அருணோதயம்





சென்னையிலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் நிர்வாகத்தினர் இருக்கும் பகுதியில் ஒரு பெரிய அறை. அறையில் அமைதி. கல்லூரித் தலைவர் உட்பட நிர்வாகிகள், சில பேராசிரியர்கள், சில மாணவர்கள் என இருபது பேருக்குமேல் மிகுந்த எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தனர். அறைக்கு வெளியே கணிசமான கூட்டம். இறைச்சல்.

அருண் அறைக்குள் நுழைந்தான். இளங்கலை இறுதி ஆண்டு மாணவன். அவன் நுழைந்ததுமே கூடத்தில் கிசு கிசு பேச்சுக் குரல்கள் நிசப்தத்தை குலைத்தன. அடுத்து, பேராசிரியர் ராம்ஜீவன் உள்ளே நுழைந்தார். கம்பீரமான தோற்றம். சட்டென்று அறையில் அமைதி. ஒருமுறை அறையைச்சுற்றி நோட்டம் விட்டபின் அருணை கண்ணால் எரித்துவிடுவது போல் சில வினாடிகள் பார்த்துவிட்டு அமர்ந்தார்.
அறையின் கதவு மூடப்பட்டது.
“டாக்டர் ராம்ஜீவன், மிஸ்டர் அருண் – விசாரணையை ஆரம்பிக்கலாமா?” என்று வழக்கமான வெண்கலக் குரலில் கேட்டார் கல்லூரித் தலைவர். கேட்டார் என்பதைவிட அறிவித்தார் எனலாம்.
அருண் அதுவரை எந்த வகுப்பிலும் தங்காமல் சமாளித்து விட்டான். கடைசி வகுப்பு தேர்வின் ஒரு பகுதியாக அவன் எழுதியிருந்த கட்டுரைக்கு ராம்ஜீவன் 18 சதவீதம் மதிப்பெண் கொடுத்ததும் அதிர்ந்து போனான். அந்த அதிர்ச்சிதான் அருணை விசாரணை அறைக்கு இழுத்து நிறுத்தியது.
தன்னுடைய வருங்காலத்தை பாதிக்கக்கூடிய கட்டுரை என்பதால், அருண் சாமர்த்தியமாக ‘சாட்ஜிபிடி,’ ‘ஜெமினி,’ ‘கிராம்மர்லி’ போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி, ஒரு கட்டுரையை உருவாக்கினான். கட்டுரையில் மேற்கோள்கள், தரமான மொழி, நடை எல்லாமே அவனைப் பொறுத்தவரை அருமையாக இருந்தது என நினைத்தான். ஆனால், தன் வகுப்பு மாணவர்களின் எழுத்துப் பாணியை நன்கு அறிந்த பேராசிரியர் ராம்ஜீவன் அருணுடைய கட்டுரையை படித்ததும் சந்தேகப் பட்டார் – அது அருணின் சொந்த படைப்பா அல்லது போலியா, வேறு யாராவது எழுதியதா, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கொண்டு எழுதியதா? இந்த கேள்விகளுக்கு ராம்ஜீவன் விடை தேடி, கல்லூரிகளில் பேராசிரியர்கள் பயன்படுத்தும் சிறப்பு ‘சாப்ட்வேர்’ கொண்டு அருணின் கட்டுரையை அலசினார். அருணை நேரடியாக அழைத்து, “நீ சொந்தமாக இந்த கட்டுரையை எழுதவில்லை, இதெல்லாம் ‘ஏ.ஐ.’ எழுதியது” என்று கூறி, 20% சதவீதம் தரம் கொடுத்தார்.
அருண் அவமானத்தால் தலை குனிந்தான். ஆனால், அடங்கிவிடவில்லை. சிந்திக்க ஆரம்பித்தான். முதல் கேள்வி, மாணவர்களுக்கு கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பற்றி வகுப்புகள் நடத்துகிறார்கள். அவனும் முதல் இரண்டு ஆண்டுகளில் அதுபோன்ற ஏழு வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவன்தான். தான் கற்றுக்கொண்டதை பயன்படுத்தியது தவறா? இரண்டாம் கேள்வி, பேராசிரியர் ராம்ஜீவன் முதல் நாள் வகுப்புக்கு வந்து முகம் காட்டிவிட்டுப் போனவர்தான். பிறகு எல்லா பாடங்களையும் ‘ஸ்யூம்’, ‘யூ டியூப்’, மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலமாகதானே நடத்தினார். கட்டுரைக்கு தரம் தந்தபோதுதானே அவனை நேரில் அழைத்து தலையில் குண்டு போட்டார்.
பேராசிரியர்களுக்கு ஒரு சலுகை, தனி நீதி…மாணவர்களுக்கு வேறே நீதியா? அருண் ஒப்புக்கொள்வதாய் இல்லை. ஒரு வாரத்துக்குள், அருண் கல்லூரித் தலவருக்கு கடுமையான புகார் கடிதம் எழுதினான். நீதிமன்றம் போகவும் தயாராக இருப்பதாய் குறிப்பிட்டான்.
அவனுடைய கோரிக்கை: “கல்லூரி ‘ஏ.ஐ.’ யை பாடமாக கற்றுத்தருகிறது. சில பேராசிரியர்கள், ராம்ஜீவன் உட்பட அதைக் கொண்டே வகுப்புக்கு வராமலேயே பாடம் நடத்துகிறார்கள். அதே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதற்காக எனக்கு மட்டும் ஏன் தண்டனை? இது இரட்டை மரபு! எனவே, எனது கல்விக் கட்டணத்தை திருப்பி வழங்க வேண்டும்!”
கல்லூரியில் அருணுடைய புகார் பற்றின செய்தி ரொம்பவுமே பரபரப்பை எற்படுத்தியது. பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவருமே குழப்பமடைந்தனர்.
கல்லூரித் தலைவர் தானாக முடிவு எடுக்காமல், உடனடியாக ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்தார்.
மூன்று மணி நேரம் நடந்த விசாரணையின் முடிவில் கல்லூரி நிர்வாகம் தீர்மானித்தது:
“நவீன கணினி நுட்பங்கள் அதி வேகமாக வளர்ந்து வருகிறது. ஏ.ஐ. என்பது மனித இனம் உருவாக்கிய ஒரு கருவி. இந்த நுட்பங்களை கல்வித்துறையில் கற்றுத்தருவதும் பயன்படுத்துவதும் சரியா தவறா என்பதை ஆராய்வது ஒரு பக்கம். மறு பக்கம் நமது கல்வி முறை, எதற்கு, எப்போது, எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டியது நம் கடமை. மாணவரின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதே புதுப்புது நுட்பங்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அருண் செய்த புகார் இந்த பிரச்சினையை வெளிச்சமிட்டுக் காட்டியது.”
இறுதியில், அருணுக்கு நஷ்ட ஈடாக ஒரு பகுதி கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. பேராசிரியர் ராம்ஜீவன் அருணுக்கு இரண்டாம் முறையாக வேறொரு கட்டுரையை எழுத வாய்ப்பு அளிக்குமாறு கல்லூரித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
அருண் எழுதிய இரண்டாம் கட்டுரையின் தலைப்பு:
இயற்கை அறிவா அல்லது செயற்கை அறிவா? எது போலி?
இதை பட்டிமன்றமாக அமைத்தால் திரு சாலமன் பாப்பையா அவர்களை தலைமை வகிக்கக் கூப்பிடவேண்டும் என தன்னுடைய கைப்பேசியில் குறித்துக் கொண்டான் அருண்.
![]() |
பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க... |