ஆசையா.. கோபமா…?





(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24
அத்தியாயம் – 22

அவள்… அவனின் மனைவி… அவனது இன்ப.. துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டிய கடமையில் கட்டுண்டிருப்பவள்.. அவளுக்கான துன்பத்தை அவனிடம் பகிர்ந்து கொள்ளவில்லை…
‘கட்டிலை பகிர்ந்துக்கிட்டாத்தான்.. இவ எனக்கு பெண்டாட்டின்னு நினைச்சுக்கிட்டு இருக்காளா..?’ அவன் மனதில் சினம் துளிர்த்தது…
அவனும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.. காலையில் ஆறுமணிக்கெல்லாம் எழுந்து கொள்பவள்.. பம்பரமாய் சுழன்று வீட்டு வேலைகளைப் பார்க்கிறாள்.. அவள் பார்த்துப் பார்த்துச் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும்… ‘இது என் வீடு…’ என்ற பாசமும்.. உரிமையும் தெரிகின்றது.. காலையில் வேலைகளை முடித்து.. அவனுடன் கிளம்பி.. பேங்குக்கு வந்தால்.. மாலை வரை அவனுக்கு இணையாக அலுவலக வேலைகளைச் செய்கிறாள்.. மாலையில் வீட்டுக்குள் நுழைந்து மறு நொடியிலிருந்து.. அந்த வீட்டின் மருமகளாக மாறிப் போகிறாள்.. இரவு மணி பத்தாகிறபோது தான் படுக்கையறைக்குள் நுழைகிறாள்..
அப்படி.. அந்தக் குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கிறவளின் மனதில் நிம்மதி இல்லாமல் இருக்கிறதா..?
“அம்மாவுக்கும்.. உனக்கும் என்ன பிரச்னை..?” விடிவிளக்கின் ஒளியில்.. இரவு பத்து மணிக்கு மேல்.. அறைக்குள் வந்து.. அயர்ந்து படுத்தவளிடம் அவன் கேட்டான்….
ஆழ்ந்து ஒலித்த அவன் குரலில்.. அவள் மனம் அசைந்தது..
“அத்தையை நான் ஒன்னும் சொல்லலையே…”
அவசரமாக அவள் பதில் சொல்லியதில் அவன் மனம் வலித்தது…
‘இவளைக் குற்றம் சொல்கிறேன்னு இவ நினைத்துக் கிட்டாளா..?’
“அது எனக்குத் தெரியும்.. நீ என்னைத்தவிர.. வேறு யாரையும் குற்றம் சொல்ல மாட்டயே…”
அவனது குத்தல் பேச்சில்.. அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்….
“அம்மா உன்னை என்னடி சொன்னாங்க…?”
“ஒன்னும் சொல்லலை…”
“என்கிட்ட பொய்யைத்தவிர வேற எதையும் பேசக் கூடாதுன்னு சபதம்.. கிபதம் செய்து வைச்சிருக்கயா..?”
அவள் மௌனமாக இருந்தாள்…
“நான் உன் புருசன் பூர்ணிமா.. கட்டிலில் உன்னைத் தொட்டால்தான் உன் புருசன்னு அர்த்தமில்லை…” அவன் கோபமாக பேசினான்…
“த்ச்சு… என்ன பேச்சு இது..? எனக்கு இது பிடிக்கலை..”
“எது பிடிக்கலை.. என்னையா..?”
“கடவுளே.. உங்களைப் பிடிச்சுத் தொலைத்ததினால் தான் இத்தனைக்கும் நான் ஆளாகியிருக்கேன்.. அதை மறந்துட்டுப் பேச வேணாம்…”
தன்னையறியாமல் அவள் சொல்லிவிட.. அவன் மனதில் தென்றலடித்தது…
“அதில உனக்கு இத்தனை வருத்தமாடி..?”
“உங்களுக்கு இப்ப என்னதான் வேணும்.. ?”
“உண்மை..”
“வேண்டாம்ங்க.. சில சமயம்.. உண்மைகூட நம்மைச் சுடும்…”
“பரவாயில்லை.. சொல்லு.. உன்னைச் சுடுகிற உண்மை.. என்னையும் சேர்த்துச் சுடட்டும்…”
“அதுதான் எதுக்கு..?”
“நீ என் பெண்டாட்டி டீ.. உன்னை அடிப்பேன்.. கொல்லுவேன்.. வாழ்நாள் பூராவும் உன்கூட குடும்பம் நடத்தாம விலக்கிவைப்பேன்.. அது என் இஷ்டம்.. ஆனா.. என்னைத்தவிர வேறு யாரும் உன்னைக் கஷ்டப்படுத்தறதை நான் பார்த்துக்கிட்டு இருக்க மாட்டேன்.. மத்தவங்க உன்னைத் துன்புறுத்த நான் விடமாட்டேன்…”
‘ஆஹா.. என்னே உன் உரிமை…’ பூர்ணிமாவுக்கு அவனின் வாதத்தைக் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது…
‘இவன் என்னைக் கிழித்து நார்.. நாராக்கி.. தோரணமாய் கட்டுவானாம்.. அது இவன் பிறப்புரிமையாம்.. ஆனா.. மத்தவங்க அதைச் செய்யக் கூடாதாம்.. அதுக்கு இவன் விடமாட்டானாம்…’
ஆனாலும் அவளுக்கு அவனின் அந்த வாதம் பிடித்திருந்தது…நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்.. நான் உன் காலடியில் சரணடைந்திருக்கிறேன் என்ற சரணாகதி நிலையை அவள் எப்பொழுதோ மேற்கொண்டு விட்டாள்…
என்று.. அவன்.. அவளை விட்டுக் கொடுக்காமல்.. அவள் கழுத்தில் தாலிகட்டி.. அவள் உயிரைக் காப்பற்றி ஆட்கொண்டானோ.. அன்றே… அவள் தன் சுயத்தை மறந்து அவனது அந்தக் காதலுக்கு அடிமையாகி விட்டிருந்தாள்..
அதனால்.. அவனின் இந்த வாதம் அவள் மனதை மயிலிறகாய் வருடிச் செல்ல.. இதமாக உணர்ந்தாள்…
“மத்தவங்கன்னா நீங்க சொல்கிறது சரி.. அது உங்க அம்மா..”
“இருக்கட்டுமே.. தாய்க்கு பின் தாரம் பூர்ணிமா.. எனக்கு நீ வந்தாச்சு… இனி நீதான் எனக்கு முதலும்.. முடிவும்…”
‘இது போதும் தெய்வமே…’ அவள் மனம் நிறைந்து விட்டது…
அவள் மென்மையான முகத்துடன் அவன் பக்கம் திரும்பினாள்..
“இருக்கட்டும்.. அதுக்காக அத்தையை புரிஞ்சுக்காம பேசனும்கிற அவசியம் இல்லை..”
“அந்த லிஸி பேச்சைக் கேட்டுகிட்டு ஆடறவங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறயா..?”
“ஊஹீம்.. இங்கேதான் நீங்களும்.. சத்யாவும் தப்புக் கணக்குப் போடறிங்க.. லிஸி சொல்லிக் கொடுத்ததால் மட்டும் அத்தை கோபப்படலை…”
“பின்னே…?”
“நான் இந்த வீட்டுக்கு மருமகளா வருகிறதுக்கு முன்னாலே.. நீங்க எல்லோருமே அவங்களைச் சார்ந்திருந்திங்க.. ஒவ்வொன்றுக்கும் அவங்களைத் தேடினிங்க.. இப்ப நிலைமை மாறிடுச்சு.. அதில அவங்க வருத்தப்படறாங்க…”
“இதென்னடி… இப்படிச் சொல்கிற.. நிலைமை மாறியதில் அவங்களுக்கு வேலைப்பளு குறைஞ்சிருக்குன்னு அவங்க சந்தோசம் தானேபடனும்.. ?”
“இது அப்படியில்லை.. அவங்களுக்கான இம்பார்டன்ஸ் குறைஞ்சிருச்சுன்னு ஃபீல் பண்றாங்க.. அவங்களை ஒதுக்கிட்டு என்னை முன்னால் வைக்கிறதா நினைக்கிறாங்க…”
இதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுப் போனான் குணசீலன்.. அவனுக்கும்.. சத்தியசீலனுக்கும் ஏன் இந்தக் கோணத்தில் யோசிக்கத் தோன்றவில்லை..?
காலம்.. காலமாக.. மாமியார்களின் வெறுப்பிற்கு மருமகள்கள் ஆளாவதற்கு அடிப்படைக் காரணம் இதுதானா..?
“வேற எதுவும் வேண்டாம்.. மாமா.. முதலில் இருந்ததைப் போல அத்தையை கொண்டாடினாலோ போதும்… நீங்களும்.. சத்யாவும் எங்க அம்மாவைப் போல உண்டான்னு பேசினாலே போதும்.. அவங்க மனசு குளிர்ந்து விடும்.. நாம தனிங்கிற எண்ணம் போயிடும்.. அப்புறம் பாருங்களேன்… அத்தை.. என்மேல கோபப்படறதை குறைச்சுக்குவாங்க…”
“அப்பவும் குறைக்கத்தான் செய்வாங்களா.. ? கோபப் படறதை முழுசாய் நிறுத்த மாட்டாங்களா..?”
“விடுங்களேன்.. அவங்க கோபப்பட்டு நாலு வார்த்தை என்னைப் பேசினால்தான் என்ன..? நானென்ன குறைஞ்சா போகப் போறேன்..?”
இலகுவாக பதில் கூறிவிட்டு.. அவள் கண்மூடி தூங்க ஆரம்பித்த போது.. அவள்மீதான அவனின் காதல்.. இன்னும் அதிகரித்தது கைக்கெட்டும் தூரத்தில் அவளிருக்க.. பிரிந்து படுத்திருக்கும் நினைவில்.. மனம் அவளைத் தேடியது..
“தூங்கிட்டியா..” அவன் மெல்லக் கேட்டான்…
“ம்ம்ம.. சொல்லுங்க…” அவள் திரும்பிப் படுத்தாள்..
“இன்னும் ஒன்னைக் கேட்கனும்..”
“என்ன..?”
“லிஸி கூட நான் பேசினதுக்கு அன்னைக்கு அவ்வளவு தூரம் ஆத்திரப் பட்டயே.. அதே லிஸி அம்மாகிட்ட போட்டுக் கொடுக்கிறாள்ன்னு தெரிஞ்ச பின்னாலேயும் எப்படி உன்னால் பொறுமையாய் போக முடியுது..?”
அறையில் பரவியிருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் தேவதையைப் போல இருந்தாள்.. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் அறை முழுவதும் பரவியது.. அதை முகர்ந்தவனின் உடலில் கிளர்ச்சி தோன்றியது.. அவள் வேண்டுமென்றே தாபம் மனதில் எழ.. அதைக் கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தவனை நோக்கி அவள் மெல்லச் சிரித்தாள்…
“எனக்கு.. நீங்களும்.. அத்தையும் ஒன்னா..?”
அந்த ஒரு கேள்வியில் அவளை உணர்த்தியவள் மீண்டும் திரும்பிப் படுத்து தூங்க ஆரம்பித்து விட.. அவன் தூக்கத்தைத் தொலைத்தான்…
‘ஏண்டி.. என் காதலை சந்தேகப் பட்ட..?’ அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது..
விசுவநாதனிடம் சொல்லுகிற விதமாக அவன் சொல்லியதில் அவர் மனைவியை முன்னிறுத்திப் பேச ஆரம்பித்தார்..
“அப்போ.. நீயும்.. நானும்.. தாயே தான் தெய்வம்ங்கிற ரேன்ஜீக்கு அம்மாகிட்ட பீலா விடனும்கிற.. ?” என்று கிண்டலடித்த சத்தியசீலனும்.. பூர்ணிமாவுக்காக.. காந்திமதியை கொண்டாட ஆரம்பித்தான்…
பூர்ணிமாவின் திட்டத்திற்கு நல்ல பலன் இருந்தது.. காந்திமதியின் மனத்தாங்கல் முழுவதுமாக மறையாவிட்டாலும் குறைந்திருந்தது…
அத்தியாயம் – 23
நாள்கள்.. வாரங்களாகி.. மாதங்களாகி ஓடின.. காந்திமதி பூர்ணிமாவின் மீது அதிகமாக குற்றம் கண்டு பிடிக்கா விட்டாலும் ஏதாவது ஒரு குறையைச் சொல்லிக் கொண்டே தான் இருந்தாள்…
எதிர் வீட்டில் முகாமிட்டிருந்த லிஸி.. கிளம்புவேனா என்று அங்கேயே மையம் கொண்டு.. அவ்வபோது காந்திமதியை தூண்டி விடுவதின் மூலம்.. குணசீலனின் வீட்டில் புயலை கிளப்பிக் கொண்டிருந்தாள்…
அவளும் தான் என்ன செய்வாள்.. ? குணசீலனுக்கு அடுத்து சுரேஷிடம் நூல் விடப்போக.. அவன் அதைக் கண்டு கொள்ளாமல்.. அவளிடமே அவனுக்கு ஏற்ற பெண் கிடைத்தால் சொல்லும்படி சொல்லிவிட்டான்.. லிஸி பல்லைக் கடித்துக் கொண்டு.. கைக்கு அகப்பட்டது வாய்க்கு அகப்படாமல் போயிற்றே என்ற கோபத்தை குணசீலனின் மீது காட்டிக் கொண்டிருந்தாள்…
முதல் வருட திருமண நாள் என்று குணசீலனும்.. பூர்ணிமாவும் கோவிலுக்கு சென்று வந்ததைப் பார்த்ததும்.. லிஸி வயிறெரிந்து போனாள்..
எதைச் சொல்லி காந்திமதியைக் கிளம்பி விடலாம் என்ற நினைவில் இருந்தவளுக்கு ஒரு யோசனை உதயமானது..
பாவம்… லிஸிக்குத் தெரியாது.. அவள் போட்டுக் கொடுத்த அணு குண்டினால் பூர்ணிமாவின் மனம் வெடிக்கப் போவதில்லை.. மாறாக.. அவளது வாழ்வு துளிர்க்கப் போகிறது என்பது..
அவளென்ன கனவா கண்டாள்..? குணசீலனும். பூர்ணிமாவும் பெயருக்குத்தான் கணவன்.. மனைவியென்ற விவரம் அவளுக்கு எப்படித் தெரியும்.. ?
அது தெரியாமல் அவள் பூர்ணிமாவின் மகிழ்ச்சியைக் குலைக்கப் போகிறோமென்ற நினைவில் காந்திமதியின் காதுகளில் ரகசியம் பேசி ஓதி விட.. அவள் கண்கள் சிவக்க.. மகனையும்.. மருமகளையும் நிற்க வைத்துக் கேள்வி கேட்டாள்….
“ஏண்டா குணசீலா.. பெண்டாட்டி கூட கோவிலுக்கு போய்விட்டு வருகிற போல இருக்கே.. என்ன விசேசம்..?”
அன்று காலையில் தான் அவளையும்.. விசுவநாதனையும் சேர்த்து நிற்க வைத்து குணசீலனும்.. பூர்ணிமாவும் வணங்கி எழுந்தார்கள்.. அப்போது உணக்கையாக ஆசிர்வாதம் செய்து விட்டு.. இப்போது ஏன் தாய் இப்படிக் கேள்வி கேட்கிறாள் என்று புரியாமல் விழித்தான் குணசீலன்..
“என்னம்மா புதுசாய் கேள்வி கேட்கறிங்க.. இன்னைக்கு எங்களுக்கு கல்யாண நாள்ன்னு காலையிலேயே சொன்னேனே…”
“எனக்கும் நினைப்பிருக்கு.. உன் பெண்டாட்டிக்கு அந்த நினைப்பிருக்கா..?”
“இப்ப எதுக்காக அவளை வம்புக்கு இழுக்கறிங்க..? கல்யாண நாளும் அதுவுமா.. அவ மனசு புண்பட எதையும் பேசி வைத்திராதீங்கம்மா…”
“ஆமாம்லே.. எனக்கு அதுதானே பிழைப்பு..? கல்யாணமாகி வருசம் ஒன்னாச்சு.. பிள்ளை உண்டாகியிருக்கிற பேச்சைக் காணோம்.. கல்யாண நாளைக் கொண்டாடக் கிளம்பிட்டா…”
காந்திமதியின் குத்தல் பேச்சில் பூர்ணிமா முகம் சிவக்க.. திரும்பிக் கொள்ள.. குணசீலன் சங்கடப்பட்டுப் போனான்..
‘இந்த அம்மாவேற.. விவரம் புரியாம பேசி வைக்கிறாங்களே… ‘
“த்சு.. இதென்ன பேச்சுன்னு பேசறிங்க..?”
“நான் பேசலையே.. ஊரு பேசுது.. பக்கத்து வீட்டு ரங்கத்தின் மகனுக்கு.. உனக்குப் பின்னாடிதானே கல்யாணமாச்சு..? அவன் பெண்டாட்டிக்கு வயித்திலே ஆறுமாசம்..”
“அம்மா.. ப்ளீஸ்..”
“கோடி வீட்டு ஆதிலட்சுமி மகனுக்கும் உனக்குப் பின்னாலேதான் கல்யாணமாச்சு.. அந்தப் பொண்ணுக்கும் எட்டு மாசம்…”
“போதும்மா..”
“இங்கேதான்.. நேத்திக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த புதுப்பெண்ணைப்போல அழுங்காம… குழுங்காம இருக்குதே.. இந்த லட்சணத்திலே முதவருச கல்யாண நாளையும் கொண்டாடியாச்சு…”
‘அதுக்கென்ன இப்ப..?”
“எதுக்கும் உன் பெண்டாட்டியை மெடிகல் செக் அப்புக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போலே.. அவ உடம்பிலே என்ன குறையோ.. ?”
பூர்ணிமா மனம் தாளாமல்.. விர்ரென்று மாடிப்படியேறி விட்டாள்.. பின்னாலேயே போன குணசீலன்.. அழுகையில் குழுங்கும் அவள் முதுகை குற்ற உணர்வுடன் வெறித்தான்..
அன்று இரவு.. பூர்ணிமா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது தான் அதை உணர்ந்தாள்…
குணசீலனின் கட்டில் அவளுடைய கட்டிலோடு இணைத்துப் போடப்பட்டிருந்தது.. அவள் குணசீலனின் அணைப்பில் இருந்தாள்..
அத்தியாயம் – 24
நெருப்புப் பட்டவளைப் போல பூர்ணிமா அதிர்ந்து விலகினாள்.. குணசீலன் அவள் தோள்பற்றித் தன்பக்கம் இழுக்க.. விடுபட போராடினாள்…
“ஏன்..? என் பூர்ணிமா.. ஏன்..?”
“எனக்கு வேண்டாம்.. விட்டுவிடுங்க…”
“எது வேண்டாம்.. ? நான் உனக்கு வேண்டாமா..?”
“ப்ளீஸ்.. நான் எதைச் சொல்கிறேன்னு உங்களுக்கே தெரியும்…”
“அம்மா சொன்னதைக் கேட்டயில்ல..?”
“நினைத்தேன்.. அதுக்காகத்தான் நீங்க என்னைத் தொடறிங்கன்னு நினைத்தேன்.. நீங்க என்ன சொன்னீங்க..? இப்ப என்ன செய்கிறிங்க.. ? மனம் சேராம.. நாம சேரக்கூடாதுன்னு சொன்னீங்களா.. இல்லையா..?”
“நம்ம மனசு பிரியவே இல்லையேடி.. அப்புறம்தானே சேர்கிறதைப் பற்றி யோசிக்கனும்.. ?”
“அடேங்கப்பா.. இந்த வியாக்கினத்தை இத்தனை நாளாய் ஏன் சார் சொல்லவே இல்லை… ? இரக்கத்திலே வருகிற உறவு எனக்கு வேண்டாம்..”
“பூர்ணிமா.. கிட்டே வா…’
“வேண்டாம்.. மனசில முள் தைச்சிருக்கு.. அதைப் பிடுங்காம என்னை நீங்க தொட வேண்டாம்.. இது என்னை கௌரவப் படுத்தாது…”
“ஏண்டி படுத்தற..? அம்மா பேசினதுதான் இப்ப என் மனசில் முள்ளாத் தைச்சிருக்கு.. அதைப் பிடுங்கினால் போதும்…”
“எனக்கு அது போதாது.. என்னால் அதை ஏத்துக்க முடியாது…”
“அதைப்பற்றி எனக்கு கவலையில்லை…”
துண்டி விடச் சிறு துண்டுதல் மட்டுமே தேவையாய் இருந்த குணசீலனின் உணர்வுகள் கரையை உடைத்துக் கொண்டு வெளிக் கிளம்பியதில் அவன் ஆவேசமாய் அவளை ஆக்ரமித்தான்..
பூர்ணிமாவின் எதிர்ப்பை எளிதாக முறியடித்து.. அவளை அனைத்து.. அவள் இதழ்களில் முத்தமிட்டான்..
‘ஹோ..’வென்ற பேரலை அவள் மனதில் எழும்பியதில்.. பூர்ணிமாவின் பலவீனமான எதிர்ப்பு காணாமல் போய்விட்டது.. அவன் அவள் மேல் படர்ந்து பரவியபோது.. அவள் கொஞ்ச நஞ்சமிருந்த எதிர்ப்பையும் தொலைத்து.. அனல் மேல் மெழுகாய் உருகிக் கரைந்து போனாள்.. களைத்துப் படுத்திருந்தவளை அவன் இழுத்து அணைத்தபோது அவளால் விலக முடியவில்லை…
அது தொடர் கதையானது.. குணசீலன் இரவுகளில் அவளை தூங்கவிடாமல் உறவாடினான்.. அடுத்த இரு மாதங்கள் போன சுவடு தெரியாமல் ஒடி மறைய.. பூர்ணிமா தாய்மை அடைந்தாள்..
”அம்மா ஸ்வீட்டைப் பிடிங்க.. டாக்டர் நான் அப்பாவாகப் போகிறேன்னு கன்பர்ம் பண்ணிட்டாங்க..” குணசீலன் காந்திமதியிடம் வெற்றிச் செய்தியைக் கூறிய போது.. அவள் முகத்தில் ஈயாடவில்லை…
பூர்ணிமா பிரசத்திற்காக தாய்வீட்டிற்கு செல்லும் வரை.. காந்திமதி அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கவில்லையென்றாலும்.. முதலில் பேசியதைப் போல மனம் புண்படப் பேசவில்லை…
கந்தசாமியும்.. சுந்தரியும் தனியாக ஒரு பஸ் பிடித்து உற்றார் உறவினரோடு வந்து இறங்கி.. பூர்ணிமாவிற்கு வளைகாப்பு செய்து முடித்து.. அவளைப் பெரிய குளத்திற்கு அழைத்துக் கொண்டு போனார்கள்…
பூர்ணிமா இல்லாத தனிமையில்.. அவள் மீதான காதலை அதிகமாக உணர்ந்து உருகினான் குணசீலன்… தினமும் அவளிடம் மணிக்கணக்கில் செல் போனில் பேசினான்.. ஆமாம்.. இல்லையென்ற ஒற்றை வார்த்தையைத்தான அவள் பதிலாக கொடுத்தாள்.. மனம் விட்டுப் பேசவில்லை….
‘என் குழந்தையைப் பெத்துக் கொடுக்கப் போகிறா.. இன்னும் இப்படி கோபத்தை விடாமல் இருக்கிறாளே…’ அவன் மனம் கனத்தது..
பிரிவைத்தாங்க முடியாமல் அவளைத் தேடிப் பெரிய குளத்திற்குப் போனான்.. பஸ்ஸை விட்டு இறங்கிய போது…
“மாப்பிள்ளை.. நீங்களா..?” என்று வரவேற்றான் கணபதி…
“என்ன இங்கே நிற்கறிங்க..? நான் வருவேன்னு தெரியுமா..?”
“இல்லையில்லை.. ஒரு பிரண்டை வழியனுப்ப வந்தேன்… நீங்க வாங்க.. நம்ம காளிலேயே போகலாம்..”
காரில் யதேச்சையாக போய் கொண்டிருக்கும் போது.. லீவில் வரும் போதெல்லாம் பூர்ணிமாவும் வீட்டில் இருக்கிற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டான் கணபதி…
“அப்படித்தான் மாப்பிள்ளை.. அன்னைக்கு வர்றேன்.. நீங்க தங்கச்சியை பெண் பார்க்க வந்தீங்க… எங்களுக்கெல்லாம் உங்களை ரொம்ப பிடிச்சுப் போயிருச்சு.. ஆனா.. பூர்ணிமா சம்மதிப்பாளோன்னு தான் பயந்தோம்..
“ஏன்..? அவ என்னைப் பிடிக்கலைன்னு சொன்னாளா..?”
“சொல்லலையே.. அதுதானே ஆச்சரியம். உங்களுக்கு முன்னாடி பெண் பார்க்க வந்தவங்க கூட முடியாதுன்னு முன்னாலே போய் நிற்கக் மல்லுக்கட்டினாளாம்.. கல்யாணமே வேண்டாம்ன்னு அழுதாளாம்.. உங்களைப் பார்த்த பின்னால் எப்படி மனம் மாறினாள்ன்னுதான் தெரியலை…”
அன்று இரவு.. மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்டான் குணசீலன்.. இரவின் தனிமையில் பூர்ணிமாவை நெருங்கிய போது.. அவளது உடலில் வழக்கமான விறைப்பை உணர்ந்தவன் அவள் காதோடு சொன்னான்…
“என்னைத் தவிர வேற ஒருத்தன் உன் கழுத்திலே தாலி கட்டியிருக்க முடியாதுன்னு இன்னைக்கு நான் தெரிந்துக்கிட்டேன் பூர்ணி… சுரேஷின் முன்னாலே வந்து நிற்க மாட்டேன்னு மல்லுக்கட்டினயாம்.. உன் அண்ணன் சொன்னாரு… எனக்கு இது போதும்டி..”
“அத்தான்…”
முதன் முறையாக அவனை உறவு முறையை சொல்லி அழைத்து விம்மினாள் பூர்ணிமா… அவன் மேல் அவளுக்கும்.. அவள்மேல் அவனுக்கும் இருந்தது ஆசைதான்.. கோபமில்லை என்பதை இருவருமே அன்று புரிந்து கொண்டார்கள்..
“அழாதே பூரணி…” குணசீலன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்… “என்னென்னவோ பேசிட்டிங்களே… உங்களை நினைச்ச மனசாலே வேற ஒருத்தனை நினைச்சுப் பார்க்க முடியுமான்னு.. நீங்க நினைச்சுப் பார்க்கலையே…”
“நினைச்சுப் பார்த்தேன்டி…வேற விதமாய் நினைச்சுப் பார்த்துட்டேன்… என்னை நினைச்ச மனசாலே… வேறு ஒருத்தனையும் எப்படி நினைக்க முடியுதுன்னு நினைச்சேன்… அதை நினைக்க.. நினைக்க உன்மேல கொலை வெறிதான் அதிகமாச்சு பூரணி…”
அவனது இறுக்கமான அணைப்பிற்குள் இருந்தவளின் முகம்.. அவனது சட்டைகாளரில் படிந்திருந்தது… அதில் வெளிப்பட்ட.. அவனது பிரத்யேகமான நறுமணத்தை அவள் நுகர்ந்தாள்.. அவன் மீதான ஆசை அவளுக்குள் கடல் போல பொங்கியது…
“ஏன் கொலைவெறி வந்துச்சாம்…?”
அவன் முகத்தோடு முகம் வைத்தவளாக கொஞ்சினாள்.. அந்த செய்கையில் தெரிந்த எல்லையற்ற மனநெருக்கத்தில் குணசீலன் கள்ளுண்ட வண்டானான்..
‘இவளுக்கு இப்படிக் கூட நெருக்கத்தைக் காண்பிக்கத் தெரியுமா…?’
“ஏண்டி… இவ்வளவு ஆசையை மனதில் வைச்சுக்கிட்டு..எப்படிடீ உன்னால என்கிட்டயிருந்து விலகியிருக்க முடிஞ்சது…?”
“அங்கே மட்டும் என்னவாம்..? என்மேல அளவுகடந்த காதலை வைச்சுக்கிட்டு.. விலக்கி வைச்சது யாராம்.. ? நீங்கதானே.. ? உங்களாலே மட்டும் அது எப்படி முடிஞ்சதாம்…?”
“பதிலுக்குப் பதிலா..?”
“ஆமாம்ன்னுதான் வைச்சுக்கங்களேன்…”
அவன் முடியை அவள் கோத.. அவன் உல்லாசமாகச் சிரித்துக் கண்சிமிட்டினான்…
“யாரை வைச்சுக்கச் சொல்ற..? நம்ம எதிர் வீட்டு லிஸியை யா.. ?”
அதுவரை அவனுடன் இணக்கமான நெருக்கத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தவளுக்கு. கோபம் வந்து விட்டது.. அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள்…
“ஆ.. வலிக்குதுடி.. எதுக்குடி உனக்கு இவ்வளவு கோபம் வருது..?”
“‘ஆக.. மனசில இருக்கிறது வார்த்தையில் வருது..”
“நீதானேடி வைச்சுக்கச் சொன்ன..?”
“சொன்னா.. உடனே நீங்க அப்படி ஜொள்ளுவிங்களா.. ?”
“அவளைப் பார்த்துச் சொல்லிட்டாலும்…”
“ஆஹா.. இவரு பெரிய உத்தமபுத்திரன்..”
“அது என்னவோ எனக்குத் தெரியாது.. நான் உத்தம புருசன்.. அது மட்டும் தெரியும்…”
“ஆஹாஹா.. இதை நம்பச் சொல்றிங்களாக்கும்.. ?”
ஆசை கனன்ற அவள் முகத்தில் கோபம் கனன்று கொண்டிருந்தது…
அவள் மூக்கைப் பிடித்துத் திருகி… காதோடு அவன் கிசுகிசுத்தான்…
“ஏய்ய்.. கட்டிக்கிறதா இருந்தாலும்.. வைச்சுக்கிறதா இருந்தாலும் அது நீ மட்டும் தாண்டி…”
அவன் முகத்தில் தெரிந்த உண்மையில் அவள் மனம் நெகிழ்ந்தாள்… அவள் விழிகள் கலங்கின… அதில் உதிர்ந்த நீர் முத்துக்கள் அவள் முகத்தை கைகளில் ஏந்தியிருந்தவனின் உள்ளங்கையில் பட்டுத் தெறிக்க… அவன் பதறி விட்டான்…
அவனைத் திருமணம் செய்து கொண்டநாளிலிருந்து… அன்று வரை அவள் கண்ணில் நீரை அவன் கண்டதில்லை… முதலிரவிலேயே அவன் கோபத்தைக் கொட்டினான்.. அவளைத் தொடாமல் தள்ளி வைத்தான்… இருந்தும் அவள் சிரிப்பைத்தான் சிந்தினாள்…
கண்ணீரை சிந்தியதில்லை..
அந்தப் பூரணி இன்று அழுகிறாளா…?
“ஏய்ய்.. என்னடி ஆச்சு..?”
அவன் முகத்தின் பதட்டத்தில் அவள் இதயம் மேலும் அசைந்தது… அவளது கண்ணீர் அதிகமானது…
“பூரணி..?”
“நான் அழகா அத்தான்..?” அவள் விம்மினாள்…
“இவ்வளவுதானா..” அவன் முகம் நிம்மதியானது…
“நம்ம ஆபிஸில் என்னை விடவும் அழகா பெண்கள் இருந்தாங்களே.. நீங்க ஏன் என்னை செலக்ட் பண்ணினீங்க.. ?”
“ஆமாண்டி.. நான் பொண்ணுப் பார்க்கத்தான் ஆபிஸீக்கு வந்தேன்.. வேலை பார்க்கவரலை… எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கா பாரு.. ஏண்டி.. அந்த சுரேஷ் எனக்கு முதல்லேயே உன்னைப் பெண் கேட்டு வந்தான்… என்னை விடவும் பெர்சனாலிட்டிதான்…”
“நோ சான்ஸ்… அவன் குரங்கு மூஞ்சி…”
பூரணியின் கோபத்தில் குணசீலனின் மனதில் தென்றலடித்தது.. அந்த சுரேஷ் பார்க்கும்படிதான் இருப்பான்.. பூரணியின் கூற்றுப்படி.. குரங்கு முகமெல்லாம் அவனுக்கு கிடையாது..
“அவன் மூஞ்சி குரங்கு மூஞ்சியா.. ? ஆனாலும் இது அதிகம்டி…”
“அவன் பேச்சை இப்ப எதுக்காக பேசறிங்க…?”
“நீ மட்டும் மத்த பொண்ணுக பேச்சைப் பேசலாமா..?”
“இருந்தாலும் அத்தான்.. இந்த அளவுக்கு என்மேல் நீங்க ஆசை வைக்கிற அளவுக்கு நான் அழகில்லைதான்…”
“பைத்தியம் மாதிரி பினாத்தாதே.. அறைஞ்சிருவேன்.”
“நான் சொன்னது உண்மைதானே…”
“ஏண்டி படுத்தற.. எப்பப்பாரு இதே புலம்பல் தானா..? பூரணி.. என் கண்ணுக்கு நீ மட்டும் தாண்டி அழகு.. என் பூலோக ரம்பை நீதான்.. உன்னைப் பார்த்தா மட்டும்தாண்டி என் மனசில பூப்பூத்துச்சு… உனக் கொன்னு தெரியுமா..?” காதலுடன் அவன் கேட்டான்…
“என்ன..?” கண்கள் மின்ன அவள் கேட்டாள்…
“இங்கே நான் ஜாயின் பண்ணினவுடனேயே அரவிந்தன் அத்தனைபயம் பயந்தாண்டி…”
“எதுக்காம்…?”
“சரளாவை நான் சைட் அடிச்சிருவேனோன்னு தான்…”
“ஏன் அடிக்கலை.. ?”
பூர்ணிமா அப்பாவியாய் கேட்ட விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..
“அவ்வளவு நல்லவளா நீ…?” என்று சிரித்தான்…
“போங்கத்தான்…” அவன் சட்டை பொத்தானை அவள் திருகினாள்…
“எங்கே போகச் சொல்ற.. ?” அவள் கன்னத்தை தட்டி… அவள் தலையில் செல்லமாக முட்டினான்…
“சரளா என்னைவிடவும் செம அழகு…”
“அப்படியா…?”
குணசீலன் வெகுசாதாரணமாகக் கேட்ட விதத்தில்.. அவன் மீதான ஆசையும் காதலும்… பூர்ணிமாவுக்குள் அதிகரித்தன…
“என்னங்க இப்படிச் சொல்றிங்க..? அவ எப்பேர்பட்ட அழகி…”
“உன்னை விடவா… ?”
குணசீலன் ஆசையுடன் அவளைக் கட்டியணைத்து அவள் இதழ்களில் முத்தமிட்டான்…
“உண்மையில் நான் அரவிந்தனை விட கோடி மடங்கு கொடுத்து வைத்தவன்.. உனக்குத்தான் இது தெரியலை….”
“எப்படி…?”
“நீ என்மேல் வைச்சிருக்கிற கடலளவு காதலை… சரளா அவன் மேல் வைச்சிருக்காளா…?”
தீவிரமான குணசீலனின் கேள்வியில் பூர்ணிமா பிரமித்தாள்..
“அத்தான்… ?”
அவளுக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது…. “இந்தக் காதல் காணக் கிடைக்காதுடி… இதை கை நழுவ விடக் கூடாதுன்னு நான் பட்டபாடு உனக்கெப்படித் தெரியும்…? நீ மட்டும் என்னை விட்டு வேறொருத்தனுக்கு கழுத்தை நீட்டி இருந்தேன்னு வைய்யி… உன்னைக் கொன்று புதைக்கக் கூட நான் தயங்கியிருக்கமாட்டேன்.” அவன் கண்களில் தெரிந்த கோபம்.. அதீதமான ஆசையை உள்ளடக்கியது என்பது புரிய அவள் சிலிர்த்துப் போனாள்…
“இது தெரியாம நான் ஏதேதோ நினைச்சுட்டேன்… தெரியுமா..?”
அவள் குழந்தையைப் போல அவன் மார்பில் ஒன்றிக் கொண்டாள்… அவளது நெருக்கம் தந்த நிறைவில் அவளது நெற்றி வகிட்டில் முத்தம் கொடுத்தவன்.. கனிவான குரலில் பேச ஆரம்பித்தான்…
“என்னடி நினைச்ச..? எவளாவது கண்ணுக்கு அழகாத் தெரிஞ்ஞா.. அவள் பின்னாலேயே ஜொள்ளு விட்டுக்கிட்டு நான் போயிடுவேன்னு தானே நினைச்சே..?”
“அது.. அது.. வந்து…” அவள் முகத்தில் அசடு வழிந்தது…
“சரியான பித்துக்குளிடி நீ… என்னைவிட அழகா.. அந்த மன்மதனே நேரில் வந்து நின்னாலும்.. உன் மனசில அவன்மேல காதல் வந்துடுமா… ?”
“அதெப்படி வரும்…?”
“ஏன்..?”
“இதென்னங்க கேள்வி.. மத்தவங்க யாரா இருந்தாலும்.. அது மன்மதனாவே இருந்தாலும்.. நீங்களா ஆயிட முடியுமா..?”
கேள்வி கேட்டவள்.. அவன் புருவங்களை உயர்த்திப் பார்த்த பார்வையில்… புரிந்து கொண்டாள்…
“அதைப் போலத்தான்… நீங்களும்.. இல்லையா..?” அவனோடு ஒட்டிக் கொண்டாள்…
“புரிஞ்சுக்கிட்டா சரி… உன் மேலதாண்டி எனக்கு ஆசைவந்தது.. தினமும் உன்னைப் பார்க்கத்தான் பொழுதே விடியுதுன்னு நினைச்சவன் நான்.. அது புரியாம நீ ஏதேதோ பேசிட்ட….”
“அவதான்… அப்படிப் பேச வைச்சிட்டா…”
“எவ.. ? அந்த லிஸியா…?”
“த்ச்சு… அவ பெயரைச் சொல்லக் கூட எனக்கு விருப்பமில்லை…”
“சொல்லாதே… எனக்கும் தான் அவ பெயரைச் சொல்லபிடிக்கலை… அவளெல்லாம் ஒரு மனுஷியா..? சில சமயம் அவளை வெட்டிப் போட்டாலென்னன்னு வெறிகிளம்பும்…”
“ஐயையோ…”
“அதுக்குக்கூட அவளுக்கு தகுதியில்லன்னு அடங்கிருவேன்…”
“அப்பாடி..”
”அவ பேச்சைக் கேட்டு நீ முகம் திருப்பிக்கிட்டு போயிருக்க.. உன்னை என்ன செஞ்சா தேவலாம்.. ?”
“எதைச் செய்தாலும் தேவலாம்தான்…”
அவளது சிருங்காரமான அழைப்பை அவள் விழிகள் உணர்த்த.. அவன் கிளர்ந்தான்..
“ஏய்ய்… அசத்தரடி… இப்படிப் பேசக்கூட உனக்குத் தெரியுமா…?”
‘இன்னும் கொஞ்ச நாளில் கையில் நம் குழந்தையே வந்திருப்பான்.. இப்பப் போய் இப்படிக் கேட்கறிங்களே…”
”ம்ஹீம்… நாம குழந்தை பெத்துக்கப் போற லட்சணத்தை வெளியில் சொல்லிராதே…”
“ஏங்க…?”
“உனக்கே இது நியாயமாய் இருக்காடி..? என்னவோ.. உன்னை நான் பலவந்தப் படுத்தறதைப் போல முகத்தை வைச்சுக்கிட்டு இருந்தவ கூட குடும்பம் நடத்தி.. குழந்தை பெத்துக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு உனக்குத் தெரியுமா.. ? இப்ப முகத்தை இவ்வளவு ஆசையாய் வைச்சிருக்கயே.. இப்படியா.. அப்பல்லாம் முகத்தை வைச்சிருந்த…?”
“வேற எப்படி வைச்சிருந்தாங்களாம்…?”
“வில்லன் கையில அகப்பட்ட ஹீரோயின் ரேன்ச்சுக்கு பில்ட்அப் பண்ணி.. படுத்தி எடுத்தடி.. விட்டா.. என்னைக் காப்பாத்துங்கன்னு அபயக்குரல் கொடுத்திருப்ப… அது ஒன்னுதான் குறை…”
அவன் பேசப்பேச… பூர்ணிமாவின் முகத்தில் வெட்கம் கொப்பளித்தது…
“த்ச்சு.. கேலி பண்ணாதீங்க..” அவனைக் கிள்ளினாள்…
“இதையொன்னை கண்டு வைச்சிருக்க… எதுக் கெடுத்தாலும் கிள்ளிவைப்ப…”
“நீங்க மட்டும் என்னவாம்.. ? இப்ப மாதிரி.. ஆசையாய் என்னைத் தொட்டிங்களா..? இரக்கப் பட்டுத்தானே என்கூட குடும்பம் நடத்தினீங்க…”
“ஊஹீம்…?” அவன் கண்சிமிட்டிச் சிரித்தான்…
“என்ன.. ?” அவளுக்குப் புரியவில்லை…
“அதெல்லாம் சும்மாடி… உன்னை ஆபிஸில் தள்ளி உட்கார்ந்து பார்க்கிறப்பவோ என்னை என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியாது… இப்ப பெண்டாட்டின்னு கைக்கெட்டுற தூரத்தில படுத்திருந்தா…. மணுசன் ராத்தூக்கம் தூங்க முடியுமா…?”
“அத்தான்…”
“இந்த அத்தான்.. பொத்தானெல்லாம் இப்பத்தானே.. அப்ப அது மேடத்துக்கு மறந்து போயிருந்துச்சே….”
“நீங்க எனக்கு கிடைக்க மாட்டிங்களோன்னு மனம் உடைஞ்சு போய் விசத்தைக் குடிக்க இருந்தேன் தெரியுமா…?”
“அடிப்பாவி…” குணசீலன் அரண்டு விட்டான்…
“நிஜம்தான்… அப்பாவோட கட்டாயத்தில.. அங்கே வந்து நின்னா.. அங்கே பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையாய் நீங்க உட்கார்ந்திருந்தீங்க.. எனக்கு எப்படியிருந்துச்சு தெரியுமா…?”
“ஓடியே போயிடனும்னு இருந்துச்சா..?”
அவன் கேலியாக வினவ… அவள் செல்லக் கோபத்துடன் அவனை முறைத்தாள்…
“கொழுப்பு…”
“அது நிறைய இருக்குடி…”
“அதான் தெரியுதே.. எனக்கு அப்படியே வானத்தில பறக்கிறதைப் போலவே இருந்துச்சு… எனக்கு உங்களை அவ்வளவு பிடிக்கும் தெரியுமா…?”
“தெரியும்டி… தினமும் என்னைத்தேடி நீ தவிக்கிறதை.. உனக்குத் தெரியாம வெளியே நின்னு.. ஜன்னல் வழியா பார்ப்பேன்…”
“நிஜமாவா…?”
“ம்ம்ம்.. என்னைத் தேடற உன் தேடலில் என் மனசுக்குள் ஒரு சந்தோசம் எழும்பி வருமே.. அதுக்கு எதுவுமே நிகராகாதுடி… உனக்குத்தான் அது தெரியலை..”
“நிஜமாவே தெரியலைதான்…’
“தெரிஞ்சிருந்தா என் காதலை சந்தேகப் பட்டிருக்க மாட்ட…”
அவளது நெற்றியில் அவன் மென்மையான முத்தமொன்றைத் தந்தான்.. அவள் கண்மூடி அதில் திளைக்க… மெதுவாக அவள் தலையை வருடிக் கொடுத்தபடி சொன்னான்…
“என் மேலயும் தப்பிருக்குடி.. நான் என் காதலை சொல்லியிருக்கனும்.. என் கண்ணுக்கு உலக அழகியாய் நீ மட்டுமே இருக்கிற உண்மையை உனக்கு புரிய வைச்சிருக்கனும்.. அதை விட்டுட்டு உன் உணர்வுகளோடு விளையாடிப் பார்த்துட்டேண்டி… என்னை மன்னிச்சிரு…”
குணசீலனின் குரலில் தெரிந்த குற்ற உணர்வை பூர்ணிமாவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை… அவன் வாயைப் பொத்தினாள்.. அவளது உள்ளங்கையில் அவன் இதழ் பதித்தான்…
“ப்ளீஸ்.. நீங்க வருத்தப்படாதீங்க… என்னால அதைத் தாங்கிக்க முடியாது.. நான்தான் முட்டாள்.. நீங்க தேடிவந்து காதல் சொல்லியும் லிஸி மேல இருந்த கோபத்தில்.. அவளுக்கு என் கண்முன்னாலேயே நீங்க பூ வாங்கிக் கொடுத்தீங்கன்னு உங்க காதலை நான் நம்பாம போயிட்டேன்…” பூர்ணிமாவின் முகம் வாடி விட்டது…
‘திரும்பவும் அவளுக்கு நான் பூவாங்கிக் கொடுத்தேன்னு பட்டம் கட்டினேன்னு வைய்யி…பெண்டாட்டின்னு கூடப் பார்க்கமாட்டேன்..” குணசீலன் கண் சிவந்தான்…
“குங்குமமும் கொடுத்தீங்க…” அவன் சட்டையின் பொத்தானைத் திருகியபடி.. அவள் சொன்னாள்…
“எய்ய்.. அது பிரசாதம்டி…” எரிச்சல்பட்டான்… குணசீலன்
அதை உணர்ந்தவளாக.. அவன் ஆசையுடன் அவனை நெருங்கினாள்.. அவனது விழிகள் பளபளத்தன.. அவனது கோபம் ஓடியே போய்விட்டது.. அன்றைய இரவு.. அவர்களுக்கு முதலிரவாக மாறியது…
“அண்ணி… இன்னுமா தயாராகலை.. ?” சத்தியசீலன் குரல் கொடுத்தான்…
“இதோ வந்திட்டேன்…” கையில் குழந்தையுடன் பூர்ணிமா மாடியிலிருந்து இறங்கிவந்தாள்…
தாய்மைப் பெருக்குடன் இருந்த மனைவியின் அழகை ரசித்த குணசீலனை…
“அப்புறமாய் அண்ணியை ரசிக்கலாம்.. நீ இப்படி வந்து நில்லு…” என்று அதட்டினான் சத்தியசீலன்…
நடுவில் தாய் தந்தையரை அமரவைத்து.. அவர்களின் பின்னால் அவர்கள் மூவரும் நின்று கொள்ள.. போட்டோகிராபர் கோணம் பார்த்தார்…
“குழந்தையை என்கிட்ட கொடும்மா…” தேனினும் இனிய குரலில் கூறியபடி கை நீட்டி குழந்தையை வாங்கிக் கொண்ட காந்திமதியின் முகத்தில் பழைய கனிவும்.. பாசமும் மீண்டிருந்தன…
“பேரனை என்கிட்டக் கொடுடி…”
“இல்லை.. என்கிட்ட இருக்கட்டும்…”
பெரியவர்கள் இருவரும் வழக்கடித்துக் கொண்டிருக்க.. குடும்பப் போட்டோ எடுக்கப்பட்டது.. ஆசை ததும்பிய முகத்துடன் குணசீலன் மனைவியைப் பார்த்தான்.. செல்லக் கோபத்துடன் மற்றவர்களை விழிகளால் உணர்த்திய பூர்ணிமா… மெதுவாக அவன் கையைப் பிடித்துக் கிள்ளினாள்…
அவர்களுக்கிடையே ஆசை அலைமோத.. கோபம் காணாமல் போனது…
(முற்றும்)
– ஆசையா.. கோபமா… (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2012, லட்சுமி பாலாஜி பதிப்பகம், திண்டுக்கல்.