ஆரோக்யம்!




ஐம்பது ரூபாய்க்கு வாங்கிய சைக்கிளில் பள்ளி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தினமும் ஐம்பது முறை ஊரைச்சுற்றி, சுற்றி ஓட்டி வட்டமடிப்பதும், வழியில் உள்ள மரங்களில் இலந்தை பழம், நகப்பழம், அத்திப்பழம், வேலி கொடியில் தொங்கும் கோவைப்பழம், கள்ளிப்பழம் என பறித்து சாப்பிடுவதும், சில சமயம் சைக்கிளை வேகமாக ஓட்டி விழுவதால் ஏற்பட்ட சாறுகாயத்தை மண்ணைத்தூவி மறைத்து விட்டு இரவு வலியை பொறுத்துக்கொள்வதும், குளிக்கும்போது தண்ணி பட்டு சீல் பிடித்ததும் வலி அதிகமாகி அழநேர, அதைக்கண்ட அம்மா தானும் அழுது கொண்டே மூலிகை அரைத்து கட்டுவதும், நொண்டியடித்து சொய்யான் பெட்டி விளையாடுவதும், கண்ணாமூச்சி, பட்டம் விடுவது, மேடை நாடகத்தில் வயதான வேடமேற்று நடிப்பதும், கரகாட்டம், ஒயிலாட்டம் காண இரவு முழுவதும் கண் விழித்து பகலில் பள்ளியில் தூங்கிவிட ஆசிரியர் வேப்பங்குச்சியில் அடித்து தோப்புக்கரணம் போடவைப்பதும், விடுமுறையில் அம்மாவின் அம்மா வீடு செல்வதும், அங்குள்ள நட்புகளுடன் ஓணான் செடி கொடிகளை பிடித்து இரயில் ஓட்டுவதும், வெள்ளிக்கிழமை ஒலியும், ஒளியும் பாடல்களை பஞ்சாயத்து கருப்பு-வெள்ளை டி.வியில் மண் தரையில் அமர்ந்து பிரமிப்பாய் பார்ப்பதும் என அப்போது இருந்த மகிழ்ச்சி ஐம்பது கோடியில் சொத்திருந்தும், ஐந்து கோடியில் வீடிருந்தும், ஐம்பது லட்சத்தில் கார் இருந்தும் அறுபது வயது ஐயப்பனுக்கு வரவில்லை.

திருமணமாகி ஐந்து வருடம் குழந்தையில்லாமல் சபரிமலைக்கு தந்தை சென்று வந்த பின்பு பிறந்தவர் என்பதால் ஐயப்பன் என பெயர் சூட்டினர்.
அழகான முகம், யாருக்கும் பிடிக்கும் யதார்த்த குணம். சிறுவயதில் தந்தை காலமாகிவிட குடும்ப பொறுப்பை சுமக்க வேண்டிய நிலையில் படிப்பை தொடர முடிய வில்லை.
விவசாயிகளிடம் விளையும் உணவு தானியங்களை வாங்கி நகரத்தில் விற்று லாபம் பார்க்கும் வியாபாரம் கைகொடுக்க, படிப்படியாக வாழ்வில் வளர்ச்சி ஏற்பட்டது. பணமிருந்தும் சிறுவயதில் படிக்காததால் யாரும் பெண் தர யோசித்தனர். தான் சம்பாதித்த பணத்தில் உள்ளூரில் பூமி வாங்கி, அந்த நிலத்தில் அரசு பள்ளிக்கூடம் நடத்த இலவசமாக கட்டிடமும் கட்டிக்கொடுத்தார்.
அவரின் நல்ல குணத்தை அறிந்த அப்பள்ளியில் பணிபுரிந்த ஓர் ஆசிரியை ஐயப்பனை திருமணம் செய்து கொண்டார்.
குழந்தைகளும் பிறந்தனர். வசதி வாய்ப்புகள் பெருகி விட்டன. வியாபாரத்தில் கவனம் செலுத்தியவர் உடல் நலனை கவனிக்காமல் விட்டதில் சுகர், பிரசர் என பணத்தோடு நோயும் சேர்ந்து விட சோர்ந்து போனார்.
“படிச்சு, படிச்சு சொன்னனே கேட்டீங்களா?படிக்காத நீங்க படிச்ச பலபேருக்கு வேலை கொடுக்கறீங்க. படிச்ச எனக்கு தெரியாத வியாபார நுணுக்கங்களை பிறவியிலேயே கொண்டு வந்திருக்கீங்க. சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்ட நீங்க இனியாவது கொஞ்சம் ஓய்வெடுக்கனம். நமக்கு மேல ஒருத்தர் இருக்கத்தான் செய்வார். போட்டி, பொறாமை இருக்கத்தான் செய்யும். அதுக்காக ஓடிட்டே இருக்க வேண்டாம். எனக்கு உங்க பணத்தை விட நீங்கதான் வேணும்” என கூறிய மனைவியின் சொல்லால் தன்னை மாற்றிக்கொள்ள முடிவு செய்தார்.
‘நாம் போன பின்னும் இந்த உலகம் இருக்கும். நாம் இருக்கும் வரை ஆரோக்யமே மிக முக்கியம். புகழ், பதவி, பணம் போன்றவற்றிற்காக ஆரோக்யத்தை இழக்கக்கூடாது. இந்த பூமியில் உடம்பே பெரிய சொத்து. ஐம்பதில் என்ன அளவோ அதோடு வேகத்தை குறைத்து, வாரிசுகளுக்கு பொறுப்பைக்கொடுத்து விட்டு டென்சன், கவலையை மறந்து, பாக்கியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியை சேமிக்க வேண்டும்’ என முடிவு செய்தார்.
தற்கால உலக நிலையை புரிந்து கொண்டதோடு அதன்படி தன் செயல்பாடுகளை மாற்றியமைத்து ஓய்வுக்கு நேரம் ஒதுக்கி ஆரோக்யத்தோடு ஆயுளை வளர்த்தார்.
திருவள்ளுவரின் குறளுக்கேற்ப பொருளில்லாருக்கு இவ்வுலகமில்லை. பொருளீட்டியாயிற்று. அருளில்லாருக்கு அவ்வுலகமில்லை. எனவே ஆரோக்யத்தோடு அருளையும் சேமிக்க தீர்த்த யாத்திரை, தேவ தரிசனம் என காசி, கைலாயம் சென்று வரவும் நாட்களை ஒதுக்கினார் ஐயப்பன்.