அமாவாசை நிலவுகள்
கதையாசிரியர்: ச.குமுதினி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 1,319
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குமுதினி சதாசிவமூர்த்தி எழுத்துலகில் ச.குமுதினி ச.ஆனந்தி என்னும் பெயர்களில் வெளிவருபவர். சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் 10- 02-1975இல் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் ஆண்டு மாணவி சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விஞ்ஞானத்தொடர் என்பவற்றில் ஈடுபாடுள்ளவர். ஈழநாதம், சஞ்சீவி, கலைமுகம், நாடி ஆகிய சஞ்சிகைகளில் எழுதியுள்ளார். பல பரிசில்கள் பெற்றவர். மனதைத் தொடும் மென்மை இவரது அணுகுமுறையாகும்.
வெகுநேரம் கழிந்திருந்தது. இன்னும் அவள் நிலையில் மாற்றம் எதுவும் இல்லை. நிமிர்ந்து உட்கார்ந்தபடி போர்வையுள் மறைந்திருக்கும் முழங்கால்களுள் தலையைப் புதைத்தபடி இன்னமும் அவள் விழி மூடியிருந்தாள். நீள்சதுரமாய் நீண்டிருந்த அந்தப் பெண்கள் ‘வார்டின்’ குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் தாதிகளின் சப்பாத்து ஒலியோ, உரையாடல்களோ கலைத்துவிடாத ஒரு மௌன உலகத்துள் அவள் புதைந்திருக்க வேண்டும்.
வேதனைச் சூழலினுள் தகிக்கும் என் நெஞ்சின் புகையாய் ஒரு நீண்ட பெருமூச்சு. எழுகிறது. சற்றுமுன் தாதி ஒருத்தி என் கைகளில் பொருத்திவிட்ட ‘சலைசன்’ இணைப்பு என் அசைவைக் கட்டுப்படுத்த மெல்ல அமைதியாகின்றேன். தன்னிச்சையால் அவள் பக்கம் திரும்பும் என் விழிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நிழல் படிந்த வெளிச்சமாய், புறச்சூழலை உணராதவளாய் அசைவற்று விழிமூடி அமர்ந்திருந்தாள். அவள் உள்ளத்தைப் பிரமன் முகத்தில் தீட்டியிருந்தானோ? எத்துணை அமைதியான நிர்மலமான முகம். பால்போன்ற பிஞ்சு முகத்தினைக் காலம் அவளில் இந்த இருபது வயதிலும் மீதம் விட்டிருக்கின்றது. சற்றே கலைந்திருந்த கேசங்களின் இருட்தன்மையில் வெளிச்சமாய்ச் சுடர்விடும் முகத்தில் லயித்துப் பார்வையைப் பதிக்கிறேன்.
உலகியல் பார்வையில் அவளின் இந்த அற்புதங்கள் எதுவும் எடுபடவில்லை என்பது எத்துணை பரிதாபத்திற்குரியது. என் நெஞ்சுள் ஏதோ கரைவது போலிருக்கிறது. என் கட்டிலின் எதிர்ப்பக்கச் சுவரில் தொங்குகின்ற யேசுநாதர் சிலுவை சுமக்கும் சித்திரத்தை நோக்குகின்றேன். கருணைக்குப் பதிலாய் நிணத்தையும் கண்ணீ ரையும் பரிசளிக்க மட்டும் தானா உலகம் பழகியிருக்கிறது. எவர் பாவம் அந்தச் சின்னப் பெண்ணில் பெரும் பழியாகியிருக்கிறது?
வாசனையுள்ள வாடிய மலர்போல் விழிமூடியிருந்த அவளை ‘ஸ்ட்ரெச்சரில் தள்ளி வந்து எனக்கு அடுத்தடுத்ததாயிருந்த இக்கட்டிலில் மாற்றும்போது காய்ச்சலில் முனகிக் கொண்டிருந்த எனக்கு அவள் பற்றிய எந்தச் சித்திரமும் மனதில் படியவில்லை. அழகான சின்னப்பெண் என்பதைத் தவிர.
இன்றுடன் எட்டு நாட்கள் ஆகின்றன. அவள் பற்றிய செய்திச் சிதறல்கள் கொஞ்சங் கொஞ்சமாய் வார்டில் உதிரத் தொடங்கி யிருந்தன. சுவாரஸ்யமான செய்தியொன்றின் கருவாகத் தான் படைக்கப்படுவதை அவளும் உணர்ந்திருக்க வேண்டும். எழுந்து நடமாட முடிந்த போதும் ஒரு கூட்டுப் புழுப்போல அவள் மீண்டும் மீண்டும் போர்வையுள் முடங்கிக் கொள்வது அவள் உணர்ந்தி ருந்ததை உறுதிப்படுத்திற்று.
இன்று எப்பிடியாவது அவளுடன் கதைக்க வேண்டும். தன்னைச் சூழ விழுந்திருக்கும் இருள் வளைய த்தினுள் இருந்து எழும்புகின்ற துணிவுமின்றி, ஓரோர் வேளைகளில் எழும்ப முயற்சிக்கும்போது காதில் தீக்கங்குகளாய் விழும் வார்த்தைப் பொறிகளினால் எரியுண்டு மீண்டும் துவண்டு சுருண்டு விடுகின்ற அவள் வேதனையை இந்த எட்டு நாட்களிலும் ஒவ்வொரு கண த்திலும் என்னால் உணர முடிகின்றது.
நான் கதைக்க முற்பட்டாலும் அவள் என்னுடன் மனம் விட்டுக் கதைக்கக் கூடுமோ என்பது சந்தேகமே.
”மனுசன் டிவோஸ் கேட்டவனாம் அதுதான் பெடிச்சி எதையோ அரைச்சுக் குடிச்சிட்டாளாம்.”
“உவ ஆளும் பாத்தா தோல் மினுமினுப்புத்தானே… அவனுக்கு அடங்காமல் என்ன கூத்தடிச்சாளோ?”
“தாய் தகப்பனும் அவளைச் சேர்க்க மாட்டம் எண்டு சொல்லிப் போட்டினம். ஆள் படு மோசம் போல….”
பக்கத்துக் கட்டில்களிலிருந்து நீள்கின்ற சுட்டுவிரல்கள் யாவும் அவளை வார்த்தைச் சிதையிலேற்றித் தங்கள் பத்தினித்தனத்தை நிரூபித்துக் கொள்வதை நான் தினமும் கேட்கிறேன். இதே வார்த்தைகள் அவள் காதிலும் வீழ்ந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
நான் இயல்பாய்க் கதைத்தாலும்கூட அவள் இந்த அனுபவங்கள் தந்த வடுக்களின் வேதனையால் என்னை நிராகரிக்கவும் கூடும். முப்பத்தைந்து வருட காலவாழ்வு எனக்குத் தந்த அனுபவங்களின் சமநிலையில் என் இரண்டு குழந்தைகளால் பூரணப்பட்ட என் தாய்மை உணர்வின் நிறைவில் அவள் நிராகரிப்பை என்னால் மன்னித்து விடமுடியும்.
காலியாகிவிட்ட ‘சலைன்’ இணைப்பினை அகற்றுவதற்கு தாதி வரவேண்டும். விடிகாலைப் பரபரப்பிற்கும் மதிய அவசரத்திற்கும் இடையான அமைதியில் வார்ட் அமிழ்ந்திருந்தது. இதுதான் அவளோடு கதைக்கத் தகுந்த வேளையாய் இருக்கும்.
“சித்ரா….” மெதுவான ஆனால் கூர்மையான என் அழைப்பு அவளுக்கும் எனக்குமிடையேயிருந்த வெற்றுக் கட்டிலைத் தாண்டி அவளை அடைந்திருக்க வேண்டும். அவள் உடலில் சின்ன அதிர்வு தெரிந்தது. தலை நிமிர்ந்ததில் அவசரம் இருந்தது. அவள் பார்வைத் தேடலில் நான் அகப்பட்டபோது மெல்ல முறுவலித்தேன். தயக்கமாய் இதழ் விரித்தாள். தன் பெயரை நான் அறிந்திருந்தேன் என்பது அவள் முகத்தில் வியப்பாய்த் தெரிந்தது.
” சித்ரா எனக்கு ஒரு உதவி செய்யவேணும்”
மெதுவாய் போர்வை விலக்கி எழுந்து வந்தாள். அருகே வந்து என்ன? என்பதாக நின்றாள். ஒரு வெள்ளிப் பனித்துளிபோல.
“சலைன் முடிஞ்சுது. …..நேஸிட்ட ஒருக்காச் சொல்லி விடுவீங்களே…?”
“…” விழிகள் தயங்கின. தாதிகளின் அறையை நோக்கின. மீண்டும் என்னில் விழுந்து நிலைத்தன. சரி என்பதாய்த் தலை தயக்கமாய் அசைந்தது.
“சொல்லிப்போட்டு இதில ஒருக்கா வாங்கோ…” இயல்பாய்ச் சொன்னேன். அவள் விழிகளில் மீண்டும் சந்தேகம் தெரிந்தது. தன்னிடம் கதை பிடுங்கி மீண்டும் அதை நெருப்புப் பந்தாகத் தன்னிடமே வீசப்போகும் பெண்தானோ நானும் என அவள் நினைத்திருக்க வேண்டும்.
தாதி வந்து சலைன் இணைப்பகற்றிப் போனதும் அவள் வந்தாள். முன்னேயிருந்த வெற்றுக்கட்டிலில் அமரச் சொன்னேன். அமர்ந்தாள்.
“சாப்பிட்டீங்களா சித்ரா……?”
“…” இல்லை என்பதாய்த் தலை அசைந்தது.
எனது கூடையுள் இருந்த பிஸ்கட் பெட்டியை எடுத்து நீட்டினேன்.
“எனக்குப் பசிக்கேல்லை…”
“இதைச் சாப்பிடுங்கோ …நானும் சாப்பிடப்போறன் .” சிநேக பூர்வமான உரிமையுடன் சொன்னேன்.
பிளாஸ்கில் இருந்து தேநீரை ஊற்றி அவள் கைகளில் ஒரு கப்பை வைத்தேன். மௌனமான நன்றியுடன் பெற்றுக் கொண்டாள். இருவரும் குடித்து முடித்ததும் என்னுடையதையும் வாங்கித் தானே கப்புகளைக் கழுவிக் கூடையினுள் கவிழ்த்தாள். ஒவ்வொரு செயலிலும் நளினமான இலாவகம் இருப்பதை உணர்ந்தேன்.அவளுள்ளே அவளின் இருபாதிகள் எதிரெதிராய் நின்று எதற்காயோ வாதிடுவது வெளிப்படையாய்த் தெரிந்தது.
கைகளைத் துடைத்தபடி கட்டிலில் அமர்ந்தாள். என்னிடம் தன்னை வெளிப்படுத்தலாமா என்று அதுவரை நிகழ்ந்த போராட்ட த்தில் தீர்மானம் பிறந்திருப்பதாய்த் தோன்றிற்று. எங்களில் குத்திட்டு நின்ற நான்கோ ஐந்தோ சோடிக்கண்களின் சந்திப்பைத் தவிர்த்து அவளில் விழி பதித்தேன். அவள் அரைச்சுவரின் மேலாய்த் தொலைவில் தெரிந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். வெளியே வானம் கருமேகங்களைச் சேர்த்து இருண்டு கொண்டிருந்தது கொஞ்சம் கொஞ்சமாய்.
”எத்தினை நாளா ஆராவது ஒருத்தராவது என்னையும் ஒரு சீவன் எண்ட இரக்கத்தோடயாவது பாப்பினமோ எண்டு எனக்குள்ள அழுதுகொண்டிருக்கின்றன் சாகவும் விடாமல் தினமும் செத்துக் கொண்டிருக்கிற இத்த வாழ்கை மாதிரி ஒரு தண்டனை ஆருக்கும் வரக்கூடாது அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள். கறுப்பு மையிட்டது. போன்று அடர்த்தியாயிருந்த இமைகளைத் தாண்டிக் கண்ணீர் விழுந்தது. வெளியே மழை பாரமான வெள்ளிக் கம்பிகளால் நிலத்தைத் துளைக்க ஆரம்பித்திருந்தது.
***
சித்ரா க.பொ.த. சாதாரண தரப் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. வீட்டின் இல்லாமையில் உயர்தரக் கல்வியை நினைத்தே பார்க்க வேண்டாம் என்று தாய் சொன்னபோதிலும் தகப்பன் கந்தசாமியரின் மனதில் தன் மூன்று மகள்களையும் எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போதும் மாறாமலிருந்தது. வாழ்வு வறுமையின் வட்டத்துள் சுழன்று கொண்டிருந்தது.
கந்தசாமியரின் நாட்கூலி போதுமானதாக இல்லாத வேளைகளில் அடுத்த வீடுகளில் வாங்கும் கடன்தான் அடுப்பெரிக்க உதவுகின்ற நிலைமை மாறுவதாய் இருக்கவில்லை. இரண்டு வீடுகள் தள்ளியிருந்த அன்னம்மாள் அடிக்கடி ‘அஞ்சைப் பத்தைக்’ கொடுப்பதால் அவளும் அந்தக் குடும்பத்தின் தினசரியில் முக்கிய பாத்திரமாக இருந்துவந்தாள்.
அன்னம்மாளுக்கு ஓட்டிக்கொள்ள ஒரு நிழல் தேவைப் பட்டதும் அவள் அந்தக் குடும்பத்திற்கு உதவிசெய்யக் காரணமாயிற்று. அவளின் இரண்டு மகன்களில் மூத்தவன் தான் விரும்பியபடி வாழ்க்கையை அமைத்துக்கொண்டு தெற்கே சென்றுவிட இளையவனோ சின்ன வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி விட்டான். எங்கோ வெளிநாட்டில் அவன் வசிப்பதாக ஊரிற் பேசிக் கொண்டாலும் அன்னம்மா உட்பட எவருக்கும் அவனது முகவரி தெரிந்திருக்கவில்லை. விதவையான தனது முதிர்வயதிலாவது அந்த இளைய மகன் தன்னுடன் சேர்ந்து விடவேண்டும் என அன்னம்மாள் ஊர்த் தெய்வங்களில் நேர்த்திபோட்டிருந்தாள்.
ஓரளவு வசதி படைத்திருந்த அவளுக்குச் சித்திராவின் குடும்பத்திற்கு உதவி செய்வது தன்னை எவ்விதத்திலும் பாதிக்காது என்பது தெரிந்திருந்தது. அவ் உதவிக்கு கைமாறாக அந்தக் குடும்பம் தனக்கு வழங்குகின்ற ஆதரவு ஒண்டிக்கட்டையான தனக்கு எப்போதும் அவசியம் என அவள் உணர்ந்திருந்தாள்.
ஆனால் அன்னம்மாளோ ஊரோ எதிர்பாராத விதமாக அவனது சின்னமகன் நாதன் ஒருநாள் மதியத்தில் தாய்வீடு வந்து சேர்ந்திருந்தான். வெளிநாட்டுப் பணமும் நுனிநாக்கு ஆங்கிலத் தமிழுமாய் வந்த அவன், இதுநாள்வரை எந்த இடத்தில் என்ன செய்துகொண்டிருந்தான் என்பது பற்றி ஊரின் வாய் பலவிதமாய்ப் பேசிக் கொண்டாலும் அன்னம்மாள் எவற்றையும் தன் காதிற் போட்டுக்கொள்ளவில்லை. அவளுக்குப் புதிதாய் ஒரு வாழ்வு பிறந்ததாய்த் தோன்றிற்று. மீண்டும் உலகம் சுற்றப் புறப்பட்டு விடக்கூடிய தன் மகனை ஊரில் நிறுத்தி சுட்ட மண்ணாயிருந்த அவனை மீண்டும் பச்சை மண்ணாக என்ன செய்யலாம் என்பதில் அவள் சிந்தை ஆழ்ந்திருந்தது.
சித்திராவின் குடும்பத்தில் அன்னம்மாவின் அபயக்கரத்தின் நிழல் படிப்படியாகப் பெரிதாகிக்கொண்டு வந்தது. சித்ரா அருமையான பிள்ளையாயும் கந்தசாமி ‘அண்ணனாயும் அன்னம்மாவின் சொற்பிரயோகிங்களில் மாறியபோது ஊர் மத்தியில் இவர்களின் ‘நட்பு’ புதிய பரிமாணத்தைப் பெற்றுக்கொண்டது. அன்னம்மாவின் ‘நட்பு’ நெருங்கநெருங்க நாதனிலும் படிப்படியாக மாற்றங்கள் தோன்றின. காடாய் மண்டியிருந்த தாடியும் அலட்சியமான உடைகளும் அகன்று கண்களிலும் புதிய ஒளி மெருகிடத் தொடங்கியது. அந்த ஒளி சித்ராவைக் காணும் வேலைகளில் இன்னும் அதிகரிப்பதாய்த் தோன்றிற்று.
தன் நாடோடி மகனைக் கைகளுக்குள் வைத்திருக்க உதவுமாறு அன்னம்மாளின் நேர்த்திகள் மேலும் பெருகின. காலம் கோடையாக, மாரியாக ஒரு முறை உருண்டு விட்டிருந்தது.
ஒரு சாயங்காலப் பொழுதில் அன்னம்மாள் தன் எண்ணத்தைக் சித்ராவின் தாயிடம் மெதுவாகச் சொல்லி முடித்தாள்.
“அவள் படிக்கிறாளெல்லே அக்கா…” குரலில் தயக்கம் தெரிந்தது. படிப்பு என்ன படிப்பு .பெட்டைப்பிள்ளை படிச்சு எப்ப உலகம் விடிஞ்சிருக்கு…”
“வயது வித்தியாசம் கூடவா இருக்குமெண்டு யோசிக்கிறன்….”
“நாதனுக்கு என்ன முப்பத்தொரு வயது தானே அவளுக்கும் பதினெட்டு ஆகுது………. எனக்கும் என்ர மனிசனுக்கும் இருபது வயது வித்தியாசம் நாங்கள் என்ன வாழேல்லையே”
“…”
“எதுக்கும் யோசிச்சுச் சொல்லு… ஆனா ஒண்டுமட்டும் சொல்லுறன் ….சித்திராவுக்கு நாதனை மாதிரி ஒரு பெடியன் கிடைக்கமாட்டான். கந்தசாமியருக்கு விடயம் தெரிந்தபோது பெரிதாய்க் கத்தினார் ….”ஓ! உவன மாதிரி ஒரு கூத்தாடி வேற கிடைப்பனே ….அப்பவே நான் நினைச்சனான் ……அன்னம்மாள் ஏன் விழுந்து விழுந்து அண்ணன் முறை கொண்டாடுறாள் என்று…”
“ஆனாலுமப்பா…. பெடியன் பரவாயில்லைத் தானே… நாங்களும் மூண்டையும் வைச்சுக் கொண்டிருந்துட்டு …மூண்டையும் என்ன குழியில தள்ளி மண் போறதே…?
“விசர்க்கதை கதையாதையடி …அவள் ஒரு ராச குமாரியடி…அவனையும் அவளையும் ஒருதரம் யோசிச்சுப்பார்….” கந்தசாமியர் தொடர்ந்தும் கத்தினார் ஆனாலும் வாதங்கள் விவாதங்கள் எல்லாவற்றையும் அன்னம்மாளின் தினசரி போதனைகள் மாற்றிவிட நாதனுக்கும் சித்திராவுக்கும் ஒரு நல்ல நாளில் திருமணப் பதிவு நிறைவேறியது.
சித்திராவைப் பொறுத்தவரை கண்ணீரோடு கரைந்து போன கல்விக்கனவுகள் கரையொதுங்க முன்னரே வாழ்க்கை நதியுள் அவளது படகு மீண்டும் தள்ளப்பட்டுவிட்டது. அவள் புதிய வாழ்வுக்குத் தன்னை இசைவாக்கிக் கொண்டுவிட்டாள்.
நாதன் நல்லதொரு காதற்கணவனாக நடந்து கொண்டான். தன் வாழ்வைச் சரியானபடி நடத்தத் தெய்வம் அவளை அனுப்பிய தாய்ச் சொன்னான். முறையான வழிகாட்டல் இல்லாது தன் இளமைக்காலம் எவ்வாறெல்லாம் சீரழிந்து போனது என அவளிடம் சொல்லி வேதனைப்படுவான்.
கந்தசாமியருக்கும் மனைவிக்கும் மகள் சந்தோஷமாய் இருப்பதில் திருப்தி அவள் வாழ்க்கை சீராக அமையும் என்பதில் நம்பிக்கை பிறந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாகக் காற்றின் சுழலாக அன்னம்மாவின் எண்ணங்கள் திசைமாறத் தொடங்கின. ஊரின் வாய்கள் அவள் மாற்றத்தை ஊதி உருப்பெருக்கச் செய்தன. இனி மகன் கைநழுவிப் போகமாட்டான் என்ற நம்பிக்கையின் மேல் இன்னும் நல்ல இடத்தில் கைநிறையச் சீதனத்துடன் மகனுக்குக் கல்யாணம் பேசியிருக்கலாமோ? என்ற எண்ணம் விதையாய்க் முளைவிட்டுக் கிளைபரப்பி வளர்ந்தது. ‘தான். தோற்றுவிட்டோமா? என்ற சீற்றத்தை வளர்த்தது. சீற்றம் நச்சுவார்த்தைகளாய்ச் சித்திராவில் கவிழ்ந்தது.
“இந்தத் தோல்மினுக்கை வச்சு என்னையே விழவெச் சிட்டாளே……!எவ்வளவு பெரிய இடத்தில் கட்டி எப்பிடிச் சுகமாய் இருக்கவேண்டிய என்ரபெடியன் என்ர பிழையால ஒரு பிச்சைக்காரியோ இருந்து அல்லாடிக் கொண்டிருக்கிறான்…..” .” அன்னம்மாளின் கண்கள் ஆறாய்ப் பெருகும். தலைவிரிந்து முதுகில் புரள நெற்றிவியர்வை பெருக அவள் அழுவாள்.
ஆரம்பத்தில் ஒரு சின்ன ஏக்கமாய் தான் அடைந்திருக்க வேண்டிய மேன்மையை இழந்து விட்டோமோ என்று தோன்றிய உணர்வுப்பொறி ஊரின் வாயால் ஊதப்பட்டு ஊதப்பட்டு தன்னிரக்கத் தணலாகி அனலெறித்து அவளைப் பொசுக்கத் தொடங்கிற்று.
சித்ரா செய்வது எதுவெனத் தெரியாமல் சமையலறைக்குள் முடங்கிக் கொள்வாள். சமையலறைப் புகையுள் அவள் துன்பமும் கண்ணீரும் பிறரறியாமல் மறைந்தன. நாதன் தாயின் அழுகையைப் பொறுக்காமல் சமாதானம் செய்வான். தேற்றத் தேற்ற அவள் அழுகை விரிந்து சோகத்தின் சாரலாய்ப் படரும், நாதனும் சேர்ந்து அழுவான்
படிப்படியாய் அவள் இயல்பு இன்னும் மாற்றமடைந்து. காலையில் இருந்து மாலை வரை தொடரும்.
“என்ரை ராசா…நீ உவளைக் கட்டியிராட்டி ஒரு வசதியான பொம்பிளையைக்கட்டி இந்நேரம் கொண்ணனோட கொழும்பிலேயே குடியேறியிருக்கலாம்.” நாதன் தானும் அழுவான் “அழாதையம்மா…. அழாதை” தாயின் கைகளைப் பிடித்துக் கொள்ளுவான் …அல்லது அறையை பூட்டிக்கொண்டு மௌனமாகி விடுவான்….
சித்திராவுக்குத் தன் துன்பங்களைச் சொல்வதற்கு அங்கு யாரும் இருக்கவில்லை. சமையலறையின் இருள்படிந்த புகையுள் அவள் சந்தோஷங்களும் கரைந்து ஒழிந்தன போன்ற உணர்வில் தனிமையிலே தேற்றயாருமில்லாத நிராதரவான தன்மையில் அவள் வாழ்வின் இனிய பகுதிகள் எல்லாம் அழிந்துபோன வெறுமை அவளைப் பற்றியிருந்தது. நாதனின் மனத்தராசு தாயின் பக்கம் சாய்ந்து வருவதும், அவன் அவளைத் தவிர்த்து நடப்பதும் அவளுக்கு மிகத் தெளிவாய்ப் புரிந்தன.
அன்னம்மாள் சில நாட்கள் எதுவுமே பேசாமலிருப்பாள் சாப்பாடு தண்ணீர் எவையுமே வேண்டியிராது அவளது மனக்குகை யினுள் தான் சமூகத்தின் இன்னும் மதிப்பு வாய்ந்த இடத்துக்குச் சென்றிருக்கக் கூடிய வாய்ப்பை இழந்துவிட்டோம் என்ற எண்ணம் எத்தனை விதமாய் வேற்றுருக்கொள்ளுமோ என்னவோ! மௌனம் கலையும் நாட்களில் வீட்டில் இடிஇடிக்கும் தீயாக வார்த்தைகள் சித்திராவில் கொட்டும், பிறகு தன்னிரக்கம் பொங்க எழும் அவளது அழுகையில் வீடு நரகமாகிவிடும்.
ஒருநாள் மதியப்பொழுதில் சில நாட்களாக மாறிவிட்ட வழமைக்கு மாறாக நாதன் மதியஉணவின் போது சித்ராவுக்காய்க் காத்திருந்தது தெரிந்தது. சித்ரா பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தபோது நாதனின் உலர்ந்த குரல் நலிந்து ஒலித்தது. “சித்ரா நான் உன்னோட ஒரு விசயம் கதைக்க வேணும் “சித்திரா உனக்குத் தெரியுந்தானே அம்மாவுக்கு இப்ப உன்னைப் பிடிக்கிறேல்லை எண்டு…”
“…” சித்ரா தூணில் சாய்ந்து கொண்டான். கால்கள் தளர்ந்து சோர்வது போன்றிருந்தன.
“அவவுக்கு உன்னைக் காணத்தான் இன்னும் இன்னும் ஆத்திரமாய் வருகுது. உப்பிடியே கத்திக்கொண்டு சாப்பிடாமக் கொள்ளாமல் இருந்தா இண்டைக்கோ நாளைக்கோ அவ்வின்ர கதை கட்டாயம் முடிஞ்சிடும்…’ “என்ர சின்ன வயதில முழுக்காலமும் அவவைக் கஷ்டப்படுத்திப் போட்டன். இனியாவது அவவைச் சந்தோஷமாய் வைச்சிருப்பம் எண்டு நினைக்கிறன். அதுக்கு நீதான் உதவிசெய்ய வேணும் அவனின் குரல் வெறுமையாய் ஒலித்தது “என்ன உதவி சித்ராவின் குரல் அவளுள்ளேயே முடங்கிக் கொண்டது “நீ இந்த வீட்ட விட்டுட்டுப் போகவேணும் …அம்மா உன்னைச் சந்திக்காமலிருக் கிறதுக்காக நீ இந்த வீட்டை விட்டுட்டுப் போகவேணும்…”
“…” சித்ராவின் அடிநெஞ்சிலிருந்து கேவல் வெடித்தது. “இண்டைக்குக் காலமை உங்கட வீட்டை போய்ச் சொன்னனான், சித்திராவை இனி உங்களிட்ட விடப்போறன் எண்டு …ஆனா உன்ர அப்பா உன்னை அங்க காலடி வைக்கவேண்டாம் எண்டு சத்தம் போட்டவர். உன்ர ரெண்டு தங்கச்சியின்ரையும் வாழ்க்கையைப் பாழாக்கிப்போட வேண்டாமாம் எண்டும் கத்தினவர்..ஆனா நீ இனி இஞ்ச இருக்கவேண்டாம் …நீ போய்க்கேட்டா முதல்ல கத்தி னாலும் பிறகு உன்னை அவை ஏற்றுக்கொள்ளுவினம்…. எனக் காக நீ இந்தச் உதவியைச் செய்வாயெண்டு எனக்கு நம்பிக்கை யிருக்கு…
சொல்லிக்கொண்டே அவன் எந்தப் பதிலையும் எதிர்பாராமல் எழுந்து சென்றுவிட்டான்.
சித்ரா நிற்க முடியாமல் நிலத்தில் சரிந்து அமர்ந்தாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை. நடந்தது கனவில்லை என்று நம்புவதற்கு இயலவில்லை. தெய்வங்கள் இத்தனை கொடூரமாகத் தன்னைத் தண்டிக்கும் என்று அவள் கற்பனை கூடப் பண்ணியதில்லை ‘இனி என்ன செய்வது?” அவளுள் பூதாகரமாய் எழுந்த கேள்வி அவளையே விழுங்கிவிட்டாற் போலிருக்கச் செயலற்றுக் கல்லாகியிருந்தாள். அவள் எங்கே போவது? ஆயிரம் அலைகளாய்த் தாக்கும் வினாக்களுக்கு விடை யாரிடமிருந்தும் தனக்குக் சாதகமாய்க் கிடைக்கப் போவதில்லை என அவளுக்குத் தெரிந்திருந்தது.
அன்றிவு நாதன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சித்ரா அவனருகே வந்தாள்.. “நாளைக்குக் காலமை போறன்…” ஆழமாய் எழுந்த அவளது குரலில் கண்ணீரின் கனம் தெரிந்தது. அவன் மெளனமாய்த் தலையசைத்தான்.
மறுநாள் விடிகாலையில், யாரோ ஒரு இளம்பெண் கோயில் வாசலில் நஞ்சருந்திய நிலையில் மயங்கிப்போயிருந்ததாயும் யாரோ ஊரவர்கள் வைத்தியசாலையில் அவளைச் சேர்த்திருப்பதாயும் ஊரிற் காட்டுத்தீயாய் செய்தி பரவிற்று.
எனக்குள் காலகாலமாய் வளர்ந்திருந்த மனிதம் பற்றிய நம்பிக்கைகள் அதிர்ந்து உடைந்து பொறிப்பொறியாய் உதிர்வதான உணர்வேற்பட்டது. சித்ரா இன்னமும் கண்ணீர்க் கோட்டின் இறுதி அந்தத்தைத் தேடிக்கொண்டிருந்தாள். மெளனம் இருவரதும் எண்ணங்களைத் தாங்கி எம்மிடையே பாலமாய் விரிந்திருந்தது. இதுவரை மூளைப்பிரதேசத்துக்குள் பதியப்பட்ட எந்த வார்த்தைகளைச் சொல்லி நான் அவளைத் தேற்றமுடியும்? தேற்றுதல் என்பது அவள் துன்பக் கேணியிலிருந்து மேலேற உதவும் கரமெனின் அந்தக் கரம் அவளை எங்கு கொண்டு சேர்க்கப் போகிறது அல்லது அவளுக்கு எந்தப் பாதையைக் காட்டப் போகிறது என்பதை நானே அறியாதபோது என் வார்த்தைகள் எல்லா அர்த்தங்களையும் இழந்து விட்டதாய்த் தோன்றியது.
என் சம்பிரதாயபூர்வமான வார்த்தைகளை விட உளப்பூர்வமான வேதனையான மௌனம் என்னை அவளுக்குச் சொல்லச் சிறந்த மொழியென உணர்ந்தேன் வெளியே மழை ஓய்ந்திருந்தது. காற்றில் இன்னமும் ஈரங்கலந்திருந்தது. அவள் தொலைவாய்த் தெரிந்த வானத்தில் விழிகளைப் பதித்திருந்தாள்.
“சித்ரா…சித்ரா நாதன் தாதியின். அழைப்புக் கேட்டுச் சித்ரா எழுந்தாள் கைகள் தன்னிச்சையாய்க் கண்ணோரங்களைத் துடைத்தன. “பிறகு வாறன் அக்கா..” சொல்லிக்கொண்டே தாதியை நோக்கி நடந்தாள். உள்ளத்தின் சோகம் நடையின் தளர்வில் தெளிவாய்த் தெரிந்தது.
என்னுள் அசதி கூடிவிட்டதாய் உணர்ந்தேன். அந்தச் சின்னப்பெண்பற்றிய சமூக அவலம் என்னுள் ஒருபோதும் மாறாத வடுவாக நிலைத்திருக்கும் என்று தோன்றியது. தலையணையிற் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டேன்.
‘ஏன் இந்தச் சாபம் இந்தப் பூவில்? யாரின் பாவம் இது? மூடிய விழிகளுள் நீர் படலமிட்டது.
எங்கே இந்தத் தவறு வித்திட்டது? சித்ரா பெண்சிசுவாய்ப் பிறந்த பொழுதிலேயே உலகத்தின் எண்ணங்கள், விருப்புவெறுப்புகள் அசூயைகள், ஆத்திரங்கள் யாவற்றையும் ஏற்கவேண்டிய கடப்பாடுடையவள் அவள் என்ற எண்ணத்தை வளர்த்த சமூகமா? அன்பாய், அழகாய், நேசிக்கத் தெரிந்தவளாய் பனிப்பூப்போல ஒரு பெண்ணைக் காட்டிலும் செல்வம் வேறேதும் இல்லை என்று அன்னம்மாளுக்கு உணர்த்தத் தவறிய காலமா? அவளிடம் தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய வளர்ந்த அவள் சுற்றமா? ஆண்மகனாய் நெஞ்சுரத்துடன் ‘தன்னை நம்பிவந்த வாழ்வதற்கு சகல உரிமையுமுள்ள நல்ல பெண் சித்ரா’ என்பதைத் தாய்க்கு உணர்த்தத் தவறிய நாதனா? மற்றைய இரு மகள்களி னதும் சமுதாயச் சந்தையிலான விற்பனைக்காக ஒரு மகளின் உணர்வுகள் பற்றி சிந்திக்க விரும்பாத சித்ராவின் பெற்றோரா? அல்லது சித்ராவே தானோ? இருபது வயதின் புறவளர்ச்சிக்கேற்பத் தன் சுகத்தை முதிர்ச்சிப்படுத்தவும், வாழ்வின் நியாய அநியாயங்களை மனத்துணி வுடன் எதிர்கொள்ளவும் தவறிய சித்ராவே தானோ?? யார் இந்தப் பாவத்தை விதைத்தார்கள், எங்கே இந்த நச்சுத் தவறு முளை விட்டது? எதன்மீது கிளைபரப்பி இலைவிட்டது? உலகின் எல்லா இனிமை களையும் அனுபவிக்க வேண்டிய சின்னப்பெண்ணில் ஏன் தன் நச்சுக்கனியின் சாற்றினால் கறையிட்டது.
ஆயிரமாய்க் கிளர்ந்தெழும் வினாக்களின் விடைதெரியாமல் எனது உணர்வுகள் சூனியத்துள் மிதக்கின்றன. கண்களை விழித்தபோது எதிரே குருதியும் கண்ணீரும் வடியச் சிலுவை சுமக்கும் யேசுநாதரின் சித்திரம் தெரிந்தது. ‘தன் முன்னோர்களின் பாடுகளையும் பாவங்களையும் சுமந்து நடக்கின்ற புனிதர்!’ நான் திரும்பிச் சித்ராவைத் தேடினேன்.
அவள் கட்டிலில் அமர்ந்திருந்தாள் முன்னைப்போலவே முழங்கால்கள் போர்வையுள் மடிந்தபடியிருக்க விழிமூடி அவற்றில் தலைசாய்த்திருந்தாள். அவள் ஒரு புகைபடிந்த வெண்பளிங்குச் சிற்பம் போல ஒரு கேள்விக்குறியுருவாக அவள் அமர்ந்திருந்தாள் என்னுள் எழுந்த அனைத்துக்கேள்விகளினதும் மொத்த உருவாக அவள் காட்சியளிப்பதாய் எனக்குத் தோன்றிற்று.
அவளைத் தாண்டி அப்பாலிருக்கும் வானத்தில் விழிகளைப் பதிக்கின்றேன். வெளியே மழையோ வெயிலோ தொடரப்போகின்றது எனக் கூறமுடியாமல் மந்தாரமாய்ப் படர்ந்திருக்கிறது பொழுது.
– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.
தொடர்புள்ள சிறுகதைகள்
என்னுயிர் நின்னதன்றோ!
அனந்த் ரவி
October 21, 2026
விளக்கேற்ற வந்தவள்
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 21, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
October 21, 2026