அவன்
பரிதாபகரமாக பார்க்கப்படும் ஒரு பார்வைக்குப்பின்னர் பயங்கரத்தை பார்ப்பது இதுவே முதல் முறை….
அவனை சிறு வயதில் பார்த்த போது அவன் கண்களில் பரிதாபகரமான சிறு ஒளி தெரிந்தது. என்மீது பரிதாபமே இல்லையா என்பது போல் ஒரு பார்வை பார்ப்பான். அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக எதையோ தேடிக்கொண்டிருப்பான். அவனுக்கு நல்ல பசி இருந்தது போல. அவனது உடலில் இருந்த முடிகள் அனைத்தும் குத்திட்டு நின்று கொண்டிருக்கும். அவன் என் இனம் இல்லையென்றாலும் அவன் மீது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவிலிருந்து சிறிதை அவனுக்கும் கொடுப்பேன். உணவை சாப்பிட்டவனுக்கு திருப்தி ஏற்பட்டதாகத் தெரியாது. மீண்டும் ஒரு பரிதாபப் பார்வை பார்ப்பான். சிரித்துக் கொண்டே மீண்டும் உணவிடுவேன். பிறகு ஓடிவிடுவான். வெகுநாட்களாக இந்த நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அவனுக்கு உணவுக்கான சரியான நேரம் தெரிந்திருக்கிறது. சரியாக சமையல் முடிந்தவுடன் அட்டன்டன்ஸ் கொடுத்துவிடுவான். அவனுக்கு சத்தான உணவு வகைகளை வழங்கினேன். அவன் அறிவுத்திறனிலும், துறுதுறுப்பிலும் அசாதாரணமாக இருந்தான். அவனால் ஆபத்து ஏற்படுமோ என்று சிந்தித்துப் பார்த்தது கூட கிடையாது.
ஒரு வருடத்திற்குப் பிறகு
தினசரி வேலைக்குச் செல்லும் வழியில் எலெக்ட்ரிக் ட்ரெய்ன் நடைமேடையில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த அழகான கருமை நிற கல்மேடையில் ஒற்றை ரோஜாவை தலையில் வைத்துக் கொண்டு, என்னை பார்த்தும் பார்க்காதது போன்று அமர்ந்திருக்கும் சொப்னா, என்றும் இல்லாமல் இன்று என்னைப் பார்த்து சிரித்திருக்கிறாள் என்றால் ஏதோ நடந்திருக்கிறது. கடந்த 3 மணி நேரமாக ஏதோ ஒருவித காற்றோட்டமான சூழ்நிலையை உணர்ந்த வண்ணம் இருந்தும் எனக்கு ஏன் சந்தேகம் ஏற்படவில்லை. அலுவலக கழிப்பறையில் ஆளுயரக் கண்ணாடியில் அப்படியும், இப்படியுமாக எனது ஆடையின் அழகைக் கவனித்த பொழுதுதான் நான் அதைக் கவனித்தேன். எனது 1200 ரூபாய் ஜீன்சில் முழுதாக 2 ரூபாய் அகலத்திற்கு ஒரு வெட்டவெளி தெரிந்தது. காற்றோட்டத்திற்கான காரணமும் புரிந்தது.
இந்த மனநிலையை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது. இதை அவன் தான் செய்திருப்பான் என்கிற சந்தேகம் எனக்கு சற்று உள்ளது. அதை எப்படி அவன் துள்ளியமாக செய்தான் என்றுதான் எனக்குப் புரியவில்லை. 2 விஷயங்கள் அவன் செய்திருக்கலாம். நான் இவ்வாறு செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்றபடி ஒருபார்வை பார்த்திருக்கலாம். அல்லது, இதை நான் செய்துவிட்டேன் உன்னால் என்ன செய்ய முடியும், என்று வில்லத்தனமாக 10 அடி தள்ளி நின்று திமிராக பார்த்துவிட்டு என் கையில் அகப்படாமல் ஓடி மறைந்திருக்கலாம்.
அது என்னவிதமான பார்வை என்று என்னால் யூகிக்க முடியவில்லை. அதில் இன்னமும் அதே பாவப்பட்ட தன்மை வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் செயல்களைப் பார்த்தால் திமிர்த்தனம்பொங்கி வழிகிறது. என்னை எள்ளி நகையாடுவதுபோல அவனது திமிர் மிகுந்த செயல்கள் எல்லைமீறிச் செல்ல ஆரம்பித்தன. இதுதான் அவனது முதல் தவறு என்பதால் அவனை என்னால் மன்னிக்க முடியாது. அவன் மன்னிக்கத்தகுந்த செயலை செய்யவில்லை. சொப்னா என்னைப் பார்த்து சிரித்தது விருப்பப்பட்டு இல்லை. என் மானம் அல்லவா அந்தச் சிரிப்புக்கு பின்புலமாய் அமைந்துவிட்டது. பிரமிக்க வேண்டுமென்றால் அவனது பற்களின் வலிமையைப் பார்த்துதான் பிரமிக்க வேண்டும். அதற்குள் அவனது பற்களுக்கு அவ்வளவு வலிமை வந்து விட்டதா? அவனது பற்களின் வலிமை எனது நம்பிக்கையை இழக்கச் செய்து விட்டது. இன்றும் கூட வாசற்படியில் நின்றுகொண்டு திமிரான ஒரு பார்வை பார்த்தபடி சென்றான். இன்று எனது எந்தத் துணியில் 2 ரூபாய் ஓட்டையைப் போட்டானோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது.
என்னதான் மாமிசத்துண்டங்களைப் போட்டு வளர்த்தாலும், அவன் மீது நிரந்தரமான விரோதம் எனக்கு ஏற்பட்டு விட்டது உண்மைதான். எப்பொழுதும் இரண்டு விஷயங்களை தேர்ந்தெடுக்கும்போது கவலை வந்துவிடுகிறது. என்னுடைய கவலையெல்லாம் எந்த ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பதில்தான் உள்ளது. அவனை அடித்துக்கொள்வதா, விஷம் வைத்துக் கொள்வதா என்று யாரிடம் போய் கேட்பது. செயல் என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்துவிட வேண்டியதுதான். எதைச் செய்தால் என்ன அவனை கொன்றுவிடவேண்டியது தான் என்கிற உறுதியான, தெளிவான முடிவுக்கு வந்துவிட்டேன்.
2 வருடங்களுக்குப் பிறகு
எல்லா சட்டவிரோத செயல்களுக்கும் தோழன் ஒருவனுடைய உதவி எப்பொழுதும் தவறு செய்பவர்களுக்கு தேவைப்படும். எங்கிருந்து இவனுக்கு அவனைப் போலவே ஒரு நண்பன் கிடைத்தான் என்பது புதிராகத் தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் எங்கிருந்து நண்பர்களைப் பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுது நான் 2 பேரைக் கொன்றாக வேண்டும். அவர்கள் நால்வர் ஆவதற்குள் நான் இதைச் செய்தாக வேண்டும். எனது ஆசை என்னவென்றால் அவர்களை உயிரோடு பிடிக்க வேண்டும். அதற்கான கண்ணியை விலைபேசி வாங்கி அவன் வீட்டில் உலாவும் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்தேன். கடந்த 2 மாதங்களாக அவன் அந்த கண்ணியில் மாட்டிக் கொள்ளவில்லை. அன்று ஒருநாள் அவன் அந்த கண்ணியில் சிக்காமல் லாவகமாக தப்பிச்செல்வதைப் பார்க்க நேர்ந்தது. அவன் தெளிவாக இருக்கிறான் என்பதை அப்பொழுதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் அந்தக் கண்ணியை முதன் முறையாக பார்த்த பொழுது எப்படி நக்கலாக சிரித்திருப்பான் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே அவமானமாக இருந்தது. பெண்கள் ஆடவர்களைப் பார்த்து நக்கலாக ‘க்ளுக்’ என்று சிரிப்பது போல, அவன் அந்த கண்ணியைப்பார்த்து சிரித்திருப்பான். இல்லை ஆட்டோ ஓட்டுனர் ஹாரன் ஒலி எழுப்பிக் கொண்டே செல்லும் போதும், சாலையின் குறுக்கே சாவகாசமாக கடந்து செல்லும் குண்டு பெண்களை அசிங்கமாக திட்டி விட்டு செல்வது போல, அவனும் அந்த கண்ணியைப் பார்த்து ஏதாவது அசிங்கமாக திட்டியிருக்கலாம். அன்று ஒருநாள் வாசற்படியில் கடந்து செல்லும் போது, கால் இடறியது. அன்று தான் திட்டியிருப்பான் என்று நினைக்கிறேன். ஒருவேளை கெட்ட வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருப்பானோ என்னவோ… ஆக மொத்தம் அந்த கண்ணி நான் வாங்கிய பட்டம் போன்று உபயோகப்படாமலேயே இன்று வரை உள்ளது. சமீப காலங்களில் அவன் அதன் மீதேறி சர்க்கஸ் கற்றுக் கொண்டிருக்கிறான். ஏராளமான சாகசங்களை கற்று வைத்திருக்கிறான் என்னுடை செலவில் என்பதை நினைத்துப் பார்க்கையில்………என்னை நானே திட்டித் தீர்த்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது.
அன்றுதான் அந்தக் கொடூர எண்ணம் தோன்றியது. என்னால் கூட கொலை செய்ய முடியுமா? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நான் எப்படி ஒரு குண்டாந்தடியை எடுத்து அவனது நடுமண்டையில் அடித்துக் கொல்ல முடியும். அதைச் செய்வதற்கு பலவிதமாக எனக்கு நானே வீர உரைகளை ஆற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.
அவன் என்னை தொந்தரவு செய்யாமல் இருந்திருக்கும் பட்சத்தல் நான் ஏன் அவனை கொலை செய்ய துணியப்போகிறேன். அன்று ஒருநாள் பார்க்கிறேன். எனது லேப்டாப்புக்குள் இருந்து எறும்பு சாரை சாரையாக சென்று கொண்டிருக்கின்றன. பதறிப்போய் திறந்து பார்த்தால் அதற்கு ஒரு எலும்புத் துண்டு. அநேகமாக அவன் சாப்பிட்டு விட்டு மீத எலும்புத்துண்டை ஒளித்து வைத்ததாகத்தான் இருக்கும். அன்று எண் கண்கள் சிவந்தன. கோபத்தால் அல்ல. அழுது அழுது சிவந்து போனது. நான் துன்பப்பட்டு, துயரப்பட்டு கை விரல்களை எல்லாம் சுட்டுக் கொண்டு சிக்கன் -65 சமைத்தால். என்னைக் கேட்காமல் பாதியை எடுத்துக் கொண்டு போய் விடுகிறான். அதைவிடக் கொடுமை அந்த சிக்கன் -65வை என் ஷூ மற்றும் உள்ளாடைகளில் சென்று ஒளித்து வைத்துவிடுகிறான். எறும்புகள் ஒவ்வொன்றும் சிவப்பாக, புஷ்டியாக கொலைவெறியுடன், கடிக்கக் கூடாத இடங்களில் எல்லாம் கடிக்கும் போது, எனக்கு ஏன் கொலை செய்யும் எண்ணம் தோன்றாது. உண்மையில் நான் ஒரு மிதவாதி. அவன் பேச்சுவார்த்தை நடத்தக் கூட தகுதியில்லாதவன். அவனிடம் வேறு வழியேயில்லை. நான் ஆயுதத்தைத்தான் கையில் எடுத்தாக வேண்டும். என்னை அந்த இக்கட்டான சூழ்நிலைக்கு அந்தக் கயவன் தள்ளிவிட்டான்.
அன்று அவனை 40 இடங்களில் துரத்தி துரத்திஅடித்தேன். அதில் 3 அடி என் கால்களில் நானே அடித்துக் கொண்டேன். மீதம் 37 அடிகளும் என் வீட்டுத்தரையில் தடம் தடமாக பதிந்தது. இந்த அதிசயத்தை என்னவென்று நான் சொல்வது. ஒரு அடிகூட அவன் மேல்படவில்லை. 24 மணி நேர மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் 12ம் வகுப்பு வரை படித்து முடித்த மருத்துவரிடம் செல்ல விருப்பம் இல்லையென்றாலும், போய்த் தொலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. வழக்கம் போல் கலர் கலராக மாத்திரைகளும், 2 ஊசிகளும் போட்டுவிட்டு என் பின்னால் வந்தவருக்கு 2 ஊசிகளை தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார். சென்ற முறை கண்ணில் தூசி விழுந்துவிட்டதாக சென்ற போது கூட இதே 2 ஊசிகளைத்தான் போட்டதாக நியாபகம். அந்த 2 ஊசிகளை இந்த ஜென்மத்தில் மாற்ற மாட்டார்போல.
அவனை துரத்தி துரத்தி அடிக்கும் போது எனக்கு ஏற்பட்ட நஷ்டங்கள்
1.என்ன செய்தாலும் உடைக்க முடியாது என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டதால் வாங்கிய பிளாஷ்டிக் குடம்
2. மிக்சியின் மூடி
3. மினுக் மினுக்கென்று எரிந்துகொண்டிருந்த ட்யூப் லைட்
4. டைம்பீஸ்
5. டார்ச் லைட்
6. வீட்டு ஓனரின் முடியில்லாத முன்னந்தலை.
அவரை யார் கொலைவெறியில் குண்டாந்தடியை எடுத்துக்கொண்டு அவனை துரத்திக்கொண்டிருந்த போது, “என்ன சத்தம், என்னசத்தம்” எனறு என் வீட்டுக் கதவைத் திறந்து மண்டையை உள்ளே விடச் சொன்னது. டம்……டம்….. என்று மூன்று முறை அடித்து விட்டேன். அவர் மேல் விழுந்த முதல்அடி தெரியாமல் பட்டது. 2வது அடி, அடிக்கடி என் வீட்டு கதவை என்னைக் கேட்காமல் திறந்து பார்ப்பதற்காக. 3வது அடி எதற்கு என்று தெரியவில்லை, ஒருவேளை அவனை அடிக்க முடியாத கோபமாக இருக்கலாம். அவரை அடித்து தீர்த்துக் கொண்டேனோ என்னவோ. அவர் உண்மையை கண்டுபிடித்துவிட்டார்.
” நீ வேணும்னு தாண்டா என்ன அடிச்சிருப்ப, ரொம்ப நாள் ஆசைய தீத்துக்கிட்டடா” என 15 முறையாவது என்னை பார்த்துக் கொலை வெறியுடன் கூறியிருப்பார்.
“அப்படியெல்லாம் இல்லண்ணே” என்று எத்தனை முறை பொய்யாக மறுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவமும், திறந்த மனப்பான்மையும் அவருக்கு இல்லை.
இன்னும் 2 மாதங்களில் வீட்டைக் காலி செய்யவில்லை என்றால் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். நீங்கள் முதலில் பச்சைத் தண்ணீரில் குளித்து காட்டினால்தான் உங்களது இந்தக் கூற்றை நான் நம்புவேன் என்று நானும் பதிலுக்கு பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டேன்.
நல்ல வேளையாக டி.வி.யும், லேப்டாப்பும் தப்பியது. அவனால் சொல்லொணாத் துன்பங்களுக்கு நான் ஆளாகிவிட்டேன். இப்பொழுதெல்லாம் அவனுக்கு நண்பர்கள் அதிகரித்து விட்டார்கள். எனது எந்த உள்ளாடைக்குள் என்ன இருக்குமோ அல்லது யார் இருப்பார்களோ என்கிற பயம் இப்பொழுதெல்லாம் எனக்கு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அன்று ஒருநாள் கேஸ் ஒயரை கடித்துக் கொண்டிருந்தான். நான் அவனுக்கு எப்படிச் சொல்வேன். அதுசாப்பிடக் கூடிய பொருள் இல்லையென்று. எதையாவது ஒன்றைக் கடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது அவனது பிறவிக் குணமாகி விட்டது. ஆனால் அதிலும் அவன் தெளிவாக இருக்கிறான், மின்சார ஒயரை மறந்தும் அவன் கடிப்பதில்லை. அவன் ஒரு பொருளை கடிப்பதற்கு முன்னாள் முகர்ந்து பார்க்கிறான். பின்னர் தான் கடிக்க ஆரம்பிக்கிறான். நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன் நான் அவனுக்கு விஷயம் வைத்த உணவை உண்ணக் கொடுக்கும் போது அவனுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று.
நான் மட்டும் நீதிபதியாக இருந்திருந்தால், அந்த பாய்சன் என்று எழுதப்பட்ட டப்பாவை பாய்சன் என்று சொல்லி விற்பனை செய்த அந்த கடைக்காரருக்கு தூக்கு தண்டனை கொடுத்திருப்பேன். என்ன ஒரு ஏமாற்று வேலை. ஒரு சின்ன தலைசுற்றலோ, மயக்கமோ கூட அவனுக்கு ஏற்படவில்லை. அவன் வரவர மாயா பஜார் ரங்காராவை போல் மாறிக் கொண்டிருக்கிறான்.
அன்று அந்தக் கடைக்காரர் கை நடுங்க, குரல் நடுங்க இவ்வாறு கூறி கொடுத்தார்.
“சார் ஹைலி பாய்சன் சார், கைய நல்லா சோப்பு போட்டு கழுவிடுங்க சார்”
அவன் 2 கவளங்கள் சாப்பிட்டு விட்டு நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகிறான்.
என்னால் முடியவில்லை. அவனிடம் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறேன். கண்ணீர் விட்டபடி அவனிடம் ஒப்புக் கொண்டேன். இனி என்னால் முடியாது. நம் கணக்கு வழக்கை இத்தோடு முடித்துக் கொள்ளலாம் என்று அவனிடம் கூறிவிட்டேன். இன்று இரவு எதையெல்லாம் உருட்ட வேண்டுமோ, உருட்டிக்கொள். என்று விட்டு விட்டேன். 2 முறை தூங்கிக் கொண்டிருக்கும்போது எனது போர்வைக்குள் அவனை பார்த்தேன். அவனைப் பார்க்கப் பிடிக்காமல் அந்தப்பக்கமாக திரும்பிப் படுத்துக் கொண்டேன். அன்று இரவு கனவில் அவன் என்னிடம் கேட்டான். பயம் என்றால் என்ன? அதன் அர்த்தம் என்ன? அதைப்பற்றி உனக்குத் தெரியுமா? எங்கே சற்று விளக்கமாக சொல் என்று என்னை பார்த்து கால்மேல் கால் போட்டுக் கொண்டு கேள்வி கேட்கிறான். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
காலை உணவு அருந்திக் கொண்டிருந்த வீட்டு சொந்தக்காரரிடம் வீட்டு சாவியை ஒப்படைத்துவிட்டு அவரைப் பார்த்துக் கூறினேன்.
“நான் வீட்டை காலி செய்து கொள்கிறேன்.” என்று கூறியதும், அவர் வாயிலிருந்த உணவை மெல்ல மறந்து என்னை உற்றுப் பார்த்தார். பின் இடது நெஞ்சை லேசாகப் பிடித்துக் கொண்டார். அவர் மேற்குப் பக்கமாக சென்று வெகு நேரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.
அன்று ஒரு நாள் கூறியிருந்தார். “என்னைக்கு சூரியன் மேற்க உதிக்குமோ அன்னைக்குத்தாண்டா நீ வீட்ட காலி பண்ணுவ”
பதற்றத்துடன் ஓடிச்சென்று குட்டியானையைக் கூட்டி வந்தார். தன் உடலில் வியர்வை வழிவதை கூட பொருட்படுத்தாமல் பதற்றத்துடன் அவசர அவசரமாக பொருட்களை எல்லாம் அவரே வண்டியில் ஏற்றினார். புதிதாக திருமணமாகி அவரது பெண் புகுந்த வீட்டுக்கு சென்ற போது கூட அவர் அழவில்லை. எனக்கு என்னவோ அப்படித்தான் தோன்றியது, அவரது விழியோரங்கள் லேசாக ஈரமாகியிருந்தன. ஆட்டோவில் ஏறிச் சென்றபோது திரும்பிப் பார்த்தேன். பாரதிராஜா பட கதாநாயகி போல் நின்று கொண்டிருந்தார்.
புதிய வீடு, புதிய காற்று, புதிய வாழ்க்கை…………..முக்கியமாக இங்கு அவன் தொல்லையில்லை. துஷ்டனைக் கண்டால் விலகிப்போ என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள். அவர்களது அனுபவ வார்த்தைகள் தான் எவ்வளவு உண்மை. யார்க்குத்தான் ஆரம்பித்திலேயே புரிகிறது.
4 நாட்களாக சுதந்திரக் காற்றை சுவாசித்தேன். நிம்மதியாக தூங்கினேன்.
5ம் நாள் இரவு
அந்த அழகான நடிகையுடன் நீலகிரி மலைக்காடுகளில் டூயட் பாடிக்கொண்டிருந்தேன் (கனவில்), அப்பொழுது அவள் கிச்சு கிச்சு மூட்டினாள். எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. கிச்சு கிச்சு அதிகமாக இருக்கவே எனது தூக்கம் கலைந்து விட்டது. போர்வையை விலக்கிப்பார்த்தால்
……………………..
அவன்
………………………
அவன் கடந்த 4 நாட்களாக இங்குதான் இருந்திருக்கிறான்.