ஆறுமுகம் விரைப்பாகிறார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 1,510 
 
 

மணி ஆறைக் காட்டினால் ஆறுமுகம் விரைத்துக்கொள்வார். முகத்தில் அங்குமிங்குமாய் ஒழுகிக்கொண்டிருக்கும் தூக்கத்தைத் தண்ணீர் கொண்டு கழுவித் துடைத்தெரிந்துவிட்டுத் தயாராய் நிற்பார். வியர்வையில் நனைந்து கசங்கியச் சட்டையைச் சரிசெய்துகொள்ள ஆறுமுகத்துக்குத் தெரியாது. சிலுவாருக்குள் சட்டை செருகப்பட்டிருந்தால் போதுமான திருப்தி அவருக்குக் கிடைத்துவிடும்.

வலது விரல்களால் சிதறிக்கிடந்த புலிவால் மீசையை சீராக்கித் தடவிக்கொடுக்க சில மிசை மயிர்கள் கட்டுக்கடங்காமல் சிலுப்பியபடி நின்றன. கண்களில் சிவப்பு நிறம் மிகுந்து வெள்ளை விழி எங்கே எனத் தேடவைக்கும். அச்சிவப்பு ஆறுமுகத்தின் முகத்தைக் கொஞ்சம் விகாரமாக எடுத்துக்காட்டிக்கொண்டிருந்தது.

ஏ புளோக்கில் இருந்து எப்போதும் யஸிடாதான் எப்போதும் முதல் ஆளாக வருவாள். அவளுக்கு மட்டும் என்ன அவசரமோ? ஆறுமுகத்திடம் அவள் அதைச் சொன்னது கிடையாது.

ஆறுமுகத்துக்கு அவ்வளவாக மலாய் வராது என்பதால் ‘செலமாட் பாகி’ என்று சொல்லிவிட்டு கன்னியமாக தனது மொழிப்புலமையைத் தற்காத்துக்கொள்வார். விளங்கினாலும் விளங்காவிட்டாலும் தலையை ஆட்டிவிட்டுப் போவாள் யஸிடா.

யஸிடா ஆரம்பித்தப் பின்னர் நொர்லிஸா, ஜமாலுடின், இஷாம் என கூட்டம் பெரிதாகும். சி புளோக்குக்குப் பின்னால் இருக்கிற மசூதியில் சுபுர் தொழுகையை முடித்துவிட்டு சூட்டோடு சூடாக வேலைக்குக் கிளம்பும் கூட்டம் அது.

ஆறுமுகத்துக்கு ரொம்ப நேரம் உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு எலும்பு நகர்ந்திருக்கும்போல இருந்தது. அதனால் நிற்க ஆரம்பித்துவிட்டார் வழக்கமான அதே ஆறு மணிக்கு. விரைப்பாக…

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து யார் வெளியே போனாலும் உள்ளே நுழைந்தாலும் ஆறுமுகத்தைக் கடக்காமல் போகமுடியாது. இருந்தாலும், பலருக்கு ஆறுமுகத்தின் இருப்பு தெரிவதே இல்லை.

அந்த வளாகத்து கேட்டைத் தாண்டி வெளியே நடந்துதான் கார் நிறுத்தத்ததிற்குப் போயாகவேண்டும். ஆறுமுகம் அந்த கேட்டில் நின்றுகொண்டு எல்லாருக்கும் செலமாட் பாகியையும் குட் மோனிங்கையும் வணக்கத்தையும் இன மொழி ரீதியாக பகுத்து வைத்துக்கொண்டிருப்பார். விரைப்பாக…

கோவலன் டி புளோக்கிலிருந்து இருங்குவது தெரிந்தது. கூடவே அவரது மனைவி மலர்விழி. ஆறுமுகத்தில் ஒழுங்குபடாத மீசை மயிர் ஒன்று மூக்குச் சந்துக்குள் நுழைந்து இம்சைபடுத்திக்கொண்டிருந்தது. கோவலன் தாண்டிய பிறகு மூக்கைச் சொரிந்துகொள்ளலாம் என்று ஆறுமுகம் கட்டுப்பாடாய் நின்றுகொண்டிருந்தார்.

கோவலன் கேட்டைத் தாண்டும்போது “வணக்கம் கோவலன் சார்,” என்று ஒரு நைந்த சிரிப்பை முன்வைத்தார் ஆறுமுகம். “வணக்கம்” என்று பின்னால் வந்துகொண்டிருக்கும் மலர்விழிக்கு விளங்காவண்ணமும் ஆறுமுகத்துக்கு விளங்கும் வகையிலும் ஒரு நேர்த்தியான அலைவரிசையில் சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்தார். “வணக்கம்மா,” இது மலர்விழிக்காக. இன்றும் ஆறுமுகத்தின் வணக்கம் விளங்கவில்லை அல்லது விளங்கிக்கொள்ள விரும்பவில்லை என்று ரெண்டுங்கெட்டான் நிலையில் தெளிவில்லாத அலைவரிசை போல கடந்துவிட்டாள்.

மலர்விழி தாண்டியதும் நமைச்சலின் உச்சத்தில் இருந்த மூக்கை தேய்த்து உரிந்துகொண்டிருந்தார் ஆறுமுகம். அறுமுகத்தின் வணக்கம் வந்து விழாத மலர்விழியின் காதில் அவர் மூக்கை உரிஞ்சும் ஓசை மட்டும் எப்படி விழுந்ததோ… திரும்பி ஆறுமுகத்தைப் பார்த்து ஓர் ஈனப்பார்வைச் செருகிவிட்டுச் சென்றாள். சற்று வேகத்தைக் கூட்டி கோவலன் பக்கமாக ஈடுகட்டி நடக்கத் தொடங்கினாள். இருவரும் ஆறுமுகத்தைத் தாண்டி ரொம்ப தூரம் போயிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டது விளங்கவில்லை; ஆனால், பேசும் தோரணையை வைத்து என்ன பேசியிருப்பார்கள் என்று ஆறுமுகத்துக்கு நன்றாகவே தெரியும்.

ஆறுமுகத்தின் விரைப்பு கொஞ்ச நேரத்தில் தளர்ந்தது. நேற்றிரவு கொண்டுவந்திருந்த சாப்பாட்டு டப்பாவையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துப் பைக்குள் போட்டுவிட்டு வாயில் சிகரெட் ஒன்றை எடுத்து வைத்தார். அதைப் பற்றவைத்து ஒரு இழுப்பு இழுத்தவுடன் அன்றைய நாள் வாழ்க்கை நிறைவடைந்துவிட்டதைப் போன்ற திருப்தியை நுறையீரலுக்குள் சென்ற புகை தந்துவிட்டிருந்தது.

எல்லாரும் வேலைக்குப் போகும் நேரத்தில் ஆறுமுகத்தின் வேலை முடிந்திருந்தது. வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக திமிரிக்கிடக்கும் மீசைமுடிகளை அகற்றவேண்டும் என்று சிந்தனையைத் தவிர அப்போது வேறெந்த சிந்தனையும் அவருக்கு இல்லை.


சிகரெட் புகையுடன் ஆறுமுகம் வந்து சேர்ந்தார். பகல்முழுக்க ஆறுமுகம் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் உட்கார்ந்திருந்த சம்சுடின் விழிப்படைந்தான். ஆறுமுகம் சம்சுடினுடன் அவ்வளவாக பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வது கிடையாது. ஏனென்றால், ஆறுமுகம் எது சொன்னாலும் பாழாய்ப்போன சம்சுடினுக்கு விளங்காது. அல்லது பாழாய்ப்போன ஆறுமுகத்தின் மலாய் அந்த மலாய்காரனுக்கு எதுவும் விளங்காது.

ஆறுமுகத்தின் மீசையில் இருந்த மாற்றத்தை சம்சுடின் கண்டிருந்தான். தனது குச்சி குச்சி மீசை முடிகளைக் காட்டி பிரமாதம் என்று சொல்வதுபோல கட்டை விரலை உயர்த்திக்காட்டினான். ஆறுமுகம் தனக்கு விளங்கிவிட்டது என்பதற்கொப்பாக புன்னகைத்துக்கொண்டார்.

இரண்டு நிமிடங்களில் சம்சுடின் இடத்தைக் காலிசெய்தான். நாற்காலி ஆறுமுகத்தைத் தாங்கத் தயாரானது. காலை எட்டிலிருந்து இரவு எட்டு வரை சம்சுடினையும் அடுத்த பன்னிரண்டு மணிநேரம் ஆறுமுகத்தையும் தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலி எந்நேரமும் உடையும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்தது.

கொண்டுவந்திருந்த கைவிளக்கு, லைட்டர், சிகரெட் பாக்கெட், சாவிக்கொத்து, பெட்டரி என சகல சாமான்களும் மேசைமீது பரப்பிவைத்துவிட்டார்.

அந்தச் சின்ன அறைக்குள் நான்கு பக்கமும் இருந்த கண்ணாடி அவரின் தனிமையைப் பறித்துக்கொண்டிருந்தது. ஆனாலும்கூட, உள்ளிருந்து நாற்புறமும் நோட்டமிடும் வசதியாகவே ஆறுமுகம் அதை எடுத்துக்கொண்டார்.

ஏற்கனவே பலர் வேலை முடிந்து திரும்பியிருந்தனர். எஞ்சிய சிலர் இப்போதும் அப்போதுமாய் வந்து சேர்ந்தனர். ஆறுமுகம் யாரையும் சட்டை செய்யவில்லை. மெல்லிய ஓசையில் மின்னல் எப்.எம். ஓடிக்கொண்டிருந்தது. பாதி கவனம் வானொலியில் இருந்தாலும் மீதி கவனம் கேட்டில் தான் இருந்தது.


மணி பன்னிரண்டானால் ஆறுமுகத்தின் முழுகவனம் கேட்டில்தான் இருக்கும். வெளியே போவோருக்கு கேட்டைத் தாராளமாகத் திறந்துவிடுவார். உள்ளே நுழையத்தான் ஆறுமுகத்தின் கெடுபிடிக்குப் பதில் சொல்லியாகவேண்டும். குடியிருப்பில் இல்லாத முகமாய் இருந்தால் உள்ளே போகமுடியாது. இரும்பு கேட்டை வேண்டுமானால் ஏமாற்றிவிடலாம். ஆறுமுகத்தை ஏமாற்ற முடியுமா?

இரண்டு மாதங்களாக ஆறுமுகத்தின் வேலைப்பழு அதிகமாகியிருந்தது. எங்கிருந்தோ வந்து சேர்ந்த ஃபிட் அடிக்கும் பொடியன்கள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைத் தங்களது கவனத்தில் குறித்துவைத்திருந்தனர். அவ்வப்போது உள்ளே நுழைய ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். ஏற்கனவே மூன்று முறை பின்பக்கக் கம்பிகளை வெட்டிச் சுவரேறி குதித்து உள்ளே நுழைந்துவிட்டிருந்த இரு பொடியன்களை ஆறுமுகம் அடித்தே விரட்டியிருந்தார். குடியிருப்புச் சங்கத்திடம் இதைப்பற்றிச் சொல்லியிருந்தும் மாற்றம் ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. அதனால், ஆறுமுகம் யாரையும் நம்புவதில்லை.

ஆறுமுகம் சைக்கிலில் ரோந்துக்குத் தயாரானார். வளாகத்தைப் பத்து நிடங்களுக்கு ஒரு முறை நோட்டமிடாமல் போனால் ஆபத்து சுவரேறி குதித்து உள்ளே நுழைந்துவிடும்!

ஆறுமுகம் விரைப்பானார். அவரது காதுகளில் தார் ரோட்டைத் தேய்க்கும் ரப்பர் சப்பாத்தியின் ஓசை கேட்பது போன்ற பிரம்மை உண்டானது. சைக்கிலைச் சாலையின் ஓரமாய்ப் போய் நிறுத்தினார். சைக்கிலில் இருந்தபடியே சுற்றிமுற்றி நோட்டமிட்டார். கண்களுக்கு யாரும் அகப்படவில்லை. ஆனால் ஆறுமுகம் விழிப்புநிலையில் இருந்து விடுபடவில்லை.

ஏற்கனவே உள்ளே நுழைந்த பொடியன்கள் மூன்று முறையும் சி புளோக்கின் உள்ளே நுழையத்தான் முயன்றிருந்தனர். இந்த முறையும் அந்த புளோக் அவர்களின் இலக்காக இருக்கலாம். கொஞ்ச நேர அவதானிப்புக்குப் பின் ஆறுமுகம் சைக்கிலை சி புளோக்கின் பக்கவாட்டில் கொண்டுபோய் நிறுத்திவிட்டு ஓரமாய் நின்றுகொண்டார். யாரும் வரும் ஓசை கேட்டால் எட்டிப்பார்க்க அது அவருக்கு வசதியான இடம்.

வழக்கமாக பன்னிரண்டு மணியைத் தாண்டிய பிறகு குடியிருப்புவாசிகள் நடமாடுவது கிடையாது. ஒட்டுமொத்த வேலையும் ஆறுமுகத்தின் கையில்தான். அப்படியே யார் நடமாடினாலும் என்ன ஏது என்று கேட்கும் அதிகாரம் அவருக்கு யாரும் கொடுக்கவில்லை. அதனால், தானாகவே அந்த அதிகாரத்தை எடுத்துக்கொள்வது உண்டு.

பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். ஓசை ஏதும் வரவில்லை என்று உறுதிசெய்த பின்னரே அங்கிருந்து கிளம்பி கேட்டுக்குச் சைக்கிலை மிதித்தார். அவ்வப்போது சுடச்சுட காப்பியை ஊற்றி சப்பென்று இருக்கும் வாய்க்குப் புத்துணர்ச்சி கொடுக்க புட்டியில் ஊற்றிக் கொண்டுவருவது வழக்கம். அந்த காப்பி தனது வீரியத்தை இழந்துபோய் ஆறுமுகத்து ஏமாற்றத்தைத் தருவதும் வழக்கம். கொண்டுவந்த கடமைக்கு அவ்வப்போது அந்த காப்பியை உரிஞ்சிகொள்வார். இன்றும், காப்பி வீசும் குளிருக்கு ஐஸ் காப்பியாகியிருந்தது. ஆறுமுகத்துக்கு வாயில் ஏதாவது போனால் சரி. மூடியில் கொஞ்சம் ஊற்றி உரிஞ்சினார்.

நேரம் நகர்வது தெரியவில்லை. எல்லாமே இருட்டாக ஒரே மாதிரிதான் இருந்தது. ஆறுமுகம் வானொலியின் ஓசையைச் சன்னமாக உயர்த்தும்போது மீண்டும் ஏதோ ஓசை! ஆறுமுகம் விரைப்பானார்.

மெதுவாக எழுந்து சி புளோக்கைப் பம்மியபடி போய்ச்சேர்ந்தார். எட்டிப் பார்த்தார். உருவம் ஒன்று நகர்ந்ததைப் போன்ற பிம்பம். ஓசை ஏதும் எழாமல் பம்மலான ஓட்டமும் நடையுமாக ஆறுமுகம் போய்ச்சேர்ந்தார்.

யாரோ நடமாடுவது உறுதியானது. இடுப்பில் செறுகிவைத்திருந்த தடியைக் கையில் தயாராய் வைத்துகொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து புளோக்கின் பின்பகுதியை எட்டிப்பார்த்தார். இரு பொடியன்கள் சி புளோக்கின் படிக்கட்டு வழியாக மேலே ஏற ஆரம்பித்திருந்தனர். ஆறுமுகம் அடித்தொண்டையிலிருந்து கத்திய ஓசையைக் கேட்டுத் தடுமாறி கீழே இறங்கி ஓட எத்தனித்தனர் இருவரும். நின்ற இடத்திலிருந்து ஆறுமுகம் தடியை வீசியடித்தார். குறியும் தப்பியது; பொடியன்களும் தப்பினர்.

ஆறுமுகம் துரத்திக்கொண்டு ஓட தெம்பில்லாமல் இரு கைகளையும் முட்டியில் ஊன்றி மூச்சு வாங்கியபடி நின்றுவிட்டார். அந்த இருவரும் போன இடம் தெரியாமல் மாயமாயினர்.

ஆறுமுகத்துக்கு நிம்மதியில்லாமல் போய்விட்டது. அடுத்து எப்போது வந்துத் தொலைவார்களோ என்ற கலக்கம் அடிவயிற்றைச் சுழற்றிக்கொண்டிருந்தது. தன்னைத் தாக்கவும் அவர்கள் தயங்கமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். ஆனால் எப்போது என்றுதான் இன்னும் தெரியவில்லை. இந்த வேலை மீது பயமும் வெருப்புணர்வும் சேர்ந்து வந்திருந்தது ஆறுமுகத்துக்கு. பனி கொட்டும் அந்த அதிகாலையிலும் ஆறுமுகத்தின் மொத்த உடலும் வியர்த்திருந்தது.

ஜேம்ஸ்பாண்ட் வேலையெல்லாம் முடிந்து இப்போது மீண்டும் கேட்டுக்கே வந்துசேர்ந்தார். மணி இரண்டு என்று அறிவித்துவிட்டு செய்தியைப் போட்டுவிட்டார்கள் வானொலியில். ஆறுமுகம் நாற்காலியில் சாய்வாக இரண்டு நிமிடம் உட்கார்ந்திருந்தார். ஏதோ ஓசை கேட்பது போன்ற உணர்வு. ஆறுமுகம் விரைப்பானார்.


யஸிடா நடந்துவந்துகொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் பாதசாரிகளுக்கான கேட்டைத் திறந்துவிட்டார் ஆறுமுகம். தளர்ந்திருந்த ஆறுமுகம் விரைப்பானபடி “செலமாட் பாகி புவான்” என்றார். பதிலுக்கு அவளும் செலமாட் பாகியைச் சொல்லிவிட்டுச் சென்றாள்.

சில நிமிடங்கள் கடந்தன. சூரியன் கண்ணுக்கு இன்னும் தென்படாத அந்தக் காலை வேளையில் ஒருவர் இருவர் என மலாய்க்காரர்கள் நடந்து வெளியே போய்க்கொண்டிருந்தனர். மணி ஏழை நெருங்கும்போது தினமும் நடக்கும் நடவடிக்கையாக இன ரீதியாக வணக்கங்களைப் பகிர்ந்து வைத்துக்கொண்டிருந்தார் ஆறுமுகம்.

சி புளோக்கிலிருந்து கோவலனும் மலர்விழியும் நடந்து வருவது தெரிந்தது. கோவலன் கேட்டை நெருங்கிய வேளையில் “வணக்கம் கோவலன் சார்” என்றார் விரைப்பாக. கோவலன் விளங்காததுபோல போய்விட்டார். கூடவே மலர்விழி. வணக்கத்தை மலர்விழிக்காக வைத்தார் ஆறுமுகம். மலர்விழிக்கும் விளங்கவில்லை போலும்!

“சீ! அந்த ஆளு வாய் நாத்தம் சகிக்கமுடியல. தூங்கறத்துக்காகன்னே சம்பளம் கொடுத்து உக்கார வெச்சிருக்கானுங்க. தண்ணியடிச்சிட்டுக் காலாங்காத்தாலயே தள்ளாடிக்கிட்டு நிக்கிறான் பாருங்க. தமழன் மானத்தையே வாங்கறான் கெழவன்,” மலர்விழி கோவலனிடம் தமிழர் மானத்தைப் பற்றி கவலைப்பட்டுப் பொருமிக்கொண்டிருந்தாள். ஆறுமுகத்திற்கு அது விளங்கவில்லை, அல்லது விளங்கியதாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

மணி எட்டை நெருங்கியது. சம்சுடின் வந்துவிட்டான். எல்லா லொட்டு லொசுக்கையும் பிளாஸ்டிக் பையில் போட்டுக் கட்டிக்கொண்டு ஆறுமுகம் சைக்கிலை உருட்டி வெளியே கொண்டு போனார்.

பொடியன்கள் ஆறுமுகத்தின் சைக்கிளுக்குச் செலவு வைத்திருந்தனர். ஆறுமுகம் தளர்ந்துபோயிருந்தார்.

-மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய 2010ஆம் ஆண்டின் சிறுகதை போட்டியில் தேர்வு பெற்ற கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *