அவன் தான் இவன்!





உறவுகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
“ஊருக்கே தர்மம் பண்ணுன தர்மர் போயிட்டாரே….” வந்தவர்கள் இறந்தவர் பெருமையைச்சொல்லிக்கட்டியழுது கண்ணீர் வடித்தனர்.
“எத்தன தருமம் பண்ணி என்ன பண்ணறது? மொட்டை அடிக்க வாரிசு இல்லியே…. ஒரே பொண்ணு. அதுக்கும் கண்ணாலத்தப்பண்ணி வெளிநாட்டுக்கு அனுப்புச்சுட்டாரு. அதுக்கும் ஒரே பொட்டப்புள்ள தான் பொறந்திருக்குது. பொண்டாட்டிக்காரியும் பொண்ண பெத்துப்போட்டதும் சொர்க்கத்துக்கு போயி சேர்ந்துட்டா. இந்த பூமில எழுபது வயசு வரைக்கும் மனுசன் எந்த சொகத்தையும் பாக்கல. பொண்ணுக்குப்பொறந்த வாரிசு ஆம்பளப்பையனா இருந்திருந்தாலுங்கூட பரவாயில்லை. பையனுக்கு பதிலா பையனா காரியத்தப்பண்ணச்சொல்லிப்போடலாம். இப்பவும் ஒன்னுங்கெட்டுப்போகல. மருமகனும் காரியத்தப்பண்ணலாம்” என்றார் கூட்டத்திலிருந்த உறவுக்காரர்.

“அமெரிக்காவுல இருக்கற பொண்ணு வரோணுமுன்னு ரெண்டு நாளா உசுரில்லாத மனுசன போட்டு வெச்சு ஒறம்பரையெல்லாரும் காத்துட்டு கெடக்கறோம். ஒன்னம் ஒரு மணி நேரத்துல வந்து போடுவாங்கன்னு ஆள்காரன் ராமன் வந்து சொல்லிப்போட்டு குழி வெட்ட எடஞ்சொல்லப்போயிருக்கறான்” இறந்தவருடைய சகோதரி ராசம்மாள் மூக்கை சேலைத்தலைப்பில் சிந்தியவாறு கூறினாள்.
ஒரு மணி நேரம் கழித்து டாக்ஸி வந்து வாசலில் நின்றது. அதிலிருந்து தர்மர் மகள் ரகணியும், மருமகனும், பேத்தியும் இறங்கிய போது வெள்ளைக்காரர் ஒருவரும், ஒரு சிறுவனும் கையில் மாலையுடன் உள்ளே வந்தனர். சிறிது நேரம் கதறியழுத மகள் ரகணி, தகனம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு சொல்ல, சடங்குகளை நடத்துபவர் ‘மொட்டையடிக்க பங்காளிகளோ இல்லைன்னா பேரனோ மருமகனோ வரலாம்’ என அழைக்க, வெள்ளைக்கார சிறுவனை முன் நிறுத்தி “இவனுக்கு அடிங்க” என ரகணி சொன்னதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் குழப்பமடைந்தனர்.
“இப்படியொரு முறை நம்ம வம்சத்துலயே இல்லை. வேற நாட்டுல பொறந்த ஒரு வெள்ளைக்காரப்பையனுக்கு மொட்டையடிக்கோணும்னா நாங்கெல்லாம் இப்பவே போயிருவோம். படிச்சுப்போட்டம்னா, சம்பாறிக்கறம்னா என்ன வேணும்னாலும் பண்ணிப்போடுலாம்னு அர்த்தமா? உனக்கு ஆண் வாரிசு இல்லேன்னா உன்ற ஊட்டுக்காரன் குத்துக்கல்லாட்டம் நிக்கிறாரே… அவருக்கு மொட்டையடிக்கிறதுன்னாலும் சரி” என பங்காளியான பெரியவர் ரங்கசாமி பேச, உறவுகள் அவரது பேச்சை ஆமோதித்தனர்.
“உங்களுக்கென்ன என்ற வயித்துல பொறந்த பையன் மொட்டை அடிக்கோணும். அவ்வளவு தானே…? இவன் என்னோட வயித்துல பிறந்த பையன் தான்” என ரகணி கூறக்கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
“வெள்ளைக்காரன் மாதிரி இருக்கறானே…? உன்னோட புருசனோட ஜாடை கொஞ்சமும் இல்லையே….? எங்கனால இத ஏத்துக்க முடியாது. உனக்கெதாவது புத்தி கித்தி கெட்டுப்போச்சா…?” கூட்டத்தில் இருந்த மாமனார் மருமகளைப்பார்த்துக்கோபமாகக்கேட்டார்.
“என்னோட புருசன் இப்ப உங்க மகனில்லை. இந்தப்பொண்ணு பொறந்ததுக்கப்புறம் எனக்கு இவரை பிடிக்காததுனால பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடியே டைவர்ஸ் பண்ணிட்டு அதோ ஸ்மார்ட்டா அங்க நிக்கிறாரே வெளிநாட்டுக்காரர் அவரை கல்யாணம் பண்ணிட்டேன். இங்கே சொன்னா அப்பா ஹார்ட் அட்டேக்ல போயிருவாருன்னு இத்தனை வருசமா சொல்லாம மறைச்சிட்டேன். உங்க மகனும் உங்க கிட்ட சொல்லலை போலிருக்கு. இப்ப அப்பா போயிட்டாரு. அதனால சொல்லறேன்” எனக்கூறிய ரகணியின் பேச்சைக்கேட்டு மாமனார் உள்பட அனைவரும் வாயடைத்து, அதிர்ச்சியில் உறைந்து போயினர்.