அவள் நினைவு
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த வசந்த நுதுவின் எழிற் கொள்ளை, இசைந்த என் இளமைக்கு முறுக்கு ஏற்ற ஏற்ற என்னைக் கவ்விய இன்ப வேதனை என் நெஞ்சில் அனல் எழுப்பிற்று. தனிமையின் ஏக்கம் அதை வளர்த்தது.
தன்னை மறந்தின்பமுற நான் விரும்பும்போதெல்லாம் எனக்கு அவள் – அந்த சரோஜினி – தான் வந்து உதவுவாள். அவளை நான் நினைத்துவிட்டாலே போதும். அப்புறம் இந்த உலகத் துன்பம், உடல் நோவு, இதயத் தவிப்பு இவையெல்லாம் என் நினைவுக்குத்தான் வருமாக்கும்?
ஐந்து வருடங்களுக்கு-இல்லை-ஆறு வருடங்களுக்குமுன் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக என் வீட்டிற்கு வந்திருந்தேன். அப்பொழுது வந்து கழிந்த ஒரு நாளை – என் வாழ்க்கையின் இன்பமெல்லாம் தேங்கி நிற்கும் அந்த நாளை – நான் மறக்க முடியுமா?
வழக்கம்போல் அன்று காலையில் படுக்கையிலி ருந்து சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்திருந்து முகம் கழுவி விட்டு வந்து நாற்காலியில் இருந்தேன். எதிரிலே இருந்த மேஜை மேல் இரண்டு கால்களையும் தூக்கிப் போட்டுக் கொண்டு, கவிஞன் போதமுற்ற பொழுது பொங்கி வந்த தீஞ்சுவையைப் பருக ஆரம்பித்தேன்.
ஒரு அழகி, அழகி என்றால் இலேசான அழகியா? கவிதைக் கனிபிழிந்த சாற்றில் பண், கூத்து இவற்றின் சாரமெல்லாம் ஏற்றி அதனோடு இன்ன முதையும் கலந்து காதல் வெய்யிலில் காய வைத்த கட்டியிலிருந்து செய்தெடுக்கப்பட்ட அழகி. இப்படிப்பட்ட அழகியின் உள்ளத்தை ஒரு மாயக்கள்ளன் கவர்ந்து சென்று விட்டானாம்! திக்குத் தெரியாத கொடிய காட்டில், எங்கும் முட்புதர்கள் மண்டித் துயர்கொடுக்க, விழுந்து விழுந்து எழுந்து ஓடி அக் கள்வனைத் தேடி அலைகிறாள் அவள்; இரத்தம் கக்கும் தன் மலர்ப்பாதங்களையும், குவிந்து விம்மும் மார்பினால் வருந்தித் தளரும் இடையினையும் பற்றிய எண்ணமே இல்லாமல்! ஏன்?
“ஏன்?” என்ற எண்ணத்தில் மூழ்கி இருந்த என் மனதைத் தூரத்தில் எங்கோ இருந்து காற்றில் மிதந்து வந்த ‘டாங் டாங்’ என்ற மணியோசை கலைத்தது. காதைக் குடைந்து கதை சொல்லும் காற்று வந்த திசைப்பக்கம் திரும்பிப் பார்த்தேன், மாடியில் நானிருந்த அறையின் ஜன்னல்வழியாக. தூரத்திலே வான வெளியை நோக்கி மோன நிலையில் நின்ற கிறிஸ்தவக் கோயிலைக் கண்டேன். அப்பொழுது தான் எனக்கு ஞாபகம் வந்தது அன்று கிறிஸ்துமஸ் தினம் என்றும், அதற்காகத்தான் விசேஷ முறையில் மணி அடித்து நாதம் எழுப்புகிறார்கள் என்றும். கிறிஸ்துமஸ்-கோயில்-மணி இவை மின் வெட்டும் நேரத்தில் என் சிந்தையில் அவள் நினைவைத் தூண்டிவிட்டன….
என் உள்ளத்தைக் கவர்ந்த அக்கள்ளி- என் அள்ளு சுவைப் பேரழகி – அந்த சரோஜினி- கிறிஸ்தும்ஸ் பிரார்த்தனை நடக்கும் அக்கோயிலிலே இப்பொழுது இருப்பாள், இயேசுநாதரிடம் தன் குறை இரந்துகொண்டு.
அவள் அங்கே இருந்தால் இங்கு என் மனம் சும்மா இருக்குமா? இன்ப லாகிரியில் சிக்கி அது ‘அமுத கீத வலை’ பின்ன ஆரம்பித்தது.
பின்னி முடிந்த சடைக் கொண்டை; கொண்டை முழுதும் மணம் கொட்டும் தயிலம்; அதன்மேல் குந்தி இருந்து குலுங்க நகைக்கும் மலர்க்கொத்து; நிலவு சிந்தும் முகம்; ஆளை விழுங்கும் எழிற்கண்கள் தாண்டிப் பதுங்கும் கண்களுக்கு மை; வில்லை வளைத்த புருவம்; இரத்தம் பாய்ந்து சுரக்கும் செவ்விதழ்கள்; இதழ் விளிம்பை விடுத்துக் கொண்டு முளைக்கும் மலர்ச் சிரிப்பு; ‘கலகல’ என்றொலிக்கும் வளைகள்; கால்களைத் தொட்டு முத்தமிடும் தண்டை; உடல் வனப்பை மறைக்கும் பட்டுடை வீசு கமழ்-இவை எல்லாமாகச் சேர்ந்து என்னைத் தாக்கின. மயங்கி விட்டேன், நல்ல மொந்தைப் பழைய கள்ளுண்டவனைப் போல.
எனக்கு ஒருமாதிரியாக வந்தது. அவள் நினைவு வந்ததின் பின் எனக்கு இருப்புக் கொள்ளுமாக்கும்? கையிலிருந்த புத்தகத்தை மேஜை மீது விட்டெறிந்தேன். எழுந்து வந்து வீட்டு மாடியின் முன் நின்ற வண்ணம் கோயிலிருந்த தூரக் கீழ்த்திசையையும் பரந்த இடைவெளியையும் வெறித்து நோக்கினேன்.
வசந்தத்தின் அழகை எல்லாம் வடித்துக் காட்டும் காலைப்போது. முகிலின் முதுகைத் துளைத்துக் கொண்டே முன்னேறும் காலை இளம்பரிதி உருக்கி விட்ட தங்கம், தழல் குறைந்து தேனாகி எங்கும் பரவியது. பளபளப்பான நதி நெளிந்து நெளிந்து அந்தக் கோயிலருகே ஓடிக்கொண்டிருந்தது. பசிய புல் தரை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூத்து நிறம் கக்கும் மலர்கள். எங்கும் நீளக்கிடக்கும் இலைக்கடல். காய்ந்து கரிந்து பட்டுப்போன பூமியின்மேல், வசந்த கன்னி பச்சை, மஞ்சள், நீலம், சிகப்பு, வெள்ளை முதலிய நிறங்களைக்கொட்டி, வர்ண ஜால வித்தை காட்டி கொழுக்க வைத்திருந்தாள், பழைய வீடுகளுக்கு வெள்ளை அடித்துச் சாயம் தீட்டி சொக்க வைப்பதுபோல. வேறு என்றேனுமாய் இருந்தால் அந்த காலைப் பொழுது என் கண்களுக்கும் மனதுக்கும் இப்படித்தான் பட்டிருக்கும்.
ஆனால் அவள் நினைவால் உள்ளம் இளகி வீட்டின் முன் மாடியில் நின்ற எனக்கு அது இப் போது வேறு மாதிரியாகப் பட்டது. பசிய புல் நுனி யினுக்கு முத்தம் கொடுக்கும் நீர்த்துளி; முறுக் கவிழ்ந்து நாணிச் சிவந்து முறுவலிக்கும் மலர்கள்; மலர் வாயை விடுத்துச்சென்று கள் அலம்பும் மதுக் குடத்தில் விழுந்து புரண்டு முரலும் வண்டினங்கள்; மரக்கிளையோடு கொஞ்சிக் குலவும் காற்று; மரங்களிலே காதல் கீதம் இசைக்கும் குயில்; கடலில் சென்று கலக்க ஓடும் நதி; முத்தமிடும் முகிற்கூட்டம்.
இந்த வசந்த ருதுவின் எழிற்கொள்ளை, இசைந்த என் இளமைக்கு முறுக்கு ஏற்ற ஏற்ற என்னைக் கவ்விய இன்ப வேதனை என் நெஞ்சில் அனல் எழுப்பிற்று. தனிமையின் ஏக்கம் அதை வளர்த்தது. இருப்புக் கொள்ளவில்லை என்றா சொன்னேன்? நிலையும் தான் கொள்ளவில்லை. குறுக்கும் நெடுக்குமாக மாடியின் மேல் நடந்தேன். உயிர் அங்கும் உயிர்நாடி இங்கும் என்ற நிலையில் மனம் அமைதி இழந்து தவித்தது. தூண்டிற் புழுவினைப் போல் சுடர் விளக்கினைப் போல் நீண்ட பொழுதாக என் உள்ளம் துடித்தது.
இதென்ன! நிலையழிந்து நினைவழிந்து நடந்து கொண்டு நிற்கும் என் உடல் ஏன் இப்படிச் சுடுகிறது. கடற்கரை மணலில் பரதவர் மக்கள் வெந்தீக் கொளுத் திச் சுடுகிற மீனின் உடலைப்போல-உடல் வெப்பத்தைத் தணிக்க உடன் தானே கீழ் இறங்கி குளிர்ந்த நீரில் குளித்து விட்டு சிறிது நேரத்தில் மீண்டும் மாடிக்கு வந்து நன்கு உடுத்திக்கொண்டு கண்ணாடி முன் நின்று,
”குளிர்ந்த நீரில் குளிக்கையிலே – உடம்பு
கொதித்தது ஏன்நீ சொல்லேண்டி!”
என்று பாடிக் கொண்டே தலையைக் கோதி விட்டு என்னை அழகுபெற அலங்கரித்தேன்; புறப்பட்டேன்.
வீட்டிலிருந்து புறப்படுகையில் நெடுந் தொலைவில் பாதையோரத்தில் தன்னந் தனியாக நிற்கும் அவள் வீட்டுப் பக்கமாக வருவேன் என்று நான் எண்ணவே இல்லை. ஆள் சஞ்சாரமற்று மௌன நிலையில் தூங்கும் பாதை வழியாக நடந்தால் அலைந்து உலைந்து அசைந்த உள்ளம் தேறிச் சிறிது ஆசுவாசம் அடையும் என்று நினைத்தேன். நடந்தேன், மனம் ஒன்றிலும் பற்றுக் கொள்ளாத நிலையில். என்னையும் அறியாமல் என் கால்கள் ‘உயிர் இருக்கும் இடம் நாடி’ என்னை இழுத்துக்கொண்டு வந்து விட்டன…
அதோ! அவளும் அவள் பாட்டியும் எங்கிருந்தோ- இல்லை கோயிலில் இருந்து- திரும்பி வீட்டை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். அவள் ஆகர்ஷண சக்தியின் வேகத்தைத் தாங்கும் வன்மை எனக்கில்லை. அவர்களை நான் நெருங்கி விட்டேன். அவர்களும் என்னை நெருங்கிவிட்டார்கள். என்னைக் கண்டுவிட்ட அவள் ஆசை வெறி துளும்ப, பல்லிற் கனி இதழில் நிலவு பாய “எங்கே போகிறீர்கள்?” என்று அன்பு சொட்டக் கேட்டாள்.
“சும்மா காலையிலே இப்படி….” என்று நான் இழுத்தேன். அதற்குள் “பாட்டீ! என்னுடனே காலேஜில் என் வகுப்பில் ஒருவர் படிக்கிறார் என்று உன்னிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டல்லவா? அவர் தான் இவர். நம்மூர் மேடை வீட்டுக்காரரின் புதல்வர்” என்று சொல்லி அவள் என்னைத் தன் பாட்டிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“அப்படியா” என்று கூறி என்னை அன்போடு பார்த்த பாட்டி “வாயேன் அப்பா வீட்டுக்கு வந்து சிற்றுண்டி அருந்தி விட்டுப் போகலாம்” என்றாள்.
”என்னத்திற்கு வீண் சிரமம்” என்றேன் துள்ளி வரும் ஆசையை மறைத்துக் கொண்டு.
“சிரமம் ஒன்றுமில்லை. இன்றைக்குக் கிறிஸ்துமஸ். கட்டாயம் வரத்தான் வேண்டும்” என்று பாட்டியின் வேண்டுகோளைப் பின் தாங்குபவள் போல் அவள் தன் அமுத வாய் அசையக் கட்டளை இட்டாள்.
அவள் மேனி நலம், உடற்கட்டு, முகவெட்டு, தேனிலினிய திருத்தநிலை இவற்றால் அடியுண்ட நான், நான் முந்தியோ எனது ஆசை முந்தியோ என அவர்களுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். சிற்றுண்டிக்கு வேண்டியதைச் செய்ய உள்ளே சென்று விட்டாள் பாட்டி. மகிழ்ச்சி பொங்கி வழிந்தோடும் தன் அறைக்கு அவள் என்னை அழைத்துச் சென்றாள். ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு ”உட்காருங்கள்” என்று கனிவுடனே கூறி ”கொஞ்சம் இருந்து கொள்ளுங்கள். இதோ வந்து விடுகிறேன்” என்று உள்ளே ஓடினாள்.
அவள் உடலில் ஒரு சோபை. நடையில் ஒரு நெளிவு. பேச்சில் ஒரு உணர்ச்சி. தொனியில் ஒரு இளமை! மேகத்தைக் கண்டாடும் மயிலை இவள் கண்டிருக்கிறாளா?
சிறிது நேரத்தில் பளிச்சென்று மின்னும் ஒரு பெரிய வட்டிலில் என்னவெல்லாமோ தின்பண்டங்களை வைத்துச் சுமந்துகொண்டு மருங்கசைய, இட்டடி குழைய, எடுத்தடி கொப்புளிக்க நடந்து வந்தாள். வட்டிலைக் கீழே இறக்கி அதிலிருந்த பீங்கான் தட்டைகளை எடுத்து ஒவ்வொன்றாக மேஜை மீது பரப்பி னாள். உண்ண உண்ண தெவிட்டாத கனிகள், கற்கண்டுபோல் இனிய ‘கேக்’ வகைகள், நாக்கில் நீர்த் துளிக்கும் பண்டங்கள்! “தின்னுங்கள்” என்று கூறி அவளும் எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“என்னவெவலாம் தரப்போகிறாய்” என்றேன்.
“கேட்டதெல்லாம்தான்” என்றாள்.
“நினைத்ததெல்லாம் தருவாயோ?” என்றேன்.
“நீங்கள் நினைத்ததெல்லாம் என்ன என்று அறிய நான் என்ன தெய்வப்பெண்ணா?” என்றாள்.
“தெய்வப் பெண்தானே நீ” என்றேன்.
நாணித் தலைகுனிந்த அவள் “இவ்வாறு புகழ்ந்துரைக்க எங்கே கற்றுக் கொண்டீர்கள்?” என்றாள்.
“உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை” என்று கூறிச் சிரித்தேன்.
இவ்வாறு ‘சிரித்துரை கூறியும் கேலிகள் பேசிக் கிளறியும் பண்டங்களைச் சுவைத்துக்கொண்டிருக்கையிலே:
“கனிந்து சிவந்திருக்கும் இந்த மாம்பழத்தைப் பார்த்தீர்களா?” என்று என்னை நோக்கி அவள் கேட்டாள்.
“உன் கன்னத்தைப் போல் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே நான் அதை எடுத்து ரம்மியமான அதன் நறுமணத்தை முகருவதற்காக மூக்கின் பக்கம் கொண்டு சென்றேன்.
”என்ன அதை முத்தமிடப் போகிறீர்களா?” என்றாள் அவள் குறும்பாக.
“இல்லை. மோந்து பார்க்கிறேன்” என்றேன்.
“இங்கே கொண்டாருங்கள். தோலொதுக்கி வெட்டித் தருகிறேன்” என்றாள்.
“நானே வெட்டுகிறேன்” என்றேன்.
”இல்லை நான்தான் வெட்டுவேன்” என்றாள்.
நானா விட்டுக்கொடுப்பவன்! “நான்தான் வெட்டு வேன்” என்றேன் பிடிவாதமாக.
“முடியாது. நான்தான் வெட்டுவேன்” என்று கூறிக்கொண்டே என் கையிலிருந்த பழத்தைத் தட்டிப் பறித்தாள் அவள். என்னை அவள் தொட்டாளோ இல்லையோ எங்களைத் ‘தீண்டும் இன்பம்’ பற்றிக் கொண்டது. அப்புறம் கேட்பானேன்! ‘தூண்டும் இன்ப வாடை’யில் விழுந்து நேரங்கழிவதில் நினைப் பின்றி, சாலச் சிறந்த பல பகற்கனவில் தன்னை மறந்த லயந்தன்னில் நாங்கள் இருந்து விட்டோம்…
தன்னுணர்வு பெற்ற அவள் கத்தியை எடுத்து பழத்தை வெட்டப் போனாள்.
“வேண்டாம். என்னிடம் தந்துவிடு” என்றேன்.
“ஏன்?” என்றாள்.
”கனிந்து சிவந்த இந்தப் பழத்தை யாராவது வெட்டுவார்களா?” என்றேன்.
“பின்னே என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றாள்.
“கடித்துத் தின்னப் போகிறேன்” என்று நான் சொன்னதும் ”அப்படியா” என்று சிரித்துக் கொண்டே பழத்தை என்னிடம் தந்தாள். அதை வாங்கி நான் கடித்தேன். சுவைத்தேன்.
“எனக்குங் கூடத்தான் மாம்பழம் தின்ன ஆசை யாயிருக்கிறது. கொஞ்சம் கொடுங்களேன்” என்றாள்.
“எச்சிற் படித்திக் கடித்து விட்டேனே!” என்றேன்.
“பாதகமில்லை!” என்றாள்.
இந்தப் பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. பழத்தை உடனேயே அவள் கையில் கொடுத்தேன்
பழத்தை அவள் வாங்கினாள். பார்த்தாள். கடித்தாள். ருசித்தாள், ஊறுசுவைப்பேரமுதம் என்ற நினைப்பில்.
அவள் அதைக் கடித்து ருசிக்க ருசிக்க என் உள்ளம் கள்வெறி கொண்டது. நான் உன்மத்தனானேன்.
“பழத்தை இப்படித்தான் கடித்துத் தின்பா ளாக்கும்” என்று கூறிக்கொண்டே சூடான தேநீர் கோப்பைகளை ஒரு தட்டில் ஏந்திய வண்ணம் பாட்டி அறைக்குள் நுழைந்தாள் – எங்கள் தனிமை இன்பத்தைக் கலைத்தாள்.
”சிறிது நேரம் அன்பொழுகப் பாட்டியுடனும் அவளுடனும் அளவளாவிப் பேசிக் கொண்டிருந்தேன். பிறகு எழுந்து, நன்றி தெரிவித்துவிட்டு, விடை பெற்றுப் பிரிய மனமில்லாமல் பிரிந்து, வெளியில் வந்தேன். வழியெல்லாம் இன்ப உணர்ச்சி என்னைப்பிடித் தாட்ட, நடந்து நடந்து வீடுவந்து சேர்ந்தேன்:
ஆறு வருடங்களுக்கப்புறம் இன்றைக்கு. காலையிலே உறக்கம் விழித்தேன். ஆனால் எழுந்திருக்க வில்லை. படுத்த படுக்கையிலேயே கிடந்தேன். உடலை வருத்திக் கொண்டிருந்த பாரத்தைச் சற்றே இறக்கி வைத்துச் சுகம்பெற எண்ணினேன். அவ்வளவுதான். அவள் நினைவு வந்துவிட்டது.
“நச்சுத் தலைப் பாம்புக் குள்ளே – நல்ல
நாக மணி யுள்ள தென்பார்.
துச்சப் படு நெஞ்சினிலே – நின்றன்
சோதி வளரு தடீ”
என்று புலவன் சொன்னதுபோல நைந்து கொண்டிருந்த எந்தன் நெஞ்சுக்குள்ளே அவள் உருவமெடுத்துத் துள்ள ஆரம்பித்தாள்.
ஆறு வருடங்களுக்கு முன் எனக்கு இன்பம் தந்து நின்ற அந்த சரோஜினி இன்று எங்கிருக்கிறாளோ? எனக்குத் தெரியாது. அவள் எங்கிருந்தால் தான் எனக்கென்ன? என் நெஞ்ச வீட்டிலிருந்து அவள் ஓடிவிடப் போகிறாளா? அல்லது அந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த இன்ப நிகழ்ச்சிகள் எல்லாம் தான் என் மனக் குகையிலிருந்து மறைந்து விடப் போகின்றனவா?
அன்று நடந்த அந்த மோகனக் காட்சிகளை எல்லாம் மிக நுணுக்கமாகப் படம் பிடித்துக் கொண்ட என் மனம் இன்று நான் நினைத்த பொழுது என் அகக் கண்முன் அவற்றை அப்படியே விரித்தது. இன்பம் ததும்பி நின்ற அந்த தினத்தை நான் மீண்டும் அநுபவிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனந்தம் பொங்கிப் புரளும் உணர்ச்சி வெள்ளத்தில் அவள் என்னோடு நீந்த வந்து விட்டாள்! இன்ப மதிமயக்கில் நினைவழிந்த நான் என் உடலை மறந்தேன். துயரை மறந்தேன். இந்த உலகத்தையும் மறந்தேன் எவ்வளவு நேரம் என்று எனக்குத் தெரியாது!…
“அப்பா! அப்பா!” என்று என் தோளை யாரோ தட்டி உணர்த்தினார்கள். கண்களை விழித்தேனோ இல்லையோ என் நினைவில் மிதந்து கொண்டிருந்த அவள் உருவம் எங்கேயோ தூரத்தில் சென்று மங்கி மறைந்தது. சிந்தனை உலகில் சுற்றி சுகத்தில் மூழ்கியிருந்த என்னை, துயரமும் நோயும் தொல்லையும் நிறைந்த இந்த உலகத்துக்கு இழுத்துவிட்ட என் பாட்டி மாத்திரம் என் பக்கத்தில் இருப்பது என் கண்களுக்குத் தெரிந்தது. முட்கள் நிறைந்த பாதையில் நடந்து இரத்தம் கக்குவதையே வாழ்க்கையாகக் கொண்டிருந்த நான், இரண்டு தினங்களுக்கு முன் இரவிலே இருட்டில் மழையில் வந்தபொழுது கால் சறுக்கி ஓடையில் விழுந்தது, அப்புறம் வைத்தியன் வந்து எனது முறிந்த காலுக்கு மட்டை வைத்து கட்டி “உடம்பை உலைக்காதே, சரிந்து படுக்காதே, காலை அசைக்காதே” என்று கூறி எச்சரித்து விட்டுப் போனது – ஆகிய இவை எல்லாம் எனக்கு அப்பொழுது தான் ஞாபகத்திற்கு வந்தன.
காலில் ஏற்பட்ட குத்து, தரிப்பு, நோவு – இவற்றை என்னால் சகிக்க முடியவில்லை. வேதனை தாங்க மாட்டாமல் “அப்பா! அம்மா! ஐயோ! பாட்டி!” என்று அலறினேன்.
“வயது முப்பத்தஞ்சாகிறது. கலியாணம் செய்து கொள். கலியாணம் செய்து கொள் என்று அப்பொழுதே சொன்னேனே கேட்டாயா?” என்று சொல்லி பாட்டி என்னைக் கடிந்துகொண்டாள்.
“ஏன்?” என்றேன்.
”இரவில் நீ உறக்கத்தில் சரிந்து படுத்துக் காலை அசைத்து விட்டால் கால் பழுத்துச் சலம் வைத்து விடுமே என்று பயந்து இரவெல்லாம் உன் பக்கத்தில் கண் விழித்திருந்தேன். பொழுது விடிந்து இப்பொழுது தான் எழுந்திருந்து முகம் கழுவப் போனேன். முகத்தைக் கழுவி விட்டுத் திரும்பி வருவதற்குமுன் சரிந்து படுத்து விட்டாய்! காலையும் அசைத்து விட்டாய்! நீ கலியாணம் செய்து உனக்கு மாத்திரம் ஒரு பெண்டாட்டி இருந்தால் அவள் எப் பொழுதும் உன் பக்கத்தில் இருந்து உன்னைக் கவனித்திருக்க மாட்டாளா?” என்றாள்.
நான், “பெண்டாட்டி இல்லாத அது ஒன்று தான் இப்பொழுது குறைச்சல்” என்றேன் வெறுப்புக் கலந்த எரிச்சலுடன்!
– கவிக்குயில் நிலையக் கதைத்தொகுதி, முதற் பதிப்பு: ஏப்ரல் 1944, கவிக்குயில் நிலையம், கோட்டாறு.