இம்மை மாறி மறுமையாயினும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2025
பார்வையிட்டோர்: 4,221 
 
 

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏதோ இதுவரைக்கும் தான் பார்த்தே இருக்காத ஒரு அற்புத ஜந்துவைப் பார்க்கிற மாதிரி, அக்கா என்னை அதிசயமாய்ப் பார்க்கறா! அந்தப் பார்வைக்கும் மேலே ‘என்ன இந்தப் பொண்ணு ஊரிலே உலகத்திலே இல்லாத அதிசயமா இப்படி இருக்கே’ங்கிற வருத்தமும் கோடி முடித்திருக்கிறதை என்னாலே உணர முடியறது.

“ஏண்டி? மாப்பிள்ளை உன்னை நன்னாய்த் தானே வச்சிண்டிருக்கார்?”

“மாப்பிள்ளைக்கென்ன…? அவர் நன்னாத் தான் பார்த்துக்கறார்”… மனசிலே நீனைச்சுண்டு முகத்திலே கஷ்டப்பட்டு ஒரு சிரிப்பை கொண்டு வரேன்.

“இப்படி என்ன கேட்டாலும் அமுக்குணி மாதிரி சிரிச்சே மழுப்பிடு!”

அக்கா ரொம்ப வெளிப்படை. மனசிலே எதையுமே வச்சுக்கத் தெரியாது அவளுக்கு. அவளைப் பொறுத்த வரைக்கும் அவளோட சந்தேகமும், அவ கேட்ட கேள்வியும் ரொம்ப ரொம்ப நியாயமானதுதான். கல்யாணமான புதுசிலே, ஏன், நாலு குழந்தைகளைப் பெத்து மூத்த பொண்ணு கல்யாணத்துக்கு தயாராய் நிக்கிற இப்பக்கூடப் பிறந்த வீட்டுக்கு வந்தா இரண்டு நாளைக்கு மேலே கால் தரிக்காது அக்காவுக்கு. அம்மாவுடைய கெஞ்சலுக்காக… நானும் தம்பியும் காலைக் காலைச் சுத்தி வர தாட்சண்யத்துக்காகப் பரபரத்திண்டே நாலு நாள்…! அப்புறம் மண்ணை உதறிட்டுக் கிளம்பிடுவா!

“நான் இல்லாம் அவராலே முடியாதுடி பூமா?… தானா எடுத்துப் போட்டுண்டு சாப்பிடக் கூடத் தெரியாது!” இதுக்காகவே அக்காவை எவ்வளவோ நாள் கோட்டா பண்ணி உண்டு இல்லைன்னு அடிச்சிருக்கோம்.

அப்படிப்பட்ட அக்காவாவே, இன்னிக்கித் தன்னோட தங்கை – பிறந்த வீட்டுக்கு வந்து ஒரு மாசமாகியும் ஊருக்குப் போற நினைப்பே இல்லாமல் குத்துக் கல்லாட்டம் இருக்கிறதைப் பார்த்தப்புறம் சந்தேகப் படாம எப்படி இருக்க முடியும்?

அப்படி ஒண்ணும் எனக்குப் பிறந்தாத்து மேலே விட்டுப் பிரிய முடியாத பந்த பாசமோ, இல்லேன்னா தி அதர் சைட்டஅவர் மேலே வெறுப்போ இல்லை. என்னமோ போகணும்னு தோணலை. அவ்வளவுதான் ! இங்கே இருக்கிறதும் அங்கே இருக்கிறதும் மனசைப் பொருத்த அளவிலே எனக்கு வித்தியாசமான விஷயங்களாய்த் தோணலை. அக்கா மாதிரி பறந்துண்டு அவர் கிட்டப் போகத் துடிக்கிற அளவுக்கு எனக்கு ஒரு பிடிப்போ ஆர்வமோ இல்லாத மாதிரி ஒரு ஃபீலிங்! அதுக்கு நிச்சயமா… சர்வ நிச்சயமா… அவர் காரணமில்லை! என்னுடைய இந்தப் போக்குக்கு நான்தான்..நானே தான் காரணம்!

என்னாவே அவரை ‘லவ்’பண்ண முடியலை. கல்யாணமான ஒரு பொண்ணு புருஷனை ‘லவ்’ பண்ண முடியலைன்னு சொல்றது. இந்தப் பாரத தேசத்திலே… அதுவும் தமிழ் நாட்டிலே மகா பாவமில்லையோ? ஆனால் பாவம்கிறதினாலேயே அது உண்மைங்கிறது இல்லாமப் போயிடுமா என்ன? அந்த உண்மையை வெளிப்படையாய் ஒத்துக்கிற தைரியம் இல்லாம்… கல்யாணமான எத்தனை பெண்கள் இந்த நாட்டிலே ‘ஹீப்போ கிரிட்’ஸாப் போலி வேஷம் போட்டுண்டு இருக்கா!. ஆனால் அவாளைக் குத்தம் சொல்லியும் பிரயோசனமில்லை. இந்த ‘சொஸைடி”யிலேதானே அவாளும் வாழ்ந்தாக வேண்டியிருக்கு! அதுக்குத் தேவையான எதிர் நீச்சலடிச்சுப் பொழைச்சுக்கிறதுக்கு ரொம்ப அவசியமான ‘சர்வைவல் இன்ஸ்டிங்ட்’தான் வேறென்ன?

நான் இவரை லவ் பண்ணலைங்கிறதுக்காக வெறுக்கிறேன்னு அர்த்தமில்லை. இவர் ஒரு நல்ல மனுஷர். நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்கேன். ஹி இஸ் எ பர்ஃபெக்ட் ஜெண்டில் மேன், ஓர் ஆத்மார்த்தமான தோழமையை கொடுக்கிற சிநேகிதர்ங்கிற அளவிலே எனக்கு இவரைப் பிடிச்சிருக்கு! ஐ ரெஸ்பெக்ட் ஹிம் ஆல்ஸோ! அவருக்குத் தேவையான எல்லாத்…தையும் ஒரு மனைவி, கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் எல்லாத்தையும் – ஒரு குறையும் வைக்காம், ஒரு ‘டியூடிஃபுல் வைஃபா’ தான் செஞ்சிண்டு தான் இருக்கேன். முடுக்கிளிட்ட இயந்திரமா நான் செய்யறதை இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலே ஒரு ‘ரோபோ’ கூடச் செஞ்சு முடிச்சுடுமே! அதுக்குன்னு ஒரு பெண்டாட்டி வேணுமா என்ன?… இன்னிக்குத் தேதி வரைக்கும் அவருக்குத் துரோகம் செய்யற மாதிரி களங்கமான நினைப்பு எதுவும் என் மனசோட மூலையிலே கூடத் தலை காட்டினதில்லை!… ஆனால்… அது போறுமா? புருஷனுக்குத் துரோகம் பண்ணாம இருக்கிறது வேறே..அடி மன ஆழத்திலேயிருந்து பூரிச்சிண்டு வர அன்போட அவனை நேசிக்கிறது வேறே… இல்லையா?

ஒவ்வொருத்தி புருஷனைப் பார்க்கிற பார்வையிலே மனசு அப்படியே பொங்கிக் கண்ணிலே வழியறதே…! எனக்கு மட்டும் அப்படி ஒண்ணும் ஏன் நேரமாட்டேங்கிறது? ஜீவாத்மா பரமாத்மாவோட கலக்கிற மாதிரி உடலும் உயிரும் உருகிக் கரைஞ்சு அவர் வேறே நான் வேறேங்கிற பேதங்கள் மறைஞ்சு ஒண்ணாய்க் கலக்கிற பேரின்ப நிலை, ஏன்.., எனக்கு மட்டும் சாத்தியப்படலை?

ஒருவேளை நான் நிறையப் புஸ்தகங்களைப் படிச்சுக் காதலைப் பத்தின என்னோட கற்பனைகளை வரம்புக்கு மீறி வளர்த்துண்டது இதுக்குக் காரணமாய் இருக்கலாமோ? கல்யாணத்துக்கு முன்னால் வரைக்கும் காதல் வயப்படற வாய்ப்பு எனக்குக் கிடைக்கவேயில்லை! சரி.. நம்ம நாட்டிலே உள்ள மெஜாரிட்டிப் பெண்களைப் போலக் கல்யாணத்துக்கு அப்புறம் கணவனைக் காதலிச்சுத்தானே ஆகணும்னு மனசைச் சமாதானப்படுத்திண்டேன்! அது கூட எவ்வளவு கஷ்டம்னு இப்பன்னா தெரியறது?

ஏன் கல்யாணத்தன்னிக்கு வந்திருந்த என் ஃப்ரண்ட்ஸ் கூட ‘உன் அழகுக்கும், உயரத்துக்கும் குணத்துக்கும் பொருத்தமானவராய்க் கிடைச்சிருக்காரடி பூமா’னு சொன்னது இப்பக்கூட என் காதிலே ஒலிச்சிண்டிருக்கு.. அவர் எனக்குப் பொருத்தமாய் இருக்கலாம். என்னாலே அவர் மனசுக்குப் பொருத்தமானவளாய் இருக்க முடியலையே?

அம்மா உள்ளே யிருந்து கூப்பிடறா.

“இதோ பாரு பூமா! உன்னைக் கொண்டு வந்து விடச் சொல்லி மாப்பிள்ளை கிட்டே யிருந்து அப்பாவுக்கு இன்னிக்கு லெட்டர் வந்திருக்கு. நாளைக்கு நல்ல நாளாயிருக்கு. கிளம்பறயா?”

மகிழ்ச்சி, துக்கம் எதையும் காட்டாமே தலையசைக்கிறேன். அக்காவுக்குப் பத்திண்டு வரது.

“எப்படி மண்ணாங்கட்டி யாட்டம் நிக்கறா பாரும்மா! ஒண்ணு அவர் கிட்டே போற சந்தோஷத்தைக் காட்டணும்… இல்லேனா நம்பளை விட்டுப் புறப்பட வேண்டியிருக்கேன்னு வருத்தமாவது படணும்! இப்படி ஜடம் மாதிரி….”

அம்மா இடைமறிக்கிறள்.

‘அவ குணம் தமக்குத் தெரிஞ்சதுதானேடி! பூமா நீ போய் சாமானை யெல்லாம் தயாராய் எடுத்து வச்சுக்கோ! நான் போய் பால்காரன் கிட்ட கொஞ்சம் அதிகப்படி பால் கேட்டு வாங்கித் திரட்டுப்பால் கிளறித் தரேன். அவருக்கு எடுத்துண்டு போ!”


ஸ்டேஷன்லே ட்ரெயின் வத்து நிக்கறதுக்குள்ளே பெட்டி பெட்டியாய்த் தேடிண்டு அவர் ஓடி வரார்! அந்தக் காட்சியைப் பார்த்து மனசு சிலிர்த்துப் போகிறது. இந்த மாதிரி அவரைப் பார்க்கணும், பேசணும்னு என்னோட மனசும் துடிக்காதான்னு ஏக்கமாய்க்கூட இருக்கு!

வீட்டிலே கொண்டு வந்து விட்டப்புறம், கொஞ்ச நாழிலே அப்பா கிளம்பிப் போயிடறார்.

”பூமா! நீ இல்லாம இந்த வீடே வெறிச் சோடிப் போயிடுத்து, எனக்கு ஆபிஸ்லே யிருந்து வீட்டுக்கு வரவே பிடிக்கல்லை!”

…இன்னும் …இன்னும் இவர் பேசிண்டே போறார். நல்லவேளை… நடுவிலே நான் பேச இடைவெளி விடலை! அப்படிவிட்டா ‘ஹௌ டு ஃபில் அப் தி கேப்’ங்கிற யோசனையிலே மூழ்கியிருக்கேன். நான் இல்லாத போது அவர் எங்கே போனார்… எப்படி சாப்பிட்டார்னுகூட ‘ஸ்பாண்டேனியசா’க் கேக்கத் தெரியலை! தெரியலைங்கிறதை விட தோணலைங்கிறது ரொம்பப் பொருத்தமா யிருக்கும்.

“ரெண்டு நாள் காய்ச்சல் கூட வந்தது பூமா…! அடுத்தாத்து மாமிதான் பால் காய்ச்சி வச்சுக் கஞ்சி போட்டுக் கொடுத்தா”

“அப்படியா”ன்னு வாய் தொறக்கிறேன்.

இவருக்கு ‘டைஃபாய்ட்’ வந்த உடம்பு! டைஃபாய்ட் சமயத்திலே நான்தான் தனியாளாய் இவர் பக்கத்திலே இருந்து, இவருக்கு வேண்டியதை யெல்லாம் கவனிச்சுக் கண் முழிச்சுப் பார்த்திண்டேன். அதுகூட, ஒரு நர்ஸ் பேஷண்டைக் கவனிக்கிற மாதிரி தான், அப்பா, லேசான மழையிலே நனைஞ்சிட்டு வந்தால்கூட அம்மா பதறிப் போய்க் காய்ஞ்ச துண்டாலே தலையைத் துவட்டி விட்டு, இரண்டு தரம் அப்பா கூடுதலா இருமினால் சதையாடிப் போவாளே… அந்த மாதிரியோ… இல்லேன்னா அத்திம்பேருக்கு மஞ்சள் காமாலை வந்தப்ப திருப்பதிக்கு நேர்த்துண்டு வேண்டுதலை நிறைவேத்தற வரைக்கும் ஒருவேளை உபவாசம் இருந்தாளே அக்கா, அந்த மாதிரியோ ஒரு நெஞ்சு பொறுக்காத ஈடுபாடோ இல்லை! எந்த மனுவு உயிர் கஷ்டப்பட்டாலும் மனசு இரங்காதா? அந்த மாதிரிதான் இவர் ஜுரத்திலே கிடக்கும் போதும் எனக்குத் தோணித்தே தவிர… என்னுடைய சொந்தம், எனக்குரிய உரிமை இப்படிக் கிடப்பாக் கிடக்கேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கலியே? ‘

“உனக்கு அங்கே நன்னாப் பொழுது போயிருக்குமே பூமா?”

புன்சிரிப்போடு திரட்டுப்பாலை எடுத்து நீட்டறேன்.

நல்ல வேளை… ஆரம்பத்திலேயிருந்தே நான் இப்படித்தான், நாலு வார்த்தை பேசினா ஒரு வார்த்தையிலே பதில் சொல்ற ‘டைப்’புன்னு அவர் புஞ்சுண்டிருந்தார். இல்லேன்னா தொட்டத்துக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிக்கிறவாளுக்கு என் உம்மணா மூஞ்சித்தனம் மகா தப்பான்னா படும்.

ஆனாலும் எத்தனை நாளைக்குத்தான் இந்த அசமஞ்சப் போக்கை அவராலே பொறுத்துக்க முடியும்? வெறும் சுவரிலே எத்தனை தடவைதான் முட்டி மோதறது? நிழல் யுத்தத்தை எவ்வளவு நேரத்துக்கு மேலே தான் தொடர முடியும்?

வீடே மந்த கதியிலே கடனுக்கு நகர்ந்திண்டிருந்தாலும் இதுக்கெல்லாம் நீதாண்டி காரணம்னு குத்தம் சாட்டற மாதிரி ஒரு வார்த்தை, ஒரு பார்வை… ம்ஹம்… எதுவுமே இல்லை! இந்த மௌனமே என்னைச் சித்திரவதை பண்ணி ஆயுள் தண்டனைக்கு ஆளாக்குகிறது.

ஒரு நாள்… ஒரே ஒரு நாள் என்னைக் கேக்கறார். அதுகூட ஆத்திரத்தோட சந்தேகப்பட்டுண்டோ, குத்தம் கண்டுபிடிக் கிற தொனியிலோ இல்லாம, வெறுப் போட சாயல்கூட இல்வாத தினுசிலே இதை இலகிட்ட கேக்க வேண்டி வந்துடுத்தேங்கிற கூச்சத்தோட, தயக்கத்தோட கோவிச்சிண்டிருக்கிற குழந்தையை நைச்சியம் பண்ற குரலிலே மெள்ளக் கேக்கிறார்.

“பூமா…? நான் கேக்கிறேன்னு தப்பா நினைக்காதே. நான் உன் மேலே சந்தேகப் படறதாகவும் இதை எடுத்துக்காதே!.. தெரிஞ்சோ தெரியாமலோ உன் வாழ்க்கையைப் பாழடிச்சுட்டோமோங்கிற வருத்தத்திலே தான் கேட்கிறேன், நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டுண்டிருந்தியா?”

எழுத்தெழுந்தா எண்ணி, வார்த்தை, வார்த்தையா அவர் உச்சரிச்ச பாணி, என் செவிட்டிலே ஓங்கி அறைஞ்சுது! சாட்டையாலே அடி வாங்கிருப்பலே துடிதுடிச்சுப் போறேன். ஆனலும். என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியை எப்படிக் கேட்கப் போச்சுன்னு சொல்ல எனக்கு என்ன அருகதை இருக்கு? உயிர்த் துடிப்பான ஒருத்தருடைய வாழ்க்கையைச் சிதிலமாக்கிட்டு, உல்லாசமான அவருடைய சில தருணங்களை கூட என்னோட உற்சாகக் குறைவினாவே ஒண்ணுமில்லாம் ஆக்கின எனக்கு அவரை எதிர்த்துக் கேட்க என்ன யோக்கியதை இருக்கு? இந்த இடத்திலே வேறே ஒரு ஆள் இருந்திருந்தா, இங்கே நடக்கிறதே வேறேயானனா இருக்கும்? மனசின் இறுக்கம் தாள முடியாமே “நோ! நோ”ன்னு கத்தறேன்.

“ஸாரி பூமா! இத்தனை நாள் பழகி உன்னை நான் புரிஞ்சுண்டப்பறமும் உன்னைப் பார்த்து அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாதுதான். ஆனால்… உன்னோட அவஸ்தையை என்னால தாங்கிக்க முடியலை! உன்னைப் பெண் பார்க்க நான் வந்தபோது உன்கிட்டே இருந்த ‘களை’ என்கிட்டே நீ வந்தப்புறம் அடியோட போயிடுத்து, என்னோடு சேர்த்து வாழற வாழ்க்கையிலே ரசனையே காட்டாம ஓப்புக்கு நீ வாழ்ந்திண்டு இருக்கிறதா ஒரு ஃபிலிங்! உன்னோட சந்தோஷம், நிம்மதி எல்லாத்தையும் நான் ஒரே நாளில் குரூரமா உன்கிட்ட இருந்து பிடுங்கிண்டுட்ட மாதிரி இருக்கு! ஐ ஃபீல் எக்ஸ்ட்ரீம்லி கில்டி!.. உள்னோட போக்குக்கு நான் எந்த வகையிலேயாவது காரணமாயிருந்தா சொல்லு. ஐ வில் கரெக்ட் மைசெல்ஃப்.”

என் மனசு பொங்கி வழியறது. இப்பவும் காதலினலே இல்லே! இப்படிப்பட்ட ஒரு மனைவிகிட்டே அவர் காட்டற கரிசனையினால் ஏற்பட்ட நன்றி உணர்வாலே! கண் ரெண்டும் நிரம்பி ஜலம் தளும்ப, அவர் காலிலே விழுந்து அழறேன். அவர், என்னைத் தூக்கி யெடுக்கிறார். என் கண்ணைத் துடைச்சு விட்டு, மெள்ளத் தோளிலே சாய்ச்சிண்டு காதுக்குள்ளே முணு முணுக்கிறர்.

“அடுத்த ஜன்மத்திலேயாவது மனசுக்குப் புடிச்சவனாய்ப் பண்ணிண்டு நீ ஹாப்பியா இருக்கணும் பூமா.”

நான் மனசுக்குள் அரற்றலாய்ப் புலம்பறது அவருக்குக் கேக்கலை!

“மாட்டேன்… மாட்டவே மாட்டேன்… என் ஐயாவே! அடுத்த பிறவி….அதுக்கு அடுத்த பிறவி எதுவானாலும் நீயேதான் எனக்குப் புருஷனாய் வரணும், நான் உன் மனசுக்கு ஏத்தவளாய்… உன் மேலே நெஞ்சு நிறையக் காதலையும் கண் நெறைய ஆசையையும் தேக்கி வச்சிருக்கிற அன்பு மனைவியாய் வாய்க்கணும்! இந்த ஜன்மத்திலே நீ இழந்ததை யெல்லாம் உனக்கு வாரி கொடுக்கிற வள்ளவா..உனக்கு ஏற்படுத்தின நஷ்டங்களை யெல்லாம் வட்டியும், முதலுமா நான் அடுத்த பிறவியிலே ஈடு செய்யணும், அதுக்காகவாவது புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி வழுவாதிருக்க வரம் தரவேணும்….”

– மங்கையர் மலர், 1982-12-01.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *