ஆண்டவர்களுக்கு வணக்கம்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: April 25, 2026
பார்வையிட்டோர்: 87

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான கடைகள் மூடிக் கிடந்தன. ஆட்டுக்கறியை வாங்குவதற்கும் கோழிக்கறியை வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். மீன் கடையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கெல்லாம் பெண்கள் கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது.
நான் வாகனத்தை பொறுமையாகவே ஓட்டியபடி சென்று கொண்டிருந்தேன்.
அந்தக் காலை நேரத்திலும் சாலைகளில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் எந்த சட்ட திட்டங்களையும் மதிக்காமல் தாறுமாறாக அவரவர் இஷ்டத்திற்கு, வாகனங்களில் சென்று கொண்டிருந்தார்கள்.
எனது இருசக்கர வாகனம் என்னை இழுத்துக் கொண்டு திருவையாரைத் தாண்டி வேகமாக திருமானூர் கொள்ளிடம் பாலத்தை நெருங்கியது. அடுத்த சில நிமிடங்களில் நான் திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தேன்.
கொள்ளிடத்தில் காற்று என் தேகத்தைக் கொஞ்சம் வேகமாய்த் தழுவி என்னை மோகிக்க வைத்து, எனக்கு விளையாட்டு காண்பித்தது. கொள்ளிடத்தில் தண்ணீர் அடக்கமான ஒரு வேலைக்காரனைப் போல் அடங்கி ஒடுங்கி, ஓர் ஓரமாய் அச்சத்துடன் ஓடிக்கொண்டிருந்தது.
அடுத்த 10 நிமிடங்களில், திருமழபாடி அரசு மேல்நிலைப்பள்ளியைத் தாண்டி எனது வாகனம் சென்று கொண்டிருந்தது.
வழியில் அந்தோணியார்புர தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் திருப்பலி பூஜையை பாங்குடன் நடத்திக் கொண்டிருந்தார். பாதிரியார் விவிலியத்திலிருந்து சில வாசகங்களை வேட்கையுடன் வாசித்துக் கொண்டிருந்தார்.
“பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே! பாவிகள் இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள்! இவர்களை மன்னியுங்கள்! ஆமென்” என்ற வாசகங்கள் என் செவிகளில் நன்றாகக் கேட்டது.
இப்போது நண்பன் தனசேகரன் ஊரில் உள்ள அய்யன் கோவிலில் நடக்கும் அலிபூஜைக்கு நான் போய்க் கொண்டிருக்கின்றேன்.
நானும் தனசேகரனும், பக்கத்துப் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள். நான் கிறிஸ்தவன். என் பெயர் யோவான் ஞானப் பிரகாசம். தனசேகரன் இல்லாமல் எங்கள் வீட்டு விசேஷங்களும், நான் இல்லாமல் அவனது வீட்டு விசேஷங்களும் இதுவரை நடந்ததில்லை.
நான் மோசஸ்புரத்தில் உள்ள சிறிய தேவாலயத்தைக் கடந்து சென்ற போது, தேவாலயமணி “கணீர் கணீர்” என ஒன்பது முறை ஒலித்து ஓய்ந்தது. அடுத்து “இப்போது நேரம் சரியாக 9:00 மணி “என்ற குரலும் பாங்குடன் ஒலித்து அடங்கியது.
நான் எனது கைக் கைகடிகாரத்தைப் பார்த்தேன். மணி எட்டு 8.50 தான் ஆகியிருந்தது.
நான் தொடர்ந்து பயணித்தபோது, வழியில் , வீரகளூர், கப்ரியல்புரம் செம்பியனூர் ஆகிய ஊர்களில் உள்ள தேவாலயங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தேன்.
அங்கெல்லாம் தேவாலய மணிகள் ஒரே நேரத்தையே சொல்லிக் கொண்டும், ஒலித்துக் கொண்டும் இருந்தன. ஆனால் எனது கைக்கடிகாரம் வேறு வேறு நேரங்களை காட்டிக் கொண்டிருந்தது.
இப்போது எனது நோக்கம் அலிபூஜைக்குச் சென்று அங்கே பரிமாறப்படும் ஆட்டுக்கறியை ஒரு பிடி பிடித்து விட வேண்டும் என்பதுதான். கிராமத்து ஆடுக்கறி என்றால் அதன் சுவையே தனிதான். இப்போது நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது.
நகரத்தில் விற்கப்படும் ஆட்டுக்கறியைப்பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவு மோசமாக இருக்கிறது. எந்த ருசியும் இல்லாமல் இருக்கிறது. அங்கே உணவகங்களில் எதையெதையோ கலந்து சமைக்கின்றார்கள். மிஞ்சிப்போனதையும் கெட்டுப் போனதையும் கலந்து கட்டி மறுநாள் விற்று விடுகிறார்கள்..
நான் அய்யன் கோவிலை நெருங்கி விட்டேன். வழியில் நத்தக்குடியில் இருக்கும் தேவாலயத்தின் வழியே சென்ற போது,” இப்போது நேரம் சரியாக 9:00 மணி” என்ற இனிய குரல் ஒலித்தது. நான் எனது கடிகாரத்தைப் பார்த்தேன். அப்போது மணி 9 .10 என்று கைக்கடிகாரம் காட்டியது.
நான் அய்யன் கோவிலை அடைந்து விட்டேன். கோவில் வளாகத்தில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. அதன் அருகில் நின்று கொண்டிருந்த தனசேகரனும் குடும்பத்தினரும் என்னைப் பார்த்தவுடன் கனிவுடன் வரவேற்று மகிழ்ந்தனர். நான் அங்கே வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன்.
அருகில் 15 அடி தூரத்தில், ஒரு வில்வம் மரம் இருந்தது. அதன் தடித்த கிளை ஒன்றில் சுமாரான கணத்தில் ஒரு சிறிய வெண்கல மணி தடித்த கம்பியினால் பிணைத்து நன்றாகக் கட்டப்பட்டிருந்தது. பெரியவர்கள் பயபக்தியுடன் சென்று, எப்போதாவது அந்த வெண்கல மணியை அடித்தார்கள். சிறுவர்கள் அடிக்கடி அந்த மணியை அடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
சிறுவர்களுக்கு அது நல்ல விளையாட்டாகவே இருந்தது. அது அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியையும் தந்தது. மணி ஒன்றுதான். அது எழுப்பும் ஓசையும் ஒரே மாதிரிதான். என்றாலும் பெரியவர்களுக்கு அது நெகிழ்ச்சி. சிறுவர்களுக்கு அது அதிக மகிழ்ச்சி.
அய்யன் கோவிலின் மேற்குப் பக்கம் இருந்த வேப்பமரத்திடலில், அலி பூஜைக்கான கறிசமையல் நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் சாதம் தயாராகிக் கொண்டிருந்தது. அங்கே ஒருவர் ,கறி வேகறதுக்கு இன்னும் அரை மணிநேரமாவது ஆகும்,” என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது எல்லோரின் பார்வையும், கறியும் சோறும் வேகும் திசையை நோக்கித் திரும்பி இருந்தது.
நான் மெல்ல கோவிலின் கிழக்குப் பக்கமாக நடந்தேன். சற்று தூரம் நடந்தபின், எனது நண்பனின் நெல்வயல்களை பார்வையிடுவதற்காக வடக்கு பக்கமாக திரும்பி நடந்தேன். நண்பனின் வயல்கள் கோயிலுக்கு அருகாமையில் தான் இருக்கின்றது. நண்பனின் நெல் வயல்களுக்கு அருகே கிழக்குப் பகுதியில் இரண்டு புங்க மரங்களும், பக்கத்தில் ஒரு சிறிய நீரோடையும் இருந்தது. சிறுநீர் கழிப்பதற்காக ஒரு புங்கமர நிழலை நோக்கி நடந்தேன். அந்த மரத்தை ஒட்டி சிறிய நீரோடை இருந்தது. அதில் தண்ணீர் கொஞ்சமாக ஓடிக் கொண்டிருந்தது. நான் புங்க மரங்களை நோக்கி நடந்தேன்.
அப்போது அந்த புங்க மரங்களுக்கு அருகில் இருந்து ஓர் உருவம் எழுந்து, நீரோடை பக்கம் மெல்ல தடுமாறி நடந்து கொண்டிருந்தது. அடுத்து இன்னொரு உருவம் எழுந்து சென்றது. நான் அவர்களை நெருங்கினேன். என்னைப் பார்த்ததும், அந்த உருவங்கள் வேக வேகமாக நீரோடையைக் கடந்து ஓடின.
நான் அந்தப் புங்க மரங்களை நெருங்கிய போது, அங்கே நான் கண்ட காட்சி என்னை நிலை குலைய வைத்தது.
ஒரு பெண் அலங்கோலமாக, உடலில் நிறைய காயங்களுடன் கிடந்தாள். அவளது உடைகள் விலகி இருந்தன. அவளது கன்னம், மார்பு, கழுத்து, தொடை பகுதி எல்லாம் காயங்களுடன் ரத்தக் கசிவுகளோடு அவள் மயங்கிக் கிடந்தாள். அவள் அழக் கூட திராணி அற்றவளாக இருந்தாள்.
சற்று நேரத்திற்கு முன்பு சில மதுப் பிரியர்கள் அவளை நாசம் செய்துவிட்டுச் சென்றிருந்தனர். அந்தப் பெண் யார்? எந்த ஊர்? என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை.
நான் கையில் வைத்திருந்த நீளமான துண்டினை அவள் உடல் மீது போர்த்தி விட்டு, அவளை எப்படியாவது மருத்துவமனைக்கு சீக்கிரம் கொண்டு செல்ல வேண்டும் என்று யோசித்தபடி, நான் எனது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை நோக்கி நகர்ந்தேன்.
நான் நடந்து வரும்போதே, எனக்குத் தெரிந்த சில நண்பர்களைக் கூப்பிட்டேன். இருவர் என்னிடம் ஓடி வந்தனர். நான் அவர்களிடம் விஷயத்தைச் சொல்ல அவர்கள் அந்த புங்க மரத்தை நோக்கி ஓடினர்.
பல வாகனங்களுக்கு நடுவில் எனது வாகனம் இருந்ததால், நான் அதனை வெளியே எடுக்க மிகவும் சிரமப்பட்டேன். நேரம் ஆக ஆக மனதில் படபடப்பு அதிகமானது.
ஒரு வழியாக நான் வாகனத்தில் ஏறி. அந்த புங்க மரத்தை ஒட்டி உள்ள ஓடையின் மறுபக்கம் உள்ள சாலைப் பகுதிக்கு சென்றேன். வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு நீரோடையில் இறங்கினேன். நீரோடையைக் கடந்த பின், புங்க மரத்தடியைப் பார்த்தேன். அந்தப் பெண்ணை காணவில்லை. மனதில் பதட்டமும் படபடப்பும் அதிகரித்தது. அருகில் நின்று கொண்டிருந்த ஆடு மேய்க்கும் சிறுவனை விசாரித்தேன்.
“இங்கே கிடந்தவங்கள இப்பத்தான் ரெண்டு பேரு மருத்துவமனைக்கு வண்டியில கூட்டிக்கிட்டுப் போறாங்க,” என்றான் அச்சிறுவன். உலகில் நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது.
நான் மீண்டும் கோவிலுக்குச் செல்லாமல், “அந்தப் பெண்ணை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்” என வழி நெடுக விசாரித்தபடி நான் எனது வாகனத்தில் பயணிக்க ஆரம்பித்தேன்.
அந்தப் புங்க மரம் உள்ள பகுதி, அந்த ஐயன் கோவிலுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவிற்குள் தான் இருக்கின்றது. அதேபோல் அந்த தேவாலயமும் மறுபக்கம் 100 மீட்டர் தொலைவிற்குள் தான் இருக்கிறது. அப்படி இருந்த போதிலும் இப்படிப்பட்ட கொடுமைகளை கொடூரங்களை அந்த ஆண்டவர்கள் ஏன் வீணே வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றார்கள்? அவர்களுக்கு சக்தி இல்லாமல் போய்விட்டதா? நேற்றைய ஆண்டவர்கள், இன்றைய ஆண்டவர்கள் – எல்லாம் எங்கே போனார்கள்? அவர்கள் என்ன ஆனார்கள்? இப்படி அடுக்கடுக்காய் என்னுள் ஐயங்கள் முளைத்துக் கொண்டிருந்தன.
எனது ஐயங்களுக்கு பதில் சொல்வதற்கு, அங்கே யாரும் இருக்கவில்லை!
குறிப்பு: இக்கதை எனது “இசையின் எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் ஒன்று. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
புதியவன்
பானுமதி வெங்கடேஸ்வரன்
April 25, 2026
அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்!
கடல்புத்திரன்
April 25, 2026
கமலா மாமி தேங்காய் பர்பி செய்கிறாள்
முனைவர் வெங்கடேஷ் கணபதி
April 25, 2026
