இருள் மனம்




ஜோதிலிங்கம் அக்கம் பக்கம் பார்த்து இருட்டில் செடி மறைவில் ஜன்னலோர சுவர் ஓரம் பதுங்கி உட்கார்ந்தார்.
திருட்டு மனம் படபடத்தது.
நேற்றுதான் இவர் மோகனைச் சந்தித்தார்.
அவன் இவரை….தன் வீட்டு வாசல்படியில் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தான். பின் ஆச்சரியப்பட்டு , சுதாரித்து , சமாளித்து….
“வாங்க ! “வரவேற்றான்.
“உள்ளே வாங்க..”அழைத்தான்.
சென்றார்கள்.
அமர்ந்தார்கள்.
ஜோதிலிங்கம் வெகுநேர தயக்கத்திற்குப் பிறகு…
“தம்பி ! வீட்ல அம்மா, அப்பா இல்லியா..? “கேட்டார்.
“இல்லே. நான் மட்டும்தான் இருக்கேன்.அவுங்க வெளியூர் போயிருக்காங்க. அவுங்களைப் பார்க்கணுமா..?”
“இல்லே. உங்களைத்தான் பார்க்க வந்தேன்.”
“சந்தோசம் .”
“த…. தம்பி..! நீங்க எனக்கொரு உதவி செய்யணும்…?”
“சொல்லுங்க…?”
“வ… வந்து…”
“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க…?”
“லட்சுமி சரி இல்லே. அவள் பழசையே நினைச்சிக்கிட்டிருக்காள்ன்னு தோணுது..”
“புரியல…?!”
“அவ உங்களையே நினைச்சி இருக்கிறதா என் மனசுல படுது..”
எதிர்பார்க்கவில்லை.
“சார்..!!…”அதிர்ச்சியாகப் பார்த்தான்.
“வாழ்க்கையில ஒரு பிடிப்பு இல்லாமல் ஏனோ தானோன்னு வாழற மாதிரி தெரியுது. எதையோ இழந்துவிட்ட துக்கம். எப்போதும் சோகம். தங்க கூண்டு கிளி போல இருக்கிறாள். நான் காரணம் கேட்டாலும் சரியா சொல்ல மாட்டேன்கிறாள். சரியாய்ப் பேசமாட்டேன்கிறாள் !”நிறுத்தி அவனைப் பார்த்தார்.
“அதுக்கு நான் என்ன செய்யனும்..?”
“நீங்க அவளைத் தனியே சந்திச்சி மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கனும். நீங்க இருக்கீங்களான்னு பார்க்கனும்..”
“பார்த்து….?”
“எது சரியோ அதன்படி முடிவெடுக்கலாம். நீங்க சேர்ந்து வாழ விருப்பப்பட்டால் நான் விவாகரத்துக் கொடுக்கத் தயார் . “சொன்னார் .
மெளனமாக இருந்தான். நிறைய யோசித்தான்.
“தம்பி ! நாளைக்கு சாயங்காலம் நான் சாக்குப்போக்குச் சொல்லிட்டு ஊர்ல இல்லாதது மாதிரி வெளியே போறேன். ராத்திரி பத்து மணிக்கு மேல திரும்பறேன். அதுக்குள்ளே எட்டு மணிக்கு நீங்க என் வீட்டுக்கு வந்து லட்சுமியைச் சந்திச்சுப் பேசி அவள் மனசைத் தெரிஞ்சிக்கோங்க …”
ஜோதிலிங்கம் இப்படி சொல்லியும் மோகன் சரி சொல்லாமல் யோசனையுடன் இருந்தான்.
“தம்பி ! நீங்க வயசுல என்னைவிட சின்னவன். அரையும் குறையுமாய் வாழறது சரி இல்லே தம்பி. இதுக்குப் பேசாம அவள் மனசுப்படி நான் நடக்குறதுல தப்பே இல்லே.vவாழறதுல நிறைவா வாழனும். இதுதான் என் ஆசை !”முடித்தார்.
இதற்குப் பிறகுதான் மோகன் தெளிந்தான்.
“சரி ! ” சொன்னான்.
வெளியேறினார்.
தன் யோசனைப் படி வீட்டை விட்டு வெளியேறியவர்… மோகன் – லட்சுமி சந்திப்பு , பேச்சைக் கேட்க…. மோகனுக்கேத்தெரியாமல்… அவனிடம் அறிவிக்காமல்….
இரவு 8.00 மணிக்கு வந்து இப்படி தன் வீட்டு சுவர் பக்கம் வந்து திருட்டுத்தனமாக அமர்ந்திருக்கிறார்.
சிறிது நேரத்தில் மோகன் காம்பவுண்டு கேட்டைத் திறந்து வாசலுக்கு வந்தான்.
அழைப்பு மணி அழுத்தினான்.
வந்து கதவைத் திறந்த லட்சுமிக்கு அதிர்ச்சி, கொஞ்சம் ஆச்சரியம்.
“வாங்க…”கைகால் பரபரக்க உள்ளே அழைத்தாள்.
இருவரும் உள்ளே சென்றார்கள்.
இவர் எதிர்பார்ப்புப்படி கூடத்தில் எதிர் எதிர் நாற்காலியில் அமர்ந்தார்கள்.
ஜோதிலிங்கம் ஒருக்களித்திருந்த ஜன்னல் வழியே பார்த்து….குனிந்து அமர்ந்து காதுகளைத் தீட்டிக்கொண்டார்.
“டீ.. காபி…? “- லட்சுமி.
“வேணாம். இப்பத்தான் குடிச்சு வர்றேன்.”
“என்ன திடீர் வரவு..?”
“சும்மா உன்னைப் பார்க்கனும்ன்னு தோணுச்சு. வந்தேன். வீட்டுக்காரர்..? “சுற்றும் முற்றும் பார்த்தான் .
”இல்லே வெளியூர் போயிருக்கிறார். பத்து மணிக்கு மேல திரும்புவார்…”
“சந்தோசம்…!”
லட்சுமி அவன் முகத்தைப் பார்த்தாள்.
“உன்கிட்ட நான் கொஞ்சம் பேசனும்….”
“சொல்லுங்க…?
“நீ… சரியா இருக்கியா..?”
“புரியல…?”
“சரியா வாழறது மாதிரி தோணலை. முகத்தில் மலர்ச்சி இல்லே..”
“அப்படியா..?!!…”
“ஆமாம். என்ன கவலை, யோசனை..?”
“ஒ …ஒண்ணுமில்லே…”
“இல்லே. மறைக்கிறே. மனசுக்குள்ள என்னையே நினைச்சு இருக்கிறாப்போல தோணுது…”
“இ..இல்லே….?”
“உனக்கு இந்த வாழ்க்கைப் பிடிக்கலை. உன் கணவரோட வாழ விருப்பமில்லேன்னா சொல்லு. அவருக்கு விவாகரத்துக் கொடுத்துட்டு நாம திருமணம் செய்துக்கலாம். சட்டமெல்லாம் இதுக்குச் சாதகமா இருக்கு. ஒன்னும் பிரச்சனை இல்லே..”
“………………………….”
“சொல்லு லட்சுமி..?”
“தப்பு . நீங்க நினைக்கிறதெல்லாம் தப்பு. என் கவலைக்குக் காரணம் நீங்க இல்லே. நம்ம காதல் பிரிவு இல்லே. நம்மக் காதலைத் துறந்து , ஒரு பணக்காரருக்குக் கழுத்தை நீட்டி, உதவிகள் செய்து குடும்பத்தைத் தங்கினாலும் நாலு பொண்ணுகளைப் பெத்த என் அம்மா, அப்பா மீதி பொண்ணுங்களையும் சரியா கரை ஏத்துவாங்கலான்னு கவலை.”
“அப்படியா…?”
“ஆமாம்!. நான் இந்தக் காரணம் காட்டிதான் நம்ம காதலை மறக்கச் சொன்னேன். நீங்களும் சம்மதிச்சீங்க. மோகன் ! நல்லதோ கெட்டதோ திருமணத்துக்குப் பிறகு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் மறக்கப்பட வேண்டிய விஷயம். மறையப் படவேண்டிய ஒன்று. நான் வேண்டி, விரும்பி செய்த திருமணம். அதனால என் கணவர் வயசானவர்ன்னு நான் வெறுக்கல. என் குடும்பத்தைக் காப்பாத்தி, என் கணவருக்கு நிறைய ஆயுளைக் கொடுத்து, எங்களை நிறைவாய் வாழ வை இறைவா என்பதுதான் என் வேண்டுதல், கவலை எல்லாம் .”
மோகன் அவளையே ப் பார்த்தான்.
“மோகன் ! என் மேல உள்ள உங்க அக்கறைக்கு நன்றி. நான் உங்களை எப்பவோ மறந்துட்டேன். நீங்க என்னை நினைச்சிருந்தா மறந்துடுங்க. நாம நண்பர்களாய்ப் பேசி பழகுவோம். சீக்கிரம் திருமணம் முடிங்க. நிறைவாய் வாழுங்க. இதுதான் என் வேண்டுகோள் ! “தெளிவாய்ச் சொன்னாள் .
மோகன் முகத்தில் மலர்ச்சி.
“நன்றி லட்சுமி ! “நிறைவாய்ச் சொல்லி எழுந்தான்.
ஜோதிலிங்கத்திற்கும் மனசு திருப்தி.
இருளிருந்து அவர் வெளிச்சத்திற்கு வந்தார்.