இந்த உருவமே போதும்




காசி நகரத்தில் காலசர்மன் என்ற அந்தணன் இருந்தான். அவனுடைய தோற்றம் சற்று அருவருப்பாக இருந்தது. அதற்காக அவன் வருந்தினான்.
தனக்கு அழகான தோற்றமும், செல்வமும் கிடைக்க வேண்டும் என்று நினைத்து, காட்டுக்குச் சென்று கடுமையான தவத்தை மேற்கொண்டான்.
அதை அறிந்த இந்திரன், தன்னை நோய் பிடித்த, அருவருக்கத்தக்க ஒரு நரியின் உருவத்தோடு காலசர்மன் முன்னே வந்து நின்றாள்.
அந்த நரியின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியதையும் அதன் உடலின் மீது ஈக்கள் மொய்ப்பதையும் கண்ட காலசர்மன் அருவருப்படைந்து, “ஐயையோ ! இத்தகைய கோரமான உருவம் படைத்த உயிர்களும் இந்த உலகில் இருக்கின்றனவே! மறுபிறப்பில் செய்த பாவத்தின் பிரதிபலனாகத்தான் இந்தப் பிறவியில் இப்படிப்பட்ட தோற்றத்தைப் பெற்றிருக்கிறது. போலும்! ஆகையால், இந்த விகாரமான உருவத்தைக் காணும் போது, நான் ஏதோ சிறிது அளவே பாவம் செய்திருப்பேன் போலும்! கடவுள் இந்த நரியைப் போல் மோசமான அருவருக்கக் கூடியதாயும் நோய் உடையதாகவும் ஆக்காமல், மனித உருவத்தில் என்னை பிறக்கச் செய்தான் போலும் !” என்று நினைத்துக் கொண்டே தவத்தை கைவிட்டு, காட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பிச் சென்றான் காலசர்மன்.
இருப்பதைக் கொண்டு மனநிறைவோடு வாழ்வதே சிறப்பாகும்.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.