அரசமரமும் ஆட்டுக்காரியும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 5,252 
 
 

செம்மறி ஆடுகள் காட்டிற்குள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. வெள்ளாடுகள் வேலியில் படர்ந்திருந்த கொடிகளையும், மரத்திலிருந்து முறித்துப்போட்ட கிளையிலிருந்த தளைகளையும் நொறுக்கித்தின்று கொண்டிருந்தன. 

ஆடுகளை மேய்க்க வந்த தேவதை போன்ற அழகுடைய லில்லி, குடும்ப வறுமையின் காரணமாக புதிய மேலாடை வாங்க வழியில்லாததால் கிழிந்த மேலாடையை ஊசியில் கோர்த்த நூலால் அரச மரத்தடியில் அமர்ந்து தைத்துக்கொண்டிருந்தாள். அவள் அரசமரத்தடி தவிர வேறு மரத்தடியில்  நிழலுக்கு கூட நிற்க மாட்டாள். 

காலையில் வரும்போது “லில்லி… மாயாத்த தாண்டி அரசமரத்துக்காட்டுப்பக்கம் மட்டும் ஆடுகள ஓட்டீட்டு போயிறாதே… ” அச்சத்துடன் எச்சரித்த தாயின் பேச்சைக்காதில் போடாமல் தூக்குப்போசியில் பழைய சோறும், மோரும் ஊற்றி எடுத்துக்கொண்டு பட்டியில் அடைத்திருந்த ஆடுகளைத்திறந்து விட்டு காட்டிற்குள் முடுக்கியபடி மாயாற்றின் பக்கம் நோக்கிக்கிளம்பி வந்திருந்தாள்.

வனத்திலிருந்து கொம்புத்தேனெடுத்து வந்த ஒருவனிடம் மேலாடை சொங்கில் முடிந்து வைத்திருந்த அழுக்கு படிந்த ஓரனா ஓட்டைக்காசைக்கொடுத்து ஒரு புட்டி தேனை வாங்கி தண்ணீர் குடிப்பது போல் மடக், மடக்கென குடித்து முடித்தாள். பின் இன்னொரு சொங்கில் முடிந்து வைத்திருந்த கொட்டப்பாக்குடன் சேர்த்து வைத்திருந்த வெற்றிலையை அவிழ்த்து எடுத்து வாயில் போட்டு மென்று கடைவாயில் அடக்கிக்கொண்டாள். 

சுண்ணாம்பு சேர்க்க மறந்து விட்டதால் ஓடக்கல்லை எடுத்து வாயில் போட்டு மென்ற பின் நாக்கை நீட்டி கண்களில் பார்க்க, நன்றாக சிவந்திருப்பதைக்கண்டு மகிழ்ச்சியடைந்தவளாய் உமிழ் நீரை துப்பி விட்டு, போதை ஏறியது போல் மயக்கமாக வர, அரசமரத்தடியில் தைத்த மேலாடையை  விரித்து படுத்துக்கொண்டாள். இயல்பு நிலைக்கு உடல் தயாரானதும் எழுந்து மாயாற்றுப்பகுதிக்குள் ஆடுகளை விரட்டினாள்.

மலைப்பகுதிகளில் மழை பெய்யும்போது மாயாற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அங்கிருப்பவர்களுக்கு வெள்ளம் வருவது தெரியாது. ஆடு, மாடுகளுக்கும் தெரியாமல் போவதால் அவற்றை வரும் வெள்ளம் சில சமயம் அடித்துச்சென்று விடும். மாயமாக திடீரென வெள்ளம் வந்ததால் அதற்கு மாயாறு என பெயர் வைத்தனர். 

வனத்துக்குள் ஆறு வருவதால் சில சமயம் ஏற்படும் காட்டாற்று வெள்ளம் யானை, காட்டெருமை, மான் போன்றவற்றையும் அடித்துக்கொண்டு வந்து விடும். பெரும்பாலான காலங்களில் மற்ற ஆறுகளைப்போல் தண்ணீர் சிறிதும் இருக்காது. புற்கள், செடி கொடிகள் வண்டல் மண்ணில் செழித்து வளர்ந்திருக்கும். 

ஆற்றுப்பகுதிக்குள் ஆடுகளை மேய்ப்பது ஆபத்தென்றாலும், ஆற்றுக்குள் செழிப்பாக புல், பூடு, செடி, கொடிகள் வளர்ந்து நிற்கும் பகுதிகளில் ஆடு மேய்ப்பதால் ஆடுகளின் வயிறு சீக்கிரம் நிறைந்து விடும் என்பதால் தைரியமாக மேய்ப்பாள் லில்லி.

“உன்ற புள்ள லில்லியோட தைரியம் இந்தக்காட்டுக்குள்ள ஆருக்குங்கெடையாது பாத்துக்க. அவளுக்கு பெரிய மகாராணின்னு நெனப்பு. அவளக்கண்டா ஆத்துத்தண்ணியும், காட்டு மிருகங்களும் பயப்படும் போல. காட்டு மிராண்டிக்கு பொறந்தவளாட்டா பயமில்லாம சுத்தறான்னா பார்த்துக்குவே…” கணவனின் மூத்த மனைவி ராமி சொல்லக்கேட்ட லில்லியின் தாய் ராணிக்கு கருக்கென மனதில் பயம் கவ்வியது. பழைய நினைவுகள் வந்து அச்சத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

“என்னக்கா சொல்லறே….? அந்த சிறுக்கி எதுவரைக்கும் போனா? உண்மையச்சொல்லு. இன்னைக்கு வருட்டு. ஆடுகளப்பூராத்தையும் புடிச்சு வேவாரிக்கு வித்துப்போடறேன். எனக்கு புள்ளதான் முக்கியம்…”

“உன்ற கிட்ட மறைக்கிறதுக்கு என்ன இருக்குது. மாயாத்த தாண்டி அரசமரத்துக்காட்டுக்குள்ளே போயிருக்கிறா…”

“அரசமரத்துக்காட்டுக்குள்ளயா….?” அதிர்ச்சியில் ராணி மயங்கிச்சரிந்தாள். ஒடிச்சென்று முகத்தில் ராமி தண்ணீர் தெளித்த பின் நினைவுக்கு வந்தவள் பேயறைந்தவளைப்போல எழுந்தமர்ந்து, அழுதாள்.

அப்போது ஆடுகளை ‘ஒச்…ஒச்…’ என சத்தமிட்டு விரட்டியபடி லில்லி வீட்டிற்கு வந்ததைப்பார்த்த பின்பே தாய் ராணியின் முகத்தில் நிம்மதியின் ரேகை வெளிப்பட்டது. 

“நாங்கும்பிடற கருப்பராயன் அவளக்காப்பாத்திப்போட்டான். இல்லீன்னா அரசமரத்துக்காட்டுப்பக்கம் போயிட்டு கண்ணாலமாகாத பொட்டச்சி திரும்பி வர முடியுமா? இந்த வருசம் சோடிக்கெடாய் வெட்டி விருந்து போடறம்பாரு. அப்படியே அவளுக்கு ஒரு மாப்பளைப்பையனையும் காட்டிக்குடுக்கட்டு அந்தக்கருப்பராயன்” என சொன்ன தாய் ராணியை முறைத்துப்பார்த்தாள் லில்லி கோபமாக.

“நீ வேணும்னா மாப்பள பாத்து ஒன்னொரு கண்ணாலம் பண்ணிக்க. எனக்கு கண்ணாலமே வேண்டாம் பாத்துக்க. என்னக்கட்டிக்கிற தகுதி இந்த ஊர்ல எந்த ஆம்பளைக்கும் இல்ல…. என்னக்கட்டிக்க வாரவன் இவனுக மாதிரி எருமை மேல, கழுதை மேல போறவனா இருக்க மாட்டான். ஆனை மேல, குதிரை மேல போற அரச குமாரனாட்ட இருப்பான். அப்படிப்பட்டவன் எப்ப என்ற கண்ணுல படறானோ அப்பத்தான் எனக்கு கண்ணாலம்…”

சொல்லிவிட்டு ஆடுகளைப்பட்டியில் அடைத்து விட்டு தாயருகே வந்தவள் தாயின் மடியில் தலை வைத்துப்படுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

“ஓலக்குடிசைல பொறந்தவளுக்கு பெரிய ராச குமாரி நெனப்பு. தெனமும் காட்டுக்குள்ள போயி, மானடிச்சுட்டோ, தேனழிச்சுட்டோ வாரவனக்கட்டீட்டு ரெண்டு புள்ள குட்டியப்பெத்துப்போடற வழியப்பாரு. வேருல போற பெருக்கான தேருல உட்டானாம் பெரியாண்டிங்கிற பொழப்பால்ல இருக்குது உன்ற பேச்சு” பெரியம்மா ராமியின் பேச்சால் மனமுடைந்தாள் லில்லி.

“என்ற புள்ள வள்ளியும் கண்ணாலமே வேண்டாங்கறா… இப்ப நீயும் வேண்டாங்கறே….? ஆரவல்லி , சூரவல்லி மாதர அக்கா தங்கச்சீக ரெண்டு பேரும் ஆகப்போறீங்களா….?” மீண்டும் பேசிய ராமியின் பேச்சால் விசப்பாம்பு தன்னைத்தீண்டியது போல் உணர்ந்தாள்.

“தேனெடுக்க தெங்குமராடா போன உங்கொப்பம் வருட்டு. இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்தறோணும். பொம்பளப்புள்ளையப்பெத்துட்டு ஒன்னம் எத்தன நாளைக்கு வகுத்துல நெருப்பக்கட்டுன மாதர வாழறது? எங்க காலத்துல பதிமூணுலியே பருவத்துக்கு வந்ததும் புடிச்சு கட்டிக்கொடுத்துப்போடுவாங்க. நீயும் பருவத்துக்கு வந்து பத்து வருசம் ஓடிப்போச்சு. ஏழுகழுத வயசானதுக்கப்பறமும் கண்ணாலமே வேண்டாம்னா என்னருத்தம்?” மகளிடம் கேட்ட ராணியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

மறுநாள் ஆடுகளை ஓட்டிச்செல்லும் போது ‘அரசமரத்துக்காட்டுப்பக்கமே தலை வைத்தும் படுக்க மாட்டேன்’ என தாயிடம் கையிலடித்து சத்தியம் வேறு செய்து கொடுத்தவளுடைய கால்கள் அவளையறியாமல் அப்பக்கமே இழுத்துச்சென்றன. 

ஆடுகளும் லில்லியின் எண்ணத்துக்கேற்பவே நடந்து கொண்டன.

குறிப்பாக கருப்பராயனுக்கு நேர்ந்து விட்ட சிகி கிடாய் வளர்ந்த கூர்மையான கொம்புகளை ஆட்டியபடி ‘யாரு வந்தாலும் பார்த்துக்கிறேன் நீ நட…’ எனும் அதீத தைரியசாலியாய் மற்ற ஆடுகளுக்கு தலைவனாக முன் பக்கமாகச்சென்றது.

தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்ததாலும் அரசமரத்துக்காட்டிற்குள் போகாமல் மாயாற்றின் மறுகரையில் வளர்ந்து படர்ந்த அரமரத்துக்கடியில் மதியம் சாப்பிடக்கொண்டு சென்ற தூக்குப்போசியிலிருந்த கம்மங்கழியின் கூழைக்கையை விட்டுக்கரைத்துக்குடித்தவள், ஆடுகளும் களைப்பில் படுத்துக்கொள்ள, தானும் மேலாடையை அவிழ்த்து தரையில் விரித்து அதன் மீது படுத்துக்கொண்டாள். சிகி ஆட்டுக்கிடாய் மட்டும் ஒரு காவல்காரனைப்போல் படுக்காமல் சுற்றிக்கொண்டே இருந்தது.

ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த லில்லியின் காதுகளுக்கு காய்ந்து உதிர்ந்த அரசமரத்து இளைகளின் மீது மிருகமும் அல்லாமல், சாதாரண மனிதனும் அல்லாமல் இதுவரை கேட்டிராத நடை சத்தம் கேட்டதில் பயம் தோன்றியதால் திடுக்கிட்டு கண் விழித்தவள், தன் முன் ஒரு பெரிய கரடியைப்போன்ற கரிய உருவம் நிற்பதைக்கண்டு ‘வீல்’ என கத்துவதற்குள் அந்த உருவம் அவளை தனது கைகளை நீட்டி அள்ளிச்சென்றது.

இச்சம்பவத்தைப்பார்த்துக்கொண்டிருந்த சிகி அந்த உருவத்தைத்தொடர்ந்து வேகமாகச்சென்றது.

அதிர்ச்சியால் ஏற்பட்ட மயக்கத்தில் இருந்த லில்லி கண் விழித்த போது ஒரு அரசமரத்தில் இளை, தளைகளால் கட்டப்பட்டிருந்த ஒரு தொட்டிலில் குழந்தையைப்போல் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். அந்த கரிய உருவம் அத்தொட்டிலை ஒரு தாயைப்போல் பாசத்துடன் ஆட்டிக்கொண்டிருந்தது. பயத்தில் “ஐயோ….. காப்பாத்துங்க….” எனக்கத்தினாள் லில்லி.

அவளது அபயக்குரல் கேட்டதும் கரிய மனிதனை எதிரியாகப்பாவித்த சிகி தனது பலத்தை முழுமையாகப்பயன்படுத்தி வேகமாக ஓடி வந்து தனது கூர்மையான கொம்புகளால் ஆக்ரோசமாக அந்த காட்டு மனிதனை குத்திக்குத்தி சிதைத்துக்கொண்டிருந்தது. எதிர்த்துப்போராடியவன் இயலாமல் கொம்புகள் காயமாக்கியதால் மயங்கி ரத்த வெள்ளத்தில் சரிந்தான்.

மெதுவாக எழுந்து அருகில் சென்று பார்த்த போது தான் தெரிந்தது தன்னைத்தூக்கி வந்தது ஆண் கரடி போல் உள்ள காட்டுவாசி மனிதன் என்று. அவன் முற்றிலுமாக மூச்சிழந்து கிடந்ததை உறதி செய்த பின், சிகியை தொட்டுத்தடவி நன்றி சொன்ன லில்லி, அதனுடன் மற்ற ஆடுகளையும்  ஓட்டிக்கொண்டு  வீடு திரும்பினாள்.

“நடந்த சம்பவங்களை லில்லி கூறியதைக்கேட்ட அவளது தாய் ராணி தேம்பி, தேம்பி அழுதாள்.”அவன் ஒயரமா கரடி மாதிரி மொகமெல்லாம் முடியோட இருந்தானா….? அவன் கருப்பானவனில்ல. உன்னமாதர செகப்பானவந்தான். சாம்பல ஒடம்புல பூசீட்டு கருப்பா இருந்தா மிருகங்கள் கிட்ட வராதுன்னு அப்படி வேசம் போட்டு நடிக்கிறான். அவன் வாய் பேசாத ஊமை. ஆனாலும் பாவி… சிகி அந்தப்பாவியக்கொன்னு போடுச்சா…? நெசமா கொன்னே போடுச்சா….?” எனக்கேட்டவள் சிகியின் காலில் விழுந்தாள். சிகியும் தனது வலது காலைத்தூக்கி மண்டியிட்ட ராணியின் தலையில் வைத்து ஆசீர்வதித்தது.

“நானும் உன்ற வயசுல மாயாத்துப்பக்கம் ஆடுமேய்க்கப்போவேன். ஒரு நாள் அசதில அரசமரத்தடிய படுத்து தூங்கினப்ப என்னைய அவந்தான் தூக்கிட்டு போயி அரசமரக்காட்டுக்குள்ள சீரழிச்சுப்போட்டான். உசுரு மட்டும்தான் ஒடம்புல மிச்சம்னு தப்பிச்சோம் பொளைச்சோம்னு ஊடு வந்து சேர்ந்தேன். நடந்தத சொன்னா கண்ணாலமே நடக்காதுன்னு சொல்லாம விட்டுட்டேன். ஆனா என்னோட வயிறு ஊட்ல இருக்கறவங்களுக்கு காட்டிக்கொடுத்திருச்சு. எத்தனையோ முயற்ச்சி பண்ணியும் கருவ அழிக்க முடியாம ஊரே தெரியறமாதிரி ஆனதுக்கப்புறம் எல்லாரும் அந்த அரக்கனைத்தேடிப்போனாங்க. எங்கப்பங்காரன் கொடுவாளுங்கையுமா போயும் கெடைக்கல. மாயாறு மாதர அவனும் மாயமாயிட்டான். அதுக்கப்பறம் என்ற மாமங்காரன் என்னை ரெண்டாந்தாரமா கட்டி வீட்ல வெச்சுட்டாரே தவுத்து எங்கூட புருசனாவே வாழல….” கதறியழுதாள்.

“அப்ப வகுத்துல வளர்ந்த அந்தக்குழந்தைதான் நானா….?” லில்லி அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“ஆமா…” என தாய் ராணி சொன்னதும் லில்லி மயங்கி கீழே படுத்துக்கொண்டாள்.

மயக்கம் தெளிந்து எழுந்த லில்லி பித்து பிடித்தவள் போல் அரசமரக்காட்டை நோக்கி ஓடினாள். அங்கே சென்றவள் “அப்பா… அப்பா….” எனக்கத்தினாள். இறந்து போன சடலத்தின் காதுகள் கேட்க மறுத்தன. ஆனால் அங்கு நின்றிருந்த ஒரு மூதாட்டியின் காதுகளில் மட்டும் கேட்டு விட , அம்மூதாட்டி லில்லியை பார்த்தது லில்லிக்குத்தெரியவில்லை.

அப்போது நான்கு பேர் இறந்த மனிதனது சடலத்தை எருமைகள் பூட்டப்பட்ட மர வண்டியில் ஏற்றிச்சென்றனர். அப்போது லில்லியின் தோள் மீது ஒரு பெண்ணின் கை பட திரும்பிப்பார்த்தவளை பாசமாகப்பார்த்த அந்த வயதான மூதாட்டி “எம் பேத்தி…” என உச்சியில் முத்த மிட்டு விட்டு தன்னுடன் சற்று தூரம் லில்லியை கையைப்பிடித்து அழைத்துச்சென்றவள், அவளுக்காகக்காத்திருந்த ஒரு குதிரை வண்டியில் ஏறியதும், லில்லியையும் ஏறச்சொன்னாள்‌. 

லில்லி தயக்கமின்றி தைரியமாக ஏறிக்கொண்டாள். வீரர்களைப்போன்றவர்கள் நான்கு குதிரைகளில் முன்னும், பின்னும் வருவதைப்பார்த்தபோது தான் புரிந்தது. இறந்த மனிதர் அரச பரம்பரையைச்சேர்ந்தவர் என்பதும், தானும் அரச வாரிசு என்பதும்.

ஆற்றங்கரையோரம் விறகுகள் அடுக்கப்பட்டு தீ மூட்டத்தயாராக இருந்தவர்கள் லில்லியை அழைத்துச்சென்று அவளது கையில் தீ பந்தத்தைக்கொடுத்து தீ மூட்ட வைத்த போது துக்கம் தாங்காமல் கதறி அழுதவளை மூதாட்டி தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்.

“என்னோட வயித்துல பொறந்த பையன் மாறவர்மன் உயிரோட இருந்தா தன்னோட பையன் கார வர்மன் அரசனாக முடியாதுன்னு திட்டம் போட்ட மன்னரான எனது கணவரோட இரண்டாவது மனைவி மாதுரி என்னோட ஊமை பையனை கொன்னா பாவம் வந்து சேந்துரும்னு பயந்துட்டு மாயாத்துப்பக்கம் இருக்கிற மிருகங்கள் வாழற அரசமரக்காட்டுக்குள்ள கொண்டு போய் விடச்சொல்லிட்டா. அவன் காணாமப்போயிட்டதா என்கிட்ட பொய் சொல்லிட்டா. நானும் தெய்வத்த தவிர யாரையும் நம்பல. அப்பவும் பாவம் புடிச்சு சூளை நோய் வந்து மாதுரியும் அவ மகனும் செத்துப்போனாங்க. இப்ப நாடாள வாரிசு இல்லாம வேதனைப்பட்டுட்டு இருந்தேன். நேத்தைக்கு திடீர்னு என்னோட உடம்புல பதட்டம் வந்துருச்சு. ராத்திரி தூங்க முடியல. கோவிலுக்கு போனப்ப மாயாத்துப்பக்கம் அரசமரக்காட்டுக்குள்ளே உன்ற வாரிசு உசுரில்லாம கெடக்குதுன்னு பூசாரி சொன்னத வெச்சு ஆட்களைக்கூட்டிட்டு இங்க வந்தேன். அப்பத்தான் நீ வந்து அப்பான்னு கத்தினப்ப எனக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சுப்போச்சு. நான் அப்பவே புரிஞ்சுட்டேன் நீ தான் என் பையனோட வாரிசுன்னும், இந்த நாட்டோட அடுத்த வாரிசுன்னும்….” சொல்லி முடிக்கையில் லில்லியின் வீட்டின் முன் குதிரை வண்டி நின்றது.

அந்த சிறிய ஊரிலிருந்த குடிசை வீட்டில் வசிப்பவர்கள் வெளியே வந்து வேடிக்கை பார்த்தனர். ராணி என்ற பெயர் கொண்ட ஏழை வீட்டுப்பெண்ணான லில்லியின் தாய் ராணியை அவளது குடிசை வீட்டிற்குள் சென்று சந்தித்தாள் நிஜ ராணியான மங்கதேசத்து அரசி மாதவி.

“இந்தப்பெண் லில்லி அரச குடும்பப்பெண்ணுக்குரிய அங்கலட்சணம் கொண்டிருப்பதால் எனக்குப்பின் வாரிசு இல்லாத நம் நாட்டிற்கு வாரிசாக்க எனக்கு நீங்க இவளைத்தத்து கொடுக்க வேண்டும்” என்று மூதாட்டியும் மகாராணியுமான மாதவி கேட்டதும் லில்லியின் பெற்றோர் உண்மையான காரணத்தைப்புரிந்து கொண்டு சம்மதித்தனர். ஊர் மக்களுக்கு உண்மையான காரணம் புரியாவிட்டாலும் அளவற்ற மகிழ்ச்சியடைந்து ‘நம்ம ஊர் பொண்ணு அரசியாகப்போகிறாள்’ எனும் மகிழ்ச்சியில் சம்மதம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *