தங்கள் முழக்கங்களை மறுபடியும் எழுப்பினர். பெரியவர் அமைதியாக நடு நாயகமாக அமர்ந்து கோஷங்கள் தொடரக் கட்டளையிட்டார். டாங்குகளின் இயக்கத்தை சலனமில்லாமல் கவனித்தார்.
பெரேஸின் மெரைன்கள் பின் வந்த படையுடன் இணைந்திருந்தனர். டாங்குகள் மறுபடியும் முன்னேறத் துவங்கின. ரேடியோ உச்ச ஸ்தாயியில் மறுபடியும் மறுபடியும் “காப்பி, காப்பி” என்று கதறிக் கொண்டிருந்தது.
பெரேஸ் ஒரு முறை திரும்பிக் கூட்டத்தைப் பார்த்தான். திரும்பி கூட்டத்தின் முன்னால் பெரியவரை விட்டுச் சற்று விலகி நிதானமாய் உறுதியாய் அமர்ந்தவன் தன் இயந்திரத் துப்பாக்கியைக் கையிலெடுத்து சட சடவென உறுமவிட்டு ரேடியோவை சல்லடையாய்த் துளைத்தான். ரேடியோ மெளனித்தபின் தன் துப்பாக்கியை மணலில் தன் முன்னால் தூர வீசியெறிந்தான். டாங்குகள் இவர்களை விட்டு ஒரு முன்னூறு அல்லது நாணூறு மீட்டர் தூரத்துக்கு முன்னதாக வந்து கிறீச்சிட்டு நின்றன. காற்றெழுப்பிய சிறிய மணல் புழுதியின் நாட்டிய அசைவுகளினூடாக பெரேஸ் அதை – கற்களும் கழிகளும் சிறு ஆயுதங்களுமற்ற அவர்களின் அந்த ஒரு புதிய இறுதி இண்டிஃபெடாவின் மத்தியில் – இறுகிய முகத்துடன் தீர்க்கமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.