இடைவெளி





(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பூரணை நிலவின் பட்டொளியில் வானமங்கை பனிநீர்க் குளிப்பில் மலர்ந்து நிற்கின்றாள். மனக்கிறக்கத்தை எழுப்பும் அச்சுகுந்தலயிப்பில் என்னை மறந்து எல்லையற்ற விண்வெளியில், எண்ணப் பெருவெளியில் எங்கோ மிதக்கின்றேன். உயர … உயர—!
எவ்வளவு வேறுபாடு ? சாளரத்திற்கு இப்பால் வேதனையின் குரல்களுக்கு உருவமான உயிர்கள் துடிக்கும் அவலக்காட்சி. அப்பால் பிரபஞ்சம் மறந்த ஒரே இன்ப மோனலயிப்பின் அழைப்பு !
இறைவனைத் தரிசிப்பதற்கு நுண்ணுணர்வு வேண்டும்; அந்த நுண்ணுணர்வுப் ‘பக்குவம்’ இருப்பவன், இறைவனின் படைப்பு வினோதங்களுக்கூடாக நினைத்தவுடனேயே அவனைத் தரிசனைசெய்ய முடிவதில் என்ன வியப்பு ? நினைக்கும் நினைவுக்கும் அப்பாலாய கற்பனைகளில் நான் மிதக்கின்றேனா….?
மின் குழல் விளக்குகளின் ஒளிவெள்ளத்தில், மருத்துவமனையின் இயற்கைச் சுபாவங்களை விடுகின்றது, குதியுயர்ந்த சப்பாத்துக்களின் ஒலி கிளப்பி நடமாடும் மெல்லியராம் தாதிகள், அவர்கள் பின்னாக வேகநடை போடும் ஆண் தாதிகள்; நோயாளர்களின் உறவினர்கள், மருந்துப்புட்டிகள், பிறசாதனங்கள். ‘கசமுச’ வென்று கீழ்க்குரலிற் பிறக்கும் பேச்சுக்கள் முற்றிலும் கடந்த பத்து நாட்களிலும் ‘அனுபவித்துக்’ கசந்து போன காட்சிகள்! மனதைக் குமட்டியது. மீண்டும் பார்வை, வான்வெளிக்குத் தாவுகிறது. நானும் என் சிந்தனையும் …! சிந்தனையின் சிந்தனையுமாய்… தத்துவ விசாரமென்பதும் இதுவோ.
எனக்குக் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் கிடைத்தபோது பொறாமை கலந்த மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் என் நண்பர்கள். அதிகம் கவலைப்பட்டவன் நான். என்காலில் நான் நிற்கத்தொடங்குமுன்னமே என்னுடைய ஜனிப்புக்காளாயவர்கள் எமன் காலில் நின்றுவிட்டார்கள் என்பது பழையகதை. தனி மனிதனாக வாழ்வதில் பதினைந்து வருடங்கள் பழக்கப்பட்டவன், திடீரென்று தன் தனிமையின் கொடுமையை அதீதமாக உணரத்தொடங்கினால்…! கொழும்பிலே தனிமை என்று சொல்வதற்கு எதுவுமில்லை. அலுவலக நேரம் போனால் பொழுதுபோக்குகளுக்கு என்ன குறைவு ? உல்லாசபுரியின் விசித்திரங்களைப் பதினைந்து ஆண்டுகளிலும் பல்வேறு கோணங்களிலுமிருந்து சுவைத்தவனுக்கு என்ன கஷ்டம்? குடும்பஸ்தர்கள் இங்குவரத் துடிக்கப் போயும் போயும் என்னை அனுப்பிவிட்ட அரசாங்கத்தின் கருணையே கருணை!
யாழ்ப்பாணத்தில் ஒருவனுக்குச் சொந்தமென்று சொல்ல ஒருவர்கூடத் தேவையில்லை. உத்தியோகம் பார்க்கிற பையனுக்கு, மாதச்சம்பளம் வாங்குபவனுக்குச் சொந்தமென்று சொல்ல எத்தனையோ பேர்வந்து சேர்வார்கள், எந்தக் குக்கிராமத்திலும் ! விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணம் வந்த எனக்குப் பின்னர் ‘நாகரிகமாகப்’ பொழுதுபோக்குவது சற்றுச் சிரமமாகத்தானிருந்தது. இந்த இக்கட்டிற்றான் ‘தனக்குள் தன்னையறியும்’ தத்துவத்தில் சிந்தனாயாத்திரை செய்யப் பழக்கம் வந்தது! சும்மாவிருக்கும் திறனரிது என்பதனை வெல்ல முயற்சித்தேன் என்றும் சொல்லலாம்!
(2)
மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் மாலை ஐந்துமணிக்குப் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. இரையுண்டு உதரம்விரிந்து கிடக்கும் மலைப்பாம்பு போல ஆண்டுதோறும் பட்டினப்பக்கம் முழுமையும் தன்னுள் அடக்கி விசுவரூபமெடுக்கும் யாழ்ப்பாணம் அரசினர் மருத்துவமனை முன்றலில் நிற்கின்றேன். எனது வாழ்நாளிலேயே ஒருவரை மருத்துவமனை சென்று பார்ப்பதற்கு வந்துள்ள தருணத்திற்காக !
‘பார்வையாளர்கள்’ தேங்கி நிற்கின்றனர். ஒவ்வொருவர் முகமும் கேள்விக்குறிகளின் சந்திப்புகளா? ‘அன்னவிசாரம் அதுவே விசாரம்’ என்றுள்ள பேர்வழிகள் அரசியல், இலக்கியம் பண்ண வெளிப்படுவதற்காக வெட்கப்படநேரும் சிறிது நேரமாவது சுயசிந்தனையுடன் இங்கு நிற்கநேரின் !
மணி ஒலித்ததோ இல்லையோ, கூட்டம் ‘புரட்சிப் படையை’ப்போல வார்டுகளுக்குப் பாய்கிறது. நானும் செல்கிறேன். அலுவலகத்தில் எனது மேலதிகாரி இங்கே நோயாளி! சம்பிரதாயத்துக்காகவேனும் பார்த்துச் சேமம் விசாரிக்க வேண்டாமா? பயங்கர மௌனம் நிலவுகின்றது, பிறப்பிலும் மௌனம்; இறப்பிலும் மௌம்; இடையிலே தானே ஏகப்பட்ட கூச்சல்கள் !
உணர்வற்ற நிலையில் என் மேலதிகாரி உயிருக்கு ஊசலாடுகிறார். பக்கத்தில் குழுமியுள்ள உறவினர்கள் கண்ணீரால் கதை சொல்கின்றனரா? அவர்கள் மத்தியில் கண்ணீர்க் குளத்தில் ஒரு கமல மலர். நர்ஸ் என்ற பெயரில் மலர்ந்து நிற்கிறது. பார்வையிலே அருளைப் பெய்யும் ‘பாவத்தை’ அவள் எங்குக் கற்றாளோ !
பார்க்கின்றோம்! பார்வையிலே வாழ்வைப் படிக்கின்றோம். அவள் பார்வை அழியாத சித்திரமா? வன்னெஞ்சிலும் அன்பை உணர்த்தும் தெய்வ நோக்கா ?
‘வருகின்றேன்’ அந்தச் சோகச் சூழ்நிலையில் என் வார்த்தைக்குப் பதிலே பிறக்காது, எனத்தெரிந்தும் சொல்லவே செய்தேன். மெல்ல நகர்கின்றேன். அவள் பார்வைமட்டும் என்னில் படருகின்றதா…. ? பார்வை; பார்வை இதயம் தனக்குள் என்னவோ சொல்லிக்கொள்கிறது. அந்தப் பார்வை….!
(3)
இப்பொழுதும் நினைத்துப்பார்க்கிறேன் பதினைந்து வருடகாலம் நோய்நொடி என்பதே இல்லாமலிருந்த நான் எப்படிப் படுத்த படுக்கையாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன் ? ஆறுமுகம் சொன்னது நினைவுக்கு வருகிறது. “என்ன மனிதனப்பா நீ! உடம்பு சுகமில்லாவிட்டால் டாக்டரிடம் காட்டுவது தானே! பேசாமல் இருந்து மூர்ச்சைபோட்டு விழுவதா….?”
ஆம்; அலுவலகத்தில் மூர்ச்சைபோட்டு விழுந்துவிட்டேனாம். நண்பர்கள் பதறியடித்துக்கொண்டு இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டிருக்கிறார்கள்.
இந்தப் பதினைந்து நாட்களிலும்..! அடுத்து ஐந்து நாட்களில் வெளியேறிவிடுவேன். எல்லாமாக இந்த இருபது நாட்களில் நடந்து முடிந்தவை – நடக்க இருப்பபவை..!
குடலில் ஒரு சாதாரண வலி இருந்து வந்தது எனக்குத் தெரியும். அதனால் சில தடவைகள் உணவையே நிறுத்திவிடுவதுமுண்டு. எனினும் அஃது இவ்வளவுக்கு என்னைப் படுத்திவிடுமென்று எண்ணியதில்லை!
பிரக்ஞை தெளிந்தவினாடியில அந்தப் பார்வை… தரிசனம் தந்தபோது என்னில் மலர்ந்த புன்சிரிப்புத் தலைசுற்றவா செய்தது! பின்னர் என்ன நடந்தது?
அறுவைச் சிகிச்சைகூடச் செய்தார்களாமே. ஐயோ….. எவ்வளவு பயங்கரம்? உணர்வும், உயிரும் அற்ற நிலையில் நான் நானாயின்றிக் கிடந்தபோது தேவைப்பட்ட இரத்தத்திற்கு, இரத்தவங்கி நண்பர்கள் உதவினார்களா ? ‘அவள் தெய்வப் பெண்ணப்பா!’ ஆறுமுகமுதிர்த்த அந்த வார்த்தைகள் நெஞ்சில் நந்தாவிளக்காக எரிகின்றது.
இரத்தம்-அது இல்லாவிட்டால் ஆள்தப்பாது என்றுவிட்டார் டாக்டர். துடியாய்த்துடித்தார்கள் நண்பர்கள். ஒல்லியான, உரமற்ற இருவர்போக ஆறுமுகமும் இன்னொருவனும் இரத்ததானத்திற்கு முன்வந்தார்கள். என்ன பழியோ….! அவர்கள் இரத்தம் எனக்குச் சரிப்படவேயில்லை. இரத்தத்தை ஏற்றிக் கொல்வதைவிட இரத்தமே இல்லாமற் சாவது நல்லது என்ற நிலையில் அவர்களிருந்தபோது….
‘அந்தப் பார்வை…அதற்குரியவள் முன்வந்தாளாம். இரத்தம் பரிசோதனை செய்தபோது அவளுக்கும் எனக்கும் என்ன பொருத்தமோ அவளிரத்தத்தால் நான் வாழக் கடவுள் கடைக்கணித்துவிட்டான்.
அவள் – அந்தப் பார்வை – என் வாழ்வு என்றால் அவள் எனக்கு யாரோ…!
சத்திரசிகிச்சை முடிந்தபின்னர் ஒரு நாள் உணர்வும் உயிருமுள்ளவனாகக் கட்டிலிற் கிடந்தபோது அவள் என்னை நோக்கி வருகின்றாள்.
அந்தப் பார்வை….! நான் புன்னகைக்கின்றேன். அவள் சிரியாமலா இருப்பாள் ? ஒரே இரத்தம் இருவர் உடலில் ஓடும்போது உறவு வேறு சொல்ல வேண்டுமா?
பகலும், இரவும் அவள் பார்வைக்காக ஏங்க நேரமில்லை. சதா என் பக்கலில் அவள் இருக்க எனக்கு யார்…. ? மீண்டும் அதே கேள்விக் கொக்கி!
நளினி – அவள் ஒரு நர்ஸ்! அவள் கவனிக்கும் எத்தனையோ நோயாளிகளில் நானும் ஒருவன். ஆனால்…. ஆனால்….?
‘உத்தியோக மிடுக்கு’ என்பதற்குப் பகைப்புலம் ஆடம்பரமா? நானும் ‘பேயிங்வார்டு’க்குப் படுக்கை மாற்றிக்கொண்டேன். அதனால் சிலபல வசதிகள் எனக்கு.
அங்கும்..அவள் வந்தாள்!
உருவின் நிழலாய் உயிரின் கருவாய் என்னைச் சுற்றிவரும் அந்தப் பார்வைக்கு என்ன பெயரிடுவதோ!
மெல்ல மெல்ல பேசிப்பழகி மெல்லவே பேசவேண்டிய விஷயங்களையும் பேசிக் கொள்ளலானோம்.
நிலவுமிழும் ஒளியின் வெள்ளத்தில் திறந்துகிடக்கும் சாளரத்துக்கூடாகப் பரந்த வான்வெளியைப் பார்த்துக்கொண்டிருந்த என்னை அவள் பட்டுவிரல்கள் ஸ்பரிசிக்கின்றன.
‘என்னைப்பாருங்கள்!’ உயிரின் ஒலி. அவள் குரலா? திரும்புகிறேன். என் கண்களும் அவள் கண்களும்- கதகதப்பில்-அப்படியே அவள் மலர்முகத்தை என் முகத்துக்கு நேராகப் பிடித்துக் கண்ணுக்குள் கண்பார்க்கும் வெறிப்பொழுதில்… ஆண்மையின் ஸ்பரிச சுகத்தில் பெண்மையின் ‘தொய்வு’ தோன்ற அவள் முனகும் குரல் தேவகானமா….?
நுரைபுரள் மதுவில் மூழ்கி எழுந்தேனா,… காவியத்தின் மது அருந்திக் களிக்கின்றேனா?
‘நளினி, என் அன்பே …’
‘என் ராஜா … ‘
மானிதம் பேசும் மொழிகளா இவை ? இல்லை, இல்லை. கந்தர்வலோகக் களிப்பில் பிறக்கும் கவிதைகள்.
அந்தப்பார்வை-அமரகாவியம். காலமெலாம் படிக்கவேண்டிய இன்பக் கவிச்சரங்கள் …!
(4)
அவள் விம்முகின்றாள்! ஆனந்தமா? பார்வையில் கேள்வியைப் படைக்கின்றேன். ‘நளினி ஐந்துநாட்களில் நான் வெளியுலகுக்குப் போய்விடுவேன். உன்னைப் பிரிவதை எண்ணினால்…?’
இல்லை; பிரியவே வேண்டாம் நளினி. என்னை மணப்பதற்குமட்டும் நீ இசைவு தந்தாயானால் …!! உணர்ச்சி பேசுகிறது!
‘மன்னித்துவிடுங்கள் ராஜா; உங்களை மணப்பதற்கு ஒருபோதுமே இசையேன்’ வெகு நிதானமாக அவள் பேசுகிறாள்.
‘என் உடல், உள்ளம் எல்லாமே பற்றியெரிகின்றது.’ தென்றல் தீயாகினால்…?
அவள் விசித்து விசித்து விம்முகின்றாள். அங்கே உண்மை பிரசவிக்கின்றது.
‘நளினி நீ மாற்றுக்குறைந்த தங்கமா ? புகைபடிந்த ஓவியமா ? காலம் மறையும்வரை மறையாத களங்கத்தின் புகலிடமா?
ஐயோ…அந்தப் பார்வை? பாவி, உடலுக்கு வைத்தியஞ்செய்யத் தெரிந்தவன் அவள் உடலையும் உள்ளத்தையும் உதவாத கோறையாக்கிவிட்டானே!
‘ராஜா, என்னை மறந்துவிடுங்கள், சந்தர்ப்பம் என் வாழ்வை விழுங்கிவிட்டது. உங்களுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் என்னிரத்தத்திற்கு என்னிரத்தமே துரோகஞ்செய்ய வேண்டாம்!
அந்தப் பார்வை…மெல்ல விரிந்து கூம்புகின்றது. ‘டக் டக்’ என்ற பாத அணிகளின் ஒலி. அவள் நடந்து செல்கின்றாள். அந்த இடைவெளி…. மிக மிகப் பெரிதாகி, விண்முட்ட வளர்ந்து அவளை எங்கோ கொண்டு போய்விடுகின்றது.
என் கண்களின் நீர்த்திவலைகளில் உடல் நனைகின்றது. நிலவை மறைத்த மேகப் போர்வையிலிருந்து சிந்தும் நீர்த்துளிகளைத் தடுக்கச் சாளரத்தை இழுத்துவிட்டுப் படுத்துக்கொள்கிறேன். இடைவெளியின் அகண்டாகாரப் பரப்பில் மனச்சிட்டு தாறுமாறாகப் பாய்ந்து பறக்கத் தொடங்குகிறது!
– வீரகேசரி, 4-10-1964.
– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |