ஆத்ம நட்பு!






சிகனுடன் தன்னை கல்லூரியில் உடன் படிப்பவர்களே இணைத்துப்பேசியதைக்காதில் கேட்டு உடைந்து போனாள் ரகி. ஆணும், பெண்ணும் பேசினாலே காதலின் வெளிப்பாடு என்றோ, காமத்தின் உந்துதல் என்றோ நினைத்து விடும் பழக்கம் மனிதர்களிடத்தில் காலங்காலமாக எண்ணங்களில் ஊறிப்போய் விட்டது. ‘ஆத்மார்த்தமான நட்பு என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் இவர்கள்’ என நினைத்து வருந்தினாள்.
ஆண்கள் கூட கண்டும் காணாமல் ஒதுங்கிப்போய்விடும் நிலையில், பெண்கள் தான் கண்களில் பார்ப்பதை விட கற்பனையில் பல மடங்கு யோசித்து குழந்தைகளைப் பெற்றெடுத்த நிலைக்கு நண்பர்களை கொண்டு போய் விட்டு விடுவதோடு யாரும் செய்யாத, கொடும் குற்றத்தைச்செய்த குற்றவாளிகளைப் பார்ப்பது போல், சந்தித்து மட்டுமே பேசுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்காமல் சந்தி சிரிக்குமளவுக்கு தவறை செய்தவர்களைப் பார்ப்பது போல் இழிவான பார்வையால் “ச்சீ” என பார்த்து கடந்து செல்கின்றனர்.
“ரகி, நீ என்னோட முகத்தப் பார்க்காம வந்ததிலிருந்து சுற்றும் முற்றுமே பார்த்துட்டு பேசறே….? யாராவது உன்ன டிஸ்டர்ப் பண்ணறாங்களா….? சொல்லு பிரின்ஸ்பால் கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணிறலாம். நானும் பார்க்கிறேன் கொஞ்ச நாளா உன்னோட குழந்தைத்தனமான கொஞ்சலான, கெஞ்சலான பேச்சு மாறி, அஞ்சியஞ்சி நீ என்னோட பேச வந்தாலே ஒரு மாதிரி படபடப்போட மனசு ஒரு நிலைப்படாம வார்த்தைகள்ல கஞ்சத்தனம் காட்டறே….? சீக்கிறமா போயிடறே…?” சிகனின் கேள்வியால் தன்னை சாதாரணமானவளாக வைத்துக்கொள்ள முயன்றும் முடியாமல் தவித்தாள். தேவையற்ற வார்த்தைகளைப்பேசுவதைத்தவிர்த்தாள்.
“அது... அது வந்து ஒன்னுமில்ல…. எக்ஸாம்க்கு படிக்க முடியல. அப்பாவுக்கு ஸ்டோக் வந்ததால ஹாஸ்பெட்டல்ல நேத்தைக்கு நைட்டெல்லாம் முழிச்சிட்டிருந்தேன்….”
“அப்படியா? இப்ப எப்படி இருக்கார்?”
” ஸ்டட் வெச்சு சரி பண்ணிட்டாங்க. இப்ப நார்மலா இருக்கார். போன செம்மப்ப என்னோட தம்பி ஆக்ஸிடென்ட்ல ஹாஸ்பிடல்ல இருந்தான். இப்ப அப்பா. காலேஜ்ல சேர்ந்த பின்னாடி வந்த ரெண்டு செம்லயும் சரியா எழுத முடியாமப்போச்சு. இனி அடுத்த செம்ல யாருக்கு என்னாகப்போகுதோ? ன்னு பயமா இருக்கு. எனக்கு காலேஜ் ராசியே இல்ல போலிருக்கு. நேத்தைக்கு படிக்க முடியாததால எப்படி மார்க் வருமோன்னு…. இப்படியே போனா என்னோட லட்சியத்தை நான் அடைய முடியாமப்போயிடுமோன்னு பயப்படறேன். எனக்கு கண்ணு முன்னால லட்சியம் மட்டும் தான் இருக்கு. அதுதான் ஒரே படபடப்பு….” செயற்கையாக சிரித்தபடி வறண்டு போன உதடுகளை எச்சிலால் நனைத்தபடி பேசினாள். அப்போது அவளது உதடுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு சிவந்து போயிருப்பதை முதலாகக்கண்டான் சிகன்.
“போன செம்ல நல்லாத்தானே உனக்கு மார்க் வந்துச்சு? இந்த செம்லயும் வந்திடும். நீயே பாஸாகலேன்னா மத்தவங்க எப்படி? என்னையே பாரு. போன செம்ல ரெண்டு அரியர். இதுலயும் வரும். நான் அலட்டிட்டேனா? வாழ்க்கைய வாழனம். இன்னைக்கு போனா இந்த நாள் போனது தான். திரும்பக்கிடைக்காது. என்னைப் பொருத்த வரைக்கும் ஒன்ஸ் பர்த், ஒன்ஸ் டெத்…. அவ்வளவு தான் லைப்”
“பசங்களே இப்படித்தான். தன்னோட வாழ்க்கையையும் சரி, அடுத்தவங்க வாழ்க்கையும் சரி கண்டுக்காம கடந்து போயிடறீங்க. ஆனா பொண்ணுங்க அப்படியில்லை. ஒவ்வொன்னுக்கும் டென்சன், கவலை. தனக்கு மட்டுமில்லாம மத்தவங்களைப்பத்தியும் யோசனை, கற்பனை, ஆராய்ச்சி. ச்சீ…. எனக்கே என்னை புடிக்கலே. இதிலிருந்து எப்படி வெளில வர்றதுன்னு தெரியல”
“நீ உன்னப்பத்தி மட்டும் பேசல. மத்த பொண்ணுங்களப் பத்தியும் பேசற மாதிரி தெரியுது. யாராவது உன்னப்பத்தி கமெண்ட் பண்ணினாங்களா…?”
“ஆமா. என்னப்பத்தி மட்டுமில்லை. உன்னப்பத்தியும் தான்”
“என்னப்பத்தியா…?” அதிர்ச்சியால் முகம் மாறினான்.
“என்னையும், உன்னையும் பத்தி”
“என்ன பேசினாங்க?”
“காலேஜ் தொடங்கின மொதல் நாளே உன்னப்புடிச்சுப்போனதால கேண்டீன்ல பப்ஸ் ஒன்னா போய் சாப்பிட்டோம். டெய்லியும் பேசிகிட்டோம். புரிதல் இருக்கிறதால பேச ஆரம்பிச்சா பல விசயங்களை நம்மையே மறந்து பேசுனோம். நல்ல நண்பர்கள்னு சொல்ல முடியல. மனசுக்கு புடிச்சிருக்கு. அதுக்கு மேல ஆத்மாவுக்கு… பேசறது புடிச்சிருக்கு. படிப்பு சம்மந்தமா, உலக விசயங்கள்னு நிறைய விசயங்கள பரிமாறிகிட்டோம். இவ்வளவு தான் நமக்கு நம்மப்பத்தி தெரிஞ்ச உண்மை. ஆனா சுகியும், மகியும் கண்ணு, காது, மூக்கு வெச்சு நம்மை லவ் ஜோடின்னு மத்தவங்க கிட்ட சொன்னதோட, உடம்பாலயும் நெருக்கமா இருக்ககறதா, லிவிங் டூ கெதர் லைப்புக்கு நாம போயிட்டதா பேசிகிட்டாங்க” சொன்னவள் கண்களில் கண்ணீர் வெளிப்பட்டது.
“ஆமா. அப்படித்தான்னு சொல்லிட வேண்டியது தானே….?”
சிகனின் இந்த வார்த்தையால் அதிர்ச்சியடைந்த ரகி “சிகன்…. நீ என்ன பேசறே….? என்ன பேசறேன்னு தெரிஞ்சு தான் பேசறியா….?” பதறியபடி கேட்டாள்.
“இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம் ரகி. நூத்துக்கு தொன்னூறு பேரு இப்படியிருக்கிறதால பாக்கி இருக்கிற பத்து பேரும் பரிசுத்தமா வாழ்ந்தாலும் அவங்களைப் போலவே நினைக்கிற காலம். அதோட யாரும் ஆத்மார்தமா எல்லாம் கிடையாது. எதுவா இருந்தாலும் கெடைச்சது லக்குனு பக்குனு பயன் படுத்தற உலகம். அடுத்த நாளே யாருன்னே தெரியாத மாதிரி போயிடறாங்க. காதல்ங்கிறது கல்யாணம் வரைக்கும் போனது அந்தக்காலம். நீ, நாங்க நல்ல நண்பர்கள் அவ்வளவு தான்னு யாராச்சுங்கிட்ட சொல்லிப்பாரு, ‘எனக்கு காது குத்தியாச்சு’ ன்னு சொல்லிட்டு போயிடுவாங்க. அவங்கள மாத்த முடியாது. நம்மத்தான் நாம மாத்திக்கனம். இதத்தான் நம்ம முன்னோர்கள் பனை மரத்தடில உக்கார்ந்து பாலக்குடிச்சாலும் கள்ளுக்குடிச்சதா தான் சொல்லுவாங்க ன்னு சொல்லியிருக்காங்க” சிகன் சொல்வதும் சரி எனப்பட்டதும் சாந்தமானாள் ரகி. இருந்தாலும் அவளது உள் மனம் ஏற்க மறுத்தது.
“நாம ஒரே டூவீலர்ல போறோம், ஒன்னா உட்கார்ந்து சாப்பிடறோம். ஒருத்தருக் கொருத்தர் உதவியா இருக்கோம். உட்கார்ந்த எடத்துல மணிக்கணக்குல பேசறோம். இதுக்கு பேரும் காதல் தானே….?”
“நான் இந்த ஒரு வருசத்துல ஒரு நொடி கூட அப்படி நெனைக்கல” உறுதியாகக் கூறினாள்.
“நான் உன்னப் பார்த்ததுல இருந்து ஒவ்வொரு நொடியும் நமக்குள்ள இருக்கிற இணக்கத்த காதல்னு தான் நினைக்கிறேன்…” இதை சிகனிடமிருந்து எதிராபாராத ரகி பேச்சிழந்து நின்றாள்.
‘தான் எதிர்பார்க்கும் ஆத்ம நட்பு சிகனிடம் கிடைத்திருக்கிறது’ என்பதை பரிபூரணமாக நம்பியிருந்தவளுக்கு ‘இவனும் மற்றவர்களைப்போன்ற சராசரி’ என்பதைப் புரிந்ததும் தனது மனமும், இதயமும், ஆத்மாவும் சேர்ந்து ஒரு சேர உடைந்த வலியை உணர்ந்த போது விக்கித்துப் போனாள்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |