அறிவுடைமை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 2,666
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பகுத்தறிவுடையராய் இருத்தல்
பெண்ணாகடத்தில் வாழ்ந்துவந்த அச்சுத களப்பாளரின் புதல்வர் மெய்கண்டார். இவர் இளமையிலேயே சகல கலைகளையும் கற்றுத் தம் மாணவர்களுக்குக் கோபம் செய்யக்கூடிய கொடுமையைப்பற்றி அறிவித்துக்கொண்டிருந்தார். அச்சமயம் இவர் குலகுருவாகிய அருணந்தி சிவாச் சாரியார் இவரைக் காணவந்தார். வருகையைக் கண்டும் இவர் எழுந்து மரியாதை செய்யாமையால குலகுரு வெளியே நெடுநேரம் காத்திருந்தார். இவரும் மேலும் மேலும் பாடத்தையே சொல்லி வந்தார். தன் மாணவன் தனக்கு மரியாதை செய்ய வில்லை என்ற கோபம் மூண்ட குரு பின் பாடம் சொல்லும் இடத்திற்குவந்து கோபம் என்றால் என்ன? அது எதுபற்றி நிகழும் என்ற கேள்விகளை மெய்கண்டாரைக் கேட்டார். பின்னால் வரும் கெடுதியை முன்னால் அறிந்து அது வராமல் தடுக்கும் நுட்ப அறிவுடையவர் மெய்கண்டார் ஆதலால் அவரை அக்கேள்விகள் ஒன்றும் அஞ்சும்படியான துன்பத்தைச் செய்யவில்லை. அதனால் அவர் பேசாது இருந்தனர்; பேசாதிருப்பதைக் கண்டு மேலும் பெரும் சத்தத்துடன் கேட்க மெய்கண்டார் அக்கேள்விகளுக்கெல்லாம் பதில் உம்மிடத்திலேயே இருக்கிறது என்றார். பின் தன்னைத்தான் அறிந்து பார்க்கத் தம்மிடத்தில் யாவும் உள்ளவற்றை அறிந்து, இத்தன்மையாக யாவும் விளங்க என் நிலையை எனக்கு அறிவித்த பெரியோரைக் கேள்வி கேட்டோமே? என்று அஞ்சி அவர்பாதத்தில் விழுந்து மாணவராகித் தமக்கும் உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரும் அவ்விதமே மாணவராக ஏற்றுக்கொண்டு அவர்க் கும் உபதேசம் செய்தார். பின்னால் வரும் கெடுதியை முன்னால் அறிந்து பேசாதிருந்ததால் குலகுரு கூறிய சொற்கள் எவையும் மெய்கண்டார் அஞ்சும்படியான துன்பத்தைச் செய்யவில்லை. பின்னால் வருவதை ஆராயாது கோபம் கொண்டு பேசியதால், அருணந்தி சிவாசாரியார் தாம் குலகுருவாய் இருந்தாலும் தம் குற்றத்திற்கு அஞ்சித் தம் மாணவர் என்று எண்ணியவர்க்குத் தாம் மாணவராக ஆனார். இதைக் குறளும் வற்புறுத்திச் சொல்கிறது.
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
எதிரது ஆக = இனி வரவிருக்கும் தீமையை முன்னதாக (அறிந்து)
காக்கும் = காக்கவல்ல
அறிவினார்க்கு = அறிவினை உடையவர்களுக்கு
அதிர = (அவர்) நடுங்கும்படி
வருவது ஓர் நோய் = வருவதாகிய ஒரு துன்பமும்
இல்லை = கிடையாது.
கருத்து: பின் வரும் தீங்கும் முன் அறிந்து காத்துக் கொள்ளும் அறிவுள்ளவர்க்குத் துன்பம் இல்லை.
கேள்வி: யாதொரு துன்பமும் அடையாமல் வா பவர் எவர்?
ஆ – ஆக என்பதின் விகாரம்.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.