ஆராய்ந்து முடிவெடு..!
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 11, 2022
பார்வையிட்டோர்: 8,860
“குருவே, நான் எந்த முடிவெடுத்தாலும் தப்பாகவே போய் விடுகிறது. இப்படி தப்பாய் முடிவெடுப்பதால் நிறைய இழந்து விட்டேன். ஏன் என்னால் சரியாக முடிவெடுக்க முடியவில்லை?’
தன்னிடம் பதற்றமாய் சொன்னவனை அமைதியாகப் பார்த்தார் குரு.
“ஏன் இப்படி பதற்றப்படுகிறாய். அமைதியாய் இந்தச் சம்பவத்தைக் கேள்’ என்று ஒரு சம்பவத்தை அவனுக்குச் சொல்ல ஆரம்பித்தார் குரு.
ரயில் பெட்டி ஒன்றில் ஒரு இளைஞனும் அவனது தந்தையும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிரே ஓர் ஆள் அமர்ந்திருந்தான். வந்ததிலிருந்தே அந்த இளைஞனின்
செய்கைகள் அந்த ஆளுக்கு வினோதமாகப்பட்டது.
அந்த இளைஞன் ஒவ்வொன்றையும் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். ரயில் கிளம்பியது. அந்த இளைஞன் இன்னும் உற்சாகமாகிவிட்டான். “அப்பா வயலைப் பாருங்க’, “அப்பா, மரத்தைப் பாருங்க’ என்று கண்ணில் படுவதையெல்லாம் அப்பாவிடம் காட்டி பரவசப்பட்டுக் கொண்டிருந்தான்.
பத்து வயது சிறுவன் இப்படி பரவசப்பட்டால் வித்தியாசமாகத் தெரியாது. ஆனால் ஒரு இருபது வயது இளைஞன் இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டாடுவது எதிர் சீட் ஆளுக்கு ரொம்பவே வினோதமாகப்பட்டது.
“பாவம் மனநிலை சரியில்லாத மகனை அழைத்துப் போகிறார்’ என்று மனதில் நினைத்துக் கொண்டார். நினைத்ததோடு நிற்கவில்லை. அந்தத் தந்தையுடன் பேச்சுக் கொடுத்தார்.
“பையனுக்கு ரொம்ப நாளா இப்படி இருக்கோ?’ என்று ஆரம்பித்தார்.
“எதை கேக்கிறீர்கள்?’ எதிர்க் கேள்வி கேட்டார் தந்தை.
“இல்லை, பையன் கொஞ்சம் வித்தியாசமா இருக்கானே. எனக்குத் தெரிஞ்ச மனோதத்துவ டாக்டர் இருக்கார். அவர் மனநோய்லாம் நல்லா பார்ப்பார்.’
“மனநோயா, யாருக்கு? என்ன சொல்றீங்க?’ தந்தை கொஞ்சம் சூடானார்.
“பையனுக்குத்தான். இந்த வயசுல அஞ்சாங் கிளாஸ் பையன் மாதிரி நடந்துக்கிறானே, அதான் டாக்டரைப் பார்க்கலாமேனு சொன்னேன்.’
“நீங்க தப்பா புரிஞ்சிக்கிடீங்க. அவனுக்கு மனநோய் இல்ல. என் பையனுக்கு பிறவில இருந்தே கண்ணு தெரியாது. போன வாரம்தான் ஆபரேஷன் செஞ்சு கண்ணை சரி பண்ணோம். இன்னைக்குதான் கட்டைப் பிரிச்சோம். இப்போதான் உலகத்தை முதல் தடவையா பாக்குறான்’ என்று தந்தை சொன்னபோது எதிர் சீட் ஆசாமிக்கு தன்னுடைய தவறான அவசர முடிவு புரிந்தது.
இந்தக் கதையைச் சொல்லி முடித்து, வந்தவனைப் பார்த்து, “புரிந்ததா, உன்னுடைய தவறு?’ என்று கேட்டார். வந்தவனுக்குப் புரிந்தது.
இப்போது அவனுக்கு குரு சொன்ன win மொழி: அவசரப்பட்டு முடிவெடுக்காதே. ஆராய்ந்து முடிவெடு.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)