கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2025
பார்வையிட்டோர்: 2,855 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

பூஜையறையில் விளக்கை ஏற்றி.. கைகளை குவித்து.. கடவுள்களை வணங்கிக் கொண்டிருந்தாள் காந்திமதி.. 

“காந்தி…” என்ற அழைப்புடன்.. வீட்டுக்குள் வந்தார் விஸ்வநாதன்… 

“இதோ வந்திட்டேன்…” 

நெற்றியில் சாமி படங்களுக்கு முன்னாலிருந்த குங்குமத்தை வைத்துக் கொண்டு.. விரைந்து வந்தாள் காந்திமதி… 

“எதுக்கு ஓடி வர்ற…?” 

மங்களகரமான அழகுடன் மிளிர்ந்த மனைவியை கனிவுடன் பார்த்தார் விசுவநாதன்… 

“நீங்க கூப்பிட்டிங்களே…” 

அதுதான் காந்திமதி… 

வள்ளுவர் அழைக்கும் சத்தம் கேட்டதும்.. நீர் இறைத்துக் கொண்டிருந்த வாளியை அப்படியே கிணற்றுக்குள் விட்டு விட்டு.. 

‘இதோ.. வந்திட்டேன்…’ என்று ஓடி வந்தாளாம் வாசுகி 

அந்த வள்ளுவரின் வாசுகியைப் போல்தான்.. விஸ்வநாதனுக்கும்.. காந்திமதி இருந்தாள்… 

கையில் பிடித்திருந்த பையைக் கொடுத்து விட்டு கைலிக்கு மாறிய விசுவநாதன் குளியலறைக்குள் புகுந்தார்… 

அவர் கொடுத்த பையை அலமாரியில் வைத்துவிட்டு.. அவருக்காக காபியைக் கலக்க.. காந்திமதி சமையலறைக்குள் புகுந்தாள்.. 

ஈரம் படிந்த முகத்தை.. துவாலையால் துடைத்தபடி விஸ்வநாதன் ஹாலுக்கு வந்த போது… அவருக்காக சூடான காப்பியுடன் நின்றிருந்தாள் காந்திமதி… 

“பெரியவன் வந்திட்டானா..?” அவர் காபியை வாங்கிக் கொண்டார்… 

“இன்னும் வரலை…”

“சின்னவன்…?” 

“அவன் அப்பவே வந்திட்டான்.. டென்னிஸ் விளையாடப் போறேன்னு வெளியே போயிருக்கான்…” 

“இருட்டப் போகுது.. இன்னும் என்ன.. விளையாட்டு வேண்டிக்கிடக்கு..?” 

விஸ்வநாதன் முகம் சுளித்தார்.. அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் வந்தான்.. சத்தியசீலன்.. 

“ஏம்மா.. இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வர நானென்ன பெண்பிள்ளையா…?” 

காலம்.. காலமாக… தகப்பன் கேட்கும் கேள்விகளுக்கு – தாயிடம் எதற்காக இந்த மகன்மகள் பதில் சொல்கிறார்கள் என்று புரியாமல் விழித்தாள் காந்திமதி… 

“அதை என்னைப் பார்த்துச் சொல்லுடா..” விஸ்வநாதன் அதட்ட… 

“பார்த்திட்டாலும்..” என்று வாய்க்குள் முணுமுணுத்தான் சத்தியசீலன்… 

“பெரியவனைப் பாருடா…” 

‘இவர் ஒருத்தரு.. ஒன்னு இவரைப் பார்க்கச் சொல்லுவாரு.. இல்லைன்னா.. பெரியவனைப் பார்க்கச் சொல்லுவாரு… இந்த வயசில போயி இவங்க ரெண்டு பேரு மூஞ்சியையும் பாருடான்னு சொன்னா.. நான் என்னத்தைப் பண்றது..?’ 

“அவனை எங்கே பார்க்கிறது..? அவனென்ன வீட்டிலயா இருக்கான்.. ? இருட்டுறதுக்கு முன்னாலே வீட்டுக்கு வரனும்கிற சட்டமெல்லாம் எனக்குத்தானே.. அந்த துரைக்கு இல்லையே…” 

“அவனென்ன.. உன்னைப் போல ஊரைச் சுற்றிட்டா வர்றான்..?” 

“அப்பா.. வேண்டாம்.. என்னவோ.. வேலையில்லாத கிராஜீவேட்டை சொல்கிறதைப் போல… என்னையும் சொல்லி வைக்காதீங்க.. நான் இன்ஜினியரிங் ஸ்டூடன்ட்..” 

“அந்த நினைப்பும்.. பொறுப்பும் உனக்கிருக்கா..?” 

“இப்ப.. என்னை.. என்னதான்ம்மா இவரு செய்யச் சொல்கிறாரு…?” 

சத்தியசீலன் எரிச்சலுடன் காந்திமதியிடம் கேட்டுக் கொண்டிருந்தபோது… வாசலில் பைக் சத்தம் கேட்டது. “குணா வந்திட்டான்…” விஸ்வநாதன் முகம் மலர்ந்தார்… 

“இதுக்கு இவரு… ஒரு பிள்ளையோடயே நிறுத்தியிருக்கலாம்…” சத்தியசீலன் சத்தமாகவே சொல்லி வைத்தான்… 

“என்னது…?” விஸ்வநாதன் சின்ன மகனை முறைத்தார்… 

“ஒன்னுமில்லைப்பா.. அண்ணனுக்கு சூடாய் காப்பி கொண்டுவரச் சொல்லி அம்மாகிட்டச் சொன்னேன்…” பற்களின் இடையே வார்த்தைகளைக் கடித்து துப்பினான் சத்தியசீலன்… 

“என்னடா.. அதுக்குள்ள வீட்டுக்கு வந்திட்டியா..? டென்னிஸ் கோர்ட்டில இருப்பன்னில்ல நான் நினைச்சேன்..” 

குணசீலன் காபியை உறிஞ்சிக் கொண்டே கேட்டான்.. 

“எங்கே…? இவ்வளவு சீக்கிரமாய் வந்தாலும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கு…” அலுத்துக் கொண்டான் சத்தியசீலன்… 

“வீடுன்னு இருந்தா.. கேள்வியின்னு ஒன்னை கேட்கத்தாண்டா செய்வோம்…” விஸ்வநாதன் குரலை உயர்த்த… 

“விடுங்கப்பா…” என்றான் குணசீலன்….

”உனக்குத் தெரியாது குணா…” 

“எல்லாம் எனக்கும் கொஞ்சம் தெரியும். அவனுக்கு இதுதான்ப்பா வயசு.. இன்னும் ரெண்டு வருசம் போனா அவனும் என்னை மாதிரியே ஓட ஆரம்பிக்கனும்.. இந்த வயசில் என்ஜாய் பண்ணாம.. எந்த வயசில் என்ஜாய் பண்ணுவான்.. ? சத்யா… நீ உள்ளே போடா…” 

“நீ கொடுக்கிற செல்லம்தாண்டா இவனுக்கு…” விஸ்வநாதன்… அடுத்த கட்ட வசவுகளை கொட்ட ஆரம்பிக்கும் முன்னரே… சத்தியசீலன் மாடிப்படியில் ஏறிவிட்டான்… 

சற்று நேரத்தில் மாடிக்கு வந்த குணசீலனிடம் “தேங்க்ஸ்டா..” என்றான்… 

“எதுக்கு..?” குணசீலன் புருவம் உயர்த்தினாள்…

“அப்பாவின் மொட்டை ரம்பத்தில் இருந்து என்னைக் காப்பாத்தினதுக்கு.. 

குணசீலன் லேசாக சிரித்தான்.. தம்பியின் அருகே வந்து அவன் தோள்மேல் கைபோட்டான்… 

“என்னடா விசயம்.. ? எதுவும் அட்வைஸ்.. கிட்வைஸ் பண்ண ஆரம்பிக்கப் போகிறயா..?” 

‘கண்டு பிடித்துட்டானே…’ 

தம்பியின் புத்திசாலித்தனத்தை மெச்சிய புன்முறுவல் அவன் இதழ்களில் உதித்தது… 

“சத்யா…” 

“அண்ணா… வேண்டாம்டா… நீயும் மொக்கை போட ஆரம்பிக்காதே..நான் தாங்க மாட்டேன்..” 

“அதுக்கில்லைடா…” 

“இந்தா பாரு… கவர்ண்மென்டே.. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்ன்னுதான் பிரச்சாரம் பண்றாங்க…” 

‘இப்ப எதுக்கா.. இவன் மரத்தைக் கட்டி இழுக்கிறான்..?’ 

குணசீலனுக்கு புரியவில்லை… 

“அதை எதுக்குடா இப்பச் சொல்கிற…?” 

“அதைப் போல… வீட்டுக்கு ஒரு ஆள்தாண்டா மொக்கை போடனும்.. அதுதான் மொக்கை போடுறதை.. நம்ம அருமை அப்பா மொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்காரே… நீயும் கூட்டுச் சேரனுமா…?” 

“போடா அரட்டை..” 

தம்பியின் முதுகில் செல்லமாக ஒரு போடு போட்டான் குணசீலன்… 

“உனக்கெப்படி இது என்ஜாய் பண்ற வயசோ.. அதைப்போல.. அப்பாவுக்கு இது… பொறுப்பை உணர்த்துகிற வயகடா…” 

“இருந்துட்டுப் போகட்டும்.. அதை யாருக்கு உணர்த்தனும்.. பொறுப்பில்லாதவங்களுக்குத் தானே உணர்த்தனும்..?” 

“நீ சொல்கிறதும் ஒருவிதத்தில் சரிதான்… ஆனால்.. அவருடைய அப்பா…” 

“அதாவது… நம்ம தாத்தா…” 

“பரவாயில்லை.. பெரிய கண்டு பிடிப்பை கண்டு பிடிச்சுட்ட…” 

“உனக்கு தம்பின்னா சும்மாவா..?” 

“புல்லரிக்குது… போ…” 

“போர்வையை எடுத்துப் போர்த்திக்க…” 

“அது எதுக்குடா..?” 

“இல்லைன்னா… மாடு வந்து மேய்ஞ்சிராதா..?”

“ஹா… ஹா… இதில காண்பிக்கிற புத்திசாலித்தனத்தை அப்பாவைப் புரிஞ்சுக்கிறதிலயும் நீ காண்பித்தா தேவலாம்…” 

“அதைவிடு… தாத்தாவை பாதியிலேயே விட்டுட்டியே…” 

“அந்தக் காலத்திலே.. தாத்தா.. அப்பாவை கண்டிப்பா வளர்த்தாராம்…” 

“அதுக்காக.. இவருக்கு நாம கிடைச்சோமா..? என்னவோ… என் மாமியார் என்னைக் கொடுமைப் படுத்தினதாலே… நான் என் மருமகளைக் கொடுமைப் படுத்தறேன்னு சொல்கிறதைப் போல இருக்கே…” 

“விடுடா….” 

குணசீலன்….அவனுடைய அறைக்குள் நுழைந்து கொள்ள.. பக்கத்திலிருந்த அறைக்குள் போனான் சத்தியசீலன்… 

இரவு உணவின் போது.. விஸ்வநாதன் குணசீலனின் முகத்தைப் பார்த்தார்… 

“அண்ணா.. டேன்ஜர் சிக்னல் தெரியுதுடா…” சத்தியசீலன் முணுமுணுத்தான்… 

“குணா…” விஸ்வநாதன் ஆதுரமாய் அழைக்க…

“சொன்னேனில்ல..?’ என்றான் சத்தியசீலன்…

“சும்மாயிருடா…” சன்னக் குரலில் தம்பியை அடக்கிவிட்டு…. 

“என்னப்பா…?” என்று தகப்பனாரின் முகம் பார்த்தான் குணசீலன் 

“அம்பாசமுத்திரத்திலே ஒரு பெண்ணிருக்காம்…” என்று அவர் ஆரம்பிக்க… 

“என்னவோ….ஒரே ஒரு ஊரில… ஒரேயொரு பொண்ணிருக்காம்ன்னு கதை கேட்கிறதைப் போலவே இருக்கில்ல…?” என்று கேட்டு வைத்தான் சத்தியசீலன்…. 

விஸ்வநாதன் பேச்சை நிறுத்தி விட்டு இளைய மகனை முறைக்க அவன் வாயை மூடிக் கொண்டு.. சாப்பாட்டைக் கவனித்தான்… 

“பொண்ணு அழகாயிருக்கு… டீச்சராய் வேலை பார்க்குது.. வீட்டுக்கு ஒரே பெண்.. அம்பாசமுத்திரத்திலயும்… திருநெல்வேலியிலயும் அந்தப் பொண்ணு பேரில வீடுகளை வாங்கிப் போட்டிருக்காங்க… அதிகமாக சீர் செய்வாங்க.. நமக்கும் நெருங்கின சொந்தம்தான்… நீ என்ன சொல்ற…?” 

விஸ்வநாதனும்.. காந்திமதியும் ஆர்வத்துடன் குணசீலனைப் பார்த்தார்கள்… அவர்கள் பார்வையிலே… அவனது சம்மதத்தை எதிர்பார்த்த ஆவல் இருந்தது… 

குணசீலனின் மனக்கண்ணில் பூர்ணிமா தெரிந்தாள்… 

“வேண்டாம்ப்பா…” குணசீலன் மறுத்தான்…

“ஏன்ப்பா…?” விஸ்வநாதனுக்கு ஏமாற்றமாக போய்விட்டது… 

“எனக்கென்னவோ… பிடிக்கலைப்பா…” 

“பெண்ணைப் பார்க்காமலேயே பிடிக்கலைன்னு சொன்னால் எப்படிடா குணா… ஒரு எட்டு..நாம போய் பெண்ணைப் பார்த்துட்டு வருவோம்… அதுக்கப்புறம் நீ முடிவைச் சொல்லு…” 

“எனக்கு இஷ்டமில்லேம்மா…” 

“இது நல்ல இடம் குணா…” 

“இருக்கட்டும்ப்பா… இடத்தோடயா நான் வாழப் போறேன்…?” 

குணசீலன் கேட்ட கேள்வியை… 

“அஃது…” என்று சிலாசித்தான் சத்தியசீலன்…

மூத்தவன் மீதிருந்த கோபத்தை விழிகளில் தேக்கி இளையவனை முறைக்க ஆரம்பித்தார் விஸ்வநாதன்… 

“கல்யாணம் பேசறது அண்ணனுக்குத்தான்ப்பா.. எனக்கு இல்லை… ஆளை மாற்றி முறைக்காதீங்க..” என்றான் அவன்..! 

கைகழுவிக் கொண்டிருந்த மகனின் அருகே வந்து…

“ஏண்டா… இப்படிப் பண்ணிட்ட… அந்தப் பொண்ணு உன் அப்பாவழிச் சொந்தம்டா… பணக்கார இடம்… ஒற்றைப் பொண்ணு… இந்த இடத்தை உனக்கு முடிச்சு வைத்திரனும்னு உன் அப்பா.. எத்தனை தூரத்துக்கு ஆசைப்பட்டாருன்னு தெரியுமா…?” என்று மனத்தாங்கலுடன் சொன்னாள் காந்திமதி… 

“அம்மா… பணக்கார இடம்.. ஒற்றைப் பெண்.. சொந்தபந்தம்.. இதையெல்லாம் மறங்க… எனக்கு மனசுக்குப் பிடிச்சிருக்கனும்… அதை மட்டும் நினைங்க..” 

“அவளை உன் மனசுக்கு பிடிக்கும்டா…”

“எதைவைச்சு அப்படிச் சொல்கிறிங்க…?”

“அவ ரொம்ப அழகாயிருப்பாடா…?” 

குழந்தைத் தனத்துடன் இதைக் கூறிய காந்திமதியை யோசனையுடன் பார்த்தான் குணசீலன்… 

இவர்களுக்குச் சொன்னால் புரியுமா..?’ 

“ஏம்மா.. அழகாயிருந்தா மட்டும்… என் மனசுக்கு பிடிச்சுருமா..?” அவன் ஆழ்ந்த குரலில் கேட்டான்… 

“ம்ம்ம்… வேறென்னடா உனக்கு வேணும்…?”

காந்திமதி என்னவோ.. எளிதாக கேட்டுவிட்டாள்.. அதைச் சொல்லில் அடக்கி… அவளிடம் சொல்லிப் புரிய வைக்க அவனால் முடியவில்லை…. 

அத்தியாயம் – 8

அவனுக்கு பூர்ணிமாதான் வேண்டும்.. 

குணசீலன் அந்த ஒன்றில் தீவிரமாக… நிலையாக.. நின்றான்… அவன் மனக்கதவைத் தட்டியவன் அவன் மட்டும்தான்…எப்போது அவள் வருவாள் என்று அவனை எதிர்பார்க்க வைத்ததும் அவள்தான்… 

எப்போது அவன் வருவான் என்று எதிர்பார்த்து தவித்ததும் அவள்தான்… 

அவளில்லாத அலுவலகச் சூழல் அவனுக்கு வெறுமையை உணர்த்தியிருக்கிறது… அவள் விடுப்பிருந்த நாள் ஒன்றில்… அலுவலகத்துக்கு வந்த பூர்ணிமா… பாதி நாளிலேயே தலைவலியென்று விடுப்பு சொல்லிவிட்டுப் போய் விட்டதை அரவிந்தன் சொன்னபோது… அவனில்லாத வெறுமையை.. அவளும் உணர்ந்திருந்ததை… அவன் புரிந்து கொண்டு கர்வப்பட்டிருக்கிறான்… 

“சதா… உன்னையே முறைச்சுக்கிட்டு இருக்கிற சிடுமூஞ்சிடா அது…” 

‘மூஞ்சியைப் பற்றியெல்லாம்… நீ பேசாதே…” 

“அவளைச் சொன்னா… உனக்கு ஏண்டா பற்றிக்கிட்டு வருது.. ?” 

“அது அப்படித்தான்… நீ விஷயத்தைச் சொல்லு…” 

“நீ லீவான்னு என்கிட்டக் கேட்டா…” 

“ம்ம்ம்”. 

“ஆமாம்… நீ நிம்மதியாய் வேலையைப் பார்க்கலாம்ன்னு நான் சொன்னேன்…” 

அவனில்லாத அலுவலகம்.. அவளுக்கு நிம்மதியைத் தந்து விடுமா…? 

‘பாவம்… இவன் வெறும் கடலையைப் போடுகிறவன்.. காதலைப் பற்றி இவனுக்கென்ன தெரியும்..’ 

“தலையைப் பிடிச்சுக்கிட்டு.. உன் சீட்டையே வெறிக்க வெறிக்கப் பார்த்தா…” 

“அப்புறம்…?” 

“பொசுக்குன்னு எழுந்திருச்சு… மேனேஜரின் ரூமுக்குள் போய் அரைநாள் லீவை எழுதிக் கொடுத்துட்டு போய்விட்டா…” 

அந்த நிகழ்விற்குப் பின்னால்.. குணசீலன் லிவே போடுவதில்லை… என்று… தவிர்க்க முடியாத காரணங்களால் பூர்ணிமா லீவு போடுகிறாளோ.. அன்று.. அவனும் லீவு போட்டு விடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டான்…. 

“என்னதாண்டா உனக்குப் பிரச்னை.?” 

அரவிந்தன் யோசனையுடன் நண்பனைப் பார்த்துக் கேட்டான்… 

“எதைக் கேட்கிற…?” 

“புரியலை…?” 

“புரியலை…” 

“அவளுக்கும்.. உனக்கும்தான் ஆகவே.. ஆகாதே.. அப்புறமும் எதுக்காகடா.. அவ இல்லாத நாள்களில் என்ஜாய் பண்ணி வேலை பார்க்கிறதை விட்டுவிட்டு.. லீவைப் போட்டு வைக்கிற..?” 

“எனக்கு வேலையிருக்குடா…” 

“இதை என்னை நம்பச் சொல்கிறியா…?”

“நம்பாதே….” 

குணசீலன் இலகுவாக அரவிந்தனின் கேள்விகளை ஒதுக்கித் தள்ளி விட்டு…. தன் போக்கில் வேலையைத் தொடர்ந்தான்… 

‘இவன்.. பூர்ணிமாவைக் காதலிக்கிறான…?’ 

அரவிந்தனின் மனதில் சந்தேகம் துளிர்த்தாலும் இருக்காது என்றே அவன் நினைத்தான்… 

“அவளைவிட அழகாய்… இந்த பேங்கிலேயே மூணு பெண்கள் இருக்கிறாங்களே…” 

அவனுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.. குணசீலனின் கண்களுக்கு பூர்ணிமாதான் பேரழகி என்பதை அவன் உணராமல் போனான்…. 

அவனைச் சொல்லியும் குற்றமில்லை… அந்த அளவிற்கு குணசீலனின் மனதைக் கவர்ந்திருந்த பூர்ணிமாவிற்கே அது தெரியாது எனும்போது.. அவனுக்கு மட்டும் அது தெரிந்திருக்க நியாயமில்லைதான்… 

அதைத் தெளிவாக தெரிந்திருந்தவள் சரளா மட்டும்தான்… 

“என்ன குணா… இரண்டு நாளாய் லீவு போட்டுட்டிங்க… என்ன விசேசம்…?” 

“முக்கியமான வேலையிருந்துச்சுங்க.. அதுதான் விசேசம்…” 

“இதைப் பாருடா…” 

“யாரைப் பாருடான்னு சொல்கிறிங்க…? என்னையா…?” 

“ஐயையோ… உங்களைப் போய் அப்படியெல்லாம் சொல்வேனா குணா சார்… பொதுவாய் சொன்னேன்…” 

“நம்ப முயற்சி பண்றேன்…” 

“முயற்சியே பண்ணாமல்… நீங்க என்னை நம்பலாம்.”

“அதைவிடுங்க… நீங்க என்னவோ சொல்ல வந்திங்களே…” 

“அது வேற ஒன்னுமில்லை சார்… அது என்ன… எங்க பூர்ணிக்கு முக்கியமான வேலை வருகிறப்ப எல்லாம்… உங்களுக்கும் வேலை வருது…” 

குணசீலன் பதில் சொல்லாமல் சிரித்தபோது… அவனைப் புரிந்து கொண்ட பார்வையொன்றை பார்த்து வைத்தாள் சரளா… 

‘இவன் தெளிவாத்தான் இருக்கிறான்.. அவள்தான் தெளிவில்லாம உழப்பிக்கிட்டே இருக்கிறா…’ 

தோழியின் நினைவில்… அவள் முகம் கனிந்தது… 

‘மனசில இருக்கிறதை சொல்லித் தொலைக்க மாட்டா… ஆனா.. புதையலை பூதம் காவல் காக்கிறதைப் போல… இவன் கிட்ட யாரையும் நெருங்க விடாம காவல் காப்பா…’ 

அன்றைய நினைவில் அவள் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்… 

‘ஹப்பா… ஒரு வாரமாய் என்கூடப் பேச மாட்டேன்னு மௌனப் போராட்டம் நடத்திட்டாளே…’ 

“பூர்ணி…” 

“….”

“பேசேண்டி..” 

எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் மலையிறங்காத பூர்ணிமாவை மலையிறக்குவதற்குள் சரளா போராடிக் களைத்து விட்டாள்… 

“இனி உன் வழிக்கே வர மாட்டேண்டி…” 

களைத்துப் போய் அவள் உத்தரவாதம் கொடுத்த பின்னால்தான் சமாதானமானாள் பூர்ணிமா… 

“இவ்வளவு கோபம் உனக்கெதுக்கு வருது பூர்ணி..?”

“யாரு கோபிச்சது…? நானொன்னும் கோவிக்கலையே…” 

“இந்த ஒருவாரமாய் பேசாம இறுகிப் போனது யாரு..?” 

பூர்ணிமா அதற்குப் பதில் சொல்லவில்லை…

“அவன் மேல உன் அடி மனசில் உரிமையுணர்ச்சி இருக்கு பூர்ணி…” 

“அதெல்லாமில்லை…” 

“அது இல்லாமலா… நான் அவன் பக்கத்தில் போய் நின்னதுக்கே.. ஒரு வாரமாய் பேச மாட்டேன்னு முகம் திருப்பிக்கிட்ட…?” 

“இது… வேற ஒன்னுக்காக…” 

“அந்த வேற ஒன்னுதான் எது…” 

“என்ன நீ… வக்கீலைப் போல குறுக்கு விசாரனை பண்ணிக்கிட்டு இருக்கிற..?” 

பதில் சொல்ல முடியாமல் அவள் கோபமென்னும் கவசத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்ச்சிப்பதைக் கண்டு கொண்டவளாக… சரளா மௌனமாகி விட்டாள்… மெல்ல.. மெல்ல… குணசீலனின் நினைவுகளே சுவாசமாக மாறிப்போனாள் பூர்ணிமா… 

அதேசமயம்.. அதை வெளியே சொல்லாமல் முகத்தை சிடுசிடுவென்று வைத்துக்கொள்ளவும் செய்தாள்… 

“மகராசி… கடுகடுன்னே எப்பவும் இருக்கிறா… போன பிறவியில் இவ.. கடுவன் பூனையாத்தாண்டா பிறந்திருப்பா.. நான் அடிச்சுச் சொல்றேன்…” என்று சொன்ன அரவிந்தன்… முதுகில் அடி வாங்கினான்… 

“அவளைப் பத்தி தேவையில்லாமே பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்….” அவன் முதுகில் அடி கொடுத்த குணசீலன் முறைத்தான்… 

“நீ எதுக்குடா.. அவளுக்கு சம்மனில்லாத வக்கீலா ஆஜராகிற…?” 

“நீ எதுக்கு.. அவளை எதிரியைப் பார்ப்பதைப் போலவே பார்க்கிற..?” 

“இவளுக்கு எதிரியே தேவலாம்டா…” 

“எதை வைத்துச் சொல்ற…?” 

‘உனக்குத் தெரியாதுடா குணா.. காதலர்களை உலகமே காதலிக்குதுன்னு சொல்லியிருக்காங்க…” 

”யாரு சொல்லியிருக்காங்க..?” 

“யாரோ சொல்லியிருக்காங்க… இப்ப அதுவா முக்கியம்.. ?” 

“நீ எதுக்கு இதைச் சொல்கிறங்கிறதுதான் முக்கியம்.. சொல்லு…” 

“அப்படியிருக்க.. இந்த பாறாங்கல் என் உணர்வுகளோடு விளையாடிப் பார்க்குதுடா…” 

“யாரைப் பாறாங்கல்லுன்னு சொன்ன…?”

“வேற யாரைச் சொல்வேன்.. ? எல்லாம் அந்த சிடுமூஞ்சியைத் தான் சொன்னேன்…” 

“உன் முகரையை பேர்த்திருவேன்…” 

“இவன் ஒருத்தன்… அவளை ஒரு சொல்… சொல்ல விட்டுத் தொலைக்க மாட்டான்…” 

“நீ எதுக்கு சொல்ற…?” 

‘உனக்குத் தெரியுமில்லடா குணா.. நான் என் ஆளுமேல எவ்வளவு காதலை வைத்திருக்கேன்னு…?” 

“நான் எடைமெஷினில் அதை நிறுத்துப் பார்த்ததில்லை…” 

“அந்தக் காதலை அவகிட்டச் சொல்லச் சொல்லி… இவகிட்ட சொன்னேன்…” 

“பூர்ணிமாகிட்டயா….?” 

“அவ பெயரை வேற சொல்லனுமா…?”

குணசீலன் அரவிந்தனை ஒரு அக்கினி பார்வை. பார்த்து வைக்க… அவன் கொஞ்சம் அடங்கிப் பேசினான்.- 

“நானும் தான் என்ன செய்வேன்..? இவளை நம்பித்தானே என் காதலை சொல்லியனுப்பினேன்..?” 

“தூது அனுப்பினேன்னு சொல்லு…” 

“என்னவோ ஒன்னு… இந்த மகராசி அதுக்கான பதிலை வந்து சொல்லனுமா.. இல்லையா..?” 

குணசீலன் தாடையைத் தடவிக் கொண்டு அரவிந்தனையே யோசனையுடன் பார்த்தான்…. 

சரளாவின் மீதான அவளின் காதலைப் பற்றி குணசீலனுக்கு கொஞ்சம் கூட அக்கறையில்லை…. 

ஆனால்… அதன் காரணமாக பூர்ணிமா… அரவிந்தனின் தேவையற்ற விரோதத்திற்கு ஆளாகி… தினமும்.. அவன் பல்லில் அரைபடுவதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை…. 

“நீ அவகிட்ட கேட்டயா… ?”

“கேட்காமல் இருப்பேனா..?” 

“என்ன சொன்னா..?” 

“சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னா…”

“இப்ப நீ என்கிட்ட அடிவாங்கித்தான் சாகப்போகிற…” 

“எரியுதில்ல… ஒழுங்காய் பதில் வரலைன்னா.. உடம்பெல்லாம் மிளகாயை அரைத்து அப்பினதைப் போல எரியுதில்ல… அப்படித்தான் எனக்கும் இருக்கு.. தினமும் அவகிட்ட என் ஆளு என்ன பதிலைச் சொன்னான்னு கேட்கிறேண்டா… இவ.. அதுக்கு அவ… ஒன்னுமே பதில் சொல்லலைன்னு சொல்கிறாடா.. எனக்கு எப்படியிருக்கும்..?” 

அவனுக்கு எப்படியிருக்குமென்று.. குணசீலனாம். புரிந்து கொள்ள முடிந்தது… 

காதலிப்பவளின் வாய்மொழி என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்ளக் காத்திருக்கும் காதலனின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால்… அவன் காதலிப்பதற்கு அர்த்தமே இல்லையோ… 

மறுநாள் சரளாவின் அருகில் ஏதோ வேலையிருப்பதைப் போல அவன் சென்றான்… 

நிமிர்ந்து பார்த்த சரளா அரண்டாள்…

“என்ன சார்… இங்கே எதுக்காக வந்து நிற்கிறிங்க..?”

அவளது பதட்டத்தைக் கண்ட குணசீலனுக்கு வேடிக்கையாக இருந்தது… 

“என்னைப் பார்த்தா பேயைப் பார்த்ததைப் போல இருக்கா.. ? ஏங்க இப்படி அலருகிறீங்க…?” 

“நீங்க வேற… பேய் கூடப் பேசினால் கூட எனக்கொன்னும் பிரச்னையில்லை சார்.. உங்க கூடப் பேசினால்தான் பெரிய பிரச்னையே வந்து தொலைக்குது..” 

குணசீலனால் இதையும் புரிந்து கொள்ள முடிந்தது…

இன்னமும்.. அவனிருக்கும் திசைப்பக்கம்.. பூர்ணிமா… இயல்பாகக் கூடத் திரும்பி பார்ப்பதில்லை… அப்புறம்.. சரளா என் அலற மாட்டாள்…? 

அத்தியாயம் – 9

“பயப்படாதீங்க… நான் சீக்கிரமாவே.. இடத்தை காலி பண்ணிடறேன்…” 

“அதை முதலில் செய்யுங்க… உங்களுக்கு கோடி புண்ணியமாய் போய் விடும்…” 

“சரளா.. இதைக் கேட்கிறதுக்காக.. என்னை நீங்க… தப்பா நினைத்திரக் கூடாது…” 

சரளாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை… 

“என்ன சார்… உங்களைப் பத்தி.. என் பிரண்டு என்னென்னவோ கற்பனையில இருக்கிறா… நீங்க வந்து என்கிட்ட இப்படிப் பேசி வைக்கிறிங்க…” 

அவள் அப்படிக் கேட்டதும் இப்போது அரண்டு போவது குணசீலனின் முறையானது… 

“ஏங்க.. நீங்க என் தங்கையைப் போலங்க..” அவன் அவசரமாகச் சொன்னான்… 

“அப்பாடி.. என் பிரண்ட்ஷிப் பிழைச்சது.. எதுக்கும் இந்த டயலாக்கை… அவ காதுபட.. இரண்டொரு தடவை சொல்லி வைச்சீங்கன்னா தேவலாம்..” நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் சரளா… 

சும்மா பக்கத்தில் நின்றதற்கே டுத்தியபாட்டை அவள் மறக்கவில்லை…. 

“டிரை பண்றேன்…” 

“இப்ப உங்க கேள்வியைக் கேளுங்க…” 

“இந்த அரவிந்தன் பயலைப்பத்தி… பூர்ணிமா எதையாவது உங்களிடம் சொன்னாளா…?” 

“நீங்க எதுக்கு இதைக் கேட்கறிங்க… ?”

“காரணமாத்தான்…. பதிலைச் சொல்லுங்க… ப்ளீஸ்.”

“ஆமாம்… சொன்னாள்…”

“நினைத்தேன்…” 

குணசீலனின் மனம் நிம்மதியானது.. அவனுடைய பூர்ணிமா அடுத்தவர்களின் காதல் உணர்வோடு விளையாடிப் பார்க்கவில்லை… அரவிந்தன் சொன்னதை சரளாவிடம் சொல்லியிருக்கிறாள்… 

“நீங்க என்ன சொன்னீங்க…?” 

“உங்க பிரண்டுக்கெல்லாம் காதல் ஒரு கேடான்னு கேட்கச் சொன்னேன்..” 

இதை எப்படி பூர்ணிமா அரவிந்தனிடம் கேட்பாள்..?

அரவிந்தனுக்கு பதில் சொல்லாமல் பூர்ணிமா ஏன் அலைக்கழித்தாள் என்ற விவரம் பிடிபட்டதில்… அவனது மனம் லேசானது…. 

“ஏங்க அப்படிச் சொன்னீங்க…?” 

“பின்னே என்ன சார்… நான் என்ன எழுகடல்…. எழுமலை தாண்டியா இருக்கேன்..? அவர் பக்கத்திலேதான் உட்கார்ந்திருக்கேன்..? என்கிட்ட நேரடியாக் காதலைச் சொல்கிறதை விட்டுவிட்டு தலையைச்சுற்றி மூக்கைத் தொட்டால்.. ஒரு மனுஷிக்கு கடுப்பு வருமா.. வராதா…?” 

“வரும்…?” 

“காதலைச் சொல்ல ஆயிரம் வழியிருக்கு சார்… அதில் ஒருவழிகூட உங்க பிரண்டின் மரமண்டைக்கு எட்டலையா…? போய் உங்க பிரண்டுகிட்டச் சொல்லுங்க… காதலைச் சொல்லக்கூட தைரியமில்லாத ஆள்… எதுக்காக காதலிக்கனும்ன்னு… நான் கேட்டேன்னு சொல்லுங்க…” 

“நீங்க முடியாதுன்னு சொல்லிருவீங்களோன்னு பயந்திருக்கலாம்…” 

“அந்த பயமிருக்கிறவர் காதலித்திருக்கக் கூடாது.– காதலிக்கிறவளையே.. அவருடைய காதலை ஏற்றுக்க வைக்க முடியலைன்னா… இரண்டு சைடிலேயும் இருக்கிற… பெத்தவங்களை அவர் எப்படி கன்வின்ஸ் பண்ணப் போகிறார்… ?” 

“இதுக்காகவெல்லாம்… அவனுடைய காதலை ரிஜக்ட் பண்ணக்கூடாதுங்க…” 

“ஊஹீம்… காதலில் இரக்கப் படுகிறதெல்லாம் வேலைக்கு ஆகாது சார்… மனசுக்குப் பிடித்திருந்தா காதலிக்கனும்.. இல்லையா… நோன்னு சொல்லிடனும்… அதுதான் என் பாலிஸி…” 

அரவிந்தனை கேண்டினுக்கு அழைத்துப் போய் விவரம் சொன்னான் குணசீலன்… 

“சும்மா.. பூர்ணிமாவையே கரித்துக் கொட்டாகே சரளா உன்மேலே ஏகக் கடுப்பில் இருக்கிறா. அவ சொன்னதைச் சொன்னா உன் மனசு கஷ்டப் படுமேன்னுதான் சரளா எதையும் சொல்லலைன்ன பூர்ணிமா உன்கிட்டச் சொல்லியிருக்கா…” 

“என்னடா… குணா… என் ஆளுக்கு என்னைப் பிடிக்கலையாடா…?” 

அரவிந்தன் பரிதாபமாகக் கேட்டான்… குணசீலன் அவன் முகத்தையே பார்த்தபடி.. நிதானமாகக் கேட்டான். 

“கண்ணுக்கு அழகா ஒரு பெண்ணைப் பார்த்தவுடனே அவ என் ஆளுன்னு எந்த தைரியத்திலேடா ரிசர்வ் பண்ணிக்கிறீங்க.. ?” 

“குணா..” 

“என் ஆளு… என் ஆளுன்னு சொல்கிறீங்களே… அவ வேறு ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டா.. அப்பவும் அவளை… என் ஆளுன்னுதான் சொல்லித் தொலைப்பீங்களா…?” 

“காதலிக்கிறது… தப்பாடா…?” 

“இரண்டு கையும் தட்டினாத்தான் சத்தம் வரும்.. முதலில் அதைப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஒரு வழியைப் பண்ணு…” 

“நான் என்னடா பண்ண…?” 

“யோசி… எத்தனையோ யோசிக்கிற.. நீயென்ன ஜீரோவா..? இதுக்கும் ஒரு வழி தெரியும்..” 

அரவிந்தனை யோசிக்க வைத்துவிட்டு குணசீலன் கேண்டினை விட்டு வெளியேறினான்… 

கம்யூட்டரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சரளா… பக்கத்தில் வேகமாக சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்த அரவிந்தனைத் திரும்பிப் பார்த்தாள்… 

‘இவனுக்கு மெதுவாய் சேரை இழுக்கத் தெரியாதா..?’ 

எப்போதுமே அவள் பார்த்தால்… அவன் அவசரமாக அவளது பார்வையை சந்திக்க முயல்வான்… 

அன்று.. அவளது பார்வையைக் கவனிக்காமல் அவன் தன்போக்கில் வேலையைப் பார்க்க ஆரம்பிக்கவும்.. அவள் விழிகளில் ஆச்சரியம் வந்தது… 

அலட்சியமாக தோளைக் குழுக்கி விட்டு.. கம்யூட்டரின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள் சரளா… தொடர்ந்து வந்த நாள்களில்… அரவிந்தன் சரளாவைப் பார்க்க முயலவில்லை… 

‘என்னாச்சு.. ஆள் திருந்திட்டானா…?’

சரளாவின் மனதில் மெலிதான ஏமாற்றம் சூழ்ந்தது… அவள் அடிக்கடி கண்ணாடியைப் பார்க்க ஆரம்பித்தாள்.
‘நல்லாத்தானே இருக்கேன்.. அப்புறம் எதுக்காக முகத்தை திருப்பிக்கிறான்…?’ 

அவன் முகத்தைத் திருப்பிக் கொள்வதில்… அவள் மனம் எதற்காக அத்தனை கவலைகளைக் கொள்கிறது என்று அவளுக்கு விளங்கவில்லை… 

அவளுடைய வேலை சம்பந்தமாக எதையாவது சரளா கேட்டால்… அவள் முகம் பார்க்காமல் பதில் சொல்ல… ஆரம்பித்தான் அரவிந்தன்… 

‘இவனுக்கு நானென்ன விரோதியா… ?’

அவள் மனம் புகைந்தது… அவனது பாராமுகம் விளைவித்த இனம் விளங்காத எரிச்சலில்.. அவன் ஒருநாள்.. அவன் மேல் எரிந்து விழுந்தாள்… 

“இப்ப.. உங்க சொத்தை எதுவும் நான் கொள்ளை அடிச்சிட்டேனா..?” 

அவளது கடுகடுப்பில் சிறிதளவு கூட பாதிக்கப் படாதவனாக.. அவளது முகத்தை நிதானமாக நிமிர்ந்து பார்த்தான் அரவிந்தன்… 

“எதுக்கு கோபப்படறீங்க…” 

“புரியலையா…?” 

“புரியலை…” 

இப்படிச் சொல்கிறவனிடம் தேங்காயை உடைத்ததைப் போல… எப்படி உடைத்துப் பேசுவது என்று வழி தெரியாமல் திகைத்தாள் சரளா… 

“பக்கத்து… பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கிறோம்.”

“ஆமாம்… அதுக்கென்ன…?” 

“இப்படி பகையாளியைப் போல பார்த்தால் எப்படி.?”

“வேற எப்படிப் பார்க்க..? சொந்தக்காரனைப் போல பார்த்தா நீங்க சும்மா விடுவீங்களா..? ஜொள்ளு விடறான்னு பட்டம் கட்டி விடமாட்டிங்க..?” 

அவனுக்கு அப்படியெல்லாம் கூட பேச வரும்.. என்று அன்றுதான் முதன்முதலாக கண்டாள் சரளா…

‘பின்னிப் பெடலெடுக்கிறானே…’ 

“ஒன்னு இந்தப் பக்கம்… இல்லேன்னா… அந்தப் பக்கம்தானா.. ? ஊடேயே ஒருநாளும் நிற்க மாட்டிங்களா..?” 

“பாருங்க மேடம்…” 

“மேடமா…?” 

“ஆமாங்க.. உங்க பெயரைச் சொல்ல எனக்கு தைரியம் பத்தாதுங்க…” 

”ஓஹோ…” 

“நானே டியூப்லைட்.. நேராய் சொன்னாலே புரிஞ்சுக்காத மக்கு பிளாஸ்திரி…” 

“அப்படி நான் சொன்னேனா..?”

“சொன்னால்தானா.. ? இதையெல்லாம் நானாய் புரிஞ்சுக்கிட்டு ஒதுங்கிக்கிறேன்ங்க…”

“என்ன ஒரு பெருமை…!” 

“அப்படிப்பட்ட எனக்கு நீங்க மறைபொருளாய் என்ன சொல்லவர்றீங்கன்னு எப்படிங்க புரியும்..?” 

“ஒன்னு காதல்ன்னு பினாத்தனும்…” 

“உங்க அகராதியில்… காதல்ன்னா.. பினாத்தல்ன்ன அர்த்தம் போல…” 

அரவிந்தனின் கூரிய பார்வை.. சரளாவின் பார்வையை ஊடுறிவியதில் அவள் உடலில் ஒர்விதமான சிலிர்ப்பை உணர்ந்தாள்… 

“அது என்னமோ அப்படித்தான்.. இன்னொன்னு அண்ணன்.. தங்கை பாசம்…” 

“அதாவது நீங்க தங்கை… நான் அண்ணன்…?” 

சரளாவினால் அதற்கு ஆமென்று பதில் சொல்ல முடியவில்லை… அரவிந்தனின் தீர்க்கமான பார்வையில் உஷ்ணம் சேர்ந்திருந்தது… 

“இந்த பாசமலரை வளர்க்கவெல்லாம் எனக்கு தோது படாதுங்க.. மேடம்.. ஊடேன்னு எதையோ சொன்னீங்களே…” 

“நட்பு சார்…” 

“எனக்கு ஆயிரம் நட்பு இருக்குதுங்க.. ஆயிரத்து ஒன்னாய் உங்க நட்பு தேவையில்லிங்க…” 

“ஸோ..?” 

“வி ஆர் ஜஸ்ட் கோ-வொர்க்கர்ஸ்.. தட்ஸ் ஆல்..”

அரவிந்தனின் குரலில் கம்பிரம் தொனித்தது… அதுவரை சரளா உணர்ந்தறியாத அந்தக் கம்பீரத்தில் அவள் ஈர்க்கப் பட்டாள்… 

“அவன் ரொம்ப மாறிட்டாண்டி..” பூர்ணிமாவிடம் சொன்னாள்… 

‘எனக்கொன்னும் அப்படித் தெரியலை… அதே குரங்கு மூஞ்சி… ஜொள்ளு வாயனாத்தான் தெரியறான்.” பூர்ணிமா அசட்டையாக பதிலளிக்க… சரளா பல்லைக் கடித்தாள்… 

“மைன்ட் யுவர் வெர்ட்ஸ் பூர்ணி… யாரைப் பார்த்து குரங்கு மூஞ்சின்னு சொல்கிற.. ? உனக்குத்தான் குரங்கு மூஞ்சி… உன் குணாவுக்குத்தான் குரங்கு மூஞ்சி..” 

“என் மூஞ்சியைப் பத்தி என்ன வேணும்னாலும் சொல்லு… கேட்டுக்கிறேன்.. நீ என் பிரண்ட்… அந்த குணாவைப் பத்தி என்கிட்ட ஏண்டி சொல்கிற…? அதிலும் என் குணாவாமே… அந்த குணா யாரோ… நான் யாரோ.. குணாவைப் பத்தி என்கிட்டச் சொல்லக் கூடாது…” 

மூச்சுக்கு முந்நூறு தடவை… பூர்ணிமா ‘குணா” என்று சொல்லி வைக்க.. சரளா ரெளத்திரம் கொண்டாள்… 

“உனக்கு உன் பெருமைடி மகளே…” 

“என்ன பெருமை.. ? எனக்கொன்னும் எதுவுமில்லை…” 

“உன் மனசில் ஆயிரம் இருக்குடி… அதையெல்லாம் ஒப்புக்கிட்டா நீ எப்படி பூர்ணிமாகி விடுவே…” 

”உன்னைப் போலவே என்னையும் நினைக்காதே”.

“என்னைப் போலவா..?” 

“ஆமாம்… பின்னே.. என்ன.. ? அந்த அரவிந்தனைக் குரங்கு மூஞ்சி, ஜொள்ளு வாயன்னு நான் சொல்லலை… நீதான் இதுக்கு முன்னாலே.. இந்தப் பட்டப் பெயர்களை யெல்லாம் அவனுக்கு வைத்திருந்த… நீ சொல்லித்தான் எனக்கே இது தெரியும்…” 

“இப்போ எதுக்குடி அந்தக் கதையை இழுக்கிற…” 

“அப்புறம்.. எதுக்காகடி.. இப்போ என்னோடு சண்டைக்கு வருகிற…? என்ன ஆச்சு..? உன் மனசில் அவன் மேல்.. காதல்.. கீதல் வந்து விட்டதா…?” 

பூர்ணிமாவின் கேள்வியில் சரளாவுக்கு தூக்கி வாரிப் போட்டது…

– தொடரும்…

– ஆசையா.. கோபமா… (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2012, லட்சுமி பாலாஜி பதிப்பகம், திண்டுக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *