ஆப்பிள் பசி





(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம்-7
தலையில் ஜரிகைத் தலைப்பாகையுடன் முனகாலா ராமா நாயுடு மிடுக்குடன் காணப்பட்டார். புஷ்டியான அடர்த்தி மீசை அவர் முகத்துக்கு கம்பீரம் தந்தது.
வெட்கமும் வேதனையும் உடம்பெல்லாம் பிடுங்கித் தின்ன, சாமண்ணா அவர் எதிரில் ஒரு துரும்பாக நின்றான்.

“என்னப்பா சொல்லு ! நீ குடியிருந்த மாடியிலதான் கொலை நடந்திருக்கு. ஓட்டல்காரர் மண்டையில உருட்டுக் கட்டையால அடிச்சிருக்காங்க. உனக்கும் அந்த ஓட்டல்காரருக்கும் ஒரு நாள் பெரிய ‘ரப்சர்’ நடந்திருக்காம். அன்னைக்கு அந்த ஓட்டல்காரரை நீ ஆவேசமா சட்டையைப் பிடிச்சு இழுத்து நடு ரோட்ல கொண்டு போய் மல்லாத்தி, ‘உன்னைச் சும்மா விடறனா பாரு’ன்னு மண்ணை வாரி இறைச்சயாம். இப்ப எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கறே. கொலை நடந்தப்ப ஊர்லயே இல்லேன்னு சாதிக்கிற. இதையெல்லாம் என்னை நம்பச் சொல்றயா?”
இன்ஸ்பெக்டர் தலைக்கு மேல் பிரேமுக்குள்ளிருந்து ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தி நீலக் கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தார்.
சற்று எட்டத்து அறையில் அடைபட்ட கைதி ஒருவன் கம்பிக் கதவைப் பிடித்தவாறு நின்றான்.
ஸ்டாண்டில் நான்கு துப்பாக்கிகள் குத்திட்டு நின்று கொண்டிருந்தன.
“நான் அன்னைக்கு சத்தியமா ஊர்ல இல்லே சார்! அதுக்கு ஆதாரம் இருக்குங்க” என்றான் சாமண்ணா.
“உன் பேரு என்ன சொன்னே?”
“சாமண்ணா!”
“தகப்பனார் பேர்?”
“‘கைலாசம் அய்யர். காலமாகிவிட்டார்.”
“நீ என்ன செஞ்சிட்டிருக்கே?”
“சின்னையா கம்பெனில நான் ஒரு நடிகன்.”
“ஒட்டல்காரரை எத்தனை நாளாத் தெரியும்?”
“ஒரு வருஷமாத் தெரியும். அடிக்கடி நாடகத்துக்கு வருவார். நானும் அவர் ஓட்டலுக்குப் போவேன். அங்கிருந்து வீட்டுக்கு அழைச்சிட்டுப் போவார். ஸ்வீட் கொடுப்பார். அன்பாப் பழகுவார்…”
“அப்புறம் எப்படி ரப்சர்?”
“அவருக்கு ஒரு பெண் இருக்கா. அரைப் பைத்தியம். அதைக் கலியாணம் செஞ்சுக்கச் சொன்னார். நான் முடியாதுன்னேன். அதிலிருந்து ஆரம்பிச்சதுதான்…”
“நீ குடியிருந்த மாடி வீட்டுச் சாவி அவர்கிட்டே எப்படிப் போச்சு?”
“அது அவருடைய வீடாச்சே! அவர்கிட்ட இன்னொரு சாவி இருந்திருக்கும்.”
“வாடகை கொடுக்காம பாக்கி வைச்சிருந்தியா?”
“வாடகையே வேணாம். சும்மா இருந்துக்கோன்னு பலமுறை சொல்லியிருக்கார்….”
“அப்புறம் ஒருநாள் வாடகை கேட்க வந்தப்பதான் கொலை செஞ்சயா?”
“நான் எதுக்கு அவரைக் கொல்லணும்?”
“இந்தாப்பா உண்மையைச் சொல்லிடு. இந்தப் போலீஸ் உத்தியோகத்துலே உன் மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன் தெரியுமா? 302 இந்த ஆளை அந்த ரூமுக்குக் கொண்டு போ! மயிலே, மயிலே இறகு போடுன்னா போடமாட்டார் போலிருக்கு….”
கான்ஸ்டபிள் சாமண்ணாவை அந்த அறைக்குக் கொண்டு போனார்.
அந்த அறை ஒரு கிடங்கு போல் காற்று வசதி, வெளிச்சம் இல்லாமல் இருந்தது. இன்ஸ்பெக்டர் முனகாலா நுழைந்தார்.
சாமண்ணா அழுது கொண்டிருந்தான்.
“ஹீரோவாக இருந்து மேடையில் அழ வேண்டும் என்று நினைத்தேன். கோவலன் வேஷத்துல அழ வேண்டியவன் இப்படி கொலைக்களத்திலே….”
“உண்மையைச் சொல்லிடு. நாடகத்திலே நடிக்கிறதாச் சொல்றே? என்ன வேஷம் போடுவே?”
“அரிச்சந்திரன், கோவலன், நல்லதங்காள் இப்படி எல்லா நாடகத்துலேயும் சின்னச் சின்ன வேஷம்…”
“அரிச்சந்திரன் பொய் சொல்ல மாட்டான். ஆனா நீ பொய் சொல்றே. உண்மையைச் சொல்லிடு. இல்லேன்னா கேஸ் ரொம்ப ஸீரியஸாப் போயிடும்.”
“அன்னிக்கு நான் ஊர்லயே இல்லாதபோது இந்தக் கொலையை நான் எப்படி செஞ்சிருக்க முடியும்?”
“எங்கே போயிருந்தே?”
“வேலி கிராமத்துக்கு…”
“அங்கே என்னா?”
“தெருக் கூத்து பார்த்துக்கிட்டிருந்தேன். அர்ஜுனன் தபஸ், அன்னி ராத்திரி ஊர் ஜனங்க என்னைக் கௌரவிச்சாங்க. நான் ஒரு கலைஞன் என்கிற முறையிலே எனக்கு மாலை போட்டாங்க.”
“சாட்சி இருக்கா?”
“ஊர் முழுக்குமே சாட்சிதான்!”
“அப்படியா?”
முனகாலா யோசித்தார். “இந்தாப்பா கான்ஸ்டபிள்! இவனை லாக்-அப்பிலே போட்டு வை. அப்புறம் விசாரிக்கலாம்” என்று உத்தரவு போட்டார். சாமண்ணா லாக்-அப் அறைக்குக் கொண்டு போகப்பட்டான்.
உள்மனம், ‘இப்படி நாடகக் கம்பெனியிலே சேரவும் வேண்டாம். அடுத்தடுத்து சோதனை வரவும் வேண்டாம். அரிச்சந்திரனுக்குக் கூட இவ்வளவு சோதனை வந்திருக்காது.’
சின்ன வயசில் எத்தனையோ பேர் புத்தி சொன்னாங்க. கேட்டனா? படித்திருக்கலாம். அப்பா மாதிரி கனபாடிகளா யிருக்கலாம். நாலு ஊரில் பாரதம் படித்துச்-சம்பாதிச்சிருக்கலாம். எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு இப்படி விடாப்பிடியாக நாடகத்தில் சேர்ந்தேன். என் தலையெழுத்து! ஒரு பக்கம் மாலை மரியாதை! இன்னொரு பக்கம் போலீஸ் லாக்அப்…!
மறுநாள் காலை கான்ஸ்டபிள் கதவைத் திறந்த போது, ‘இன்னும் என்ன நேரப் போகிறதோ’ என்று நடுங்கினான்.
கான்ஸ்டபிள் அவனை இன்ஸ்பெக்டர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
யாரோ ஒருத்தர் வக்கீல் மாதிரி இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார். தலையில் தலைப்பாகை, நெற்றியில் ஸ்ரீசூரணம், காதில் வைரக் கடுக்கன். கறுப்பு கோட்.
“என்னங்க, இவ்வளவு தூரம்? காலையிலேயே கிளம்பி வந்துட்டீங்களே?” என்று போலீஸ் நாயுடு அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
சாமண்ணா உள்ளே நுழைந்ததும் வக்கீல் அவனை உன்னிப்பாய்ப் பார்த்தார்.
முனகாலா திரும்பினார்.
“இந்தா மேன்! உனக்கு ஜாமீன் கொடுத்திருக்காங்க! நீ போலாம்! ஆனா ஊருக்குள்ளேயே இருக்கணும்; தெரிஞ்சுதா? தினமும் ஒரு தடவை இங்கே ஆஜராகணும்…”
தலையை ஆட்டினான்.
“அப்போ நான் வரேன் நாயுடு” என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டு ஒரு தோரணையோடு புறப்பட்டார் வக்கீல்.
சாமண்ணா வக்கீல் பின்னோடு நாய்க்குட்டி போல் தொடர்ந்து சென்று, “ரொம்ப நன்றி ஐயா, எனக்கு ஜாமீனில் விடுதலை வாங்கித் தந்த உங்களை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன். நீங்க யாரு? எனக்கு எப்படி உதவி செய்ய வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என உணர்ச்சி பொங்கக் கேட்டான்.
“மத்தியானம் மூணு மணிக்கு மேல வீட்டுக்கு வந்து என்னைப் பாரு. தென்னை மரத்துத் தெரு, வக்கீல் வரதாச்சாரி வீடுன்னு கேளு.”
வாசலில் குதிரை பூட்டிய பெரிய பீட்டன் வண்டி நின்றது. வரதாச்சாரி தார்ப்பாய்ச்சிய பின்புறம் தெரிய உள்ளே குனிந்து ஏறி மெத்தையில் அமர்ந்தார். கடுக்கன் அப்படியும் இப்படியும் வெட்டு வெட்டியது. வாயாடித்தனமும் ஓர் அலட்சியமும் சேர்ந்த கம்பீரம் முகத்தில் தெரிந்தது.
ஃபைல் கட்டை எதிர் மெத்தையில் வீசிவிட்டு, காலரைத் தளர்த்தினார்.
மேலே ஏறி உப்பரிகை சீட்டில் உட்கார்ந்த வண்டிக்காரன் ‘டிங்,டிங்’ என்று காலை அழுத்தி மணி அடிக்க, குதிரைகள் இரண்டும் முறித்து இழுத்து பீட்டனைக் கிளப்பிச்சென்றன.
ஓட்டுச்சார்பு இறங்கிய ‘போர்டிகோ’வுடன் பெரிய வீடு. வாசலில் ‘ஆர்ச்’ போல் வளைந்த கம்பிகளின் மீது மல்லிகைக் கொடி மண்டிக் கிடந்தது. ஆள் கதவைத் திறக்க, வரதாச்சாரி சொகுசாகக் கீழே இறங்கினார்.

வாசலில் பாம்பாட்டி மகுடி ஊதிக் கூடை பெட்டியிலிருந்த சர்ப்பத்தைச் சீண்டி ரோஷம் உண்டு பண்ணினான். அது பெரிதாகப் படமெடுத்துச் சீறியது. உள்ளிருந்து மடிசார் மாமி அரிசி கொண்டு வந்து போட்டாள். தலையில் ஈரத்துணி சுற்றிக் கூந்தலோடு சேர்த்துக் கோடாலி முடிச்சுப் போட்டிருந்தாள். படிகள் ஓரம் செம்மண் இட்ட கோலம் வரி வரியாகப் போட்டிருக்க, வாசல் நடையில் ஏறினார் வரதாச்சாரி.
பாதி வெளிச்சமாய் ஒரு கூடம். பெரிய பெரிய கண்ணாடி பீரோக்கள். ஒரு பீரோ நிறைய கொலு பொம்மை.
தலைப்புப் புடைவையை இழுத்து மூடி, பேசரியும், அட்டிகை யும் மின்ன கணவனைத் தொடர்ந்து கூடத்திற்கு வந்தாள்.
“சாமண்ணா தெரியுமோ உனக்கு?” என்று மனைவியிடம் கொஞ்சலாகக் கேட்டார் வரதாச்சாரி.
“கோமாளி சாமண்ணாவா?” என்று மாமி கேட்ட போது அத்தனைப் பற்களும் பளீர் பளீர் என்று ஒளிவீசின.
“ஆமாம்! அவன் நாடகத்தில் வந்துட்டா வாயிலே ஈ பூந்தாக் கூடத் தெரியாம சிரிப்பியே…”
கோமளம் ஒரு தோளைக் குலுக்கிக் கன்னத்தில் இடித்துக் கொண்டாள்.
“அவன் தமாஷ் எனக்குப் பிடிக்கும்னா, நீங்க இப்படித்தான் கேலி பண்ணுவேள்! பக்த ராமதாஸிலே மிளகாப் பொடித் தமாஷ் பண்ணுவான் பாருங்கோ. சிரிச்சு வயிறு புண்ணாயிடும். காதர் பாச்சா ஆர்மோனியமும், சாமண்ணா கோமாளித்தனமும் சேர்ந்துட்டா சொல்லவே வேணாம்.”
“உனக்கு சாமண்ணாவைப் பார்க்கணுமா?”
“ஏன்! நம்மாத்துக்கு வரப் போறானா”
“மத்தியானமா வரச் சொல்லியிருக்கேன். பாவம், ஒரு கொலைக் கேஸ்ல மாட்டிண்டிருக்கான். இன்னைக்கு அவனை ஜாமீன்ல மீட்டுண்டு வந்திருக்கேன்.”
கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்தார்.
அன்று நடந்தது பூராவையும் ரிப்போர்ட் செய்தார்.
“ஆமாம்! இந்தப் பிள்ளையாண்டான் (சாமண்ணா) கொலை பண்ணியிருப்பான்னு நீங்க நம்பறேளா?”
“ஏண்டி, டிராமாக்காரனுக்கு என்ன புத்திடி வரும்? குடிப்பான். கூத்தி வச்சுப்பான். அப்புறம் ஒண்ணொண்ணா எல்லாம் தான் செய்வான்.”
“சாமண்ணாவை அப்படிச்சொல்லாதீங்க! ‘மானீர்! கள்ளுக் குடியாதீர்!’னு ஒரு பாட்டுப் பாடுவானே நாடகத்துலே.”
“அது நாடகம்! அசல் வாழ்க்கையில அப்படியே நடந்துப்பான்னு நம்பறியா?”
“எனக்கென்னவோ அவன் கொலையெல்லாம் செய்வான்னு தோணல்லே…”
“அவனை ஜாமீன்ல விடுதலை பண்ணிக் கொண்டு வரச் சொன்னது யார் தெரியுமோ? அதைக் கேட்கலையே நீ?”
“தெரியாதே, யாரு?”
“மேட்டுக்குடி மிராசுதார் சாம்பசிவ ஐயர் தெரியுமோ?”
“ஏன் தெரியாது! உங்க பெரிய தாத்தாவுக்கு நல்ல பழக்கம்னு சொல்வேளே!”
“அபரஞ்சின்னு ஒருத்தியை அவர் வச்சிண்டிருந்தார்.”
“ஓ! தஞ்சாவூர் நவராத்திரி தர்பார்லே ஆடுவாளாமே அவளா? ரொம்ப அழகா இருப்பாளாமே!”
“அவளுடைய சாட்சாத் மகள்தான் – இப்ப இவனுக்கு ஜாமீன் கொடுத்திருக்கா. அந்தப் பொண்ணுக்கு பாப்பான்னு பேரு.”
“அந்தப் பெண்ணா!”
“ஆமாம்; அம்மாவை அப்படியே உரிச்சு வச்சிருக்கா. கழுத்திலே மூக்கிலே மாட்டிண்டு வந்து நிக்கறயே நீ! அவள் ஒண்ணுமே போட்டுக்கலை! ஒரு ஜோடி தோடு. ஒரு சின்னச் சங்கிலி! அழகுன்னா அப்படி ஒரு அழகு! அசந்துட்டேன்…”
“தெரியுமே! இவ்வளவு காலைல கோர்ட்டுக்குப் போறேன்னு அத்தரும் புனுகுமா நீங்க கிளம்பறப்பவே நினைச்சேன். அந்தப் பெண்ணைப் பாக்க்றதுக்குத்தான் அத்தனை அவசரமா புறப்பட்டேளா?”
“ஏண்டி எனக்கென்ன வயசு? அந்தப் பொண்ணுக்கு என்ன வயசு? என்னைப் போய்…”
“சபலம்தானே? இந்த ஆம்பிளைகளை நம்பவே கூடாது. அதுசரி ; அந்தப் பெண்ணுக்கும் சாமண்ணாவுக்கும் அப்படி என்ன உறவாம்? அவனை மோகிக்கிறாளாமா…?” என்று கேட்டவள் சட்டெனப் பேச்சை நிறுத்தினாள்.
வாசலில் ஒரு நிழல் தெரிந்து அவள் திடுக்கிட்டாள்.
அத்தியாயம்-8
வாசலில் ஓட்டல்காரர் மகள் லல்லு நின்று கொண்டிருந்தாள். ‘அச்சச்சோ’ போல, கையால் முகத்தை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தாள். பிறகு தாவணி தடுக்காமலிருக்க ‘ததக் பிதக்’ என்று காலை வைத்து உள்ளே வந்தாள்.
வக்கீல் மாமி கோமளத்திற்குக் கதி கலங்கிற்று. அவள் லல்லுவைப் பலமுறை பார்த்திருக்கிறாள். சும்மா இருந்தால் இருப்பாள். இல்லாவிட்டால் யாரையாவது ஒரு அடி அடிப்பாள். ஊர்ப் பசங்கள் அவளை ‘அடி’ லல்லு என்று கூப்பிட்டு அவளுடைய எலிவால் தலைமயிரைப் பிடித்து இழுப்பார்கள். லல்லு அவர்களை அடிப்பதற்குத் துரத்துவாள்.
“வா, லல்லு” என்று கோமளம் வாய் நிறையச் சிரித்து அழைத்தாள்.
உண்மையில் சிரிக்கவில்லை. பயத்தை மாற்றிக் கொண்டு சிரிப்பது போல் பாசாங்கு செய்தாள். “ரே, ரே, லல்லுவா?” என்றார் வரதாச்சாரி.
“மாமா! மாமா! சாமண்ணாவை ஜெயில்லே போட்டிருக்காளாமே! உங்களுக்குத் தெரியுமா?” என்று சோகத்தோடு, கேட்டாள் லல்லு.
“தெரியாதேம்மா!”
“எங்க அப்பாவை அவர் கொன்னுட்டார்னு சொல்லி போலீஸ்ல அவரைப் பிடிச்சுண்டு போய் ஜெயில்லே வச்சிருக்காளாமே! எனக்கு அழுகையா வரது மாமா! நீங்க எனக்குக் கொஞ்சம் உதவி’ பண்ணுவேளா?”
“என்ன செய்யணும்?”
“பாலு மாமா கிட்ட போய் உதவி கேட்டேன். அவர் வக்கீல் மாமாகிட்டே போன்னு சொல்லிட்டார். நீங்க போய் போலீஸ்காரா எல்லாரையும் ஜயிச்சு சாமண்ணாவை இழுத்துண்டு வரணும்.” என்று மாமி பக்கம் திரும்பி, “வக்கீல் மாமா கிட்ட நீங்க சொல்லுங்க மாமி!”
“சொல்றேன். மாமாவுக்கு என்ன ஃபீஸ் தருவே!”
“எவ்ளோ வேணாலும் தருவேன். எங்கப்பா பீரோ நிறையப் பணம் வெச்சிருக்கார்!”
“சரி செய்யறேன். சாமண்ணாகிட்டே உனக்கு ஏன் இத்தனை அக்கறை?”
“தெரியாதா மாமா! அவரைத்தானே நான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். அப்பா சொல்லிண்டிருந்தாரே!”
“அவன்தான் கொலை பண்ணிட்டு கேஸ்ல மாட்டிண்டிருக்கானே!”
“ஐயோ! அது அவர் செய்யலை மாமா! வேற ஆளு” தலையில் அடித்துக் கொண்டாள்.
“யாரு அது?”
“எனக்குத் தெரியும். முதல்ல நீங்க சாமண்ணாவை ஜயிச்சுண்டு வாங்கோ. அப்புறம்தான் நான் அதைச் சொல்வேன்.”
வந்தது போலவே திரும்பினாள். வாசலை நோக்கி வேகமாகப் போனாள். வாசல் படிகளில் நொண்டி அடித்து இறங்கினாள். தெருவில் பாண்டி ஆடுவது போலக் குதித்துக் குதித்துப் போனாள்.
மத்தியானம் மூணு மணிக்குச் சொல்லி வைத்தாற் போல் சாமண்ணா வந்தான்.
வாசலில், தென்னை மரத்தின் கீழ் பசு மாட்டைக் கட்டிக் கறந்து கொண்டிருந்தான் வேலைக்காரன்.
உள்ளே காப்பி களேபரத்தில் இருந்தாள் கோமளம். கூடத்தில் டிகாக்ஷன் மணத்தது.
வரதாச்சாரி தமது கருங்காலி மேஜை முன் உட்கார்ந்து, மறுநாள் கேசுகளின் பைல் பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணுசாமி இழுக்க, மேலே பங்கா ஆடியது.
“ஸார்” என்று அடங்கிய குரலில் அழைத்தான் சர்மண்ணா. வரதாச்சாரி திரும்பிப் பார்த்தார்.
“வாப்பா!” என்றார்.
உள்ளே வந்தவன் உட்காராமல் பவ்யமாக நின்று கொண்டே இருந்தான்.
‘உட்காரப்பா” என்றார்.
பெஞ்சு ஓரத்தில் சொல்பமாக உட்கார்ந்தான். கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன.களைப்பாக இருந்தான்.
“ஸார்! நீங்க இப்படி ஒரு டிராமா நடிகன் மேல பெரிய மனசு பண்ணி, விடுதலை வாங்கித் தந்தீங்களே, ஏழேழு ஜன்மத்துக்கும் கடமைப்பட்டிருக்கேன்”, என்று வரதாச்சாரி எதிர்பார்ப்பதற்கு முன் அவர் காலடியைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டு எழுந்தான்.
வேண்டாம் என்பது போலக் கால்களைத் தூக்கிக் கொண்டார் வரதாச்சாரி. “இதெல்லாம் எதுக்கு சாமண்ணா? யாரோ பணம் கொடுத்தாங்க. நான் என் தொழிலைத்தான் செஞ்சேன். இதிலே வேறே ஒண்ணுமில்லை.”
இதற்குள் கோமளம் கூடத்திற்குள் வந்து சாமண்ணாவைப் பார்த்ததும் தயங்கி நின்றாள்.
“வா! சர்மண்ணாதான்! வந்து பாரு” என்றார் வரதாச்சாரி. கோமளத்தின் நினைவில் சாமண்ணாவின் நாடகச் சேட்டைகள் எல்லாம் நிழலாட, பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒதுக்கமாக நின்றாள்.
“நமஸ்காரம் மாமி” என்று உள்ளே பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு, ”உங்காத்து மாமாதான் என்னைக் காப்பாத்தினார். ஜன்மத்துக்கும் மறக்க மாட்டேன். எனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை என்னால தாங்க முடியலை. நான் கொலைகாரன் இல்லைங்கறதை வக்கீல் ஸார்தான் வாதாடி நிரூபிக்கனும், அப்பதான் நான் நாலு பேருக்கு முன்னால தலைநிமிர்ந்து நடமாட முடியும்” என்றான்.
“உங்க டிராமா நிறையப் பார்த்திருக்கேன். உங்க நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடவுள் உங்களைக் காப்பாத்துவார். கவலைப்படாதீங்க” என்று சொன்ன கோமளம் உள்ளே போய் இரண்டு பேருக்குமாகக் காப்பி கலந்து கொண்டு வைத்தாள்.
சூடாக அதைச் சாப்பிட்ட பிறகுதான் வக்கீல் ஸார் புது மனிதர் போலப் பேசினார்.
குரலை வெகுவாகத் தணித்து, “ஏம்பா, உனக்கும் அந்தப் பாப்பாவுக்கும் ஏதாவது உறவு இருந்தா எங்கிட்ட கூச்சப்படாமல் சொல்லு” என்றார்.
சர்மண்ணா காலி டம்ளரைத் தள்ளி வைத்தான்.
“அப்படி எதுவுமில்லை ஸார்! அந்தப் பெண்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளணும்னு நினைக்கிறா!”
“நீ அப்படி நினைக்கலையாக்கும். அவ மட்டும்தான் உன் மேலே பிரேமை வச்சிருக்காளா? உனக்கு இஷ்டமில்லையா?”
“இஷ்டமில்லைன்னு சொல்ல மாட்டேன். நான் இன்னும் ஒரு முடிவுக்கு வரலை. அவள் என் நடிப்பிலே ஒரு ரசிப்பு வச்சிருக்கா! அந்த வகையில் நானும் அவளோட சிநேகமா யிருக்கேன்.”
“அவ்வளவுதானே. ஒரு வேளை வேற சம்பந்தம் ஏதாவது உண்டோன்னு…”
“அப்படியெல்லாம் கிடையாது ஸார்!”
“அதானே கேட்டேன்” என்று சொல்லி வரதாச்சாரி இழுத்தார்.
“சொல்லப்போனா ஏதோ அபிமானத்துலதான் அவள் இந்த உதவியை எனக்குச் செய்திருக்கணும். அவளைப் பார்க்கவே எனக்கு. வெட்கமாயிருக்கு. எனக்கு முழு விடுதலை வாங்கித் தந்துட்டீங்கன்னா ஊரை விட்டே போயிடுவேன். வேறு எங்கயாவது டிராமாக் கம்பெனிலே சேர்ந்துப்பேன்!”
“இரு! இரு! விசாரணை முடியட்டும். முதல்ல நீ கொலை செய்யலைன்னு நிரூபிச்சாகட்டும். அப்புறம்தான் மற்றதெல்லாம்” என்றார் வரதாச்சாரி.
சாமண்ணா மறுபடியும் வந்து பார்ப்பதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டான். எட்ட நின்றபடியே மாமிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, “காப்பி ரொம்ப நன்றாயிருந்தது மாமி! காலையிலிருந்து தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இப்ப பட்டுனு நின்னுப் போச்சு” என்றான்.
மாமிக்குப் பரம் சந்தோஷம்.
சாயங்காலம் பாப்பா வந்தபோது வரதாச்சாரி தமது அலுவலக அறையில் உட்கார்ந்திருந்தார்.
வாசலில் வண்டிச் சத்தம் கேட்டதும் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்.
பாப்பா ஒரு மின்னல் போலப் பின் படியில் இறங்கிக் கொண்டிருந்தாள்.
மயில் நிறத்தில் புடைவை, மேலே இடது தோள் ஓரம் ப்ரூச் குத்தியிருந்தாள். இடுப்பை இறுக்கி ஒட்டியாணம்.
குமாரசாமி அவள் பின்னோடு வந்தான்.
அறைக்குள் வந்தபோது பரிமளம் வீசிற்று.
நல்ல நிலவில் சமைத்த முகம். இரு கண்ணும் மருட்சியாகப் பார்த்தபோது யௌவனம் அவளைக் கனவு சுந்தரியாகக் காட்டியது.
கண்களில் கவலை தெரிய, வந்ததும் வராததும், “ஸார், காரியம் வெற்றியா?” என்று வக்கீலைப் பார்த்துக் கேட்டாள்.

வரதாச்சாரி சிரித்தார். “கவலைப்படாதேம்மா! எல்லாம் சரியாப் போயிடுத்து. ஜாமீன்ல விட்டாச்சு! முனகாலா அவசரப்பட்டுக் கைது பண்ணிட்டார்! சாமண்ணா கிட்டே வலுவான அலிபை இருக்கு! அன்னி ராத்திரி பூரா உங்க ஊர் தெருக்கூத்திலே இருந்திருக்கான். அந்த ஊரே கூடி வந்து சாட்சி சொல்லுமே, இது போதும் எனக்கு. இனிமே போலீஸ் அவன் மேல கை வைக்க முடியாது. அது சரி; வாசனை ஜமாய்க்கிறதே. என்ன ஸெண்ட் அது? ஆட்டோ தில் பஹாரா?”
பாப்பா முகம் தாமரையாக மலர, “அவரை விட்டாச்சா? இப்ப எங்கே இருக்கார்?”
“எனக்குத் தெரியாது. அப்புறம் வரேன்னு சொல்லிட்டுப் போயிருக்கான். எங்கே போவான்? டவுன்லதான் எங்கேயாவது இருப்பான்.”
“ஏதாவது சொன்னாரா?”
“அதிகமாப் பேசலே, அப்படியே நன்றிப் பெருக்கிலே நனைஞ்சு போய் நின்னான். தழதழத்துப் போயிட்டான்.”
“ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணினது யார்னு கேட்டாரா?”
“கேட்டான்!”
“என்ன சொன்னீங்க?”
“உன் பேரைச் சொன்னேன்!”
“அப்ப என்ன சொன்னாரு?”
“உன் பேரைச் சொன்னதும் முகமெல்லாம் பிரகாசமாச்சு!”
“அப்புறம்?”
“ரொம்ப ஒண்ணும் பேசலை. முகத்துல நன்றி தெரிஞ்சுது.”
“அப்புறம்?”
வக்கீல் விழித்தார். பாப்பாவின் கேள்விகளில் அவளது தத்தளிப்பு தெரிந்தது.
“வேறே ஒண்ணுமே சொல்லலையா?”
“சொன்னான், மாமியைப் பார்த்து, ‘நீங்க கொடுத்த காப்பி நன்னாயிருந்தது’ ன்னு சொல்லிட்டுப் போயிட்டான்.”
“என்னைப் பார்க்கணும்னு ஒரு வார்த்தை கூடச் சொல்லலையா?”
வக்கீல் சற்றுத் தவித்தார்.
“அதெல்லாம் அவர்கிட்ட சொல்வானா? ரொம்ப நல்ல பையன்! கட்டாயம் அவனே உன்னைத் தேடிண்டு வருவான் பாரு!” என்றாள் கோமளம் மாமி.
“மாமி, இவர் எப்ப வந்தார்? எவ்வளவு நேரம் இருந்தார்? நீங்க அவரோட பேசினீங்களா?”
“இதோ இந்த பெஞ்சு ஓரத்துலதான் உட்கார்ந்துண்டிருந்தான். அரை மணி நேரம் இருந்தான். காப்பி கொடுத்தேன்… சாப்பிட்டான்.”
அவசரமாக அந்த ஓரத்தை ஒரு பார்வை பார்த்துத் திரும்பினாள்.
“அவனுக்குப் பெரிய நிம்மதி. விடுதலை கிடைச்சுது கோடி சம்பத்து கிடைச்ச மாதிரி!”
குமாரசாமி ஒரு கித்தான் பை கொண்டு வந்திருந்தான். அதிலிருந்து ஒரு வெள்ளித் தட்டையும் பழங்களையும் எடுத்தான்.
பாப்பா அதை வாங்கி நன்றிப் பெருக்கோடு வரதாச்சாரியிடம் கொடுத்து விட்டு நமஸ்காரம் செய்தாள்.
“இதெல்லாம் எதுக்கம்மா?” என்று அவர் தயங்க, “இருக்கட்டும்! எனக்கு நீங்க பெரிய உதவி செஞ்சிருக்கீங்க! இது என் வாழ்க்கையிலே மறக்க முடியாத கட்டம்!” என்றாள் பாப்பா.
“வரட்டுங்களா?” என்று வக்கீலிடம் விடை பெற்றுக்கொண்டான் குமாரசாமி.
“சரி, அடுத்த வாரம் ஒரு நடை வந்துட்டுப் போங்க. வரச்சே, நல்ல முருங்கைக்காயா கிராமத்திலிருந்து கொண்டு வாங்க” என்றார் வரதாச்சாரி.
தந்தையும் மகளும் புறப்பட்டார்கள். குமாரசாமி போவதற்கு வழிவிட்டு, பாப்பா தயங்கினாள். சட்டென்று அந்த பெஞ்சு ஓரத்தைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அது, சீதை அனுமனிடமிருந்து கணையாழியை வாங்கி ஒற்றிக் கொண்ட மாதிரி இருந்தது.
தட்டைப் பார்த்துக் குனிந்திருந்த வரதாச்சாரி தலைதூக்க அந்தச் செய்கையை உடனே கவனித்து விட்டார்.
ஒருகணம் அவர் கண் பனித்தது.
குமாரசாமியும் பாப்பாவும் போனதும் வக்கீல் மாமி, “மூக்கும் முழியுமா தேச்சு வச்ச குத்து விளக்காட்டம் ரவிவர்மாப் படம் மாதிரி எத்தனை அழகா இருக்கா இந்தப் பெண்? சாமண்ணாகிட்ட உயிரையே வெச்சிருக்காளே. அந்தப் பிள்ளை யாண்டான் என்னடான்னா விட்டேத்தியா ஒட்டுதல் இல்லாம இருக்கான். அவன் வந்தா புத்தி சொல்லணும்…” என்றாள்.
“நீ கூடச் சின்ன வயசிலே இப்படித்தாண்டி இருந்தே!’ என்று மனைவியின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினார் வக்கீல்.
ஒரு வாரம் வரை, சர்மண்ணா மேக்-அப் மேன் வீட்டு மாடியில் தங்கி இருந்தான். வெளியில் எங்கும் போகவே இல்லை. துக்கமாக இருந்தது நாடக வாழ்வு முடிந்தது போலத் தோன்றியது.
இனி கொலைக் கேஸ் முடிகிற வரை நாடகம் எங்கே நடக்கப் போகிறது?
வேறு ஊருக்குப் போய் விடலாமா? வேறு கம்பெனி எங்கேயாவது பார்த்துச் சேரலாமா? எத்தனை நாள் இப்படி வேலை எதுவுமில்லாமல் வண்டியை ஓட்ட முடியும்?
வாசல் கதவை யாரோ தட்ட, சற்றுக் கலங்கிய கண்களுடன் சாமண்ணா எழுந்து போய்த் திறந்தான்.
அத்தியாயம்-9
ஒரு வாரம் வரை கொலைக் கேஸ் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இன்ஸ்பெக்டர் முனகாலா கூப்பிட்டு விடுவார் என்று சாமண்ணா தினமும் எதிர்பார்த்தான். யாரும் கூப்பிடவில்லை. வக்கீலிடமிருந்தும் எந்தச் செய்தியும் வரவில்லை.
அரிதாரம் பூசிக் கொள்ளாத நாட்கள் எல்லாம் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. பொழுதும் போகவில்லை. தூக்கமும் வரவில்லை. மனசு அரித்துக் கொண்டே இருந்தது.
டிராமா போட்டு ஊரில் ஏழெட்டு மாதங்களாக ஏற்பட்டிருந்த களை இப்போது அடியோடு போய் விட்டது. கிழிந்த நோட்டீசுகள் ஆங்கங்கே ஊசலாடிக் கொண்டிருந்தன. பாண்டு வாத்தியம் ஊமையாகி விட்டது. ‘சூரியகுளம்’ டிராமாக் கொட்டகை ‘அம்போ’ என்று சோர்ந்து கிடந்தது.
நாடகம் நின்று போனதில் சாமண்ணாவின் துக்கத்தைக் காட்டிலும், வக்கில் மனைவியின் வருத்தம்தான் அதிகம்.
ஊரில் பொழுது போவதற்கு வேறு என்ன இருக்கிறது? தை, சித்திரை மாதங்களில் பெரிதாகத் திருவிழா நடந்து அதுவும் உடனே அடங்கி விடும். மற்ற நாட்களில் ஒன்றுமே கிடையாது. கடந்த சில மாதங்களாய் டிராமாதான் அந்த ஊரின் உயிரோட்ட மாயிருந்தது.
வக்கீல் வீட்டு வாசலில் கலாய்க்காரர் பாத்திரங்களுக்கு ஈயம் பூசிக் கொண்டிருந்தார். தெரு ஓரம் பள்ளம் தோண்டி ஈர மண்ணில் துருத்தியைப் பொருத்தி, ‘கலாய்’ பூச வேண்டிய பாத்திரங்களுக்கு நவசாரம் பூசிக் கொண்டிருந்தான் துருத்தி ஊதும் பையன். வக்கீல் மாமி நிறையப் பாத்திரங்கள் கொடுத்திருந்ததால் வாசலில் வந்து காவலாக நின்று கொண்டிருந்தாள். சைனாக்காரன் ஒருவன் முதுகில் மூட்டையுடன் ‘சில்க்’ துணிகள் என்பதை வினோதமாய் ஒரு ஒலி எழுப்பிக் கூவிக் கொண்டு போனான்.
பள்ளிச் சிறுவர்கள் இரண்டு பேர் தெருவில் பாடிக் கொண்டு நடந்தார்கள்.
“ஆனா ஆவன்னா! அலேக் ராஜா சாமண்ணா!”
அதைக் கேட்டதும் கோமளத்துக்கு சாமண்ணாவின் நினைவு வர, சட்டென்று உள்ளே போய் வரதாச்சாரியைப் பார்த்து, ”ஏன்னா! அப்புறம் சாமண்ணா கேஸ் என்னாச்சு! எல்லாம் கப்சிப்புனு இருக்கே! சாமண்ணா ஊர்லதான் இருக்கான்? நாடகம் கீடகம் நடக்குமா, நடக்காதா?” என்று கேட்டாள்.
வரதாச்சாரி பருமனான ‘லா’ புத்தகத்தை மடக்கி நகர்த்தி வைத்துக் கொண்டே, “கேஸ் என்னடி கேஸ்! கொலை நடந்த அன்னைக்கு சாமண்ணா ஊர்லயே இல்லையே! இன்ஸ்பெக்டர் முனகாலா மூக்கு உடைபட்டுப் போனான் தெரியுமோ? சாமண்ணாவைப் பத்தி என்னவோ இல்லாததும் பொல்லாததுமாப் பேசினான். பொய்க் கேஸ் ஜோடிக்கிறதுலே அவன் பெரிய புலியாச்சே! ஆனா அந்தப் புலி என்கிட்டே வாலாட்ட முடியலை. அவ்வளவையும் தகர்த்தெறிஞ்சுட்டேன். முனகாலாவுக்கு யாரையாவது இப்ப இந்தக் கேஸ் சம்பந்தமா அரெஸ்ட் பண்ணி ஆகணும். பாவம், கிடந்து திண்டாடறான்.”
“அது சரி; சாமண்ணா என்ன ஆனான்? அப்புறம் அவனைக் காணவே காணமே! மறுபடியும் நாடகம் நடத்தப்போறாளாமா? இல்லை, இனி நடக்கவே நடக்காதா?” என்று வருத்தப்பட்டாள்.
வரதாச்சாரி பேசவில்லை.
“வாயை மூடிண்டு பதில் சொல்லாம இருந்தா எப்படி? பாவம், அந்த சாமண்ணாவை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. அந்த அப்பாவிப் பையனைப் பார்த்தா கொலை பண்ணினவன் மாதிரியா இருக்கு! அவன் முகத்திலே தேஜஸ் ஜொலிக்கிறதே! அவனுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்கோ! ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுங்கோ.” கோமளம் கொஞ்சம் தாங்கலோடு ஊஞ்சலில் போய் உட்கார்ந்தாள்.
“வாப்பா,வா! உனக்கு ஆயுசு நூறு” என்ற வரதாச்சாரியின் குரல் கேட்டுத் திரும்பினாள். இரண்டாம் நிலை வாயிலின் வழியே சற்று இளைத்துப் போன உருவம் உள்ளே நுழைந்தது. “உள்ளே போ. உன்னைப் பார்க்கவே முடியலையேன்னு மாமி தவிச்சுண்டிருக்கா, உன் கேஸ் என்ன ஆச்சுன்னு ரொம்பக் கவலைப்படறா” என்று வக்கீல் சொல்ல, வருவது சாமண்ணா என்று தெரிந்ததும், கோமளத்தின் முகம் பிரகாசமாயிற்று.
சாமண்ணா கைகூப்பி நின்றான். “வா.வா,உட்காரு, உட் காரு” என்று மாமி இரண்டு முறை ஆர்வத்தோடு அழைத்த பிறகும் சாமண்ணா உட்காராமல் கூடத்துத் தூணில் சாய்ந்தும் சாயாமலும் நின்றபடி, “பரவாயில்லை மாமி!” என்றான்.

பக்த பிரகலாதன் நாடகத்தில் அவன் பிரகலாதனாக வந்து தூண் பக்கத்தில் நிற்கும் சாயல் போலவே இருந்தது அது. கோமளத்திற்குச் சிரிப்பு வந்துவிட்டது! சாமர்த்தியமாக அதை அடக்கிக் கொண்டாள்.
“சாமண்ணா! இப்போ என்ன செய்துண்டிருக்கே? எப்படி இருக்கே? உங்க டிராமா இல்லாமே இந்த டவுனே டல்லாப் போச்சுப்பா. ஊர்ல உற்சாகமே இல்லே. பாவம்,இளைச்சுட் டியே!” என்றாள் ஆயாசத்தோடு.
“என்ன சொல்வேன் மாமி! நானும் தான் டிராமா இல்லாமே ரொம்பக் கஷ்டப்படறேன். நாடக நடிகன்னா வாழ்க்கையில் அவன் வேறு எதுக்குமே லாயக்கில்லை! மத்தவா மாதிரி வேறு தொழில் செய்து பிழைக்கவும் தெரியாது. திரும்பவும் நாடகம் எப்ப ஆரம்பிக்கப் போறாங்கன்னுதான் நானும் காத்துட்டு இருக்கேன். ஹ்ம்… அதுக்கிடையிலே இந்தக் கேஸ் வேறே” என்று பெருமூச்சு விட்டாள்.
‘”ஏன்? மிச்சப் பேரெல்லாம் என்ன செஞ்சிண்டிருக்கா? எல்லோரும் சேர்ந்து ஆரம்பிக்கலாமே!”
“செய்யலாம், பணம் வேணாமா?”
“பணமா!” என்று சற்றே பார்வையை உயர்த்திய கோமளம், “நீ நினைச்சா பணம் வராதா என்ன?”
“எப்படி மாமி வரும்? நானே இங்கே சோற்றுக்கு லாட்டரி அடிச்சிண்டிருக்கேன்!”
“அப்படியெல்லாம் பேசாதே! அனுமான் பலம் அனுமானுக்குத் தெரியாது. உன் நடிப்பிலே மயங்கிப் போனவா எத்தனை பேர் தெரியுமா? தலையெழுத்தா உனக்கு? கையில வெண்ணெயை வெச்சுண்டு நெய்க்கு அலைவாளோ?”
“கையில் வெண்ணெயே இல்லை. வெறும் திண்ணையிலதான் உட்கார்ந்துண்டு பொழுது போக்கறேன். வெண்ணெய் எங்கே இருக்கு?”
“நன்னா யோசிச்சுப் பார்த்தாத் தெரியும்.’
“புதிர் போடாதீங்க; எனக்கு ஒண்ணும் விளங்கலே.”
“அந்தப் பொண்ணு பாப்பா இருக்காளே! அவகிட்டே எக்கச்சக்கப் பணம் இருக்கே! உனக்காக அவள் உயிரையும் கொடுப்பாளே! லேசா ஒரு வார்த்தை விட்டாப் போதுமே! மகாலட்சுமி மாதிரி கொண்டு வந்து கொட்டுவாளே! உனக்கில்லாததா?”
“கொடுப்பாள்; ஆனால் அதிலே எனக்கு விருப்பமில்லையே…”
“ஏன் அப்படிச் சொல்றே?”
“காரணமாத்தான்! எனக்கு இஷ்டமில்லைன்னா அதில் ஏதோ விஷயம் இருக்குன்னு வச்சுக்குங்க…”
“அப்படியா? அவள் ஜாமீன் மட்டும் வேணுமாக்கும்? அது பரவாயில்லையோ?”
“நானா அவளை ஜாமீன் கேட்டேன்? அவளாவேதான் எனக்குத் தெரியாம இதைச் செஞ்சிருக்கா. முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா நான் அனுமதிச்சிருக்கவே மாட்டேன்.”
“அவள் இல்லேன்னா வேறே யாரு உன்னை வெளியிலே கொண்டு வந்திருக்கப் போறா? ஜெயில்ல கிடந்து திண்டாடியிருப்பே. அதுக்காக நீ அவளுக்கு நன்றி சொல்லணும். அதை விட்டுட்டு யார் செய்யச் சொன்னா, எவா செய்யச் சொன்னான்னு கேட்கிறியே, இது உனக்கே நியாயமாயிருக்கா?” என்று சிறிது காரமாகவே பேசிய கோமளம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
“யாரும் செய்திருக்க மாட்டாங்கறது நன்னாத் தெரியும். நன்றியோட இருக்கணுங்கறதும் தெரியும். நீங்க வருத்தப்படாதீங்க. என்னைப் பத்தித் தப்பா நினைச்சுக்காதீங்க. என் மேலே கோபப்படாதீங்க. இந்த விஷயத்துலே நான் நினைக்கிறது வேறே. அதையெல்லாம் உடைச்சுப் பேச இது சந்தர்ப்பம் இல்லை. பின்னாலே நானே சொல்றேன் உங்களுக்கு” என்றான்.
“என்னவோ, அந்தப் பெண் உன் மேல வெச்சிருக்கிற பிரியத்தை நீ புரிஞ்சுண்டா சரி.”
“பிரியமாத்தான் இருக்கா, ஒத்துக்கறேன். ஆனா அதுக்கு மேலே போயிடக் கூடாதேன்னுதான் கவலைப்படறேன். உங்களுக்குத் தெரியாததில்லை. நான் பிராமணக் குடும்பத்துல பிறந்தவன். எங்கப்பா சாமவேதம் படிச்சவர். கௌரவமா வாழ்ந்தவர். அவர் வயத்துலே பிறந்த நான் எங்க குடும்ப கெளரவத்தைக் காப்பாத்தணும் இல்லையா? சாதாரண நிலையிலேருந்து ஏதோ கொஞ்சம் முன்னேறி என் வயத்தைக் காப்பாத்திக்கிற நிலைக்கு வந்திருக்கேன். ஒரு சமயம் நினைச்சா, அது கூட வந்தாச்சான்னு சந்தேகமா இருக்கு!”
“அதெல்லாம் வந்தாச்சு. அசம்பாவிதமா இந்தக் கொலைக் கேஸ் குறுக்கிட்டு உன்னை நிம்மதியில்லாமப் பண்ணிடுத்து. இல்லைன்னா இத்தனை நேரம் நீ ஜாம்ஜாம்னு நாடகத்திலே ராஜாவாட்டம் நடிச்சிண்டிருப்பியே!”
“அதுக்குத்தான் நானும் ஆசைப்படறேன். ராஜா ஆகாட்டாலும் ராஜா மாதிரி நடிக்கிறதுக்காவது ‘சான்ஸ்’ கிடைக்காதான்னு ஏங்கிண்டு இருக்கேன்.”
“நிச்சயமாக் கிடைக்கும்; கவலைப்படாதே!”
“கிடைக்கணும்! உங்க ஆசீர்வாதம். அப்புறம் பாருங்கோ, எனக்குச் சின்ன வயசிலே பெரிசு பெரிசா கனவு கண்டே வழக்கமாயிடுத்து. நான் ஓகோன்னு வரணும்! ஆமாம்! சாதாரணமா செலவுக்குக் கிடைச்சது வரவு என்கிற மாதிரி இல்லாமல் அமோகமா வாழணும். எங்க தாத்தா அப்படி வாழ்ந்தாராம். அம்மா சொல்லிச் சொல்லி ஆச்சரியப்படுவா. அந்த அமோகத்தை நானும் எட்டணும். அதுக்குக் கடவுள் அனுக்கிரகம் இருக்கணும்.”
“நடக்கும்! நடக்கும்! ஏன் நடக்காது?”
“இருந்தாலும் மனித யத்தனம்னு ஒண்ணு இருக்கோல் லியோ! நான் இப்ப அந்த யத்தனத்திலே இருக்கேன் எ த்தனை நாள்,எத்தனை காலம் யத்தனம் பண்ணணுமோ, அதுவரைக்கும், அந்த லட்சியத்தை அடையற வரைக்கும், நான் என் சொந்த சுகத்தில், சொந்த வசதியில் ஆழ்ந்துடக் கூடாதுன்னு கங்கணம் கட்டிண்டிருக்கேன்.”
கோமளம் சற்றே வியப்பாகநிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் குரலில் ஒரு வைராக்கியம் தொனித்தது.
“மாமி! சாமண்ணாவுக்கு ஆசை, பாசம், நேசம், இதயம் இதெல்லாம் எதுவும் இல்லைன்னு நினைச்சுடாதீங்கோ!எல்லாமே இருக்கு! நிறையவே இருக்கு! நான் நடிகனாச்சே! இல்லாத உணர்ச்சியை எல்லாம் கூட இருக்கும்படி காட்டணுமே! ஆனா மாமி இந்த உணர்ச்சி எல்லாத்தையும் நான் மறக்கடிச்சுட்டு புழுவா வாழ்ந்திருண்டிருக்கேன். என் மேலே அனுதாபப்பட்டு யாராவது உதவி செய்ய முன்வந்தால் அவாளையும் என் துரதிர்ஷ்டம் துரத்தும். அப்படி ஒரு ராசி எனக்கு! என்ன ஆனாலும் சரின்னு நான் ஒரு வெறியோடு, லட்சியத்தை நோக்கிப் புறப்பட்டிருக்கேன். எங்கே போய் நிற்பேனோ எனக்கே தெரியாது. நான் திடமாச்செயல்படணும். அப்பப்போ சோதனை வரும். அதுக்கெல்லாம் ஈடுகொடுத்து நிமிர்ந்து நிற்கணும். உள் மனம் அப்பப்போ என்னைச் சுண்டி விட்டுக் கொண்டே இருக்கு. ‘டேய் சாமண்ணா, எச்சரிச்கையா இருடா. இப்போ கிடைக்கிற களாக்காய் மேலே கண் வைக்காதேடா. அப்புறம் பலாக்காய் கிடைக்காமல் போயிடும்’னு. அதனால்தான் இந்த ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டேன் மாமி!” என்றான்.
கோமளத்திற்கு அவன் பேச்சு வியப்பைத் தந்தாலும் அதனூடே மனம் உடைந்து போன ஒரு நடிகனின் லட்சியக் குரல் கணீர் என்று ஒலித்தது.
“அப்படின்னா இப்ப என்ன செய்யப் போறே? அந்தப் பெண் உதவியே வேண்டாம் என்கிறாயா?”
“செய்த உதவி வரைக்கும் சரி. அதுக்காக அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். ஆனால் அது என் மனசிலே ஒரு பாசத்தை வளர்த்து எங்கள் உறவைப் பலப்படுத்திடக் கூடாதேன்னுதான் பயப்படறேன்.”
“அதென்ன மர்மமோ? அதென்ன பயமோ! கேட்டாலும் சமயம் வரப்போ சொல்றேங்கறே? அப்படின்னா உனக்கு யார் உதவியும் வேண்டாம் என்கிறயாக்கும்?”
“அப்படிச் சொல்லுவேனா? இப்போ வேறு யாராவது தனவான், கனவான் உதவி செய்வதாயிருந்தால் அதை தாராளமா ஏத்துப்பேன்…”
அவனை மீறி ஒரு நாடகச் சிரிப்புச் சிரித்தான்.
“நீ சொல்றதெல்லாம் நியாயமாத்தான் இருக்கு. ஆனா இப்ப இந்த இக்கட்டிலிருந்து நீ தப்பிக்கணுமே! அதுக்கென்ன வழி? அதுதான் எனக்குப் பெரிய கவலையாயிருக்கு. மாமாவைப் பார்த்துப் பேசிட்டுப் போ. அவர் உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். அடிக்கடி வந்து அவரைப் பார்த்துப் பேசு. நானும் அவரிடம் சொல்றேன். நல்லது நடக்கும்.”
சாமண்ணா கைகூப்பி, “வரேன் மாமி! உங்க ஆசீர்வாதம் எப்பவும் இருக்கணும்!” என்றான்.
வரதாச்சாரி உள்ளே வந்தார்.”சாமண்ணா சொல்றதைக் கேட்டேளா?” என்று இழுத்தான்.
“கேட்டேன்! கேட்டேன்! எனக்கு மட்டும் பாப்பா மாதிரி அழகோடும் சொத்தோடும் ஒரு பெண் கிடைச்சிருந்தா இந்த நிமிஷத்திலேயே அவளைக் கல்யாணம் பண்ணிண்டிருப்பேன்” என்றார் வக்கீல்.
“உக்கும்! பண்ணிப்பேளே! இன்னும் நாலு கல்யாணம் கூடப் பண்ணிப்பேள். எனக்குத் தெரியுமே!” என்று தோளில் இடித்துக் கொண்டாள் கோமளம்.
– தொடரும்…
– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.