ஆசையால் நேர்ந்த அழிவு




(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு வேடன் காட்டுக்கு வேட்டைக்குப் போய், ஒன்றும் கிடைக்காமல் பல நாள் அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் அவன் ஒரு மானைக் கண்டான். அதன் பின்னே விரட்டிக் கொண்டு ஓடி அம்பெய்து கொன்று அதைத் தூக்கிக் கொண்டு தன் சேரி நோக்கி நடந்தான்.
வழியில் ஒரு பெரிய பன்றியைக் கண்டான். உள்ள மான் போதாதென்று, இந்தப் பன்றியை எய்து கொன்றால் இரண்டு நாள் சாப்பாட்டுக்காகும் என்று அதன்மேல் அம்பெய்தான்.
அந்தப் பன்றி கோபம் கொண்டு அவன் மேல் பாய்ந்தது. அவனைக் கொன்று தானும் செத்து விழுந்தது.
அப்பொழுது அந்த வழியாக ஒரு நரி வந்தது. செத்துக் கிடக்கும் வேடனையும் மானையும் பன்றியையும் கண்டு, ‘ஆகா! மூன்று நாளுக்குச் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை’ என்று சொல்லிக் கொண்டே வேடன் வைத்திருந்த வில்லின் நாணைப் போய் முதலில் கடித்தது.
நாண்அறுந்தவுடன், வில்கம்பு சடக்கென்று விரிந்து நரியின் வயிற்றில் குத்தியது. உடனே அந்த நரியும் செத்து விழுந்தது.
ஆசை மிகுந்திருக்கக் கூடாது.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 2 – நட்பு உண்டாக்குதல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.
![]() |
நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க... |