ஆறு யானைகள்




(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவன் போகும்போதே பார்த்துக்கொண்டு போனான்.

யாரோ முக்கியப் பிரமுகர் வரக் கூடும் போலத் தோன்றியது. எங்கும் வளைவுகள், விதவிதமான அலங்காரங்கள். ஸ்கூல் பிள்ளைகள் வரிசையாக. காலையிலேயே வெயில் அதிகமா யிருந்தது. யாராக இருக்கக் கூடும் எனத் தெரியவில்லை. அவனுக்கு சுவாரஸ்யமின்றி இருந்தது அது. நிறைய ஆட்கள் வேறு இருந்தார்கள். போலீஸ், அரசாங்க ஜீப் வேறு.
அவன் ரோட்டின் வளைவுக்கு வருவதற்குள் பார்த்தான். ஆறு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வந்து கொண்டிருந்தன. அசைந்தபடியான நடை. பூப் பூவாகப் போட்ட துணி தொங்கிக்கொண்டிருந்தது வயிற்றில். காது படர்ந்து போயிருந்தது. காதின் நுனி கிளை கிளையாகப் பிரிந்தது போலக் கிழிந்து கிடந்தது யானைகளுக்கு.
நெற்றியில் செம்மண் புழுதி அப்பியது போன்ற நிறம். ஈரம் வழிந்துபோன கண்கள். காதின் வளைவுகளில் கூடப் படம் வரைந்திருப்பார்கள். நெற்றியில், துதிக்கை பக்கம் எனப் பூக்களின் படங்கள். கடந்து போகும் வாகனங்களை வெறித்த படியே வந்தன யானைகள். அம்பாரியின் மேலிருந்த யானைப் பாகன் ஏதோ யோசனையில் வந்துகொண்டிருந்தான்.
கூட்டமாகத் தெருப்பிள்ளைகள் யானையை வேடிக்கை பார்க்க ஓடி வந்தார்கள். சைக்கிளில் போகும் சிலரும் கூட நிறுத்திப் பார்த்துப் போனார்கள். ஆறு யானைகளில் ரண்டு மட்டும் ரொம்பவும் வயதானவை போலத் தெரிந்தது. பருத்த யானையின் கால்களில் சிக்கிய வைக்கோல் மீதியிருந்தது இன்னும். வால் சிக்குப் பிடித்திருந்தது.
வரும் நபரை வரவேற்க யானையைக் கூட்டிப் போனார்கள் எனத் தோன்றியது. அப்படியானால் வரும் நபர் முக்கியமானவராகத் தான் இருக்கக் கூடும். அவன் யானைகளைக் கடந்தபோது பார்த்தான். வரி வரியான அதன் முதுகு. கோடு கோடான துதிக்கைக் கட்டுகள். மேலே தூங்கிக்கொண்டிருந்தான் பாகன்.
யாரோ யானை மேலேற்றி விடச் சொல்லி, அழுதுகொண்டிருந் தார்கள். கூட்டத்தில் தெரியவில்லை. சிறு பையனாகவோ, பெண்ணாகவோ இருக்கக் கூடும். எங்கிருந்து இந்த யானை களைக் கூட்டி வந்தார்கள் எனத் தெரியவில்லை. ஒரு வேளை தூரத்தில் இருந்து கூட்டி வந்திருக்கலாம். எல்லா யானைகளும் கோயிலுக்குச் சொந்தமானவையாகத்தான் இருக்கக் கூடும். அந்த யானைக் கூட்டத்தில் அவர்கள் ஊர் கோயில் யானையைக் காணவில்லை.
அந்தக் கோயில் யானைக்கு உடல் நலம் கெட்டுப் போயிருந்தது. எப்போவாவது திருவிழாவின்போது அலங்கரித்துக் கூட்டி வருவார்கள். மற்ற நாட்களில் தகரக் கொட்டகைக்குள் கல்தரை முதுகு பதியக் கிடக்கும். அது அசைந்து கொண்டேயிருக்கும். நான்கு பக்கமும் பெரும் விலங்கு போட்டிருப்பார்கள். விலங்குகள் அழுத்த வீழ்ந்து கிடக்கும்.
அந்தத் தகரக் கொட்டகைக்குப் போவதற்குச் சின்னதாகக் கதவு உண்டு. தீப்பெட்டிக்குள் இருக்கும் உள்பெட்டியைப் போன்ற அமைப்பில். பாகனை அவனுக்குத் தெரியும். கதவைத் தள்ளிக் கொண்டு பாகன் போகும்போது எழுந்துகொள்ள முயற்சி பண்ணும். மற்றபடி வீழ்ந்துவிடும்.
முன்பெல்லாம் அதைத் தெருத் தெருவாகக் கூட்டி வருவான் பாகன். அப்போது ஸ்கூல் போய்க்கொண்டிருந்தான் அவன். யானை அப்போதெல்லாம் மிதப்பாக வரும். வீடுகளுக்கு முன் நின்றுகொண்டு தண்ணீரை உறிஞ்சி முகத்தில் அடிக்கும். சின்னப் பிள்ளைகளின் மூஞ்சியில் பட்டுத் தெறிக்கும்போது சிரிப் பார்கள். யானை காசு வாங்கி, பாகனிடம் கொடுக்கும்.
அம்மா, யானை வரும் நாளில் எல்லாம் சொல்லுவாள்:
“கணேசர் வந்துட்டாரு…”
அப்போதெல்லாம் அவனுக்குத் தெரியாது கணேசர் யார் என்று. யானையின் பெயராகத்தான் இருக்கும் என நினைத்திருந்தான்.
அவனே ஸ்கூல் போகும்போது யானை இருக்கும் இடம் பக்கமாகப் போவான். உள்ளே அதன் அசைவு தெரியும். மெல்லிசான குரலில் கூப்பிடுவான்.
”கணேசர்… கணேசர்…”
சப்தம் வராது. மெல்லிய வெயில் கீற்று போகும் ஓட்டை வழியாகப் பார்ப்பான். யானையின் பின்பாகம் தெரியும்.
அவனுக்கு யானையிடம் பயமே கிடையாது. தங்கை சித்ராவுக்கு ஏக பயமாயிருக்கும். அம்மாவை ஒட்டிக்கொள்வாள். அவள் அழும்போதெல்லாம் வீட்டில் யாராவது சொல்லுவார்கள். அவனேகூடச் சொல்லியிருக்கிறான்.
“அழுகையை நிறுத்தறயாடி… யானையைக் கூப்பிடவா…”
விசும்பியபடி நிறுத்துவாள். அவன் சாயங்கால வேளைகளில் சில நாள்கள் யானையின் பின்பே நடந்து போயிருக்கிறான். யானை எல்லாத் தெருவும் சுற்றும். கடைகளுக்கு முன் வந்ததும் வாழைப் பழம் சாப்பிடும். தேங்காய் மூடி கொடுத்தால் பாகனிடம் கொடுக்கும். பாகனின் அங்குசம் வெள்ளியால் ஆனது.
நிறைய வாழைப்பழம் கொடுக்கும் நேரத்தில் பாகன் அங்குசத்தைக் காதோரமாகக் குத்துவான். அகன்ற வாயிலிருந்து எடுத்து அவனிடம் கொடுக்கும். வாங்கி மேலே வைத்துக் கொள்வான். வாய் திறக்கும்போது பார்ப்பான். எவ்வளவு பெரியது. எப்போதாவது காசை வாங்க மறுக்கும். அப்போது அங்குசத்தால் குத்துவான். உடலைக் குலுக்கியபடி திரும்பும். நீர் கசியும் கண்ணோரமாக.
அவன் ஸ்கூலில் செம்பகம் டீச்சர் யானை பற்றி ஏதோ சொல்லியபோது அவனே பதில் சொன்னான்.
“இல்ல டீச்சர், யானை காட்டுல இருக்காது. கோவில்ல இருக்கும்.”
“கிடையாது. காட்லதான் இருக்கும். பிடிச்சுட்டு வந்து கோயிலுக்குக் கொடுப்பாங்க…”
”நம்ம கோயில் யானை கூடவா டீச்சர்?”
டீச்சர் தலையாட்டினாள். அவன் அன்று திரும்பும்போது, யானை கொட்டாரத்துக்கு வந்தபோது உள்ளே எட்டிப் பார்த்தான். பாகன் யானையிடம் நின்றிருந்தான். அவன் எட்டிப் பார்த்ததைப் பார்த்ததும் பாகன் உள்ளே கூப்பிட்டான்.
“சார்வா மகன்தானலே நீ…”
தலையாட்டினான்.
யானை அவனைத் திரும்பிப் பார்த்தது. திரும்பவும் கரும்பு தின்றது. அவன் பாகனிடம் கேட்டான்:
“இது காட்லயா இருந்தது….”
“எது, காமாட்சியா…”
காமாட்சியா… யானை பெண்ணோ… அம்மா கணேசர் என்பாளே… தலையாட்டினான்.
“கேரளா காட்ல இருந்து பிடிச்சுக்கிட்டு வந்தாங்க. இது குட்டியக் கூட வேற கோயிலுக்குக் கொடுத்தாச்சு.”
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருட்டும் வரை அங்கேயே இருந்தான்.எங்கும் இருள் படர்ந்த பின்பு வெளியே வந்தான். வீட்டில் அம்மா உள்ளே இருந்தாள் போலிருந்தது. நேரடியாக உள்ளே போய்ச் சொன்னான்:
“யானை பேரு காமாட்சி… கணேசர் இல்ல…”
“யாரு சொன்னா.”
”பாகன்.”
“அங்க போனயா….”
தலையாட்டினான். அம்மா சொன்னாள்.
“போகக் கூடாது. சின்னப் பையன்க தனியாப் போனா மிதிச்சுடும்.அப்புறம் கூழாகிருவே…’
மறுநாள் அங்கு போனபோது யானை வெளியே கிளம்பத் தயாரானது. அவன் புத்தகங்கள் நிரம்பிய பைக்கட்டோடு கூடவே போனான். மேலேயிருந்து பாகன் சிரித்தான்.
“வர்றயா மேல…”
அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. யானை குனிந்து மண்டி யிட்டது. மேலேறினான். பாகனுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டான். யானை அசைந்தபடியே போனது.
அதிசயமாக இருந்தது உலகம். மனிதர்கள் சிறிதாகத் தெரிந்தார்கள். காற்று முகத்தில் அடித்தது. அவனுக்கு ஏக சந்தோஷமாயிருந்தது. அவனுக்குத் தெரிந்த பையன்கள் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். அவன் அவர்களை விட, திடீரென பெரியாளாக ஆனதுபோல் தோணியது.
பஜார் பக்கமாக வந்ததும் பாகன் இறங்கிக்கொண்டான். அவன் மட்டும் மேலேயிருந்தான். யானை காசை வாங்கி அவனிடம் தந்தது. துதிக்கையின் ஈரம், மூச்சு கையில் பட வாங்கினான். உட்கார்ந்து இருந்த துணியின் அடியில் வைத்தான்.
ஊரே அழகாகத் தெரிந்தது அவனுக்கு. சித்ராவும் அம்மாவும் மார்க்கெட் பக்கம் போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. கூப்பிட்டான். கேட்கவில்லை. யானை அவனை ஏற்றுக் கொண்டது போலத் தலையாட்டியது.
இருட்டியபோது அப்பாவைப் பார்த்தான். யானைக்குக் கிட்டத்தில் போனார். கூப்பிட்டான். திரும்பிப் பார்த்துவிட்டு முறைத்தார்.
“கீழே இறங்குடா…”
“மாட்டேன்…போ…”
பாகன் சிரித்தபடியே அப்பாவிடம் ஏதோ சொன்னான். அப்பா போய்விட்டார். திரும்பவும் கோயில் பாதைக்குப் போனபோது அவன் இறங்கி பாகனோடு நடந்து வந்தான். பாகன் கேட்டான்.
“எத்தனை படிக்கே?”
“ஆறு…”
“என்ன செய்வே படிச்சு?”
“இப்படி யானை ஓட்டுவேன்” அவன் சிரித்தபடியே சொன்னான்.
“இதெல்லாம் வேணாம். கஷ்ட ஜீவனம். பெரிய ஆபீஸரா வா… நானே யானைய வச்சுக்கிட்டு மாலையோட நிக்கேன்.”
பாகன் அவனையும் தன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனான். அவன் வீடு, நிறைய தெருக்களைத் தாண்டியிருந்தது. சின்ன வீடு. அவன் உள்ளே போகும்போது கூடவே போனான். சேகரித்த சில்லறை முழுவதையும் கொட்டினான். ஒரு பெண் உள்ளேயிருந்தாள்.
அவள் காசை எண்ணினாள். அவன் மனைவியாக இருக்கக் கூடும். பதில் சொல்லாமல் உள்ளே போனாள். இரண்டு பெண் பிள்ளைகள் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். பாகன் சாப்பிடப் போகும்போது அவனிடம் சொன்னான்:
“சாப்பிடுறயா…’
அவனுக்கும் சாப்பாடு போட்டார்கள். வெறும் சாதம். அவனால் சாப்பிட முடியவில்லை. அந்தப் பெண் கேட்டாள்:
“எதுக்கு இப்படி ஊரார் பையன கெடுக்கேங்க…”
“அவனா வந்தான். ஒரு ஆசை…”
அவன் பாதியிலே எழுந்து கொண்டான். போகும்போது பாகன் சொன்னான்:
“நாளைக்கு எல்லாம் வீட்டுக்குப் போயிரணும்… யானைகிட்ட வரக் கூடாது…” அவன் வீடு திரும்பியபோது அம்மா படிக் கட்டில் தலை வைத்து உள்வாகாகப் படுத்திருந்தாள். வெளியே அப்பா இருந்தார். அவனைப் பார்த்ததும் சொன்னார்:
“எங்கடா போயிட்டு வாரே…”
“யானைகிட்ட…
”நாயே… படிக்காம, தெருவா சுத்துறே?” அவனுக்கு அறை விழுந்தது. அப்பா தொடர்ந்து அடித்தார், முகம், முதுகு என. அழுதான். அன்று உறங்கும்போது கூட வலித்தது. ஆனால் கனவில் யானை வந்தது. நிறைய ஜனக்கூட்டம் நிறைந்த தெருவில் அவன் மட்டும் யானையில் அசைந்தாடியபடி போய்க்கொண்டிருந்தான். எல்லோரும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கடையிலிருந்து திரும்பி வரும்போது யானைகள் நின்றிருந்தன. கூட்டத்தின் முகப்பில் வரிசையாக, மாலைகள் கிட்டத்தில் இருந்தன. அவன் சைக்கிளை நிறுத்திவிட்டு யானைகள் இருக்கும் பக்கமாகப் போனான்.
பாகன்களைக் காணோம். ஒரு யானை மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. வெயில் படர்ந்து போயிருந்தது. எண்ணெய் பிசுக்கைப் போன்ற யானையின் வயிற்றுப் பாகம் வெயிலில் மினுமினுத்தது. குழந்தைகளும் வாடிப்போய் நின்றிருந்தன. அந்த நபர் இன்னமும் வரவில்லை. மதியமாகத்தான் வரக் கூடும் போல் தோணியது. பூக்கள் வாடிப் போயிருந்தன. அப்போது தான் பார்த்தான். பெரிய சுவரொட்டி அந்த மனிதரைப் பற்றி, வாழ்த்துக் கூறி…
யானைகளைச் சுற்றி இப்போதும் சிறுவர் கூட்டமிருந்தது. யானை வாலில் இருந்து ஒரு மயிரைப் பிடுங்க சிறுவன் முயன்று கொண்டிருந்தான். யானை வாலாட்டியபடி இருந்தது. யாரோ திடீரென வந்தார்கள். பாகன்கள் யானை மேலேறி பத்தடி தூரம் யானையை ஓட்டிப் போனார்கள்.
ஒவ்வொரு யானைக்கும் சுண்ணாம்பிட்ட கோடு போட்ட இடம் தயாராயிருந்தது. பாகன்களிடம் விளக்கினார்கள்.
“வந்ததும் வரிசையா மாலை போடணும். ரிகர்சல் வேணுமா?’ “வேணாங்க, போட்ரும்… எதுவும் யானைக்கு போடல இன்னும். அதான்… நடந்து வந்தது.”
“வந்துட்டுப் போகட்டும். போடலாம்…”
கிழட்டு யானை நின்ற இடத்தில் தள்ளாடியது. அதன் கண்களில் ஈரம் வழிந்து துதிக்கை வரை ஈரமேறிப் போயிருந்தது. புழுதி அப்பிப் போயிருந்தது, கண் இடுக்கில். அந்த மனிதர் வரக் காணோம். அவன் போய்விட்டான். வீட்டில் இருந்தபோது வெளியே குழந்தைகள் வானத்தைப் பார்த்தபடியே திரிந்தார்கள்.
உச்சி வெயிலுக்குப் பின் அவன் திரும்பவும் கிளம்பி வெளியே வந்தான். அப்போதும் யானைகள் அங்கேயே நின்றிருந்தன. வெயில் தாங்காமல் உடலை அசைத்தபடி. ஆள்கள் நிழல் தேடிப் போயிருந்தார்கள். அவன் நின்று பார்த்துக்கொண்டிருந்தபோது கிழட்டு யானை கால் தாங்கியது.
லேசாக முனங்குவது போலக் கேட்டது. சில நிமிடங்களில் ஈன சுரத்தில் பிளிறியது. பாகன் அருகில் வந்து தட்டினான். ஜனங்கள் வேடிக்கை பார்த்தார்கள்.
பாகன் விலகியபோது பெரும் சப்தத்தோடு கிழட்டு யானை விழுந்தது. மரம் முறிந்தது போல இருந்தது. பெருமூச்சு விட்ட படியான அதன் நிலை. மற்ற யானைகள் தங்கள் இடம் விட்டு விலகிவிட்டன. அகன்ற பிரிவு கொண்ட யானையின் பாதம் தெரிந்தது. உடல் ஏறி இறங்கியது.
ஜனங்கள் கூடிப் போனார்கள். நிறைய போட்டோக்கள். யானைப் பாகன் கிட்டத்தில் நெருங்கி ஏதோ செய்து கொண்டிருந்தான். நிறைய அதிகாரிகள் ஒருவருக்கொருவர் வைதபடி திரிந்தார்கள். கூட்டம் சுற்றியபடிக் கத்தியது.
”தூக்கி வேற பக்கம் விடுங்க, அவரு வர்ற நேரம்…”
யானை அசைவற்றுக் கிடந்தது. அவன் எதிரே நின்றிருந்தான். கூட்டம் பலவாறாகப் பேசிக்கொண்டிருந்தது. அவன் கூட்டத்தை விலக்கி வெளியே வந்தான். மற்ற யானைகள் நின்றிருந்தன, அதே இடத்தில்.
வெளி எங்கும் வெயில் நிறைந்து போயிருந்தது.
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.