ஆத்துமத் தச்சன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 5,186 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அண்ணன் தம்பியர் இருவர். இருவருக்கும் ஒரு பெரிய தோட்ட மிருந்தது. இருவரும் கடின உழைப்பாளிகள். 

தம்பி சொன்னான் : 

‘அண்ணா, இருவர்க்கும் திருமணமாயிற்று, இனி நம் சொத்தைப் பிரித்துக் கொள்வோம்’ என்றான். 

அண்ணன் அதற்குச் சம்மதித்தான் 

சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தான். 

விசவாயக் கருவிகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர். 

அண்ணன் உழவு போடும் அதே நாளில், தனக்கும் உழுபடை கருவி வேண்டும் என்றான் தம்பி. 

அண்ணன் கொடுத்து விட்டான். 

தம்பி, மூன்று நாட்களாக அதைத் திருப்பிக் கொடுக்கவில்லை. 

உழவு போடும் பருவம் தப்பி விட்டது. 

இருவருக்கும் முரண்பாடுகள் முற்றின. 

தம்பியின் விளை நிலத்தில் விதைகளை விட பொறாமை வித்துகள் அதிகம் விழுந்தன. 

தம்பி ரொம்பக் கோபக்காரன் ஆனான். 

அண்ணன் என்ன சொன்னாலும் தப்பர்த்தம் கொண்டான். சில வேளையில் ஆத்திரத்தில் அறிவிழக்கவும் செய்வான். 

ஒரு நாள், சூரியன் இன்னும் தலை காட்டாத அதிகாலை வேளை: அண்ணன் வீட்டுக் கதவை கொட்டும் சத்தம் கேட்டது. 

கதவை திறந்த போது ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான். அவன் சொன்னான்: 

ஐயா, நான் தச்சு வேலை செய்பவன்; தங்கள் வீட்டில் ஏதாவது வேலை இருந்தால் நான் செய்கிறேன் என்று சொல்லி தச்சுக் கருவிகளின் சாக்கு மூட்டையைக் கீழே இறக்கி வைத்தான். 

அண்ணன் சொன்னான் : 

“உனக்கு ஒரு பெரிய வேலை காத்திருக்கிறது; அதோ தெரியும் தோட்டம் என் தம்பியினுடையது. எங்கள் இரு நிலங்களுக்கும் மத்தியில் ஓர் அழகான புல் வெளியும், ஒரு சிறு கட்டிடமும் இருந்தது. இரு தினங்களுக்கு முன்பு அவன் ஒரு புல்டோசரைக் கொண்டு வந்து இடித்துத் தள்ளி விட்டான். அழகான புல்வெளி இருந்த இடம் ஓடையாகி விட்டது. அவனுக்கு என் முகத்தில் விழிக்க விருப்பமில்லை. எனவே ஒரு பெரிய வேலி அமைத்துவிட வேண்டும். பலகைகள், கம்புகள், ஆணிகள் எல்லாம் இருக்கின்றன” என்று மிகவும் மென்மையாகச் சொன்னான். 

வேலையை ஒப்படைத்து விட்டு அண்ணன் அவசர வேலையாகப் பட்டணத்திற்குச் சென்று விட்டான். 

மாலை அந்திவேளையில் அண்ணன் வந்து பார்த்தான் ஆச்சரியமாயிருந்தது. 

வேலி இல்லை, பாலம் இருந்தது. 

ஓடையை மறித்து இரு நிலங்களையும் இணைத்து ஓர் அழகான மரப்பாலம் அமைத்திருந்தான். 

பாலத்தைப் பார்த்த தம்பி விரைந்து வந்து அண்ணனை கட்டித் தழுவினான். கண்களில் நீர் தழும்பச் சொன்னான் : 

“அண்ணா, உனக்கு நான் தீமை செய்தேன், நீ எனக்கு நன்மை செய்து விட்டாய், என்னை மன்னித்து விடு,” என்று சொல்லி மனம் நொந்து அழுதான். 

தச்சன், தன் பணி முடிந்த பெருமிதத்தில் பாரமான கருவிகளின் மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். 

அண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தினான். 

“நீ இங்கேயே இரு, தினமும் வேலை தருகிறேன்” என்றான் தச்சன் சொன்னான் : 

“எனக்கு இங்கிருக்க ஆசைதான், ஆனால் நான் இன்னும் நிறையப் பாலங்கள் கட்ட வேண்டி உள்ளன. நாடு முழுவதும் கேடுபாடுகள் நிறைந்து உடைந்து கிடக்கின்றன. நான் போய் வருகிறேன்”, என்று சொல்லிச் சென்று விட்டான். 

அவன் அதிகாலை இருட்டோடே வந்தான், அந்தி மயங்கும் வேளையில் சென்றான். 

அவன் சாதாரணத் தச்சன் அல்லன் அவன் ஒரு ஆத்துமத் தச்சன் 

– ஆங்கிலத்தில் இருந்து தமிழில் தழுவல்.

– ஆர்‌.எஸ்‌.ஜேக்கப்‌ சிறுகதைகள் (தொகுதி நான்கு), முதற் பதிப்பு: நவம்பர் 2005, ஜெயா பப்ளிகேஷன்ஸ், பாளை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *