அறுபதிலும் காமம்
அவருடைய பெயர் சங்கரலிங்கம். வயது அறுபது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கெசட்டட் ஆபீசராக வேலைசெய்து ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி மல்லிகா தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நல்ல பதவியில் இருப்பவர். வரும் டிசம்பரில் ஒய்வு பெறுகிறார்.
திருமணமான அவர்களின் மூத்த மகன் லண்டனிலும்; இளைய மகன் சிங்கப்பூரிலும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். சங்கரலிங்கமும், மல்லிகாவும் தினசரி ஸ்கைப்பில் பேரன் பேத்திகளுடன் நன்றாகக் கொஞ்சிவிட்டுத்தான் தூங்கச் செல்வார்கள்.
திருநெல்வேலி பெருமாள்புரத்தில் சொந்தமாகப் பெரியவீடு; நிறைய பாங்க் பாலன்ஸ் என நிம்மதியாக சொகுசு வாழ்க்கையில் லயித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களது ஒரேகுறை சங்கரலிங்கத்துக்கு உடம்பில் சுகர் இருப்பதுதான். எனினும் அவர் தன் உடம்பை நன்றாகக் கவனித்துக் கொண்டார்.
மூன்று மாதங்களுக்கு முன்புதான் வடிவு அவர்கள் வீட்டில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள். அவளுக்கு முப்பத்தைந்து வயது. வடிவு தன் இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, குளித்து ரெடியாகி பத்து மணிக்குமேல்தான் சங்கரலிங்கம் வீட்டிற்கு வேலைக்கு வருவாள். அப்போது மல்லிகா வீட்டில் இருக்க மாட்டாள்.
வடிவு பெயருக்கு ஏற்ற மாதிரி அழகிய வடிவில் இருந்தாள். அவள் வேலைக்கு வரும்போது சங்கரலிங்கம் குளித்துவிட்டு, அழகாக தலை வாரி, தும்பைப்பூ வேஷ்டியில், பாண்ட்ஸ் பவுடரில் மணப்பார். அவளை அடிக்கடி வெறித்துப் பார்ப்பார். அவளிடம் ஏதாவது பேச்சுக் கொடுக்க முயல்வார்.
ஆனால் வடிவு அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் தனது வேலைகளை முடித்துவிட்டுக் கிளம்புவாள். இப்படியாக ஒருமாதம் சென்றபோது, ஒருநாள் வடிவின் கணவன் மாயாண்டி அவளிடமிருந்து வீட்டுச்சாவி வாங்கிக்கொள்ள அவள் வேலை செய்துகொண்டிருந்த சங்ககரலிங்கம் வீட்டிற்கு அவசரமாக ஓடி வந்தான்.
சங்கரலிங்கம்தான் கதவைத் திறந்தார். மாயாண்டி கரடுமுரடான தோற்றத்தில் வாட்ட சாட்டமாக இருந்தான். அடிதடிக்கு அஞ்சாதவன் போலக் காணப்பட்டான். அவன் உருவத்தைப் பார்த்து சங்கரலிங்கம் பயந்துபோனார். அவன் வடிவிடம் ஏதோ மிகவும் பதட்டத்துடன் பேசிவிட்டு வீட்டுச் சாவியை வாங்கிச் சென்றான்.
“என்ன வடிவு உன் புருசனா? என்ன வேலை செய்யறாரு…?” சங்கரலிங்கம் பேச்சுக் கொடுத்தார்.
“ஆமாங்க…கட்டிட வேலை செய்யறாரு… இன்னிக்கி வேலைல ஏதோ தகராறாகி அடிதடிவரை போயிட்டாராம். சாவி வாங்கிகிட்டு அரிவாள எடுக்க வீட்டுக்கு போயிருக்காரு…”
அவ்வளவுதான் அதன் பிறகு உயிர் பயத்தில் சங்கரலிங்கம் தன் வாலைச் சுருட்டிக்கொண்டார். அன்றிலிருந்து அவளை வெறித்துப் பார்ப்பதையும்; பேச்சுக் கொடுப்பதையும் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார்.
இது நடந்த ஒரு மாதம் கழித்து, வடிவு தினமும் மஞ்சள் புடவை; மஞ்சள் ப்ளவுஸ் அணிந்து; முகத்தில் ஏராளமாக மஞ்சள் பூசி; நெற்றியில் பெரிய மஞ்சள் குங்குமத்துடன் வேலைக்கு வர ஆரம்பித்தாள். சில நாட்கள் கழித்து மல்லிகா அவரிடம், “நாளைக்கு வடிவு மேல்மருவத்தூர் போகிறாளாம். ஏதோ வேண்டுதலாம். அவளோட அம்மா திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்காளாம்; அவங்கதான் நாளையிலிருந்து ஒரு வாரத்திற்கு நம்ம வீட்டு வேலைக்கு வருவாங்க…” என்றாள்.
மறுநாள் சங்கரலிங்கம், வேலைக்கு வரப்போகும் வடிவின் அம்மாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவளும் வந்தாள். சிவந்த நிறத்தில் பார்ப்பதற்கு ஒரு ஆரோக்கியமான ஸிந்திப் பசு மாதிரி வளப்பமாக இருந்தாள். சங்கரலிங்கம் அவள் அழகில் சொக்கிப் போனார்.
ஐம்பது வயதுக்கும் மேல் இப்படி ஒரு அழகு; அதவும் ஒரு வேலைக்காரிக்கு இருக்குமா என்று வியந்தார். அவள் தன் வீட்டில் வேலை செய்யும் இந்த ஒரு வாரத்தில் அவளிடம் நயமாகப் பேசி; எப்படியாவது மசியவைத்து படுக்கையறைக்கு தள்ளிச் சென்றுவிட வேண்டும் என்று ஏங்கினார்.
முதல் இரண்டு தினங்கள் வடிவின் அம்மாவை நினைத்தபடியே ஏக்கத்துடன் படுக்கையில் புரண்டார். ‘தனக்கு வயதாகி விட்டது. சுகர் வேறு… அவளைப் பெரிதாக தன்னால் எதுவும் செய்துவிட முடியாது என்றாலும்; வீரியத்துடன் முயங்க முடியாவிடினும்; கற்பனையுடன் கூடிய சுற்று வேலைகளிலேயே அவளை மகிழ்வித்து தானும் சந்தோஷிக்க முடியுமே..’ .என்று நினைத்தார்.
இன்னமும் ஐந்து தினங்கள்தான் இருக்கின்றன.
மறுநாள் காலை வடிவின் அம்மா வருவதற்கு முன்பே குளித்துவிட்டு பவுடரில் மணத்தார். பர்ஸிலிருந்து ஒரு மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து வைத்துக்கொண்டு அவளுக்காக காத்திருந்தார். வேலைக்கு வந்ததும் அவள் பாட்டுக்கு இவரை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் சமையலறைக்குச் சென்று பாத்திரங்களை வாஷ்பேசினில் போட்டுக்கொண்டு குழாயைத் திறந்துவிட்டு பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தாள்.
சங்கரலிங்கம் அவளிடம் போய் நின்றுகொண்டு, தான் வந்தது அவளுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக தொண்டையை செருமிக்கொண்டு கனைத்தார். அவள் திரும்பியவுடன், “இந்தாங்க இந்த பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்… செலவுக்கு பயன் படும். உங்களுக்கு வேறு ஏதாவது உதவி வேண்டுமென்றாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள்…” என்றார்.
அவள் இவரை ஏற இறங்கப் பாத்துவிட்டு சிறிது தயக்கத்துடன் அவர் கொடுத்த முன்னூறு ரூபாயை வாங்கிக்கொண்டு தன்னுடைய மார்புப்பகுதியில் சொருகிக்கொண்டாள்.
அவள் தன்னிடமிருந்து பணம் வாங்கிக்கொண்ட தைரியத்தில் சங்கரலிங்கம் அவளை உரிமையுடன் கன்னத்தில் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டுச் சென்றார்.
அவரின் இந்தத் திடீர் நடவடிக்கையால் அவள் அதிர்ந்துபோய் நின்றாள்.
அன்று அத்துடன் தன் அப்ரோச்சை சங்கரலிங்கம் நிறுத்திக்கொண்டார்.
‘எப்ப கை நீட்டி பணம் வாங்கிவிட்டளோ அப்போதே அவள் விலை போய்விட்டாள். ஆக அடித்தளம் போட்டாச்சு… நாளைக்கு இன்னும் கொஞ்சம் முன்னேறிவிடலாம்’ என்று தனக்குள் சந்தோஷித்தார்.
மறுநாள் வேலைக்கு வந்த அவள், பாத்திரம் தேய்க்காமல் நேராக மாடிப் படிக்குச் சென்று தலையைப் பிடித்தபடி அமர்ந்துகொண்டாள்.
சங்கரலிங்கம் அவளிடம் பதட்டத்துடன், “என்ன ஆச்சு?” என்று கேட்டார்.
“எனக்கு சுகர் இருக்கு… கிறு கிறுன்னு வருது…”
சங்கரலிங்கம் உடனே தான் தினமும் சுகர் செக் செய்து கொள்ளும் குளுக்கோ மீட்டரால் அவளுக்கு சுகர் செக் செய்தார். அது 77 என்று காட்டியது.
“உங்களுக்கு லோ சுகர்…” ப்ரிட்ஜைத் திறந்து மாஸாவை எடுத்து அவளிடம் கொடுத்து குடிக்கச் செய்தார்.
அவள் அதை வாங்கிக் குடித்துவிட்டு சற்றுநேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“உங்க பேரென்ன?”
“பங்கஜம்…”
சங்கரலிங்கம் மாடிப் படிகளில் அவளை உரசியபடி உரிமையுடன் அமர்ந்துகொண்டு, “பங்கஜம்… எனக்கு உங்கமேல ரொம்ப ஆசையா இருக்கு…வீட்டுவேலை முடிந்ததும் என்னை வந்து பாருங்க.. இன்னும் உங்களுக்கு வேண்டிய பணம் நிறைய தரேன்…”
தன்னுடைய பெட்ரூமுக்கு சென்று தலையணையைக் கட்டி அணைத்தபடி படுத்துக்கொண்டு அவளுக்காக காத்திருந்தார்.
பங்கஜம் வேலை செய்யப் போகாமல் மாடிப் படியிலேயே சற்றுநேரம் அமர்ந்துகொண்டு எதையோ தீவிரமாக யோசித்தாள்.
பிறகு நிதானமாக எழுந்து சங்கரலிங்கத்திடம் சென்றாள்.
“சாமி… நான் உங்க வீட்டுக்கு வேலை செய்ய வந்தவள். என் புருசன் செத்துப் போய் பத்து வருஷமாச்சு. ஆனா நான் இதுவரையிலும் எந்த தப்பு தண்டாவுக்கும் போகல. நான் சாகிறவரைக்கும் இப்படியே இருக்க ஆசைப் படுகிறேன் சாமி… நீங்க எனக்கு பணம் எதவும் தரவேண்டாம். என்னை நேர்மையா நடத்தினாப் போதும்…”
தடீரென அவருடைய கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள். அந்தக் கும்பிடுதலில் ‘தயவுசெய்து என்னை அமைதியாக என் வேலையைச் செய்ய அனுமதியுங்கள்’ என்கிற கெஞ்சலான வேண்டுகோள் தொனித்தது.
சங்கரலிங்கம் அவளின் மரியாதையான தாக்குதலை சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவமானத்தால் வெட்கிப்போய் உடல் குறுகிப் போனார்.
அவள் விறுவிறென திரும்பிச் சென்று பாத்திரம் தேய்க்கலானாள்.
நல்ல முறையில் கையாண்டிருக்கிறார் கதாசிரியர். இன்றைய சூழ் நிலையின் நடப்புக்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். ஆண் பெண் இருவரும் கற்பைப் பாரட்டினால்தான் நாம் கற்பைப் பற்றி உயர்வாகப் பேச முடியும். இன்று கற்பு என்பது definition இல்லாத ஒரு கொள்கையாக இருப்பதால், இது போன்ற கதைகள் யதார்த்தத்தில் நாம் சபலத்திலிருந்து தப்பிப்பது எப்படி என்று புரிந்து கொள்ள இயலுகிறது. வாழ்த்துக்கள்.