அவர் எதற்காக இருந்தார்?
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,081
ஒரு ஊரில் கோயில் திருவிழா வழக்கம்போல் ஒரு பாகவதரை வரவழைத்து கதை நிகழ்ச்சி நடத்தினார்கள் கோயில் நிர்வாகிகள்.
கூட்டம் கூடியது.
இன்று “வள்ளி திருமணம்” கதையை பிரபல பாகவதர் நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.
“எத்தனை ஆண்டுகளாக இந்த வள்ளி திருமணக் கதையைக் கேட்பது இப்படி புராணக்கதைகளைக் கேட்டு, கேட்டு சலித்து விட்டது. புராணக் கதையை படித்து விட்டோமே. மீண்டும், கண்விழித்து இந்தக் கதையைக் கேட்கவேண்டுமா? என்று முணுமுணுத்துக் கொண்டு எழுந்து சென்றனர். ஒரே ஒருவன் மட்டும் அங்கே உட்கார்ந்திருந்தான்.
கதை கூறும் பாகவதருக்கு கூட்டம் கலைந்து சென்று விட்டதில் கோபமும் வருத்தமும் மேலிட்டது. என்றாலும், ஒருவன் மட்டும் தனக்கு எதிரில் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது.
தனக்கு எதிரில் இருந்தவனைப்பார்த்து, இவர் ஒருவர் மட்டுமே பக்தர் என்று எனக்குத் தோன்றுகிறது. இவருக்காகவே நான் இந்தக் கதையைக் கூறுகிறேன்” என்றார் பாகவதர்.
“ஐயா, பாகவதர் அவர்களே! நான் எழுதப் படிக்கத் தெரியாதவன்; தரை விரிப்பையும், பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கோயில் தர்மாகர்த்தா வீட்டுக்குப் போக வேண்டும் அதற்காகவே இங்கே உட்கார்ந்திருக்கிறேன்” என்றார் அந்த ஆள்.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.