அம்மாவும் நானும்!




கையில் ஏற்பட்ட தீ காயத்திற்கு அம்மாவை மருந்து போட விடாமல் பிடிவாதமாகத் தடுத்தேன். அம்மா மாதவிக்கு பத்து வயது பாலகனான எனது கையில் உள்ள தீக்காயத்தில் ரத்தம் கசிவது கண்டு கவலை மேலோங்க கண்களில் கண்ணீர் பொங்கியது.
“நாம்படிச்சுப்படிச்சு சொன்னனே நீ கேட்டியாடா மயா….?” அம்மா மயன் என்று கூப்பிடுவதை விட மயா என்று தான் என்னை கூப்பிடுவார்கள்.

“தீப்பந்து புடிச்சு சூந்து வெளையாடறது வலுசப்பசங்களோட வேலை. அத எப்படி சுத்தறதுன்னு தெரிஞ்சுக்கறதுக்கே உங்கொப்பனுக்கு பத்து வருசமாச்சுன்னு என்ற கிட்ட சொன்னவரு, சூது வாது தெரியாத கொழந்தப்பையன் உன்ற கிட்ட சூந்தக்குடுத்து சுத்தச்சொல்லிருக்காருன்னா அவருக்கு மூளை மழுங்கிப்போச்சுன்னு தான் அர்த்தம் பாத்துக்க” சொன்னவள் அப்பாவை கோபப்பார்வையால் பார்த்தாள்.
“இப்ப என்னத்த நடந்து போச்சுன்னு இப்படி நாயாட்ட வல்லு வல்லுன்னு கத்தறே….? உழுந்து மொழங்கால்ல காயம் பண்ணாம சைக்கிள் ஓட்டிப்பழக முடியாது, மாட்டுக்குட்ட ஒத வாங்காம பால் கறந்து பழக முடியாது, தீக்காயம் படாம சூந்து சுத்திப்பழக முடியாது. இத பாரு எனக்கும் மொதமொதலா சூந்து சுத்துன போது ஆன காயம். சும்மா தொனதொனக்காம பையங்காயத்துக்கு மருந்த தடவப்பாரு” பேசிய அப்பா மதன், அம்மாவின் பதில் பேச்சு மேலும் கோபமாக இருக்குமென யோசித்தபடி வீட்டை விட்டு வெளியேறினார்.
“சாமி ஒனக்கு நீ கேட்ட பஞ்சு முட்டாயி, பறவ டிசைனு போட்ட பிஸ்கோத்து, தெராச்ச வெச்ச தேங்காப்பண்ணு இந்த வாரம் சந்தைக்குப்போனா வாங்கியாரன். என்ற சாமி இந்த மருந்தக்கொஞ்சம் போட்டுக்கோ. மருந்து போடாம தண்ணி பட்டுச்சுன்னா சீப்புடிச்சு எலும்பு வெரைக்கும் சதையத்திண்ணு போடும். வைத்தியரய்யா சொன்னபடி போட்டுக்க சாமி. கொஞ்சமா எரிச்சலா இருக்கும். கொஞ்ச நேரம் தங்கம் கண்ண மூடிக்குமாமா. தங்கத்துக்கு மரிக்கொழுந்து அத்தையூட்டுக்கு டவுனுக்கு போயி சின்னச்சைக்கிள் வாங்கித்தாரேன். அந்த ராமு ஆட்ட வித்து வாங்கித்தாரேன்” அம்மா
சொன்னது எனக்கு பிடித்திருந்தது. ராமுவை விற்பது என்ற சொல்லைத்தவிர.
“ம்…கூம்…. ராமு ஆட்ட மட்டும் விக்கப்படாது. அது என்ற பிரண்டு. அது மேல உட்காந்தா என்னக்கீழ தள்ளாம காட்டச்சுத்திக்காட்டுது. அதோட பொண்டாட்டி ரதியக்காணமுன்னு கவலைல கண்ணீர் உட்டுட்டு புள்ளு திங்காம கெடக்குது. நீங்க நேத்து கசாய்கார செல்லப்பனுக்கு புடிச்சுக்குடுத்துட்டு பணம் வாங்கினத பாத்தேன்” என கூறி அழ ஆரம்பித்து விட்டேன்.
“என்ன சாமி பண்ணறது? ஆட்ட நம்பித்தான் நம்ம பொழப்பு நடக்குது. சேரி ராமுக்கு வேற பொண்டாட்டி ஆட்ட வாங்கீருவோம். நீ இப்ப மருந்து போட்டுக்க” என சொன்னது பிடத்திருந்தாலும் எதிர் கேள்வி கேட்கத்தோன்றியதால் கேட்டேன்.
“அப்படின்னா உன்ன வித்துட்டு அப்பாவுக்கும் வேற பொண்டாட்டி வாங்கிக்கலாமா?” வெள்ளந்தியாகக்கேட்டேன்.
“நல்லாச்சொன்ன போ…பண்ணிக்கெட்டானாங்கோமாளி, அதப்பார்த்துக்கெட்டானாம் ஏமாளின்னு நாங்கருப்பா இருக்கறேன்னு எம்பட மேல வெறுப்பா இருக்கற உன்ற அப்பங்காரன் நீ சொல்லறதக்கேட்டான்னா உன்னை வாரி அணைச்சு முத்தங்கொடுத்துப்போடுவான். எசகு பெசகா எப்பவும் இப்பப்பேசுனத பேசிப்போடாத. நா வேணும்னா மருந்தே போடாம போயடறேன்” சொல்லி விட்டு காயத்துக்கு மருந்து போடாமல் அம்மா போன போது தான் நாம் இப்படி பேசியிருக்கக்கூடாது என புரிந்தது.
அடுத்தடுத்த வருடங்களில் தீபத்திருவிழாவை முன்னிட்டு உள்ளூரில் நடக்கும் சூந்தாட்டத்தில் பங்கேற்காமல் தீக்காய பயத்தில் சற்று தூரமாக நின்றே மற்றவர்கள் சூந்து ஆடுவதைப்பார்த்து ரசித்தேன். அப்பழக்கமே ஒவ்வொரு வருடமும் தொடர்ந்தது.
‘சம வயது பெண்கள் சூந்தாடும் இளைஞர்களுடன் பேசிப்பழகுவதும், என்னை விட்டு விலகியே செல்வதும் ஏன்?’ என நினைத்து புரியாதவனாய் அம்மாவிடம் கேட்டேன்.
“உன்ற அப்பங்காரன சூந்து வெளையாட்ல தான் நானும் மொதலாப்பார்த்தேன். என்ற மாமனூட்டுக்கு வெளக்கு வெக்கிற நோம்பிக்கு போன போது அவரோட தைரியம் புடிச்சுப்போயி அடிக்கடிக்கு ஏதாச்சுங்காரணஞ்சொல்லிப்போயி பழகி கண்ணாலமும் கட்டீட்டேன். பொம்பளப்புள்ளைங்களுக்கு ஜல்லிக்கட்ல மாடு புடிக்கிற பையனையும், கல்யாணக்கல்லு தூக்கற பையனையும், நம்ம ஊர் பக்கம் சூந்த பூந்து தைரியமா ஆடற பையனையுந்தா புடிக்குது….” எனக்கூறியபோது சூந்தாட்டத்தில் வருடாவருடம் பங்கேற்றிருக்க வேண்டும் எனத்தோன்றியது.
“மாமம்புள்ள ரதி சூந்து மத்த பசங்க ஆடறத வேடிக்க பார்த்த என்னப்பாத்து ‘டேய் பயந்தாங்கொள்ளி, டேய் பொம்பளச்செட்டி’ ன்னு சொல்லி கிண்டலா கூப்பிடறா. ஆடக்கூடாத வயசுல ஆடுனதால, இப்ப ஆடற வயசுல ஆட பயமா இருக்குது. எல்லாத்துக்கும் அப்பா தான் காரணம்” சொல்லி விட்டு தேம்பி தேம்பி அழுதேன்.
“அவ கெடக்கறா… ரதின்னு பேர் வெச்சுட்டா ரதி ஆயிறுவாளா? சூதாடுனாத்தா தைரியமான ஆம்பளையா? எனக்கு இந்த ஆட்டம் புடிக்காதுன்னு தைரியமா அவகிட்ட சொல்லியிருக்கலாமில்ல….? உனக்கு நெசமாளுமே பக்கத்து ஊர்ல, ஒன்னு விட்ட சொந்தத்துல ஒரு ரதியப்பார்த்து வெச்சிருக்கிறேன். நாளைக்கு பொண்ணு பார்க்கப்போலாம். மொதல்ல கண்ணத்தொடைச்சிட்டு, சோறு வட்டல்ல போட்டு வெச்சிருக்கறேன் வந்து உண்ணு….” என ஆறுதல் சொன்னாள்.
சிறு வயதில் நான் சூந்து ஆடியதில் ஏற்பட்ட உடல் காயத்துக்கு அம்மா மருந்து போட்டதோடு, திண்பண்டங்கள் வாங்கித்தருவதாக எனது அழுகையை நிறுத்தியவள், வளர்ந்து பெரியவனானதும் மனக்காயத்துக்கு மருந்து போட ‘பெண் பார்த்து வைத்திருக்கிறேன்’ என கூறி அந்த சூழ்நிலையை வெல்ல முயன்றதாலும், மனக்கவலையைப்போக்கியதாலும் அப்பாவை விட அம்மாவை மிகவும் எனக்கு பிடித்துப்போனது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |