அவர்களுக்குப் புரியவில்லை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 14, 2025
பார்வையிட்டோர்: 261 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிமல் தன் விரல் நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான். பக்கத்து வீட்டுக்குப் புதிதாக வந்துள்ள அந்தச் சிறுமி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். “சிரிப்போமா, வேண்டாமா?” என்று சிந்திப்பதான முகபாவம். அவளுக்கும் தன்வயதுதான் இருக்கும் என ஊகித்தான் நிமல். “ஆனால், அவளுக்குச் சிங்களம் தெரிந்திருக்குமா?” – மனதில் கேள்வி எழுந்தது; கூடவே “பேசித்தான் பார்ப்போமே!” என்ற துணிச்சலும்தான். கையால் சைகைகாட்டி அவளை அருகில் அழைத்தான். 

“அ… உங்கட பெயர்… பெயரென்ன?” (ஒயாகே நம மொகத?) 

“என் பெயர் கமலா” (மகே நம கமலா) 

“ஆ! உங்களுக்கு சிங்களம் பேச முடியுமா?” 

“ம்… கொஞ்சம் தெரியும்” 

“என் பெயர் நிமல்… நான் எட்டாம் ஆண்டில் படிக்கிறேன். நீங்கள்?” 

அதன் பின் அவர்கள் நிறையப் பேசினார்கள்; வெகு விரைவில் நண்பர்கள் ஆகிவிட்டனர். அவர்கள் எந்தவொரு விடயத்தையும் பரஸ்பரம் கூறிக்கொள்பவர்களாக… எந்த ஓர் இனிப்புப் பண்டத்தையும் பகிர்ந்து உண்பவர்களாக மாறிவிட்டனர். கமலாவிடம், நிமல் தமிழ் கற்கவும் தொடங்கினான். அயல்வீட்டினரான அவர்களின் குடும்பத்தவர்கள் நெருங்கிப்பழகாவிட்டாலும் இவர்களின் நட்பையும் பொருட்படுத்தவில்லை. 


வானம் இருண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இன்று அவர்கள் தம் உறவினரொருவரை விமானத்தில் வழியனுப்பிவைக்கக் கட்டுநாயக்காவுக்குச் சென்று திரும்பியிருந்தனர். பயணக்களைப்பு தீர நேரகாலத்துடன் உறங்க வேண்டுமென்று கூறியபடி, நிமலின் அம்மா நிமேஷா, இரவுணவைப் பரிமாறினாள். சாப்பிட்டு முடியும் தருவாயில் கதவு தட்டப்பட்டது. நிமேஷா சென்று கதவைத் திறந்தாள். வெளியே ஆயுதந்தாங்கிய இராணுவ வீரர்கள் நின்றிருந்தனர். 

“வீட்டுக்குள் யார்யாரெல்லாம் இருக்கிறீர்கள்?அடையாள அட்டை பார்க்க வேண்டும்.” 

பேச்சுக்குரல் கேட்டு நிமலின் அப்பா சிரிசேன கையைக் கழுவிக்கொண்டு எழுந்துபோய், வந்தவர்களிடம் கதைத்தார். சற்றுநேரத்தில் அவர்கள் சென்றுவிட்டனர். கொஞ்சநேரம் வரை அதைப்பற்றியும் நாட்டு நிலைமைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டு, உறங்க ஆயத்தமாயினர். 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. நிமல் டியூசனுக்குப் போய்த் திரும்பினான். வரும் வழியில் கமலா, தன் வீட்டுப் படிக்கட்டில் சோகமே உருவாக அமர்ந்திருப்பதைக் கண்டு, கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே சென்று மெதுவாக அவளின் பக்கத்தில் அமர்ந்தான். தான் வந்தமர்ந்ததைக் கூடக் கவனிக்காமல், அவள் சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்து அவனுக்கு வியப்பாகவிருந்தது. 

“கமலா” – அவள் திடுக்கிட்டுத், திரும்பினாள். நிமலைக் கண்டதும், அவளது விழிகள் பனித்தன. அழுகையில் துடித்த உதடுகளை மூடமுயன்று முடியாமல், பற்களால் கீழ் உதட்டைக் கடித்து அவள் தவிப்பதைப் பார்த்ததும் நிமலுக்குப் பாவமாக இருந்தது. 

“என்ன பிரச்சினை, கமலா? அம்மாவும் அப்பாவும் ஏசினாங்களா?”

‘இல்லை’ என்பது போலத் தலையாட்டினாள். 

“அப்போ எதையாச்சும் தொலைச்சிட்டியா?” 

மீண்டும் அதே தலையாட்டல். நிமலுக்குக் கொஞ்சம் கோபமும் வந்தது. எரிச்சலை அடக்கிக் கொண்டு கேட்டான். “சரி, என்னான்னு நீயே சொல்லேன்.” 

“நிமல்… எ… எங்கப்பாவ ஆமிக்காரங்க பிடிச்சிட்டுப் போயிட்டாங்க.” 

“ஏன், உங்கப்பா புலியா?” 

“இல்ல நிமல்.” 

“அப்போ ஏன் பிடிச்சாங்க? ஐடின்டி காட் இல்லையோ?” 

“அதெல்லாம் இருக்குதுதான்.” 

“அப்போ ஏன்…?”

“தெரியாது நேத்து ராத்திரி எங்க வீட்டுக்கு ஆமிக்காரங்க திடீர்னு வந்து, அப்பாவ ஜீப்புல ஏத்திக்கிட்டுப் போனாங்க; விசாரணை பண்ணணுமாம்!” 

“ஆமா! எங்க வீட்டுக்கும் வந்தாங்கதான். அப்பச்சியோட பேசிட்டுப் போயிட்டாங்களே! அப்ப.. அவரை மட்டும் ஏன் விசாரணைக்குக் கூட்டிட்டுப் போகல்ல?” 

“நாங்க தமிழ்தானே நிமல், அதுதான் போல.” 

“ஏன், தமிழழெண்டா என்ன? அவங்களும் இந்த நாட்டு மக்கள்தானே? அவங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?” அவன் ஆச்சரியத்தோடு விழியகலக் கேட்டான். கமலா பதில் சொல்லவாயைத் திறந்தபோது நிமேஷாவின் குரல் கேட்டது. 

“கமலா, நான் வர்றேன்; அம்மா கூப்பிடுறாங்க. அது சரி, உங்கம்மா எங்க…?” 

“பொலிசுக்குப் போயிருக்காங்க. வரும்வரைக்கும் தான் பார்த்துட்டு இருக்கிறேன்.” 

“சரி, தனியா இருக்கப் பயமெண்டா எங்கட வீட்டுக்கு வா, சரியா?” 

அவன் சொல்ல அவள் மௌனமாகத் தலையாட்டினாள். என்றாலும், நிமலின் அம்மா அவனை அதட்டும் ஒலி, சற்று உரக்கவே காதில் வந்து விழுந்தது. 

“நிமல் நீ ஏன் அங்கெல்லாம் போறே? உனக்குத் தெரியாதா? கமலாவோட அப்பாவ ‘ஆமி’யால பிடிச்சுட்டுப் போயிருக்காங்க. அவங்ககிட்ட நாங்களும் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கணும்.” 

கமலாவுக்கு அழுகை வந்தது. முழந்தாளில் முகம் புதைத்து விசும்பினாள். எவ்வளவு நேரம் அப்படியிருந்தாளோ தெரியாது. அம்மாவின் கரம் தலையை வருடவே, கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்துவிட்டு, எழுந்து கொண்டாள். 

இரு வாரங்களின் பின் சதாசிவம் நிரபராதி என்று விடுதலை செய்துவிட்டனர். என்றாலும், நிமலின் பெற்றோருடைய மனப்போக்கில் மாற்றமில்லை. இருதரப்பினரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஐயத்தோடும் அச்சத்தோடும் நோக்கினர். பேச்சுக்கு இடமின்றிப் போய்விட்டது. ஒருவரையொருவர் தெருவில் காணும்போது மட்டும் போலியாகப் புன்னகைத்துக் கொண்டனர். அவர்களின் இந்நாடகம் சில சமயங்களில் அவர்களுக்கே அலுப்பாக இருந்தது. 

நிமலுக்கும் கமலாவுக்கும் இப்பொழுதெல்லாம் முன்பு போல சுதந்திரமாகப் பேசிப் பழக வாய்ப்புக் கிடைக்கவில்லை. எங்கோ ஒரு மூலையில் போர் நடக்கிறது. அப்போரோடு எந்தவிதத் தொடர்புமற்ற சகமனிதர்கள் ஒருவருக்கொருவர் குரோதமாயும் விரோதமாயும் எண்ணிக்கொள்வது, வேதனை- தரும் வேடிக்கைதான். களங்கமற்ற சிறு உள்ளங்களின் பரிசுத்தமான பாச உணர்வுகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது அவர்கள் அதனை விரும்பவில்லை. 


வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. தன் பிறந்த நாளை மிக எளிமையாகப் பெற்றோருடன் கொண்டாடிய கமலா, ஐசிங் கேக்கில் ஒரு பெரிய துண்டை நிமலுக்காகப் பத்திரப்படுத்தினாள். அவளது விழிகள் அடிக்கடி தெருவை நோட்டமிட்டன. அவளுக்குத் தெரியும், இது நிமல் வகுப்பு விட்டு வரும் நேரமென்று. சற்றைக்கெல்லாம் நீலநிறக் குடையோடு மெல்ல நடந்துவரும் நிமலைக் கண்டாள் கமலா. மகிழ்வோடு வீட்டினுள்ளே ஓடினாள். தன் குடையை விரித்துப் பிடித்தவாறு, கேக்கை வலது உள்ளங்கயிைல் ஏந்திக்கொண்டு கேட்டருகே போனாள். அவளைக் கண்டுவிட்டு நிமலும் புன்னகையோடு அருகே வந்து நின்றான். 

“நிமல், இன்று என் ‘பேர்த் டே’ தெரியுமா?” 

“ஓ! அப்படியா? ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஒப் த டே.” 

“தேங்க்யூ. நிமல், இது எங்கம்மாவே செஞ்ச கேக். சாப்பிட்டுப் பாருங்க; ரொம்ப ருசியா இருக்கும்.” 

“அட, ஐசிங் கேக்கா? எனக்கும் இது ரொம்பவும் பிடிக்கும்.” என்றவாறு அவன் அதனை வாங்கி வாயில் வைக்கப்போன சமயம், ஒரு கை குறுக்கிட்டுத் தட்டிவிட, கேக் துண்டு எகிறிப்போய்த் தெருவில் விழுந்தது. இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க, குடையோடு நிமேஷா நின்றிருந்தாள். 

“உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கேன், இந்த வீட்டு ஆட்களோட தொடர்பு வேணாமெண்டு!” 

“அம்மா, நான்…” – அவன் முடிக்குமுன், ‘பளார்’ என்று அவரைப் அவளின் கை அவனது கன்னத்தைப் பதம் பார்த்தது. 

“இனி, நீங்க ரெண்டுபேரும் பேசுறதை நான் காணக்கூடாது. கமலா, நீ நிமலோட பேசினா, உங்க அப்பாவ பொலிசில மாட்டி வைப்பேன், கவனம்!” என்று உறுமியவள், நிமலைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போனாள். 

‘இந்தப் பெரியவர்களுக்கு என்ன நடந்துவிட்டது? ஏன் இப்படி அர்த்தமில்லாமல் ஏதேதோ பேசுகிறார்கள்; நடந்து கொள்கிறார்கள்? நாங்களிருவரும் நண்பர்கள்தானே! இனி, பேசிப்பழகினால் இவர்களுக்கென்ன?’ என்றெல்லாம் அந்தச் சின்னஞ்சிறு உள்ளங்களில் பல கேள்விகள் எழுந்தன. என்றாலும், காரணம் மட்டும் அவர்களுக்குப் புரியவேயில்லை. 

நிமல் சென்ற திசையிலிருந்து பார்வையைத் திருப்பி, கண்ணீர் நிறைந்த கண்களோடு தெருவைப் பார்த்தாள் கமலா. ஐசிங் கேக் துண்டு மழைநீரில் கரைந்து, தெருவில் வழிந்துசெல்வது மங்கலாகத் தெரிந்தது. 

– மித்திரன் வாரமலர் 9-12-2001.

– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *