ஆற்றோரத்தில் ஒரு மாளிகை






(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

2.4.1981 முதல் 16.7.1981 வரை நாடகமாக ஓலியேறிய ஆற்றோரத்தில் ஒரு மாளிகை பல மாற்றங்களுடன் நூல் வடிவத்தில் தங்கள் கரத்தில் தவழ்கிறது. ஆவி உலகக் கதை நூல்கள் வரிசையில் என்னுடைய இந்த இரண்டாவது நூல் உங்களைக் கவரும் என நம்புகிறேன். – எம்.கே.நாராயணன்
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
30.10.1940 (புதன்கிழமை)
நள்ளிரவு. மழை பெய்துகொண்டிருந்தது. சுழல்காற்றுச் சுழன்று வீசிக்கொண்டிருந்தது.
சிறிய-ஆனால், அழகான தரைவீடு. அன்றைய கால கட்டத்தில் அது பங்களா எனக் கூறப்பட்டது. அந்தப் பங்களா அப்போது மரகதத்திற்கும் அவள் ஒரே மகன் மணிவண்ணனுக்கும் சிறைச்சாலையாக உள்ளத்து உணர்வுகளை அலைக்கழிக்கக்கூடிய சித்திரவதைக்கூடமாக இருந்தது.
கார் வந்து நின்றது. ஆறு வயது மணிவண்ணன் தன் தாயை அணைத்துக்கொண்டான். மரகதம், மணிவண்ணனைத் தூக்கிக்கொண்டாள்.
டிரைவருக்கு முன்னே தடுமாறியவண்ணம். அங்கப்பன் வந்தான். மது போதையில் அவன் கால்கள் தடுமாறின.
“நான் போயிட்டு வர்றேன் சார்” என்று கூறிய டிரைவர் சற்றுத் தயங்கி நின்றான். ஐயா, ஏதாவது கூறுவாரா” எனத் தயங்கி நின்றான். ‘ஐயா’ பேசாமல் இருந்ததால் டிரைவரும் “நாளைக்கு வர்றேன்” என்று கூறிவிட்டு வேகமாகச் சென்று காரை அந்த இடத்திலிருந்து ஓட்டிச் சென்றான்.
அங்கப்பன் வீட்டிற்குள் நுழைந்தான்.
ஒரு மூலையில் மரகதம் மணிவண்ணனைத் தன் மார்போடு அணைத்தவண்ணம் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான்.
மரகதம், அங்கப்பனை வெறித்து நோக்கினாள்.
“என்னடி, பார்க்கிறே?”
பதில் கூறாமல் மரகதம்…. அங்கப்பனைத் – தன் கணவனை – வெறித்து நோக்கியவண்ணம் இருந்தாள்.
“ஏய், உன்னைத்தாண்டி… தேவடியாளே…. உன்னைத்தாண்டி… கேட்கிறேன்… என்னடி பார்க்கிறே…?” அங்கப்பன் தொடரவில்லை.
படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த மரகதம். மணிவண்ணனைத் தன் இடுப்பில் இருந்து இறக்கிவிட்டாள்.
“என்ன சொன்னே…? என்னையா… தே**’னு சொன்னே…” என்று படிக்கட்டில் இருந்து கீழே இறங்கினாள்.
“எவ எவளோட எல்லாம் சுத்திட்டு வர்ற நீயா என்னைப்பார்த்து தே**”னு சொல்றே?”
அன்றுவரை அடியும் உதையும் வாங்கிக்கொண்டு பொறுமையின் சின்னமாக இருந்த மரகதம் பொங்கி எழுந்தாள்.
அங்கப்பன் அதை எதிர்பார்க்கவில்லை. தடுமாறினான்.
தடுமாறியவன் – நிமிர்ந்தான். அடுத்து அவன் என்ன செய்வான் என்பது மரகதத்திற்கு நன்கு தெரியும்.
அறைவான் – முடியைப்பிடித்துத் தள்ளுவான் – கீழே விழுபவளை எட்டி உதைப்பான்.
அவற்றையெல்லாம் பார்த்து மணிவண்ணன் கதறி அழுவான்.
மணிவண்ணன் சோபாவுக்கு அருகில் சென்று நின்று கொண்டான்.
அச்சத்தால் அந்த ஆறு வயதுச் சிறுவனின் உடல் நடுங்கியது. தாயையும் தந்தையையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“மரகதம்” என்று கத்தியவண்ணம் அங்கப்பன் மரகதத்தின் நீண்ட கூந்தலைப் பற்றி அவளைத் தரையில் தள்ள முயன்றான்.
அதே வேகத்தில் மரகதம் திரும்பினாள். தன் கரங்களால் அங்கப்பனின் முகத்தைப் பிறாண்டினாள். கூரிய நகங்கள் அங்கப்பன் முகத்தைக் கோடுகள் போலக் கீறின.
“ஆ” என்று கத்தியவன் மீண்டும் மரகதத்தை அறையக் கையை ஓங்கினான். அதே கணத்தில் மரகதம் அவனைப் பிடித்துத் தள்ளினாள்.
அங்கப்பன் பின்னுக்குச் சென்று நாற்காலியில் தடுக்கிப் பின்புறமாகத் தரையில் சாய்ந்தான்.
“இன்னைக்கு ஒரு முடிவோடதான் இருக்கேன். மிருகமான உன் கையில் அடி வாங்கிக்கிட்டு நானும் என் மகனும் இனி இங்க இருக்கப்போறதில்லை. மங்களங்கிற அந்தத் தே** சிறுக்கியோட நீ இங்கேயே இருக்கலாம். மணி, வாடா போகலாம்.” என்றாள்.
அங்கப்பன் எழுந்து உட்கார்ந்தான். “விண் விண்” என்று வலித்த தன் கன்னத்தைத் தடவினான். ரத்தம் வேகமாகக் கசிந்து கொண்டிருந்தது. மரகதத்தை அடித்து நொறுக்கவேண்டும் என்ற வெறி கிளம்பியது. ஆனால், பயந்து அழுது புலம்பும் மரகதத்திற்குப்பதில் முற்றும் மாறுபட்ட மரகதத்தை அவன் கண்டு கொண்டிருந்தான்.
‘இவளுக்கு எவ்வளவு ஆணவம்… எப்படி இந்தத் தைரியம் வந்தது’ என்று யோசித்தவனாக…
“போடி வெளியே… என்னைத் தள்ளிவிடுற அளவுக்குப் போயிட்ட நீ இங்க இருக்கக்கூடாது…” என்று கத்தினான்.
ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த பிரயாணப் பையைத் தூக்கித் தோளில் மாட்டியபடி அங்கப்பனைத் திரும்பிப் பார்த்தாள் மரகதம்.
“நீ சொல்லி நான் போகலை.. நான் முன்ன சொன்னதை இப்ப நீ திருப்பிச் சொல்றே. என்னையும், மணிவண்ணனையும் பொறுத்தவரையில நீ செத்துட்டே,” என்று கூறிய மரகதம் வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
கடும் மழை பெய்துகொண்டிருந்தது. வாயிற்படி அருகில் இருந்த குடையை விரித்துப் பிடித்தாள். மணிவண்ணனைத் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டாள்.
கடைசி முறையாகத் தான் வாழ்ந்த அந்தப் பங்களாவைப் பார்த்தாள்.
கதவு சாத்தப்படவில்லை; திறந்தே இருந்தது.
அங்கப்பன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.
பங்களாவில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அந்தச் சிறிய மாரியம்மன் கோவிலுக்குக் காரில் வந்து இறங்கிய மரகதம் நள்ளிரவைத்தாண்டிய அந்த நேரத்தில் மழையில் நனைந்தவண்ணம் தன் மகனோடு வந்து சேர்ந்தாள். கோவிலுக்குப் பக்கத்திலேயே ஒரு குடிசையில் கருப்பையா பண்டாரமும் அவர் மனைவி அஞ்சலையும் வசித்து வந்தனர். தகரக்கூரை கொண்ட மாரியம்மன் கோவிலில் தங்கி விடலாம். ஆனால், குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது.
அவர்களை அந்த நேரத்தில் எழுப்பலாமா வேண்டாமா என மரகதம் யோசித்தாள். மணிவண்ணன் குளிரால் நடுங்கிக்கொண்டிருந்தான்.
கதவருகில் மண்டியிட்டு அமர்ந்த மரகதம், “தாயே மாரியம்மா. வீட்டை விட்டு மகனோடு வெளியேறிட்டேன். இனி நீதான் ஒரு வழிகாட்டணும்,” என்று வேண்டினாள்.
“யாரு இந்த நேரத்திலே?” என்று குரல் கேட்டு எழுந்தாள். கருப்பையா பண்டாரம் தன் குடிசைக் கதவருகே நின்றுகொண்டிருந்தார்.
“நான்தாங்க மரகதம்..”
“யாரு அம்மாவா? என்னம்மா… இந்த நேரத்திலே,” என்று பதற்றத்துடன் கோவிலுக்குள் வந்தார்.
பேச்சுக்குரல் கேட்டு அஞ்சலையும் வெளியே வந்தாள்.
அரிக்கன்விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
மணிவண்ணன் தூங்கிவிட்டான். அஞ்சலையின் பழைய சேலையை அணிந்து கொண்ட மரகதம், வீட்டைவிட்டு வெளியேறியதற்கான காரணத்தைச் சுருக்கமாகவும் நயமாகவும் எடுத்துக்கூறினாள். அங்கப்பனின் வாழ்வில் ஏற்பட்ட – ஏற்பட்டுகொண்டிருந்த மாற்றங்களை ஓரளவு அறிந்திருந்த கருப்பையா பண்டாரம் “அம்மா, நீங்க வீட்டுக்குத் திரும்பிப் போகப்போறது இல்லையா?” என்று கேட்டார்.
எத்தனையோ வீடுகளில் நடப்பதை நன்கு அறிந்திருந்தவர் கருப்பையா பண்டாரம்.
“கோவிலுக்கு வருகின்ற பத்துப் பெண்களில் எட்டுப் பேர் குடிகாரக் கணவனிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு வாழ்வதையும், ஏதாவது ஒரு நாள் மாரியாத்தா தன் கணவனுக்கு நல்ல புத்தியைத் தருவாள் என்ற நம்பிக்கையோடு இருப்பதையும் அவர் கண்டிருக்கிறார். அவர்களுள் மூவராவது நால்வராவது ‘படிதாண்டிய பத்தினிகளாக’ மாறி வேறு ஆடவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டதையும் பார்த்திருக்கிறார்.
மரகதம் பண்பின் உறைவிடமாக இருந்தாள். பண்பாடு என்ற சிறைக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு வாழ்ந்தாள். அதனால்தான். அந்தக் கேள்வியை கருப்பையா பண்டாரம் கேட்டார்.
“இல்லைங்க. எந்த நேரத்திலேயும் அவர் மங்களத்தை வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்து என் கண் எதிரிலேயே குடும்பம் நடத்தத் தயங்கமாட்டாரு. என் மகனை நான் வளர்க்கணும். அதுதான் என் குறிக்கோள்-” அமைதியாக மரகதம் கூறினாள்.
அஞ்சலை அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். பண்பாடு என்ற சிறையில் இருந்து வெளியே வந்து நின்ற மரகதத்தைக் கருப்பையாவும் பார்த்துக்கொண்டிருந்தார்.
“அம்மா, நீங்க விரும்பினா இங்கேயே இருந்துடலாம்.”
“இல்லைங்க…. நான் இந்தத் தோட்டத்தில இருக்கப்போறது இல்லை. பல தோட்டங்கள் இந்தப் பகுதியில இருக்கு. மணியை அழைச்சுக்கிட்டு நான் அங்கே போயிடுறேன். பக்கத்துத் தோட்டங்கள்’ல இருந்து பல பேரு இங்க வர்றாங்க. உங்களுக்குத் தெரிஞ்சவங்க மூலமா ஒரு தோட்டத்துல வேலை வாங்கிக்கொடுத்துடுங்க,” என்றாள்.
ஒரு பெரிய பணக்காரரின் – தோட்ட முதலாளியின் மனைவி தோட்டத்தில் ஒரு சாதாரண வேலைக்குச் செல்வத…. அஞ்சலைக்கு அழுகையே வந்துவிட்டது. கருப்பையாவால் பேச முடியவில்லை. மௌனமாக இருந்தார்.
“நான் பத்து வயதுப் பெண்ணா இருந்தப்ப… என் அப்பா மரம் விழுந்து இறந்துட்டாரு. அப்பாவோட சிதைந்த உடலைப்பார்த்த அம்மா அடுத்த கணமே மாரடைப்பால அப்பா போன இடத்துக்கே போயிட்டாங்க. அதன்பிற்பாடு என் தாத்தாதான் என்னை வளர்த்தாங்க. அந்தச் சின்ன வயசிலேயே நான் என்னைப் பக்குவப்படுத்திக்கிட்டேன். அதனால, எனக்கு எதையும் தாங்குற மன உறுதி இருக்கு. மாரியம்மன் எனக்கு ஒரு வழிகாட்டுவாங்கிற எண்ணத்துலதான் இங்க வந்தேன்.” என்று கூறி மரகதம் நிறுத்தினாள்.
கருப்பையா பண்டாரம் நிமிர்ந்து பார்த்தார்.
“ஆத்தா நிச்சயம் வழிகாட்டுவா.” என்று கூறிய அவர். ”அம்மா. சிங்கப்பூர்ல ஒரு நாலைஞ்சு இடங்கள்ல ரப்பர் தோட்டங்கள் இருக்கு. இங்க இருந்து வேலை ஆட்களை கொண்டு போக முந்தா நாளு ஒருத்தன் இங்க வந்திருக்கான். நாலைஞ்சு குடும்பங்கள் சிங்கப்பூருக்குப் போக முடிவு எடுத்திருக்கு. அந்தக் குடும்பங்கள்ல ஒண்ணு ராமலிங்கத்தோட குடும்பம். புருஷனும் பொஞ்சாதியும் ரொம்பத் தங்கமானவங்க. நேத்து இங்க வந்து ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. ராமலிங்கத்துக்கூட நீங்க போகலாம்,” என்றார்.
“சரிங்க” என்று மரகதம் தலையாட்டினாள்.
அத்தியாயம்-2
10.8.1962 (வெள்ளிக்கிழமை)
இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அழைப்பு வரும் என மணிவண்ணன் எதிர்பார்க்கவே இல்லை.
“என் பேரு கலியப்பெருமாள். தம்பி, நீங்க சின்னப் பிள்ளையா இருந்தப்ப உங்க அப்பாவுக்கு நான் லாயரா இருந்திருக்கேன். ஃபோன்ல எல்லா விவரத்தையும் நான் சொல்லமுடியாது. உங்களை நேர்ல கண்டு பேசணும். அதுவும் உங்களுடைய லாயர் முன்னிலையில பேசணும்” என்று தன் உரையாடலைத் தொடங்கினார்.
ஐந்து வயதில் கலியப்பெருமாளைத் தன் தகப்பனார். அங்கப்பனுடன் பார்த்தது மணிவண்ணனுக்கு ஞாபகம் இருந்தது. தன் தகப்பனாரின் போக்குப் பிடிக்காமல் அவரிடமிருந்து கலியப்பெருமாள் பிரிந்து சென்றதைப்பற்றித் தன் தாயார் கூறியதும் மணிவண்ணன் நினைவில் நின்றது. கலியப்பெருமாள் பற்றி உயர்வான எண்ணம் அவனுக்கு இருந்ததால், கலியப்பெருமாள் சிரம்பானில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதும், அவரைச் சந்திக்க அவன் ஒப்புதல் தெரிவித்ததோடு, தன்னுடைய வழக்கறிஞரான கதிரவன் அலுவலக முகவரியையும் தந்தான்.
தன் கணவன் கலியப்பெருமாளுடன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த கலா, “நம் தொலைபேசி நம்பரைச் சித்தப்பாவா கொடுத்திருக்காங்க?” என்று கேட்டாள்.
“ஆமா. ஆனா, எப்படி உன் சித்தப்பாவைப் பார்த்தாருன்னு சொல்லலை. எது கேட்டாலும், “எல்லாத்தையும் விவரமா நேர்ல பார்க்கும்போது சொல்றேன்னு’ சொல்றாரு. ‘ஏதோ அப்பா விஷயமாத்தான் இருக்கணுமுன்னு நினைக்கிறேன்….” என்று கூறிய மணிவண்ணன், பூஜை அறைக்குச் சென்றான். அங்கே தெய்வப்படங்களுடன் தாயார் மரகதத்தின் படமும் இருந்தது. அதைப் பார்த்தான் – அவன் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
பூஜையருகே வந்த கலா தன் கணவன் என்ன நினைக்கின்றான் என்பதை உணர்ந்துகொண்டாள். ராமலிங்கத்தின் மகளான கலா. மணிவண்ணனோடு வளர்ந்தவள்: அவனோடு தன் வாழ்வை இணைத்துக்கொண்டவள்; மரகதம் பட்ட துயரை எல்லாம் நேரில் கண்டவள்.
திரும்பிய மணிவண்ணன். ‘இருபத்து இரண்டு வருஷங்களுக்கு முன்னால… மதுபோதையிலும் மாது மயக்கத்திலேயும் அறிவை இழந்துகிடந்த, “அப்பா” என்ற உறவு கொண்ட ஒருவரை விட்டு. நான் அம்மாவோட அந்தக் கடும் மழையில் வெளியேறினப்.. அந்த உறவு அறுபட்டுப்போச்சு. இப்ப அந்த “அவரைப்பற்றி ஏதோ பேசக் கலியப்பெருமாள்… வரப்போறா…எனக்கு இது.. புரியலை… பிடிச்சுக்கலை.”
“இதோ பாருங்க…ஒரு விஷயத்தைப் பத்தி முழுமையா தெரியாதவரையில ஒரு முடிவு எடுக்கக்கூடாதுன்னு நீங்கதான் சொல்லுவீங்க. கலியப்பெருமாள் எதைப்பத்திப் பேசப்போறாரு – என்ன சொல்லப்போறாருன்னு முதல்ல கேட்போம். பிறகு ஒரு முடிவை நீங்க எடுங்க.” என்று கலா கூறியதை மணிவண்ணன் ஏற்றுக்கொண்டான்.
ஏறத்தாழ இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் மாரியம்மன் கோவில் கருப்பையா பண்டாரம் கூறியவாறு ராமலிங்கம் குடும்பத்துடன் சிங்கப்பூர் புறப்பட்டாள் மரகதம். ராமலிங்கத்தின் தம்பி கணபதி அந்த எஸ்டேட்டில் தன் தாயாரோடு தங்கிவிட்டான்.
செம்பவாங் ரப்பர் தோட்டத்தில் போராட்டம் மிகுந்த வாழ்க்கை தொடங்கியது. ஒப்பந்தக் கூலிகளாக அவர்கள் மலாயாவில் இருந்து வராவிட்டாலும் ஒருவகையில் அந்த வாழ்க்கை அடிமை வாழ்க்கையாகவே இருந்தது. ராமலிங்கத்தின் மனைவி சீதாலெட்சுமி அழகான பணிவான பெண். “அக்கா… அக்கா” என்று மரகதத்துடன் மிகவும் பாசத்தோடு பழகினாள். அந்த எஸ்டேட்டில் சுமார் நாற்பது தமிழ்க் குடும்பங்களும் ஐந்து ஜாவானியக் குடும்பங்களும் இருந்தன. சிறிய அத்தாப்புக்குடிசையில் மாரியம்மனையும் முனீஸ்வரரையும் எழுந்தருளச்செய்து தமிழர்கள் வணங்கி வந்தனர். ஒருவருக்கொருவர் துணையாக இருந்ததோடு மாரியம்மனையும் தங்களுக்குத் துணையாக வைத்துக்கொண்டனர்.
ஆண்கள் அனைவரும் பால்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டனர். பெண்களில் பெரும்பாலோர் புல் வெட்டுதல், செடி கொடிகளை அகற்றுதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்.
கலியப்பெருமாள் தொடர்பு கொண்ட பின் அடுத்த
ஏழாம் நாள் வழக்கறிஞர் கதிரவன் அலுவலகத்தில் அந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அறுபது வயதைத் தாண்டி நின்ற கலியப்பெருமாள் அதே கம்பீரத் தோற்றத்துடன் காணப்பட்டாலும் தளர்ந்திருந்தார். மணிவண்ணனைப் பார்த்ததும் அவன் இரு கரங்களையும் இறுகப்பற்றிக்கொண்டார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது.
“தம்பி மணி – எத்தனை வருஷங்களுக்குப் பிற்பாடு – உங்களை நான் பார்க்கிறேன். எப்படித்தான் இத்தனை வருஷங்கள் ஓடிப் போயிட்டுதே… தெரியலை.” என்று கூறிய கலியப்பெருமாள்… ஒரு சில விநாடிகள் மௌனமாக இருந்தார். கதிரவன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“இவுங்கதான் கலாவா – ராமலிங்கத்தோட மக கலாவா?” என்று கலாவை நோக்கிக் கேட்டார்.
மணிவண்ணன் தலை அசைத்தான்.
“சித்தப்பாவா… எங்க ஃபோன் நம்பரைக் கொடுத்தாங்க?” என்று கலா கேட்டதற்கு “ஆமா” என்று கலியப்பெருமாள் பதில் கொடுத்தார்.
“இந்தச் சிறிய அறிமுகத்திற்குப் பிறகு நாம பேச்சைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்” என்று கதிரவன் ஆரம்பித்தான்.
“சுமார் ஒரு வாரத்துக்கு முந்தி கலியப்பெருமாள் மணிவண்ணனுடன் தொடர்புகொண்டு பேசினாரு. அதன் பிறகு சட்டபூர்வமா மணிவண்ணன் தகப்பனாரின் சொத்துபற்றி எனக்குத் தெரியப்படுத்தினாரு. மணிவண்ணனின் வழக்கறிஞர்ங்கிற முறையில் உயில் சம்பந்தமான முழு விவரமும் தெரியணும். எந்தக் கட்டத்தில், எத்தகைய சூழ்நிலையில் அது எழுதப்பட்டிருக்குங்கிறதும் தெரியணும். மேலும் ஒரு சிக்கல் இருக்கு. அதாவது, மணிவண்ணன் தனக்குத் தன் தகப்பனார்ன்னு சொல்லிக்கிற ஒருவரோட சொத்து வேண்டாம்’ன்னு என்கிட்ட சொல்லி இருக்காரு. ஆனா, அப்படி வேணாமுன்னு சொல்றதையும் நாம சட்டப்பூர்வமா செயல்படுத்தணும். நான் தெளிவா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்” என்று கதிரவன் நிறுத்தினான்.
“எல்லாத்தையும் விவரமா சொல்லத்தான் இங்க வந்திருக்கேன். மரகதத்தோடு இறுதிக் கால வாழ்வு பற்றியும் தெரிஞ்சுக்க விரும்புறேன்” என்று கூறி நிறுத்திய கலியப்பெருமாள், “பல மாதங்களுக்கு முன்னால அங்கப்பன் குழம்பிய நிலையில என்கிட்ட வந்தான். பிறகு உயில் பற்றி என்கிட்ட சொல்லி அதுக்கான பத்திரங்களையும் கொடுத்தான். கதிரவன் கேட்டுக்கிட்டபடி நான் முழு விவரத்தையும் இப்பச் சொல்றேன்.” என்று கூறிய கலியப்பெருமாள் முன் நடந்தவற்றைக் கூறத்தொடங்கினார்.
அத்தியாயம்-3
தஞ்சை மாவட்டம், மன்னார்குடியில் பிறந்த அங்கப்பன் தன் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தான். தாய் மாமன் வீட்டில் வளர்ந்த அவன் சென்னைக்கு வந்து கபாலிஸ்வரர் கோவிலுக்கு அருகில் இருந்த ஒரு கடையில் எடுபிடி ஆளாக வேலைக்கு அமர்ந்தான். அப்போதுதான் கலியப்பெருமாளுக்கும் அவனுக்கும் இடையில் நட்பு வளர்ந்தது. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த கலியப்பெருமாள் வழக்கறிஞனானான்.
மலாயாவுக்கு வரக் கலியப்பெருமாளுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. தன்னுடைய பால்ய நண்பனான அங்கப்பனையும் உடன் வரும்படி அழைத்தான்.
கோலாலம்பூருக்கு வந்த கலியப்பெருமாள் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் பதவி ஏற்றான். அதே நிறுவனத்தில் “ஆபீஸ் பையனாக” அங்கப்பன் வேலைக்கு அமர்ந்தான். “மரங்களில் ரூபாய் நோட்டுகள் காய்த்துத் தொங்கும். அப்படியே பறித்துக்கொள்ளலாம்” என்று நம்பி வந்த அங்கப்பனுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேகம் இருந்தது. அங்கப்பனுக்குப் புதிய உலகில் பல புதியவர்களின் நட்பும் கிடைத்தது. ஓராண்டுக்குப் பின் ரயில்வே ஸ்டேசனுக்கு அருகில், செட்டியார் ஒருவரிடமிருந்து வட்டிக்குக் கடன் வாங்கி ஓர் உணவகத்தை ஆரம்பித்தான். ஆறே மாதங்களில் கூட்டம் கூடியது; கல்லாப்பெட்டியும் நிரம்பியது. காதர் மைதீன் என்ற பெரியவரின் உதவியோடு அடுத்த ஈராண்டுகளில் மூன்று உணவகங்களை அங்கப்பன் நகரப்பகுதிகளில் திறந்து நிர்வாகம் செய்தான். நான்கு ஏக்கர் கொண்ட ஒரு ரப்பர் எஸ்டேட்டையும் விலைக்கு வாங்கினான்.
“டேய் கலியப்பெருமாள் பார்த்தியாடா. ஊரில இருந்து கப்பல்ல வர்றப்ப எப்படி இருந்தேன்னு, இப்ப எப்படி இருக்கேன்னு பாரு. ‘சுக்கிரதிசை, அடிக்க ஆரம்பிச்சா தொட்டதெல்லாம் பொன்னாகும்’பாங்க. அப்படித்தான் இருக்கு. மாத்தா ஈத்தாம்ல ஒரு செம்பனைத் தோட்டத்தை வாங்கலாம்னு நினைச்சிருக்கேன். எனக்குப் பல வழிகளில் உதவி செய்த காதர் மைதீன் நாகப்பட்டினத்துக்குப் போயிட்டாரு. உன்னைத்தவிர- எனக்கு இப்ப நம்பிக்கையானவன் வேறு யாரும் இல்லை. தோட்டங்களை நிர்வாகம் பண்ணவும் எனக்கு வழக்கறிஞரா இருக்கவும் நீ வந்துடு” என்று அங்கப்பன் கூறியபோது, அந்த அழைப்பை மறுக்காமல் கலியப்பெருமாள் ஏற்றுக்கொண்டான். தன் சொந்த ஊரான குளித்தலைக்குச் சென்று உறவுப்பெண்ணை மணமுடித்துத் திரும்பிய கலியப்பெருமாள் தன் குடும்பத்தாருக்கும் மனைவி குடும்பத்தாருக்கும் ஓரளவு பணம் அனுப்பவும் இங்கு வசதியோடு வாழவும், வழக்கறிஞர் நிறுவனம் தரும் மாத ஊதியம் போதுமானதாக இல்லை. எனவே இரட்டிப்பு ஊதியம் தர முன்வந்த அந்த நிர்வாகப் பொறுப்பை கலியப்பெருமாள் ஏற்றுக்கொண்டான்.
தோட்டத்தைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த போதுதான் அங்கப்பன் மரகதத்தைச் சந்தித்தான். பொற்கொடிபோல் இருந்த மரகதத்திடம் மனத்தைப் பறி கொடுத்தான். தாய் தந்தையை இழந்து தாத்தாவின் பராமரிப்பில் வாழ்ந்துகொண்டிருந்த மரகதமும் அங்கப்பனை விரும்பினாள். தோட்ட முதலாளி ஒருவரைத் தொழிலாளி மகள் ஒருத்தி மணமுடிக்கப் போகிறாள் என்ற செய்தி எங்கும் பேசப்பட்டது. திருமணம் ஆடம்பரமான முறையில் நடத்தப்பட்டது.
தன்னுடன் வந்து தங்கும்படி தாத்தாவை மரகதம் அழைத்தபோது. அந்தக்கால மனிதரான அவர், “எளிய பாட்டாளி மகனாகவே இருந்துட்டேன். பேத்தி திருமணம் மூலமா என் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள விரும்பவில்லை”. என்று கூறினார் பெரியவர். அதே குடிசையில் சில நாள்கள் வாழ்ந்து மறைந்தார்.
முதியவருக்கு நேர்மாறானவனாக அங்கப்பன் இருந்தான். பணமும் பதவியும் வருகின்றபோது மனிதன் மாறுவான் என்று கூறுவார்கள். அந்தக் கூற்றைப் பொய்யாக்க அங்கப்பன் விரும்பவில்லை. மாறினான். இரவு விடுதி, பெரிய ஹோட்டல்களில் விருந்து என மேல்மட்ட நிலைக்குத் தாவினான். ஏழைப் பாட்டாளி மகளாகப் பிறந்து வளர்ந்த மரகதம் எளிமையான ஒரு குடும்பப் பெண்ணாகவே இருக்க விரும்பினாள். புற வாழ்க்கைக்கு ஆடம்பரத் தோற்றங்கள் தேவை என்றாலும், அக வாழ்க்கை எளிமையானதாக இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டை அவள் வலுவாகப் பற்றி இருந்தாள்.
ஆடம்பரமான விடுதிகளுக்கும் ஹோட்டல்களுக்கும் விருந்துகள் என்ற பெயரால் அவள் போகவிரும்பவில்லை. கணவன் ஏதாவது நினைத்துக்கொள்வானோ என்பதற்காகப் போனாள். மணிவண்ணன் பிறந்தபின் அதை ஒரு வாய்ப்பாக வைத்துக்கொண்டு “குழந்தைக்கு இரைச்சல் பிடிக்காது; மணி அழ ஆரம்பிச்சிடுவான்.’ என்றெல்லாம் கூறி ஆடம்பர இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தாள்.
அங்கப்பனுக்கு அது ஒரு வகையில் சாதகமாக அமைந்தது. மதுவும் மாதுவும் அவனை இறுகப்பபற்றிக் கொள்ள வழி பிறந்தது. பலவகை மதுபானங்கள், பல இனப் பெண்கள் என அவன் சென்றுகொண்டிருந்தாலும் அவன் மரகதத்தின்மீது வைத்திருந்த அன்பில் மாற்றம் இல்லை. மங்களம் என்ற ஒரு நடனப் பெண்ணின் உறவு வரும் வரை அந்த அன்பில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
1940களில் ஏராளமான நாடகக் கலைஞர்களும் இசைக் கலைஞர்களும் மலாயாவுக்கு வந்து பின்னர்ச் சிங்கப்பூர் செல்வார்கள். அல்லது சிங்கப்பூர் வந்து மலாயா செல்வார்கள். 1930களின் இறுதியில் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு துணை நடிகையின் மகள்தான் மங்களம். ஒரு கோவில் சீரமைப்புப் பணிக்கு என ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குக் கோலாலம்பூரில் இயங்கிய ஒரு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நாட்டிய நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினனாக அங்கப்பன் அழைக்கப்பட்டிருந்தான்.
அன்றைய காலகட்டத்தில் சிறப்பு விருந்தினர் அல்லது தலைமைத் தாங்குபவர் என்றால் அவர் கணிசமான அளவு நிதி உதவி அளிக்கவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.
“இவுங்கதான் மங்களம். இது அவுங்க அம்மா. பல படங்கள்’ல நடிச்சிருக்காங்க. இவுங்க மற்ற நடனமணிகள்” என்று மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் சில படங்களைக் காண்பித்தார்.
மங்களத்தின் படத்தைப் பார்த்தபோது அவளுடைய கவர்ச்சியான தோற்றத்தைப் பார்த்து அங்கப்பனுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது; மரகதத்தின் வாழ்வில் விதி சிரித்தது,
மங்களத்தின் தம்பி தலைமையில் பத்துப்பேர் கொண்ட குழுவினர். மலாயா வந்தனர். அங்கப்பன் போன்ற செல்வர்களின் உதவியோடு இடம்பெற்ற நடன நிகழ்ச்சி பலரின் கண்டனத்துக்கு ஆளாகியது. தரமான நிகழ்ச்சியாக இல்லாமல் இசைத் தட்டுகளுக்குக் கவர்ச்சியான நடனங்களை – நடனங்கள் என்று கூறுவதைவிட-உடலை வளைத்துக் குலுக்கி – ஆட்டம் போட்டனர்.
ஒரு கோவில் நிதிக்கு இத்தகைய நிகழ்ச்சி தேவைதானா என்று தலைப்பிட்டு ஒரு சஞ்சிகையில் கடிதமும் வந்தது.
சிவப்பிரகாசம் மனமுடைந்துபோனார். ஆனால் அங்கப்பன் போன்ற வசதி படைத்தவர்கள் மனம் மகிழ்ந்தனர். மேடையில் ஆடிய அழகிகள் பின்னர் அவர்களின் தனி அறைகளில் ஆடினர்.
அவர்களில் ஒருத்தி மங்களம். ஆடலைக் கண்டு ஆனந்தமடைந்தவன் அங்கப்பன்.
அடுத்த ஒரு வாரத்தில் மங்களத்தின் தாயான நடிகை உடன் வந்த சில பெண்களை அழைத்துக்கொண்டு சென்னை திரும்பினாள்.
மங்களத்தைப் பிரிய அங்கப்பனுக்கு மனமில்லை. தன்னுடனேயே மலாயாவில் இருக்கும்படி அங்கப்பன் வேண்ட, மங்களமும் இணங்கினாள். ஆனால், தன் தம்பி தன்னுடன் இருக்கவேண்டும் என்பது மங்களத்தின் வேண்டுகோள். அதையும் அங்கப்பன் நிறைவேற்றிவைத்தான். அந்தக் கணத்தில் அங்கப்பன் தன் மனைவியை மறந்தான்; மகனையும் மறந்தான்.
அன்றைய சூழ்நிலையில் அத்தகைய நிகழ்ச்சிகள் ஒன்றும் புதிதல்ல வழக்கமாக நடப்பவை -நடந்தவை. பல மனைவியர் அவற்றை ஏற்றுக்கொண்டனர். ஆனால். மரகதத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டில் போராட்டம் ஆரம்பமானது.
கலியப்பெருமாள் மானேஜர் மட்டுமில்லை; அங்கப்பனின் நெருங்கிய நண்பனும் கூட ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்த கலியப்பெருமாள் அங்கப்பனின் தனிப்பட்ட வாழ்வை வெறுத்தான். மங்களத்திடம் அடிமைபோல் கிடந்த அங்கப்பனைக் கண்டித்தான்.
“கலியப்பெருமாள். இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நெருங்கிய நண்பன்கூட ஒரு தனிப்பட்ட விஷயத்துல தலையிடுவதை நான் விரும்பலை.” ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் அங்கப்பன் கூறினான்.
“அங்கப்பா. நீ போற போக்குச் சரியில்லை; மது மயக்கமும் மாது மயக்கமும் உன் மதியை மழுங்கச் செய்துட்டுது. தண்ணியும் கன்னியும் உன்னை எங்கோ கொண்டு போகுது.”
கலியப்பெருமாள் கூறி முடிக்கவில்லை…
“கலியப்பெருமாள்” என்று அங்கப்பன் கத்தினான்.
“நாவை அடக்கிப் பேசுடா. எங்கோ கிடந்தவனை கோபுரத்தில் கொண்டு வந்து வச்ச என்கிட்டேயா இப்படிப் பேசுறே?”
“ஏன்னா, கோபுரத்திலே இருந்த நீ குப்பை மேட்டை நோக்கிப் போறே. அதனாலதான்…”
“டேய் நிறுத்துடா” என்று கத்திய அங்கப்பன் கலியப்பெருமாளை அடிக்கக் கைநீட்டினான். ஓங்கிய கையைத் தட்டிவிட்ட கலியப்பெருமாள் “அங்கப்பா. நான் சட்டம் படிச்சவன். இன்னொருதரம் கை நீட்டின… கோர்ட்டுல உன்னை நிறுத்த நான் தயங்கமாட்டேன். என் பொருள்களை எடுத்துக்கிட்டு நான் இந்தக் கணமே வெளியேறப் போறேன். தள்ளி நில்லுடா,” என்று கூறி அலுவலக அறைக்குள் நுழைந்தான்.
அங்கப்பன் பேயால் அறையப்பட்டவனைப்போல் அசையாமல் நின்றுகொண்டிருந்தான்.
– தொடரும்…
– ஆற்றோரத்தில் ஒரு மாளிகை, முதற் பாதிப்பு: 2000, எஸ்.என்.பி எடிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சிங்கப்பூர்.
Where is part 4,5 6 and other chapters for Atroram oru Malika?
Dr.Umesh
Dear Sir, Please check now, we publish chapters every 2 days. Thanks.
Story writing is good.
Thank You.
Your service is noble.
Dr Umesh
Australia