கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 9, 2025
பார்வையிட்டோர்: 2,588 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

மதிய உணவுக்குப் பின் திரும்பி வந்த குணசீலனின் முகத்தில் அந்தக் கவிதையின் சாயல் ஏதும் இருக்கிறதா.. என்று ஓரவிழிப் பார்வையிலே தேடி.. ஏமாந்து போனாள் பூர்ணிமா… 

அவன் முகத்திலிருந்து எதையும் கண்டு கொள்ள முடியவில்லை… அதே கேலிப் பார்வையோடு.. சீட்டில் உட்கார்ந்தவன்.. அவள் பார்வையை உணர்ந்தவனாக மெலிதாக விசிலடித்தான்… 

‘ராஸ்கல்… பூர்ணிமா முகம் சிவந்து பார்வையை விலக்கிக் கொண்டாள்… 

“என்னடா அரவிந்த்.. சாப்பிட்டுட்டு வந்துட்டியா?” 

பூர்ணிமாவை பார்வையிட்டபடி.. அரவிந்தனிடம் கேள்வி கேட்டான் குணசீலன்… 

“அதான் வந்துட்டேன்னு தெரியுதில்ல… அப்புறமும் எதுக்கு.. காலம்… காலமாய் என்னைப் பார்க்காம லிருந்தவனைப் போல… இப்படியொரு கேள்வியை கேட்டு வைக்கிற…?” 

“என்னமோ போடா.. இந்த சாப்பாட்டு நேரம் ஊடேவந்து உன்னையும்… என்னையும்.. பிரிக்குது பார்த்தியா…?” 

‘என்னைத்தான் சொல்கிறான்…’ பூர்ணிமா பல்லைக்கடிக்க… 

‘இவனுக்கு என்ன ஆச்சு…?’ என்ற கவலையோடு குணசீலனை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தான் அரவிந்தன்… 

நண்பனின் கவலைப் பார்வையை குணசீலன் கண்டு கொள்வதாகவே இல்லை.. அவன் பூர்ணிமாவின் முகம் பிரதிபலிக்கும் உணர்வுகளை ரசித்துக் கொண்டிருந்தான்.. 

“ஏண்டா.. அரவிந்தா.. என்னைக் காணாம ரொம்பத் தவிச்சுப் போயிட்டியா..?” என்றும் அவன் கேட்டு வைக்க… அரவிந்தனுக்கு தூக்கி வாரிப் போட்டது… 

“ஏண்டா டேய்.. ஆபிஸே வந்து அவங்கவங்க சீட்டில் உட்கார்ந்தாச்சு.. இன்னும் சாப்பிடப் போன என் ஆளு வந்து தொலைக்கலை… நான் அவளுக்காக ஏங்கிப் போய் உட்கார்ந்திருக்கேன்…. இதில நீ வேற ஏண்டா இப்படி பினாத்தி வைக்கிற?” 

“சாப்பிடப் போனாத் திரும்பிவர கொஞ்சம் முன்னே.. பின்னேதான் ஆகும்.. வீட்டுக்குப் போய் வர வேண்டாமா..? இப்படி வாசலை… வாசலைப் பார்த்துக்கிட்டு காத்திருந்தா… நாளப்பின்ன எனக்கு சாப்பிடப் போக மனசு வருமா…?” 

பூர்ணிமா அவன் வரவை எதிர்பார்த்து.. வாசலைப் பார்த்த தென்னவே உண்மைதான்… 

‘அதை… இவன் எப்படிக் கண்டுபிடித்தான்..?’ அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்… 

அவளுக்குத் தெரியாது.. குணசீலன் திரும்பி வந்தபோது.. வாசல் பக்கமாக நின்று கொண்டிருந்த மேனேஜர் அவனிடம் ஒரு விவரத்தைக் கேட்டார் என்பது… 

அவளுக்குப் பதிலைச் சொல்லியபடி பேங்கின் பக்கவாட்டு ஜன்னலருகே சென்றவன்.. பூர்ணிமா நகத்தைக் கடித்தபடி வாசலைப் பார்த்துக் கொண்டு தவிப்பாய் உட்கார்ந்திருந்ததை பார்த்து விட்டான்… 

மேனேஜர் கேட்ட தகவலை மெதுவாகச் சொல்லியவண்ணம் அவரறியாமல் ஜன்னல் வழியே பூர்ணிமாவைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் குணசீலன்… 

அவனுக்கான அவளது காத்திருப்பை அவனால் கண்டுகொள்ள முடிந்தது.. அவளின் விழிகளின் தவிப்பைக் கண்டவனின் மனம் மிருதுவானது.. 

‘எனக்காக காத்திருக்கிறா…’ 

இந்த எண்ணமே அவன் மனதை குளிர்வித்து தாலாட்டியது.. காதலில்.. காத்திருத்தலுக்கு தனி இடமே இருக்கிறது… 

காதலிப்பருக்காக காத்திருப்பதும் சுகம்.. காதலிப்பவரை காத்திருக்க வைப்பதும் ஒர்விதமான சுகம்… 

‘எவ்வளவு நேரமானாலும் எனக்காக அவ காத்திருப்பா… இந்த எண்ணத்தில் கர்வம் கொள்ளாத ஆண்மனம் இல்லை…’ 

‘எனக்காக அவர் காத்திருப்பாரே…’ 

இந்தத் தவிப்பில் ஓடிவராத பெண் மனமும் இல்லை.. 

கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் இந்தக் காத்திருப்பு முக்கிய பங்கை வகிக்கிறது… 

“நீ வரும் வரையில் 
நான் காத்திருந்தேன்… 
வரும் வழி தோறும்…. 
உன் முகம் பார்த்திருந்தேன்…

காத்துக் கிடந்தால்… 
என்ன ராஜா…? 
காதல் கவிதை 
சொல்லு ராஜா…” 

‘காத்திருந்த கண்களே… 
கதையளந்த நெஞ்சமே…’ 

‘கண்களின் வார்த்தைகள் புரியாதா..? 
காத்திருப்பேனென்று தெரியாதா..?’ 

இப்படிக் காத்திருப்பைப் பற்றி அவர் எழுதி வைத்திருக்கும் காதல் பாடல்கள் ஏராளம்… 

அந்தக் காத்திருப்பை.. குணசீலனுக்காக.. பூர்ணிமா மேற்கொண்டதில் குணசீலன் மனதில் கர்வம் கொண்டான்.. 

அவளது காத்திருப்பின் தவிப்பை வேடிக்கை பார்ப்பதில் அவனுக்குள் இனம் புரியாத சந்தோசம் ஏற்பட்டது… 

ஓரளவிற்கு மேல்.. அவளது தவிப்பைத் தாங்க முடியாமல் பேங்குக்குள் நுழைந்தான்.. அவனைக் கண்டதும் அவளது விழிகளில் உயிர்ப்பு வந்ததைப் பார்த்தபடி சீட்டில் அமர்ந்தவனுக்கு.. அவளைத் தொட்டு அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது… 

“எனக்காக இப்படி ஒரு துடிப்பாடி…’ என்று அவள் முகத்தை கைகளில் ஏந்தி.. உற்றுப்பார்க்க வேண்டும் போல இருந்தது.. 

‘நான் எங்கே போனேன்…? சாப்பிடத்தானே போனேன்.. திரும்பி வருகிறதுக்குள் இவ்வளவு தவிப்பா..?’ என்று மார்போடு அவளை சாய்ந்து தலை முடியைக் கோத வேண்டும் போல இருந்தது… 

அலுவலகச் சூழலில் அவற்றையெல்லாம் செய்ய முடியாது என்பது உண்மைதான்.. அதை அவன் பார்வையினா லேயாவது உணர்த்தித் தொலைத்திருக்கலாம்.. அதை விட்டுவிட்டு.. அவள் மீது அவன் மனதில் துளிர்த்திருந்த உரிமையுணர்வில் ஜாடையாய் கேலி பேசி விட்டான்… 

பூர்ணிமாவின் மனதில் மெலிதான ஏமாற்றம் சூழ்ந்தது… 

‘இவனுக்காக நான் காத்திருந்ததை இப்படிக் கேலி செய்கிறானே…’ 

அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. அதைப் பார்த்த குணசீலனுக்கு சிரிப்புத்தான் வந்தது… 

‘இவள் எங்கே போய்விடப் போகிறாள்…’ 

காதலின் அதீதமான நம்பிக்கையில் அவள் மனம் காயப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாதவனாக அவன் தொடர்ந்து கேலி பேசினான்.. 

“த்ச்சு.. கண் கொண்டு பார்க்க முடியலைடா…” 

“எதைடா..?” 

அரவிந்தனால் குணசீலன் எதைச் சொல்கிறான் என்பதை அனுமானிக்க முடியவில்லை… 

சுற்று முற்றும் பார்த்து வைத்தவன்.. குணசீலன் கம்யூட்டரின் திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் திகைத்தான்… 

‘இவன் இதையா சொல்கிறான்..?’ 

“ஏண்டா… அதைக் கண்கொண்டு பார்க்க முடியலைன்னா என்னடா ஆகித் தொலைக்கிறது.. ? அதைப் பார்த்தாத்தானே வேலை செய்ய முடியும்..? வேலையில்லைன்னாலும் பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைத்து விடும்.. உனக்கும்.. எனக்கும்.. எப்படிடா பெண் கிடைக்கும்.. ? வேலையில்லைன்னா… எவனும்.. நம்மை நம்பி.. பொண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டாண்டா…” 

“அப்படியா..?” 

பூர்ணிமாவைப் பார்த்து புருவங்களை உயர்த்தியபடி கேட்டான் குணசீலன்… 

‘அப்படியில்லை…’ என்று சொல்லத்தான் அவள் ஆசைப்பட்டாள்… 

‘எந்த அடையாளமும் உனக்கு வேண்டாம்… நீ என்னைக் காதலித்தால்.. அதுவே எனக்கு போதும்.. உன்னை.. உனக்காகவே நான் காதலிக்கிறேன்..’ என்று அவன் கைபிடித்து ஓடத்தான் ஆவல் கொண்டாள்… 

என்ன செய்வது.. ? அவன்தான் கேள்வி அங்கே.. பார்வை இங்கேயென்று.. எதிறும் இணை சேர்க்க வழியில்லாமல் அவளைத் தவிக்க வைத்துக் கொண்டிருக்கிறானே… 

இதுதான் அவன் என்று இனம் பிரிக்க முடியாமல் மனதிற்குள் களைத்துப் போனாள் பூர்ணிமா… 

“என்னத்தை.. நொப்படியான்னு ஒரு கேள்வியைக் கேட்டுவைக்கிற…? இது உனக்குத் தெரியாதா..?” 

“ஆக.. வீடு.. வாசல்.. வேலை… படிப்புன்னு இருந்தால்தான் பொண்ணுக நம்மை ஏறெடுத்துப் பார்ப்பாங்கன்னு சொல்கிற..?” 

குணசீலனின் பார்வை பூர்ணிமாவின் முகத்தில் மேய்ந்தது… 

அவள் விழிகள் நிமிர்ந்து அடிபட்ட பார்வையைச் சிந்தின… அவன் மனதில் சந்தோச ஊற்று பீறிட்டது… 

”பின்னே…? அந்த மன்மதனே வந்தாலும்.. இந்தக் காலத்துப் பெண்கள்.. உன் மன்த்லி சேலரி என்னன்னு தானே கேட்பாங்க..?” 

“அப்படிங்கிற..?” 

“ஆமாம்கிறேன்…” 

குணசீலனின் புருவங்கள் மீண்டும் உயர – பூர்ணிமா பொறுக்க மாட்டாதவளாய்.. அரவிந்தனின் பக்கம் திரும்பிச் சீறினாள்… 

“ஹலோ… அப்போதிலிருந்து.. நானும் பார்க்கிறேன்.. அது என்ன..? பெண்களையே வம்புக்கு இழுக்கறிங்க…?” 

“உள்ளதைத் தானேங்க பேசினோம்..? உங்களுக்கென்ன அதில இம்புட்டு வருத்தம்..?” 

“இருக்காதா.. பின்னே..? நீங்க பேசியது.. பெண்களையாச்சே… கேட்டவளுக்கு வருத்தம் வரத்தான் செய்யும்… நீங்க மட்டும் என்ன ஒழுங்கா…?” 

பூர்ணிமா குணசீலனை முறைத்தபடி அரவிந்தனிடம் கேட்டு வைக்க… அவனுக்கு வழக்கம் போல கோபம் வந்துவிட்டது… 

“ஏங்க என் ஒழுங்குக்கு என்னங்க குறைச்சல்..?” அவன் சட்டையின் கைப்பகுதியை மேலே ஏற்றிக் கொண்டு சண்டைக்கு கிளம்பி விட்டான்… 

ஒட்டு மொத்த ஆண்குலத்தை ‘ஒழுங்கா..?’ என்று கேட்டு வைத்ததை.. அவனைப் பார்த்து அவள் கேட்ட கேள்வியாக அவன் எடுத்துக் கொண்டதை தாமதமாகப் புரிந்து கொண்ட பூர்ணிமா.. மனதிற்குள் வியர்த்துப் போனாள்… 

‘கடவுளே.. இவன் சும்மாவே சாமியாடுவானே…’

சரளாவிடம் அவனது காதலைத் தெரிவிக்கும்படி.. அவன் ஒருநாள் பூர்ணிமாவிடம் கேட்டுக் கொண்டான்… 

பூர்ணிமாவும் அவனது வேண்டுகோளை சரளாவின் காதுகளில் போட்டு வைத்தாள்… 

ஆனால்.. சரளாவோ.. எதிர் கேள்வியொன்றை கேட்டு வைத்தாள்.. 

“ஏண்டி.. அவன் சீட்டுக்கு அந்தப் பக்கமா நீயிருக்கிற… இந்தப் பக்கமா நானிருக்கிறேன்…” 

“அதுக்கென்னடி இப்ப.. ?” 

இவள் என்னதான் சொல்ல வருகிறாள் என்ற நினைவோடு சந்தேகப் பார்வை பார்த்தாள் பூர்ணிமா… 

“அடச்சீ.. அப்படிப் பார்க்காதே.. அவன் மூஞ்சிக்கு.. ஒன்றே அதிகம்… இந்த லட்சணத்தில் இரண்டுன்னு நினைக்கிறயா..? நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை…” 

“அப்பாடி.. பிழைத்தேன்…” 

“அந்தப் பக்கம் திரும்பி.. உன்கிட்ட இதைச் சொல்லி.. தூது அனுப்புகிறதுக்கு பதிலாய்.. இந்தப் பக்கம் திரும்பி என்கிட்டே இதை நேராய் சொல்ல வேண்டியது தானே…?” 

“அதானே.. அப்படியும் செய்திருக்கலாமே…”

“இதையே செய்ய தைரியமில்லாதவனுக்கு காதல் எதுக்குடி..?” 

“என்னவோ.. உன்கிட்டச் சொல்ல முடியாம.. என்கிட்டச் சொல்லி விட்டிருக்கான்.. கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுடி…” 

“யாருடி இவ.. கன்ஸிடர் பண்ண இது என்ன.. கடையில் கிடைக்கிற கத்தரிக்காயா.. ? காதல்டி..” 

“யாரு இல்லைன்னு சொன்னது.. ?” 

“இவனையெல்லாம் என்னால காதலிக்க முடியாது..” 

இதை அவனிடம் சொன்னால்.. ஏற்கனெவே சகிக்க முடியாமலிருக்கும் அவன் முகம்.. இன்னும் சகிக்க முடியாமல் போய் விடுமே.. என்று மனதில் எழுந்த கலவரத்தால் பூர்ணிமா அதைச் சொல்லாமல் மௌனித்து விட்டாள்.. 

“ஏங்க உங்க பிரண்டு என்னங்க சொன்னாங்க..?”

“எதுவும் சொல்லலைங்க…” 

நீண்ட நாள்களாக இந்த ஒரே பதிலை அவள் அளித்து வருவதால் அரவிந்தனுக்கு பூர்ணிமாவின் மீது கொலைவெறியே இருந்தது… 

அத்தியாயம் – 5

“அதெப்படி.. என்னைப் பார்த்து நீங்க அப்படிக் கேட்டு வைக்கலாம்..?” 

அரவிந்தன் சூறாவளிக் காற்றாய் புறப்பட..பூர்ணிமா பயந்து போனவளாக அலுவலகத்தை ஒர் முறை பார்த்துக் கொண்டாள்… 

அதுவரை.. அவள் மாட்டிக் கொண்டு விழிப்பதை நமுட்டுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த குணசீலன்… 

“விடுடா.. டேய்…” என்று அரவிந்தனை அதட்டி வைத்தான்.. 

அதற்குப் பின்னால்தான் பூர்ணிமாவுக்கு போன உயிரே திரும்பி வந்தது… 

“அதெப்படிடா விட முடியும்.. ? இவங்க என்னைப் பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்டு வைக்கலாமா?”

“மேடம்.. உன்னைப் பார்த்து அப்படிக் கேட்கலைடா..” 

வேண்டுமென்றே ‘மேடம்’ என்ற வார்த்தையை அவன் அழுத்தி உச்சரிக்க.. பூர்ணிமா அவனை முறைத்தாள்.. 

‘நான் இவனுக்கு மேடமா..?’ 

அவளது முறைப்பைக் கண்டு கொண்ட இளநகை குணசீலனின் இதழ்களில் தவழ்ந்தது.. 

“என்னைப் பார்த்துக் கேட்காமல் வேற யாரைப் பார்த்து இவங்க அந்தக் கேள்வியைக் கேட்டாங்க..? உன்னைப் பார்த்தா..?” 

“ஆமாம்டா.. ஆமாம்…” மனதிற்குள் அரவிந்தனைத் திட்டித் தீர்த்தாள் பூர்ணிமா… 

குணசீலனின் கண்கள் மின்னின.. அவன் உதட்டோரமாக சுழித்து எழுந்த சிரிப்புடன்.. 

“அப்படித்தான் வைத்துக்கயேன்…” என்று லேசாக இமைகளைச் சிமிட்டினான்… 

பூர்ணிமா அவசரமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்… 

‘சரக்குன்னா.. இதை ஒன்னை செய்து விடுவான்…’ அவள் முகம் குங்குமமானது… 

அதைக் கண்டு கொண்டவனின் கண்களில் மின்னல் அதிகரித்தது… 

“அதை உன்கிட்ட நேராய் சொல்ல வேண்டியதுதானே…” என்று அரவிந்தன் எரிந்து விழவும்.. பூர்ணிமாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது… 

‘நேராய் சொல்கிறதைப் பத்தி இவனெல்லாம் பேசுகிறான்…’ 

“என்னவோ போடா… மேடம் தெரியாமல் பேசிட்டாங்க.. மன்னித்து விட்டு விடுவோம்…” 

“அதெல்லாம் முடியாது..” 

“முடியாதுன்னா.. என்ன செய்ய உத்தேசம்..?” 

“இவங்க ஏன்.. நம்மைப் பார்த்து அப்படி ஒரு கேள்வியைக் கேட்டாங்கன்னு எனக்குத் தெரியனும்..” 

“அதுவும் நியாயம்தான்..” 

குணசீலனின் புருவங்கள் உயர.. பூர்ணிமா கோபக் கொதிப்புடன் பேசினாள்… 

“பெண்கள் மட்டும்தான்.. ஆண்கள்கிட்ட வீடு.. வாசல்… வேலை.. படிப்புன்னு கேட்கிறாங்களா.. ? இது எல்லாம் இருந்தும்.. வரதட்சனை கொடு.. கார் வாங்கிக் கொடு.. பவுன் கணக்கில் நகையைக் கொடுன்னு.. ஆண்கள் கேட்கிறதில்லையா..?” 

“அதெல்லாம் அந்தக் காலம்..” என்று அலட்சியமாக சொன்னான் அரவிந்தன்… 

“இந்தக் காலத்திலேயும் அப்படித்தான்….” 

“இப்ப யாருங்க டௌரி கேட்கிறாங்க…?” 

“அதுக்குப் பதிலா கல்யாணச் செலவை தலையில் கட்டுவீங்க…” 

”வீடு… வாசல்ன்னு கேட்டோமா..?” 

“கார் வாங்கிக் கொடுன்னு கேட்கறதில்லையா..? நகை போடுன்னு சொல்கிறதில்லையா?” 

“நகையைக் கொண்டுவந்தா.. நீங்க கழுத்தில்… காதில்.. போட்டுக்கறிங்க.. நாங்களா போட்டுக்கிறோம்.. ? கார் வாங்கினா.. உங்களை உட்கார வைச்சுத்தான். டிரைவராய் மாறி ஓட்டிக்கிட்டுப் போகப் போகிறோம்… அதுக்கு நீங்கதானே எங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்..?” 

அரவிந்தன் கேட்கக்கேட்க.. குணசீலனின் சிரிப்பும் அதிகரித்தது… அதைக் கேட்க நேர்ந்த பூர்ணிமாவின் எரிச்சலும் அதிகரித்தது… 

“அடேங்கப்பா..! எனக்கு நகை போடுகிற பழக்கமில்லை.. காரைக் கண்டாலே பிடிக்காது.. நடந்து போகத்தான் பிடிக்கும்.. கூட்டத்தைக் கூட்டி கல்யாணம் பண்ணிக்க பிடிக்காது… சிம்பிளா.. ரெஜிஸ்ட்ரார் ஆபிஸில் நான்கு பேர் சாட்சிக் கையெழுத்துப் போட… மாலைமாற்றிக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் பிடிக்கும்ன்னு ஒரு பெண் சொன்னால் நீங்க.. ஆஹான்னு ஒப்புக்கொள்வீங்களாக்கும்…? 

“அது.. அது.. அது வந்து…” 

பூர்ணிமா போட்ட போட்டில்.. அரவிந்தன் பேச்சு வராமல் திணறிப் போனான்.. அதை ரசித்து வாய்விட்டுச் சிரித்தான் குணசீலன்.. 

“ஆக… மேடம்.. இந்த முடிவோடதான் இருக்கிறாங்க…. போல…” 

“ஆமாம் அரவிந்தன் சார்.. அப்படித்தான்னு சொல்லுங்க…” 

“அதுக்கென்னடா அரவிந்தா.. மேடத்தைப் போலப் பொண்ணு கிடைச்சா.. நகை வேணும்.. கார் வேணும்ன்னு எந்த மடையன் கேட்கப் போகிறான்..?” 

குணசீலன் சொல்ல.. அவசரமாக அதை மறுத்தான் அரவிந்தன்… 

“டேய்.. அப்படிக் கேட்காதவன்தான் மடையன்டா..” 

“மேடத்தைக் கட்டிக்கப் போகிறவன் அப்படிக் கேட்க மாட்டான்டா…” 

“இனியொருத்தன் அதுக்குப் பிறந்துதான் வரனும்…” 

“ஏற்கனெவே பிறந்திருப்பான்…” 

“நினைத்துக் கொண்டேயிரு…”

“பின்னே.. நான் நினைக்காம.. வேற யாரு நினைப்பா..?” 

மறந்தும்.. தன்னை நேரடியாய் சம்பந்தப் படுத்தி குணசீலன் பேசவில்லை.. அதேசமயம்.. அவனுக்கும்.. அவளுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்ற ரீதியில் விலகி நின்றும் பேசவில்லை… 

‘இதை என்ன கணக்கில் எடுத்துக் கொள்வது.. ?’ 

முடியை பிய்த்துக் கொள்ளாத குறையாக குழம்பிக் தவித்தாள் பூர்ணிமா… 

அவளுடன் வம்பிழுக்க அலைபவனின் கண்களில் தெரியும் கேலிக்குப் பின்னாலிருப்பது.. ஆசையா..? இல்லை.. கோபமா.. ? என்று அறிய முடியாமல் அவள் தவித்துப் போனாள்… 

“நீ சொன்னதால் நான் இதோட விடறேன்..”

அரவிந்தன் பூர்ணிமாவை முறைக்க.. அவனது பின்னந் தலையில் தட்டினான் குணசீலன்… 

“இல்லைன்னா.. என்ன செய்திருப்ப..?” 

அவனது கடுமையைக் கண்ட அரவிந்தன் திகைத்துப் போக.. பூர்ணிமாவுக்கு மனதிற்குள் வழக்கமாய் வரும் மழைச்சாரல் அடித்தது… 

அவளுக்கு அது போதுமானதாக இருந்தது.. அவன் கவிதையை கையில் எழுதவில்லை என்பதை அவள் மறந்து போனாள்… 

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு 
வாசமுண்டு.. 
கண்டதுண்டா..? கண்டவர்கள்.. 
சொன்னதுண்டா…?” 

அவன் தன் போக்கில் பாடுவதைப் போல அவளைப் பார்த்துப் பாடி வைத்தான்… 

அன்று உடுத்தியிருந்த சேலையை.. துவைக்க மனமில்லாமல் பத்திரப் படுத்தி வைத்தாள் பூர்ணிமா… 

அவன் முகம் மீதுபட்ட சேலை முந்தானையில் முகம் பதித்து.. கண்மூடிக் கிறங்கி நின்றவளை.. அறைக்குள் வந்த சரளா ஒரு மார்க்கமாகப் பார்த்தாள்… 

“என்னடி ஆச்சு உனக்கு..?” 

ஏகாந்தம் கலைந்து விட்ட பதட்டத்தில் பதறித்திரும்பினால் பூர்ணிமா.. 

“ஒன்.. ஒன்னுமில்லையே…” 

அவளது நடுங்கிய குரலே.. அவளைக் காட்டிக் கொடுத்துவிட நம்பாத பார்வையொன்றை பார்த்தாள் அவள்… 

“ஊஹீம்.. என்னவோ இருக்கு.. நீ இன்னைக்கு சரியாய் இல்லை…” 

”ஏன்.. எனக்கென்ன.. நான் சரியாத்தானே இருக்கேன்…?” 

பூர்ணிமா சரளாவின் விழிகளைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்… அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சரளா… 

“என்ன.. காதலிக்கிறயா..?” என்று நிதானமாகத் கேட்டாள்.. 

“சரளா..” பூர்ணிமா அதிர்ந்து நிமிர்ந்தாள்… 

“உன் நேர் கொண்ட பார்வை எங்கேடி போச்சு..? கள்ளத்தனமெல்லாம் காதலில்தான் வரும் பூர்ணிமா.. நீ காதலில் விழுந்துட்ட…” 

அந்த நேரம் பாத்தா.. பக்கத்து அறையிலிருந்த எப்.எம்மின் பாடல் ஒலி கேட்க வேண்டும்…? 

“விழாமலே இருக்க முடியுமா..? – நான் 
விழுந்து விட்டேன் காதல் வலையிலே…” 

என்று அது பாடி வைத்தது. 

பாட்டைக் கேட்டு.. திருதிருத்த பூர்ணிமாவைப் பார்த்த சரளா பக்கென்று சிரித்து விட்டாள்… 

“யாரு… குணசீலன்தானே…” என்றாள்…

“ஊஹீம்..” பூர்ணிமா மனதை மறைத்தாள்…

“அவன்தானே உன் ஆளு..?” 

“அப்படி நான் உன்கிட்டச் சொன்னேனா..? நீயாக எதையும் சொல்லாதே…” 

“நானாய் சொல்கிறோன்..?”

“ஆமாம்..” 

“உனக்கு அவன் மேல நினைப்பில்லை..?” 

“இல்லை…” 

சரளா மேலே கிளறாமல் விட்டு விட்டாள்.. அன்று இரவு தூங்கும் போது… பூர்ணிமாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.. 

ஏன் அவளால் உண்மையை ஒப்புக் கொள்ள முடியவில்லை.. ? ஆமாம்… குணசீலனைத்தான் நான் காதலிக்கிறேன் என்று சரளாவின் முகம் பார்த்துச் சொல்ல.. அவளால் ஏன் முடியாமல் போனது..? 

இதுவா.. அதுவா.. என்று இனம் சேர்க்க முடியாமல் அவளது காதல் உணர்வுகளுடன் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதை அந்த குணசீலன் என்றாவது ஒருநாள் உணர்வானா என்ற ஏக்கத்துடன் அவள் விழிமூடித் தூங்க முயன்றாள்.. தூக்கம் வரவில்லை.. புரண்டு படுத்தாள்… 

“பூர்ணிமா…” 

இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு மெதுவாக ஒலித்தது சரளாவின் குரல்… 

‘இவள் இன்னும் தூங்கலையா..?’

அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்த பூர்ணிமா… அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்… 

“என்னடி..” 

“ஏண்டி.. மனசைப் போட்டு அலட்டிக்கிற.. ?” 

“அதெல்லாம் இல்லையே…” 

“பொய் சொல்லாதே.. எனக்கு உன்னைத் தெரியாதா.. ?” 

“நீயாய் எதையாவது நினைத்துக்கிட்டு கேள்வி கேட்காதே சரளா… நான் நல்லாத்தான் இருக்கேன்…” 

“உனக்கு அவன் மேல மனசிருந்தா சொல்லித் தொலையேண்டி…” 

“எவன்மேல மனசிருக்குன்னு சொல்கிற…?” 

விடிவிளக்கின் மெல்லிய ஒளியிலும்.. சரளா முறைப்பதை பூர்ணிமாவினால் பார்க்க முடிந்தது… 

“தூங்குகிறவங்களை எழுப்பிவிடலாம் பூர்ணி.. ஆனா.. தூங்கறதைப் போல நடிக்கிறாங்க பாரு.. அவங்களை எழுப்பவே முடியாது…” 

“இதைச் சொல்லத்தான் என் தூக்கத்தை கலைத்தயா.. ?” 

“நீ தூங்கிக்கிட்டு இருந்தியா..?” 

“பின்னே இல்லையா..?” 

“ஊ,ஹீம்.. இது வேலைக்கு ஆகாது.. நீ வழிக்கு வரமாட்ட.. விடிய விடிய தூங்காம மனசைப் போட்டு உழட்டிக்கிட்டு இருந்துட்டு விடியக்காலம் கும்பகர்ணியைப் போலத் தூங்கி வைக்கப் போகிற.. உன்மேல் பக்கெட் தண்ணியைக் கொட்டுகிறதுக்காகவாவது நான் விழிக்கனுமில்ல.. அதனால…” 

“அதனால…” 

“நீ எக்கேடோ.. கெட்டு ஒழி…நானாவது தூங்கறேன்…” 

சரளா தூங்கி விட்டாள்.. பூர்ணிமா.. அறையில் சூழ்ந்திருந்த மெல்லிய வெளிச்சத்தில் விட்டத்தைப் பார்த்தபடி.. விடியும் வரை தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.. விடியும் போது தூங்கிவைத்தாள்… 

வழக்கப்படி அவள் முகத்தில்.. பக்கெட் தண்ணீரைக் கொட்டி எழுப்பினாள் சரளா… 

“தினமும் எனக்கு இது ஒரு வேலையாய் போச்சுடி..” 

பல்லைக் கடித்தவளின் முகம் பார்க்காமல்… பல்லைத் தேய்க்கப் போனாள் பூர்ணிமா… 

அரக்கப் பரக்க.. பேங்குக்குள் நுழைந்தவர்களை விழியுயர்த்திப் பார்த்தான் குணசீலன்… 

“ஏன் சரளா.. உங்க பிரண்டுதான் சோம்பேறின்னா.. நீங்களும்.. அவங்களைப் போலவே இருந்து வைக்கனுமா..? காலாகாலத்தில ஆபிஸீக்கு வந்து சேர்ந்தால் ஆகாதா..?” 

பூர்ணிமாவைப் பார்த்தபடி.. அவன் சரளாவிடம் கேட்க அவள் சிரித்தாள்… 

அவன் சரளாவிடம் பேசியதில் பூர்ணிமாவுக்கு உடன் பாடில்லை… 

‘இவன் என்னைக் கேலி செய்வதற்காக அவளுடன் பேசினானா..? இல்லை.. என்னைக் கேலி செய்வதை சாக்காக வைத்து அவளுடன் பேச ஆசைப்பட்டுப் பேசினானா..?’ 

அவளால் அனுமானிக்க முடியவில்லை… 

அதற்கேற்றாள் போல.. சரளா.. குணசீலனின் அருகே குனிந்து… அவனது கம்யூட்டரின் திரையைப் பார்த்தபடி.. அவனிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள்… 

அத்தியாயம் – 6

பூர்ணிமாவிற்குள் பொசு… பொசுவென்று கோபம் புதைந்தது…. நொடிக்கொருதரம்… அவள் சரளாவையும்.. குணசீலனையும் பார்த்தபடி… இருந்தாள்… வேலையில் மூழ்க… அவளால் முடியவில்லை…. 

தற்செயலாக பூர்ணிமாவின் பக்கம் திரும்பிய சரளா.. அவளது முக மாற்றத்தை துல்லியமாகக் கணித்து விட்டாள்… 

அவளுக்கு வேண்டிய விபரங்களை குறித்த பின்னாலும் வேலையிருப்பதைப் போல… குணசீலனின் அருகே மீண்டும் குனிந்தாள்… குணசீலனுக்கு ஒன்றும் புரியவில்லை… 

“என்ன சரளா..? அதுதான் நீங்க கேட்ட விவரத்தைக் கொடுத்துட்டேனே…” 

“இது சும்மா சார்… வேற விவரம்…” 

சரளாவின் கண்களில் சிரிப்பிருந்ததைக் கவனித்த குணசீலனின் மனதில் எதுவோ தோன்ற… அவசரமாக பூர்ணிமாவைப் பார்த்தான்… அவள்… அவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…

‘கதை அப்படிப் போகுதா…?’ 

குணசீலனுக்கு சரளாவும்… பூர்ணிமாவும் நெருங்கிய தோழிகள் என்பது தெரியும்… 

சரளா.. பூர்ணிமாவை சீண்டி விளையாட நினைப்பதை அவன் புரிந்து கொண்டு விட்டான்… 

அவன் கண்களில் வழக்கமான கேலியும்.. விசமமும் சேர்ந்து கொள்ள.. அவன் வேண்டுமென்றே சரளாவின் பக்கமாக சாய்ந்து… 

“இது இல்லிங்க.. அது…” என்று சொல்ல ஆரம்பித்தான்… 

பூர்ணிமாவுக்கு மூச்சையடைப்பதைப் போல இருந்தது…..அவர்களின் நெருக்கம் அவள் மனதில் பூகம்பத்தை விதைத்துக் கொண்டிருந்தது… 

‘இவளெல்லாம் ஒரு தோழியா.. ?’ அவள் மனம் கொதித்தாள்… 

‘இவன்தான் ஆகட்டும்… கொஞ்சமாவது தள்ளி உட்காருகிறானா..? கிடைச்சது சான்ஸீன்னு… ஒட்டி உராய்கிறானே…’ பொருமினாள்… 

உண்மையில் குணசீலனின் விரல்கூட சரளாவின் மீது படவில்லை… அதைப்போல.. சரளாவும் அவன்மீது சுடிதாரின் துப்பட்டாவின் முனைகூடப் பட்டுவிடாமல் சர்வஜாக்கிரதையாக விலகி நின்றாள்… ஆனால்.. பூர்ணிமா இருந்த இடத்திலிருந்து பார்த்தால்… அவர்கள் இருவரும் தொட்டுக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றி வைத்தது…. 

அவள் உன்மத்தம் பிடித்தவளைப் போல ஆனாள்.

‘இந்த அரவிந்தன் எங்கே போய் தொலைஞ்சான்..?’

அவள் கண்கள் அரவிந்தனைத் தேடின… அவன் மேனேஜரின் அறைக்குள் நிற்பது. கண்ணாடிச் சுவரின் வழியாக வெளியே தெரிந்தது… 

‘இப்பப் போய் அங்கே என்னத்தைத் கிழிக்கிறான்..?’ 

அரவிந்தன் வந்தால்தான் அவள் நிம்மதியாக வேலை பார்க்க முடியும் என்று ஆகிவிட.. அவள் செல்போனை எடுத்து.. அரவிந்தனின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தாள்… 

மேனேஜரின் முன்னால் நின்று கொண்டிருந்த அரவிந்தனின் செல்போன் குறுஞ்செய்தியை அறிவுறுத்தி ஒலித்து வைக்க.. அவன் மேனேஜரிடம் பேசியபடியே செய்தியைப் படித்தான்… 

‘திரும்பிப் பார்…’ என்றது செய்தி.. ‘என்னடா.. இது.. ?” 

குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்து விட்டான்… 

குணசீலனின் அருகே.. நெருக்கமாக நின்று கொண்டிருந்த சரளாவைக் கண்டதும்… மேனேஜரை மறந்து.. அவசரமாக வெளியே வந்தான் அவன்…. 

‘காத்திருந்தவன் சைட்டை.. நேற்று வந்தவன் உஷார் படுத்திக்கிட்டுப் போவதா..?’ அவனது ரத்தம் கொதித்தது… 

“குணசீலா…” 

அவன் போட்ட சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவனை, 

‘யு டூ புருட்டஸ்…?’ என்று சீஸர் புருட்டஸை பார்த்த பார்வையை பார்த்து வைத்தான் அரவிந்தன்… 

“என்னடா..?” 

எதுவுமே நடக்காததைப் போல… அரவிந்தனின் பார்வையை பொருட்படுத்தாமல் குணசீலன் கேட்டு வைத்ததில் அரவிந்தனுக்கு நெஞ்சுவலி வந்து விடும்போல ஆகிப் போனது… 

‘இவன்கிட்டப் பேசினா வேலைக்கு ஆகாது…’ கணநேரத்தில் முடிவெடுத்த அரவிந்தன் சரளாவைப் பார்த்தான்… 

“இங்கே என்ன பண்றீங்க…?” 

நேருக்கு நேராக அவள் முகம் பார்த்து அவன் கேட்ட தைரியத்தில் சரளாவின் விழிகளில் ஆச்சரியம் தெரிந்தது… 

‘அட.. இவனுக்கு இத்தனை தைரியமா..?’ 

“பார்த்தாத் தெரியலையா..? என் ஸ்டேட்மென்டுக்கு குணசீலனின் பிரான்சில் இருக்கிற டோட்டல் நம்பரை குறிச்சுக்கிட்டு இருக்கேன்…” 

“அதை ஒரு செகண்டில் நோட் பண்ணிடலாமே..” அரவிந்தனின் குரலில் தெரிந்த ஆளுமையில் சரளா அயர்ந்து போனாள்…

‘என்னடா இது.. பூனை கூட புலியைப் போல மாறுது…’ 

“எனக்கு ஒரு மணி நேரம் கூட ஆகும் சார்…” 

“நீங்க நகர்ந்துக்கங்க.. நான் குறிச்சுத் தர்றேன்..” 

“அது என்ன தேவைக்கு..? என் வேலையைப் பார்க்க எனக்குத் தெரியும்..” 

“இப்ப நகரப் போறிங்களா இல்லையா…?” 

அரவிந்தன் விடாமல் வழக்கடித்துக் கொண்டிருப்பதை நமட்டுச் சிரிப்புடன் ரசித்தாள் பூர்ணிமா… அதை குணசீலனும் கவனித்து விட்டான்… 

‘இது இவ வேலைதானா..?’ 

ஆனால்.. இருந்த இடத்திலிருந்து கொண்டு… எப்படி அரவிந்தனை அங்கே வரவழைத்தாள் என்ற மர்மம் மட்டும் அவனுக்கு விளங்கவில்லை… 

விளையாட்டை முடிக்க நினைத்தவளுடன் இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்க ஆசைப் பட்டான் குணசீலன்.. அதற்காக…. 

“எதுக்காகடா.. அவங்களை நகரச் சொல்கிற…?” என்று அரவிந்தனிடம் கேட்டு அவனது ரத்த அழுத்தத்தை எகிற வைத்தான்… 

“ஏண்டா டேய்… உனக்கே இது நியாயமாய் இருக்காடா.. ?” 

அரவிந்தன் நியாயம் கேட்ட விதத்தில்.., குணசீலன்.. சரளா… இருவருக்குமே.. சிரிப்பு வந்தது…. மனதிற்குள் சிரித்தபடி.. வெளியே அவர்கள் அரவிந்தனை முறைத்தார்கள்.. 

“ஹலோ சார்… என் வேலையை கெடுத்துக்கிட்டு… உங்க பிரண்டு கிட்ட நியாயம் கேட்கறிங்களே… உங்களுக்கே இது நியாயமாய் இருக்கா..?” சரளா அரவிந்தனுடன் சண்டைக்குப் போனாள்… 

“அதானே… நல்லாக் கேளுங்க சரளா.. நாமளே மும்முரமாய் டோட்டலைப் பார்த்துக்கிட்டிருக்கோம்… இவன் ஊடே வந்து மூக்கை நீட்டி காரியத்தையே கெடுக்கிறானே…” 

குணசீலன் பேசிய விதத்தில் சரளாவுக்கு சிரிப்பு.. சிரிப்பாய் வந்து தொலைத்தது.. அடக்கிக் கொண்டாள்… கெடுக்கிறேனா.. எந்தக்

“காரியத்தைக் காரியத்தைடா மச்சான்… 

அரவிந்தன் வெந்தே போனான்.. 

“வேற எந்தக் காரியத்தைன்னு நினைச்சேடா அரவிந்தா…?” குணசீலனின் புருவங்கள் உயர்ந்தன… 

“ஏண்டா… டேய்.. உனக்கா நான் சொல்கிற காரியம் எதுன்னு புரியாது…’ 

அரவிந்தனின் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால்… அவனின் கனல் கக்கிய பார்வையில் குணசீலன் அந்த இடத்திலேயே… பஸ்பமாகிப் போயிருப்பான்… 

“குணா… நீ கொஞ்சம் எழுந்திரு..” 

“இது என்னோட சீட்…” 

“இருக்கட்டுமே.. என்னவோ.. மந்திரி சீட்டைப் போல… பில்ட் அப் கொடுக்கிற… ஆபிஸ் சீட்தானே..? அப்புறமாய் உட்கார்ந்துக்கலாம்… இப்ப எழுந்திரு…” 

“அது என்ன தேவைக்கு…?” 

அவன் சரளாவைப் பின்பற்றி… அவள் சொன்னதையே சொல்லி வைக்க…. 

‘அது… என்ன… இவங்க ரெண்டு பேரும் ஒன்னு போலப் பேசிவைக்கிறாங்க…’ என்று வெறியேறிப் போனான் அரவிந்தன்…. 

“குணா… நான் கொலைகாரனா ஆகிறதுக்குள்ள சீட்டை விட்டு எழுந்திரு…” 

“அதெல்லாம் முடியாதுடா…” 

“சரளா… நீங்களாவது நகர்ந்துக்கங்க…” 

“வேலையைப் பார்க்க விடுங்க சார்…” 

“இப்ப ரெண்டு பேரும் நான் சொன்னபடி செய்யப் போறிங்களா இல்லையா…?” 

“இல்லைடா.. இப்ப என்ன செய்வ…?” 

அரவிந்தன் டேபிளின் மீதிருந்த கத்தியை கையில் எடுத்துக் கொண்டான்… 

“ஏய்ய்… அதையேண்டா எடுக்கிற…?” 

“ஊம்..? என்ன செய்வன்னு கேட்டயில்ல. இதாலே… என் கையை கிழிச்சுக்குவேன்…” 

“டேய்… டேய்… மடையா… கத்தியை கீழே போடுடா…” 

சட்டென்று குணசீலன் எழுந்து கொள்ள.. சரளாவும் விலகி அவள் சீட்டில் போய் உட்கார்ந்தாள்… 

“பைத்தியமாடா… நீ…?” 

குணசீலன் அரவிந்தனைக் கடிந்தபடி பூர்ணிமாவை முறைத்தான்… அரவிந்தனின் குணம் தெரிந்தும். அவனை அவள் கிளப்பி விட்டாளே என்ற கோபம் அவனுக்கு… 

அதை பூர்ணிமா வேறு விதமாக புரிந்து கொண்டாள்… 

‘அவகூட ஒட்டி உராய்ந்ததை நான் தடுத்திட்டேனில்ல… அந்த கோபம்தான் இவனுக்கு…’ 

அவள் மனம் வலித்தது… அவன் பக்கம் திரும்பாமல் அவள் வேலை செய்ததில் குணசீலனின் புருவங்கள் முடிச்சிட்டன… 

‘இவளுக்குள்ளே இவ்வளவு பொறாமை குணமிருக்கா…? என்மேல் நல்ல எண்ணமே கிடையாதா..? இவளையும் சைட் அடித்துக்கிட்டு… சரளா கூடவும் பழகுவேன்னு என்னைப்பத்தி எடை போட்டு வைச்சிருக்காளா…’ 

அவன் அவள் பக்கமே திரும்பவில்லை… 

சற்று நேரம் பொறுத்து… மனம் தாளாமல்… அவன் முகத்தைப் பார்த்த பூர்ணிமா… அதில் நிலவிய கடுமையைக் கண்டு நொந்து போனாள்… 

‘சரளா கூட நெருக்கமா பேச விடாததுக்கு இவ்வளவு கோபமா.. ? அப்படின்னா.. என்மேல இவனுக்கு கொஞ்சம் கூட எண்ணமில்லை போல இருக்கே…’ 

அவளது முகம் வாடிப் போனது… மதிய உணவு நேரத்தில் அவள் சரளாவுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை… வலியப் பேசுவதற்கு சரளா முயன்ற போது. அவள் பக்கத்தில் உட்காராமல் வேறு இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள் பூர்ணிமா… 

“பூர்ணி…” சரளா திகைத்துப் போனாள்..

‘விளையாட்டு வினையாகி விட்டதா.. ?’ 

“ஏய்ய்… என்னைப் பாருடி..” 

பூர்ணிமா அவளைப் பார்க்கவுமில்லை… சரியாகச் சாப்பிடவுமில்லை.. மதிய உணவைக் கொட்டி விட்டு கை கழுவினவளை பார்த்தபடி விக்கித்துப்போய் உட்கார்ந்து விட்டாள் சரளா… 

“என்ன சரளா.. உனக்கும்.. பூர்ணிமாவுக்கும் இடையே ஏதும் பிரச்னையா…?” 

எப்போதும் ஒட்டிக் கொண்டு இருக்கும் தோழிகள் பிரிந்து உட்கார்ந்து சாப்பிட்டதைக் கண்ட மற்ற பெண்கள் தூண்டித் துருவினார்கள்… 

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை சுகுணா…!” 

“அவ உன் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடலையே.. “

“அவ சாப்பாட்டையே.. சாப்பிடலையே.. அதை நீ கவனிக்கலையா..?” 

“ஊஹிம்… நீ கூப்பிட்டதினாலதான்… அவ சாப்பிடாம போனா.. அதைக் கவனிச்சேன்…” 

சுகுணா விடாக் கண்டியாய் இருந்தாள்… 

‘வேலையை உருப்படியாய் கவனிச்சிராதே.. இதை மட்டும் உணக்கையாய் கவனிச்சிரு…’ சரளா பல்லைக் கடித்துக் கொண்டாள்… 

“அவளுக்கு காலையிலேயே நல்ல ஜீரம்…” 

“ஜீரமா..? அவ தலைக்கில்ல குளித்திருந்தா…?”

வெள்ளிக்கிழமை யென்பதால் பூர்ணிமா.. தலைக்கு குளித்து விட்டு ஈரமுடியை தளர விட்டுப் பின்னலிட்டு வந்திருந்தாள்… 

அதைக் குறிப்பாக சுகுணா உணர்த்த சரளாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது… சுகுணாவை முறைத்தாள்…. 

”எனக்கும்.. அவளுக்கும் இடையே ஆயிரம் இருக்கும்.. உனக்கு அது எதுக்கு..?” 

“அதானே… எனக்கு அது.. எதுக்கு..?” சரளாவின் கோபத்திற்கு பயந்து.. இடத்தை காலி செய்தாள் சுகுணா…

– தொடரும்…

– ஆசையா.. கோபமா… (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2012, லட்சுமி பாலாஜி பதிப்பகம், திண்டுக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *