இன்னா செய்யாமை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,712
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
எக்காரணம் பற்றியும் எந்த உயிருக்கும் துன்பம் செய்யாதிருத்தல்
கடைச்சங்கத்தில் வீற்றிருந்த புலவர்களுள் ஒருவர் சீத்தலைச் சாத்தனார். அக்காலத்தில் யார் புதிதாக நூல் செய்தாலும் அது சங்கத்தாரால் ஒத்துக்கொள்ளப்படவேண்டும் என்ற ஒரு ஒழுங்கு இருந்து வந்தது. பலர் பல நூல் செய்து ”அவை களுக்கு மதிப்புரை தரவேண்டும்” என்று சாத்த னாரிடம் தாம் செய்த நூல்களைப் படிப்பார்கள். புலவர், அவற்றில் மிகுதியாகக் குற்றம் இருப்பவற்றை அறிந்து, பிறர் நாம் செய்த நூலில் குற்றங்கள் உள்ளன என்றால் நம்மனம் நமக்கு எவ்வளவு துன்பம் தருமோ? அதுபோல இவர்கள் செய்த நூலில் உள்ள தாகிய குற்றங்களைச் சொல்லி இவர்கள் மனதைப்புண்படுத்துவது ஏனோ”, என்று தம் கையில் உள்ள எழுத்தாணியால் தம் தலையில் குத்திக்கொள்வார். இதைக்கண்ட அவர்களும், மேலும், அவரைத் தொந்தரவு செய்யாது விடை பெற்றுச் செல்வார்கள். வள்ளுவரும் வருத்தம் தன்னை வருத்துவது போலவே பிறரையும் வருத்தும் ஆதலால் எவர்க்கும் தீமை புரிதல் கூடாது என்று கூறியுள்ளார்.
தன்னுயிர்க்கு இன்னாமைதானறிவான்;என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.?
தன்னுயிர்க்கு = (பிறர் செய்த துன்பங்கள்) தன் உயிருக்கு
இன்னாமை = துன்பந்தருதலை
அறிவான் = (அனுபவித்து) அறிகின்றவன்
மன்னுயிர்க்கு = நிலையுள்ள பிற உயிர்களுக்கு
தான் இன்னா செயல் = தான் துன்பம் செய்தல்
என் = என்ன காரணம்
கருத்து: பிற உயிரை வருத்தும்படியான துன்பம் செய்தல் கூடாது.
கேள்வி: துன்பத்தால் வருந்தியவர் எவர்க்கு எதைச் செய்தல் கூடாது?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.