ஆமிரபாலி




(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வைசாலி நகரமே அன்று ஒரு விதமான ஆனந்தத்தில் மூழ்கியிருப்பது போலத் தென்பட்டது. ஊரெங்கும் அதே பேச்சுத்தான். அரசன் பிம்பஸாரன் அரண்மனை அந்தப்புரத்திலும் கூடப் பெண்கள் ஒருவித பரபரப்புடன் அவருடைய வருகையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ராஜபிக்ஷு புத்த பகவான் வைசாவி நகரத்திற்கு வருவதற்கு முன்பே அவருடைய புகழ் முன் சென்று அங்கே பரவிவிட்டது. ஏன், நாடெங்கும் அவருடைய அதிசயச் செயல்களைப் பற்றியும் அமானுஷ சக்திகளைப் பற்றியும், ஜனங்கள் பயத்துடனும் பக்தியுடனும் பேசினார்கள்.
அவருடைய அருள்மொழிகளின் அதிசயமான ஆறுதல் ஒருபுற மிருக்க, அவருடைய மூர்த்தி தரிசனமும் பாத ஸ்பர்சமும் கண்பார்வை யுமே ஜனங்களுக்கு அபூர்வ அமைதியையும் ஆதரவையும் அளித்தன. அவருடைய தரிசனம் அவர்களுக்கு வாழ்க்கையின் புனிதத்துவத்தைப் பளிச்சென்று எடுத்துக்காட்டிற்று. அவர் சென்ற விடமெல்லாம் நோய், துன்பம் முதலிய பிசாசுகளும் அசுராம்சங்களும், ஒளியைக் கண்ட இருள்போல அகன்றன.
அப்பொழுது பகவானுக்கு வயசு எண்பது. உயர்ந்த தேகம் தவ ஒளியில் தங்கம்போல இருந்தது; அந்த உடம்பைச் சுற்றி மஞ்சள் வஸ்திரம் இளஞாயிற்றைச் சூழ்ந்த அருணோதய மேகங்கள் போலத் தென்பட்டது. முகத்திலும் தலையிலும் மயிர் நரைத்து வெண்மையாக இருந்தது. சங்கத்தின் நியமப்படி முண்டனம் செய்து கொண்டிருந்தார்.
அவருடைய உபதேசம் அப்பொழுது எங்கும் பிரபலமாகி இருந்தது. அவர் அந்தத் தடவை வைசாலிக்கு வந்த பொழுது அவருடன் பல புனிதமான சிஷ்யர்கள் இருந்தார்கள். யசோதரையும் ராகுலனும் கூட பிக்ஷுணி பிக்ஷுக்களாக அவரைப் பின்பற்றினார்கள். பூர்வாச்ரமத்தில் அவருக்கு நெருங்கியிருந்த அவர்களுடைய ஞானோதயத்தின் பிறகுதான் அவருடைய உபதேசமே பரிபூர்ண பலனை அடைந்தது.
அன்று ராஜகிருகத்தில் பிக்ஷை ஏற்பாடாகியிருந்தது. பகவான் நகரத் திற்கடுத்தாற்போலிருந்த மாந்தோப்பில் இறங்கியிருந்தார். அங்கிருந்து அவர் மறுநாட்காலை பத்து மணிக்குப் பட்டணப் பிரவேசம் செய்ய வேண்டியதென்று பிம்பஸாரன் முன் ஏற்பாடு. அரசன் தானே கோட்டை வாசலுக்குச் சென்று வரவேற்பதென்று தீர்மானித்திருந்தான். அவனுடைய பட்டமகிஷி அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த வண்ணம் புளகாங்கிதமாகியிருந்தாள்.
பகவானின் விஜயத்தைப்பற்றி ஆமிரபாலியும் கேள்விப்பட்டாள். அவருடைய சரித்திரத்தை அவள் கேட்ட பொழுதெல்லாம் அவள் உள்ளம் நிறைவு பெற்றது. அவளறியாத ஓர் அபூர்வ ஆனந்தம் அவளுக்கு ஏற்பட்டது. அவருடைய பெயரைக் கேட்டபோதே.
அவள் வைசாலி நகரத்தில் பிரதம தாஸி. அழகிலும் ஐசுவரியத் திலும் அவளுக்கு ஈடு அங்கு யாருமே கிடையாது. கலைஞர்களும் கனவான்களும் அவளுடைய கடாஷத்தை நாடி அவள் வாசலில் காத்துக் கிடந்தார்கள். அரசனுக்கே அவனிடம் ஒரு மோகம்.
ஆனால் சில தினங்களாகவே அவள் யாரையும் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. புத்தன் மாந்தோப்பிற்கு வந்தது முதலே அவளுக்கு ஓர் ஏக்கம். ஆவல், அவரைக் காணவேண்டுமென்று. தன் காதலனான ஓர் ஓவியக்காரனை மட்டும் கண்ணெடுத்துப் பார்த்து புத்த பகவானின் உருவப்படம் ஒன்றைச் சித்தரித்து வரும்படி உத்தரவிட்டான். அவன் மாந்தோப்பிலிருந்த மகா தபஸ்வியின் சாயலை அப்படியே வர்ணத்தில் பிடித்துக்கொண்டு போய் அவளிடம் கொடுத்தான்.
அதை வைத்துக்கொண்டு வியப்பில் ஆழ்ந்தாள் அவள். அதைப் பார்த்துப் பார்த்து பரவசம் கொண்டான். அந்த உருவத்திலிருந்து பிறந்து வந்த சாத்தி அவளுடைய உள்ளத்தை நிரப்பி, அவள் என்றும் பெற்றிராத ஒரு திவ்யமான நிம்மதியை அளித்தது.
பிரபுவைத் தன் வீட்டிற்கு அழைத்து அவர் பாதத்தைத் தொட்டுப் பேரின்பம் பெறவேண்டுமென்று அவள் துடித்தாள். ஆனால் பகவான் தாஸியான தன்னைக் கண்ணெடுத்துப் பார்ப்பாரோ என்று அவளுக்குச் சந்தேகம்.
தோழி ஒருத்தியைத் தோப்பிற்கு அனுப்பி சிஷ்யர்களிடம் கேட்கச் சொன்னான். சிஷ்யர்கள் அவள் தைரியத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். பகவானிடம் சொல்லக் கூட யோசனை செய்தார்கள்.
யசோதரைதான் கடைசியாக தைரியமாக முன்வந்து அந்த வேண்டு கோளை அவரிடம் தெரிவிக்க ஒப்புகொண்டாள். புத்தன் அதைக் கேட்டுப் புன்னகை புரிந்தார். சிஷ்யர்கள் திகைத்துப் போனார்கள். அவருடைய திருப்தி அவர்களுக்கு அர்த்தமாகவில்லை. அவர் பார்வை யில் அப்பொழுது தென்பட்ட தயையும் இரக்கமும் சிஷ்யர்கள் வாயை அடைத்துவிட்டன.
‘ஆமிரபாலியின் அன்பு பிக்ஷையை நாம் ஏற்றுக்கொள்ளுவோம்!’ என்று புத்தன் சொன்னார்.
போதிசத்துவன் ஒரு தாசியிடம் பிக்ஷை பெறுவதா என்று சிஷ்யர்கள் பரபரப்புக்கொண்டார்கள். அவ்வளவுதூரம் தன் உபதேசத்தை கிரகித்தும், அவ்வளவு வருஷங்கள் தன்னுடன் கூடவிருந்து சத்திய மார்க்கத்தில் பழகியிருந்தும், அவர்களுக்குப் பக்குவம் ஏற்படாததைக் கண்டு புத்தன் விசனமடைந்தார்.
ஆனால் நாளைக்கு ராஜ கிருகத்தில் பிக்ஷை இருக்கிறதே!’ என்று ஆட்சேபித்தார்கள் அவர்கள்.
‘இருக்கட்டும்!’ என்று பதில் சொல்லி புத்தன் மௌனமாகிவிட்டார். தோழி சொன்ன செய்தியைக் கேட்டு ஆமிரபாலி மெய் சிலிர்த்தாள். என் பிரபு வருகிறானா என்னைக் காண!” என்று எண்ணி எண்ணி வியந்தாள். ‘எப்பொழுது, எப்படி வருவாரோ?’ என்று யோசித்துக் கொண்டே இருத்தாள்.
ஆமிரபாலி! ஓவிய உருவமா உன்னை இப்படி உருக்குகிறது? நான் இருக்கிறேனே அதைச் சித்தரித்தவன்” என்று காதலன் கெஞ்சினான். ‘உன்னைக் காட்டிலும் அந்த ஓவியம் பெரிது. அதைக் காட்டிலும் பெரிது அந்த மூலமூர்த்தி!! என்றுதான் அவள் சொன்னாள்.
தானே வீடெல்லாம் கழுவி விளக்கேற்றி வைத்தாள்; அவள் மனதை யும் கழுவிவிட்டாள் அத்துடன்! அதில் விளக்குமட்டும் ஏற்றி வைக்க அவர் வரவை எதிர் பார்த்தாள்.
தன் மனையிலும் மனத்திலும் பழைய மாசு கொஞ்சம் கூட, இல்லாமற் போகும்படி நன்றாகத் துலக்கினாள். அவர் வந்து பிக்ஷை பெற அவை யோக்யமாக வேண்டாமா? அவருக்குப் பாத பூஜை செய்ய அவை தகுதியுள்ளனவாக ஆக வேண்டாமா?
பாதி இரவு கழிந்ததுமே அவன் பரபரப்படைந்தாள். விடிய வேண்டு மென்று அவளால் காத்திருக்க முடியவில்லை. அப்பொழுதே எழுத்து சென்று தன் ஆடை அலங்காரங்களை முன்செய்த தீவினைத் தொடர்பு களைப் போல கடைசி முறையாகக் களைந்தெறிந்தாள். சுத்த ஜலத்தில், அறிவில் முழுகுவதுபோல, முழுகித் தூய ஆடை உடுத்துக் கொண்டான். உதயதாரகையின் தெளிவுடனும் தூய்மையுடனும் மாடியில் நின்று கொண்டு அவரை எதிர் பார்த்தான். அவர் எப்பொழுது வருவாரோ? வரும் பொழுது தயாராய் இல்லாமல் ஏமாந்து போகக்கூடாதே!
புத்தன்கூட அன்றிரவு தூங்கவில்லை. ஆமிரபாலியின் அழைப்பு அவருக்கு ஓர் அபூர்வ திருப்தியைக் கொடுத்ததுமின்றி அவர் உள்ளத்தையும் கிளறிவிட்டது. அவளைக்கூட – இளமையும் அழகும் ஐசுவரியமும் நிறைந்த தாசியைக்கூட – ஆழத்தொட்டு எழுப்பிவிட்டது எது என்று ஆலோசனை செய்தார். அது தனது மூர்த்தியல்ல நிச்சயம் – தனது சித்தாந்தம் தான். தனது மூர்த்தி அதனால் ஏற்பட்ட ஒரு ஜ்வாலை, அவ்வளவுதான். சித்தாந்தம் தான் உண்மையான காரணம்-அக்னி அவளுடைய பக்தி அவள் அவரிடம் காட்டிய பிரேமை-சித்தாந்தத்தின் பிரதிபலிப்பு. அதற்கு அவர் கண்ணாடி- இந்தமாதிரி அவர் எண்ணங்கள் ஓடின.
அப்பொழுது உலகமே தன்னை மறந்து உறக்கத்தில் நிவைதப்பி இருந்தது. அருணோதயத்துக்கு முந்தின மங்கல் வேனை. புத்தன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து தனியாக வெளியேறினார் தோப்பை விட்டு, தனியாகப் போளார்- அந்த மௌனத்திலிருந்து கிளம்பின காலைக்குரல் போல. தனியாக வைசாலி நகரத்தில் நுழைந்தார். இருள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிக்கொண்டிருந்த ராஜ வீதியில் ஒளி உருவமாக நடந்து சென்றார். அதை நகரம் அறியவில்லை. நகரம் தூங்கிக்கொண்டிருந்தது. நட்சத்திரங்களற்ற காலைச் சந்திரன்போல புத்தன் தனியாக நடந்து வந்ததை ஆமிரபாலி மாடியிலிருந்து பார்த்துவிட்டாள். தன் உள்ளத்தில் கோவில்கொண்டு விட்ட உருவம் தன்னைத் தேடி வருவதைக் கண்ட அவள் தன்னை மறந்தாள்.
புத்தன் வீதியின் இரு பக்கங்களையும் நிதானமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். எங்கும் யாரும் இல்லை. அந்த நேரத்தில் யார் விழிப்பார்கள்? ஆனால் அவருக்குத் தெரியும், ஆமிரபாலி தன்னை எதிர்பார்த்துக்கொண்டு காத்திருப்பான் என்று. தன் கண்களில் அப்பொழுது பட்ட பெண் வடிவு அவள்தான் என்று அறிந்தார். நடுத் தெருவில் நின்றுவிட்டார்.
ஆமிரபாலி கீழே இறங்கி ஓடிவந்து அவர் காலடிகளில் விழுந்து கால்களைப் பிடித்துக்கொண்டாள். அவளுடைய நீண்ட கேசம் அவர் பாதங்களைத் துடைத்தது.
கருணை பொங்கிய பார்வையுடன் அவனைக் குனிந்து பார்த்து பகவான் அவளைத் தன் கைகள் கொண்டு தூக்கினார்.
‘குழந்தாய், உனக்கு மங்களம் உண்டாகும்!’ என்றார் மெதுவாக. ‘பிரபோ! பாதப் பிரஸாதம் வேண்டும்!’ என்றாள் ஆமிரபாலி. ‘அம்மா, கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போ, வழிகாட்டு பக்தியும் சிரத்தையும் குடிகொண்ட உன் அன்பு மானிகைக்குப் போவோம்!’ என்றார் பிரபு.
‘நான் அளிக்கும் பாத பூஜையை ஏற்க…’ என்று தடுமாறினாள் அவள். ‘பிக்ஷை யிடு!’ என்று பதில் வந்தது பிரபுவிடமிருந்து.
– பாரததேவி 33.07.1939.