அறிவெனும் கத்தி!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 2,883
முக்கியமான காரியத்துக்காக அதிக நம்பிக்கையோடு, உதவிக்கு சில ஆட்களுடன் ஓரிடத்துக்கு வேலைக்காரன் காரியை உடனே போகச்சொன்னார் அவனது முதலாளி கார்மேகம்.
“வாரி, வாரி கொடுக்கிற உங்களை இந்தக்காரி கை விட மாட்டான் சார். ‘சொல்லு, கொல்லு, அள்ளு’ இது தாங்க எனக்குப்புடிச்ச மூணு வார்த்தை. பகல்ல தூங்கறது, ராத்திரில வேலை பார்க்கிறது புடிச்சுப்போனதுனால படிப்பு மண்டைல ஏரல. ஒடம்புல தெம்பு நெறையவே இருக்குது. வம்புன்னா காரி எடுப்பான் கம்பு. எப்புடிங்க என்ற வசனம்….? ” பேசி விட்டு தயாராக நின்ற வாகனத்தில் மிடுக்காக ஏறி அமர்ந்தான்.
இரவு பனிரெண்டு மணி. முதலாளி சொன்ன வீட்டின் முன் நின்றான். அவனைக் கண்டதும் உளைத்தபடி பக்கத்தில் வந்த தெரு நாய்களுக்கு பிஸ்கெட் போட்டான். சுற்றிலும் பார்த்தான். முகமூடியை தலையை மூடியபடி போட்டான். சுற்றிலும் நோட்டமிட்டான். அந்த நகரத்தின் மையத்தில் உயரமாக வளர்ந்து நின்று செல்வப்பெருக்கை வெளிப்படுத்தியது பெரிய பங்களா. காவலாளியின் குரட்டைச்சத்தம் ஆழ்ந்த உறக்கத்தைக்காட்டிக்கொடுத்தது. நல்ல வேளை உள்ளே நாய் எதுவும் வளர்க்கவில்லை.
அந்த வீட்டில் வசிப்பவர் நல்ல மனிதர் எனப்பெயர் பெற்ற தொழிலதிபர் பரமசிவம். சாதாரண நிலையிலிருந்து ஆரம்பத்தில் மில் தொழிலாளியாக வேலைக்குச்சென்றவர் தனது கடின உழைப்பால் பெரிய முதலாளியாகி பல கோடிகளைச்சம்பாதித்திருப்பவர்.
வீட்டிற்குள்ளிருந்து இருமல் சத்தம் கேட்டது. வயது அறுபதுக்கு மேல் இருக்கும் என உறுதி செய்து கொண்டான். முதல் நாள் தன் முதலாளி சொன்ன பின் தனது விசவாசிகளை அனுப்பி உளவு பார்த்தான். ‘நல்ல மனிதர்’ என்பதைத்தவிர வேறு வார்த்தைகள் அவரைப்பற்றிக்கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் சம்பவத்துக்கு செல்ல சற்று தயங்கினான்.
‘மானு மத்த மிருகத்துகள வேட்டையாடறதில்லைங்கிறதுக்காக புலி அதனோட பசிக்கு மான வேட்டையாடாம விட்டுப்போட்டு போயிரும்ங்கிறயாக்கு…? நாம வாழ்ந்து போடோனும்னா மத்தவங்க வீழ்ந்து போறதப்பத்தி இம்மியளவும் நெனைக்கப்படாது, கவலப்படறதும் ஆகாது’ என வேலையில் சேர்ந்து முதல் சம்பவம் செய்யாமல் வந்த போது முதலாளி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்ததும் அவனுக்குளிருந்த தயக்கம் போனது.
தனது சாதுர்யத்தால் வீட்டின் கதவைத்திறந்து உள்ளே நுழைந்தவன், மங்களான புட் லேம்ப் வெளிச்சத்தில் கட்டிலுக்கருகே வைத்திருந்த தண்ணீர் ஜக் காலில் பட்டு ‘டொம்’ என சத்தம் வர, கட்டிலில் படுத்திருந்தவர் மீண்டும் இருமிய படி “இந்தக்கருமம் புடிச்ச பூனை பாலக்குடிச்சது பத்தாதுன்னு, இப்பத்தண்ணியும் குடிக்க வந்திருக்குது….” எனக்கூறி எழுந்த போது டக்கென கட்டிலுக்கடியே படுத்தவாறு மறைந்து கொண்டான் காரி.
கழிவறைக்குள் சென்று வந்தவர் மறுபடியும் கட்டிலில் படுக்கச்சென்றதும், கட்டிலுக்கடியே இருந்து வெளியே வந்தவன், இடுப்பிலிருந்த கத்தியை வெளியே எடுத்து தனது முதலாளியின் கட்டளையை நிறைவேற்றத் தயாரானான்.
அவனது முதலாளி ஊரில் பெரிய பணக்காரர். ரியல் எஸ்டேட் அதிபர். முக்கியமான அரசியல் கட்சியில் பெரிய பதவி வகிப்பவர். ஊரில் தன்னைத்தவிர யாரும் பெரிய மனிதராக வரக்கூடாது என கருதுவதால், தனது வேலைக்காரன் காரி புகுந்த வீட்டின் முதலாளி சக தொழிலதிபர் பரமசிவம் தன்னை விட ஒரு படி மேலே போகப்பார்த்ததோடு, தான் விரும்பிய நகரின் முக்கிய இடத்தை அதிக விலைக்கு வாங்கி அட்வான்ஸ் கொடுத்ததால் ஆத்திரம் தலைக்கேற, அடியோடு தீர்த்துக்கட்ட ஆளனுப்பியுள்ளார். அதை நிறைவேற்றவே காரி கத்தியை எடுத்துள்ளான்.
கட்டிலில் படுத்திருந்தவர் திடீரென கைகளில் நெஞ்சைப்பிடித்தபடி ‘நெஞ்சு வலி தாங்க முடியல…. ஆராச்சும் காப்பாத்துங்க….’ என முனகியபடி திணறியவர் புரண்டு, புரண்டு படுத்தார்.
கத்தியால் அவரது நெஞ்சில் குத்தப்போன காரி, ஏற்கனவே கேட்டது போலிருந்த குரலைக்கேட்டு பின் வாங்கினான். இதே குரல்….பத்து வருடங்களுக்கு முன்…. நடு ரோட்டில் தான் அடிபட்டுக்கிடந்த போது, அனைவரும் வேடிக்கை பார்த்த போது வந்து நின்ற பென்ஸ் காரிலிருந்து இறங்கிய மனிதர் மூக்கில் கை வைத்துப்பார்த்து விட்டு ‘உசுரு இருக்குது. தூக்கி கார்ல படுக்க வைங்க’ எனக்கூறி அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்த போது, ‘இன்னும் பத்து நிமிசம் லேட்டா வந்திருந்தா உயிரைக் காப்பாத்தி யிருக்க முடியாது’ என மருத்துவர் கூறியதை நினைவு வந்ததும் அவரைப்பார்த்து கை கூப்பி வணங்கியது ஞாபகம் வர, கத்தி அவனையறியாமல் கையிலிருந்து கீழே நழுவியது.
பதறியபடி உடனே அவரைத்தூக்கி தோளில் போட்டவன், வெளியில் நின்றிருந்த தான் வந்த வாகனத்தில் படுக்க வைத்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதும், ‘இன்னும் பத்து நிமிசம் லேட்டா வந்திருந்தா உயிரைக்காப்பாத்தியிருக்க முடியாது ‘ என்று அன்று தனக்குச்சொன்ன அதே வார்த்தையை மருத்துவர் இன்று பரமசிவத்துக்கு சொல்லக்கேட்டபோது அதிர்ச்சியில் உறைந்து போனான்.
அன்று செய்த உதவிக்கு கைமாறு செய்ய தனக்கு கடவுள் இன்று கொடுத்த வாய்ப்பு எனப்புரிந்து கொண்டான்.
அவசரமாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நெஞ்சில் கத்தியால் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதை உடனிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது, வாழும் உயிரை எடுக்க கத்தி எடுத்த தனக்கும், போகும் உயிரைத்தடுக்க கத்தி எடுத்த மருத்துவருக்கும் உள்ள வித்தியாசத்தை யோசித்துப்பார்த்த போது, அவனது மனதில் இதுவரை சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த உயிரைக்கொல்லும் அசுர எண்ணத்தை தனது அறிவெனும் கத்தியால் குத்தி சிதைத்தான் ஊரில் பிரபல ரவுடி எனும் பெயர் பெற்றிருந்த காரி.