ஆசைகள் பல விதம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 4, 2025
பார்வையிட்டோர்: 274 
 
 

‘மனம் மிகவும் விரும்புகின்ற ஒன்றையோ, ஒருவரையோ விளைவுகளைச்சிந்தித்து கிட்டாதெனில் விலகிச்செல்ல உங்களால் இயலுமென்றால் நீங்கள் மிகச்சிறந்த அறிவாளி. வாழ்வின் லட்சியங்களை எளிதில் அடையக்கூடிய வாய்ப்பை இந்தப்பிரபஞ்சம் உங்களுக்கு வழங்கத்தவறாது’ எனும் தத்துவத்தை புத்தகத்தில் படித்த போது சற்று குழப்பமடைந்தான் ராகவன்.

“மனம் விரும்புகின்ற ஒன்றை, ஒருவரை எப்படியாவது அடையத்தானே ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் பேராடுகிறான். விரும்பியதை அடைந்து மகிழ்ச்சியடைகிறான். விருப்பம் இல்லையேல் மனித வாழ்வே வீண் தானே…?” தத்துவ புத்தகம் எழுதிய மணி என்பவரது இல்லத்துக்கே சென்று தனது சந்தேகங்களைக்கேட்டான்.

“உங்களுடைய கேள்வி நியாயமானதுதான் தம்பி. மனம் போன போக்கில் போகக்கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். மனதில் உதிப்பதையெல்லாம் செயல்படுத்த முயல்வது, அதைப்பற்றிய எண்ணங்களை வளர்ப்பது தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் இடையூறுகளை விளைவிக்கும். மனதில் தோன்றும் ஆசைகளை நான்காகப்பிரிக்கலாம். ஒன்று தேவைக்கான ஆசை. அடுத்து தகுதிக்கு மீறி ஆசைப்படும் பேராசை. மூன்றாவது பிறரது உடைமை மீதான விபரீத ஆசை. நான்காவது நடக்காததையும் விரும்பும் கற்பனை ஆசை. இதில் மூன்றாவது நான்காவது ஆசைகள் தான் மிகவும் தவறானவை, பாதகமான விளைவுகளை உருவாக்குபவை. இதைப்பற்றி நன்றாக உன்னுடைய அனுபவத்துடன் சேர்த்து யோசித்து பார்த்தால் தத்துவத்தின் பொருள் புரியும்” என்றார் அறுபதைக்கடந்த தத்துவஞானி மணி.

தனது கடந்த காலத்தோடும், நண்பர்கள் உறவினர்களின் மன ஆசைகளின் கடந்து போன செயல்பாடுகளையும், உரையாடல்களையும், நிகழ்வுகளையும் அதன் விளைவுகளையும் ஆராய்ந்தான் முப்பது வயதில் வாழும் ராகவன்.

“என்ன மச்சா நீ எதுக்குமே ஒத்து வர மாட்டேங்கறே…? எங்க கூப்பிட்டாலும் வர மாட்டேங்கறே. சூப்பரா ஒரு ஃபிகர் டெய்லியும் பஸ்டாப்க்கு வருது. அப்படியே சுத்தத்தங்கத்துல செஞ்ச சிலையப்போல இருக்கறாடா… எனக்கு கம்பெனிக்கு ஆள் இல்லை. நீ இன்னைக்கு வாறியா…?” நண்பன் கரண் கேட்க, ராகவன் மறுத்தான்.

“எனக்கு வொர்க் இருக்கு. அதோட நீ பண்ணறது ரொம்ப தப்பு…” என்றான் ராகவன்.

“என்னடா தப்பு…? ஒரு பொண்ண ஒரு ஆண் பார்க்கிறது எப்படி தப்பாகும்? இயற்கையோட படைப்பே அதுக்குத்தானே…? உனக்கு விசயம் தெரியுமா? பொண்ணுங்களே யாராவதும் பசங்க நம்மப்பார்ப்பாங்களான்னு எதிர்பார்ப்பாங்க. அந்தப்பொண்ணுக்கு அவ நெனைக்கிற பையன் நானா ஏன் இருக்கக்கூடாது….?” என்றான்.

“எல்லாப்பெண்ணுங்களும் நீ நினைக்கிற பொண்ணு மாதிரி இருக்க மாட்டாங்க. அப்படி நெனைச்சாலும் தனக்கானவனாவே தன்னை விரும்பற பையன் இருக்கனம்னு நெனைப்பாங்க. மரத்துக்கு மரம் தாவற குரங்கு மாதிரி தினம் ஒரு பெண்ணை பார்க்க ஆசைப்படற உனக்கு ரம்யா செட்டாக மாட்டாடா…”சற்று கோபமாகப்பேசிய ராகவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டான் கரண்.

“என்னடா மச்சா…. ரொம்ப கோபப்படறே….? அவ உன்னோட தங்கச்சியா என்ன? ஆமா, அவ பேரக்கூட தெரிஞ்சு வெச்சிருக்கே….? நாஞ்சொன்னது அந்தப்பொண்ணுதான்னும் புரிஞ்சிருக்கே….? அவ பேரச்சொன்னதுக்கு தேங்க்ஸ் டா…” பேசி ஏளனமாக சிரித்தான்.

“போடா….”

“நீ புத்தகத்தப்படிச்சு படிச்சு ரொம்பமே பொண்ணுங்களுக்கு அப்பன மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டேடா…. உன்னோட அழகும், வசதியும் எனக்கு இருந்துச்சுன்னா நான் மன்மதனாவே மாறியிருப்பேன். நிறைய அழகான பொண்ணுங்களை வளைச்சுப்போட்டிருப்பேன். போடா பொழைக்கத்தெரியாதவனே….” பேசி விட்டு கரண் திரும்பிய போது ரம்யா ராகவனைப்பார்க்க வருவதைக்கண்டு ஆடிப்போனான். ரம்யாவும் கரணது பார்வை தன்மீது படாதவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள்.

“இந்த நாவல் நல்ல கருத்துள்ளதா இருக்குங்க . இரண்டாவது பாகம் இருந்தா கொடுங்க” என ராகவனிடம் கேட்ட ரம்யா அடுத்த புத்தகத்தைப்பெற்றுக்கொண்டு தனது ஸ்கூட்டியை ஓட்டியபடி வேகமாகச்சென்றாள்.

“ஓ..‌.. இப்படிக்கூட காதல் வளருதா….? புத்தகம் படிக்கிறதுல இத்தன சங்கதி இருக்குதா….?” 

“புத்தகம் படிக்கிறது அறிவை வளர்க்கிறதுக்கு, உன்னப்போல நிறைவேறாத ஆசைகளை வளர்த்துக்கிறதுக்கு இல்லை…” என ராகவன் கூறியதைக்கேட்டு ‘இனிமேல் ராகவன் நட்பு நமக்கு ஒத்து வராது’ என நினைத்தவனாய் தனது பைக்கைக்கிளப்பினான் கரண்.

தன் மீது விருப்பம் கொண்ட ரம்யாவை அவளது பெற்றோரிடம் முறைப்படி பெண் கேட்டு ராகவன் திருமணம் செய்து கொண்டது விருப்ப ஆசை. ரம்யாவிற்கு படிப்பிலும், பண்பிலும் பொருந்தாமல் தவறான வகையில் அவளை அடைய முற்பட்டது கரணின் பேராசை.

‘கரண் விரும்பி ரம்யா விரும்பாமல் உதாசீனப்படுத்தி விட்டு, தன்னைக்கைப்பிடித்த பின்னும் அவளைப்பின் தொடர்ந்து ‘நான் விரும்பியதை இது வரை அடையாமல் விட்டதில்லை. உன்னை எப்படியாவது என் வாழ்நாளில் அடைந்தே தீருவேன்…’ என சவால் விட்டு பேசியது, ஒரு பெண்ணின் மனதை விரும்பாமல் உடலை விரும்பியது நிறைவேறாத விபரீத ஆசை’ எனப்புரிந்து கொண்டான் ராகவன்.

‘கிடைக்கும் வாய்ப்புகளை விட்டு விட்டு கிடைக்காத ஒன்றின் மீது ஆசை வைத்து, மனதால் மட்டுமே வாழ்ந்து மகிழும் பலரால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் எந்த நன்மையும் ஏற்படாத நிலை கற்பனையான வீண் ஆசை’ என்பதை நன்றாக யோசித்துப்பார்த்த ராகவன் தத்துவத்தின் முழு அர்த்தத்தையும் புரிந்து தெளிவானான்.

தான் இயல்பாகவே மனதுள் தோன்றுவதையெல்லாம் செய்யாதவனாகவே மனதைக்கட்டுப்படுத்தி, பின் விளைவுகளைச்சிந்தித்து வாழ்வில் உயர்ந்திருப்பதும், பலர் அவ்வாறு இல்லாமல் மனம்போல செயல்பட்டு வாழ்வை வீணாக்யதையும் யோசித்ததில் தத்துவங்களும், கதைகளும் விரும்பிப்படித்ததில் கிடைத்த அறிவே தன் மனதைக்கட்டுப்படுத்தும் மூக்கணாங்கயிறாக இருந்துள்ளது என்பதைப்புரிந்து கொண்டு தொடர்ந்து மேலும் பல நல்ல புத்தகங்களைத்தேடிப்படிக்க ஆரம்பித்தான்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *