இந்த பிரபஞ்சத்தின் நாயகன்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2026
பார்வையிட்டோர்: 142 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

அங்கே எத்தனை முறை
வீடு முழுவதும் தேடியும் 
அந்த ஜீவன் 
அகப்படவில்லை…

எங்கே சென்று இருக்கும் 
என்று குழம்பிப் போய் 
ஒரு பைத்தியகாரியை போல 
தேடி அலைகிறேன் 

அது ஒரு குவளை பால் 
சாப்பிடும் இந்த நேரத்தில்…
அது அமைதியாக 
ஒரு கோரை பாயை போல 
வாலை சுருட்டி தலையை 
தன் உடலுக்குள் 
புதைத்துக் கொண்டு 
படுத்திருக்கும் 

மேசைக்கடியில் 
அந்த கட்டிலுக்கடியில் 
என்று வீடு முழுவதும் 
அலசி ஆராய்ந்து விட்டு 
அந்த சோஃபாவில் 
சோர்ந்து வீழ்கிறேன்…

மீண்டும் 
நான் மெல்ல எழுந்து 
தேடுதல் வேட்டையை 
வெளியே தொடங்க 
கதவை திறக்கும் போது 
கடற்கரையில் அமைதியாக 
அந்த ஜீவன் அலையை 
ரசித்து தன்னை மறந்து 
அசைவற்று அமர்ந்து இருக்கிறது…

இங்கே அந்த சத்தமிடும் அலையை 
நான் பார்த்து பல நாட்கள் ஆவதை 
உணர்ந்து 
அதன் அருகில் அமர்ந்து கொண்டேன்..

அது நான் வந்த சுவடை கூட 
அறிய விருப்பம் இல்லாமல் 
இமைகள் இமைப்பதை மறந்து 
லயித்து கிடக்கிறது 
அந்த அலையின் ஓட்டத்தில்…

அது இருந்த அந்த நிலையில் 
இதுநாள் வரை 
என்னோடு பின்னி பிணைந்து 
பயணித்து வந்த 
என் கல்வி நான் வகித்து வந்த 
பதவி செறுக்கு எல்லாம் 
கொஞ்சம் கொஞ்சமாக 
சூரியனை கண்ட பனி போல 
உருகி வடிந்து 
அந்த சமுத்திரத்தில் 
மெல்ல மெல்ல கரைகிறது…

இங்கே இந்த நொடியில் 
பிரபஞ்சத்தின் நாயகனாக 
அந்த பூனையை 
பிரபஞ்சம் அறிவித்ததை 
நான் கண்களில் வழியும் 
கண்ணீரை துடைக்க 
மறந்து அந்த ஜீவனை 
ஓடோடி சென்று 
என்னோடு 
அணைத்துக் கொள்கிறேன்…

அது ஏன் என்று மட்டும் 
கேட்காதீர்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *