அவளா இவள்?




ஏதாவது வண்டியில் அவள் மோதிவிடுவாளோ என்ற கவலை என்னை உச்சிக்கிளையில் குந்திய குரங்காக ஆட்டியது. என் தலையை, மீனை நோக்கிய கொக்காக, பஸ்சுக்கு வெளியே நீட்டியபோது, ‘என்ன சின்னப்பிள்ளைபோல்…. தலைய உள்ளுக்குள் எடுங்க’ என என் கையை மனைவி சியாமளா கிள்ளிய போதும், நீட்டிய தலை உள்ளே வரவில்லை. எனக்கோ அந்தப் பெண் வீதியைக் கடந்து அடுத்த கரையை சேர்ந்த பின்பே இதயத்துடிப்பு வழமைக்கு திரும்பியது. ‘அப்பாடா’ என்று தலையை உள்ளிழுத்தேன்.

‘அந்த பெண்ணை எனக்குத் தெரியும்’ என முணுமுணுத்தேன்
மார்கழி மாதம்: மழைக் காலம்: லேசாக தூறலடிக்கும் மதிய நேரத்தில், இலங்கைப் போக்குவரத்து வண்டியில் மனைவியுடன் பயணம் செய்துகொண்டிருந்தேன். இலங்கைக்குப் போனால் வாடகை வானிலோ இல்லை ரயிலிலோ போவதுதான் எங்கள் வழக்கம் . இம்முறை வழக்கத்திற்கு மாறாக திருகோணமலை , மட்டக்களப்பு, கல்முனை என எல்லா நகரங்களுக்கும் அரச பஸ்சிலேயே பயணம் செய்தோம். மற்றைய மூன்றாம் உலக நாடுகளை ஒப்பிடும்போது இலங்கையில் போக்குவரத்து , கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் உன்னதமானவை என்பது உண்மை. ஆனால் ஏனோ நாம் அவற்றை எப்பொழுதும் மதிப்பதில்லை. ஆனால் போக்குவரத்து சாரதிகளுக்கோ அல்லது கண்டக்டர்மாருக்கோ திருகோணமலையிலிருந்து கல்முனை போன்ற தூர இடங்களுக்கு செல்லும் பிரயாணிகளுக்கு பயண இடையில் சிறுநீர் கழிக்கவேண்டும், அதிலும் வயதானவர்களுக்கும், கர்ப்பிணிகள், டயபற்றீஸ் உள்ளவர்களுக்கும் அடிக்கடி அடிவயிறு முட்டும் என்பது புரிவதில்லை . ஆனால் நாங்கள் பயணித்த பஸ்சின் சாரதி இடையில் இறங்கி வெளியே பேய்ந்து விட்டு, வெத்திலை போட்டுவிட்டு சாவகாசமாக வந்தார்.
மட்டக்களப்பில் பஸ்சை நிறுத்தியவுடன் நான் சாரதிக்கு சொல்லிவிட்டு, பஸ்சிலிருந்து இறங்கி சிறுநீர் கழித்துவிட்டு ஆறுதலாக வந்தேன். சியாமளா இருப்பதால் என்னை விட்டு விட்டுச் செல்ல அவரால் இயலாது. சாரதி, மீண்டும் நான் பஸ்சில் ஏறும்போது என்னை முகம் கடுகடுக்கப் பார்த்தார். ‘அறுபதுக்கு மேல் அடிக்கடி சிறு நீர் வரும் ‘ என உரக்க சொன்னதும் சிரித்தபடி அந்த சாரதி பஸ்சை இயக்கினார்.
அப்போது என்னைத் தொடர்ந்து அவசரமாக ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க மெலிந்த பெண் கையை உயர்த்தியபடி அவசரமாக வந்து பஸ்சில் ஏறினார்.
பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்தார். சிவப்பு மஞ்சள் கலந்த சீலை, பச்சை சட்டை அணித்திருந்தாலும் கம்பளியாலான ஒரு பச்சை ஜாக்கட் முன்பகுதியை திறந்து விட்டிருந்தார். தலையில் கம்பளியான குல்லா என்பன அவரை ஐரோப்பிய நாடொன்றில் வாழ்பவராகக் காட்டியது. ஐரோப்பிய காலநிலைக்கான உடையை மட்டக்களப்பில் அணிந்திருந்தார்! அதற்கு அப்பால் மேலும் விசித்திரமாகத் தெரிந்தது: அவரது காலில் அணிந்திருந்த தடிப்பான துணியாலான காலணி – அது பெரும்பாலும் நட்சத்திர விடுதிகளில் குளித்துவிட்டு வரும்போது காலில் தற்காலிகமாக போட்டுக்கொள்வது.
அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தபோது, தொல்லியலில் சிறிய எலும்பின் துண்டைவைத்து, எந்த மிருகம்- எந்தக்காலம் என ஆராய்யும்போது ஏற்படும் விஞ்ஞானியின் சந்தேகம் நிறைந்த பார்வையாப் பார்த்தேன் . எங்களுக்கு நான்கு சீட்டுகள் முன்பாக அவர் அமர்ந்தார். அவரது பிடரியை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது, ஆண்கள் போல் தலை மயிர் குட்டையாக வெட்டப்பட்டு நரைத்த தலையாக அவரது குல்லாயின் கீழ் தெரிந்தது.
மட்டக்களப்பில் கம்பளி உடையுடன் ஒருவர் ஏறுவது பார்த்ததும் மதயானை ஒன்று தும்பிக்கையால் உணவுக்காக தனிமரத்தை அசைப்பதுபோல் அந்தக் காட்சி மனதை மேலும் கீழும் உலுக்கியது.
கல்முனைக்கு முன்னைய தரிப்பில் சாரதியிடம் அவசரமாக கையைக் காட்டி நிறுத்த சொல்லி, இறங்கியபோது, சிறிது நேரம் இறங்கிய இடதுபக்கத்தில் அவசரமாக சில அடிகள் முன்னோக்கி சென்ற அந்தப்பெண் மீண்டும் அதே வேகத்தில் திரும்பி வந்து பஸ் காண்டக்டரின் முழங்கையை தன் கையால் தொட்டு இழுத்து எதோ கேட்டார். அப்போது அவன் சொன்னதைக் கேட்டதும் அவசரமாக நின்ற பஸ்சின் முன்பாக வீதியின் குறுக்கால் கடந்தார்.
அப்பொழுது அந்தப் பெண்ணின் முகம் எனக்குப் பழைய சேமிப்பிலிருந்த கையிலெடுத்த கருப்பு வெள்ளை போட்டோவாகத் தெளிவானது ‘அட சுமதியாக இருக்குமோ?‘ என எனக்குள் முணுமுணுத்தேன்
என் மனைவிக்கும் சுமதியை அறிமுகம் ஆனால் முகம் நிவைிலிருக்க நியாயமில்லை என நினைத்தாலும் ‘எங்களோடு சென்னையில் அறிமுகமான சுமதியைத் தெரியுமா? ’ என்றேன்.
மேலும் தெளிவாக்க ‘சில காலம் எங்களோடு சென்னை வீட்டில் இருந்தாள். பின்பு வெளிநாடு போய்விட்டாள்’
‘ஓ, பிரான்ஸ் போனதாகச் சொன்னீர்கள். அவளா?.’
‘முகத்தை பாரத்தால் அவள்போல்தான் இருக்கிறது’ என்றேன்.
கிழக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் என சுமதியை எனது மட்டக்களப்பு நண்பர் ஒருவர் மூலமாக அறிவேன்.அவளது கதையில் ஒரு சிறிய பகுதியைத் தெரிந்திருந்தேன் . மட்டக்களப்பு சிறையுடைப்பிலிருந்து கிழக்கு மாகாணத்தின் ஊடாக தப்பியவர்களுக்கு இவள் உதவியதாகவும் கூறினார்.
அக்காலத்தில், இக்கால அகதி அந்தஸ்த்து பெற நம்மவர் சொல்லும் கதைகள் போல் பலர் பல கதைகள் சொல்வார்கள். மேலும் அந்தக் கதைகள் பொய்யாக புனையப்பட்டபோதிலும் அவை உண்மையானவையாக அவர்களுடன் நிழல்போல் வாழத் தொடங்கிவிடும். அது மனித இயல்பு. இப்பொழுது நாங்கள் ராமாயணம், மகாபாரதம் மற்றும் வேதாகமம் எல்லாம் வரலாறு இல்லை எனச் சொல்லமுடியுமா? கேள்வி கேட்பவனை கொலை செய்வார்கள்.
இதேபோல் சுமதியின் கதையில் எவ்வளவு உண்மை பொய் தெரியாத போதிலும் இயக்கமொன்றின் இருந்த இளைஞன் ஒருவனில் காதல் கொண்டிருந்தாள் என்பது எனக்கு உறுதியானது. அவனைத் தேடி அவள், சென்னை வந்த, இயக்கங்களிடையே மற்றும் அகதி முகங்களிலும் அலைந்து கரையில் இருந்த தென்னையிலிருந்து கடலில் விழுந்த தேங்காயாக மிதந்து அலைந்தவள்.
இளம் பெண்: அழகானவள் ஆனால் தனியாக நாகபட்டினம் அகதிமுகாமில் வாழ்வது கடினமாக இருந்தது என அக்காலத்தில் அந்த மட்டக்களப்பு நண்பர் எனக்குத் தெரிவித்தபடியால் நான் வேறு ஒரு இடத்தில் ஒழுங்கு பண்ணுவதற்கு அவளைச் சென்னைக்குக் கூட்டிவந்தோம். அவளுக்குப் புதிய இடம் பார்க்கும்வரையில் எங்கள் வீட்டில் இருக்கும்படி சொன்னோம். அவளும் சில நாட்கள் எங்களது சிறுபிள்ளைகளோடு விளையாடுவாள்.
அக்காலத்தில் இயக்கமோதலின்பின் பலர் வெளிநாடுகள்போன காலம் என்பதால் சிலநாளில் ‘வெளிநாடு போக விரும்புகிறேன்‘ என்றாள்.
அப்பொழுது என்ன செய்வது என எனக்கே தெரியாத காலம். என்னால் என்ன பதில் சொல்ல முடியும்?
ஒரு கிழமையில் அவள் காணாமல் போய்விட்டாள்!
நான் பயந்தேன் ஆனால் எனது மனைவிக்குச் சந்தோசம். அழகான இளம் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது கடினம். ‘நான் உங்களை நம்பினாலும் மற்றவர்களால் ஏதாவது பிரச்சனை வந்தால் நாம் என்ன பதில் சொல்லமுடியும்’ என்றபோது சரியாகத்தான் எனக்கு அது பட்டது. ஆண்கள் சிந்திக்காத பல விடயங்களை பெண்கள் சிந்திப்பார்கள். இது உலக நியதி!
சுமதி மறைந்து ஒரு மாதமிருக்கும். நாங்கள் வேலை செய்த மருத்துவ மனையில் ஒரு நாள் நான் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தபோது மனைவி பிள்ளைகளுடன் ஹாலில் இருந்தார். அப்போது ‘உங்கள் கணவருடன் ஐந்து நிமிடங்கள் பேசமுடியுமா? ‘ என்ற வார்த்தைகள் பெண்ணின் குரலில் எனது காதுகளுக்கு எட்டியது.
மனைவியின் பதில் எனக்குக் கேட்கவில்லை.
சுமதி புயலாக உள்ளே வந்தாள்.
நான் அவளை இருக்கச் சொன்னேன் .
எந்த சிரிப்போ விசாரணையோ இல்லாது ‘எனக்கு ஒரு நிரந்தர விலாசம் வேண்டும். உதவ முடியுமா ?என்றாள்.
‘அதுதான் வீட்டில் இருக்க சொன்னபோது ஓடிவிட்டாயே!’
‘இப்ப அது அல்ல பிரச்சனை. நான் பல பெண்கள் ஹாஸ்டலில் இருக்கிறேன். ஏஜென்ட் ஒருவன் நான் பிரான்ஸ் போவதற்கு மொரிசியஸ் பாஸ்போட் ஒன்றை அங்கிருந்து தபாலில் வரவழைப்பதாக சொல்லியிருக்கிறான். நான் இருக்கும் அண்ணா நகரில் பல பெண்கள் இருப்பதால் அங்கு தபாலில் வருவது நல்லதல்ல . அவர்களில் ஒருத்தி பாஸ்டோட்டை எடுத்துக்கொண்டு கம்பி நீட்டலாம். அதிலும் யாழ்பாணத்து பெட்டைகள் எப்ப புரிசன்மாரிட்ட போவோம் எனக் காய்ந்தபடி இருக்கிறார்கள்’ எனக் கூறி சிரித்தாள்.
‘அப்படியா?’
‘பணமெல்லாம் ஒழுங்கு பண்ணியாகிவிட்டதா? அவர்களை நம்பமுடியுமா?’
‘என் நிலையில் நம்பித்தான் ஆகவேண்டும் . ஊருக்கு போனா ஆமி அல்லது இயக்கம்: இங்க இருக்க ஏலாது அதைவிட வெள்ளைத்தோலா இருப்பதால் அதிக கஸ்டம் ‘எனச் சிரித்தாள்.
அவளைப் பார்த்து அதிசயித்தேன். ஒரு கிராமத்து பெண் இவ்வளது துணிவாகவும் அலட்சியமாகவும் பேசுவதும் மட்டுமல்ல முடிவை எடுக்கிறாளே! பல்கலைக்கழகத்தில் படித்த எனது மனைவியின் பல தயக்கங்கள் எனக்குத் தெரியும். சுமதி வாழ்வில் சந்தித்தவைகள், இடர்கள், துன்பங்கள், சவால்கள், பல தெரியாத போதிலும், நிட்சயமாக அவையே அவளை இந்த நிலைக்குக்கொண்டு வந்திருக்கவேண்டும்.
‘வீட்டு முகவரியா அல்லது இந்த மருத்துவ நிலையத்தின் முகவரியா வேணும்’ எனக் கேட்டேன்.
‘பொது இடமாக இருப்பது நல்லது’ என்றாள்
‘நான் இடைக்கிடை வருவேன் என அக்காவிடமும் சொல்லுங்கள் ‘ என்று சொல்லிவிட்ட மழைகால கரிய இரவில் தாக்கிய மின்னலாக வந்த வேகத்தில் மறைந்தாள்.
சில நாட்களில் சுமதியின் பெயரில் ஒரு புத்தகம் பார்சலாக வந்தது. அதில் என்ன என பார்க்க ஆவலாக இருந்தாலும் அடக்கியபடி இருந்தேன். என் மேசையில் இருந்த அந்த பார்சலை என்னிடம் வந்த பலர் பார்த்தபடியே இருந்ததால் இறுதியில் எனது மேசையின லாச்சியுள் வைத்தேன். கிட்டத்தட்ட ஒரு கிழமையின் பின் சுமதி வந்து பார்சல் வந்ததா என்றபோது அதை எடுத்துக் கொடுத்தேன் அதை என் முன்னே உடைத்து காட்டியபோது மத்தியில் இந்திய மோறிசியஸ் பெண்ணின் படம் கொண்ட பாஸ்போட் இருந்தது.
‘பணம் எல்லாம் சரியா?’ என்று கேட்டபோது ‘ஆம்’ என தலையை ஆட்டினாள் .
அதற்கு மேல் எனக்கு அவளிடம் விசாரிக்க எதுவுமில்லை…விசாரிப்பது நாகரீகமும் இல்லை. நான் ‘வாழ்த்துக்கள்’ என்றபோது நன்றியுடன் வெளியே சென்று அடுத்த அறையில் நோயாளி ஒருவரை பார்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் ‘காத்திருந்து ‘நன்றி’ என்று சொல்லிவிட்டு சென்றாள்.
எனக்கு மனத்தில்: இவள் எப்படி ஐரோப்பா போய் சேர்வாள்?
பல பெண்களதும் ஆண்களதும் சோக கதைகளை கேட்ட காலமது. வழியில் எங்காவது ஏஜன்டுகளால் ஏமாற்று விடப்படுவாளா?. பல பெண்களும் ஆண்களும் பம்பாய்க்கு வெளியே போகாது, உயிர் வாழ பல விடயங்கள் செய்து வாழ்வது எனக்குத் .தெரியும்.
இலக்கம் 144 சூழைமேடு நெடுந்தெருவின் மருத்துவ நிலையத்தின் மேல்மாடிலிருந்து படிகளில் அவசரமாக இறங்கி செல்லும்போது, ஒரு கையில் புத்தகம் மறுகையால் ஸ்கேட்டின் பின்பக்கத்தை ஒதுக்கியபடி அவள் செல்ல, அவசரமாக சென்ற அவளது நடையையும் கருப்பான மலிவான காலணிகளையும், தெருவில் நிறுத்தியிருந்த ஓட்டோவில் ஏறும் வரையும் மேல் மாடியிலிருந்து என் கண்கள் பின் தொடர்ந்தன.
சமாதான காலத்தில் எங்கோ வசதியான ஒரு குடும்பத்தில் வாழவோ அல்லது அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் அழகும் திறமையும் உள்ள பெண் என்பதை மனத்தில் நினைத்துக்கொண்டேன்.
சுமதி எனது மனத்தில் வந்ததுபோல மறைந்துவிட்டாள். நாங்கள் நம்பி வந்த ஈழப்போராட்டம் சின்ன பின்னமாகியதை பார்க்க முடிந்தது. இயக்கங்களிலிருந்து ஆண்களும் பெண்களுமாக பல நாடுகளுக்கு சென்றார்கள். பயண முகவர்கள் எல்லாம் சமூகத்தில் மரியாதையுடன்
குபேரனாகிய காலம். அக்காலத்தில் எனக்குப் அறிமுகமாக இந்திய உளவுத்துறையை சேர்ந்த ராமசாமி என்னிடம் ‘நீங்கள் இனிமேல் கவலைபடத் தேவையில்லை. நாங்கள் பொறுப்பெடுக்கிறோம்’ என்றார்.
‘என்ன புதிரா இரகசியமா? ‘
‘இந்திய அரசு நேரடியாக தலையிடுகிறது. இது வெளிப்படையானது’ என்றார்.
அவரே எனதும் மனைவியினதும் காலாவதியான இந்திய விசாவுடன் இருந்த இலங்கைக் கடவுச் சீட்டை மீண்டும் இரண்டு நாளில் புதுப்பித்து தந்தார்.
கிட்டதட்ட சுமதி போய் ஒரு வருடங்களில் நானும் வெளிநாடு போகவதற்கான ஆயுத்தங்களை செய்து கொண்டிருந்த காலத்தில், எங்கள் அலுவலக அறையில் கதவருகே ஒரு பெண் கறுப்பு கண்ணாடி, தலையை மூடிய ரோஜா நிற ஷகார்வ், மற்றும் மிகவும் இறுக்கமான நீல ஜீன்ஸ் அணிந்த பெண் தோன்றினாள் . முகத்தில் மேக்கப், உதட்டுசாயம் எனப் பார்பதற்கு சினிமாகாரி யாராவது வீடுமாறி வந்துவிட்டாடாளா என நினைத்தேன் .
மூக்குக் கண்ணாடியையும் ஷகார்வ்வையும் கழட்டியபின் ‘ அட சுமதியா ?’ என்றேன்
‘எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாய் ? ‘
‘முன்பு அழகில்லையை? ‘ என்றாள் அதே குறும்புடன்.
‘இப்பொழுது அழகுடன் அலங்காரமும்‘ என்றேன்
பதில் சொல்லாது ‘அக்கா இருக்கிறாவா… அடுத்த அறையில்?’
‘வீட்டில். இல்லை.. ஏன்?’ என்றேன்
‘இல்லை, சுதந்திரமாக பேசத்தான்’
‘எங்கிருந்து வாறாய்?’
‘பாரிஸ் ஆனால் சென்னையில் ஹோட்டலில் இருந்து வருகிறேன்’ என்றாள்
‘ஏன் மீண்டும் வந்தாய்? பாரிஸ்சில் நல்ல பொடியனாப் பார்த்து இருக்க வேண்டியதுதானே?’
‘நல்ல பையனா எங்கே தேடுகிறது ? எல்லாம் பொறுக்கிகள்’ என்றாள்.
அவளது வார்த்தையின் கசப்பு எனது நாக்கில் துவர்த்தது .
‘நீங்கள் என்ன செய்ய உத்தேசம்’
‘நான் ஜுலையில் அவுஸ்திரேலியா போகிறேன்’
‘நல்லது, ஏதாவது பணம் தேவையா?’ என்றாள்
வியப்புடன் ‘எனது மனைவியின் அண்ணன் அதை பார்த்துக் கொள்கிறார்’
தனது கையிலிருந்த கைப்பையிலிருந்து ஒரு சேட்டை எடுத்து தந்தாள்.
‘ஏன்?‘
‘எனது நன்றிக்கடன் ‘என்றாள்
‘சுமதி எனக்கு தேவையில்லை நீ நல்லா இருந்தால் போதும். அதுவே எனக்குத் தேவை’
அப்பொழுது அவளது கண்கள் மாரிக்குளமாகின.
அவளது கண்ணீரை பார்த்தபடி, எதுவும் செய்யமுடியாது அவளது கையிருந்த சேட்டை எடுத்தேன்.
வெளியே போய் கீழிருந்த தேநீர் கடைக்கு, மேலிருந்தபடி இரண்டு தேனிர் என்று சொல்லி விட்டு வந்தேன்.
கைக்குட்டையால் கண்களை துடைத்தபடி இருந்தாள்.
‘உங்கள் மனைவியை அக்கா என்பேன். உங்களை அண்ணன் என கூப்பிடலாமா?’
‘தாராளமாக?’ ‘
தேனிர்க்கடை பையன் ரீ இரண்டை வைத்துவிட்டு சென்றான்
‘நான் ஓரு கடத்தல் பேர்வழியிடம் வேலை செய்கிறேன்’
‘எப்படி?’
‘நான் வெளிநாடு செல்ல என்னிடம் பணம் இல்லையென்பதால் ஏஜன்ட், போதைவஸ்த்து கடத்தல்காரன் ஒருவனிடம் சேர்த்து அவர்களுக்கு போதை மருந்துப் பெட்டியை கொண்டு சேர்த்தால் டிக்கெட்டும் பணமும் தருவதாக சொன்னான். நானும் வேறு வழியில்லாததால் அதை செய்ய தொடங்கினன். பம்பாய், பாரிஸ், மொரிசியஸ் ஆகிய ஊர்களுக்கு என்னை நியமித்துவிட்டார்கள். ஹோட்டல், போக்குவரத்து செலவு எல்லாம் அவர்களே. எனக்கு பணமும் கிடைக்கும்… எனவே விடமுடியாது‘ என்று அழுதாள்.
‘எங்காவது சென்று தப்ப முடியாதா?’
‘அவர்களது ஆட்கள் எங்குமுள்ளார்கள், தப்பினால் நமது இயக்கம்போல் போட்டுத் தள்ளுவார்கள்’
அவளுக்கு என்ன ஆறுதல் சொல்லமுடியும்?
சிறிது நேரமிருந்து விட்டு ‘அக்காவை கேட்டதாக சொல்லுங்கள்..’ எனக் கூறிவிட்டுச் சென்றாள்.
அவுஸ்திரேலியா வந்து சில காலத்தில் அவள் பாரிஸ் பிடிபட்டு ஜெயிலில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.
சுமதி மட்டுமல்ல ஆண்கள் பெண்கள் பலர் தமிழ்த் தேசியத்திற்கான ஆயுதப் போராட்டத்தில் அவர்களது குடும்பக் கூடுகளை விட்டு பல கனவுகளுடன் வெளியேறி சிதைந்தார்கள். அவர்களின் நினைவுகள் எனக்கு அதிகாலை சொப்பனமாக இன்னமும் நீடிக்கின்றன.
முழு கதையையும் மனைவியிடம் சொல்லாதபோதிலும் இவள் அந்த சுமதியாக இருக்கலாம் என சியாமளாவிடம் சொல்லிவைத்தேன்.