அழகிய கண்ணே..!
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
எட்டாம் வகுப்பு படிக்கும் கண்ணனுக்கு மிகவும் அழகான, பெரிதான, துறுதுறுவென்ற கண்கள். அவன் கண்களைப் பார்த்து, அம்மா கோமதியிடம் சொல்லி ஆச்சரியப்படாதவர்களே இருக்க முடியாது.
அன்று வீட்டுக்குள் வரும்போதே அப்பாவின் முகம் பரபரப்புடன் இருந்தது. ‘’அப்பா’’ என்றபடி உள்ளே இருந்து ஓடி வந்தான் கண்ணன். அவன் தன் அப்பாவிடம் பேசுவதற்குள் வீட்டில் போன் ஒலித்தது.
‘‘சாரி சார். தலைவலி அதிகமாக இருந்தது. அதனால்தான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டேன். ஆபீஸ் வேலையை வீட்டுக்கு எடுத்து வந்திருக்கேன். கண் விழித்தாவது வேலையை முடிச்சுடுவேன்’’ என்று கெஞ்சும் குரலில் மேலதிகாரியிடம் பேசினார். அம்மா உள்ளேயிருந்து காப்பி எடுத்துவந்து அப்பாவிடம் கொடுத்தாள்.
அப்போது கண்ணன் ‘’இன்னிக்கி எனக்கு சட்டை வாங்கித் தர்றதா சொன்னீங்க’’ என்றான் அழுத்தமாக.
அப்பாவும் அம்மாவும் சில நொடிகள் பார்த்துக்கொண்டார்கள். பிறகு கண்ணனைப் பார்த்து ‘’சரி வா, கடைக்குப் போகலாம்‘’ என்றார்கள்.
அடுத்த வாரம் புதிய சட்டையை அணிந்து பள்ளிக்கு வந்தான் கண்ணன். அவன் பிறந்த நாள் என்பதால் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தான். அன்று காலையிலிருந்தே தன் வகுப்பைச் சேர்ந்த பூபதி சோர்வுடன் இருந்ததை கவனித்தான். அன்று மாலை இது பற்றி கண்ணன் கேட்க, ‘’காலையில் இருந்து எதுவும் சாப்பிடலே’’ என்றான், தையல் விட்டுப் போயிருந்த தன் சட்டைக் கிழிசலை மறைத்தபடி.
‘’காலையிலே கொஞ்சம் சீக்கிரம் எழுந்திரு. இல்லேன்னா இப்படித்தான் ஸ்கூலுக்கு நேரமாயிடிச்சினு சாப்பிடாமல் வரும்படி ஆயிடும்‘’ என்றபடி கிளம்பினான்.
வீட்டுக்கு வரும் வழியில் இருந்த ஹோட்டலுக்குள் நுழைந்த கண்ணன் தனக்குப் பிடித்த நெய் ரோஸ்ட் தோசை ஒன்றை ஆர்டர் செய்தான்.
அப்போது அந்தப் பக்கமாகச் சென்ற ஒரு பெண்மணி தன் கணவரிடம் ‘‘அந்தப் பையனோட கண் எவ்வளவு அழகா இருக்குது பாருங்க’’ என்றாள்.
அந்தப் பெண்மணியின் இடத்தில் வள்ளுவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?
வள்ளுவர் ஒரு ஞானி. அவருக்குக் கண்ணனின் குணம் தெரிந்திருக்கும். எனவே அவர் அவனது கண்களைப் பாராட்டியிருக்க மாட்டார்.
அப்பாவின் வேலைப்பளு, அம்மாவின் விருப்பம் ஆகியவற்றை அறிந்து கொள்ளாதவனாக இருக்கிறான் கண்ணன். காலையிலிருந்து வகுப்புத் தோழன் சாப்பிடாமல் இருப்பதற்கு வறுமையும் காரணமாக இருக்கலாம் என்றுகூட யோசிக்காமல் இருக்கிறான்.
எனவே வள்ளுவர் அவனது கண்களை அவனது பெருமைக்கு உரிய அம்சமாக நினைத்திருக்க மாட்டார். அவரைப் பொறுத்தவரை அடுத்தவர் பார்வையில், அவர்களின் எண்ணங்களை அறிய முடியாத கண் பயனற்றது.
இதைத்தான்‘குறிப்பறிதல்’என்றஅதி காரத்தில்…
குறிப்பின் குறிப்புணரா வாயின் & உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?
என்ற குறளில் குறிப்பிட்டிருக்கிறார்.
– வெளியான தேதி: 01 செப்டம்பர் 2006